Sunday, November 13, 2005

வாத்தியார்களும் மாணவர்களும்

எனது `ராகிங்’ பதிவிற்கு ராமநாதன் இட்டிருந்த பின்னூட்டம் என் மனதில் எழுப்பிய தாக்கங்களே இந்தப் பதிவு. ரஷ்யாவில் ஆசிரியர்-மாணவர் இடையேயான உறவுகள் பற்றி எழுதியிருந்தார்.
தமிழ்நாட்டில் பொதுவாக எங்க ஊர் மாதிரியான மத்திய தர நகரங்களில் ஆசிரியர்- மாணவன் உறவு சமீப காலங்களில் ரொம்பவே சிதைந்து வருகிறது. நல்ல STANDARD MAINTAIN பண்ணி ஓரளவு தரம் இருப்பதாக அறியப் பட்ட பள்ளிகளில் கூட வாத்தியார்-மாணவன் உறவு ஆரோக்கியமானதாக இல்லை.

தவறு எங்கு ஆரம்பிக்கிறது?ஒரு சின்ன அலசல்.

தற்போதைய கல்வித் தரத்தின் கூடுதல் சுமை; தொழிற் கல்விகளையே குறிவைத்து பிள்ளைகளை கல்வி கற்கத் தூண்டும் பெற்றோர்; இயந்தரத்தனமாக்கி விடப்பட்ட போதிக்கும் முறைகள்; `ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ சுகம் என்றிருந்த ஆசிரியர் சமுதாயம்,பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமே நினைத்து வேலைக்கு செல்வது; ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதெல்லாம் அடக்கியாளும் தன்மை,அதை பள்ளிகளில் கடைப்பிடித்தலாகாது என்ற மாறுபட்ட மனோபாவம்—இன்னும் இதுபோல் சில பல காரணங்கள்.

பள்ளிப் பருவம் முடிக்கும்போது தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைக் கல்வியை விடுத்து, குருவி தலையில் பனங்காய் வைப்பது போன்ற அளவுக்கு மீறிய பாடத் திட்டங்கள். 5 வருடங்களில் மருத்துவம் படிக்கும்போது படித்த பாடங்கள் அனைத்தும், +2 முடிக்கும்போதே முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டும் போன்ற சுமையான SYLLABUS. பயாலஜி எடுத்த அனைவரும் மருத்துவம் படிக்கப் போவதில்லை, ஆனாலும் அனைவருக்கும் அதே பாடத் திட்டம்தான். இதில் இன்னொரு BEAUTY என்னவென்றால், அதை நடத்தும் ஆசிரியர் பலருக்கே அது புரியாமல், சில டாக்டர்களிடம் ரகசியமாக TUTION எடுத்துக் கொள்வதும் உண்டு.(இது கதையல்ல நிஜம்). கணிதம் பற்றியோ சொல்லவே வேண்டாம். தினம் ஒரு புது மாறுதல்.

இத்தைகைய குழப்பமான பாடத் திட்டமும், நடத்துதல் சிரமங்களும் சேர்ந்து ட்யூஷன் போகாமல் முடியாது என்ற நிலைக்கு குழந்தைகளைத் தள்ளி விடுகின்றன. எங்கள் காலத்தில் ட்யூஷன் போவதென்றாலே அவமானமான விஷயம். மக்கு பசங்களும் சேட்டைக்காரப் பசங்களும்(இரு பாலருக்கும் பொதுவானதுதான்) மட்டும்தான் ட்யூஷன் போவாங்க. அநேக இடங்களில் ட்யூஷன் வாத்தியார் வகுப்பில் நல்லா படிக்கும் மாணவராகவே இருப்பார்கள். ஆசிரியர்களில் ட்யூஷன் எடுப்பவர்களும் குறைவாகவே இருப்பாங்க.
இப்போ ட்யூஷன் எடுப்பதே ஒரு `கை’வந்த கலையாகிவிட்டது. அதிலும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள். ஒரு வகுப்பின் மாணவன் அடுத்த வகுப்பு வாத்தியாரிடம் ட்யூஷன் செல்லக்கூடாது. மீறி போய்விட்டால் அந்த மாணவன் வருஷம் முழுவதும் ஏதோ ஒரு நொண்டி காரணத்துக்காக வகுப்பறையின் வெளியிலேயே நிற்கும் தண்டனை நாட்கள் அதிகமாக இருக்கும். மிக மோசமான வசவுகளால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப் பட்டு முன்பிருந்ததை விடவும் குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும் உண்டு. அதனாலேயே, இப்போதெல்லாம், பெற்றோர்கள் உஷாராக பள்ளி திறந்ததும், வகுப்பாசிரியரைத் தெரிந்துகொண்டு ட்யூஷன் பீஸ் என்ற காணிக்கைகளை அந்த பூசாரிகளுக்கு படைத்துவிடுகிறார்கள். அதன் பிறகுதான் புத்தகங்கள் கூட வீட்டுக்குள் வரும்.

சமீபத்தில் ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவதைப் பற்றிய விவாதம் ஒன்று வந்ததே, அதைவிடக் கொடுமையானது, இவர்களின் பீஸ் வாங்கும் முறைகள். ஒரு பாடத்துக்கு இவ்வளவு என்று `ரேட்’ நிர்ணயித்து விடுவார்கள். அதை ஒன்று அல்லது இரண்டு தவணையில் கொடுத்துவிட வேண்டும். அதைத்தானே அவர்கள் வட்டிக்கு விட வேண்டும்!!!! நான் 1-ஆம் வகுப்பிலிருந்து DG0 வரை படிக்க ஆன செலவுக்கு நிகரான தொகை என் பெண்ணின் ஒரு வருட ட்யூஷன் பீஸ்! என்னதான் MONEY INFLATION என்றாலும்கூட கணக்கு ரொம்பவே உதைக்குது!!
(விளையாட்டாக என் பெண்ணிடம் நான் சொல்வது `குட்டிம்மா! கஷ்டப்பட்டு MEDICAL or ENGINEERING படிச்சுட்டு அடுத்தவங்களை நாடி வாழப் போறதைவிட, ஜாலியாக BSc-MSc- maths or physics படிச்சுட்டு வீட்டிலேயே ட்யூஷன் எடுத்தால் அதைவிட நிம்மதியாக செட்டில் ஆயிடலாமே’ என்று!(நல்ல அறிவுரைதானுங்களே?) வருமான வரி கட்ட வேண்டியதில்லை; நுகர்வோர் நீதிமன்றங்களில் கூண்டேற வேண்டியதில்லை; நினைத்த நாட்களில் விடுமுறை; ட்ரான்ஸ்பர் போன்ற தொந்தரவில்லை- எவ்வளவு வசதி பாருங்க?ஆனா அது கொஞ்சம் மக்கு, மருத்துவம்தான் படிக்கப் போவதா பீற்றிக்கொண்டிருக்குது, தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?)

இந்த மாதிரி ஆசிரியர்களின் நோக்கமும் செயல்பாடுகளும் மாறத் தொடங்கியபின், மாணவர்களின் மனோபாவமும் மாறத்தானே செய்யும். நல்ல மதிப்பெண்களெடுத்து வாத்தியார் கையால் மோதிரக் குட்டு வாங்கும் சந்தோஷங்களே சமீப காலங்களில் இல்லை. வாத்தியாருக்கு PET மாணவன், குறிப்பிட்ட வாத்தியாரின் ரசிகர் கூட்டம் போன்றவையெல்லாம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.அப்படியே இருந்தாலும், இலுப்பைப் பூ போல்தான்னு நினைக்கிறேன்.
ரசிகர் கூட்டம் இருக்குதோ இல்லையோ, ஹால் டிக்கெட் கைக்கு வந்ததும், வாத்தியாரைத் `தனியாக கவனிக்கும்’ கூட்டம் இருக்கிறதென்பதை சமீபத்தில் தெரிந்துகொண்ட போது அதிர்ச்சியாக இருந்தது. `வினை விதைத்தவர்கள்தான் வினை அறுக்கிறார்கள்’ என்பது புலன் ஆனாலும், கேட்கும்போது மனது வலித்தது.
`எங்க காலத்திலே’ என்று ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் முகத்தை சுழிக்கும் இப்போதைய இளைய சமுதாயம், எங்கள் கால ஆசிரியர் - மாணவர் உறவுகளைப் போன்ற சந்தோஷங்களை இழந்த ஏழைகளே!
இனிக்க இனிக்க தமிழ் உணர்வு ஊட்டி, இணையம் வரை நட்புள்ளங்களைப் பெற வைத்த தமிழாசிரியர் குழைக்காதன் சார்! அவரை சார் என்று சொன்ன காலங்களை விட `பெரியப்பா’ என்று சொல்வதுதான் அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அவரது அன்றைய மாணவர்கள் இன்றும் ஒரு பெரியப்பாவிடம் காட்டும் உண்மையான வாஞ்சையுடன் அவரைக் கண்டு அளவளாவுவது அரிய காட்சி. `டேய் நாராயணா உன் பெயரை எப்படி எழுதறது தெரியுமா’ன்னு சமீபத்தில் என் தம்பியிடம் `ந்ஆர்ஆய்அண்அன்’ என்று அந்த நடுங்கும் கரங்களால் எழுதிக் காட்டியபோது மெய்சிலிர்த்தது.தமிழ் மீது அவருக்கிருந்த ஈடுபாடு, இப்போதைய ஆசிரியர்களில் காண முடியுமா என்பது சந்தேகமே! அவர்மேல் எங்களுக்கிருக்கும் மாறா அன்பு, தற்போதைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியர்கள் மேல் இருக்குமா? இன்னும் கணிதம் சொல்லிக் கொடுத்த இப்ராஹிம் சார், ஆங்கிலம் கற்றுத் தந்த அந்தோணி முத்து சார் என்று ஒரு தேசிய ஒருமைப்பாடே எங்கள் பள்ளியில் கோலோச்சி எங்களை வழிப்படுத்தியது. ஊருக்குப் போனால் பழைய சாரையெல்லாம் ஒரு ரவுண்டு பார்க்கப் போவது ரொம்ப பிடித்த நிகழ்ச்சி. இப்போதைய பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற பின், பழைய பள்ளியின் பக்கம் தலை வைத்துப் படுப்பதே தண்டனைபோல் அல்லவா பிள்ளைகள் நினைக்கிறார்கள்.
(இவை பொதுவான நிகழ்ச்சிகள். எங்கள் வீட்டிலும் ஆசிரியைகள்,
லெக்சரர்கள் உண்டு. தனிப்பட யாரையும் புண்படுத்தும் நோக்கமும் அல்ல.)

26 Comments:

At 8:34 AM, Blogger தருமி said...

"என் ஆசிரியர்கள் --> நான் <-- என் மாணவர்கள்" என்று ஒரு தலைப்பை ரெடி செய்து (க. கை. நா.-க்கு copy rights சிலர் எடுக்கிறது மாதிரி)copy rights ஏதும் எடுக்காமல் வைத்திருக்கிறேன் ரொம்ப நாளாகவே. உங்க பதிவு அந்தத் தலைப்பைப் பதிவாக்க என்னை உந்துகிறது. முடிந்தால் விரைவில்...

 
At 8:51 AM, Blogger பத்மா அர்விந்த் said...

இந்தியாவில் பள்ளிகளின் சமீபத்திய நிலை எனக்கு தெரியாததால் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் சில பெற்றோர்களும் நாங்கள் கொடுக்கும் feesஇலதான் பள்ளியே நடக்கிறது. எப்படி எங்கள் குழந்தையை கண்டிக்கலாம் என்று சண்டை போடுவதாக படித்தேன். இன்னார் வீட்டு குழந்தைகள் என்ற அளவில் மதிக்க படும் குழந்தைகள் -ve reinforcement ஆக செயல்படுவார்கள்தானே

 
At 9:05 AM, Blogger rv said...

அத்தை,
நல்ல பதிவு. இப்பல்லாம் முன்ன மாதிரி ஆதர்ஸ வாத்தியார்கள் பார்ப்பது மிகவும் அரிது. இருக்கத்தான் செய்கிறார்கள். கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம். எனக்கும் இங்கே சிலர் உண்டு. mentors னா என்னன்னு அவங்கள பாத்துத்தான் தெரிஞ்சுகிட்டேன்.

எப்படியோ, நான் கிறுக்குனதுகூட தாக்கமெல்லாம் ஏற்படுத்திடுச்சுன்னு என் ரேஞ்ச எங்கேயோ ஏத்திட்டீங்க..ஹி ஹி.. அதுக்காக இந்த பதிவிற்கு நன்றி (சின்னவன் அர்த்தத்தில் இல்லை!) :))

 
At 10:18 AM, Blogger மணியன் said...

கல்வித்துறையும் ஆசிரியர்களும் எந்த அளவிற்கு வணிகமயமாக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இன்றைய தினம் முடிவுகளே முக்கியம், வழிமுறைகள் அல்ல என்பதும் இத்தகைய சந்தை உருவாவதற்கும்,அவர்களின் போக்குக்கும் ஒரு காரணம்.

 
At 12:40 PM, Blogger துளசி கோபால் said...

தாணு,

எப்படீங்க, இப்படிப்'புட்டுப்புட்டு' வச்சீட்டீங்க!

அருமையான பதிவு.

உங்க போனபதிவில் ராமநாதன் எழுதுன அதே விதம்தான் இங்கே நியூஸியிலேயும். மாணவர்களுக்குள்ள
சுதந்திரம் சொல்லிமுடியாது.....

இந்தியாவில் வரவர படிப்புன்றதே ஒரு மூளைச்சலவைமாதிரி ஆயிருச்சுங்களா? அப்படியும் படிச்சு(!)
அதாங்க ஆசிரியர்கள் எழுதிப்போடறதை அப்படியே மனப்பாடம் செஞ்சு, பேப்பரிலே ஒப்பிச்சு(!)ட்டா
'மார்க்கோ மார்க்'தானாமே?

ஞாபகசக்தி மருந்துங்க ஏராளமா விறபனை ஆகுதாமே. உண்மைங்களா?

 
At 12:56 PM, Blogger சினேகிதி said...

\\க. கை. நா.-க்கு copy rights சிலர் எடுக்கிறது மாதிரி)\\ dharumi sir periyamma iathi kavinakal pola iruku.

sameepathila friend orolad enta midterms kastam endu solla ava sona thangada calculus prof ella students kum 5 marks koodinavaram endu.nan ahh endu katha ..aval sonal adi prof da mahal semester ku 5 paadam eudukravam stressed out am veetila atha parthitu prof enagluku nallathu seirar avatra mahaluku nalathendakum endu.

 
At 4:44 PM, Blogger துளசி கோபால் said...

சிநேகிதி,
\\க. கை. நா.-க்கு copy rights சிலர் எடுக்கிறது மாதிரி)\\ dharumi sir periyamma iathi kavinakal pola iruku.//

எல்லாம் கவனிச்சேன். தருமி 'உண்மை'யைச் சொன்னதாலே ச்சும்மா இருந்துட்டேன்:-)

 
At 5:10 PM, Blogger b said...

கணக்கு வாத்தியார்கிட்ட டியூசன் போனப்ப அவரு மெடிக்கல் கடைக்கு போய் வாங்கி வாப்பான்னு ஒரு சீட்டு கொடுத்தாரு. கடைக்காரன் என்னை ஏற எறங்கப் பாத்துட்டு ப்ரெட்டு பாக்கெட்டு மாதிரி ஒன்னு தந்தான்.

அதுக்கப்றம் எனக்கு(ம்) வயசு வந்தப்ப அந்த வாத்திய நெனைச்சாலே கொமட்டும்.

பின் குறிப்பு1:- அந்த சம்பவம் நடந்தபோது நான் +1 படித்தேன்.

பின்குறிப்பு2:-பின்னாளில் நானும் கணக்கு வாத்தியானேன். நானும் டியூசன் எடுத்தேன். ஆனால் யாரையும் ப்ரெட் வாங்க அனுப்பியதில்லை!

 
At 5:18 PM, Blogger erode soms said...

சந்தில் சிந்தாக சின்ன டாக்டரம்மா பற்றி கூறியமைக்கு சந்தோசம்.

 
At 7:36 PM, Blogger பினாத்தல் சுரேஷ் said...

டியூஷன் எடுக்கும், வட்டிக்கு விடும் ஆசிரியர்களைப்பற்றி எனக்கு கருத்து ஒன்றும் இல்லை. ஆனால் ஆதர்சம் என்று கூறுகிறீர்களே அங்குதான்:-))

எனக்கும் சில ஆதர்ச ஆசிரியர்கள் உண்டு. ஆனால், சற்று யோசித்தால், நான் வகுப்பு மாறி, பள்ளி மாறியதில், குறைந்தபட்சம் 80 - 100 ஆசிரியர்களைச் சந்தித்திருப்பேன், அவர்களில் ஆதர்சம் என்று ஒருவரையோ, இருவரையோதான் என்னால் குறிப்பிட முடியும். அதே விகிதத்தில் இன்றும் இருக்கலாம், கொஞ்ச நாள் பொறுங்கள் - உங்கள் மகள் அவள் குழந்தைக்கு "அந்தக்கால ஆசிரியர்கள்" பற்றிக்கூறும் வரையில்:-)

பி கு: நானும் ஆசிரியன் தான், ஆனால் குழந்தைகளோ பள்ளி மாணவர்களுக்கோ அல்ல, எனவே, இது ஆசிரியர்களுக்கான சப்பைக்கட்டு அல்ல.

 
At 6:06 AM, Blogger தாணு said...

தருமி சார், உங்களுடைய அனுபவம் நல்ல வழியிலேயே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு, தூள் கிளப்புங்க

 
At 6:09 AM, Blogger தாணு said...

பத்மா,
நீங்க சொன்னது போன்ற பெற்றோரும் இருக்காங்க,ஆனால் ரொம்ப சொற்பமே. நியாயமான காரணங்களுக்காகக் கூட பெற்றோர் வகுப்பாசிரியரையோ முதல்வரையோ அணுகும் வேளைகளில், அந்த பெற்றோரின் குழந்தைகள் நாட்கணக்கில் சீண்டப்பட்டு provoke பண்ணப்படுவதுதான் இப்போதைய நிலை. அதனால் பள்ளியின் இடர்பாடுகளை நிறைய பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்வதேயில்லை

 
At 6:11 AM, Blogger தாணு said...

ராமநாதன்
எனக்கு மட்டுமல்ல தமிழ்மணத்திலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கப் போறீங்க போலிருக்கே!Enjoy

 
At 6:14 AM, Blogger தாணு said...

மணியன் வருகைக்கு நன்றி. வணிகமயமாக்கல் எல்லா துறையிலும் புகுந்துவிட்டது. ஆனால் கல்வி, மருத்துவம், நீதித் துறை போன்றவற்றில் வரும்போது மிக அதிகமான சமுதாயச் சீரழிவுகள்.

ஆமாம் துளசி,
எவ்வளவு அதிகமா `தட்டி' பிறகு வாந்தியெடுக்கப் படுகிறதோ அந்த அளவு மார்க் அதிகம்தான்.புரிந்து படிப்பதை யார் விரும்பறாங்க?

 
At 6:19 AM, Blogger தாணு said...

ராஜ்,
இது prejudiceக்காக சொல்லப்பட்டதல்ல, யதார்த்தம். என் நண்பரின் மனைவி MSc Chemistry. ஏதோ கல்லூரியில் பணியாற்றிய போது , நிற்க நேரமற்று வேலைப்பளு, ஆனால் பொருளாதார ரீதியாக பெரிய வித்தியாசமில்லை. ரிசைன் பண்ணிட்டு ட்யூஷன் எடுக்க ஆரம்பிச்சவுடன், ஒரு ஹைக். பெட்ரோல் ரொம்ப செலவாகுதேன்னு காஸ் போடலாமா, நம்ம மாருதிக்குன்னு நாங்க யோசிச்சிட்டிருக்கும்போது, அழகான Accent carஇல் சொகுசா வர்றாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க.

 
At 6:23 AM, Blogger தாணு said...

ஸ்னேகிதி, நாரதர் வேலை நன்கு நடந்ததா?

சித்தன், பாப்பாவை டாக்டரே ஆக்கிட்டீங்களா? நன்றி.

சுரேஷ்,
பள்ளி முடித்த பின்பு எத்தனையோ வாத்தியார்களிடம் பயின்று, அன்புடன் அவர்களை வளைய வந்தாலும், ஒரு தேவதா விஸ்வாசம் அவர்களிடம் வந்ததில்லை. அது பள்ளி வாத்தியார்களிடம் மட்டும்தான் வந்தது.

 
At 2:20 PM, Blogger இராதாகிருஷ்ணன் said...

எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இதுபோன்ற நல்ல உறவுகளுக்கெல்லாம் மெல்ல மறைந்துவிடும். இப்பொழுது வாத்தியார்களும் அப்படியில்லை; மாணவர்களும் அப்படியில்லை. மாற்றம் அவசியம், நல்ல வகையில் இருந்தால் மகிழ்ச்சியடையலாம், ஆனால்...

 
At 4:57 PM, Blogger சினேகிதி said...

enenga ithu nan poi periyammavuku sollave illa.

 
At 6:32 AM, Blogger தாணு said...

ராஜ்,
உங்க கேள்விக்கு சில வரிகளில் விளக்கத் தெரியாததால், ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். தயவு செய்து என் ப்ளாக்கில் பார்க்கவும், சுட்டி கொடுக்கத் தெரியாது

 
At 6:33 AM, Blogger தாணு said...

ஆமாம் ராதாகிருஷ்னன். ஆனால் அந்த மாறுதல் எப்படி வருமென்பதுதான் குழப்பமாக உள்ளது

 
At 8:52 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

இந்த வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்களே அதன் பின்புலம் என்ன என்று சொல்லுங்களேன்.

//பழைய பள்ளியின் பக்கம் தலை வைத்துப் படுப்பதே தண்டனைபோல் அல்லவா பிள்ளைகள் நினைக்கிறார்கள்.//
எல்லாருமா இப்படி நினைக்கிறாங்க... இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். கோவில்பட்டி போனால் கண்டிப்பாக என் பள்ளிக்கும், பள்ளியில் நான் மதித்த இரு ஆசிரியர்கள் வீட்டிற்கும் சென்று வருவேன். (நான் பள்ளி படிப்பு முடித்து ஆறு வருடங்கள் தான் ஆகிறது)

//அப்படியே இருந்தாலும், இலுப்பைப் பூ போல்தான்னு நினைக்கிறேன்.//
என்னுடைய ஜூனியர் மாணவன் ஒருவனும் இங்கு டில்லியில் வசிக்கிறான். அவனுக்கும் இதே நினைவு தான். கண்டிப்பாக ஆசிரியர் மாணவர் உறவு நன்றாகத்தான் இருக்கிறது.

// பனங்காய் வைப்பது போன்ற அளவுக்கு மீறிய பாடத் திட்டங்கள//
இது முற்றிலும் சரி... என்ன படிக்கிறோம் எதற்காக படிக்கிறோம் என்ற நினைவில் தான் பெரும்பான்மை மக்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர்.

 
At 9:19 AM, Blogger தாணு said...

அடப் `பாவமற்றவர்களா'(பாவிகள்னு சொன்னா அடிக்க வருவீங்களே).பள்ளிப் படிப்பு முடிச்சே 6 வருஷம்தான், ஆனால் அதற்குள் வக்கணையா செட்டிலாயிட்டீங்களே சாமிங்களா! இதுக்குத்தான் மருத்துவம் வேணாம்கிறது, கிழடான பிறகுதான் ப்ளாக் பக்கம் வரவே நேரம் கிடைக்குது!

 
At 9:48 AM, Blogger குமரன் (Kumaran) said...

//இப்போதைய பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற பின், பழைய பள்ளியின் பக்கம் தலை வைத்துப் படுப்பதே தண்டனைபோல் அல்லவா பிள்ளைகள் நினைக்கிறார்கள்.
//
தாணு அக்கா. சாட்டையடி.

நான் கல்லூரி சென்றபின் ஒரே ஒரு தடவை எங்கள் பள்ளிக்கு சென்றேன். பின்னர் அந்தப் பக்கமே போனதில்லை. அடுத்த முறை மதுரை போகும் போது நிச்சயம் போய்ப் பார்க்கவேண்டும். பல பேர் ரிடையர் ஆகியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

 
At 10:13 AM, Blogger ஜெயஸ்ரீ said...

the relationship between teachers and students is very good in small towns . you cannot see this definetly in big cities ..

 
At 11:43 PM, Blogger தாணு said...

ஜெயஸ்ரீயோட வாதம் கொஞ்சம் சரின்னு படுது. எங்க ஊர் குக்கிராமம், அதனால் அந்த அந்னியோன்யம் வந்திருக்குமோ?

 
At 11:56 PM, Blogger தாணு said...

குமரன்,

நாம் மாணவ பிரதிநிதிகளாகவே பேசறோம். சில நேரங்களில் வாத்தியாருக்கு நம் பெயர் மறந்துவிட்டதுபோல் தோன்றும்போது மனம் தளர்ந்துவிடக் கூடாது. நமக்கு ஒரே கனக்கு வாத்தியார்ன்னாலும், அவருக்கு நாம் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கலாம். ஆனாலும் பார்த்துவிட்டு வாருங்கள்

 

Post a Comment

<< Home