Tuesday, September 08, 2020

அலை-10

 அலை-10

திருச்செந்தூர் எல்லாருக்கும் ஆன்மீகத் தலமாகத்தான் தெரியும். ஆனால் எங்க வீட்டு மக்களுக்கோ அடுத்த வீடு மாதிரி. பெரியம்மா இறந்து போய் எங்களின் மூத்த அக்காவாக வளர்ந்த தெய்வூ அக்காவைத் திருமணம் செய்து கொடுத்த இடம் திருச்செந்தூர். 


பெரிய அத்தானும் அவங்க  ரெண்டு தம்பிகளும் சேர்ந்து ஹோட்டல் வைத்திருந்தாங்க. தாலுகா ஆபீஸ் அருகில் கோமதி விலாஸ் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். தாலுகா ஆபீஸின் அரசுப் பணியாளர்களும், சுற்று வட்டாரத்தில் இருந்து தாலுகா ஆபீஸ் வரும் மக்களும் கோமதி விலாஸின் வாடிக்கையாளர்கள். அங்கே போடுற டிகிரி காப்பிக்கு முன்னால் இப்போ உள்ள கும்பகோணம் டிகிரி எல்லாம் போட்டி போட முடியாது.


வருஷம் முழுவதும் வியாபாரம் தொய்வில்லாமல் நடந்தாலும் முருகர் கோவிலின் விசேஷ நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். அக்கா அத்தான்களுக்கு சமாளிக்க முடியாது. உதவிக்காக எங்க வீட்டு வானர சைந்நியங்கள் அங்கே படையெடுப்போம். வேலைக்கு உதவுவதாக சாக்கு போக்கு சொன்னாலும் எங்களின் சுயநலமும் அடியில் ஒளிந்திருக்கும். கடையில் தயாரிக்கப்படும் வித விதமான பலகாரங்களை ருசி பார்க்கலாம், கடற்கரையில் விளையாடலாம்.


ஹோட்டல் என்றால் பெரிய சமையலறையுடனும் டைனிங் மேஜைகளுடனும் இருக்காது. கூரை வேய்ந்த ஹாலில் சில பெஞ்சுகள்  போடப்பட்டிருக்கும்.  உட்கார தாழ்வாகவும், இலை போட கொஞ்சம் உயரம் அதிகமாகவும் பெஞ்சுகள் இருக்கும்.கண்ணாடி போட்ட பீரோ மாதிரி ஷெல்பில் பலகாரங்கள் இருக்கும். 


 வீடுதான் சமையலறை. பெரிய ஓலை ஷெட் போடப்பட்டு நாலைந்து அடுப்புகள் எந்நேரமும் கணன்று கொண்டு இருக்கும். அக்கா சின்னக்கா எல்லாரும் பம்பரமாய் வேலை செய்து கொண்டிருப்பார்கள். தெய்வக்காதான் ஹெட் குக். அடுப்பில் ஏற்றுவது, பதம் பார்ப்பது, ருசி கூட்டுவது எல்லாம் அக்கா நாட்டாமைதான். நாங்கள் எல்லோரும் ராமருக்கு அணில்மாதிரி. 


ஒரு பக்கம் க்ரைண்டரில் மாவு அரைந்து கொண்டிருக்கும், ஒதுக்கி விட்டு தண்ணீர் தெளித்து பக்குவமாக அரைக்கணும். இன்னொரு பக்கம் வடைக்கு வெங்காயம் மிளகாய் எல்லாம் வேகமாய் வெட்டிகிட்டு இருப்பாங்க. பூரிக்கு மாவு பிசைவதும் உருளைக்கிழங்கு உரிப்பதுமாக ஏகமாய் வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். எங்களோட வயசு, உடம்பின் வலுவைப் பொறுத்து வெவ்வேறு வேலைகள் தரப்பட்டிருக்கும். எனக்குத் தெரிஞ்சு நான் தேங்காய் துருவுவதில்தான் அதிகம் இருந்திருக்கிறேன். 

திருவலக்குத்தியில்  (அரிவாள்மனையுடன் தேங்காய் துருவி சேர்ந்து இருக்கும்) தேங்காயை உரசி உரசி பூக்களாய் சிதற விடுவது தனித்திறமை.


ஆம்பிள்ளைப் பசங்களெல்லாம் கடைக்கும் வீட்டுக்கும் பொருட்களை எடுத்து செல்லும் கூரியர் பாய்ஸ் ( இப்போதுள்ள swiggy , Zomato  மாதிரி). ரொம்ப சின்ன குட்டிகளெல்லாம் உபகாரத்தை விட உபத்திரவம் செய்வதுதான் அதிகம் .தம்பி நானா, அடுத்த தலை முறையில் முத்துராமன் எல்லாம் வந்தால் அக்காவுக்கு தலைவலிதான். எதையாவது எடுத்து உடைச்சிடுவானுக கொட்டி விட்டுறுவானுங்க , ஆனாலும் திட்டு வாங்கிகிட்டே தமாஷா வேலை நடக்கும்.


வருஷத்தில் குறைந்த பட்சம் நாலு விசேஷம் வந்துவிடும். ஆடித்திருவிழா, ஆவணித் திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, இன்னும் பெரிதும் சிறிதுமாக நிறைய நடந்து கொண்டே இருக்கும். வைகாசி விசாகம் தான் எங்களுக்கு நிரந்தர அசைன்மெண்ட். மே மாத லீவில்தான் வரும். சம்மர் கேம்ப் மாதிரி கிளம்பிடுவோம். சுத்து பத்து ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வண்டி கட்டிகிட்டு வருவாங்க. ஆறுமுகநேரியில் எங்க வீட்டு வாசலில் உட்கார்ந்தே வண்டிகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். ஆபாவாணன் படம் மாதிரி லாந்தர் விளக்குகளைத் தொங்க விட்டுக் கொண்டு இரவெல்லாம் வரிசையாக வண்டிகள் போய்க் கொண்டே இருக்கும். கூடு வைத்த வண்டிகள் அந்த சமயத்தில்தான் அதிகம் போகும். திருவிழா காலம் முழுவதும் தங்கி செல்லத் தேவையான பொருட்கள் அனைத்தும் அதனுள் இருக்கும்.


கடை வேலைகள் ஓயும் சமயங்களில் கடற்கரைக்கு செல்லுவது ரொம்ப ஜாலி.தனியாகப் போக விட மாட்டாங்க. விக்ரமசிங்கபுரத்திலிருந்து சித்தி சித்தப்பா வரும் நேரங்களில் அவங்களோடு சேர்ந்து ஓடிவிடுவோம். தெய்வு அக்காவின் மகள் ராஜம்தான் எனக்கு தோழி. சின்ன வயசில் ராசமக்காவாக இருந்தவள் நயினார் அண்ணனை மணம் செய்த பிறகு ராஜம் மதினியாக மாறியவள். கான்சர் கொடுத்த சவுக்கடியாக எங்களை விட்டுப் பிரிந்தாலும் நினைவில் வாழ்ந்து இந்த பதிவிற்கு உயிரூட்டுவாள்.


சாயங்காலத்துக்கு மேல் அநேகமாக வேலை இருக்காது. கடற்கரை விளையாட்டுகளைப் பற்றி எழுதுவதென்றால் ஒரு பதிவே பத்தாது. திருச்செந்தூர் கடற்கரை சரிவாக இருக்கும். நாழிக்கிணறு செல்லும் பாதையின் பக்கத்தில் உட்கார்ந்தால் கூட அலை உரசும் இடம் வரை தெளிவாகத் தெரியும். சித்தி உயரத்தில் உட்கார்ந்தது இருப்பாங்க. நாங்களெல்லாம் 

கரையோரம் விளையாடுவோம். ஒவ்வொரு அலையும் சீறி வரும்போது அதில் அகப்படாமல் கால் நனையாமல் எட்ட ஓட வேண்டும். அசையாமல் ஒரே இடத்தில் நின்றால் காலைச்சுற்றி அலைகள் சுருண்டு பள்ளம் உருவாக்கும். ஆனாலும் கீழே விழாமல் நிற்க வேண்டும். கடற்கரை மணல்குன்றுகளை உருவாக்கி அலைகள் அடிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். அங்கங்கே கிடக்கும் மிதக்கக்கூடிய பொருட்களை( தேங்காய் மட்டை, பூச்சரங்கள்) தூக்கி எறிந்து  அவை கரைக்கு வருதான்னு பார்த்து திரும்ப எடுக்கணும். கடலோரக் கவிதைகள் பாரதிராஜாவுக்கு மட்டும் சொந்தமல்ல. பயமின்றி விளையாடும் எங்களுக்கும் அதில்  பங்கு உண்டு.


பகல் நேரத்தில் போனால்தான் கடலில் குளிக்க முடியும். ரொம்ப பாதுகாப்பாகப் போகணும். கொஞ்சம் அசட்டையாகப் போனாலும் தரையில் உருட்டி மண்ணைக் கவ்வ வைத்துவிடும் சேட்டைக்கார அலைகள். காதுலே கழுத்திலே போட்டிருக்கும் நகைகள்,லோலாக்குகள்,பாசிஎல்லாம் கழற்றி விட்டு குளிப்பது உத்தமம். சொன்ன பேச்சு கேட்காமல் தொலைத்தவைகளும் நிறைய உண்டு. 

கடற் சிப்பி, சங்கு எல்லாம் இங்கு கிடைக்காது. வருஷம் முழுவதும் பக்தர்கள் புனித நீராடிக் கொண்டே இருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் இந்தப் பகுதிக்கு வருவதில்லை.


 கரையை ஒட்டிய பகுதியில் ஏகப்பட்ட பாறைகள் இருக்கும். பக்குவமாக மேலேறிப் போய்விட்டால் கொஞ்ச தூரத்தில் ஆற்றுமணல்போல் அருமையான படுகை கிடைக்கும். ஆரம்பத்திலேயே பாறைகளில் காலை இடறிக் கொள்பவர்கள் அதற்குமேல் போகத் துணிய மாட்டார்கள். எங்களுக்கு கடற்பரப்பு மிகப் பரிச்சியம் என்பதால் முன்னேறிப் போய்விடுவோம். 

அலையில் குளிப்பதற்கு நல்ல பயிற்சி வேண்டும். அலை எழும்பி வரும்போது காலை உயர்த்தி அலைமேல் தவழ வேண்டும். அல்லது அலையின் குறுக்கே புகுந்து எதிர்புறம் போய்விட வேண்டும். பயந்தால் அலையோடேயே போய்விட வேண்டியதுதான்…எங்க வீட்லே எல்லாருமே கடலில் குளிப்பதில் கில்லாடிகள்தான்.


 கடலில் குளித்த பிறகு, உடலில் உள்ள பிசுபிசுப்பு போக நாழிக்கிணற்றில் குளித்தாக வேண்டும்.. அது வற்றாத சுனை நீர், ஓயாசிஸ் மாதிரி. எத்தனை ஆயிரம்பேர் அதில் இடைவெளியின்றி குளித்தாலும் வற்றாமல் நீரூற்று சுரந்து கொண்டே இருக்கும். மதிய நேரத்தில் கடற்கரைக்குப் போயிட்டோம், அதோகதிதான். மணல் சூடு தாங்க முடியாது. சூரசம்ஹாரத்தின்போது அந்த சூட்டிலும் லட்சக்கணக்கில் ஜனத்திரள் கூடும்.

 

ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒவ்வொரு திருவிழாவும் ஒரு நிறத்தைக் குறிக்கும். பச்சை சாத்தி என்றால் துளசி மற்றும் சில இலைகள் எல்லாம் வைத்து அலங்காரம் முழுதும் பச்சையாகவே இருக்கும். சிவப்பு என்றால் ரோஜா , செவ்வரளி போன்றவைகள் இருக்கும். வெள்ளை சாத்திக்கு மல்லி, வெள்ளை அரளி, லில்லி போன்ற பூக்கள் இருக்கும். மஞ்சை சாத்திக்கு செவ்வந்தி, மஞ்சள் மற்றும் தங்க அரளி, செண்டு (துலுக்க சாமந்தி)போன்ற பூக்களால் அலங்காரம் இருக்கும். இந்துக்கள் மட்டுமல்ல வீரபாண்டியன் பட்டினத்து கிறித்தவர்களும், காயல் பட்டினத்தைச் சேர்ந்த முஸ்லீம்களும் இந்த அலங்காரங்களைப் பார்க்கவும், கடலில் குளிக்கவும் எப்போதும் வருவார்கள். மத நல்லிணக்கம் இயல்பாக இருந்த காலங்கள் அவை.


எப்போதும் பத்தாம் திருவிழா தேரோட்டமாக இருக்கும். ரொம்ப கூட்டமும், தள்ளு முள்ளும் இருக்கும் என்பதால் ஒரு நாளும் தேர்த்திருவிழா முழுதாகப் பார்த்ததே இல்லை. இவ்வளவு சிறப்பாக திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்தாலும் வீட்டிலிருந்து யாரும் திருவிழா பார்க்கப் போவதே இல்லை. திருச்செந்தூர்க்காரங்க கடலாட மாட்டாங்க, திருநெல்வேலிக்காரங்க தேர் பார்க்க மாட்டாங்கன்னு எங்க ஆச்சி அடிக்கடி சொல்லுவாங்க. உள்ளூர் மகிமை எப்போதும் அசலூர்க்காரங்களுக்குத்தான் தெரியும்.


திருச்செந்தூர்

திரும்பவும் வரும்.....

0 Comments:

Post a Comment

<< Home