Monday, January 30, 2006

காண்டேகரின் கிரெளஞ்சவதம்

``அன்பு செலுத்துவதென்றால் மலரோடு விளையாடுவது என்று நினைத்திருந்தேன்.அது மல்லிகையாக இல்லாவிட்டாலும் ரோஜாவாக இருக்கும்;ஒரு சமயம் ரோஜாவின் முள்பட்டுக் கையில் ரத்தம் வரலாம் என்பதற்குமேல் என் கற்பனை ஓடியதில்லை. இன்று அறிந்து கொண்டேன்;அன்பு செலுத்துவதென்றால் நெருப்போடு விளையாடுவது’’-
காண்டேகரின் `கிரெளஞ்சவதம்’’ படித்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான மேற்கோளாக இருக்குமென்று நினைக்கிறேன். ரோஜாவை முள்ளுடன் பார்க்கும்போதெல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும்.

இன்னும் பக்கத்துக்கு பக்கம் வாழ்க்கையோடு இயைந்த தத்துவங்களைச் சலிப்புத்தட்டாமல் சொல்வதில் அவருக்கு இணை அவரே! அவரது படைப்புகளை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் திறமை அதைவிட சுகம். காண்டேகரின் நாவல் ஏதாவது இருக்கான்னு கடைகளில் விசாரிக்கும்போது, நிறைய சமயங்களில், அற்பமாக பார்த்த கடைக்காரர்கள் உண்டு. அநேக நேரங்களில் பெரிய கடைகளில் அவர்களை மட்டம் தட்டும் விதமாக காண்டேகர் பற்றி கேட்ட நாட்களும் உண்டு, கண்டிப்பாக இருக்காது என்ற தைரியத்தில்(நல்ல வேளையாக என்றும் மூக்குடை பட்டது இல்லை).ரொம்ப நாட்கள் அவரது புத்தகங்கள் சரிவரக் கிடைக்காமல் இருந்தது.சமீபத்தில் அல்லையான்ஸ் பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் மலிவுத் தொகுப்பாக போட்டிருந்தார்கள். வாங்கி ஹாலில் அலங்காரமாக அடுக்கிவிட்டேன். கிரெளஞ்சவதம் மட்டும்தான் வாசிக்க பொழுது இருந்தது.

முதல் முதலில் வாசித்தபோது, காதலித்த நாட்களில், அர்த்தம் வேறுமாதிரி இருந்தது. சண்டை போடும் நாட்களில் மட்டும் இந்த வார்த்தைகள் கீதோபதேசம் மாதிரி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அன்பு என்பதே மனிதர்களை நெருப்பில் வேகவிடும் கொடூரமான விஷயமாகத் தெரியும். காதல் கை கூடி வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் இந்த அன்பு செலுத்துவது நம்மைப் பாடாய்ப் படுத்திதான் வைக்கிறது.
அன்பு என்ற வார்த்தை வரும்போதே , எதிர்பார்ப்பு என்ற துணையும் கூடவே வந்து விடுகிறது. ஒரு தலைப் பட்சமாக எதிர்பார்ப்புகளே அற்ற அன்பு செலுத்துவது ஞானிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நம்(என்) போன்ற சராசரிகளுக்கு சாத்தியப் படுவதில்லை. அதனால் வரும் சலிப்புகளும் சங்கடங்களும், இனிமேல் யாரிடமும் அன்பாகப் பழகவே கூடாது என்ற வீம்பை உருவாக்கும். ஆனால் அடுத்த நிமிடமே வேறு வகையில் அன்பு வயப்படுவது மனித இயல்பு.

இந்த ஆண்கள் வேண்டுமானால் விதண்டாவாதமாக எதிர்பார்ப்புகளற்ற நேசத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட பலவீனமானவர்கள் ஆண்களே. பெண்களின் possessivnessஐ கிண்டலடிக்க வேண்டுமானால் இந்த வாதம் பயன்படலாம். உண்மையில் கூடுதல் எதிர்பார்ப்புகள் அவர்களுடையதுதான்.

அதே காண்டேகர் அன்பின் ஆழம் எதுவரை போய் நிற்கும்னு அழகா ஒரு கவிதையை மேற்கோளாகச் சொல்வார்:
``முன்இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன்நெடு நாள்இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!’’
வேடனின் அம்பு பட்டு ஆண் பறவை இறந்தது கண்டு பெண் பறவை இனி வெகுநாள் வாழப்போவதில்லை என்று வால்மீகி புலம்புவதை வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வெவ்வேறு விதமாக பொருள் சொல்லியிருப்பார். கதை முழுவதிலும் வரும் இந்த பாடல் வரிகள் வால்மீகியின் உத்தமராம சரிதம் படிக்காமல் போனோமே என ஏங்க வைக்கும். சுலோ(கதை நாயகி)வின் எண்ண ஓட்டங்கள் ஒவ்வொரு வயது மாற்றத்திலும் நமக்குள்ளும் பரிணாம மாற்றமாக நிகழ்வது போன்றே இருக்கும். திலீபனும், அப்பண்ணாவும் அவர்கள் பாணியில் இந்த கவிதைக்கு கருத்துகொள்வது இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். மூன்று கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டத்தில் மட்டுமே முழுக் கதையையும் நகர்த்தியிருப்பார். திடுக்கிடும் சம்பவங்களோ, கிளர்ச்சியூட்டும் வசனங்களோ இல்லாமல் யதார்த்தமான தத்துவங்களால் மட்டுமே கதை நகரும்.

`ஒருவரிடம் ஆசை வைப்பதும்,வைக்காமல் இருப்பதும் மனிதர்கள் கையில் இல்லை. அன்பு காவியத்தைப் போன்றது. அதை நாமாக நினைக்கும் போது செய்ய முடியாது’- ரொம்ப சத்தியமான வார்த்தைகள். அதனால்தான்,சலனமில்லாமல் செல்லும் வாழ்க்கைச் சக்கரம் திடீர்க் காதல்களால் நிலை தடுமாறிவிடுகிறது. கடிவாளத்தைத் திறம்பட பிடித்தவர்கள் ஊர் போய்ச் சேர்வார்கள், தவற விடுபவர்கள் திக்கற்று கஷ்டப்படுவார்கள்.

``ஒருவன் நூறு அழகிய நாவல்கள் எழுதிவிடலாம்.சுய சரிதம் ஒரே தடவைதான் எழுத வேண்டுமென்றாலும்கூட, அது அவனால் ஆகாத வேலை.அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதல்ல.எந்தப் பெண்ணும் தன் யதார்த்தமான சுய சரிதையை எழுத முடியாது என்பதுதான் உண்மை’’- சுய சரிதை என்ன சின்ன மலரும் நினைவுகள் கூட எடிட் செய்யப்பட்டே எழுதப்படும்!!!

கிரெஞ்சவதம் வாசித்து முடித்த அன்றே அது பற்றி எழுத வேண்டுமென்று கை அரித்தது. ஆனால் நிறைய பேர் வாசிக்காமலே போய்விடலாம். எப்படியும் ஒருநாள் மதி `நட்சத்திரமாக விருப்பமா’ என்று கேட்பார்கள், அப்போது எழுதிவிட வேண்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டேன். நேரம் பற்றாமல் போய்விட்டது, நன்கு தயார் செய்து எழுதியிருந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கலாம்.

காதலும், அன்பும் மட்டுமே பற்றி சொல்லியுள்ளேன். திலீபனின் புரட்சிக் கருத்துக்கள் பற்றி ஒரு வரிகூட சொல்லவில்லையே என்று ரெண்டு மூணுபேர் முணுமுணுப்பது கேட்கிறது. `புரட்சியின் மறுபெயர் காதல்’ என்பதுதானே திலீபனின் வாதம்!
கவுண்டமணி-செந்தில் பாணியில் வாழைப்பழ ஜோக்தான் -``அதுதாண்ணே இது’’!!

கண்ணதாசனின் கவிதைகள் எப்படி எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரி இருக்குமோ, அதே போலவே இவரது தத்துவ விளக்கங்களும் காலம் கடந்து சுவை கூட்டுகிறது.

37 Comments:

At 2:15 AM, Anonymous Anonymous said...

சீக்கிரம் படிக்கவேண்டும் [கிரெளஞ்சவதம்]
பொறுமை என்னும் கடிவாளம் கையில்
இருந்தால் வெற்றிக்கொடிஏற்றலாம்-இல்லையா!

 
At 6:41 AM, Blogger தருமி said...

படிக்க முயல்கிறேன்.

 
At 7:34 AM, Blogger தாணு said...

புத்தகம் கடன் தர நான் ரெடி, திருப்பித்தரும் எண்ணம் உண்டல்லவா? ஏனெனில் என் நண்பர்கள் சிலர் புத்தகங்களை அமுக்குவதில் எத்தர்கள்

 
At 7:34 AM, Blogger குமரன் (Kumaran) said...

காண்டேகரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை ஒரு புத்தகமும் படித்ததில்லை. இந்த முறை ஊருக்குப் போகும் போது வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.

 
At 7:43 AM, Blogger நிலா said...

//`ஒருவரிடம் ஆசை வைப்பதும்,வைக்காமல் இருப்பதும் மனிதர்கள் கையில் இல்லை. அன்பு காவியத்தைப் போன்றது. அதை நாமாக நினைக்கும் போது செய்ய முடியாது’//

சத்தியமான உண்மை

 
At 12:16 PM, Blogger Thangamani said...

கிரெளஞ்சவதம்/ காண்டேகர் பற்றிய நல்ல நினைவு மீட்டல். அவரது இந்தப்புத்தகம் அற்புதமானது. பெரும்பாலும் எல்லா அரசு நூலகங்களிலும் அவரது நூல்கள் எளிதில் கிடைக்கும்.

//அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதல்ல.// நன்றி!

 
At 3:25 PM, Blogger சிவா said...

தாணு,

//**அன்பு என்ற வார்த்தை வரும்போதே , எதிர்பார்ப்பு என்ற துணையும் கூடவே வந்து விடுகிறது.**// இது 100% உண்மை தாணு.

//** ஆனால் நிறைய பேர் வாசிக்காமலே போய்விடலாம். எப்படியும் ஒருநாள் மதி `நட்சத்திரமாக விருப்பமா’ என்று கேட்பார்கள், அப்போது எழுதிவிட வேண்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டேன்**//
என்ன மாதிரி மரமண்டைங்க புத்தகமே படிக்கறது இல்லை :-). இப்படி நீங்க 'கிரெளஞ்சவதம்' அப்படின்னு பார்த்தாலே ஏதோ அன்னிய பாஷைன்னு ஓடிப்போய்டுவோம் :-). அதனால தப்பா எடுத்துக்காதீங்க :-))

மாமனார் வீட்டுக்கு வந்தீங்கன்னா, ஒரு எட்டு வந்திட்டு போங்க :-). உங்க வீட்டு காரரை கேட்டதா சொல்லுங்க.

 
At 8:27 PM, Blogger Nirmala. said...

தாணு, வாசிக்கும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். சென்னை வரும் போது தேடிப் பார்க்கிறேன்.

 
At 2:43 AM, Blogger தாணு said...

குமரன்,
காண்டேகர் படித்தால் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்

 
At 2:45 AM, Blogger தாணு said...

நிலா
இது போன்ற ஏராளமான மேற்கோள்கள், எழுதி மாளாது. ஆனால் சொல் நயத்துக்காக அல்லாமல் பொருள் நயத்துக்காகவே மறுபடி மறுபடி வாசிக்கலாம்

 
At 2:46 AM, Blogger தாணு said...

தங்கமணி, உண்மையாகவே எனக்கு அரசு நூலகங்களில் இருக்குமென்று தெரியாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்துதான் கண்டு பிடித்திருக்கிறேன்

 
At 2:47 AM, Blogger மணியன் said...

நானும் காண்டேகர் படிக்கக் கிளம்புகிறேன். அருமையான அறிமுகம்.

 
At 2:48 AM, Blogger தாணு said...

சிவா,
உண்மையைச் சொல்லியிருக்கீங்க. நானே கூட நிறைய பதிவுகளைத் தலைப்பு பார்த்து தண்டிச் சென்று , மறுபடி நேரம் கிடைக்கும்போது வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்

 
At 3:00 AM, Blogger தாணு said...

பாரதி
50 ஆண்டுகள் அல்ல ஒரு கோடி வருடங்களே ஆனாலும் ஒரு பெண்ணால் முழு உண்மைகளுடன் கூடிய சுயசரிதம் எழுத முடியாது. அப்படி எழுதியிருப்பதாக யாராவது சொன்னாலும் அதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. தவறுகளை மறைப்பதாகவோ , பலவீனமான அடுத்த பக்கத்தை மறைப்பதாகவோ அதற்கு அர்த்தமல்ல. சமுதாய கோட்பாடுகளுக்காக சில விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை, அவ்வளவுதான். பெண்களின் முழுமையான உண்மையான வெளிப்படுத்துதலைத் தாங்கிக் கொள்ளும் மனோ பக்குவம் ஆண்களுக்கு எத்தனை வருடங்கள் கழித்து சாத்தியமாகிறதோ அன்று பெண்களின் சுயசரிதம் தினம் வெளிவரும்.

 
At 3:01 AM, Blogger G.Ragavan said...

// அப்படித் தொடரும் பட்சத்தில் அதையே பேசிக்கொண்டு கழிவிரக்கத்தில் மூழ்கிக் கிடக்காமல் தடைகளை உடைத்து உங்கள் வழித்தோன்றல்களுக்காவது ராஜபாட்டை போட்டுத்தர வேண்டிய
தார்மீகக் கடமை பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சரிதானே. //

பாரதி, சொல்வது எளிது. அப்படி எந்தப் பெண்ணும் செய்வாளானால் அவள் மீது சேறு பூசி அமுக்குவதற்கு மற்ற ஆண்களும் பெண்களும் சாணியைக் கரைத்து வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள்.

தாணு, என்னுடைய அம்மாவிடம் காண்டேகரின் யயாதி என்ற புத்தகம் இருக்கிறது. மொழிபெயர்ப்புதான். அதை நான் படித்ததில்லை. வேறு எந்த காண்டேகரின் புத்தகமும் என் அம்மாவிடமும் இல்லை. முன்பெல்லாம் அவராக வாங்குவார். இப்பொழுது நாங்கள் வாங்கித் தருகிறோம். அதனால் கூட இருக்கலாம். இருந்தாலும் சென்ற முறை சென்னையில் என்னுடைய அம்மாவையும் கடைக்குக் கூட்டிச் சென்றுதான் புத்தகம் வாங்கினேன்.

 
At 3:10 AM, Blogger தாணு said...

மணியன்
எனக்குப் பிடித்த ஒரு நல்ல புத்தகத்தை என் நண்பர்களுக்கும் பரிந்துரைத்ததில் பெருமைப் படுகிறேன்

 
At 3:13 AM, Blogger தாணு said...

ராகவன்,
பாரதிக்கு நீங்கள் சொன்ன பாணியில் பதில் எழுதிவிட்டு வந்தால் உங்கள் பின்னூட்டம் வந்துள்ளது.
`யயாதி' இரண்டாம் பாகம் மட்டும் அந்த தொகுப்பில் கிடைக்கவில்லை, அதனால் அதை ஆரம்பிக்காமல் வைத்திருக்கிறேன்

 
At 3:42 AM, Blogger சிங். செயகுமார். said...

எங்கே இன்றைய பதிவை இன்னும் காணவில்லை . டாக்டரக்கா ரொம்ப பிசியோ?

 
At 5:09 AM, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

தாணு, 'காண்டேகர்' எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. படித்ததில்லை. ஆனால் உங்கள் அறிமுகம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆண்கள்/பெண்கள்/அன்பு/பற்று பற்றிய சிறுகுறிப்பு சீரிய சிந்தனைக்குட்படுத்தப்படவேண்டியது தான் என்று தோன்றுகிறது.

வ.உ.சி பூங்கா பின்புறம் உள்ள பொது நூலகம் சென்றிருக்கிறீர்களா? நான் நினைத்ததை விட நிறையப் புத்தகங்கள் அங்கு இருந்தன.

 
At 8:14 AM, Blogger இளங்கோ-டிசே said...

தாணு புத்தக அறிமுகத்துக்கு நன்றி. சிறுவயதில் காண்டேகரின் ஏதோ சில புத்தங்களை வாசித்ததாய் நினைவு. அந்தப்பருவதில் அதிகம் அவரது நாவல்கள் புரிந்ததில்லை. ஈழத்திலும் இவரது புத்தகங்கள் நூலகங்களில் இலகுவாய் கிடைக்கக்கூடியதாய் இருந்ததாய் நினைவு. 'நீல கண்டப் பறவையைத் தேடி' உம் இவரது நாவலா?

 
At 9:15 AM, Blogger தாணு said...

ஜெயக்குமார்
கம்ப்யூட்டர் காலியிலிருந்து மண்டையைப் போட்டுடுச்சு. இப்போதான் எல்லாத்தையும் ரீபூட் பண்னிட்டு இன்னைய பதிவு போஸ்ட் பண்ணினேன்

 
At 9:18 AM, Blogger தாணு said...

செல்வராஜ்
ஒரே ஒருதரம் போயிருக்கேன், ஆனால் வாசலோட திரும்பிட்டேன். கெஸட்டில் என் பேர் மாறி வந்ததன் காப்பி வாங்கப் போனேன். அதன் முகப்பு பார்த்துட்டு அரசு விஷயங்கள் மட்டுமிருக்கும்னு நினைச்சி வந்திட்டேன். புத்தகங்கள் கிடைக்கும்னா உறுப்பினராயிடலாம்!

 
At 9:20 AM, Blogger தாணு said...

டி சே
நினைவு வரலை. தொகுப்பை இன்னைக்கு உருட்டிட்டு நாளை சொல்றேன்

 
At 8:45 PM, Blogger ramachandranusha(உஷா) said...

டி.சே நீலகண்ட பறவையைத் தேடி யை எழுதியது .. பந்தோபாத்தியா, முழு பெயரை மரத்தடியில் ஜெயமோகன் பேட்டியில்
குறிப்பிட்டிருந்தார். கதைகளம் கிழக்கு வங்காளம் என்று அன்று அழைக்கப்பட்ட பங்களாதேஷ். ஆனால் இரண்டு வருடம் முன்பு "விஷ்ணுபுரம்" படித்தப்பொழுது கடைசி அத்தியாயத்தில் வரும் ஆறு பெருகி, பொங்கும் இடத்தில் நீலகண்ட பறவையைத்தேடி ஞாபகம் வந்தது. இரண்டு கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், நீலகண்ட பறவை ஜெ.மோ வுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதிலும் கடைசி அத்தியாயத்தில் மழையும், வெள்ளமும்தான்.

தாணு, "யயாதி" கட்டாயம் படித்துப்பாருங்கள். முன்னுரையில் காண்டேகர் சொன்னது வாழ்க்கை என்னும் பந்தயத்தில்
பெரும்பாலான குதிரைகள் ஆல்சோ ரன் என்று ஓடுகின்றன என்று :-)))
கிளிஞ்ச வதம் பற்றி முன்பு ரஜினிராம்கி எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். இந்தியாவிற்கு போகும்பொழுது தேடிப்பார்க்க வேண்டும்.

 
At 5:31 AM, Blogger Unknown said...

//`ஒருவன் நூறு அழகிய நாவல்கள் எழுதிவிடலாம்.சுய சரிதம் ஒரே தடவைதான் எழுத வேண்டுமென்றாலும்கூட, அது அவனால் ஆகாத வேலை.அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதல்ல.எந்தப் பெண்ணும் தன் யதார்த்தமான சுய சரிதையை எழுத முடியாது என்பதுதான் உண்மை//

ம்... வைர வரிகள். 'என் வாழ்வே எனது செய்தி'ன்னு சொன்னதிலும்., என் கண்களுக்கு சில குறைகள் பட்டது. மனதிற்கு விரோதமில்லாது., போகும்போது நமக்கு நேர்மையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோமா?. சின்னத் தனங்கள் சுற்றி இருந்தாலும் நம் மனம் கலப்பில்லாது., மேன்மையாக இருக்கிறதா என்பதே முக்கியம். இதில்லாமல் சாகும்போது சங்கரா... சங்கரா என்பதில் ஒரு பயனுமில்லை. அருமையான பதிவு.

 
At 3:57 AM, Blogger லதா said...

அன்புள்ள அத்தை(என்று அழைக்கலாம்தானே?)

நாற்பது வருடங்களுக்கு முன்னமேயே எங்கள் பேட்டையிலிருந்த கிளை நூலகத்தில இருந்த கா.ச்ரீ. ச்ரீ.அவர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்ததெல்லாம் மறந்துவிட்டேன். அடுத்தமுறை செல்லும்போது இன்னும் அந்தப்புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தேடியெடுத்து இன்னொருமுறை படிக்கிறேன்

 
At 10:50 AM, Blogger பத்மா அர்விந்த் said...

உண்மையை உணர்ந்து கொண்டால் அதுவே அழகுதான் தாணு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முழுமையான அன்பில் எதிர்பார்ப்பு இருப்பதில்லை. எதிர்பார்ப்புடன் செலுத்தப்படும் அன்பு, உண்மையில் வியாபாரம் ஆகிறது. அதேபோல அங்கிகாரங்களையோ அபிப்ப்ராயங்களையோ தேடாத ஆண்/பெண் இருபாலாராலும் உண்மையை சொல்ல முடியும். ஆனால் நம்புவதும் நம்பாததும் வாசகர் விருப்பம். உண்மையை சொல்பவருக்கு இந்த அங்கீகாரங்களும் தேவை இல்லை

 
At 6:41 AM, Blogger ஜென்ராம் said...

சொல், கண்ணீர், ரத்தம்.. கிரௌஞ்சவதம் குறித்து ரம்யா நாகேஸ்வரனின் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

கிரௌஞ்சவதம், கருகிய மொட்டுக்கள், எரிநட்சத்திரம் மற்றும் வெண்முகில் நான்கும் உங்களுக்குத் தொகுப்பு வாங்கி அனுப்பும்போது பாரதி வாங்கியது இங்கு இருக்கிறது.
ஆர்வம் உள்ளவர்களுக்கு: காண்டேகரின் நூல்கள் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கின்றன.

 
At 7:35 PM, Blogger dondu(#11168674346665545885) said...

வி.ச.காண்டேகரின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது யயாதி. கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களின் மொழிபெயர்ப்பு நடை சுகமானது. ஆனால் நான் 1986-ல் அதை படித்தப்போது அவர் முதல் பாகம் மட்டும்தான் மொழிபெயர்த்திருந்தார். அப்போது தில்லியில் வசித்து வந்தேன்,. அவ்வருடம் கோடை விடுமுறையில் சென்னை வந்திருந்தபோது மெனக்கெட்டுப் போய் கலைமகள் காரியாலயத்தில் காஸ்ரீஸ்ரீ அவர்கள் முகவரி பெற்று அவர் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரிடம் இரண்டாம் பாகத்தின் மொழிபெயர்ப்பு பற்றி கேட்டபோது அவர் அதை செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். மிகுந்த ஏமாற்றம் எனக்கு.

நல்ல வேளையாக எங்கள் ஐ.டி.பி.எல். நூலகத்தில் யயாதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பு கிடைத்தது. விட்டுப்போன இரண்டாம் பாகத்தை அதனிலிருந்து படித்துக்கொள்ள முடிந்தது. ஆக, மராத்தியில் எழுதப்பட்ட யயாதியை தமிழ், ஹிந்தி மொழிகளில் படித்தேன். இவ்வாண்டு புத்தகக் கண்காட்சியில் பார்த்தபொது யயாதி தமிழில் முழுமையாக இருந்தது என நினைவு.

இது ஒரு ப்ளாக்கர் பின்னூட்டம். ப்ளாக்கர் எண் 4800161 (எலிக்குட்டி சோதனையில்) மற்றும் புகைப்படம் இரண்டும் சேர்ந்து இருந்தால்தான் அது உண்மையான டோண்டு இட்டப் பின்னூட்டம் என்பதை நினவில் வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 12:59 AM, Blogger தாணு said...

உஷா
இன்றுதான் யயாதி வாசிக்க எடுத்திருக்கிறேன். தமிழ்நாடு வரும்போது தொடர்பு கொள்ளவும்

 
At 1:00 AM, Blogger தாணு said...

அப்படிப்போடு,
நியாயமான வாழ்வாகவே வாழ்ந்தாலும் கூட சில சந்தர்ப்பங்கள் பகிர்தலுக்குரியதாக இருக்காது. `உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை'

 
At 1:08 AM, Blogger தாணு said...

லதா
இந்தக் கிண்டல்தான் வேணாங்கிறது. 40 வருஷத்துக்கு முந்தியே அந்த நாவல் வாசித்திருந்தால் இப்போதைக்கு உங்களுக்கே என் மாமியார் வயசிருக்கணுமே?

 
At 1:09 AM, Blogger தாணு said...

ராம்கி
நட்சத்திர வாரத்தில் காண்டேகர் பற்றி எழுதியது உங்களின் இன்ஸ்பிரேஷனால்தான். ஜென்னி வாசித்துவிட்டு என்ன சொன்னாள்?

 
At 1:12 AM, Blogger தாணு said...

//அங்கிகாரங்களையோ அபிப்ப்ராயங்களையோ தேடாத ஆண்/பெண் இருபாலாராலும் உண்மையை சொல்ல முடியும். ஆனால் நம்புவதும் நம்பாததும் வாசகர் விருப்பம்.//
தேன் துளி அபிப்பிராயங்களை மதிக்காவிட்டாலும் சில சமுதாய நிர்ப்பந்தங்களுக்காக உண்மைகள் மறைக்கப்படுகின்றன

 
At 1:15 AM, Blogger தாணு said...

ராகவன் சார்
எனக்கும் யயாதி முதல் பாகம்தான் கிடைத்திருக்கிறது. அடுத்த பாகம் ராம்கி வாங்கித் தந்தால்தான் உண்டு

 
At 10:52 AM, Blogger பத்மா அர்விந்த் said...

சமுதாய நிர்ப்பந்தங்கள் நீங்களே அனுமதிக்காவிட்டல் எப்படி கட்டுப்படுத்த முடியும்? பின்விளைவுகளை சந்திக்க மனதிடம் இருந்தால், உண்மைகளை மறைக்க வேண்டியதும் இல்லை.

 
At 9:56 AM, Blogger தமிழ்பாலா said...

அறிஞர் அண்ணாத்துரை காலத்திலேயே அறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர் காண்டேகர் அவர்கள் ,இவரின் படைப்புகளை எள்ளளவும் பிறழாமல் மொழிபெயர்ப்பு செய்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்ளுக்கே சாரும்.இலக்கிய உலகினில் காண்டேகர் அவர்களை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி
அன்புடன்
கவிஞர் ,தமிழ்பாலா-----

 

Post a Comment

<< Home