அலை-7
அலை-7
“ தண்ணீர் தண்ணீர் ” என்று ஒரு படம் வந்தது. தண்ணீர் கஷ்டத்தைப் பற்றித்தான் இருக்குமென்று போனால், கதையின் கருவே வேறு. ஆனால் தண்ணீர்க் கஷ்டத்தை நிஜ வாழ்வில் தெரிஞ்சுக்கணும்னா ஆறுமுகநேரிக்கு வரணும்.
எட்டு குழந்தைகளைக் கொண்ட வீட்டில் சொட்டுத் தண்ணீர் வேண்டுமென்றால் கூட ரொம்ப கஷ்டப்பட்டுதான் பெறணும்.
கடற்கரையை ஒட்டிய கிராமம் என்பதால் கிணறுகளில் கிடைப்பது உப்பு நீராகவே இருக்கும். குடிக்கவோ சமைக்கவோ உதவாது. குளிக்கவும், துணி துவைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் அந்த உப்பு நீரையே கொண்டு வருவோம். எங்க வீட்டு முற்றத்திலேயே சின்ன கிணறு உண்டு , அது மகா உப்பாக இருக்கும். வாசல் தெளிக்க மட்டுமே பயன்படும். அவசரத்துக்கு பாத்திரங்கள் அலம்பலாம்.
சந்தையின் குறுக்கே சென்றால் இன்னுமொரு கிணறு சற்று ஆழமாகவும் கொஞ்சம் உப்பு குறைச்சலாகவும் இருக்கும். அதிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் வேலை வழக்கம்போல பெண்களுக்கு. ஒரு குடம் ரெண்டு குடமெல்லாம் போதாது. அத்தனை பேரும் குளிக்க வேண்டுமே! பெரிய அண்ணன் மட்டும் காலையிலேயே கிணற்றில் போய் குளித்து வருவான். மற்ற ஆண்கள் நேரத்தைப் பொறுத்து கிணற்றிலோ வீட்டிலோ குளிப்பார்கள். பின்வாசலில் ஒரு கல்தொட்டி இருக்கும். ஒரு குடம் தண்ணியை ஊற்றிவிட்டு அடுத்த குடம் கொண்டு வருவதற்குள் நீர் மட்டம் அடியில் போயிருக்கும். எத்தனை குடம் ஊற்றினாலும் , அமுத சுரபிக்கு எதிர்பதம் போல் அடி மட்டத்திலேயே தண்ணீர் இருக்கும். பயன்பாடு அவ்ளோ அதிகம்.
குளிர் காலம் வந்துவிட்டால் சுடு தண்ணீர் வேண்டுமென்பதால், எல்லோருக்கும் வீட்டுக் குளியல்தான். விறகு அடுப்பில் மண்பானையில் தண்ணீர் கொதிதுக் கொண்டே இருக்கும். உனக்குப் பிறகு நான், எனக்கு பிறகு அவன் என வரிசை கட்டி சுடு தண்ணீருக்கு பட்டியல் ரெடியாக இருக்கும். நல்ல கொதிக்க வைத்து பாதி பானை சுடுநீரும் மீதி பாதி பச்சைத் தண்ணீரும் கலந்து தொடர் வண்டியாகக் குளியல் தொடரும். ஆண்கள் வெளி வாசலிலேயே குளிக்க பெண்பிள்ளைகள் மட்டும் தடுப்புக்கு உள்ளிருந்து குளிப்போம். (இந்த காட்சிகளெல்லாம் பாரதிராஜா படத்தில் காட்டிய பின்னர்தான் நகர வாசிகளுக்குப் புதுமையாகத் தெரிந்தது. எங்களுக்கு அன்றாட வாழ்க்கையாக இருந்தது)
பள்ளிக்குச் செல்லும் முன் என் பங்குக்கு எடுக்க வேண்டிய தண்ணீர்க்குடங்கள் வீட்டை அடைந்தாக வேண்டும். இல்லாட்டி பள்ளிக்கு செல்ல முடியாது.எனக்கு தண்ணி வண்டின்னு பட்டப் பெயர்கூட உண்டு. சமையல் வேலையெல்லம் ஓய்ந்த பிறகு பெரிய பெண்கள் கிணற்றடியில் துணி துவைக்கச் செல்வார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றினால் அது பெரிய தொட்டியில் விழுவது போன்ற அமைப்பு இருக்கும். தண்ணீர் நிறைய உள்ள நாட்களில் அதில் தண்ணீர் பிடித்து நீச்சலடித்துக் குளிக்கலாம்.
நல்ல தண்ணீர் எடுக்கச் செல்வது அதைவிடக் கொடுமை. தெருவுக்கு தெரு ஒரு ஆத்து தண்ணீர் குழாய் இருக்கும். அதில் குடங்களை வரிசையிலிட்டு காத்திருந்து பிடிக்க வேண்டும். நம் முறை வரும்போது சில நேரம் தண்ணீர் நின்றுவிடும். கொஞ்சம் பொருளாதாரத்தில் உயர்வுள்ளவர்கள் (நாச்சியாரக்கா வீடு) பணம் கட்டி சொந்தமாக நல்ல தண்ணீர் குழாய் வாங்கியிருப்பார்கள். அவர்களிடம் பணம் கட்டி நல்ல தண்ணீர் வாங்கிக் கொள்வோம். எட்டு குடம், பத்து குடம் என்று எண்ணிக்கை வாரியாக பணம் கட்ட வேண்டும்.
அப்படியும் சுலபத்தில் தண்ணீர் பிடித்துவிட முடியாது. தரையிலிருந்து நாலு முதல் ஆறு அடி வரை தொட்டி மாதிரி கட்டி அதற்குள் குழாய் பதித்து இருப்பார்கள். அப்போதான் தண்ணீர் வரும் அளவு அதிகமாக இருக்கும். உள்ளே இறங்கி தண்ணீர் பிடித்து, கனமான குடத்துடன் மேலே ஏறி வரணும். அந்தக் காலங்களில் ப்ளாஸ்டிக் குடமெல்லாம் கிடையாது. வெண்கலம் அல்லது எவர்சில்வர் தான். அதுவே ரொம்ப கனமாக இருக்கும். எட்டு குடம் எடுத்து முடிப்பதற்குள் இடுப்பெலும்பே காய்த்துப் போனதுபோல் ஆகிவிடும்.
இப்போதான் அதன் கஷ்டங்களை யோசித்து எழுதத் தோன்றுகிறது. அப்போதெல்லாம், எப்போதடா தண்ணி எடுத்து முடிச்சுட்டு பள்ளிக்கூடம் ஓடலாம் என்ற நினைப்பு மட்டும் தான் இருக்கும்.
தண்ணீர் எடுக்கப் போகும்போது அவங்க வீட்டு முல்லைக் கொடியில் மொட்டுக்கள் பறித்து கட்டி வைத்துக் கொள்வது சந்தோஷமான நிகழ்வுகள். நாலைந்து வீட்டுப் பெண்கள் தண்ணீர் பிடிக்க வருவதால் ஒன்று கூடி வம்பு பேசுவதும் வாடிக்கை மற்றும் வேடிக்கை.
தண்ணீர் வரும் நேரங்கள் மாறி மாறி வரும். சாயங்கால முறை வரும்போது, பள்ளி விட்டு ஓடி ஓடி வரணும், இல்லாட்டி தண்ணீர் நின்றுவிடும். ஆஹா ஜாலின்னு தப்பிக்க முடியாது. இங்கே தண்ணியைத் தவறவிட்டால் பொதுக்குழாய் மெயின் ரோட்டில் இருக்கும் அங்கு போய் பிடித்து வரணும். அங்கு மறுபடியும், வரிசையில் நிக்கணும், ஒரு குடம் தான் கிடைக்கும், ஏகப்பட்ட இம்சை. அதுக்கு ஓடி வந்து நாச்சியாரக்கா வீட்டில் பிடிப்பதே புத்திசாலித்தனம்.
இதெல்லாம் சாதாரண காலங்களின் நடைமுறை. வெயில் காலம் வந்துவிட்டால் ரொம்பக் கஷ்டம். லீவுக்கு அக்கா குடும்பங்கள் வந்துடுவாங்க, வீட்டு ஜனத்தொகை கூடிடும். ஆத்துலே (தாமிரபரணி) தண்ணீர் அளவும் குறைந்துவிடும். அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணீர் வரும். சில சமயங்களில் வாரம் இரு முறை மட்டுமே வரும்.அதை சரிக்கட்டுவதும் எங்கள் தலையில்தான் விடியும்.
காயல்பட்டிணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு, வருஷம் முழுதும் அதில் தண்ணீர் இருக்கும். எங்க வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும். அங்கே போய் தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஆனால் எல்லாரும் கும்பலாக போவதால் , குதூகலமாகப் போவோம். (அதையும் தாண்டி ஒரு பர்லாங்கு போனால்தான் எங்கள் பள்ளி வரும்.) குடிக்க சமைக்க தண்ணீர் எப்படியோ கிடைத்துவிடும்.
அத்தனை கூட்டமும் குளிக்க துணி துவைக்க இருக்கவே இருக்குது பண்டாரகுளம். எதனால் அந்த பெயர் வந்தது என்று தெரியாது. எங்களின் முதல் நீச்சல் குளம் அதுதான். பெண்கள் படித்துறையில் அக்கா மதினியெல்லாம் துணி துவக்கும் போது நாங்களெல்லம் அதைத் தாண்டி ஓடிவிடுவோம். குளத்தை ஒட்டி ஒரு கிணறு துலா போட்டு வாளியோடு இருக்கும். அதன் சுற்றுச் சுவரிலிருந்து குளத்தில் குதிக்க ஏதுவாக இருக்கும். அண்ணன்களெல்லாம் அநாயசமாக குதித்துக் குளிக்கும் போது பொடிசுகள் நாங்க மட்டும் பயந்து, தயங்கி ஓரமாகக் குளிப்போம். ரொம்ப பயந்தவங்க துலா போட்டு கிணத்திலிருந்து தண்ணீர் மொண்டும் குளிப்பாங்க.
இந்தக் குளமும் அக்கினி நட்சத்திரத்தில் வற்றிப் போய்விடும். அந்த சமயங்களில் இன்னும் தூரமாக நல்லாங்குளம் நோக்கிப் போவோம். தாமிரபரணியின் கடைக்கோடி கால்வாய் என்பதால் வருஷம் முழுவதும் அங்கே தண்ணீர் இருக்கும். குனிந்து பார்த்தால் தரை தெளிவாகத் தெரியும். பண்டார குளம் சேறாக இருக்கும், நல்லாங்குளம் சுத்தமாக இருக்கும். ஆனால் தனியாகவெல்லாம் அங்கே போக விட மாட்டாங்க. கோடை விடுமுறையில் கும்பலாகத்தான் போக முடியும்.குளம் ஆழமாக இருந்தால் நீந்தி குளிக்கலாம்.ஆனால் ஆகாயத்தாமரை அதிகமாக இருக்கும். சிறுசுகளெல்லாம் கீழ்ப்புறமாக மடையிலிருந்து வரும் வாய்க்காலில் குளிக்கலாம். தண்ணீர் தெளிவாகவும் சுகமாகவும் இருக்கும். சின்னச் சின்ன மீன்கள் துள்ளி விளையாடும். துண்டு வீசி மீன்பிடித்து விளையாடுவது சூப்பர் பிக்னிக்.
அக்காக்கள் பிரசவம் முடிந்த காலங்களில் வந்திருந்தால் கண்டிப்பாக மதகு வாய்க்காலுக்குத் தான் போக வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் கழிவு கலந்த துணிகளை அங்கேதான் அலச முடியும். அக்காவும் மதினியும் மூட்டை மூட்டையாக துணி துவைப்பார்கள், பாவம்.
குளத்தை ஒட்டி வயல்காடு நிறைஞ்சிருக்கும். வரப்புமேலே ஏறி, ஓடி விளையாடுவது எல்லோருக்கும் பிடித்த விளையாட்டு.
நல்லாங்குளத்துக்குப் போயிட்டு வர ரொம்ப நேரமாகும் என்பதால் அம்மா ஏதாவது பலகாரம் கட்டிக் கொடுப்பாங்க. துணி துவைச்சு, குளிச்சுட்டு அதைச் சாப்பிடும்போது கிடைத்த ருசி எந்த ரிசார்ட்டிலும் இதுவரை கிடைத்ததில்லை. குளிச்சுட்டுத் திரும்பி வரும்போது , ஈரத்துணிகளையெல்லாம் சுமந்துட்டு வரும்போதுதான், ஏண்டா இவ்ளோ தூரம் வந்தோம்னு மலைப்பா இருக்கும். ஆனால் மறுநாளும் அங்கே போகத்தான் கால்கள் கெஞ்சும்.
சந்தையில் எங்கள் வீடு இருந்ததால் வீட்டுக் குழாய் பெறுவதில் ஏதோ சட்டச் சிக்கல் இருந்தது போலும். தொண்ணூறுகள் வரை குழாய் போடவே முடியவில்லை. செக்கண்ணன் கிராம நிர்வாக அலுவலர் ஆன பிறகுதான் முதல் முதலாக ஒரு ஆற்றுத் தண்ணீர்க்குழாய் பதிக்க முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.
அன்று தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்டதால் இன்றளவும் சொட்டுத் தண்ணீரைக்கூட வீணாக்குவதில்லை.
அரிசி களையும் தண்ணீர், காய்கறி கழுவும் தண்ணீர் எல்லாம்தான் எங்கள் வீட்டுத் தோட்டத்தின் நீர் மேலாண்மை.
நீரின்றி அமையாது உலகு
நீரை வீணாக்காமலிருக்க
உறுதி கொள்வது நமது கடமை.
0 Comments:
Post a Comment
<< Home