இந்தியன் vs அந்நியன்
(சங்கர் படத் தலைப்புகள் அல்ல)
இன்று இவன் இந்தியன்
எவரையும் சட்டை செய்யாமல்
எதையும் ஆக்ரோஷமாக எதிர்க்கும்
இளவயது சுதந்திரன்.
நாளைமுதல் இவன் அந்நியன்
வெளிநாட்டு வேலை கிடைத்து
சொந்தங்களைப் பிரிந்து செல்லும்
பாவமான பருவ மகன்.
இந்தியனாய் இருந்தபோது
இளமை துள்ளக் களித்திருந்தான்
அந்நியன் ஆனபோதோ
அநியாயத்துக்கு முதிர்ந்துபோனான்.
பொருளாதாரம் உயர்ந்தது
பொறுப்புகளோ தலை நிமிர்த்தியது
வாழ்க்கைகூட இலகுவானது
மனது மட்டுமே தனிமையானது!
இடையிலே
ஆறேழு வருடங்கள் ஓடிவிட்டது!
இல்லறமும்
இனிமையைக் கூட்டிவிட்டது.
பிறந்தமண் பொருந்தாமல் போய்விட்டது
புகுந்த தேசம் பிரிய முடியாததாகிவிட்டது
இன்னாட்டு மன்னன்
பிறதேசப் பிரஜையாகிவிட்டான்.
19 Comments:
//பிறந்தமண் பொருந்தாமல் போய்விட்டது//
இது வெளிநாடுகளுக்கு மட்டும் தான் பொருந்துமா என்ன?
நெல்லையில் இருந்து சென்னை வந்தவர்கள் மீண்டும் நெல்லை வருவதில்லை. சென்னையில் இருந்து மும்பை,டெல்லி சென்றவர்கள் மீண்டும் சென்னை வருவதில்லை.
An X-Ray of NRI's Hearts!
Good Thanu! Keep it up!
புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையைச் சொல்கிறதா ? இல்லை
சொந்த மண்ணை விட்டு நகரத்திற்கு சம்பாதிக்கச் செல்பவர்களை சொல்கிறதா?
நன்றாக இருக்கிறது
.. .இந்தக்கவிதையை படிக்கும்போது பாண்டவர் பூமி படம் ஞாபகத்திற்குள் வந்து போகிறது.
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
//அந்நியன் ஆனபோதோ
அநியாயத்துக்கு முதிர்ந்துபோனான்.
வாழ்க்கைகூட இலகுவானது
மனது மட்டுமே தனிமையானது!
//
உண்மையான வரிகள், அந்நியன் இந்தியன் என்றல்ல, வயது ஏற ஏற இது தான் பெரும்பாலும் நடக்கின்றது.
நன்றி
ராம்கி,
இந்தியாவின் பிற மாநிலங்களில் செட்டில் ஆகிறவர்களுக்கு இது பொருந்தாது. வேர்கள் இருக்கும்வரை விளைந்த நிலத்தை மறத்தல் அரிது.
சமீபத்தில் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நண்பர் இங்கு வந்திருந்தார். பெண்ணுக்கு இங்கேயே வரன் பார்த்து மறுபடி இங்கு வந்தாலென்ன என்றபோது நடைமுறை சிக்கல்களை அவர் சொன்னதால் வந்த பதிவே இது.
எதற்கெடுத்தாலும் மாமூல் கொடுக்கப்படுவது, சின்ன வேலைக்கெல்லாம் லஞ்சம் இல்லாமல் காரியமாற்றமுடியாதது, குழந்தைகளின் வளர்ப்பு சூழ்நிலை இந்த மண்ணுடன் பொருந்த முடியாதது போன்ற சங்கடங்கள் இந்தியாவில் மறுபடி வாழ வர முடியாத நிலைமையை உண்டாக்கிவிடுகிறது. மனமிருந்தும் மார்க்கமில்லாததுதான் உண்மை.
நல்ல பதிவு. வெளிநாட்டில் இருந்தாலும் வேர்கள் மறக்க முடியாதவைதான்.
ஞானியார்,
புலம் பெயர்ந்தவர்கள் தான் இப்படி கஷ்டப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. தற்காலிக வேலை நிமித்தம் செல்பவர்கள் தாமரை இலைத் தண்ணீர் போல்தான் வாழ்கிறார்கள்.
இது குறித்த உணர்வுகள் பற்றி உங்கள் அபிபிராயம் என்ன?
குழலி,
வயது ஏற ஏற தனிமை உணர்வுகள் நம்மையே நம் சொந்தங்களிடமிருந்து அந்நியப்படுத்துவதும் உண்மைதான்
தேன்துளி,
இது சம்பந்தமாக உங்கள் கருத்து பற்றி ஒரு பதிவே போடலாமே. Feelings about resettling in India.
நல்ல பதிவு தாணு,
குழந்தைகளுக்குத் தான் பிரச்சனைகள் அதிகம். என் உறவினரின் குழந்தைகள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து பதின்ம வயதில் இந்தியாவிற்கு resettle ஆனார்கள். வந்தது ஒன்னும் சின்ன டவுனுக்கல்ல. சென்னைக்கு. அங்கேயே அவர்களின் accent மற்றும் சிந்தனைகள் காரணமாய் மற்ற குழந்தைகளுடன் ஒன்ற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
வெளி நாடுகளில் பல வருடங்கள் நம்நாட்டினராலும் இருந்துவிட்டு திரும்பிவந்தால் கண்டிப்பாக திண்டாட்டம் தான். என் சொந்த சோக அனுபவம் சாப்பாட்டு விஷயத்தில். போன வருடம் சென்னையில் ஒரு ஹோட்டலில் தனியே தங்கியிருந்தேன். இராத்திரி 1 மணிக்கு சரியான பசி. பீட்ஸா ஆர்டர் செய்யலாம் என்றால் ஒரு பீட்ஸாகடையும் 11 மணிக்கு மேல் வேலைசெய்வதில்லை. ஒரு உணவகமும், பெட்டிக்கடையோகூட திறந்து இல்லை. ஆட்டோவும் கிடைக்கவில்லை. ராதாகிருஷ்ணன் சாலை முழுக்க நடந்து, மெரினா கிட்டே ஒருவழியா ஆட்டோ பிடித்து ஐஸ்ஹவுஸில் ஒரு சின்ன இட்லிக்கடையில் கடைசி இட்லிகள் சாப்பிட்டேன். திரும்பி வரும் வழியில் ஆட்டோக்காரர் கேட்டார் "எந்த ஊர்லேர்ந்து சார் வர்ரீங்க?" :)
உண்மை ராமனாதன்,
நண்பரின் பெண் இந்தியா வரனே வேண்டாமென்று சொல்லிவிட்டாள். வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட இந்தியரை மணமுடிப்பதே தனக்கு சரிவரும் என்று தீர்க்கமாகச் சொன்னாள் அந்த 14 வயதுப் பெண்.
அவ்ளோ தூரம் சுத்தினதுக்கு செண்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தால் எதேனும் கிடைத்திருக்குமோ?
திருமணம் என்று வந்துவிட்டால் அமெரிக்கா மாப்பிள்ளையானாலும் இந்தியாவிலிருக்கும் பெற்றோர் போடும் கண்டிஷன்களுக்கெல்லாம் ஈடு கொடுப்பது வெளிநாட்டில் பிறந்த பெண்களுக்கு ரொம்ப கஷ்டம்.
அத்தகைய பெண்கள் வெளிநாட்டில் வாழும் கணவனை விட, வெளிநாட்டிலேயே வளர்ந்த கணவனை தேர்ந்தெடுப்பது என்னைப் பொறுத்தவரை இன்னும் புத்திசாலித்தனமானது.
மயிலாப்பூரிலிருந்து செண்ட்ரல் நடப்பது கொஞ்சம் கடினமான காரியம் தாணு. ஒரு ஆட்டோகூட கிடைக்கவில்லை. இவ்வளவு வளர்ந்து விட்ட சென்னையில் ஒரு 24 மணி நேர பீட்ஸா டெலிவரி கூட இல்லை என்பது மிகவும் அதிசயமானதாக இருந்தது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
உங்கள் பின்னூட்டப்பகுதியில் வரும் word verification தேவைதானா?பின்னூட்டம் இடுவதில் வீண் காலதாமதம் ஏற்ப்படுகிறதே!
நல்ல பதிவு தாணு,
//பொருளாதாரம் உயர்ந்தது
பொறுப்புகளோ தலை நிமிர்த்தியது
வாழ்க்கைகூட இலகுவானது
மனது மட்டுமே தனிமையானது!//
ரசித்த வரிகள்
//இன்னாட்டு மன்னன்
பிறதேசப் பிரஜையாகிவிட்டான்.//
எல்லோரும் இந்நாட்டு மன்னரே என அந்த நாட்டிலும் சொல்லியிருப்பாங்க:-)
நல்ல பதிவு தாணு.
//சென்னையில் இருந்து மும்பை,டெல்லி சென்றவர்கள் மீண்டும் சென்னை வருவதில்லை.//
அட விட்டா வர மாட்டோம்னா சொல்றோம். அடுத்த வருஷம் சென்னை வந்துருவேங்க.....
This comment has been removed by a blog administrator.
என் தந்தையின் கனவு இது. தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவர் ஒரு முடிவு செய்திருந்தார். அதாவது தொழிலுக்காக கிராமத்தை விட்டு வந்த அவர் தனது கடமையை முடித்த பிறகு (பிள்ளைகளின் படிப்பு, திருமணம்) கிராமத்திற்கு திரும்புவது என்று. ஆனால் எல்லா வசதியும் இருந்தும் அவரால் கிராமத்திற்கு போக முடியவில்லை. காரணம் இருக்கும் ஊர் பிடித்துபோயிற்று, கிராமத்தில் நட்பும், உறவினர்களும் குறைந்து போனதால். இருந்தும் வாரம் ஒரு முறை கிராமம் சென்று வருகிறார். இதற்கு என்ன சொல்வது?
அருமை தாணு!
நம் நாட்டில்தான் இப்போதெல்லாம் திறமையானவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கிறதே, நீயும் திரும்பி வந்துவிடேன், என என் நண்பரின் மகனிடம் கேட்டேன்.
அதற்கு அவன் நீங்க வேற மாமா, உலக விவரம் உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.
நான் இப்போ திரும்பி வந்தா நான் அங்க வாங்கிக்கிட்டிருக்கற சம்பளத்துல பாதி கூட கிடைக்காது என்றான்!
அதனால்தானே உலக நாடுகளில் பலவும் அவர்களுடைய தொழில் தேவைகளுக்கு நம் நாட்டைத் தேடி வருகின்றனர்?
என்னதான் இருந்தாலும் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தாலும் அவர்களுக்கு இந்திய மண்ணில் வேலை செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்குமா என்பது ஐயமே!
இளா,
இருக்கும் ஊர் பிடிக்கிறதோ இல்லையோ பழகி விடுகிறது. சொந்த ஊருக்குப் போனால் ஒரு சின்ன காரியம்கூட பிறர்தயவால்தான் சாத்தியமாகிறது. ஆனாலும் `எங்ங்ங்க ஊர்'ன்னு பீற்றிக்கொள்வதும் தவிர்க்க முடியாதது.
டிபிஆர்,
பணத்தேவைகள் குடும்ப சூழலுக்கேற்ப மாறும்போது, சில தியாகங்கள்- பிறந்த மண்ணைப் போலியாக வெறுக்கும் சுபாவம் தேவைப்படும் போலும். இல்லாவிட்டால் கழிவிரக்கத்திலேயே காலம் கடந்துவிடுமல்லவா?
Post a Comment
<< Home