சினிமாக் கிறுக்கர்கள் சபை
சினிமா என்பது மத்தியதரக் குடும்பங்களின் தவிர்க்க முடியாத பொழுது போக்கு அம்சம். குடும்பத்தவர் அனைவரையும் சுற்றுலா மாதிரி வெளியே கூட்டிச் செல்ல முடியாத பட்ஜெட் பத்மநாபர்களுக்கு சர்வ ரோக நிவாரணி சினிமாதான். எவ்வளவுதான் டிவி, விசிடி, டிவிடின்னு புது கண்டுபிடிப்புகள் வந்தாலும் ,தியேட்டரில் போய் ஜனரஞ்சகமாக சினிமா பார்க்கும் சுகம் வராது.
ஒவ்வொரு வயதிலும் சினிமா பார்க்கும் முறை வேண்டுமானால் மாறலாம், ரசிப்புத் தன்மை மாறாது. சின்ன வயசில் டூரிங் தியேட்டரில் பட்ம் பார்த்தப்போ என்ன ஒரு லயிப்பு. அப்போதெல்லாம் படம் சரியா புரியாது, அம்மா அக்காவெல்லாம் உருகி உருகி படம் பார்க்கும்போது நமக்கு போரடிக்கும். மணலைக் கூட்டி கோபுரம் மாதிரி கட்டி, அதன் உச்சியை கொஞ்சம் தட்டி விட்டு சிம்மாசனம் மாதிரி செய்து அதில் ஏறி உக்காந்துக்கிறது. பின்னாடி இருந்து யாராச்சும் மறைக்குதுன்னு சொன்னாலும், சின்ன சிணுங்கல் சிணுங்கினால் போதும், அம்மா அவங்க கூட மினி சண்டை போட்டு அரியணையைத் தக்க வைத்துவிடுவாங்க. மறைக்குதுன்னு சொன்னவங்க மூச்சு காட்டாமல் தள்ளி உக்காந்து பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க வாண்டும் அதேதானே பண்ணியிருக்கும். இடைவேளை எப்போடா விடுவாங்கன்னு பார்க்க வேண்டியது, அப்போதானே முறுக்கு சுண்டல் எல்லாம் வரும். சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டிருந்தால் படம் முடிஞ்சிருக்கும்.
நிரந்தரத் தியேட்டர் வந்த பிறகு இந்த சுகம் போயிட்டுது ஆனாலும் இங்கே வேறே ஜாலி. திரையை ஒட்டி சின்ன மேடை இருக்கும். கூட்டம் அதிகமா இருக்கும் காலங்களில் அதுல உட்கார்ந்து பார்க்கும்போது, சிவாஜி எம்.ஜி.ஆர் எல்லோரும் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பாங்க!தரை டிக்கெட்டில் உட்கார்ந்து `ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தலைவர் விதவிதமா பாவாடை கட்டி வந்த சீன்களை உருக்கமா பார்த்து ரசிச்ச காலம்.
மருத்துவக் கல்லூரி போனபிறகு வீட்லே நம்ம ஸ்டேட்டஸ் உசந்திட்டதாலே, பென்ச் டிக்கெட்டுக்கு புரமோஷன். அனாலும் தரையை ஏக்கத்தோடதான் பார்த்துக்குவேன், அங்கேதான் பால்ய தோழிகளெல்லாம் உக்கர்ந்திருப்பாங்க.
கல்லூரி வந்த பிறகு சினிமா பார்க்கிற ஸ்டைலே மாறிடுச்சு. ஒவ்வொரு படத்துக்கும் குறிப்பிட்ட துணை செட் ஆயிடும். கமல் படம் சிலரோட, ரஜினி வேறு சிலரோட, பாரதிராஜா வேற க்ரூப் கூடன்னு செம டைட் செட்யூல். சளைக்காமல் படம் போயிடுவோம். யாராவது ஒருத்தர் கையில் ஐந்து ரூபா இருந்தா போதும், ரெண்டுபேரா கிளம்பிட வேண்டியது. பஸ் காசு 35+35 , எழுபது பைசா!!! சினிமாவுக்கு ரெண்டு ரூபா, கணக்கு சரியாயிடுச்சா?
யாருக்காவது கெஸ்ட் வந்திட்டு போனால் பாக்கெட் மணி கிடைத்துவிடும், உடனே ஜூட்தான். படம் பார்த்துட்டு வந்து மெஸ்ஸில் வட்ட மேஜை மாநாடு போட்டு படத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசுறது. சில சமயம் பெரிய சண்டையில் போய் முடிஞ்சுடும். பூர்ணிமா ஜெயராம் அழகுதானா இல்லையான்னுகூட சண்டை போட்டு ஒரு மாசம் அறைத் தோழிகூட பேசாமல் இருந்தது கூட உண்டு.
இந்த சந்தோஷமெல்லாம் ,காதல் என்ற மாயாவி பீடிக்கும் வரைதான். அதற்குப் பிறகு சொல்லாமல் சைட்டு கூட சினிமா போறதுதான் தலையாய வேலை. ஒருத்தருக்குத் தெரியாமல் அடுத்தவர் அவங்க அவங்க ஆளுங்ககூட கிளம்பிப் போய், ஒரே தியேட்டரில் முன்னும் பின்னுமாக உட்கார நேர்ந்து அசடு வழியும் நிகழ்ச்சிகள் ரொம்ப சாதாரணமாக நடக்கும்.
எங்க காலத்திலெல்லாம், சினிமா தியேட்டர்தான் காதலர்களின் சொர்க்க வாசல். அநேகமா மருத்துவக் கல்லூரி ஜோடிகள் குறைந்தது பத்தாவது ஒவ்வொரு காட்சியிலும் இருப்பார்கள். இடையிடையே இந்த வாத்தியார்கள் வேறு படத்துக்கு வந்து தர்மசங்கடப் படுத்திடுவாங்க.
படிச்சு முடிச்சு சென்னையில் செட்டில் ஆன காலத்தில்தான் சுகமாக சினிமா பார்த்ததாக தோணுது. அழகா டிக்கெட் புக் பண்ணிட்டு , சுகமா ஆட்டோவில் போய் இறங்கி, நமக்குன்னு நேர்ந்துவிட்ட சீட்டில் உட்கார்ந்து, ஏ.சி. தியேட்டரில் படம் பார்ப்பதே தனி சுகம்தாங்க
.
ஊரிலிருந்து யார் சென்னை வந்தாலும் உடனே படத்துக்கு டிக்கெட் எடுப்பதுதான் முதல் அஜெண்டா. நிறைய நேரங்கள் இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு காலாற மவுண்ட் ரோடிலிருந்து வீடு வரை படம் பற்றி விவாதித்துக்கொண்டே நடப்பது நல்லா இருக்கும். இப்போகூட நான் சென்னை வருகிரேனென்றால் என் தம்பி ,முதல் காரியமாய் சினிமா டிக்கெட் தான் எடுப்பான், ரிட்டர்னுக்கு ட்ரெயின் டிக்கெட் கூட ரெண்டாம் பட்சம்தான்.
இவ்வளவு ரத்தத்தில் ஊறிப் போன சினிமா பார்க்கும் பழக்கம் ஈரோடு வந்த பிறகு ஏன் நசித்துப் போனது? சுகாதாரச் சீர்கேடான திரை அரங்குகள், முன்பதிவு இல்லாத அவலம், குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு புறம் அமரவேண்டிய ஸீட்டிங், இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவு கமர்ஷியல்தனம் நிறைந்த படங்கள்.
அழகிய தீயே; அழகி; தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எல்லாம் இத்தனை அசெளகரியங்களிலும் தியேட்டரில் போய் பார்க்க முடிந்தது அந்த படங்களின் வெற்றிதான்.இவ்வளவுதூரம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப்போனது சினிமா.
யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது. என்னோட எழுத்துக்களிலும், பின்னூட்டங்களிலும் சினிமாவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். என்னால் ஒரு விஷயத்தைப் புரிய வைக்க உதவும் அற்புதமான சாதனம் சினிமா, அதை வெளிக்காட்டிக் கொள்வதில் என்ன தவறு?
தற்போதைய சினிமாக்களை முழுதுமாக உட்கார்ந்து பார்க்க முடிவதில்லை என்பது என் அங்கலாய்ப்பு, அது கூட எனது பார்வையின் கோணம் மாறியதால் இருக்கலாம். இப்போதைய இளைய தலைமுறையை குறிவைத்து எடுக்கப் படும் படங்கள், அடுத்த தலைமுறை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கு தோதாக இல்லாமலிருக்கலாம் என்பதுகூட ஒரு வாதம்தான்.
`மன்மத ராசா மன்மத ராசா’ பாடலை என்னால் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் என் மகன் ` தனுஷ் அண்ணா என்ன அழகா ஆடறாங்க’ன்னு சொன்னப்போ பார்வையின் கோணங்கள் மாறுவது புரிந்தது.
சினிமாவிலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை, வாழ்க்கையின் மாறுபட்ட வடிவங்களை அலசும் ஆரோகியமான மனம் இருந்தால் போதும். சினிமா என்பது சாமான்னியர்களுக்கு எட்டாத கனவு தேசமாக இருந்தபோது அதைத் தலையில் தூக்கி ஆடினார்கள். இப்போது சகலருக்கும் புரிந்த ஒன்றாகி , எவரும் பங்கேற்கலாம் என்ற நிலைமை வந்ததும் அதைத் தரையில் போட்டு மிதிக்கும் பாங்கு பெருகிவிட்டது.
சினிமாவினால் வரும் சீரழிவுகள் சினிமாவிலிருந்தேவா வருகின்றது? அதில் வரும் நிகழ்வுகள் தங்கள் பிரச்னைபோல் இருப்பதால் ஈர்க்கப்பட்டு அதுபோல் செய்தாலென்ன என்று முடிவெடுக்கும் அரை வேக்காடுகளின் அவசர புத்தி. அதுபோன்ற சங்கடங்களை உருவாக்கும் சமுதாயத்தின் முட்டுக் கட்டைகள்.
நாட்டை ஆளும் தலைவர்களையே சினிமா மூலம்தான் இனம் கண்டுகொள்ளும் நிலைமையில்தான் இன்னும் நிறைய சமுதாயங்கள் இருக்கின்றன. அதில் நல்ல விஷயங்களைக் கொஞ்சமாவது சொல்ல வேண்டுமென்ற தார்மீகக் கடமையுணர்வு சேரன் போன்ற சிலருக்காவது இருக்கும்பட்சத்தில், சினிமா நல்ல மீடியம்தான்.
ஆதலினால் நண்பர்களே-
``நிறைய சினிமா பார்த்து
நிறைவாய் விமர்சனம் செய்து
சேருங்கள் சீக்கிரம்
சினிமாக் கிறுக்கர்களின் சபையில்’’
46 Comments:
check msg
சிங்.ஜெயக்குமார்
சினிமாவில் நல்ல விஷயங்களும் நல்லது அல்லாத விஷயங்களும் பொதிந்தே இருக்கின்றதே. வாழை பழம் நல்ல பழம் எங்கே என்று தனி சீப்பாக தேடி கண்டு வாங்குவதுமுண்டு.தாரோடு வாங்கும் பழத்தில் சில அழுகியும் ,நிலை குலைந்துமிருக்கின்றனவே! அதற்காக மற்ற பழங்களை தூக்கி எறியாமல் அழுகி போனதை தவிர்த்துதானே பயன்படுத்துகிறோம்.ஊடகங்களே சினிமாவே சார்ந்துதானே எழுந்து நிற்கின்றன.உங்கள் எழுத்துக்கள் சினிமாவை சுற்றி வந்தாலும் நல்ல கருத்துகளை தங்கி வருகின்றதே! சில ஆண்டுகளுக்கு முன் நண்பரின் மகளிடம் பேசி கொண்டு இருக்கும் போது,உனக்கு என்னவாக ஆசை என்று கேட்ட போது உடனடியாக "கலெக்டர்" என்றாள்.அவள் அவ்வாறு சொல்வதன் மூல காரணம் தேடிய போது "கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம் " சீரியலின் பாதிப்பு. நல்ல விஷயங்கள் குழந்தைகளை போய் சேர்ந்தால் சந்தோஷமே.!
ஜெயக்குமார்,
கிட்டத்தட்ட என் எழுத்தின் அடிப்படையை நீங்கதான் முழுசா உணர்ந்த மாதிரி தெரியுது. கெட்ட விஷயங்களை எதிர் நோக்கும்போதுதானே நல்லவை பற்றிய உணர்வே வரும். How can u get immunized without being exposed?
ila said....
சினிமா என்றுமே அழியப்போவதில்லை என்று நாம் பேசிகொண்டாலும், அதே சமயம் கன்னட படங்களை பார்த்தால் சினிமா கூட தரம் இல்லையெறால் கண்டிப்பாய் அழியும்(கன்னட படங்கள் அழியவில்லைதான்). சில இயக்குனர்கள் மட்டுமே தமிழ் சினிமாவை காப்பாற்ற பிறந்தவர்கள் மாதிரி பேசி கருமம் புடிச்ச மசாலாவை அரைக்க ஆரம்பித்தார்கள், நல்ல வேளை பொங்கலுக்கு வந்த மசாலாக்கள் ஊசிப்போனதில் ஒரு வகையில் சந்தோஷமே.
இளா
தமிழ்சினிமாவை இயக்குனர்களோ நடிகர்களோ காப்பாற்றவில்லை. எவ்வளவு மோசமாக சீரழிக்கப்பட்டாலும் அதன் மீது மாறாக் காதல் கொண்டுள்ள நம் போன்ற கிறுக்கர்கள்தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம்.
`சினிமா இல்லாத் தமிழ்நாட்டில் குடியிருக்க வேண்டாம்’னு புது மொழிகூட இயற்றிடலாம்
cyril alex said
ஸ்டார் பதிவு.
அருமையா எழுதுறீங்க. வாழ்த்துக்கள். பிறக்கும்போதெ நமக்கெல்லாம் சி. கி சபையில் மெம்பர்ஷிப் போட்டாச்சு.
சிரில்
கைநாட்டா பிறந்தப்போவே சப்ஸ்க்ரிப்ஷன் கட்டியாச்சா?
siva said
தாணு! நல்ல மலரும் நினைவுகள். நீங்க சொன்ன மாதிரி 80களிலும் 90களிலும் வந்த குப்பை படங்கள் கூட ஒரு திருப்தியை கொடுத்தது. நிறைய பேசிக்கொண்டே இருப்போம் அதை பற்றி. இப்போ சூப்பர் ஹிட் படமே ஏனோ தானோ என்று தான் தெரிகிறது. நீங்க சொல்றது மாதிரி கோணங்கள் மாறிவிட்டது..நாம எல்லாம் பழைய ஆளுங்களாயிட்டோம் போல. இருந்தாலும் என்னால் பழைய எம்.ஜி.யார் படங்களை ரசிக்க முடிகிறது. அது எப்படி. ம்..ம்...இப்போ உள்ள படத்துல கொஞ்சம் கோளாறு தான் :-)).
சென்னையில் எனக்கு படம் பார்க்க புடிக்காததுக்கு ஒரே காரணம், ப்ளாக்ல டிக்கட் விக்கிறது தான். கடுப்பா இருக்கும். நான் இது வரை ரிசர்வ் பண்ணி போனது இல்லை. நாம எல்லாம் லோக்கல் தான் :-)). ஆமாங்க..ஏதோ ஆங்கில படத்த பார்த்தா தான் படமா...நம்ம ஊர் பாண்டியராஜன் 'ஆண்பாவம்' படம் கூட படம் தாஙக.
குழந்தை வந்தப்புறம் தியேட்டர்ல எல்லாம் படம் பார்க்கிறது கனவா போச்சி :-(. இப்போ வற்ர படத்த டி.விலயே குடும்பத்தோட பார்க்க முடியாது போல...மொத்தமா உக்கார்ந்தோம்னா அவ்வளவு தான். ரொம்ப நெளிய வேண்டிய இருக்கு...காலம் மாறி போச்சிங்க. ம்ம்ம்ம்ம்
//குழந்தை வந்தப்புறம் தியேட்டர்ல எல்லாம் படம் பார்க்கிறது கனவா போச்சி :-(. இப்போ வற்ர படத்த டி.விலயே குடும்பத்தோட பார்க்க முடியாது போல...மொத்தமா உக்கார்ந்தோம்னா அவ்வளவு தான். ரொம்ப நெளிய வேண்டியதிருக்கு// உண்மைதான் சிவா!
வெளிகண்டநாதர் சொன்னது...
//யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை//
சரியா சொன்னீங்க, இது போன்ற விமரிசனத்தை, நானும் அனுபவிச்சதுண்டு, சினிமாவின் தாக்கம் நிறைய இருந்த அந்த நாட்களை இப்போதும் அசைபோட்டு, அதன் விளைவாய் வந்ததே, நான் எழுதி வரும் எனை ஆண்ட அரிதாரத் தொடர்.
வெளிகண்ட நாதர்,
ரொம்ப நாளா ஆளையே காணோம். உங்க சினிமா பதிவுகள் வாசித்திருக்கேன். சமகாலத்திய பார்வை அதில் இருந்ததுபோல் தோன்றியிருக்கு.
பாரதி சொன்னது.....
இன்றல்ல என்றுமே சினிமா என்பது மிகப் பெரிய வியாபாரமாகத்தான் இருந்துவந்துள்ளது. இன்று அதனுடைய எல்லைகள் கடல் கடந்து வியாபித்துள்ளது.
அதனால் சேரன் உட்பட எந்த இயக்குனருக்கும் வியாபாரமே பிரதான நோக்கமாக இருக்கிறது. அதை அவர்களே வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.
மற்ற படி தார்மீகக் கடமை, செய்தி சொல்லுதல் இதெல்லாம் உணர்ந்து செய்யப்படுவதாக எனக்குத் தோன்றவில்லை.
சென்னையில் புதுப்படம் பார்க்கும் பணத்தில் ஈரோட்டிற்கே வந்து திரும்பிவிடலாம், இரண்டு ரூபாய் டிக்கெட்டெல்லாம் காமராஜ் காலம்
இது தயாநிதி மாறன் காலம்...
திரையுலகில் நடப்பது மிகப்பெரிய சூதாட்டம்... நமக்கெதுக்கு அதெல்லாம்,
அப்புறம் பூர்ணிமாவுடைய அழகைப் பற்றி தர்க்கமே வேண்டாம் என்பது அடியேனின் கருத்து.
பாரதி
ஊடகங்கள் எதில்தான் வியாபார நோக்கு இல்லை. பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் சமூக சேவையா செய்கின்றன? எரிகிற கொள்ளியில் எதுதான் சிறந்தது? இருப்பதில் நமக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சேரன் மட்டும் சமூக சேவை செய்ய வந்தால், கண்ணகி பக்கத்தில் சிலையா வைக்கப் போகிறீர்கள்? ஒரு கிழிந்த துDஉம் ஒடுங்கின அலுமினிய டப்பாவும் கொடுத்து கண்ணகியின் காலடியில் பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் (சாரி, கண்ணகி சிலை அகற்றப்பட்டு விட்டதில்லே-காந்தி சிலைன்னு மாற்றிக் கொள்ளவும்).
அவ்வளவு வியாபார உத்திகளுக்கிடையிலும் சில சகிக்கக் கூடிய , ரசிக்கக் கூடிய விஷயங்களைத் தருவதே பெரிதல்லவா? டிக்கெட் விலை அவ்வளவு எகிறிவிட்டதா? தம்பியின் பாக்கெட்டே காலியானதால், அந்தப் பக்கம் அப்டேட்டிங் இல்லை.
பூர்ணிமாவின் அன்ரைய ரசிகருக்கு, இன்னும் அதே க்ரஷ் இருப்பது இன்ரைய செல்லுலாய்ட் கதாநாயகிகளின் தோல்வியைச் சொல்லுகிறது. (பாக்கியராஜ் சாருக்கு ஒரு தனி மடல் போட வேண்டியதுதான்)
பெனாத்தல் சுரேஷ் சொன்னது...
//சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது.//
avarkaLaip pasiththa puli thinnattum!
``நிறைய சினிமா பார்த்து
நிறைவாய் விமர்சனம் செய்து
சேருங்கள் சீக்கிரம்
சினிமாக் கிறுக்கர்களின் சபையில்’’
சுரேஷ்
`அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்’ ரொம்ப அழகா இருக்கு உங்க கமெண்ட்! சீனியர் மெம்பர் இல்லீங்க, founder president!!!!
கல்வெட்டு சொன்னது.....
//படத்தில் தலைவர் விதவிதமா பாவாடை கட்டி வந்த சீன்களை உருக்கமா பார்த்து ரசிச்ச காலம்.//
லொள்ளு
//பஸ் காசு 35+35 , எழுபது பைசா!!! சினிமாவுக்கு ரெண்டு ரூபா, கணக்கு //
அது கி.மு காலமாச்சே....
ம்..ம்.ம்.குத்துமதிப்பா உங்க வயசக் கணக்குப் போடலாமன்னு பார்த்தேன். அப்புறம்தான் தெரிந்தது அது உங்க ஃபுரொபைல் பகுதியிலேயே இருக்குன்னு. :-)))
//சினிமா என்பது சாமான்னியர்களுக்கு எட்டாத கனவு தேசமாக இருந்தபோது அதைத் தலையில் தூக்கி ஆடினார்கள். இப்போது சகலருக்கும் புரிந்த ஒன்றாகி , எவரும் பங்கேற்கலாம் என்ற நிலைமை வந்ததும் அதைத் தரையில் போட்டு மிதிக்கும் பாங்கு பெருகிவிட்டது.//
அதே.
இருந்தாலும் பெரும்பாலான நம்ம தமிழ்ப் படங்களின் அசட்டுத்தனத்தையும் கவனிக்கனும்.
கல்வெட்டு,
சரித்திர கதைகளில் வாத்தியார் கட்டிட்டு வந்த காஸ்ட்யூம்களுக்கு என்ன பேர்னு சொல்லுங்க, நான் பாவாடைன்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்.
கி.மு.ன்னா என்ன-கிழவர்களாவதற்கு முன்னால்னு அர்த்தமா? நான் சினிமாவின் அசட்டுத்தனங்களையும் அசிங்கங்களையுமே பேச வரவில்லை. சினிமா பார்ப்பது பற்றி மட்டுமே எழுதியிருந்தேன். சினிமாவின் அவலங்கள்னு ஒரு பதிவு போடலாம்னும் இருக்கேன்
குமரன் சொல்லியது
தாணு எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டீர்கள். ஆனால் நன்றாய் இருந்தது. சிறுவயதில் நான் அவ்வளவாய் சினிமா பார்த்ததில்லை. வெறுப்பு இல்லை. அதனை விட வாரியார் சொற்பொழிவுகள் இன்டரெஸ்டிங்காக இருந்தது. பள்ளி முடித்த பின் தான் படம் பார்க்கத் தொடங்கினேன். அவ்வளவு தான். அப்புறம் வந்த எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டேன் என்று சொல்லலாம். இங்கே அமெரிக்காவிலும் அப்படித் தான். எல்லாப் படங்களும் VCDயிலோ வீடியோ காசெட்டாகவோ கிடைத்துவிடுகிறதே.
anonymous said....
Ivanga solraangannu cinema paathu KETTU pogaatheenganne!
anonymous said..
//இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது.
//
இன்னொரு சினிமா இரசிகன்
dharumi said
சிறில் அலெக்ஸ் சொன்னதுதான்.
ப்ளாக்கர் மாடரேஷனில் ஏதோ தவறு வந்து கொண்டே இருப்பதால் எந்த பின்னூட்டத்தையும் போஸ்ட் பண்ண முடியவில்லை.
அதனால் மெயிலில் வந்த பின்னூட்டங்களுக்கு பதி மட்டும் எழுதுகிறேன்
--
ராசா(raasaa) said_...
//இவ்வளவு ரத்தத்தில் ஊறிப் போன சினிமா பார்க்கும் பழக்கம் ஈரோடு வந்த பிறகு ஏன் நசித்துப் போனது? சுகாதாரச் சீர்கேடான திரை அரங்குகள்//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. ராயல்.. ராயல்'ன்னு பஸ்ஸ்டான்ட் பக்கம் படு ரொம்ப டீசன்ட்டா, நீட்டா ஒரு தியேட்டர் இருக்குமே.. அங்க போனதில்லையா நீங்க ? ;-)
vaa. manikandan said
கோபியில் இருந்திருக்கீங்களா? இப்போ? நான் கோபிதான். இப்போ கோபி எப்படிங்க இருக்கு? வந்து ஆறு மாசம் ஆச்சு!கோபிய கேட்டதா சொல்லுங்க மேடம்.
G.Ragavan said....
சினிமாவா....எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சினிமாப் பைத்தியத்தனம் இப்ப வந்ததில்லை...கூத்து கீத்து பாத்தவங்கதான் இப்ப சினிமாவுல கெடக்காங்க.
எனக்கும் சினிமா பிடிக்கும். ஆனா சின்னப்பிள்ளைல சினிமாவுக்கு ரொம்பக் கூட்டீட்டுப் போக மாட்டாங்க.
பக்கத்து வீட்டுப் பசங்கள்ளாம் சினிமாவுக்குப் போவாங்க. நான் உக்காந்து அழுவேன்.
அப்ப ஒரு பழைய படம் தூத்துக்குடி சார்லஸ் தேட்டர்ல வந்துச்சு. பழைய படம். சாமிப்படமுன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் அந்தப் படத்துக்கு என்னைய அனுப்புனாங்க. அந்தப் படம் சரஸ்வதி சபதம். அந்த வருசம் முதல்மரியாதை படம் வந்துச்சு நெனைக்கிறேன். அந்தப் படத்துக்கு எங்க வீட்டுல, பக்கத்து வீட்டுல, அடுத்த வீட்டுலன்னு எல்லாரும் போன நினவு இருக்கு. அதுவும் சார்லஸ்தான். போய் டிக்கெட் எடுத்திட்டு நேரம் இருந்ததால அபிராமி டெக்ஸ்டைல்ஸ் பக்கத்துல இருக்குற ஓட்டல்ல எல்லாரும் வெங்காய பஜ்ஜி வாங்கிக் கொடுத்தாங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு.
அது மட்டுமில்லாம முதல் மரியாத படத்துக்குதான் எனக்குத் தெரிஞ்சி வீட்டுல ரெண்டு வாட்டி பாத்தோன்னு நெனைக்கிறேன்.
குமரன்,
சினிமாவிலாவது ஜனரஞ்சகமா பார்ப்பீங்களா, அதிலும் ஆன்மீகம்தானா?
ananymous அன்பரே,
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை படம் பார்க்கிறீங்கண்ணு எனக்குத் தெரியும்.
ப்ரித்விராஜ் படம் முழுசா பார்த்தாச்சா?
ராசா,
இந்தக் கிண்டல்தான் வேணாங்கிறது. ராயல் தியேட்டர் உள்ளே போயிருக்கீங்களா?
மணிகண்டன், கோபிக்காரரா நீங்க? கொடிவேரி பத்தி கொஞ்சம் உல்ட்டா சேர்த்து எழுதணும்னு இருந்தேன், இப்போ பிரச்னையாயிடுச்சே!
ராகவன்,
சார்லஸ் தியேட்டர் இன்னும் அப்பிடியேதான் இருக்குதா?
எங்க வீட்டுல ரொம்ப பார்த்து பார்த்து தான் சினிமாவுக்கு கூட்டிட்டு போவாங்க. படத்துல என்ன இருக்கு எப்படி பட்ட படம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு நல்ல படம்னா மட்டும் தான் பார்க்கறது. ஆனா நான் பார்த்த அந்த நல்ல படங்கள் லிஸ்ட்ல கல்யாண அகதிகள்,அவள் ஒரு தமிழச்சி போன்ற படங்களும் அடக்கம். அந்த வயசுல அந்த படத்தையெல்லாம் பார்த்து ஒன்னும் புரியலைனாலும், இப்ப அந்த படங்களைப் பார்க்கணும்னு ஆவலா இருக்கு. குறிப்பா நல்லா நடிக்கக் கூடிய நடிகைகள் படம்னா பார்க்கறதுக்கு இன்னும் ஆர்வம். சரிதா,ரேவதி,அர்ச்சனா இவுங்க எல்லாம் நம்ம வயசுக்கு ஆண்ட்டிங்க தான்னாலும், நல்லா 'emote' பண்ணக் கூடியதால் அவங்க நடிப்பும் அவங்க படங்களையும் பார்க்க இன்னிக்கு வரைக்கும் புடிக்கும்.
இப்ப இருக்குற படங்கள்ல காட்டுக் கத்தலும் அளவுக்கதிகமான ஹீரோயிஸமும்,நடிகைகளுக்கு 'நடிக்க' வாய்ப்பில்லாமை இருக்கறதுனால அதை பத்தி பெரிய அபிப்ராயம் ஒன்னுமில்லை. சேரனோட படங்கள் ஒரு விதிவிலக்கு. வட இந்தியாவுல இருக்குறதுனால இப்ப சுத்தமா எந்த தமிழ் படமும் பார்க்க முடியறது இல்லை(டிவியைத் தவிர). எனக்கு தெரிஞ்சு நல்ல படங்கள்னா, பார்த்து அதுக்கு ஆதரவு குடுக்கனும். குப்பை படமா இருந்தா நமக்கு பிடிச்ச நடிகரோட படமா இருந்தாக் கூட அதுக்கு உரிய இடத்தை மட்டும் தான் குடுக்கனும்.
சினி கிறுக்ஸ் சபாவின் சின்னவயசு முதலே
நானும் ஓர் அங்கத்தினன் தான்.
என்ன எம் ஜி யார் சினிமா ஏனோ பிடித்துப்போனது.
[பாடல்கள் என நினைக்கிறேன்]
அதற்காக மற்றபடத்தையும் விட்டு வைத்ததில்லை.
எந்தப்படத்தையும் அந்தந்த ரசிகருடன் சேர்ந்து பார்க்கும்
போது படம் நன்றாக உள்ளதாகதோணும்.
கைப்புள்ள,
சரியாகச் சொன்னீங்க! ஹீரோயிசம் இல்லாமல் பெண்கள் நல்லா நடிச்ச படங்கள் இன்னும் வரவேற்கத்தான் படுகிறது.
`கோகுலத்தில் சீதை', `கல்கி' போன்ற படங்கள் இப்போவும் நல்லாத்தான் இருக்குது!
நீங்க டிவியில் மட்டும் பார்க்க முடிகிற பட்சத்தில், அரதப் பழசு, அறுவைகள்தான் மறுபடி, மறுபடி பார்க்க முடியும்.
சித்தன்,
எந்தப் படமும் நாம் பார்க்கிற சூழல், மற்றும் துணையைப் பொருத்து ரசனையே மாறிவிடும்.
சமீபத்தில் `அன்பே சிவம்' தியேட்டரில் ,ஒரு டைப்பான கூட்டத்துடன் பார்த்தேன், பிடிக்கவே இல்லை1
மறுபடி சமீபத்தில் சிடியில் பார்த்தபோது, மிக அற்புதமாக இருந்தது. அன்னைக்கு ஏன் பிடிக்காமல் போச்சுன்னு புரியவே இல்லை!
//குமரன்,
சினிமாவிலாவது ஜனரஞ்சகமா பார்ப்பீங்களா, அதிலும் ஆன்மீகம்தானா?
//
தாணு, என்ன அப்படி கேட்டுட்டீங்க? ஆன்மிகம் தானே இப்ப ஜனரஞ்சகம்? :-) ஓ...அதெல்லாம் ஆன்மிகம் கிடையாதா? ஆன்மிகம் மாதிரி வர்ற மூட நம்பிக்கைக் கதைகளா? :-)
படம் பாக்க ஆரம்பிச்சதில இருந்து கழிசடையில இருந்து எல்லாப் படத்தையும் பாக்குறது தான். ஆதி, சரவணா, பரமசிவன் தான் இன்னும் பாக்கலை.
தாணு
எனக்கும் சினிமா ரொம்பப் பிடிக்கும். ஆனா உண்மையாகவே இப்போ தமிழ்ப்படமெல்லாம் உக்காந்து பார்க்கமுடியலை -அநியாயத்துக்கு அரைச்சு ஊத்தின மசாலாவா இருக்கு. அவங்க பஞ்ச் டயலாக்கும் அலட்டலும் படம் பாக்கற ஆசையே போயிருச்சு.
கருப்பு வெள்ளை பாலச்சந்தர் படங்கள் எப்போது பார்த்தாலும் நல்லா இருக்கறமாதிரி எடுக்கறது ரொம்பக் குறைஞ்சுபோச்சு. சேரன் படங்களை வேணும்னா அந்த வரிசையில சேர்க்கலாம்னு நெனக்கிறேன்.
"கல்கி' போன்ற படங்கள் இப்போவும் நல்லாத்தான் இருக்குது!"//
-என்னங்க தாணு இது??!!
ஆண்டவா என்னப்பா உன் சோதனை?!கே.பி.யின் சில கொடுமைகளில் இது பெருங்கொடுமை - என்னைப் பொறுத்தவரை.
குமரன்,
உங்க லிஸ்ட் கூட ஆன்மீகமாகத்தான் இருக்கு! எங்க ஊர்லேயெல்லாம் சிடி கிடைப்பதில்லை, அதனால் ரெண்டு மூணு மாசம் கழிச்சுதான் பார்க்க முடியும்.
நிலா,
சரியாகச் சொன்னீங்க! பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளைப் படங்கலுடன், ரஜினியின், `தம்பிக்கு எந்த ஊர்’ போன்ற காமெடி மசாலாக்களும் மறுபடி பார்க்க முடியுது, புதுப் படங்கள் தூங்க வைக்குது. அதிலும் தற்போதைய படங்களில் தென்படும் ஆபாசமான body language தான் ரொம்ப கடுப்பேத்தறதா தெரியுது! கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்குமுள்ள எல்லைகள் மீறப்படுவதால் வரும் திணிப்பு.
தருமி,
கே.பி.யின் பெருங்கொடுமை என்று எப்படிச் சொல்றீங்க. ஒரு விவாதத்துக்குரிய பெண்ணை சித்தரிப்பதால் அது ஏற்றுக் கொள்ளப் படாததா? அப்படீன்னா `சிந்து பைரவி’ சிந்து கூடத்தான் அதே கோனத்தில் சித்தரிக்கப் பட்ட பெண். அதில் காதல் என்னும் கோணம் தாங்கி வந்ததால் அதை நியாயப் படுத்துவீர்களா?
எனக்கு அந்த கதாபாத்திரத்தின் மேல் வரும் விவாதங்களை விட, ஐந்து கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தின்படி, கதையை மிக இயல்பாகச் சொன்ன கே.பி. மீது ரொம்ப ஒட்டுதல்! கல்கி படம் ஏழெட்டு தரம் பார்த்துவிட்டேன். அந்தப் பெண் பாத்திரமும், விவாதத்திற்குரியதே தவிர வெறுக்கப்பட வேண்டியதல்ல! பரஞ்சோதி போன்ற இளைஞர்கள் நிறைய வரவேண்டும், உடலைப் பார்க்காமல் மனதைக் காதலிக்கும் தலைமுறை!!!
ஜோ / Joe has left a new comment on your post "சினிமாக் கிறுக்கர்கள் சபை":
தாணு,
முன்னாள் சி.கி.ச உறுப்பினர் என்ற முறையில் ரொம்ப பிடிச்சிருந்தது இந்த பதிவு.
சினிமா கிறுக்குலயும் நான் கொஞ்சம் வித்தியாசம் தான்..திருச்சில படிக்கும் போது ஞாயிறன்று எல்லா பசங்களும் சிப்பி தியேட்டரில் ஆங்கில படத்துக்கோ ,அல்லது வேறு புதுப்படத்துக்கோ போகும் போது ,சந்து பொந்துகளில் இருக்கும் பழைய தியேட்டைகளை கண்டுபிடித்து கருப்பு வெள்ளை சிவாஜி படங்களை தனியாக சென்று பார்த்தவன்.
இப்போ பல படங்களை தியேட்டர் சென்று பார்ப்பதில்லையென்றாலும் ,சேரன் ,கமல் போன்ற சிலரின் படங்களை தியேட்டரில் மட்டும் தான் போய் பார்ப்பது என கொள்கையே வைத்துள்ளேன்
ஜோ
உங்கள் பின்னூட்டம் இப்போது மாடரேஷனில் போட்டாலும் வர மாட்டேங்குது, அதுதான் பேஸ்ட் பண்ணிட்டேன்.
கறுப்பு வெள்ளை படங்கள் இப்போதும் நன்றாகத்தான் இருக்குது.
தாணு,
முன்னாள் சி.கி.ச தீவிர உறுப்பினர் என்ற முறையில் ரொம்ப பிடிச்சிருந்தது இந்த பதிவு.
என்னோட காலேஜ் சகா ஒருதனோட அப்பா பிலிம் டிஸ்ட்டிபுடர் & தியெடர் ஓனர்.
India இருந்த வரைஅது ஒரு காலம் :-)))
கார்த்திக்
முன்னாள் உறுப்பினர் எதுக்கு, எப்பவுமே உறுப்பினராக இருங்க.
தாணு,
எனது சினிமா பார்வை கோணம் மாறியதாக கருதுகிறேன்.
கார்த்திக்
கோணம் மாறுவது, படைப்புகளின் தரத்தையும் , நமது வளர்ச்சியின் முதிர்ச்சியையும் பொறுத்து மாறிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் ரசனை என்பது அப்படியேதான் இருக்கும்
Post a Comment
<< Home