Friday, September 30, 2005

நெகடிவ் க்ரூப் ரத்தம்

இரத்ததானம் பற்றி சிமுலேஷன் அவர்கள் கதையைப் படித்தவுடன் Rh negative group பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியது.
பாஸிடிவ் வகையைவிட நெகடிவ் வகை கொஞ்சம் அரிதானதுதான். அதிலும் பெண்களுக்கு நெகடிவ் ஆக இருந்துவிட்டால் சில பல பிரச்னைகள் குழந்தைப்பேறைப் பாதிக்கும். முதல் கர்ப்பத்தை நெகடிவ் தன்மை பாதிப்பதில்லை. ஆனாலும் கர்ப்பகாலங்களில் வெகு அபூர்வமாக ஏதேனும் ரத்தக் கசிவு கர்ப்பப்பையில் ஏற்பட்டு குழந்தைக்கு தொந்தரவு தரலாகாது என்பதால் அதற்குத் தேவையான பீரியாடிக் செக்கப் செய்யப்படும். குழந்தை பிறந்ததும், சிசுவின் ரத்த வகையும் தாயின் க்ரூப்போல் நெகடிவ் ஆக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. பாஸிடிவாக இருக்கும் பட்சத்தில் தாய்க்கு ஒரு தடுப்பூசி போட வேண்டும். இது அடுத்த கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்காகவே. அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் அடுத்த குழந்தைக்கு கர்ப்பத்திலேயே ஒருவித மஞ்சள் காமாலையும் அதுசார்ந்த உடல் ரீதியான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அக்குழந்தைக்கு பிரசவத்துக்கு முன் கருவறையிலேயே(intra uterine)ரத்ததானம் செய்யவேண்டிய சூழல்கூட ஏற்படலாம்.
பிரசவ சமயங்களில் பரிசோதனை செய்துகொள்வது ஓரளவு எல்லோராலும் நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டதால் இது சம்பந்தமான பிரச்னைகள் குறைந்துள்ளது. ஆனால் மாறிவரும் பொருளாதார தேவைகளால் முதல் குழந்தையையே அபார்ஷன் செய்துகொள்ளும் நிலைமையும் அதிகரித்து வருகிறது. அதுவும் பதிவு பெற்ற மருத்துவர்களன்றி தாதியரிடமும் போலி மருத்துவர்களிடமும் செய்துகொள்ளும் அவலமும் இருக்கிறது. அப்போது ரத்தவகை கண்டு பிடிக்கப்படாமல், உரிய தடுப்பூசி போடப்படாமல், அடுத்த குழந்தையை ஆபத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். இதில் மணமாகாமல் கருவுறும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும் கருக் கலைப்பிற்கான மாத்திரைகள் மெடிகல் ஸ்டோர்களில் டாக்டரின் பரிந்துரையின்றி மிக எளிதாகக் கிடைக்கிறது. நன்கு படித்தவர்கள்கூட எளிதாகக் கிடைக்கும் யூரின் கிட்கள் மூலம் பிரசவத்தை உறுதி செய்துவிட்டு பார்மஸியில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுக் கருவைக் கலைத்துக் கொள்கிறார்கள்.??!! அடுத்த கர்ப்பத்தின்போது பரிசோதனையில் நெகடிவ் என்று சொல்லும்வரை அது பற்றிய விழிப்புணர்வே அவர்களுக்கு இருப்பதில்லை.

இதற்கு போடப்படும் தடுப்பூசியின் விலை கொஞ்சம் அதிகமே. சுமாராக 2500-3000 ரூபாய் ஆகிவிடும். ஆனால் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் ஆனால் கூட, டாக்டரின் பரிந்துரையின் பேரில் தடுப்பூசி போடமட்டுமே கூட அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகலாம். இந்த வசதி பிரசவத்துக்குமட்டுமே, கருக்கலைப்புக்கு அல்ல.
பிரசவத்தின் பிறகு போடும் தடுப்பூசியின் அளவில் பாதி அளவு கருக்கலைப்பிற்கு பின் போட்டால் போதுமானது.
இரண்டாவது பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பத்தடை செய்துகொள்பவர்கள்கூட தடுப்பூசி போடவேண்டும். பின்னாளில் ஏதேனும் ரத்தம் செலுத்தவேண்டியிருந்தால் தொந்தரவு வராமலிருப்பதற்காக..

2 Comments:

At 1:28 PM, Blogger erode soms said...

மிக எளிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி
தடுப்பூசிக்குப்பிறகு இரத்தில் என்ன மாற்றம்
எப்படி ஏற்ப்படுகிறது என கூறியிருக்கலாம்

 
At 2:11 PM, Blogger துளசி கோபால் said...

தாணு,

நல்ல பதிவு.

கணவன் & மனைவி இருவருக்கும் நெகட்டிவ் இருந்தாக் குழப்பம் இல்லைதானே?

 

Post a Comment

<< Home