ரட்சகியே ராட்சஸியாவாள்
பாக்கியராஜின் `தூறல் நின்னு போச்சு’ படம் வந்த புதிது. நாட்டில் வான் பொய்த்து வறண்டுகிடந்த நேரம். சினிமாக்களுக்கு இதுபோல் அபசகுனமாக இடப்பட்ட பெயர்களால்தான் மழையே பெய்யவில்லை என்று பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதுபோல்! அப்போது அதைக் கேட்டு கேலியாக சிரித்ததுண்டு.
இப்போது `மழை’ படம் சக்கைப் போடு போடுகிறது, மழையும் சக்கைப் போடு போடுது.(யாராவது `ஊழலே ஊரைவிட்டு ஓடு’ன்னு படம் எடுக்கலாமே)
போனவருஷம் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். 1000 அடி போர்வெல் போட்டு கூட தண்ணீர் கிடைக்காத இடங்கள் அதிகம். இன்னும் கொஞ்ச காலத்தில் தென்னிந்தியா முழுவதும் பாலைவனமாகப் போவதாக ஏகப்பட்ட ஹேஸ்யங்கள். அறிவு பூர்வமாக சிந்திக்கத் தெரிந்தாலும், அடிமனதின் சுயநலத்துக்கு நான் மட்டும் விதிவிலக்காக முடியுமா? எதிர்காலம் பற்றி ஏகத்துக்கு கற்பனைகள், கனவுகள்.
(கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்று கவிஞர்.மீரா சொன்னது முதலில் நினைவுக்கு வரவில்லை, இப்போது வருகிறது)
நம்ம காலத்துலே பரவாயில்லை, குழந்தைகள் எதிர்காலத்துக்காக சென்னை மாதிரி இடத்துலே கொஞ்சம் இடம் வாங்கிப் போடலாமா என்று பயங்கர யோசனை. தம்பி பக்கம் போகலாமா, அண்ணன் அருகில் இருக்கலாமான்னு ஒரு பட்டிமன்றம். அது சம்பந்தமா முடிவெடுக்கும் முன்பே அதிரடியாய் ஒரு `சுனாமி’ வந்து கதற வைச்சிட்டுது. அதிலிருந்து மீண்டு, உள்ளூர் சரிப்படாது, ஸ்டேட்ஸில் இருக்கும் சித்தப்பாவுடன் துரத்தி விட்டுடலாம்னு நினைச்சு , அதற்கு சம்பந்தப்பட்ட படிப்புகள் பற்றி விச்சரிக்கும்போதே, `ரீட்டா’ `ரீனா’ன்னு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போயிடுச்சு. சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, வட இந்தியாவில் இருக்கும் அத்தையுடன் ஒட்டிக்கொள்ளட்டும் என்று யோசிக்கும் வேளையில் அங்கு வந்ததோ அதிர்ச்சி தரும் பூகம்பம்.( துளசிக்கு எல்லா ஊரிலும் ஆட்கள் இருப்பதுபோல், எனக்கும் எல்லா இடத்திலும் இருக்கிறாங்களாக்கும்!!)
எல்லோருக்கும் ஆவதுதானே நமக்கும் என்கிற பரந்த மனசு இல்லாமல் என்ன படித்து என்ன பயன் என்று ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு, இருக்கும் இடமே சொர்க்கம்னு இருப்போம்னு பார்த்தால், மேட்டுர் அணை மடை திறந்து வெள்ளமாகி விழுங்கக் காத்திருக்கிறது. இதைத்தான் `நித்திய கண்டம் பூரண ஆயுசு’ன்னு சொல்லுவாங்க போல.
மனிதர்களின் சைக்காலஜி விநோதமானதுதான்(என்னையும் சேர்த்து) நாலு திசைகளிலும் இயற்கையின் சீற்றம் அழிவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்போது , `அப்படி நாம் பிழைத்தோம்’ என்ற உணர்வினால் வரும் மகிழ்ச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதே அழிவு நம்மைச் சூழ்ந்து நிற்கும்போது, அதன் பாதிப்பில்லாது இருப்பவர்களைப் பார்த்து வெறுப்பும் கோபமும் கொள்வதும் வாடிக்கையாகிறது.
ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் பிள்ளைகளிடம் `பெருமையாக’ சொல்லிக் கொண்டிருந்தேன்.`` ஈரோட்டில் சுனாமி மாதிரி புயலே வராது, மேற்குத்தொடர்ச்சி மலை இருப்பதால்; பூகம்பம் மாதிரி விஷயங்களும் வராது, தென்னிந்தியாவின் அடித்தட்டு தற்போதைக்கு திடமானதா இருக்கு; ஒருவேளை எதாச்சும் நடக்கணும்னா மேட்டூர் டேம் நிறைஞ்சு வெள்ளம் வந்தாத்தான்”-னு. எனக்கு கொஞ்சம் கரிநாக்குன்னு நண்பர்கள் சொல்லுவாங்க. பலிச்சுட்டுதே!(பார்த்திபன் பாணி accent உடன் வாசிக்கணும்)
40 Comments:
//கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்று மு.மேத்தா சொன்னது // தாணு, அது மீரா. மேத்தா அந்த சமயத்தில் போட்டது கண்ணீர்ப்பூக்கள்.
நா.காமராசன் கறுப்பு மலர்கள், அப்துல் ரஹ்மான் பால்வீதி.
நல்ல பதிவு..உண்மையிலேயே துஅசிக்குப் போட்டியா கிளம்பின மாதிரித் தான் இருக்கு.. ஆல் தி பெஸ்ட்!
நல்ல பதிவு தாணு..
பசங்கள சந்திரன் மார்ஸ்ஸுக்கெல்லாம் அனுப்பிச்சுடலாம்னு நம்பிக்கிட்டுருக்கேன் நான் :)
//`அப்படி நாம் பிழைத்தோம்’ என்ற உணர்வினால் வரும் மகிழ்ச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதே அழிவு நம்மைச் சூழ்ந்து நிற்கும்போது, அதன் பாதிப்பில்லாது இருப்பவர்களைப் பார்த்து வெறுப்பும் கோபமும் கொள்வதும் வாடிக்கையாகிறது.
//
மனித இயற்கைனு நினைக்கிறேன். செப் 11, சுனாமி, காத்ரீனா எல்லாம் வந்த போது முதல்ல நல்ல வேளை நம்ம இடத்துல வரலன்னு ஒரு நிம்மதி, அடுத்தது சுற்றத்தாருக்கு போன் மேல் போன். எல்லாரும் சவுக்கியம்னவுடனேதானே பாதிக்கப்பட்டவங்களப் பத்தியெல்லாம் கவலை வருது..
நன்றி ராம்கி,
என்னவோ அந்த வரிகள் மு.மேத்தான்னே மனசில் பதிஞ்சுடிச்சு. அதை எப்படி Pளாக்கில் திருத்தறது. அதைச் சொல்லித் தரலியே என் ஆசான்.
நாளைக்குக் காலையில் வெள்ளம் பார்க்க கூட்டிப் போறதா பிள்ளைகளுக்கு சொல்லியிருக்கேன். எப்பவோ தாமிரபரணியில் பார்க்கப் போனது நினைவு இருக்கா? துளசி அளவு டைப் பண்ண எனக்கு பொறுமை இல்லையே. எண்ணத்தில் வந்ததில் பாதிதான் பதிந்துள்ளேன்
ராமநாதன், அதையும் நெனைச்சேன் சோம்பேறித்தனத்தால் எழுதலை.
ஸ்டில் மாறியிருக்கு. உங்க அக்கா பதிவுலே கொஞ்ச நாளா உங்களைக் காணோம்.
எங்க ஊர்
ஆட்டோக்களில் (உங்க ஊர் பத்தியெல்லாம் தெரியாது; அங்கேயும் அப்படித்தான் என்றால் சொல்லுங்கள்; இல்லையேல் 'சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை'னா மதுரைதான் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறேன்!)பின்னால் எழுதப்படும் வாசகங்களில் ஒன்று இந்தப் பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது: " தனக்கு வரும்வரை எல்லாமே வேடிக்கைதான்". எவ்வளவு உண்மை!
அடுத்தவர்க்கு நேர்வதை வேடிக்கையாகப் பார்ப்பதில்லை, நாம் தப்பிச்சோம் என்கிற சுதந்திர உணர்வு. மரணம் தொட்ட கணங்களில் எல்லாம், தப்பியபோது உங்களுக்கு வந்திருக்கும் பாருங்க ஒரு நிம்மதிப் பெருமூச்சு, அதுதான் இது! (செந்தில் மாதிரி சொல்லிட்டேனோ)
//ஸ்டில் மாறியிருக்கு. உங்க அக்கா பதிவுலே கொஞ்ச நாளா உங்களைக் காணோம்//
ஆமா தாணு,
ரேஸ் சீசன் முடிஞ்சிருச்சில்ல. அதான் சிவிலியன் டிரஸ்ஸுக்கு மாற்றம். :)
அக்கா பதிவுல தானே.. இதோ போறேன். சாமி வந்துருச்சுன்னு இன்னிக்கும் சாப்பாட்ட பத்தி பெரிய புராணம் எழுதியிருக்காங்க. உங்கள பாத்து வேற ஒரு நக்கல்..
தாணு,
இன்னொண்ணு. (எப்படி rhyme?)
தலைப்பைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த வேறு ஒரு விதயம்: பாரதிராஜா 'அலைகள் ஓய்வதில்லை'-ன்னு படம் எடுத்ததும் அவரது சிஷ்யர் எடுத்தது:'தூறல் நின்னு போச்சு’!
அடுத்து: பா.ரா.: 'காதல் ஓவியம்"
பாக்.ரா: 'சுவரில்லாத சித்திரங்கள்'!
இன்னொண்ணு உண்டு;மறந்து போச்சு!
ராம்கி வேற எங்களுக்குள்ளே போட்டி உண்டாக்கிறாங்க. துளசி கூட போட்டி போட முடியுமா? அப்பப்போ அவங்க சாப்பாட்டை மோந்து பார்க்கிறதோட நிறுத்திக்கணும்
Thaanu,
You can edit your postings by going your own blog side. There you'll find EDIT button (beside to CREATE one). Select particular posting you want to edit. Then you can do whatever you want.
....
By the way, you have a very smooth flow of writing style. Keep it up.
தாணு,
எதுக்கு என் மண்டையை உருட்டுறீங்க?:-)))
//துளசி கூட போட்டி போட முடியுமா? அப்பப்போ அவங்க சாப்பாட்டை
மோந்து பார்க்கிறதோட நிறுத்திக்கணும்// ??????????????
அப்ப நான் சாப்புடவே கூடாதா? மோந்துபார்த்தவுடனே உடலுக்கு சக்தி வந்துருமா?
திஸ் இஸ் ஃபோர்மச்.
கொஞ்சம்கூட ஊர்ப்பாசம் இல்லே உங்களுக்கு. சொல்லிட்டேன்.( நான் பொறந்தது கரூர்.நினைவிருக்குல்லே?)
வெள்ளம்வந்து ஜனங்க கஷ்டப்படுதுன்னாலும், பவானி ஆத்துலே கலந்துட்டசாயக்கழிவுகள் எல்லாம்
அடிச்சுக்கிட்டுப் போய் சுத்தம் ஆறதும் நல்லதுதானே?
இங்கேயும் நார்த் ஐலண்டுலே மழை, வெள்ளம் எல்லாம் வந்து, இப்ப ரெண்டுநாளா 'க்ளீனிங்அப்'
வேலை நடக்குதாம்.
என்னமோ துளசி கூடப் போட்டின்னு பேச்சு அடிபடுது. அதெல்லாம் கண்டுக்காதீங்க. இதுக்கெல்லாம்
காப்பிரைட் நாந்தானுன்னு இருக்கறதாலே கமிஷன் மட்டும் ஒரு 75% அனுப்புங்க போதும். ரொம்ப
ஒண்ணும் வேணாம்.
தாணு,
இதைப் படிக்கிறதுக்கு முன்னாடி இப்பத்தான் அலெக்ஸ் பதிவுலே இந்த பின்னூட்டம் எழுதினேன்:
//சுனாமி, பூகம்பம், ஹரிகேன், பெருமழை...இந்த வருடம் பட்ட பாடு போதாதா?//
இதை தவிர தீவிரவாத தாக்குதல்கள் வேறே..சிங்கப்பூரில் எப்ப வேணா தாக்குதல் நடக்கலாம்னு அப்பப்ப பயமுறுத்திக்கிட்டிருக்காங்க...
*****************
தலைப்பை பார்த்துட்டு "எனக்கு சாமி வந்திடுச்சு"க்கு பதில் சொல்ற மாதிரி துளசிக்கா பத்தின பதிவுன்னு நினைச்சேன்!! :-)))
டீவில பொங்குகிற வெள்ளத்தைப் பார்க்கும் போதே, பயத்துடன் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனா அத்தனை தண்ணியும் வீணாகிப்
போயி, திரும்ப கோடைக்காலத்தில் தண்ணி கஷ்டம் என்று சொல்லும் பொழுது, வேதனையாய் இருக்கும்.
பாலம் எல்லாம் நிரம்பி வழியுது, இது நம்ம ஊரான்னு யோசிக்கவே தோணுது. வருடா வருடம் இது மாதிரி ஏதாவது சொல்லுங்க.
நன்றி டி சே.இப்போ போய்த் திருத்திடறேன்
துளசி,
அப்பப்போ அவங்க சாப்பாட்டை `நான்' மோந்து பார்க்கறதோடன்னு இருந்திருக்கணும்.
எதுக்கெடுத்தாலும் கமிஷன், அன்பளிப்பு- நியூஸிக்கு சரிவாராத ஆளுன்னு துரத்தப் போறாங்க, காவேரிக்கரைக்குத்தான் வரணும். என்னையும் கொஞ்சம் ஐஸ் போட்டு வைச்சுக்கோங்க.
ரம்யா,
துலசியின் பதிவை அடிக்கடி மேய்வதால் அதன் பாதிப்பு வந்திட்டுது போல.
உஷா,
நானும் இதே மாதிரிதான் யோசிச்சேன். எல்லாம் கடலில் போய்ச் சேருது, மறுபடி சம்மரில் தண்ணீர்ப் பஞ்சம்
ராம்கி திருத்திட்டேன், டி சே உபயத்தில்.
நான்கூட இப்ப சென்னை கொளத்தூர்ல தண்ணிக்கு நடுவுல
தத்தளிச்சிக்கிட்டு இருக்கேன். இப்ப எனக்கு நாமளும் நகரின்
மையத்தில் வீடு வாங்கியிருக்கலாமோனு தோணுது.
இதுவே கோடை காலத்துல சென்னை நகரம் குடிக்க
தண்ணி இல்லாம தவிக்கும் போது நான் ஷவர்ல
குளிப்பேன். அப்போ அப்பாடா நாம தப்பிச்சோம்னு தோணும்.
இக்கரைக்கு அக்கரை பச்சைனு கேள்விப்பட்டதில்லையா?
மயிலு பார்க்கலையோ மயிலு 'ஜி'மயிலு
ஏன் மயிலு நாங்க பாக்கக்கூடாதா?
"வெச்சா குடுமி அடிச்சா மொட்டை" என்கிற மாதிரிதான் இருக்கு நம்ம காவேரியும். போன வருடம் வரை குடிநீருக்கு கூட உதவாத ஆறு இன்று கரையோர கிராமங்களை துவம்சம் செய்து இருக்கிறது. இது நன்மைக்கா?
தாணு
நான் இருக்கிறது டெல்லியில் (உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்). பூகம்பம் வந்து ஒரு ஆட்டம் ஆட்டிடுச்சு. இன்னும் பெரிய அளவில் பூகம்பம் வரும்னு செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனா பாருங்க நம்மால ஒண்ணும் செய்ய முடியறதில்லை. இயற்கை சீற்றத்துடன் மனிதனால் போட்டி போட முடியுமா? அப்படி எஸ்கேப் ஆகி போனாலும் அது தற்காலிகமானதுதான் .......
எதுக்கும் கணேசா நீ ஐம்பது வருசம் வாழனும்னு வாழ்த்திருங்க..(உங்க நாக்கு தான் கரிநாக்காச்சே:-))
அருமையான பதிவு தாணு. இதனால்தானோ என்னவோ உயர்ந்த எண்ணங்கள் வேண்டுமென்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்". நல்லதையே நெனைங்க. நல்லதே நடக்கும். இந்த உலகமே ஒரு கற்பக மரம். அதுல நம்ம எண்ணங்கள்தான் வண்ணங்களாகும்.
// பசங்கள சந்திரன் மார்ஸ்ஸுக்கெல்லாம் அனுப்பிச்சுடலாம்னு நம்பிக்கிட்டுருக்கேன் நான் :) //
இராமநாதன், இதுல எது நடக்கனுமுன்னு நெனைக்கிறீங்க...பசங்களா? மார்சுக்குப் போறதா! செவ்வாய் முருகக் கடவுளின் அதிதேவதையாம். அதுனால அங்க ஏதாவது முருகன் கோயில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கலாம். அது சரி. ஒங்களுக்கு இன்னும் கலியாணம் ஆகலைதானே......படத்துல பாக்க வெள்ளக்கார ஹீரோ மாதிரி இருக்கீங்களே.
இங்க பெங்களூரு மழைல வாரக்கடைசில தொவச்ச என்னோட துணிகள் இன்னமும் காஞ்சிக்கிட்டும் நனைஞ்சுக்கிட்டும் இருக்கு. இன்னைக்குதான் மழை இல்லை. அனேகமா இன்னைக்குக் காயலாம். ஆனால் சாந்தரம் மழை வந்தா மறுபடியும் நனைஞ்சிரும். என் கவல எனக்கு. இன்னோரு கவலை...பைக்கு போற வழியில தண்ணி கெட்டிக் கிடக்கக் கூடாதுன்னு.
//இராமநாதன், இதுல எது நடக்கனுமுன்னு நெனைக்கிறீங்க..இன்னும் கலியாணம் ஆகலைதானே......//
எப்படியும் ஆயிடும்னு ஒரு நம்பிக்கைதான். நம்பிக்கை தானே வாழ்க்கை!
//படத்துல பாக்க வெள்ளக்கார ஹீரோ மாதிரி இருக்கீங்களே//
சத்தியமா நானே தாங்க அது ;-))
இராமநாதனுக்கு டி சே தமிழனை பொண்ணு பார்த்துடுவோமா? ஜோடிப் பொருத்தம் அம்சமா இருக்கு!! :-))
போட்டோவை மாத்துப்பா இராமநாதா...எம்புட்டு பேரு கன்ப்யூஸ் ஆவரம் பாரு நைனா??!!
சித்தன்,
அதுக்கென்ன,நீங்க கூட மயிலைப் பார்க்கலாம். அது நம்ம தேசீயப் பறவை இல்லையோ?
இந்த 'ஜி மயிலு' தாணுவுக்குத் தனியா அனுப்புனது
ரம்யா அக்கா,
//டி சே தமிழனை பொண்ணு பார்த்துடுவோமா//
பரவால்ல, போட்டோல பாக்க நல்லாவே இருக்காங்களே.. :)
//போட்டோவை மாத்துப்பா இராமநாதா...எம்புட்டு பேரு கன்ப்யூஸ் ஆவரம் பாரு நைனா??!!
//
போனவாரந்தான் மாத்தினேன். என்ன பண்றது சொல்லுங்க, என்னதான் போட்டோஷாப் ஜிகினாவெல்லாம் பண்ணாலும், அழகாவே போட்டோல விழுந்து தொலைக்கிறேன். இது என் குத்தமா? ஆண்டவன் குத்தமா??
// என்னதான் போட்டோஷாப் ஜிகினாவெல்லாம் பண்ணாலும், அழகாவே போட்டோல விழுந்து தொலைக்கிறேன். இது என் குத்தமா? ஆண்டவன் குத்தமா??//
அதுக்கென்ன செய்யறது தம்பி?
அழகு நம்ம குடும்ப சொத்தாச்சே:-)
தாணு சார்! யாதார்த்தத்தை அருமையா படம் பிடிச்சு காட்டியிருக்கீங்க.
"ஊழல் நின்னு போய்ச்சுன்னு" பாக்யராஜையே படம் எடுக்க சொல்லிடலாம். நல்ல கற்பனை.
வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடாது மழை பெய்தாலும் விடாது ஜனத்தொகை கூட்டும் பணியில் இருந்ததால் ரெண்டு நாள் எட்டிப் பார்க்கலை, அதுக்குள் எல்லோரும் விசிட் பண்ணி புளகாங்கிதப் படுத்திட்டீங்களே!
துளசி இதோ ஓடிப்போய் மெயில் பார்த்திடறேன்.
கணேஷ்,
ரொம்ப நாளா காணோம். பூகம்ப இடிபாட்டில் மாட்டிட்டீங்கன்னு நினைச்சேன். என் நாத்தனார் டெல்லி ஏர்போர்ட்டில்தான் வொர்க் பண்றா, அதனால பூகம்பம் வந்த உடனேயே நியூஸ் வந்திட்டுது. அது ஏன் ஐம்பது வயசுன்னு கஞ்சத்தனம், நூறாண்டு வாழ்கன்னே வாழ்த்தறேன்.
ராமநாதன்,
காஸ்ட்யூம் சேஞ்ச் ஆனதும் ஏக டிமாண்ட்டாக இருக்குது. அடுத்து `மணமாலை' பதிவு போட்டுற வேண்டியதுதான்.
ஐயோ ராமா,
நான் `சார்' இல்லைங்க. இந்த அத்தைக்கு மீசை முளைக்கிறப்போ அப்பிடி கூப்பிட்டுக்கோங்க.
இளா,
காவிரியை நேரில் போய்ப் பார்த்தீங்களா? நானும் ப்ளாக்கரில் அனுப்பலாம்னு போட்டொ எல்லாம் எடுத்துட்டு வந்தேன், ஆனால் டிவி பேப்பர் ஆகியவற்றில் வரும் படமே நல்லா இருக்குன்னு படம் காட்டலை.
ஜோக்கர்,
உண்மையாவே ஜோக்தான் அடிக்கிறீங்க. என்ன தான் தாராளம்னாலும், சம்மரில் ஷவரில் குளிப்பது டூ மச். அடுத்த சம்மருக்கு உங்களுக்கு நிறைய வலை நண்பர்களின் விசிட் இருக்கும், தண்ணி அடிக்க, சாரி, தண்ணி பிடிக்க!!
ராகவன்,
பெங்களூரும் ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரியுது. பருவமழை இந்த அளவு அங்கே பாதிக்குமா? விசித்திரமா இருக்குதில்லே. ஸ்ரீரங்கம் கூட ரொம்ப டேமேஜ் போல. அரங்கர் இப்போவாவது முழிச்சுக்குவாரா?
எப்பா ,பயமுறுத்தாதீங்க ..இப்பத்தான் எங்க வீட்டுல ஹரிக்கேன் பத்திக் கேட்டதற்கு எங்க ஊருல் ஒண்ணுமே வராது ,வந்தா பூகம்பம் தான் அத்ல்லாம் 50 வருசத்துக்கு ஒண்ணுதான் பெருமையா சொல்லிக்கினு இருக்கேன் ..தாணு வாய் மாதிரி ஆயிரக் கூடாது ..
சென்னைல கொட்டுன மழைல ரெண்டுநாளா எங்க வீட்டுல மின்சாரம் இல்லை
இப்பதான் வந்தது. வலை நண்பர்களை வலையோட இப்பவே வரச்சொல்லுங்க.
கொளத்தூர் டூ கோயம்பேடு போட் சர்வீஸ் ஆரம்பிச்சிருக்கேன், கோயம்பேட்டுல
காய்கறி வாங்கிட்டு போகும்போது விலாங்கு மீனும் பிடிச்சிக்கிட்டு போகலாம்.
கூத்தாடி ஊருக்கு போயிடலாமோ?
கழுவுற மீனிலே நழுவுற மீனா இருப்பீங்க போலிருக்கே! வெள்ளத்தை மீன்பிடிக்க உபயோகிக்கிறீங்களே!!
அஹா.. இப்படி ஒரு கற்பனையா... கலக்குங்க..
ஊழலே ஒடிப்போ :-))))))))))
-
செந்தில்/Senthil
Post a Comment
<< Home