Sunday, January 29, 2006

சேரன் தந்த பாதிப்பு

தமிழ்ப்படங்கள் மனதில் தாக்கங்களை உண்டாக்குவது எப்போதோ ஒருதரம்தான். அந்த வகையில் சேரனின் `ஆட்டோகிராப்’ `தவமாய் தவமிருந்து’ இரண்டுமே மைல் கற்கள்தான்.
ஆண்களின் மலரும் நினைவுகள் போல் பெண்களும் மலர்ந்த நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் எவ்வாறு ஏற்றக்கொள்ளப்படும் என்ற விவாத அரங்குக்குள் செல்ல விரும்பாமல் எனக்குள் முகிழ்த்த இளமை நினைவுகள் சிலவற்றை மட்டும் முதல் பதிவாக்கியுள்ளேன்.

பாவாடை அணிந்த காலங்களில் ஆண்பிள்ளைகளுடன் சரிக்குச் சமமாக கோலி விளையாடுதல், பம்பரம் விடுதல்,கட்டக்குச்சி அடித்தல்(எங்க ஊர் கிரிக்கெட்) என்று ஊர் சுற்றிவிட்டு அம்மாவிடம் செமத்தியாகத் திட்டு வாங்கிய நாட்கள், இப்போது நினைக்கும் போது சிரிப்பு வர வைக்கிறது. முன்னாடி ரெண்டு அண்ணன்களும் பின்னாடி தம்பியுமாக ஆண் பிள்ளைகளுடனேயே வளர்ந்ததால் பெண்தோழிகளே அந்த வயதில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அதிலும் என் தம்பியின் இம்சை தாங்க முடியாதது. கோபம் வந்தால் என்னைத் திட்ட அவன் சொல்லும் பெயர் `தன்வந்திரி’. அந்த வயதில் அது மருத்துவமேதையின் பெயரென்று புரியாததால் ஏதோ அசிங்கமாகத் திட்டுவதாக நினைத்து அவனுடன் மல்லுக் கட்டியிருக்கிறேன். நான் டாக்டர் ஆவதற்கு அவனின் முன்மொழிதல் அதுவென்று இருவருக்கும் புரியாப் பருவம்.

வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் மணி அடிக்க ஏக போட்டியாக இருக்கும். எங்க ஓதுவார் தாத்தா அழகாகப் பாடுவார். அது திருவாசகமா, சமஸ்கிருதமான்னு கூட இன்னைக்கு வரை தெரியாது. அது முடிஞ்சதும் சுண்டல் கொடுப்பாங்களே அதுதான் ஸ்பெஷல். எங்க ஐயர்வாள் இருக்காரே, அவரை மாதிரி பொருளாதார நிபுணரை எங்கேயும் பார்க்க முடியாது. உள்ளங்கை முழுவதையும் அகலத் திறந்து பிரசாதத்தை அள்ளுற அழகைப் பார்த்தா வயிறே ரொம்பிட்ட மாதிரி இருக்கும். நம்ம கையில் பிரசாதம் விழும்போது கரெக்டாக பத்து சுண்டல்கூட இருக்காது!! அவ்வளவு நேர்த்தியா கொஞ்சூண்டு பிரசாதத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்திடுவார். எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் அவர் நடத்தி வைத்ததாகத்தான் இருக்கும். (போனதரம் சென்ற போது வேறு ஒரு ஐயர் வந்திருந்தார். முதுமையின் தள்ளாமையில் வீட்டோடு தங்கிவிட்டதாகக் கேள்விப் பட்டேன்.) மணி அடிக்கும் தகராறில் மத்தியஸ்தம் செய்ய வந்த தாத்தா ஒருவர் எங்களைத் திட்டிவிட, அவர் வீட்டுக்குத் திரும்பும்போது இருட்டில் கும்பலாக நின்று மண்ணை வாரி வீசியதை கொஞ்சம் அவஸ்தையுடன் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.(சிறு வயதில் இதெல்லாம் சகஜமப்பா)
எங்க ஊர் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது ரொம்பக் கொடுமையான விஷயம். நிவாரண நிதி வாங்கச் சென்று விபரீதம் விளைந்த தன்மையிலேயே எங்க ரேஷன் கடை நிகழ்ச்சிகள் இருக்கும். பெரிய தலைகளெல்லாம் எங்களை மாதிரி குட்டீஸை இடித்து தள்ளி சவட்டிவிடுவார்கள். எனக்குப் பிடிக்காத வேலை அது. ஆனாலும் வீட்டில் சீனியாரிட்டி படி என் முறை வந்தபோது தம்பியிடம் தள்ளிவிட முயன்று தோற்றேன். `வயதுக்கு வருதல்’ பற்றி வகுப்புத் தோழியருக்கெல்லாம் பயமும் குழப்பமும் இருந்த காலத்தில், எப்போதடா நான் வயசுக்கு வருவேனென்று எதிர்பார்த்த ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன். எங்க வீட்டில் வயசுக்கு வந்திட்டா கடைக்கெல்லாம் போக வேண்டியதில்லை. ரேஷன்கடைக்குத் தம்பிதானே போவான்!! பெண்ணாயிருப்பதில் இது போன்ற சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும்.
அண்ணன்கள் அக்காக்களெல்லாம் அப்பாவிடமிருந்து நாலடியாவது தள்ளி நின்றுதான் பேசுவார்கள், அவ்வளவு பயமும் மரியாதையும். அப்பாகூடவே உக்கார்ந்து கதை பேசும் உரிமையும் செல்லமும் எனக்கும் தம்பிக்கும்தான் உண்டு. பண்டிகைக் காலங்களிலும் விசேஷங்களிலும் ஆண்கள் பந்தியில் அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் ஒரே பெண் நான்தான். பெண்கள் எல்லோரும் அடுப்படி சமையலிலும், அதன்பின் கூட்டமாக அமர்ந்து கதை பேசுவதிலும் பிஸியாக இருக்கும்போது நான்மட்டும் அப்பா அண்ணன்களுடன் சீட்டு விளையாடுவேன். அப்பாவின் மறைவுக்கு பின்னும்கூட என் சகோதரர்களுக்கு இன்றுவரை நான்தான் செல்லம், இன்னும் அதே ஆண்கள் பந்தி, சீட்டு விளையாட்டுதான். பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி என்பது ஒரு சுகம்தான்.
வைகாசி விசாகம் என்பது திருச்செந்தூரின் முக்கிய திருவிழா. அதற்கு மதுரை வரையிலிருந்து கூட வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள்.அழகான கூண்டு வண்டிகள்.(நேற்றுதான் கரகாட்டக்காரன் படத்தில் வந்த அதே மாதிரி வண்டியை மகளுக்கு அறிமுகப் படுத்தினேன்) சாயங்கால நேரத்தில் வாசலில் தண்ணீர் தெளித்து அதில் சாய்வு நாற்காலிபோட்டு அப்பா உட்கார, நாங்கள் காலடியில் தென்னங்கீத்தில் அமர்ந்து வண்டிகளை எண்ணுவோம். விடியவிடிய வண்டி போய்க்கொண்டே இருக்கும்.வருஷம் தவறாமல் இப்படி எண்ணுவது எங்களுக்கு விசாகத்தின் அங்கமும் அடையாளமும். பேருந்துகளின் பெருக்கம் இத்தைகைய பாரம்பரிய சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டது. திருச்செந்தூரில் மாறிமாறி சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆவணித்திருவிழா என்று மாதம் ஒரு சிறப்பு இருக்கும். ஆனால் எங்க ஊரிலிருந்து செந்தூர் செல்ல பஸ்ஸில் இடம் கிடைக்காது. கும்பலாக ரயில்வே லைனில் நடப்பது ரொம்ப ஜாலி விஷயம். ரெண்டு தண்டவாளத்திலும் ஒருவர் நடந்துகொண்டு கையை கோர்த்துக் கொண்டால் நடக்கும் அலுப்பே தெரியாது. யார் காலைக் கீழே ஊன்றாமல் வர்றாங்கன்னு போட்டி வேறே இருக்கும்.
பொங்கல், தீபாவளின்னா வாசல் அடைத்து கோலம் போடுவது பெரிய கொண்டாட்டம். அதிலும் நான்தான் கோலத்தில் ஸ்பெஷலிஸ்ட். எனக்கும் அக்காவுக்கும் பத்து வயதுக்கு மேல் வித்தியாசம் என்பதால் எஞ்சோட்டுப் பொண்ணுங்களே போட்டிக்குக்கூட யாருமில்லை. அதனால் எங்க வீட்டுக்குப் போக பக்கத்துல சொந்தக்காரங்க வீட்டுக்கும் நான் தான் போடுவேன். எல்லோரும் தூங்கப் போயிட்டாலும் கடைசி வரை எங்க அப்பா பெஞ்ச் போட்டு துணைக்குப் படுத்திருப்பாங்க. எங்க வீடே போலீஸ் ஸ்டேஷன் முன்னாடிதான், பயமே கிடையாது, ஆனாலும் துணைக்கு இருப்பாங்க. உண்மையாக எங்க வீட்டுக்கு கதவே கிடையாது. இது பற்றி சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் அடித்த கிண்டல் `குடும்பத்தை உருவாக்குறதுக்குப் பதிலா ஒரு கிராமத்தையே உருவாக்கி வைச்சிருக்காரு, அங்கே திருட வர்றவன் எதைத் தூக்கிட்டுப் போக முடியும்’ன்னு. அடிக்கடி நான் கல்யாணம்,காது குத்து, இழவுன்னு ஊருக்கு கிளம்பினாலும் இதே கிண்டல் தொடரும்` கிராமம்னு இருந்தா நாலு நல்லது கெட்டது நடந்துகிட்டே தானே இருக்கும். இதிலே என்ன ஸ்பெஷல் இருக்கு. இதுக்கு அலையிறதிலேயே வாழ்க்கை ஓடிடப் போகுது’ என்பார்.
எங்க ஊர் சினிமா தியேட்டர் பற்றி சொல்லாட்டி பதிவே முற்றுப் பெறாது. எங்க வீட்டிலெல்லாம் நான் மருத்துவக் கல்லூரி போகும் வரை மண்ணெண்ணெய் விளக்குதான். அதில் வீட்டுப் பாடம் படிப்பது சிரமம் என்பதால் காலையில்தான் படிப்பு. அதனால் சாயங்காலத்துக்கு மேல் எல்லோரும் சுதந்திரப் பறவைகள். சுழற்சி முறையில் வீட்டிலிருந்து யாராவது சினிமாவுக்கு போவாங்க, படிக்கத் தேவையில்லாத வாண்டுகள் தினமும் அவங்க கூட தொத்திக்குவோம். வாரத்தில் எப்படியாவது ஏழுநாள் படம் பார்த்திடுவோம். தியேட்டரில் சீசன் டிக்கெட் முறை செயல்படுத்தினால் நன்றாக இருக்குமென்று கூட யோசித்துக் கொள்வோம், யாரும் நடைமுறைப் படுத்தவில்லை.

ஏதோ ரெண்டு பழைய நினைவுகளை அசைபோடலாம்னு ஆரம்பிச்சா, நிப்பாட்ட முடிய மாட்டேங்குது!!! ஒரு துளியே இவ்வளவு எழுதத் தூண்டுதுன்னா எங்க கதைக்கு ஒரு பிலிம் ரோல் பத்தாது போலிருக்கே. சீரியல் சினிமாதான் எடுக்கணும்.

55 Comments:

At 10:21 PM, Blogger மணியன் said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். மலரும் நினைவுகள் மனதிற்குத் தரும் சுகமே தனி. வரும்பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்க வைத்திருக்கிறது உங்கள் முதல் இடுகை.

 
At 10:31 PM, Blogger முத்துகுமரன் said...

வாழ்த்துகள் தாணு, எளிமையான ஆனால் இயல்பான நடையில் அமைந்திருந்தது உங்கள் அறிமுகம். சிறப்பான நட்சத்திர வாரமாக அமைய வாழ்த்துகள்

 
At 10:32 PM, Blogger இளங்கோ-டிசே said...

நல்லதொரு நினைவுகளின் இரைமீட்டல் பதிவு. கோயில் பிரசாதம் போலச் சுவையாக இருக்கிறது :-).

 
At 10:46 PM, Blogger ramachandranusha(உஷா) said...

வாங்க தாணு, இப்பத்தான் வாசிக்கும் அனுபவம் என்பது மனதிற்கு நிறைவாய் இருக்க வேண்டும், பதிவுகளை படிப்பதையே விட்டு விடலாமா என்று எண்ணும்பொழுது நிறைவாய் எழுதியிருக்கீங்க.
தொடருங்க

 
At 10:59 PM, Blogger G.Ragavan said...

தாணு, நீங்கள் சொல்வது போல ஒரு பெண் ஆட்டோகிராப் சொல்ல முடியாது. சொன்னால்...அவ்வளவுதான்....தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமே. சரி சரி விடுங்கள். அது வேறு கதை.

இந்த வாரம் நட்சத்திரமாக நம்மூர்க்காரர் வந்திருக்கிறீர்கள். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வாரத்தில் நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் என்று விரும்புகிறேன்.

திருச்செந்தூர், விசாகம்...அது இதென்று எனக்கு நாலஞ்சு கொசுவர்த்திச் சுருள்களை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். (துளசி டீச்சர் அகராதியில் கொசுவர்த்தி என்றால் ஃபிளாஷ் பேக்).

 
At 11:11 PM, Blogger ஜென்ராம் said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்..

//அப்பாவின் மறைவுக்கு பின்னும்கூட என் சகோதரர்களுக்கு இன்றுவரை நான்தான் செல்லம், இன்னும் அதே ஆண்கள் பந்தி, சீட்டு விளையாட்டுதான்.//
:-))

 
At 11:25 PM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

வாழ்த்துக்கள் தாணு,

ஆரம்பத்திலேயே ஒரு நல்ல பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள்.

இந்த வாரம் இதே மாதிரி நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

 
At 11:29 PM, Blogger கைப்புள்ள said...

சமீப காலத்தில் மிகவும் ரசித்து படித்த பதிவுகளில் ஒன்று இது. தாங்கள் விவரித்துள்ள விதம் வெகு சிறப்பு. படிக்க படிக்க மனத்திரையில் காட்சிகளாக ஒவ்வொரு நிகழ்வும் ஓடியது. நட்சத்திர வாரம் மிக சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.

 
At 11:34 PM, Blogger ilavanji said...

வாழ்த்துக்கள் தானு!

படிக்க நல்லாயிருக்கு உங்க ஃபிளாஷ்பேக்...

நீங்க பாட்டுக்கு மலரும் நினைவுகளை இறக்கிவைச்சுக்கிட்டே இருங்க! கொசுவத்தி சுத்தறதை நாங்க பார்த்துக்கறோம்! (பின்ன? துளசியக்கா இல்லாத நேரத்துல தம்பிங்க நாங்க கொசுவத்திகடைய பொறுப்பா பார்த்துக்கவேணாமா?! :) )

 
At 12:29 AM, Blogger சிங். செயகுமார். said...

நட்சத்திர டாக்டரின் டக்கரான ஆரம்பம்! எல்லா சரக்கையும் அள்ளி போடுங்க படிக்க சந்தோஷமா இருக்கு!
நமக்கு சந்தோஷம் !ஒரு வாரம் பேஷன்ட் பாடுதான் திண்டாட்டம்!!

 
At 2:08 AM, Blogger தாணு said...

மணியன்,
முதல் வாழ்த்தே `மணி’யாக அமைந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி உங்களுக்கு.


முத்துக்குமரன்,
நன்றி. உங்கள் நட்சத்திர வாரத்தில் அலைச்சல் அதிகமாக இருந்ததால் சரிவர பங்கேற்க இயலவில்லை.

நன்றி டி சே! இரை மீட்டல் என்றால் அசைபோடுதல் என்று பொருள் கொண்டேன், சரியா? சரியென்றால், இந்தப் பதம் மிகவும் பிடித்திருக்கிறது!

உஷா,
என்ன இப்படி ஒரு குண்டைப் போட்டுட்டீங்க? முதலை வாய்த்தலை( பெட்டைவாய்த்தலைன்னு ஒரு ஊர் இருக்கு இங்கே) பார்க்காமல் நாங்க நீலிக்கண்ணீர் வடிக்க மாட்டோம், நிஜக் கண்ணீரே வடிப்போம். ஜகா வாங்கிற வேலையெல்லாம் வேண்டாம்

ராகவன்,
விசாகத்துக்கு செந்தூர் வந்திருக்கீங்களா? ரொம்ப விமரிசையாக இருக்கும். அந்த சீசனில் இரவில் கடலில் குளிப்பது சுகமாக இருக்கும். ப்ளாஷ்பேக்குக்கு நாங்க `பின் பக்கத்தின் பளீரொளி’ ன்னு சொல்லுவோம்( டைரெக்ட் தமிழாக்கம்).

ராம்கி,
சீட்டு விளையாட்டில் `நண்பர்களும்’ என்ற சொல் விடுபட்டதற்காகவா இந்த ஸ்மைலி!! ப்ளாக்கரில் தெரிந்த குளறுபடிகளை நேர் செய்ததற்கு நன்றி.

 
At 2:11 AM, Blogger தாணு said...

நன்றி ஜோஸப் சார். உங்க பதிவுகளைத் தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டமிட நேரமிருப்பதில்லை.

கைப்புள்ள,
ரசித்துப் படித்த விதம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அடுத்த பதிவு இன்னும் சுவையாக எழுதணுமேன்னு தோண ஆரம்பிச்சுட்டுது

இளவஞ்சி,
துளசிமேல் நானே கோபத்தில் இருக்கிறேன். கரெக்ட்டா என் நட்சத்திர வாரத்தில் லீவ் போட்டுட்டுப் போயிட்டாங்களே! அவங்ககூட `கா’ விட்டுட்டேன்னு சொல்லிடுங்க!

ஜெயக்குமார்,
அப்படியெல்லாம் நோயாளிகளைத் தவிக்க விட மாட்டேன். OP roomஇல்தானே கம்ப்யூட்டர் இருக்கு. பேஷண்ட்டுக்கு டாக்டர் `காத்திருக்கிற’ நேரத்திலேதானே இந்த கலாட்டாவெல்லாம் பண்றது.( என்னோட பேஷண்ட் தாயின் கருவிலிருந்து வரும் மழலை மட்டுமல்ல; வாசல் வழியே வரும் காய்ச்சல், கழிச்சல் அன்பர்களும்தான்)

 
At 2:14 AM, Blogger தாணு said...

தருமி,
என்ன இங்கே போட வேண்டிய பின்னூட்டத்தை அருவியில் கொட்டிட்டீங்க? இனிமேல் அடிக்கடி பார்க்கலாம், ஆறு மாசத்துக்கு ஹவுஸ் அரெஸ்ட்தான்

 
At 2:29 AM, Blogger ஜோ/Joe said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

முதல் பதிவு அருமை..தொடர்ந்த கலக்கல் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

 
At 3:12 AM, Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்கள் தாணு அக்கா. நேத்து எனக்கு வந்தப் பின்னூட்டங்களை வச்சு இந்த வார நட்சத்திரமா யாரு இருக்கப் போறாங்கன்னு ஊகிக்க முயற்சித்தேன். ரெண்டு மூனு பேர் வந்தது. அதில் நீங்க ரெண்டாவது. வாழ்த்துக்கள்.

இந்த வாரம் முடியட்டும். நட்சத்திர வாரத்தின் பெருமை உங்களுக்கும் புரியும். அப்போ கேக்க மாட்டீங்க, நட்சத்திரத்தின் மேல அப்படி என்ன மோகம்ன்னு.... :-)

உங்கள் மலரும் நினைவுகள் நல்லா இருக்கு அக்கா. உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் இதுவரைக்கும் படிச்சிருக்கேன்னு பொய் சொல்ல விரும்பலை. ஆனாலும் நிறைய பதிவுகள் படிச்சிருக்கேன். அதனால என்ன எதிர்பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு. அந்த எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி இது வரை நீங்கள் வெளிப்படுத்தாத உங்களின் முகங்களைக் காட்டுங்கள்.

 
At 3:31 AM, Blogger கயல்விழி said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். மின்னுங்கள் மின்னுங்கள்.
மலரும் நினைவுகள் பதிவு சுவாரசியமாய் இருந்தது.

 
At 3:46 AM, Blogger பத்மா அர்விந்த் said...

Welcome Thanu. I will try an dread all posts this week. Best,

 
At 4:08 AM, Blogger rv said...

அத்தை,
முத பதிவே நல்ல ஆட்டோக்ராப்பாத்தான் இருக்கு. சீரியல் தானே? போட்டுடுங்க. அக்கா ஊர்ல இல்லாத குறைய தீர்த்தா மாதிரி இருக்கும்.

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள். அப்பாடா, இந்த வாரமாவது ஆடிக்கொன்னு, அமாவாசைக்கொன்னுன்னு போடாம, தினமும் பதிவு போட்டாகணுமே! :)

ஆபரேஷன் தியெட்டர்ல கம்புயூட்டரா? அதுல இருந்து தமிழ் மணம் வேற ப்ரவுஸ் பண்றீங்களா? இருந்தாலும் பொறக்கற குழந்தைகளுக்கு உடனே தமிழ்ப் பதிவுகளையும் கத்துக்கொடுக்கற உங்க ஆர்வம் புல்லரிக்கவைக்குது! :)

 
At 4:16 AM, Blogger சிவா said...

பாதி கதை எங்க ஊர் கதை மாதிரியே இருக்கே. நானும் திருச்செந்தூர் பக்கம் தான். அழகாக சொல்லிருக்கீங்க. இனி படிக்க தவறாம வந்துடறேன். நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

 
At 4:33 AM, Anonymous Anonymous said...

Doctor! onga malarum ninaivukal ,manamaka irukkinrana,SERAN periya NINAIVU MEEDAL PURADCHIyai,ellor manathilum erppaduthi viddar.2004 SENTHOOR vantheen
arulp poomi.
Intha padathilulla pappa, RAMMIYAMAKA ullar.
Ennum eluthungal.
Nanri-Johan -Paris

 
At 4:39 AM, Anonymous Anonymous said...

nallodhoru aarambam.anru mattuma neengal aannpillaiyai ula vandheergal?.indrum athey sattampillaithanam.pathivugalal anaivar manathilum aazhamay pathiya vazhthum ungal nalam virumbi.

 
At 7:18 AM, Blogger தாணு said...

ஜோ,
நன்றி. இடையிடையே உங்க ஊர் கலப்பும் வரும்!

 
At 7:19 AM, Blogger தாணு said...

குமரன்,
நான் யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாதுன்னு இருக்கேன். அதனால் உங்க எதிர்பார்ப்புப் படி என் பாணியிலேயே எழுதிடறேன். சில சமயம் வறட்டு தத்துவமும் வந்திடும்.

 
At 7:19 AM, Blogger தாணு said...

நன்றி கயல்விழி! உங்கள் கண்களின் ஒளியைவிட இந்த நட்சத்திரத்தின் ஒளி பெரிதன்று.

 
At 7:21 AM, Blogger தாணு said...

தேன் துளி,
பிஸியாக இருக்கீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். நாளைய பின்னூட்டம் விரிவாக இருக்கும்னு தெரியும்

 
At 7:22 AM, Blogger தாணு said...

ராமநாதன்,
ஆடி எங்க ஊர்லே உண்டு, ரஷ்யாவிலும் இருக்கா? உங்க கொசுவத்தி சுருள் அக்கா சென்னை வந்தாச்சு. மதியம் பேசி பழம் விட்டாச்சு. தம்பிகளையெல்லாம் ஒழுங்கா க்ளாஸுக்கு வரச் சொன்னாங்க.
ஐயோ சாமி, நான் OPன்னு சொன்னது out-patient room., operation theatre இல்லை.

 
At 7:23 AM, Blogger தாணு said...

சிவா,
வருகைக்கு நன்றி. எந்த ஊர்? நான் ஆறுமுகநேரி உப்பளத்துக்காரி. அதான் அடிக்கடி கடல் காற்று வீசும் என் பதிவுகளில்.

 
At 7:45 AM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

தாணு

தனி நட்சத்திரமாக பிரகாசிக்க
ஞானியின் வாழ்த்துக்கள்

 
At 8:20 AM, Blogger தருமி said...

நிறைய அருவிகளா இருந்திச்சா...அதுல நனஞ்சதில ஒரு குழப்பம் போல..அதனால இங்கேயும் ஒரு தடவை நட்சத்திர வாழ்த்து சொல்லிடறேன்..

 
At 9:13 AM, Blogger Unknown said...

//ஆண்பிள்ளைகளுடன் சரிக்குச் சமமாக கோலி விளையாடுதல், பம்பரம் விடுதல்,கட்டக்குச்சி அடித்தல்(எங்க ஊர் கிரிக்கெட்) என்று ஊர் சுற்றிவிட்டு//

ஹை! நம்மள மாதிரியேதானா நீங்களும்?. அப்பா, அண்ணன்கள் செல்லம்., இதில் நானும் அப்படியே.. இந்தப் பதிவு படிக்க ரொம்ப நல்லா., ஏதோ தென்றலை அனுபவிப்பதுபோல் இருந்தது. ஒரே ஒரு முரண்., நமக்கு கோலம் போடத் தெரியாது.

 
At 9:15 AM, Blogger Unknown said...

//பதிவுகளை படிப்பதையே விட்டு விடலாமா என்று எண்ணும்பொழுது//
உஷா., என்ன விளையாட்டு இது?.

 
At 9:17 AM, Blogger G.Ragavan said...

// ராகவன்,
விசாகத்துக்கு செந்தூர் வந்திருக்கீங்களா? ரொம்ப விமரிசையாக இருக்கும். அந்த சீசனில் இரவில் கடலில் குளிப்பது சுகமாக இருக்கும். ப்ளாஷ்பேக்குக்கு நாங்க `பின் பக்கத்தின் பளீரொளி’ ன்னு சொல்லுவோம்( டைரெக்ட் தமிழாக்கம்). //

தாணு, நான் பொறந்து வளந்தது தூத்துக்குடி. திருச்செந்தூர் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊரு. பிடிச்ச கோயில். அந்த நெனப்பே சொகமா இருக்கும்.

ஓ! பின்பக்கத்தின் பளீரொளியா....ஆகா! ஆள விடுங்க சாமி.....இந்த அளவுக்கெல்லாம் எனக்குத் தமிழ் தெரியாதே!

 
At 10:00 AM, Blogger Karthik Jayanth said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்..

முதல் பதிவு அருமை.

//ஆண்களின் மலரும் நினைவுகள் போல் பெண்களும் மலர்ந்த நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் //

தவறு இல்லையே - IMO

 
At 10:08 AM, Blogger தாணு said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:18 AM, Anonymous Anonymous said...

ஈரோட்டு நிலவின்று
தாரகையாய் ஜொலிக்கிறது!

பாரமில்லாக் காலத்து
ஈரமான நினைவுகளை
பல்லக்கில்[பிளாக்]
பாங்குடனே சுமந்துவந்து
தோரணமாக்கிய தோழியே!

வரும்காலமெல்லாம்
அன்றுபோல் என்றும்
மகிழ்வுடன் வாழியே!!!

 
At 2:00 PM, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வாங்க தாணு. நினைவுகளைக் கொட்டி இருக்கீங்க. அதென்னங்க அறிமுகத்துல எல்லா ஊரையும் சொல்லிட்டு நிலவாய் இருக்கிற (நன்றி:சித்தன்) ஊர்ப்பேரச் சொல்லாம விட்டுட்டீங்க? :-)

 
At 2:41 PM, Blogger சிவா said...

ஆறுமுகநேரியா?. நெருங்கி வந்துட்டீங்களே. அப்படியே ஒரு ஓட்டம் ஓடினா திருச்செந்தூர் போய் வரலாமே :-). நான் நாசரேத்துங்க. படிச்சது எல்லாம் அங்கே தான். உங்களை மாதிரி ஊர்காரவுகளை இனையத்தில் சந்திப்பதில் ரொம்ப சந்தோசமா இருக்கு. 'கொங்கு மண்' என்று சொல்றீங்க. இப்போ எங்கே இருக்கீங்க.

 
At 7:57 PM, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

தாணு,
பழைய நினைவுகளை பாசாங்கில்லாமல் அசைபோட்டிருக்கிறீர்கள். கொஞ்சமாக எழுதினாலும் பரவாயில்லை (ரொம்ப எழுதினால் என்னை மாதிரி ஆட்களுக்கு படிக்க பொறுமை இருப்பதில்லை :-)), இதுபோல செறிவாக எழுதுங்கள்.

 
At 10:28 PM, Blogger தாணு said...

நன்றி ஞானியார். கவிதைகள் உங்க அளவு வராது, இருந்தாலும் அப்பப்போ முயற்சி பண்ணிடறதுதான்.

 
At 10:29 PM, Blogger தாணு said...

தருமி,
வைகையில் தண்ணீரே பார்க்காத ஆளுங்களுக்கு கொட்டுற அருவி பார்த்ததும் குழப்பமாகத்தான் இருக்கும்

 
At 10:30 PM, Blogger தாணு said...

அப்படிப் போடு,
கோலம் போடத்தெரியாதது முரண் அல்ல, இன்னும் கொஞ்சம் கூடுதல் செல்லம்! உஷாவோட கூற்று உங்களுக்கும் கடுப்பு ஏத்துச்சு இல்லையா?

 
At 10:33 PM, Blogger தாணு said...

கார்த்திக்,
பெண்களின் மலரும் நினைவுகளும் தவறில்லைதான். ஆனால் நிகழ்காலத்தைத் தவறாக்கிவிடும். உதாரணமாக சேரன்ம் தனது முன்னாள் காதலிகளை தன் திருமணத்துக்கு அழைப்பதுபோல், அவர் மனைவி பழைய காதலர்களை அழைப்பது போல் காட்ட முடியுமா? படத்தில்கூடாதை ஜீரணிக்க முடியாமல் திரையுலகமே பத்திக்கும், பின்னே யதார்த்த வாழ்க்கையில் சொல்வதெப்படி? Physiology ரெண்டு பேருக்கும் பொதுவென்றாலும், சமுதாயப் பார்வை வேறு விதம்தான்.

 
At 12:06 AM, Blogger ramachandranusha(உஷா) said...

அப்படிப்போட்டு, நேற்றைய மனநிலை அது. இன்னைக்கு தெளிஞ்சுடுச்சு :-) என்னத்த சொல்ல "எல்லாரும் பெரிய மனுஷங்க" என்னைய மாதிரி கத்துக்குட்டிங்க படிச்சிட்டு ஆடி அலமந்து கெடக்குறோம் :-)

தாணு, ஒரு உண்மைய நீங்க சொல்லணும், இந்த ஆட்டோகிராப் படத்துல வரா மாதிரி நம்ம ஆளுங்க முன்னால் காதலிய வரிசை கட்டி மண்டபத்துல நிக்க வச்சா???? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க, அப்புறம் அவனோட கதி என்னாகும் என்று? என்னமோ போங்க,அதெல்லாம் சினிமாக்கு சரி, நெசத்துல ஆம்புளை என்ன பொம்பளைங்க என்ன? இதை எல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு இருந்தா எல்லார் கதியும் அதோ கதிதான்.

அப்புறம் தாணு, இந்தளவு நீங்க நுனிப்புல் மேயக்கூடாது. நான் படிப்பதைதான் நிறுத்துகிறேன்னு சொன்னேனே தவிர,
"என் பொங்கி வரும் படைப்பாற்றலுக்கு" தடை போட என்னாலோ அல்லது யாராலுமோ முடியாது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
At 12:48 AM, Blogger தருமி said...

பிறந்த ஊரே குற்றாலத்திலிருந்து ஏழெட்டு மைல்கள்தான், தெரியுமா? பழைய குற்றாலத்துக்கு பாட்டி வீட்ல இருந்து நடந்தே போவோமாக்கும்.

ஹும்..என்ன பெரிய திருப்பரப்பு...!

 
At 2:30 AM, Blogger Sud Gopal said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
படிக்கப் படிக்க காட்சிகள் கண்ணில் விரியுது.நல்லா எழுதியிருக்கீங்க.

Physiology ரெண்டு பேருக்கும் பொதுவென்றாலும், சமுதாயப் பார்வை வேறு விதம்தான்.
அதே.அதே.

`குடும்பத்தை உருவாக்குறதுக்குப் பதிலா ஒரு கிராமத்தையே உருவாக்கி வைச்சிருக்காரு, அங்கே திருட வர்றவன் எதைத் தூக்கிட்டுப் போக முடியும்’ன்னு

5*Smiley.

 
At 6:00 AM, Blogger ramachandranusha(உஷா) said...

தாணு, என்னோட கடைசி பின்னுட்டத்துல கடைசியா :-) இந்த ஸ்மைலிப் போடாமா உங்களுக்கு அனுப்பிட்டேன். தவறுக்கு
வருந்துகிறேன் :-(

 
At 7:38 AM, Blogger தாணு said...

சித்தன்
இவ்வளவு அழகா கவிதை எழுதும் திறன் வைச்சுக்கிட்டு ப்ளாக் பக்கமே வராமல் ஓடுறது என்ன நியாயம். நிறைய எழுதுங்க

 
At 7:41 AM, Blogger தாணு said...

செல்வராஜ்
ஈரோட்டில் இருக்கிறேன்னு ஏற்கனவே சொல்லியிருந்ததால் மறு பதிப்பு வேணாமுன்னு நினைச்சிருந்தேன். ஆனால் உங்களுக்கு பின்னாடி ஒருவர் எந்த ஊர்ன்னு கேட்டதைப் பார்த்தபின்தான் சொல்லாததன் தவறு புரிஞ்சுது.

 
At 7:43 AM, Blogger தாணு said...

சிவா, இப்போ தெரிஞ்சிருக்கும் எங்கே இருக்கேன்னு. நாசரேத் மாமனார் ஊருங்க. புது வருஷம் கூட அங்கேதான் வந்திருந்தோம்

 
At 7:49 AM, Blogger தாணு said...

சுந்தரமூர்த்தி நானும் உங்க ரகம்தான். ஒரு அளவுக்கு மேல் எழுத பொறுமை இருப்பதில்லை. ரொம்ப சின்னதா எழுதினால் நோட்ஸ் மாதிரி இருந்தது, அதுதான் கொஞ்சம் இழுத்திட்டேன்

 
At 7:51 AM, Blogger தாணு said...

பாரதி!
வருகைக்கு நன்றி. `காணிநிலம்' சென்று பார்த்தேன். நன்றாக உள்ளது. சீக்கிரம் மூணாவது பதிவு எழுதி தமிழ்மணத்துக்குள் வரலாமல்லவா?

 
At 8:26 AM, Blogger ஜோ/Joe said...

//ஹும்..என்ன பெரிய திருப்பரப்பு...!//

தருமி,
என்ன? எங்க மாவட்டத்த பத்தி என்ன நினச்சீங்க..ஹி..ஹி..கடலும்,மலையும்,தென்னையும் ,வாழையும்,தாமரையும்,அல்லியும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மாவட்டம் ஐயா..பார்த்து சொல்லுங்க.(நம்ம ஊரு ப்பெருமைய சொல்ல வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி)

 
At 1:45 PM, Blogger Sundar Padmanaban said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

நினைவலைகள் நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
சுந்தர்

 
At 2:39 AM, Blogger தாணு said...

`பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்- ஊர்கள் எத்தனையோ விதம் ஆனால் எழில் ஒரே விதம்''. திருப்பரப்பு குழந்தை மாதிரி, குற்றாலம் வாலிபன் மாதிரி. இல்லையா ஜோ?

 
At 2:40 AM, Blogger தாணு said...

சுந்தர், சதீஷ்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

 

Post a Comment

<< Home