அலை-3
அலை – 3
”பெயர்” என்பது
ஒருவரோட அடையாளம். அதை நக்கலடிப்பது, புனை பெயர் வைத்து அழைப்பது எல்லாம் ஏதோ ஒருவகையில்
அவர்களைக் காயப் படுத்தலாம், இயல்பாக ஏற்றுக் கொள்ளவும் படலாம்.
எல்லா குழந்தைகளுக்கும்
அம்சமான பெயர் வைத்துவிட்டு , கூப்பிட மட்டும் புனை பெயர் ( பட்டப் பெயர்) வைப்பது
அந்தக்கால வழக்கம். எங்க வீடும் அதற்கு விதி விலக்கல்ல. ஆசை ஆசையா தாத்தா பெயர், ஆச்சி
பெயரெல்லாம் வைச்சிடுவாங்க. ஆனா அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க, மரியாதைக்
குறைவாம். ஒவ்வொருத்தருக்கும் கச முசன்னு புனை
பெயர், அதுக்கு ஒரு கதை!
மூத்த அண்ணனுக்கு
அப்பாவோட அப்பா பெயர் ராம்குமார் (குமாரசாமி தாத்தா),அம்மாவால் கூப்பிட முடியாதாம்
, மாமனார் பெயராச்சே ! அதனால் ”துரை” ஆனான். ஆனால் அவனுக்கு வெள்ளைக்கார துரைன்னு நினைப்பு.
செம மிலிட்டரி தோரணை. அவன்கிட்டே அடிவாங்காத பொடிசு கிடையாது. எதாவது வேலை சொல்லி செய்யாட்டி
தொரண்ணன் கிட்டே சொல்லவா என்பதுதான் அம்மாவின் அஸ்திரம். கிடுகிடுன்னு வேலை ஆயிடும்.
மரகதம் அக்காவுக்கு
அப்பாவோட அம்மா பெயர். அதனால் நல்லக்கா ஆனாள். ஆனால் அவள் அப்போ எங்களுக்கு கெட்ட அக்கா.
மிலிட்டரியின் மகளிர் அணி. எங்க அப்பா யாரையும் அடித்தது இல்லை, அதட்டி திட்டியது கூட
இல்லை. அண்ணனும் அக்காவும்தான் எங்களோட சட்டாம் பிள்ளைகள். அக்கா கல்யாணம் ஆகி போனப்புறம்
கூட விடுமுறைக்கு வரும் போதுகூட மிலிட்டரி ஆட்சி தொடங்கிடுவாள். அவள்கையில் வெண்கல
அகப்பையுடன் நின்ற நாட்கள் லேசா நினைவுக்கு வருது.
மூணாவது அக்கா
ரொம்ப சாது , சுடலை வடிவு , அப்பாவோட பெரியம்மா பெயராம். அவ்ளோ நீளமா கூப்பிட முடியாமல்
நாங்களெல்லாரும் சேர்ந்து ”சொள்ளி” (சுடலி மருவியது) ஆக்கிட்டோம். சுடலின்னு சொல்றது
கொஞ்சம் ஸ்டைலாக இல்லாதது போல் நினைச்சுட்டு அவளைக் கட்டிக்குடுத்த ஊர் பெயர் சொல்லி
ஸ்ரீவைகுண்டத்து அக்கா ஆக்கிட்டோம். எங்க வீட்லேயே படிக்க மறுத்து வீட்டுக்குள் முடங்கிக்
கொண்ட ஒரே பெண், அஞ்சாம் க்ளாஸ் தாண்டலை. அம்மாவுக்கும் உதவிக்கு ஆள் தேவைப்பட்டதால்
சந்தோஷமாக அதை அங்கீகரித்துவிட்டாங்க.
நாலாவது பொண்ணு
சரஸ்வதி பூஜை அன்று பிறந்ததால் சரஸ்வதி. அவளுக்கு பட்டப்பெயர் கிடையாது, நாங்களே சுருக்கி
”சச்சு” ஆக்கிட்டோம். பெயருக்கேற்றாற் போல் தமிழ்ப் பண்டிதை ஆனவள். காயல்பட்டிணத்தின்
முக்காடு தேவதைகளின் தமிழ் அன்னை !! இப்போதைய எங்களின் தமிழ் அறிவுக்கும் பற்றுக்கும்
அக்காவும் காரணம்.
ஐந்தாவது அண்ணன்
சிவகாமி நாதன். என்ன காரணத்தாலோ அவனுக்கு ”செக்கன்” என்ற பட்டப் பெயர் வந்துவிட்டது.
செக்கண்ணன்னு கூப்பிட்டால்தான் எங்களுக்கும் இனிமையாக இருக்கும். கிராம நிர்வாக அலுவலராக
திருச்செந்தூரில் அண்ணன் பணியாற்றிய சமயம், என் கொழுந்தன் ( brother-in-law-
Ezhil’s brother)அவன் மனைவி இருவரும் ஏதோ வேலையாக அண்ணனைத் தேடிச் சென்றிருக்கிறார்கள்.
அங்கிருந்தவர்களிடம் Mr. செக்கன் இருக்காங்களான்னு கேட்டிருக்காங்க (அதுதான் அண்ணனின்
உண்மைப் பெயர்னு நினைச்சிருக்காங்க).அங்கிருந்தவங்க ஒரு மாதிரி முழிச்சாதும் தப்பான
பெயர் சொல்லிட்டோம் போலன்னு நினைச்சு Mr. செக்கார் இருக்காரான்னு ‘மரியாதையாய்” கேட்டிருக்காங்க.
மறுபடியும் எதிரில் இருந்தவங்க ஒரு மாதிரி பார்த்ததும் ஏதோ தப்புன்னு புரிஞ்சுட்டு
வெளியே வந்துட்டாங்க. தற்செயலா அங்கே வந்த அண்ணன் அவங்களுக்கு வேண்டிய உதவி செய்தது
தனிக்கதை. இன்னைக்கும் Mr. செக்கார் கதை அடிக்கடி குடும்ப கூடுகைகளில் அசை போடப்பட்டு
ரசிக்கப்படும்.
ஆறாவது அண்ணன்
ஆறுமுக நயினார். அம்மாவின் தாய் மாமாவின் பெயராம். அவர் பூந்தி கடை வைத்திருந்ததால்
அவர் பூந்தி தாத்தா, அண்ணன் பூந்தி அண்ணன். நான் சின்ன வயசா இருந்தப்போ எல்லாம் அந்தப்
பட்டப் பெயரில்தான் கூப்பிட்டு இருக்கேன்.ஆனால் எதனாலோ அந்த பெயர் வழக்கொழிந்து போய்விட்டது.
அண்ணனின் அறிவுக்கூர்மையும், அப்பாவுக்கு அடுத்தபடி வந்துவிட்ட நிதானமும், கம்யூனிஸ்ட்
கொள்கைகளும் அவனை வேறு படுத்திக் காட்டியதால் புனைபெயர் மறைந்து நயினாருடன் நின்றுவிட்டது.
பூந்தி நாவிலேயே கரைந்துவிட்டது.
ஏழாவது பொண்ணுதான்
நான், இரந்தாலும் கிடைக்காதாம். எங்கம்மா அடிக்கடி சொல்லிக்குவாங்க. எங்க ஆச்சிக்கு
சுசீந்திரம் பூர்வீகம். தாணுமலையன் சாமி பெயர் அவங்களுக்கு, தாணு அம்மாள். எனக்கு முன்னாடி
ஒன்றிரண்டு பேருக்கு அந்தப் பெயர் வைத்து
, மருவி தாயம்மாள் ஆகிவிட்டதாம். அதனால் எனக்கு மொட்டையா ’தாணு’ ன்னு வைச்சுட்டாங்க.
(தாணு என்பது ஆண்பிள்ளை பெயர்- சிவன் என்று பொருள்) அப்படி பேர் வைச்சதாலோ என்னமோ யாரும் என்னைத் திட்ட
முடியாது, அடிக்க முடியாது. பெரிய பிஸ்தாவெல்லாம் கிடையாது,ஆனால் பயங்கர கோபக்காரி,
ரோஷம் ஜாஸ்தி. ஏன் என்று கேள்விகேட்டால் கூட கோபத்தில் கிணத்துக்குள்ளே குதிக்கப் போற
ஆளு ( பேர் வைச்சதுக்கு ஏற்ப ருத்ர தாண்டவம்தான்) எதுக்கு இவ வம்புன்னு என்னை யாரும்
அதிகமா திட்றதில்லே.
என்னை அதிகமா கடுப்பேத்தறதும்
சண்டை பிடிக்கிறதும் கடைக்குட்டி தம்பி, எட்டாவது மேதை , நாராயணன்தான். அவன் பெயர் எங்க சின்னதாத்தா பெயர்
என்பதால் செல்லமா “பட்டு”ன்னு கூப்பிடுவாங்க. எனக்கு சின்ன வயசுலேயே ”தன்வந்திரி” ன்னு
பட்டப் பெயர் வைச்சவனும் அவன்தான். அப்போவே நான் டாக்டர் ஆவேன்னு தெரிஞ்சு அந்தப் பெயர்
வைச்சிருப்பானோ? எட்டாவது மேதையாச்சே! அது தெரியாமல் அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டால்
கடுப்பாயிடுவேன். அதனாலேயே ரெண்டுபேருக்கும் எப்போதும் குடுமிப் புடிதான். ஆனால் அவன்
பேர் வைச்சது ஆழ் மனதில் பதிந்துதான் டாக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்குமோ? இருக்கலாம்.
இந்த எட்டு பேருக்கே
இத்தனை பெயர் இருக்கே , 76 பேருக்கும் எத்தனை பெயர் இருக்கும்? ஆரம்ப காலங்களில் எழிலுக்கு
எல்லார் பெயரும் சரியா நினைவிருக்காது, மெதுவா கூப்பிட்டு எந்த நம்பர் வீட்டு குட்டின்னு
கேட்டுக்குவாங்க. (இப்போ எல்லோரும் வளர்ந்திட்ட
பிறகு ரொம்ப ஒட்டுதலாயிட்டது வேறுகதை.)
எல்லாருக்கும்
பட்டப் பெயர் இருந்தாலும் எனக்கு மட்டும் இன்னொரு பெயரும் சேர்ந்துகிடுச்சு, தாணு
– ’நான்சி தாணு’ ஆயிட்டேன். இந்தப் பெயர் வந்ததுக்கும் ஒரு கதை இருக்கு. சர்ச்-லே கல்யாணம்
பண்ணுவதாக இருந்தால் அதற்கு ஒரு பெயர் தேவைப்பட்டது. எழில் எப்பொழுதும் என்னை எந்த நிர்ப்பந்தமும் செய்ததில்லை.
என்னையே ஒரு பெயர் தேர்வு செய்யச் சொன்னாங்க. அப்போதுதான் “ராஜ பார்வை” படம் வந்த புதுசு,
அதிலே மாதவியோட , நான்சி கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சிருந்ததால், அந்த பேரையே தேர்வு
செய்திட்டேன். அந்தப் பெயருக்குள்ள மவுசு இப்போதான் நல்லா தெரியுது. அயல்நாட்டு பயணங்களில்
இந்தியப் பெயர்களை உச்சரித்து கொலை செய்யும்போது, என் பெயர் மட்டும் ஈஸியாக கடந்து
போயிடும். கடல் கடந்து ஊர் சுற்றுவேன் என்று அப்போதே தெரிந்திருக்கிறது. ஆறுமுகநேரியில்
பிறந்துட்டு அமெரிக்கா போவேன்னு அன்னைக்கு யாராவது சொல்லியிருந்தா கண்டிப்பா நம்பியிருக்க
மாட்டேன்.
”காலங்கள் மாறினாலும்
கடல் கடந்து பறந்தாலும்
வேர்கள் மட்டும்
தென் தமிழகத்தில்தான்”
0 Comments:
Post a Comment
<< Home