Wednesday, February 01, 2006

பெண்களைக் காப்பாற்றுங்கள்

நாளிதழில் அடிக்கடி காணப்படும் செய்தி` பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது’-`பச்சிளம் குழந்தையின் சடலம் புதர் மறைவில் வீசப்பட்ட பரிதாபம்’ – இன்னும் சோகம் தாங்கிய சிசுக்களின் மரணப் பட்டியல். சமீப காலங்களில் இவை அளவுக்கு அதிகமாகக் கண்ணில் படுவதுபோல் ஒரு தோற்றம். இத்தைகைய சிசுக்கள் அநேகமாக, பெண்குழந்தைகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அடுத்த சோகமாக `அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் புதிய வரவு’களும் பெண்குழந்தைகளே.
காலம் காலமாக பெண்சிசுக்கொலைகள் சில மாவட்டங்களின் பொதுச் சொத்தாக இருந்தது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வு இயக்கங்களும் கட்டுப் படுத்த முடியாத அளவு கொடூரமாக காணப்பட்ட நிகழ்ச்சிகள் இடையில் சற்று குறைந்தது போல் காணப்பட்டது. அரசும் தங்களின் அயரா உழைப்பின் மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொண்டது.. ஆனால் பெண் குழந்தை பிறப்பின் விழுக்காடு படிப்படியாகக் குறைந்து கொண்டேதான் வந்ததே ஒழிய இடையில் கூடியது போல் தெரியவில்லை. இப்போது மறுபடியும் பழைய நிலைக்கே சிசுக்கொலை விகிதம் கூடி வருகிறது. இடையில் நடந்தது என்னவாக இருக்கும்?
மருத்துவ புரட்சியின் பலனாக இடையில் ஸ்கேன் என்ற மாயக் கண்ணாடி கிடைக்கப் பெற்றவுடன் கருவிலிருக்கும் குழந்தையின் செக்ஸ் கண்டுகொள்ளப்பட்டது. தங்களுக்கு வேண்டாத குழந்தையைக் கருவிலேயே அழித்துக் கொள்ளும் விஷயம் காதும் காதும் வைத்த மாதிரி அரங்கேறத் தொடங்கியது. கண்முன் ரத்தமும் சதையுமாகப் பிறக்கும் குழந்தையைக் கொல்வதைவிட, கண்மூடிய மயக்க நிலையில் அந்தக் குழந்தையைத் தவிர்த்துவிடும் வசதி எல்லோருக்கும் ரொம்ப செளகரியமான முறையாகப் போய்விட்டது. இந்தக் கால கட்டங்களில்தான் பெண் சிசுக்கொலை குறைந்தாலும், பெண்குழந்தை பிறப்பு அதிகரிக்காமல் போனது.
இந்த வசதியால் வந்த வக்கிரம், மறுபடி மறுபடி கருத்தரிப்பது, ஸ்கேன் செய்து, மறுபடி கருக்கலைப்பு செய்வது என தொலைக்காட்சி சீரியல் போல் ஆக ஆரம்பித்தது. அரசு இயந்திரமும் எப்போதும் போல் விழுக்காடுகளை தோண்டித் துருவி விஷயத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும்போது , சமுதாயத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இதன் தாக்கம் புரையோடிப் போய்விட்டது. `கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுவது சட்டப்படி குற்றம்’ என்று கண்டிப்பான நடைமுறை கொண்டு வந்ததும் , மறுபடி ஆரம்பிச்சிட்டாங்க சிசுக் கொலையை. ஆக! எந்த வகையானாலும் ,பெண்குழந்தை வேண்டாம் என்பதுதான் basic பிரச்னை.
தன் இனம் வேண்டாமென்று வலுக்கட்டாயமாக முயற்சிகளை மேற்கொள்வதே ஒரு பெண்தான். அந்த அளவு பெண் குழந்தை மேல் வெறுப்பா? பெற்ற குழந்தையைக் கொல்ல அனுமதிக்கும் தாய் எப்படி ஒரு மனுஷத் தன்மையுள்ளவள் ஆவாள்?ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அதை அனுமதிப்பவள் பெண்ணே அல்ல. இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளும் அதைவிட அதிகமான விமர்சனங்களும் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கருவில் அழித்தாலும், கண்முன்னே கள்ளிப் பால் கொடுத்து கொன்றாலும் அந்தப் பெண்ணின் மனம் சந்தோஷமா படப் போகிறது? சினிமாவுக்குப் போவதுபோல் சீரியல் பார்ப்பதுபோல், ஒரு குழந்தையை வயிற்றில் தாங்கி காவு கொடுப்பது இலகுவான விஷயமா? இத்தனையையும் தாண்டி ஏன் நடக்கிறது? சமுதாயம்தான் காரணம். `திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டைத் தடுக்க முடியாது’. பெண்களின் வளர்ப்பும் திருமணமும் சில சமூகங்களில் கணக்குப் போட்டு பார்க்க முடியாத எல்லைகளில் இருக்கிறது. அத்தைகைய வீடுகளில்தான் பெண்சிசுக் கொலையும் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தவிர ஏனைய இடங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இல்லை என்பதை மறுக்க முடியாது.
என்னுடைய நண்பரின் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. ஒரே பெண்தான். சமீபத்தில் சில பொருளாதாரச் சிக்கல்களால் ஓரளவுதான் சீர் செய்ய முடியும் என்ற நிலை. மாப்பிள்ளை வீட்டார் பெருந்தன்மையுடன் உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்வது உங்கள் விருப்பப்படி என்று சொல்லிவிட்டனர். ஆனால் கொடுமையைப் பாருங்க! பெண்வீட்டு சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து, அதெப்படி விட்டுக் கொடுக்கலாச்சு, கார் கொடு, வீடு கொடு, இவ்வளவுக்கு குறைச்சலாக நகை போடக்கூடாது என்று ஏக கலாட்டா. மிகவும் படித்த, ஓரளவு நல்ல வசதி உள்ள ,ஒரு பெண் மட்டுமே உள்ள குடும்பத்தின் நிலை. இது ஏதோ ராமாயணக் காலத்துக் கதை அல்ல, நாலு நாளைக்கு முன்னால் நடந்த கதை. இதுவே ரெண்டாவதும் ஒரு பெண் இருந்து அதற்கும் சேமிக்க வெண்டிய நிலைமை இருந்தால், அந்த தகப்பனின் நிலை என்னவாகும்? படித்தவர்கள் நாம்தான் இதை மாற்ற பாடுபடவேண்டும், இது போன்ற பேச்சுகளுக்கு செவி கொடுக்கலாகாது என்பதெல்லாம் விவாதத்திற்கும் வலைப்பூ பதிவுகளுக்கும் சாத்தியமாகலாம். யதார்த்தம் என்பது வேறு. சமுதாயத்தின் ஆணிவேரை மாற்றாமல் மலர்களும் கனிகளும் இலைகளும் மாற முடியாது.
இவ்வளவு ஆழமான பிரச்னையை, வெறும் `ஸ்கேன் பார்த்து செக்ஸ் சொல்லக்கூடாது’ என்ற சின்ன சட்டத்தால் மட்டும் சரி செய்ய முடியுமா? ஸ்கேனில் பார்க்கமாட்டாங்க, பிறந்ததும் பார்க்கத்தானே செய்வாங்க. அபார்ஷன் என்ற நிலையிலிருந்து சிசுக் கொலை என்ற காட்சி மாறல்தான் நடக்கும். ஜனத்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கருக்கலைப்பை சட்டமாக்கிவிட்டு, பெண்குழந்தைக்காக கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று sub-division போட்டால் இந்த பிரச்னையை எப்படித் தடுக்க முடியும்? கருக்கலைப்பு சட்டத்தையே ரத்து செய்தாலன்றி இதை மட்டும் கட்டுப்படுத்துவது எப்படி?
இரண்டு மாதங்களுக்குள் குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்வதை அனுமதிக்கும் போது, மனோ ரீதியாக, ஐந்து மாதத்தில் செய்யும் கருக்கலைப்பும் அதே கோணத்தில்தானே பார்க்கப்படும். அதன் மீது அதிகப்படியான பயமோ தயக்கமோ வருவதில்லையே?செக்ஸ் பார்த்து கருக்கலைப்பு செய்வது குற்றம் என அச்சுறுத்தும் அதே அரசு, ஐந்து மாத கருவையும் கலைக்கும் வீரியம் மிகுந்த மாத்திரைகளை மருந்துக் கடைகளில் சாதாரணமாக புழங்க அனுமதிப்பது எதைகைய முரண்பாடு? முறைப்படுத்தப்படாத போலி மருத்துவர்களிடம் அறைகுறையாக அபார்ஷன் செய்துகொண்டு அல்லலுறும் அபலைகளும் எத்தனை பேர்!
இதையெல்லாம் தாண்டி தொட்டில் குழந்தைகளாக மாறும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? `அநாதைகள்’ என்ற புதிய சமுதாயம் உருவாக இது அடிகோலுமோ?
கேள்விகள் மண்டையைக் குடைந்தாலும், எந்த வகையில் நம் பங்கு இருக்கவேண்டும் என்பதே குழப்பமாகத்தான் இருக்கிறது.
நேற்றைய என் பதிவில் சொன்னதுபோல், ``அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதன்று’’.
பெண்கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கெ முதல் இடம் என்று பெண்களையே முன்னிலைப்படுத்தும் நிலைமை வராவிட்டால், பெண்களின் ஜனத்தொகை இன்னும் குறைந்து,பாஞ்சாலி ஸ்டைல் திருமணங்கள்தான் நடக்கும். இதை விளையாட்டுக்காகச் சொல்லவில்லை,உண்மையாகவே சொல்கிறேன். இப்போதே ஆண்:பெண் விகிதாச்சாரம் 4-5: 1 இருப்பதால்தான் இந்த அரசியல் சட்டங்களும் அச்சுறுத்தல்களும்.

28 Comments:

At 10:49 AM, Blogger குமரன் (Kumaran) said...

//எந்த வகையில் நம் பங்கு இருக்கவேண்டும் என்பதே குழப்பமாகத்தான் இருக்கிறது.
//

உங்கள் பதிவைப் படிக்கும் போது இதைத் தான் நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் குழப்பமாய்த் தான் இருக்கிறது. ஏதேனும் வழி யாராவது சொன்னால் சொல்லுங்கள். செயலில் உடனே இறங்க வேண்டிய விஷயம்.

 
At 11:57 AM, Blogger கயல்விழி said...

இன்றும் நடந்தேறிக்கொண்டிருக்கின்ற சிறுமையான செயல். வேதனை தான். அண்மையில் எங்கோ படித்தேன். கருக்கலைப்புச்செய்யும் பெண்கள் பிற்காலத்தில் எதோ ஒரு வகையில் மனோநிலை பாதிப்பிற்கு உட்படுகிறார்கள் என்று எழுதியிருந்தது. பெண்ணோ ஆணோ உயிர் உயிர் தானே.? இப்படியே தொடர்ந்தால் பெண்களுக்கு தட்டுப்பாடு வர பாஞ்சாலியின்ர நிலை வந்திடப்போகுது.
இந்த நூற்றாண்டிலும் சிசுக்கொலை இருக்கிறதை நினைச்சா வருத்தம் தான். :((

 
At 12:23 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சமூக அவலங்கள் தீர ஒரு இன்ஸ்டண்ட்முறை உள்ளது, சட்டம். சட்டங்களை அமுல்படுத்தினாலே போதுமானது.

இன்னொரு அதிரடி முறை, போராட்டங்கள். இதுவும் பல பலன்கள் தந்திருக்கு ஒன்றுமுதல் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்..பயனளிக்காமலும் போகலாம்.

மூன்றாம் முறை வலைப்பதிவை போட்டுவிட்டு காத்திருப்பது. நம்மால் இப்போது இதைத்தான் செய்யமுடிகிறது.

உங்கள் எண்ணங்கள் எல்லோருக்கும் பரவட்டும்.

 
At 3:08 PM, Blogger Thangamani said...

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழைய பாரம்பரியத்தின் ஒரு கூறு. பாவ யோனிகளில் ஜனிக்கும் பெண்கள் சமூக/பொருளாதார/ஆன்மீக தளங்களில் ஒடுக்கப்படுவது மிக இயல்பாக நடந்துவருவதுதான். இந்த ஒடுக்குமுறைக்கு மாறான/ எதிரான தத்துவப்பார்வைகளும், குழுக்களும் காலந்தோரும் இங்கேயே இருந்துவந்தாலும் நிறுவனப்படுத்தப்பட்டுவரும் 'இந்து மதம்' என்ற அமைப்பில், ஒழுங்கில், கருத்தாக்கத்தில் பெண்களுக்குச் சார்பான கருத்தியல்/ஆன்மீகபாதைகள் முற்றாக வலுவிலக்கச்செய்யப்பட்டு ஆணாதிக்க கூறுகளே வலுவான அடையாளங்களாக பரப்பப்படுகின்றன. இதை நீங்கள் 'தரிசு நிலம்' என்ற சங்கராச்சாரியாரின் அருள்வாக்குத் தொடங்கி, ரஜினியின் 'பொம்பளைன்னா' என்ற சூப்பர் வாக்கு வரை இனங்கான முடியும்.

பெண் ஒரு சொத்தாகக் கருதப்படுகின்ற சமூகத்தில் இது நடப்பது இயல்பானதே. சில சொத்துக்கள் இக்காலத்தில் மதிப்பிழப்பதும் அவைகள் அதனால் ஒதுக்கப்படுவதும் (உழவு மாடுகள்) அல்லது வெறும் அலங்காரப்பொருளாக முன்னறைக்கு கொண்டுவரப்படுவதும் (பழைய கிராமபோன் ஒலிப்பான்கள் போல) சந்தையின் நிலவரத்துக்கு தகுந்தார்போல நடப்பதுதான்.

நிறுவனப்படுத்தப்பட்ட எல்லா மதங்களிலும், சமூகத்திலும் இது நடப்பது இயல்பு. ஏனெனில் இன்றைய நிறுவனப்படுத்தப்படுதல் ஆணின் வசதிகளை முன்னிருத்தி ஆணாதிக்கப் பார்வையில் நடைபெறுகிற ஒன்றாகும். இதை நரிக்குறவர்கள், பழங்குடிகள், வனவாசிகள் போன்ற வெளிச் சந்தையுடன் பெரிய தொடர்பற்ற குழுக்களில் பெண்களுக்கு கிடைக்கும் உரிமைகளைக் கொண்டு ஒப்பிட்டும் அறியலாம்.

கலாச்சார அணுகுமுறையைப் பற்றிய கட்டுடைப்பை, புதிய புரிதலைக் கல்வியின் மூலம் வழங்காமல் கருக்கலைப்புச் சட்டங்கள் எல்லாம் பெரிய, உண்மையான பயனைத் தரமுடியாது என்று நினைக்கிறேன்.

இந்த விதயத்தைக் கவனப்படுத்திய பதிவுக்கு நன்றி!

 
At 3:25 PM, Blogger சிவா said...

தாணு! கேட்பதற்க்கே சங்கடமாக இருக்கிறது. நானும் சமீபத்தில் இந்த மாதிரி சில செய்திகளை பார்த்தேன். இப்போது தான் தலை கீழாக நின்றாலும் குழந்தை என்ன குழந்தைன்னு சொல்ல மாட்டேங்கறாங்களே. அதையும் மீறி அது பிறந்தவுடன் கொல்வது..இவர்கள் என்ன பேயா பிசாசா?. ஒரு தாயின் அனுமதி இல்லாமல் இது நடப்பது ரொம்ப அறிது தான். எப்படி இவர்களால் 9 மாதம் சுமக்க முடிகிறது. கலிகாலம் போங்க.

 
At 3:40 PM, Blogger சிங். செயகுமார். said...

விவாதிக்கபடவேண்டிய நல்லதொரு விஷயம்.80% சிசுக்கொலை தாயின் சம்மதம் இல்லாமல்தான் நடக்கின்றது.சட்டங்களும் சமுதாய விழிப்புணர்வு இயக்கங்களும் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாது .ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தாலொழிய இதற்கு முற்று புள்ளி அமையும்.

 
At 6:11 PM, Blogger erode soms said...

வானம் பூமி காற்று நிலவு எல்லாம் பெண் என்பார் ஆனால் 4க்கு பிறகும் ஆண் குழந்தை வேண்டுமென்பார்!
பெற்றெடுக்கையில் அழுவதும்
வளர்க்கையில் அழுவதும்
வாழ்க்கைத்துணை வந்து அழுவதும்
அவன் போனபின்னும் அழுவதும்
பெண் என்றாலும்
ஆண் வர்க்கம் மட்டுமல்ல அந்த பெண் வர்க்கமும் சேர்ந்தல்லவா
கொலை புரிகிறது!!!

 
At 7:09 PM, Blogger மணியன் said...

பெண்ணாகவும் மருத்துவராகவும் மிக அழகாக பிரச்னையின் பரிமாணத்தை எடுத்துரைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல் வரதட்சணை கேட்பது குறைந்து வந்தாலும் சமூக நிர்பந்தங்கள், போலி கௌரவம் ஆகியவை கல்யாணச் செலவை பெண்வீட்டாருக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

 
At 7:48 PM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

தாணு,
போனமாதம் Lancet மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையொன்று வெளியானது. இக்கட்டுரைப் பற்றி BBC யிலும் செய்தியும் ஒலிபரப்பப்பட்டது. இரண்டையும் வைத்து ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து வழக்கம் போல விட்டுவிட்டேன். நீங்கள் எழுதுவதாக இருந்தால் msundaramoorthy@bellsouth.net முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கட்டுரையின் PDF கோப்பு அனுப்பிவைக்கிறேன்.

 
At 8:40 PM, Blogger தாணு said...

கண்ணம்மா
பெண்ணாகப் பிறந்ததற்காக நான் என்றுமே பெருமைப் படுகிறேன். எனது முதல் மகவும் பெண் என்பதில் அதிக மகிழ்ச்சியே.

 
At 8:40 PM, Blogger தாணு said...

முயற்சிகள் வீட்டிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும் குமரன். என்னால் முயன்றவரை கவுன்சலிங் செய்வேன். கருத்தரிக்க வாய்ப்பின்றி வீணாகப் பணம் செலவழிக்கும் தம்பதியரை பெண்குழந்தை ஒன்றை தத்தெடுக்கச் சொல்வேன்; தன்னார்வ தொண்டு நிறுவனக்கள் மூலம் பெண்குழந்தைகளை நாமே தத்தெடுத்து கல்வி ,வேலை வாய்ப்புக்கு உதவலாம். நான் சந்தைக்குச் சென்றாலும்கூட பெண்வியாபாரிகளிடம்தான் வாங்குவேன், சின்ன சந்தோஷம் அதில். சமுதாயத்தை மாற்றும் அளவு நமக்கு வலிமை கிடையாது, நம்மாலான சின்னச் சின்ன மாற்றங்களை சிறு துளியாகச் செய்துகொண்டு இருப்போம்

 
At 8:41 PM, Blogger தாணு said...

கயல்விழி,
சரியாக நினைவு படுத்தினீர்கள். கலைக்கருப்புக்குப் பின் நிறைய பெண்களின் மனம் திரிந்து விடுகிறது. உடல் ரீதியாக பலவீனப்பட்டு விட்டதாகச் சிலர்; குடும்பத்தினரின் வலுக்கட்டாயத்தால் கருக் கலைத்துக் கொண்டு அந்த குடும்பத்தினரிடமிருந்தே மனதளவில் விலகிப் போய்விடும் சிலர்; அதன்பின் உடலுறவையே தவிர்த்துவிடும் பெண்கள்; பாதிக்கப்பட்டது தாந்தான் என்பதால் மனம் வக்கரித்து சதா சண்டையிட்டு விவாகரத்து வரை செல்லும் பெண்கள்- இப்படி ஏதோ ஒரு வகையில் பாதிப்பில்லாமல் கருக்கலைப்பு நிகழ்ச்சிகள் முடிவடைவதில்லை. மறுபடி மறுபடி கலைத்துக் கொண்டு மாதவிடாய்ப் பிரச்னை, வெள்ளை படுதல் போன்ற நிரந்தர நோய்களுடனும் தவிக்கும் அநேகம் பேர்- சொல்லி மாளாது இந்த அவலங்களை. இத்தனை பிரச்னைகளுக்கே பயப்படாத சமூகம் சின்ன சட்டத்திற்கு பயப்படுமா? சட்டமும் கருக் கலைத்துக் கொண்டவர்களைத் தண்டிப்பதில்லை, ஸ்கேன் பார்த்த மருத்துவரின் வேலைக்குத் தான் ஆபத்து. சிசுக்கொலை செய்த யாராவது ஜெயிலுக்குப் போனதாகக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நம்ம ஊரில் எல்லாமே அறைகுறைதான்.

 
At 8:43 PM, Blogger தாணு said...

சிரில்,
இப்போதான் கயல்விழிக்கு சொன்னேன். நம் சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள். கண்டிப்பாக தடை செய்யவேண்டுமென்றால் சட்டத்தின் கைகள் கடுமையானாலே போதும். மற்ற விஷயங்கள் போல் கர்ப்பத்தை மறைக்க முடியாது. அந்த கர்ப்பத்தின் விளைவு (out-come of pregnancy) என்ன ஆனது என்று நோண்ட ஆரம்பித்தாலே நிறைய கருக்கலைப்பைத் தடுக்கலாம். 2 மாத கருக்கலைப்புதான் அங்கீகரிக்கப் பட்டு விட்டதே, 5 மாதத்துக்கு மீறிய கர்ப்பங்கள்தானே பெண்குழந்தைகளுக்கென்று ஆனது, அதை மறைக்க முடியுமா?

 
At 8:43 PM, Blogger தாணு said...

தங்கமணி
//சில சொத்துக்கள் இக்காலத்தில் மதிப்பிழப்பதும் அவைகள் அதனால் ஒதுக்கப்படுவதும் (உழவு மாடுகள்) அல்லது வெறும் அலங்காரப்பொருளாக முன்னறைக்கு கொண்டுவரப்படுவதும் (பழைய கிராமபோன் ஒலிப்பான்கள் போல) சந்தையின் நிலவரத்துக்கு தகுந்தார்போல நடப்பதுதான்//-- பெண்கள் கூட அலங்காரப் பொருளாக மாறும் அபாயம்தான் இப்போது.
//கலாச்சார அணுகுமுறையைப் பற்றிய கட்டுடைப்பை, புதிய புரிதலைக் கல்வியின் மூலம் வழங்காமல் கருக்கலைப்புச் சட்டங்கள் எல்லாம் பெரிய, உண்மையான பயனைத் தரமுடியாது என்று நினைக்கிறேன்.// மிகவும் உண்மை. ஆனால் கல்வி மட்டுமே இதை நேர் செய்துவிடுமா? நன்கு படித்த , பொருளாதார வசதிகள் மலிந்து கிடக்கும் சமுதாயத்தில்தான் இந்த அவலங்கள் நடக்கின்றன. கலப்பு மணம் ஜாதி மற்றும் பொருளாதாரப் பிரிவுகளுக்கிடையில் நடக்க வேண்டும். எல்ல குறிக்கோள்களும் திருமணம் என்ற இலக்கைக் குறிவைத்துதானே நடக்கின்றன. திருமணம் என்ற விஷயமே இல்லாமல் போகும்போதுதான் சீர், சொத்து போன்ற விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும்

 
At 8:44 PM, Blogger தாணு said...

சிவா,
நம்ம ஊர் பக்கத்திலேயெல்லாம் வேறுமாதிரி பிரச்னைகள். நிறைய பெற்றால் குடும்ப வருவாய் அதிகரிக்கும் என்பதால் கருக்கலைப்பே குறைவுதான்.

 
At 8:45 PM, Blogger தாணு said...

ஜெயக்குமார்,
தனிமனித புரிதல் இல்லாமல் இதை சரி பண்ணவே முடியாது

 
At 8:45 PM, Blogger தாணு said...

சித்தன்,
பெண்ணை அழிப்பதில் பெண்னேதான் முன் நிற்கிறாள் மாமியார், நாத்தனார் என்ற பெயரில். நேற்றைய தலைமுறையின் விடாப்பிடியான கொள்கைகள்தான் எல்லாத்துக்குமே காரணம்.

 
At 8:46 PM, Blogger தாணு said...

மணியன்,
போலி கெளரவம்தான் `குடும்பத்துடன் தற்கொலை’ என்று அடிக்கடி பத்திரிகைகளில் முன்பக்கத்து செய்தியாகிறது

 
At 8:56 PM, Blogger ILA (a) இளா said...

//பெண்ணை அழிப்பதில் பெண்னேதான் முன் நிற்கிறாள் மாமியார், நாத்தனார் என்ற பெயரில்//
அதற்கு முக்கிய காரணம் வரதட்சணைதானே தவிர் வேறு ஒன்றுமில்லை.
தமிழ்நாட்டில் ஸ்கேன் வசதி சட்டம் என்றால் டெல்லியிலோ எல்லா மருத்துவமனைகளின் பெயர்ப்பலகைகள் இப்படி இருக்கிறது
" ஸ்கேன் வசதி"
"கருக்கலப்பு வசதி"

இதெல்லாம் சட்டம் கொண்டுவந்து தடுக்க இயலாது தாணு. எருக்கம் குச்சிகளை வைத்து கருக்கலப்பு செய்த பெருமை நம்முடையது. சமுதாய விழிப்புணர்ச்சி மட்டுமே இதையெல்லாம் கட்டுபடுத்தும். இல்லயேல் நாம் தொண்டைத்தண்ணீர் வற்றும் வரை கத்தினாலும் ஒன்றும் மாறப்போவதில்ல.

 
At 8:57 PM, Blogger சிவா said...

உண்மை தான் தாணு, நம்ம ஊரு பக்கத்தில் இப்படி நான் கேள்வி பட்டதில்லை. அந்த காலத்துல 10 பிள்ளைகள் எல்லாம் சாதாரணம்
:-). யாரும் பெண் என்றவுடன் கொன்றதாக தெரியவில்லை. இப்போது தான் இப்படி நிறைய கேள்வி படுகிறேன். காரணம் வரதட்சினை மட்டும் என்று நம்ப முடியவில்லை. என்ன காரணம். நம்மால் என்ன செய்ய முடியும்..குழப்பமாக தான் இருக்கிறது..டாக்டர் நீங்க தான் யோசிச்சு சொல்லுங்க.

 
At 11:21 PM, Blogger G.Ragavan said...

வரதட்சணையே இதற்கெல்லாம் மூல காரணம். அதுவும் முதலில் ஒழிய வேண்டும்.

அத்தோடு தான் பட்ட பாடு தன் மகள் படாமல் போகட்டும் என்று நினைக்கும் தாய்மார்களும் உண்டென்று நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் இந்நிலை மாற வேண்டும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் கேரளாவைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பெண்களின் விகிதம் குறைந்து கொண்டே வருகிறதாம்.

மற்ற நாடுகளில் நிலை என்ன?

 
At 1:17 AM, Blogger தாணு said...

இளா,
நீங்கள் டெல்லியிலா இருக்கிறீர்கள்? ஈரோடு அருகே என்று சொன்னதாக நினைப்பு. கருக்கலைப்பு வசதி என்று நிஜமாகவே போர்டில் போட்டுக் கொள்கிறார்களா?

 
At 1:18 AM, Blogger தாணு said...

சிவா
மருத்துவரோ மன்னவரோ யாராலும் மாற்ற முடியாது- மனிதர்கள்தான் மாறணும்

 
At 1:20 AM, Blogger தாணு said...

ராகவன்
வளர்ந்த நாடுகளில் பெண் ஒடுக்கப்படுவது இருக்காது, இருந்தால் அவர்களால் வளரவே முடியாது. துளசி, தேன்துளி, உஷா போன்றோர்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்

 
At 6:05 AM, Blogger Unknown said...

//இதை நீங்கள் 'தரிசு நிலம்' என்ற சங்கராச்சாரியாரின் அருள்வாக்குத் தொடங்கி, ரஜினியின் 'பொம்பளைன்னா' என்ற சூப்பர் வாக்கு வரை இனங்கான முடியும். //

அடுத்த தலைமுறை விஜய்யும் வந்தாச்சி. அடக்கி வைக்க பெண் என்ன அவர்கள் வீட்டு நாய்க்குட்டியா?. எதோ ஒரு சில புண்ணிய மக்களிடையே இருந்த இந்த வரதட்சணை பழக்கம்., இன்று கிராமங்கள் வரை பரவி சீரழிக்கிறது. அடிமைத்தனக்கு தலை வணங்கிய அவர்கள் செயல்கள் பெண்ணின் பொது குணமாக சித்தரிக்கப்பட்டு அதுவே பின்பு நிறுவப்பட்டும் விட்டது. 'தீதிலா வடமீனின் திறமாக இருந்தால்தானப்பா அக்காலத்தில் மதிப்பு. அன்றிலிருந்து பெண் மாற எடுத்துக்கொண்ட காலங்களைப் பாருங்கள். இன்றும் ஏதேனும் ஒரு வகையில் எதனாலோ என்றும் காயப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். கேலிகள், கிண்டல்கள் என அனைத்தையும் இன்றும் மரபு வழி சுமந்து திரிகின்றன சில நடை பிணங்கள்.

இந்தத் தத்தெடுப்பதில் தாணு, அதிகம் பெண் குழந்தைகளையே தத்தெடுக்கிறார்கள் என்பதை அவதனித்திருக்கிறீர்களா?.

//சமூக அவலங்கள் தீர ஒரு இன்ஸ்டண்ட்முறை உள்ளது, சட்டம். சட்டங்களை அமுல்படுத்தினாலே போதுமானது.//

பெண் சிசுக் கொலை தென் மாவட்டங்களில் அதிகம். கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கொணர இப்போதைய மகளிர் குழுக்களையே அரசு பயன்படுத்தலாம். இதனால் மிக அருமையான பலன் உள்ளது. சட்டங்களை விட விழிப்புணர்வு கொடுத்தல் மிக்கியம்.

 
At 8:07 AM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

Thanu,
Did you receive my previous comment?

 
At 8:44 AM, Blogger SnackDragon said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்புடைய சுட்டி ஒன்று.

 
At 9:35 PM, Blogger தருமி said...

ஆண்:பெண் விகிதாச்சாரம் 4-5: 1 இருப்பதால்தான்.."//
- ஏதோ ஒரு தவறு உள்ளதோ எண்களில்..?

 

Post a Comment

<< Home