Sunday, September 18, 2005

பாரதியின் புதுமைப் பெண்களும் பாவப்பட்ட ஜென்மங்களும்

நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட பாரதத்தின் புதுமைப் பெண்களைப் படைத்தது பாரதியின் புதுமைத் தமிழ். அதைப் படிப்பதோடு முடிந்துவிடுகிறது பாரதீயர்களின் புதுமையோங்குதல்.

கலாச்சாரப் பரிவர்த்தனைகள் என்ற பேரில் மேல்நாட்டு பண்புகளை ஏற்றுக்கொள்ளும்போதும், தங்களுக்கு இயைந்தது எதுவோ அதுமட்டுமே உண்மையான கலாச்சாரம் என்று வெட்டித்தனமான வியாக்கியானங்களுடன் பின்பற்றுதலும் ஒரு விதமான மாய்மாலமே. அங்கு பெண்களுக்குத் தரப்படும் சம உரிமையைத் தம் வீட்டுப் பெண்களுக்கு என்றாவது தந்ததுண்டா?

பெண்களுக்கு புதிய சுதந்திரங்களைக் கொடுக்காட்டியும் பரவாயில்லை, இருப்பதை எடுத்துக்காம இருந்தாலே போதும். என்னோட நெருங்கிய தோழி திருமணத்துக்குப் பிறகு எப்போதும் பட்டு சேலையிலேயே நடமாட ஆரம்பித்தாள். கணவர் பசையுள்ளவர், அதனால் அப்படியாக்கும்னு நெனைச்சுக்கிட்டோம். ஆனால் ரொம்ப நாள் கழிச்சு தற்செயலா அதைப் பத்தி பேசும்போதுதான் உண்மையான காரணம் தெரிந்தது. மற்ற சிந்தெடிக் சேலைகள் உடலோடு ஒட்டித் தெரிவது அவருக்குப் பிடிக்கலையாம், அதனால்தான் பட்டு போர்த்தப்பட்டது! அது ஆபாசமா அடக்கமாங்கிறது முக்கியமில்லை, ஒரு சாதாரண ஆடை விஷயத்தில்கூட தன் கருத்துகளுக்கே முக்கியத்துவம் வேண்டுமென்று நினைப்பவர்கள், பெண் சுதந்திரம் பற்றி நினைப்பது எங்ஙனம்? இது ஒரு துளி எடுத்துக்காட்டுதான்.

ஆண்குழந்தை வேண்டுமென்பதற்காக மறுபடி மறுபடி மடிதாங்க வைக்கும் மஹானுபாவர்கள் இங்கே அதிகம். மருத்துவரீதியாக உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர் கூறினால் கூட சட்டை செய்யாமல் மறுபடியும் கருத்தரிக்கச் செய்யும் அவலங்களும் அதிகம். மூன்றாவது முறையாக சிசேரியனுக்கு வந்தபோதும் பெண்குழந்தை என்பதால் கருத்தடை ஆப்பரேஷனுக்கு சம்மதம் கொடுக்காமல் ஓடிப்போய்விட்ட கணவனை எந்த கணக்கில் சேர்ப்பது? அவர் கையெழுத்துப் போடாட்டியும் நீ ஒத்துக்கொண்டால் இப்போதே கருத்தடை செய்துவிடுகிறேன் என்று கேட்டபோது சம்மதம் சொல்ல முடியாமல் மெளனமாக அழுத பெண் இன்னும் என் கண்ணில் இருக்கிறாள். பெண்சிசுக்கொலை என்பது, அழிக்கப்படும் கருவை மட்டும் பாதிப்பதில்லை, ஏற்கனவே வளர்ந்துவிட்ட தாய்மையையும் அதிகம் பாதிக்கிறது. சிசுவுக்கோ ஒருமுறை மரணம். தாய்க்கோ மறுபடி மறுபடி மரணம்.

பெண்குழந்தை உருவாவதற்குக் காரணமே பெண்கள்தான் என்று நம்ப வைத்துவிடும் சாமர்த்தியமும் இந்த ஆண்களுக்கு உண்டு. குழந்தை பெற்றுக் கொள்வது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கக் கூட பெண்களுக்கு உரிமையிருக்கிறதா? வாடகைக்கு விடப்படும் இடத்திற்கு என்ன மதிப்போ அதுதான் பெண்மைக்கும். திருமணமானவுடனேயே மசக்கை வரவில்லையே என்று கவலைப்படுவார்களேயன்றி அதைத் தாங்கும் பக்குவம் அந்தப் பெண்ணுக்கு உண்டா என்று ஆராய்வதில்லை.. இப்படி எல்லாவகையிலும் `ஆண்டு’கொண்டிருப்பவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதாகச் சொல்வது வேடிக்கையே!

12 Comments:

At 1:56 AM, Blogger தாணு said...

இதே பதிவை நேற்று போட்டேன். அடுத்து ஒரு பதிவு போடும் போது இது காணாமல் போய்விட்டது. எனவே மீண்டும் பதிக்கிறேன். ஏற்கனவே படித்தவர்கள் புதியது என்று மறுமுறை வந்திருந்தால் மன்னிக்கவும்.

 
At 5:10 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தாணு,

இதுவும் காணாமல்ப்போகும் வாய்ப்புகள் அதிகம். தலைப்பு பெரிதாக இருக்கிறதி. ஒற்றைச்சொல் தலைப்பு வைத்துக்கீழே முழ்த்தலைப்பையும் பதிவில் குடுங்க.

-மதி

 
At 5:11 AM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
இது குறித்து நான் நேற்று உங்களுக்கு மின்மடல் அனுப்பி இருக்கிறேன்.

 
At 5:12 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மிகமிக அருமையான பதிவு. அதுவும் மருத்துவராக இருக்கும் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள்.

-மதி

 
At 7:38 AM, Blogger Ramya Nageswaran said...

பெண்ணின் உடல் நலம் பற்றிய புரிதல் இல்லாத ஆண்களுக்கு ஏதாவது counselling செண்டர்கள் இருக்கிறதா தாணு? அவர்களின் அறியாமையை எப்படி போக்குவது?

 
At 9:26 AM, Blogger தாணு said...

இப்போ நிறைய marriage counselling centres வர ஆரம்பித்திருக்கிறது. எதோ ஒரு வேகத்தில் தவறிவிடும் நல்ல உள்ளம் படைத்த இளைஞர்கள் அதன் உதவியை நாடுகிறார்கள். pre marital counselling கூட மறைமுகமாக நிறைய நடக்குது.எங்களை அணுகுபவர்களுக்கு இதையெல்லாம் சொல்லுகிறோம், ரம்யா.

 
At 9:27 AM, Blogger தாணு said...

பத்மா,
உங்களது மின்னஞ்சல் பார்த்தேன். அதை எப்படி பின்னூட்ட பெட்டிக்குக் கொண்டுவருவதென்று தெரியவில்லை. சமீபகாலங்களாக உங்கள் பின்னூட்டங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கிறதே?
உங்களுடன் விரிவாக மின்னஞ்சலில் பேச நேரத்துக்குக் காத்திருக்கிறேன்

 
At 9:29 AM, Blogger தாணு said...

மதி,
ரொம்ப நாள் கானாமல் போனது நானா , நீங்கள? குட்டீஸ் கூட டூர் சுற்றிட்டு இப்போதான் வலையில் விழுந்திருக்கிறீர்கள்!
பதிவு நீளமா இருந்தா சரியா போஸ்ட் ஆகாதா மதி??

 
At 9:39 AM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
ஆங்கில பின்னூட்டங்களுக்கு நேரம் இன்மை காரணம். நான் சமூக வேலைகளும் மனநல ஆலோசனையிலும் அதிகமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். என் பழைய பதிவுகளில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் கொடுத்திருக்கிறேன். புல்ளி விவரங்களோடு கூட. நீங்கள் எப்போது வெண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் தாணு.காத்ரீனா விளைவால் நிறைய வேலைகள் சேர்ந்து விட்டது

 
At 12:25 AM, Blogger ஜென்ராம் said...

தேன்துளி யார் பதிவிலும் மறுமொழியிட வரவேண்டாம். உருப்படியான சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருப்பவரை வலைக்குள் அன்புச் சிறைக்குள் பூட்ட முயலாதீர்கள் தாணு.. பணிகளுக்கு இடையில் எப்போதாவது வந்து அவரது பதிவில் ஒரு பதிவு போடட்டும்..

 
At 8:28 AM, Blogger தாணு said...

ராம்கி,
வலையில் கண் பதிப்பது அவரது கடினமான வேலைப்பளுவுக்கு ஒரு மாறுதலாகத்தான் இருக்கும்.

 
At 7:27 AM, Blogger தாணு said...

பெண்களுக்கானது அல்ல என்று தலைப்பில் பயமுறுத்தப்பட்டதால் மேற்கொண்டு வாசிக்காமல் வந்துவிட்டேன்

 

Post a Comment

<< Home