கல்லூரியின் ஹிட் லிஸ்ட்
பள்ளிப் பருவத்து நினைவுகளும் சேஷ்டைகளும் ஒருவிதம் என்றாலும், கல்லூரியில் அடிக்கும் லூட்டிதான் ரொம்ப விசேஷமானது. அதிலும் மிக நீண்ட வருடங்கள் ( எங்கள் காலத்தில் ஆறரை வருடங்கள்) ஒரே கல்லூரியில் படிக்கும்போது பண்ணப்படும் குரும்புகள் எத்தனை வகை! மிசா சட்டம் அமுலுக்கிருந்த கால கட்டத்தில் தேர்வு நடந்ததால் என்போன்ற சாமான்யர்களுக்கும் சீட் கிடைத்தது. எங்கள் வகுப்பில் எல்லோருமே ஒரே பொருளாதாரத் தட்டில்தான் இருப்போம். எங்களுக்கு முந்திய, பிந்திய வகுப்பு மாணவர்களில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் படிப்பதிலிருந்து குறும்புகள் வரை ஒரே தட்டில் இருக்கும். எல்லா வகுப்பு போலவும் படிப்பே பிரதானமான முன் பென்ச் மக்களை எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்வதில்லை. பசங்களே பரவாயில்லை என்னும்படி பெண்களாகிய எங்கள் குறும்புகள் இருக்கும். ஆனால் யாரையும் காயப்படுத்துவதில்லை, கலாய்த்துக் கொண்டே இருப்போம்.
பெண்கள் ஹாஸ்டல் கல்லூரியின் பின்புறத்திலேயே இருக்கும். எங்கள் அறையில் இருந்து பார்த்தால் கல்லூரி வராண்டாவில் நடப்பவை துல்லியமாகத் தெரியும், அவ்வளவு அருகாமை. சில விஷயங்களுக்கு நன்மையாக இருந்தாலும் , பல விஷயங்களுக்கு, இந்த அமைப்பு இடைஞ்சலாகவும் இருக்கும். நூலகம் சென்றுவரும் புத்தகப் புழுக்களுக்கு, இரவு எந்நேரமானாலும் திரும்புவது சுலபம். ஆனால் ஹாஸ்டலே வீடாக இருக்கும் எங்களுக்கு ரொம்ப பிரச்னை.சுதந்திரமாக அப்படி இப்படி இருக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்த புதிதில்தான் நிறைய பேர் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டோம். கல்லூரியைச் சுற்றி உள்ள சாலையில் செல்லாமல் பழக முடியாது. அதனால் வந்த வம்பு, வாத்தியாரின் ஹிட் லிஸ்ட்டில் எங்கள் பெயர் சேர்க்கப்பட்டது!(ஹிட் லிஸ்ட் என்றால் இந்த வருடம் யாரெல்லாம் பெயில் பண்ணப்படுவார்கள் என்பது பரீட்சைக்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டுவிடும் லிஸ்ட்) எதுக்காகத் தெரியுமா? புரொபஸர் நடந்து வந்து கொண்டிருந்த போது எதிரே சைக்கிளில் சென்ற அம்மணி இறங்கி வணக்கம் சொல்லவில்லை!! எப்படி சொல்ல முடியும்? இறங்கினால் ஏறத் தெரியாதே!!யாராவது ஏற்றித்தான் விடணும், வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டே எவ்வளவு நேரம்னாலும் செல்லும்! இதைப் போய் வாத்தியாரிடம் விளக்க முடியுமா? வைச்சாரு எங்களை தீவிரவாதிகள் லிஸ்ட்டில். ஆனாலும் நாங்க எப்படி ஆளுங்க? மூணுமாசம் சோறு தண்ணி இல்லாமல் படிச்சு பாஸ் பண்ணிட்டோம். அப்பாடி ஒரு கண்டம் தப்பிச்சோம்.( எங்க வீட்லேயெல்லாம் என்ன நிபந்தனை தெரியுமா? என்ன சேட்டை வேணா பண்ணிக்கோங்க, பெயில் மட்டும் ஆகக் கூடாது!) ஆனாலும் விதி எங்களை விடுவதாயில்லை. இரண்டாம் வருடம்,ஆய்வுக்கூடங்களில் டெமான்ஸ்ட்ரேஷன் நடக்கும்போது ஆசிரியரை சுற்றி கும்பலாக நிற்கும்போது, பின்னாடி நிற்பவர்களுக்கு சரியாகக் கேட்காது. என் வகுப்புத் தோழி ஒருத்தி, கொஞ்சம் குறும்பு கூடுதலாக உள்ளவள்; வேண்டுமென்று செய்தாளோ தற்செயலாகச் செய்தாளோ எட்டிப் பார்க்கும் முகமாக எதையோ பற்றிக் கொள்வதாக நினைத்து வாத்தியாரின் ஓவர் கோட்டைப் பிடித்து இழுத்துவிட்டாள். ஆனால் பலே அள், அவர் திரும்பும்போது சட்டென்று விலகி விட்டாள், மாட்டியவள் நான்! இந்த வருஷமும் ஹிட் லிஸ்ட். மறுபடி அதே கதை, வெறித்தனமாகப் படிச்சு பாஸாயிட்டோம்.( எங்க குழுவில் யார் சேட்டை பண்ணினாலும், எல்லார் பெயரும் மொத்தமாக லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு விடும்) ரெண்டாம் கண்டம் தப்பிச்சாச்சு!
இனிமேல் வாத்தியார்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்னு முடிவெடுத்து மூனாம் ஆண்டு நுழைந்தால், விதி வகுப்புத் தோழனின் மூலம் வந்தது! நாங்க பாட்டுக்கு `மாப்பிள்ளை பென்ச்’சில் உட்கார்ந்து எங்களுக்குள் `மகளிர் மட்டும்’ கதைகள் பேசி சிரித்ததைத் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டான்(ர்). அதில் தெரிந்த நியாயமின்மைக்கு நீதி கேட்கும் முகமாக தோழியர் இடை புகுந்து, சின்ன கலாட்டாவாகி, வகுப்புக்கு செல்லாமல் வெளியிருப்பு போராட்டம்! அந்த வருஷ ப்ரொபஸர் ரொம்ப ஸ்டிரிக்ட். சண்டைக்கு மூல காரணம் நாங்களே என்று மனதில் பதிய விட்டு மறுபடி ஹிட் லிஸ்ட், மறுபடி அதே கதை.( நிஜமாகவே எல்லா வருடமும் ஒரே அட்டெம்ப்ட்டில் தேர்வான ஒரு சிலரில் நானும் ஒருத்தி, நம்புங்கப்பா)
அப்பாடி ஒருவழியாக தப்பித்து மருத்துவமனை பக்கம் ஓடி வந்தாச்சு. எல்லா வருடத்து மாணவர்களும் கலந்து வகுப்புகளுக்கு செல்வதால், நம்மை விட கில்லாடியான ஆட்கள் அங்கே இருந்ததால் ,நம்ம சாயம் வெளுக்கலை. சின்னச் சின்ன குறும்புகள் செய்தாலும், பெரிய குறும்புகளுக்கு முன் காணாமல் போய்விட்டன. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிது வருத்தம் என்றாலும் கொஞ்சம் அடக்கி வாசித்தோம்.
ஆனாலும் நாலாம் வருட தேர்வுக்கு நான்கு நாட்களே இருந்த போது அப்பா திடீரென தவறிவிட்ட அதிர்ச்சி , தேர்வையே புறம் தள்ளும் சோகத்துக்கு கொண்டு போய்விட்டது. கண்டிப்பாக தேர்வெழுத முடியாது என்று நினைத்திருந்தபோது, ஏதோ பிரச்னையால் திடீர் ஸ்டிரைக் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்குத் தேர்வே தள்ளி வைக்கப் பட்டது!!
இறுதியாண்டு, இதுதான் எல்லா ரெக்கார்டுகளிலும் வரும். அதனால் கொஞ்சம் பம்மிப் பதுங்கி வாலைச் சுருட்டிக் கொண்டோம்.ஆனால் எல்லா நண்பர்களின் ரிசல்ட்டையும் கேலிக்குள்ளாக்கும் விதமாக ஒரு பிரச்னையான ப்ரொபஸர். படிப்பிற்கும் தேர்வு முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்னும் நிலை. எல்லோருமே மன அழுத்தத்துடன் க்ளினிகல் பரீட்சை சென்றோம். பெயிலானவுடன் பரீட்சை லீவுக்கு யார் யார் வீட்டுக்கு எப்போ போய் டேரா போடறதுன்னு பேச்சு வார்த்தை நடக்குது!ஆனால் பாருங்க, வெளியிலிருந்து வந்த எக்ஸாமினர் நிலைமையின் தன்மையை உணர்ந்து மார்க்குகளை அள்ளிப் போட்டு தகுதி வாய்ந்த மாணவர்களையெல்லாம் கடைத் தேற்றிவிட்டார்!!! எப்படியோ நாங்களும் மருத்துவர்களாயிட்டோம்!
கல்லூரியின் வசந்த காலம்னா அது ஹவுஸ் சர்ஜன் பண்ணிய போதுதான். அந்த சமயத்திலும் கூட பசங்க என்னைச் சிக்கலில் மாட்டி விட்டுட்டாங்க! ஒரு பார்ட்டியின் போது எங்க HOD தன்னைப்பற்றிய உண்மையான விமர்சனங்களை வரவேற்பதாகச் சொன்னபோது எல்லோரும் முகஸ்த்துதியாக அள்ளி வீசிக் கொண்டிருந்த போது, அவரின் அடுத்த பக்கத்தை சொல்லும்படியாகிவிட்டது, ஓவர் பாசாங்கைத் தாங்க முடியாமல். அவ்வளவுதான், course completion certificate தராமல் போயிடுவார்ன்னு பயம் காட்டி குழப்பிட்டாங்க. ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்ற எல்லோரையும் விட ஒளிவு மறைவின்றி பேசிய என்னிடம் அவர் கூடுதல் அன்போடு இருந்ததாகப் பட்டது!
நாங்க பண்ணிய சேட்டைகளே இப்படி என்றால் ,எங்க பசங்க அட்டகாசத்துக்கு கேட்கணுமா? `ஒருதலை ராகம்’ படம்னு நினைக்கிறேன், பெண்கள் எல்லோரும் கும்பலா போயிட்டு வந்துகிட்டு இருக்கோம். ஹாஸ்டலுக்கு கொஞ்சம் முன்னாடி இருட்டா இருக்கும், அந்த இடத்தில் சாலையின் குறுக்கே யாரோ படுத்திருப்பது போல் இருந்தது. குடிபோதையா, பிணமா, எதுவுமே கணிக்க முடியாத மசமச இருட்டு. எல்லோருமே ஒருவித தயக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் போது கொஞ்சம் தைரியமான தோழி மெதுவாக அருகே சென்று குனிந்தாள். வீலென்று ஒரு சத்தம், எல்லோரும் ஆளுக்கொரு திக்கில் சிதறி ஓடினோம், என்ன நடந்தது என்று கூட யாருக்கும் புரியவில்லை. படபடப்பு நீங்கியதும் ஆளாளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்று ஆராய்ந்து பார்த்தால், சாலையின் நடுவில் யாரோ உட்கார்ந்திருக்காங்க, குனிந்து பார்த்த தோழி பயப்படாமல் நிற்கிறாள். பயம் தெளிந்து மெதுவாக எல்லோருமாக பக்கத்தில் போய்ப் பார்த்தால், எங்கள் வகுப்பு நண்பர் ஒருவர் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நாங்களெல்லோரும் சினிமா போயிருப்பதைத் தெரிந்து கொண்டு, எங்களைக் குமைப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள். மெதுவாக அக்கம் பக்க புதர்களிலிருந்து மீதி நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த வீலென்ற சத்தமும், எல்லோரும் சிதறி ஓடியதும் இன்று நினைத்தாலும், சிரிப்பை அடக்க முடிவதில்லை.
இவர்களைக் கடுப்பேற்றுவதற்காகவே பெண்கள் மட்டும் குற்றாலம் சென்றோம், பழிக்குப் பழி!! எவ்வளவுதான் வீம்பும், சண்டையும், தகராறும் போட்டாலும், எங்களுக்குள் உள்ள அன்பும் உரிமையும் மற்ற வகுப்பில் உண்டா என்று சொல்லத் தெரியவில்லை.அதை சமீபத்தில் உனர்ந்து கொண்டோம்.
25 வருடங்கள் கழித்து போனவருடம் கொடைக்கானலில் get2gether போட்டோம், வகுப்பு நண்பர்கள் மட்டும், குடும்பத்தினர் நீங்கலாக. அதே அளவு நட்பு, அன்பு, புரிதல் எல்லாம் இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னும் இருந்தது கண்டு புளகாங்கித்துப் போனோம். குடும்பத்தினரை நீக்கிவிட்டு இதைகைய சந்திப்பு தேவையா என்று எல்லா தரப்பிலிருந்தும் விமர்சனங்கள்., கண்டனங்கள்; காதுகளைச் செவிடாக்கிக் கொண்டு நடத்தி முடித்தோம், மனதை நிறைத்துக்கொண்டு திரும்பி வந்தோம். (organise பண்ணிய ஆளு யாரு, நானாச்சே, சலசலப்புக்கெல்லாம் அஞ்சுவேனா)
எதைப் பற்றி எழுதுவது என்ற முன்னேற்பாடின்றி உட்கார்ந்ததால், தோணியபடி எழுதிவிட்டேன், எல்லாமே `நட்புக்காக’த்தானே!
``உள்ளம் என்பது ஆமை-அதில்
உண்மை என்பது ஊமை;
சொல்லில் வருவது பாதி-நெஞ்சில்
உறங்கிக் கிடக்குது மீதி’’
(சொன்னதை விட சொல்ல மறந்த கதைகள் ஏராளம்)
31 Comments:
சுவையான நினைவுகள். எல்லோரும் இதைபோல பதித்தால் கலக்கலா இருக்கும்.
//"நாங்க பண்ணிய சேட்டைகளே இப்படி என்றால் ,எங்க பசங்க அட்டகாசத்துக்கு கேட்கணுமா?//
அந்தக்காலத்து ஸ்டேட்மண்ட்டா?
அத்தை,
ரொம்ப நல்லாருக்கு உங்க மருத்துவக் கல்லூரி அனுபவங்கள். ஓரே பாகத்துல முடிக்கக்கூடியதா கண்டிப்பா இருந்திருக்காது. கண்டினியு பண்ணுங்க.
நமக்கும் நிறைய இருக்கு. அனாடமி செமஸ்டர் எக்ஸாம் போது டீச்சர் மேல தெரியாம dissected கையோட சேர்த்து பார்மலின் கொட்டியது, பிஸியாலஜி வாத்தியார் தமிழ்ல ரெண்டு வார்த்தை சொல்ல்க்கொடுங்கப்பான்னு சொன்னதுக்கு கெட்டவார்த்தையெல்லாம் சொல்லிக்கொடுத்து.. அவரு சும்மா இல்லாம, அடுத்த வருஷம் வந்த பசங்க கிட்ட சொல்ல போக காமெடி. பார்மா டீச்சர் கிட்ட எங்க குருப்பே சண்டை போட்டு ரெண்டு க்ளாஸ் டெஸ்டுல மொத்தமா பெயிலானது..
இதெல்லாம் இப்ப சொல்லக்கூடாது. நமக்கும் ஒரு அம்பது வயசானப்பறம், நானும் தெரியல நட்சத்திரமாகும்போது விரிவா எழுதறேன். :P
தங்கள் பதிவு சுவாரசியமாக இருக்கிறது.
நன்றி.
எழுதுவதை சின்ன சின்ன பாராவாகப் பிரித்துப் போட்டால் படிக்கச் சுலபமாக இருக்கும்.
முடியுமா ?
தாணு இப்படி சுவாரசியமாய் எடுத்து விட்டு வைத்தெரிச்சலை வாங்கிக்காதீங்க.
கல்லூரி வாழ்க்கையே சுவாரஸ்யம் தான். நல்லா ஆட்டம் போட்டிருக்கீங்க. நிறைய கண்டம் தான்டி தாண்டி தான் வந்திருக்கீங்க. இன்னும் எல்லோருடனும் தொடர்பு இருப்பதை கேட்க சந்தோசமா இருக்கு. தொடருங்கள். கல்லூரி நட்பு ரொம்ப அருமையானது.
"25 வருடங்கள் கழித்து போனவருடம் கொடைக்கானலில் get2gether போட்டோம், வகுப்பு நண்பர்கள் மட்டும், குடும்பத்தினர் நீங்கலாக. அதே அளவு நட்பு, அன்பு, புரிதல் எல்லாம் இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னும் இருந்தது கண்டு புளகாங்கித்துப் போனோம்."
பரபரப்பான இந்த உலகில் 25 வருடம் கழித்தும் கெட்டுகதர். கேட்கவே ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது .இதை அனுபவித்தவர்- கொடுத்து வைத்தவர்!
ஏங்க தாணு,
இந்தக் கல்லூரி ஆசிரியர்களே ரொம்ப மோசமோ...? :-(
எதுக்கும் என் பசங்ககிட்டேயும் (பசங்கிகிட்டயும்தான்) கேட்கணும்...
“ஏராளத்தை”க் கொஞ்சம் தாராளமாக்கித் தரக்கூடாதா?
அப்போது “சைக்கிள் “ மோதினால் பிழைப்போம்!
இப்போது “கார் “ அல்லவா! எதிரே வரலாமா?
நல்ல வேளை அதே கால கட்டத்தில், பாளையில் படித்திருந்தும் , உங்களை அறிந்திருக்கவில்லை, சைக்கிள் மோதாமல் தப்பினேன்
உஹ¥ம்.. :-)))) காதல் கதைகளைச் சொல்லாத கல்லூரி கதை ஒரு கதையா?
தாணு, நீங்க கையாண்ட விசித்திர கேஸ்களை சொல்லுங்களேன்? இப்ப இல்லாட்டி இன்னொரு சமயம்.
சிரில்,
முதலில் `கல்லூரி கலக்கல்’ன்னுதான் தலைப்பு வைச்சிருந்தேன். கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டூமேன்னுதான் மாத்தினேன்
ராமநாதன்,
அனாட்டமி அரங்கத்தின் கலட்டாக்களைப் பற்றி எழுதினாலே ஜாலிதான். உங்களுக்கு வேற்று மொழிப் பிரச்னையால் இன்னும் கூட நிறைய கேலிகள் நடந்திருக்கும் இல்லையா? உண்மையாகவே எழுத நிறைய இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்ததுமே மனசு `பின்பக்கத்தின் பளீரொளி’(flashback)யில் மயங்கி நின்றுவிடுவதால், கோர்வை விட்டுப் போய்விடுகிறது. எழுத முயல்கிறேன்.
உங்க அனுபவங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளது, எழுதுங்களேன்
பச்சோந்தி
(இப்படி விளிப்பது கொஞ்சம் வித்தியாசமா இருக்குது)
யாருமே ப்ளாக்கின் தோற்றம் பற்றி சொல்ல மாட்டேங்கிறாங்களேன்னு நினைத்தேன், நன்றி. எழுதும்போது தோணத் தோண எழுதுவதால் ஒரு கட்டுக்குள் வராமல் எழுதிவிடுகிறேன். அடுத்த முறை உங்கள் ஆலோசனையை நடைமுறைப் படுத்திப் பார்க்கிறேன்
கயல்
லேசாகத்தான் தொட்டிருக்கிறேன். இன்னும் பெயர்கலையும் உள்ளடக்கி நடந்த விஷயங்கள் ரொம்ப சூப்பரா இருக்கும், ஆனால் தனிப்பட்ட முறையில் யாரும் வருந்திவிடக் கூடாதேயென்று பொதுவானவற்றை மட்டும் எழுதியிருக்கிறேன்.
பதிவு எழுதியே நிறைய நோயாளிகளைச் சேர்த்திடலாம் போலிருக்கே! முதல் அல்சர் கேஸ் நீங்கதான்!
சிவா,
ஆட்டமும் போட்டிருக்கிறோம், நிறைய பேரை ஆட்டம் காணவும் வைத்திருக்கிறோம். சில வாத்தியார்கள் எங்களிடம் பட்ட பாட்டில் நாங்கள் வரும் வார்ட் பக்கமே தவிர்த்துவிடுவார்கள்.
ஜெயக்குமார்,
உண்மையாகவே நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்தான். இவ்வளவு நீண்ட இடைவெளியில், முகமும் முகவரியும் மாறிப்போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்த விஷயமே ஒரு நீளத் தொடர். மல்டி மீடியாவின் வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்தினோம். அப்போது எடுத்த க்ரூப் போட்டோ எங்கள் அனைவரின் கன்சல்ட்டேஷன் அறையிலும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு நினைவுமலர் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் விபரங்களுடன் போட்டேன், ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. அதன் சிறப்பை என் பிறந்த நாளன்று என் நண்பனின் 12.05 மணி போன் கால் உணர வைத்தது!!இதை வாசிக்கும் நண்பர்கள் இது போன்ற முயற்சிகளைத் தொடங்கும் முதல் ஆளாகக் கிளம்பினால் சந்தோஷமாக இருக்கும்
ராஜ்
ஒரு சிலர்தான் இப்படி. நிறைய அசிஸ்டெண்ட் ப்ரொபஸர்கள் எங்களின் தேர்வு நேரங்களில் எவ்வளவோ உதவி செய்துள்ளார்கள். `தெய்வம்’ என்று செல்லமாக பட்டப்பெயர் சூட்டப்பட்ட அருமையான ஆசிரியரும் உண்டு.
தருமி
இப்போதான் ராஜுக்கு பதில் சொன்னேன். இன்றளவும் எங்கள் அந்நாளைய பிடித்த ஆசிரியர்கள் அடிக்கடி எங்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். தி-லி போகும்போது மெனக்கெட்டு போய்ப் பார்க்கிறோம். நாணயத்திற்கு இரு பக்கங்கள், அவ்வளவுதான்
சித்தன்,
அப்போ அடிபடலையேன்னு வருத்தம் உங்களுக்கு இருக்கக் கூடாது. எங்க வீட்டு ஓட்டை மாருதி ரெடி!
கண்ணம்மா,
இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏர்றுவது, தவணை முறையில் கொடுத்தால் எல்லாமே சுலபம்தான்
உஷா
காதல் கதை சொல்ல ஆரம்பித்தால், அப்புரம் நான் டூயட் பாடப் பறந்திடுவேன், இந்த வார நட்சத்திர வேலை என்னாவது!
விசித்திர கேஸ்கள் நிறைய இருக்கு . கொஞ்சம் மெட்டீரியல்ஸ் தயார் செய்துட்டு எழுதறேன்
House of Angels என்று உங்கள் விடுதிக்குப் பெயர் இருந்ததைச் சொல்லாமல் "தன்னடக்கத்துடன்" பதிவிட்டிருக்கிறீர்கள்..
சூப்பரா இருக்கு!
நீங்க முடிச்ச அதே பாட்டுல முடிச்சுடுறேன்.
"நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்"
மேடம்!
நீங்க தோணறத உடனடியா எழுதறீங்கன்னாலும், 'உம் அப்புறம்'னு கேக்க சொல்லற விறுவிறுப்பும் சுவாரசியமும் குறையாம கடைசி வரைக்கும் எடுத்துட்டு போறீங்க!
காலேஜ் வாழ்க்கையை நல்லா அனுபவிச்சிருப்பீங்க போல!
மிசா சட்டமா?!., என்னன்னவோ நினைவுகளைக் கிளறி விட்டது. நான் படித்தது பெண்கள் கல்லூரி :( கல்லூரிப் பெயரைச் சொன்னாலே ஒரு மகிழ்வு வந்து மனதில் ஆமாம் உக்கார்ந்து கொள்ளும். இதப் பற்றி இவ்வளவு நாட்கள் நான் ஏன் எழுத மறந்தேன் என யோசிக்கிறேன். கலக்கல் பதிவு.
ராம்கி,
மதியத்திலிருந்து கமெண்ட் மாடரேஷன் சரிவர இயங்கவில்லை, அதனால் உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பப்ளிஷ் பண்ணினேன்.
`House of Angels’க்கு என் நண்பன் சொல்லியிருந்த மொழிபெயர்ப்பு `தேவதைகளின் கூடாரம்’. எங்கள் get2getherக்கு வாழ்த்துரை வரைந்த போது சொன்ன பதம், சமீபத்திய மயிலிறகு வருடல்!!!
ஜோ,
படிக்கும்போது எத்தனை சண்டை போட்டிருப்போம், முகத்திலேயே முழிக்க மாட்டேன்னு வீறாப்பெல்லாம் கூட உண்டு. இன்று நினைத்துப் பார்க்கும்போது சண்டையிட்ட தருணங்கள்கூட சுவையோ சுவை!!
கைப்புள்ள,
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே கதைகளை விட சுவாரஸியமாக இருக்கிறது. அதில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளும் போது, எழுத்து தடையின்றி வருகிறது.
கல்லூரி வாழ்க்கையை மட்டுமல்ல வாழ்க்கையையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் அனுபவித்து நடக்கிறேன்
பாரதி
பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடாத மாணவப் பருவமே இருக்காது என்று நினைக்கிறேன். கண்ணதாசனுக்கு முன், என்ன பாட்டு பாடியிருப்பாங்க?
கடலை, ஜொள்ளு, தொட்டி, மசை, , வரிசையா வார்த்தைகள் ஞாபகம் வருதே! எங்க கல்லூரிய்ல் பின்னாடியிருந்து மாற்றிப் போட்டு பேசுவது ஒரு ஸ்டைல்! போலீஸ்- ஸ்லீபோ: சாப்பாடு- டுபாப்சா;கழுதை-தைழுக; இன்னும் எத்தனையோ, வேகமாக பேசுவோம். `வாத்தியார் லைதலே டிமு லைல்இ, கைக்ழுவ” சூப்பரா இருக்குதா? இன்னைக்கு வீட்லே அழிஞ்சாங்க, போய்ப் பேசணுமில்லே! என்ன ஒரு சங்கடம் ,பாதி வார்த்தைகள் மகளுக்கு ஏற்கனவே சொல்லிக் கொடுத்திட்டேன்
அப்படிப்போடு,
பெண்கள் கல்லூரிக்குன்னு உள்ள ஸ்பெஷல் சங்கதிகள் இருக்குமே, அது பத்தி எழுதுங்களேன்.
தாணு, உங்கள் பதிவிற்குக் காலையிலேயே பின்னூட்டம் போட எண்ணியிருந்தேன். ஆனால் இப்பொழுதுதான் போட முடிந்தது.
பின்மண்டைப் பளீரொளியா...அதென்ன சொல்வீங்க....அத எக்கச்சக்கமா கொடுத்திருக்கீங்க. எக்கமோ எக்கச்சக்கம்.
பாளையங்கோட்டைக்காரங்கன்னு நிரூபிச்சிருக்கீங்க. பெரமாதம்.
நல்லாவே சேட்டை பண்ணீருக்கீங்க.
ராகவன்
பின்பக்கத்தின் பளீரொளி! உங்க சேப்பாக்கம் பதிவு வாசித்தேன், பின்னூடமிட நேரமில்லை
Post a Comment
<< Home