அலை -2
இன்று எங்கள் குழுமத்தில்
தோழி விசாலாட்சி “இட்லி” பற்றிய கவிதை ஒன்று போட்டிருந்தாள்.
உடனே ஆறுமுகநேரி ( நான் பிறந்து வளர்ந்த ஊர்) சந்தைக்கடை ( எங்கள் வீடு வாரச்சந்தையின்
முகப்பில் இருக்கும்) வீட்டில் இட்லியோடு வாழ்ந்த காலங்கள் கண்முன்னே!
காலையில் எத்தனை
மணிக்கு அம்மா எழுந்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நாங்க கண் முழிக்கும் போது
ஆவி பறக்கும் இட்லிகள் வாழை இலையில் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும். பெரியண்ணன் ஏழு
மணிக்குள் DCW ஆலைக்கு வேலைக்கு செல்ல வேண்டும். என்ன புயல் மழை என்றாலும் அந்த காலை
வேளையிலேயே நாலைந்து இட்லிகளைச் சுடச் சுட அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவான். வேட்டியை
மடிச்சு கட்டிகிட்டு கக்கத்தில் ஒரு தோல் பையை இடுக்கிக் கொண்டு அண்ணன் செல்வது தடையில்லா
பாங்கு. அவன் விடுமுறை எடுத்ததாகவோ சோம்பிப் படுத்திருந்ததாகவோ பார்த்த நினைவுகள் அரிது.
சரி ! இட்லி ஆறிடப்போகுது.
அடுக்காளை ( அடுப்பங்கறையின் சொல் வழக்கு) க்குப் போவோம். அண்ணன்கள், நான் , தம்பி
எல்லாரும் ஒரே பள்ளிக்கூடம் என்பதால் ஒரே நேரத்தில் கிளம்பணும். முந்தி கிளம்பினவங்க
தப்பிச்சாங்க, பின்னாடி வந்தவங்க மாட்னாங்க. இட்லி காலியாகிக் கொண்டிருக்கும். எங்க
வீட்லே யாருக்கும் எண்ணிக்கையில் இட்லி சாப்பிட்டு பழக்கமில்லை , கொப்பரைதான் அளவு.
(ஒரு ஈடு, ரெண்டு ஈடுன்னு சொல்லுவாங்களே அது தான் கொப்பறை) கிட்டத்தட்ட 15 இட்லிகள்
இருக்கும். ஒரு கொப்பரையோட எழுந்துட்டா, அடுத்தவன் தப்பிச்சான். ஆறின இட்லி பாத்திரத்தில்
இருக்கும்,ஆனால் ஆவி பறக்க இருக்காதே! (அப்பவே காஞ்சனா, முனி 1,2 எல்லாம் எங்க தோஸ்த்துங்க).
இட்லிக்கு தொட்டுக்க
எங்கம்மா ஒரு தேங்காய் சட்னி செய்வாங்க பாருங்க..இப்போதான் அது பேர் தேங்காய் சட்னின்னு
தெரியுது. அப்போல்லாம் அது பேர் ”லைன்” சட்னி.
உலகத்துலே வேறே எங்கேயும் கிடைக்காது. எங்கம்மா கைப்பக்குவம் அப்படி. அரை மூடி தேங்காய்
வைச்சு 20 பேருக்கு சட்னி செய்வாங்க பாருங்க! புளி காரம் உப்பு எல்லாம் தூக்கலா போட்டு
நல்லா தண்ணியா சட்னி கரைச்சு கொதிக்க வைச்சு கொஞ்சம் தோசை மாவை அதுலே கரைச்சு, கொழு
கொழுன்னு ஒரு சட்னி வருமே, இப்போ நினைச்சாலும் நாக்குலே எச்சில் ஊறுது.
கல்யாணமான புதுசுலே
சட்னியில் மாவு கரைக்கிறதுன்னு சொன்னவுடனே எழில் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க. அதோட
எங்க வீட்லே லைன் சட்னி கதை முடிஞ்சுது. அப்பப்போ நான் மட்டும் கொஞ்சமா லைன் சட்னி
செஞ்சுக்குவேன். ஆனாலும் அம்மாவின் கைமணம் ஒருநாளும் வரமாட்டேங்குது. என்னோட பொண்ணுமட்டும்
அப்பப்போ என்கூட லைன் சட்னிக்கு ஆதரவு தருவாள். என்னைக்காவது சட்னி கொஞ்சம் தண்ணியா
இருந்தால் எழில் இளக்காரமா , இன்னைக்கு லைன் சட்னியான்னு கேட்பாங்க.
மறுபடியும் சந்தக்கடைக்குப்
போவோம்! சட்னிக்கு பதில் சாம்பார் இருந்தாலும் அதற்கும் அதே தலைவிதிதான். ஒரு மானிப்படி
பருப்பில் பெரிய சட்டி நிறைய சாம்பார் வைச்சிடுவாங்க. லைன் சாம்பார்தான். இப்போ தோசை
மாவுக்கு பதிலா கடலை மாவு. அதுக்குன்னு ஒரு சாம்பார் பொடி செஞ்சிருப்பாங்க. கடலைப்
பருப்பு, அரிசி எல்லாம் வறுத்து பொடி பண்ணினது. ரெண்டும் கலந்து சாம்பார் சும்மா கொழு
கொழுன்னு மணமா இருக்கும். எங்கேயாவது அத்தி பூத்த மாதிரி ஏதாச்சும் காய் தெரியும்.சாம்பாருக்கு
தொட்டுக்கொள்ள முளகாப்பொடி (இட்லிப்பொடி) கிடைக்கும்.அது இன்னும் காரமாக இருக்கும்.
நாங்க எல்லாம்
கொப்பரைகளை முழுங்கிட்டு பள்ளிக்கூடத்துக்கும் இட்லி எடுத்துட்டு (மதிய உணவு) போனபிறகு
அப்பா மெதுவாகத்தான் சாப்பிட வருவாங்க. அப்பாவுக்கு மட்டும் அம்மா கெட்டிச் சட்னி எடுத்து
வைச்சிருப்பாங்க அமிர்தமே சமைச்சாலும் , அரைகுறையா சமைச்சாலும் அப்பா சாப்பிடுவது எண்ணி
ரெண்டு இட்லிதான். எனக்கெல்லாம் அப்போது ஆச்சரியமாகவே இருக்கும். எப்படி வயிறு நிறையுமென்று?
ஆனால் இன்று புரிகிறது. நாமெல்லாம் அப்பாவின் வயது வந்தவுடன் ரெண்டு இட்லி சாப்பிடும்
குழுமத்தில் இணைந்துவிட்டோமே!! உள்ளங்கையில் எச்சில் படாமல் விரல் நுனியால் அப்பா சாப்பிடும்
வித்தைகூட புரியாத புதிர்தான்.நாங்களெல்லாம் லைன் சட்னியில் இட்லியை மிதக்கவிட்டு குழப்பி
அடிக்கும்போது சில நேரங்களில் மணிக்கட்டு தாண்டி சட்னி வழியுமே, மிக சத்தான காலம் அது!!
.
அடுப்படி வேலைகளை
முடித்துவிட்டு அம்மா சாப்பிட உட்காரும்போது நிறைய நேரங்களில் இட்லி இருப்பதில்லை.
வழிச்சு ஊத்தின இட்லின்னு சொல்லுவோம். மாவு சட்டியைக் கழுவப்போடும் முன்பு அதிலுள்ள
கடைசி மாவில் செய்யும் இட்லி, கொஞ்சம் கடினமாகவும் அளவற்றதாகவும் இருக்கும். அதுதான்
அம்மாவின் சாப்பாடு. அடிக்கடி காபி குடித்தே வேலைகளில் மூழ்கிப் போவதுதான் வாடிக்கை.
காலையில் உள்ள
இட்லி மீந்துபோனால் உப்புமாவெல்லாம் கிளறித் தர மாட்டார்கள். ”கிளற வேண்டாம், அப்படியே
சாப்பிடலாம்” தான். சட்னி சாம்பார் எதுவும் இல்லாதபோது “சுண்டக்கறி” ( மீந்து போன குழம்பு
காயெல்லாம் போட்டு சுண்டவைத்திருப்பார்கள்) இருக்கும்.
இட்லி தோசை தவிர
பூரின்னு சொல்லுவாங்களே ,அதெல்லாம் தீபாவளிக்கு மட்டும்தான். அது பலகார வகையில் சேர்ந்திடும்.
சப்பாத்தி என்பது ராயல் க்ரூப். வெளிநாட்டுக்காரர்களை வேடிக்கை பார்ப்பது மாதிரி. என்னைக்காவது
சப்பாத்தி செய்ய ஆரம்பித்தால் பெரிய களேபரமாக இருக்கும். பிசைவது, உருட்டுவது, தேய்ப்பது
என்று ஆளாளுக்கு ஒரு வேலை உண்டு. கறி மசாலா வாசனை வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஒரே
நாளும் அதுதான். பரோட்டா என்ற வார்த்தையோ பொருளோ என்னவென்றே தெரியாத நாட்கள் அவை.
சிக்கனத்தைப் பிள்ளைகள்
கூட உணராத வகையில், எட்டு பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு
வர, பலவிதமான வித்தைகளை கைவசம் வைத்திருந்த எங்க அம்மாவைவிட பெரிய பொருளாதார மேதை யாருமில்லை.
(கட்டுரைக்காக அவர்கள் இவர்கள் என்று எழுதினாலும் அம்மா , அண்ணன்கள், அக்காக்கள் அனைவரையும்
நீ வா போ என ஒருமையில் அழைத்தே வளர்ந்துவிட்டோம். இடையிடையே அது கட்டுரையிலும் பிரதிபலிக்கலாம்.
மரியாதைக் குறைவால் அல்ல, மனதுக்கு மிக அருகே இருப்பதால்)
என்றென்றும் அன்புடன்
தாணு
26/08/2020
.
0 Comments:
Post a Comment
<< Home