தாழம்பூ-வாழைப்பூ-வலைப்பூ!
பின்னூட்டங்களே இட்டுக்கொண்டிருந்தபோது , அடுத்தவர் நெருப்பில் குளிர்காய்வது சரியாக வராதுன்னு தோணியதால், பதிவெழுதப் புகுந்தேன். ஆரம்பித்த புதிதில் அடுக்கடுக்காக எழுதும்போது ரொம்ப புளகாங்கிதமாக இருந்தது. நாம எழுதறதை இத்தனை பேர் வாசிக்கிறாங்களே, இன்னும் எழுதணும்னு ஒரே உத்வேகத்தோடு தினமும் ஒரு பதிவு போடணும்போல் ஒரு அரிப்பு. வேலைப்பளு நெட்டி முறித்தாலும், தூங்குற நேரங்களைத் தியாகம் பண்ணிட்டு சக பதிவர்களுடன் கலந்துரையாடுவதில் ஒரு திரில். சாப்பிடும் நேரங்களை ஒதுக்கிவிட்டு சமபந்தி போஷனம் பண்ணுவதுபோல் ஒரு நிறைவு.
ஆச்சு , ஓரளவு நாமும் ஒரு வலைப்பதிவர்ங்கிற அங்கீகாரம் கிடைச்சாச்சு. ஆறுமுகநேரியிலிருந்து அமெரிக்கா வரை, நெல்லையிலிருந்து நியூஸிலாந்துவரை என்று ஏகப்பட்ட நண்பர்களுடன் அறிமுகம். நாட்டு நடப்பிலிருந்து நவராத்திரி கொலுவரை நல்லது கெட்டது நாலும் பகிர்ந்துகொள்கிறோம். இணையத்தில் தெரிந்துகொண்டவர்களின் குரல்களை தொலைபேசியில் கேட்கும்போது வருவதோ புல்லரிப்பு. நிழலுலகம்போல் காட்சியளிப்பது நிஜமாகிப் போகும்போது இதயத்தில் ஒரு நெகிழ்வு.
ஆஹா, நமக்கு அறிமுகமானது நம் நண்பர்களுக்கும் தெரியட்டுமென்று ஈ-கலப்பையையும், யூனிகோடையும் தெரியவைத்து அவர்களின் பதிவு பார்த்ததும் மனதில் ஒரு பெருமிதம். நித்திரைக்குச் செல்லுமுன் கடைசி பதிவையும் பார்த்துவிட்டு, நாள் தொடங்கியதும் இடைப்பட்ட வேளையில் வந்த பதிவுகளையும் மேய்ந்துவிட்டு, நேரமிருந்தால் பின்னூட்டம், நேரப் பற்றாக்குறையென்றால் நட்சத்திரத்தில் ஒரு குத்து- இப்படி சதா சர்வ நேரமும் திரை முன்னாலேயே உட்கார்ந்திருப்பதிலும் ஒரு ஆனந்தம்.
கண்டதில் கேட்டதில் சுவாரசியமான விஷயங்களை மகள் மகனுடனும், புதிதான விஷயங்களைக் கணவருடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் indirect ஆக பதிவுகளின் தொடர்பில் வைத்திருப்பதிலும் ஒரு சந்தோஷம். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவேண்டுமென்றிருந்த ஆசைகூட இரண்டாம்பட்சமாகத் தோன்றுமளவுக்கு நாலு சுவர்களுக்குள்ளேயே இந்த உலகம் முழுவதும் சுற்றிவருவதில் ஒரு பெருமிதம்.
நியூஸியின் காலக்கெடு போன்ற விஷயங்களையும், ரஷ்யாவில்
க்யூவில் நிற்பது எதற்காக போன்றவற்றையும் எந்த பூகோளப் புத்தகத்திலிருந்தும் இவ்வளவு அந்நியோனியமாகத் தெரிந்து கொள்ளமுடியாது என்பதில் ஒரு பிடிப்பு. பெண்களை ஆண்கள் எழுத்துக்களால் தாக்கினாலும், பெண்கள் ஆண்களைக் கண்டித்துக் கடுப்பேற்றினாலும், கடல் அலை போல் மறுபடி மறுபடி பதிவுகளில் புரண்டு, மோதி, முத்தெடுக்கும் முரண்பாடுகளும் ஒரு சுகம் இங்கே.
பதிவு எழுத நேரம் வாய்க்காத தருணங்களிலும் பின்னூட்டங்கள் மூலமே அனைவருடனும் அளவளாவ முடிவது அதிகப்படியான
வசதி இங்கு. வம்பு பேச்சோ, வரம்பு மீறிய பேச்சோ எதுவானால் என்ன, பேச்சுக்கள்தான் எங்களைப் பிணைக்கும் பாலம் இங்கே.
பதிவுகளால் பதியனிடப்பட்டு இணையத்தில் வேரூன்றி நிற்கும்
அட்சய மரத்தின் அபூர்வப் பூ நம் வலைப்பூ.
(தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை, சும்மா ஒரு attraction-க்காகத்தான்)
16 Comments:
தாணு,
இதோ உங்க பதிவுக்கு உலக அங்கீகாரம் கிடைச்சிடுச்சு.
பார்த்தீங்களா,'துரைகள்'வந்து பின்னூட்டிட்டுப் போயிருக்காங்க:-))))))
வெளிநாட்டுப் பயண ஆசையை எல்லாம் ஒதுக்கவேணாம். ஒரு நடை இங்கே வந்துட்டுப் போங்க.
நல்ல வெளிப்படுத்தியிருக்கீங்க உங்க அனுபவத்தை தாணு.
நல்ல வெளிப்படுத்தியிருக்கீங்க உங்க அனுபவத்தை தாணு.
சோம்பல்?
தழைக்கட்டும் வலைப்பூ
வளர்க்கட்டும் நட்பூ
தாணு
வேலைகளின் தகைவை மறக்க ஒரு வழியாக இருப்பதை சொல்ல மறந்துவிட்டீர்களே:)
ராம்கி,
சோம்பல் யாருக்கு? என் பதிவுகளை நீங்க்க இடையிடையே பார்க்கிறதே இல்லை.
தனிமடலும் எதுவும் வரலை!
ஆமாம் பத்மா,
வேலையின் மூச்சுமுட்டலுக்கு நிச்சயமாக ஒரு வடிகால்தான்.
நன்றி மதுமிதா.
இங்கேயும் அதே கதை தான்...
எத்தனை புது நண்பர்கள் தெரியுமா...
மிக நல்ல விஷயம் இல்லையா...!!!
உண்மைதான் இப்போதெல்லாம் சினிமாகூட போர் அடிக்கிறது."பிளாக்" பார்ப்பதோடு சரி.
பெயர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வந்துட்டாங்களா?? இன்னும் கொஞ்சம் விட்டா புருஷன், புள்ளகுட்டி பேரேல்லாம் கூட தெரிஞ்சுகிட்டு விசாரிப்பாங்க போல இருக்கு!! :-)
ஆமாமா, technology has improved so much, i say...
இடையிடையே உங்களுக்கு; சில வேலையில்லா ஆளுகளுக்கு - அதுவே எல்லாமாகி...
பதிவு போட்டதுமே பின்னூட்டம் தேடியலைந்து...என்னமோ போங்க..வாழ்க்கையில ஒரு பிடிப்பே இதுதான்னு ஆகிடுமோன்னு 'பயமா' இருக்கு..!
அட! நான் முன்பிருந்த ஊர்ல இருந்து வந்து உங்களை விசாரிக்கிறாங்க. ஒரே பொறாமையா இருக்கு தாணு. :)
சுத்திப்போடுங்க. அப்படியே comment sectionஇல் word verification போடுங்க! அப்புறம் தலைமாட்டுல நின்னு பேரு வச்சவங்க மாதிரி குசலம் விசாரிக்கமாட்டாங்க.
எப்படி நம்ம ஐடியா?
-மதி
என்ன அத்தை,
இந்த கைல் பிலப் ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர் ஆயிட்டார் போலிருக்கே.. டெய்லி ஒரு பின்னூட்டம் போடறார்! :P
Finally Add Kushboo..
Your blog will become super hit.
தாணு,
என்ன உலக ரேஞ்சுக்குப் போயிட்டீங்க போல. kyle phillup , Joel Winslow ன்னு பல பெரிய தலைகள் எல்லாம் தமிழப்படிச்சுப் புரிஞ்சுக்கிறாங்க.
Post a Comment
<< Home