Tuesday, September 08, 2020

 அலை-11

குழந்தைப்பருவத்து விளையாட்டுகள் எல்லோருக்கும் இனிமையானதுதான். ஆனால் மேல்தட்டுக் குழந்தைகளின் விளையாட்டு வேறுவிதம். எங்க செட்டப் வேறே. இந்தக் காலம் அந்தக்காலம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. 


ஒரு சீட்டுக் கட்டு விளையாட வேண்டுமென்றால் கூட மச்சு வீட்டுப் பசங்க கூட விளியாடினால் ஒரிஜினல் கட்டு உண்டு. நாங்க  தனியாக விளையாடும்போது பைரேட்டட் (duplicate) கட்டுகள்தான். பழைய நோட்டுப் புத்தகங்களின் அட்டையை எடுத்து பென்சிலில் அளவுகளை அடையாளம் செய்து, வெட்டி எடுத்து சீட்டுக் கட்டு செய்யவேண்டும்.  உள்ளே இஸ்பேட், டைமண்ட், ஆட்டின் எல்லாம் ஈஸியா வரைஞ்சிடலாம். ஆனால் க்ளாவர் மட்டும் எப்போதும் குடை சாய்ந்து கோணல் மாணலாகத்தான் நிற்கும். அவ்வப்போது பெரிசுங்க விளையாடி கிழியப்போற நேரத்தில் ஒரிஜினல் கட்டுகள் தருவாங்க. 


”கழுதை” (ASS) விளையாட்டுதான் ரொம்ப பேமஸ். நாலைந்து கழுதை வாங்கினவங்க எல்லாம் இருப்பாங்க. எத்தனைபேர் வேணுமின்னாலும் விளையாடலாம். ஆள் அதிகமானால் வெட்டு அதிகம் வாங்கி கழுதைகள் அதிகமாகும். தில் மாட்டாமல் தப்பிக்க சூட்சுமங்ளும் உண்டு. இறங்கின சீட்டு, கையில் உள்ளது, அடுத்தவன்கிட்டே என்ன இருக்கும் என்கிற அனுமானம் துல்லியமாகத் தெரிஞ்சவங்க தப்பிச்சுடுவாங்க. நயினார், தாணு,  நானாவெல்லாம் விளையாண்டால் கடும் போட்டிதான் .


அடுத்தது ”திருடன்” (Thief) விளையாட்டு. கடைசியில் திருடன் ஆனவனைக் கலாய்த்து அழ விட்டு ஓட வைப்பது பெரிய திறமையாக இருக்கும். ஆனால் கழுதை , திருடன் எல்லாம் கொஞ்ச நாளில் சிறியவர்கள் விளையாட்டாகிப் போனது.


 அப்பா ,தனது நண்பர்களுடன் விருந்துகளின் போது ரம்மி (knock-out) ஆடும்போது நானும் நானாவும் அப்பாவின் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்து பார்த்து அந்த ஆட்டத்தில் கில்லாடி ஆகிவிட்டோம். 

ஆனாலும் பெரிய பசங்க எங்களைச் சேர்த்துக்க மாட்டாங்க. நயினார் அண்ணன் லிட்டரேச்சர் என்று ஒரு விளையாட்டு சொல்லித் தந்தான். கொஞ்சம் மூளையை உபயோகித்து விளையாட வேண்டும். ஞாபகத்திறன் மிக அதிகமாக வேண்டும். அதையும் சீக்கிரமே கற்றுக் கொண்டோம். 


மத்த வீடுகளில் மாதிரி சீட்டுக் கட்டு வெளையாடக் கூடாது, கெட்ட பழக்கம் என்று எங்கள் வீட்டில் என்றுமே யாருமே சொன்னதில்லை. வெளியே வெயிலில் சுற்றாமல் வீட்டில் விளையாண்டாலே போதும் என்று விட்டு விடுவார்கள். பொங்கவும் பந்தி பரிமாறவுமே சுழன்று கொண்டிருக்கும்போது பிள்ளைகளின் பொழுது போக்கில் தலையிட அவங்களுக்கு நேரமே இருந்ததில்லை. படிக்கும் போது படி, விளையாடும்போது விளையாடு  என்பது மட்டுமே அவங்க கொள்கை.


மச்சு வீட்டு பேங்க் அண்ணாச்சி வீட்டில் காரம் போர்டு விளையாடும் போது, சந்தை வீட்டில் தாயக்கட்டை விளையாடலாம். அதுக்கு நகர்த்த வித விதமாய் காய்கள் சேகரிப்போம். புளியங் கொட்டை,  நாவல்பழம் கொட்டை, பூசனிக்காய் விதை என்று ஏகப்பட்ட டிசைன்களில் சேகரித்துவிடுவோம். கூட்டம் அதிகமாக இருந்தால் நாலு பேர் ஆடும் ஆட்டத்தில் ஜோடி போட்டுக் கொண்டு எட்டுபேர் ஆடுவோம். அடி,வெட்டு என்று ஆக்ரோஷமாக எழும் கூச்சல்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு கலவரம் நடப்பதாகத் தோன்றும்.



கட்டை குச்சி ( கில்லி) விளையாட பக்கத்திலுள்ள மரத்திலிருந்தெல்லாம் கொப்புகளை முறித்து, வெட்டி கூர் செய்து குச்சி செய்வாங்க. அண்ணன்களெல்லாம் அதில் கில்லாடி . பெரிய குச்சி சாதாரணமாக செய்திடலாம். சின்ன குச்சி மட்டும் கொஞ்சம் சிரத்தையோடு செய்யணும். இரண்டு முனைகளும் கொஞ்சம் கூர்மையாகவும் உருண்டையாகவும் இருக்கணும். அப்போதான் அடிச்சுத் தூக்கும் போது ரொம்ப தூரம் போகும். சில சமயம் பக்கத்திலே நிக்கிறவங்க கண்ணு, மூக்குக்கும் போகும். கட்டைக் குச்சியாலேயே வீட்லே அடி வாங்கவும் வைக்கும். அப்பவே கிரிக்கெட் எல்லம் வந்திருந்தா நாங்களெல்லாம் பெரிய பேட்ஸ்மேன் ஆகியிருப்போம்!!


கோலி விளையாட்டு நல்லா ஜாலியா இருக்கும். கையை மடக்கி மோதிர விரலைச் சுண்டி கோலிக்காயை குழியில் தள்ளுவது நல்ல பயிற்சி. இதுதான் கோல்ஃப் (Golf) ஆட்டத்தின் முன்னோடியாக இருந்திருக்கணும். சரியாகக் குழிக்குள் விழுந்திட்டால் அடுத்த குழிக்கு முன்னேறலாம். வெளியே விழுந்திட்டால் நம்ம பாடு கஷ்டம்தான். அடுத்து வர்றவங்க நம்மளைக் குழி பக்கமே வர விடாமல் கோலிகுண்டால் அடிச்சு துறத்துவாங்க. அதுகூடப் பரவாயில்லை,தோத்துப் போனால் கோலியால் நம்ம காய்களை உடைச்சுப் போட்டுறுவானுக, வெற்றி பெற்ற அதிரடிப் படையினர். கோலிக்காய் கலர் கலரா கிடைக்கும். அதுக்கு உள்ளே இருக்கும் பிம்பங்கள்தான் அடையாளம். தாஜ்மஹாலில் இருந்து தாமரைப்பூ வரை எண்ணற்ற விதங்களில் பலவகை வண்ணங்களில் கிடைக்கும். 


பல்லாங்குழி விளையாட தண்ணீர் தெளித்து இறுகின மண் தரையில், பல்லாங்குழியின் அச்சாக குழிகள் தோண்ட வேண்டும்.  நிழலாகவும், பங்கேற்பவர்கள் உட்காரும் விதமாகவும் தோதான இடத்தில் தோண்டணும். அந்த லீவு முடியும் வரை குழிகள் இருக்கும். விளையாண்டு முடித்தவுடன் சாக்கு (கோணி) போட்டு மூடி வைத்துவிடணும். இல்லாட்டி வாசல் பெறுக்கிறவங்க அத்தனை குப்பையையும் அதில் நிரப்பிடுவாங்க.திருச்செந்தூர் போயிட்டு வந்த புதுசுன்னா சோளிகள் கிடைக்கும். இல்லாட்டி புளியங் கொட்டைதான் பல்லாங்குழிக்கும்.


கொஞ்சம் தரமான  விளையாட்டுன்னா ”பொம்மலாட்டம்” தான். அதுக்கெல்லாம் அண்ணன் அக்கா உதவியெல்லாம் வேணும். எங்க வீட்லே ஒரே ஒரு மர மேஜை உண்டு. அதன் மூணு காலையும் இணைத்து வேஷ்டி கட்டி திரை(screen) ரெடியாகும். முந்தின வருஷ புத்தகங்களின் பேப்பர்களை வித விதமாக வெட்டி உருவங்கள் செய்வாங்க. அதை ஈக்கு வாரியல்  (தென்னம் குச்சி துடைப்பம்) குச்சிகளில் ஒட்டணும். அதுக்கு ஏற்கனவே மைதா மாவு பசை செய்திருப்பாங்க. அவசரமா செய்யணும்னா பழைய சோறுதான் அதிரடி பசை(Gum). எங்க வீட்லே மின்சாரம் கிடையாது என்பதால் அரிக்கேன் ( Hurricane) விளக்குதான். 


திரைக்குப் பின்னால் அரிக்கேன் விளக்குடன் அண்ணன்கள் உட்கார்ந்து கொண்டு குச்சியில் செய்த பொம்மைகளை விளக்கின் முன் ஆட்டி ஆட்டி கதை சொல்வாங்க. சூப்பராக இருக்கும். அன்று சொன்ன கதைகள் நினைவில் இல்லை. ஆனால் அந்த மரமேஜையும், வேஷ்டி திரையும், அரிக்கேன் விளக்கு வெளிச்சமும், நிழல் பிம்பங்களும் நீக்கமற நெஞ்சில் நிறைந்துள்ளது. 


பெண்களுக்கே உள்ள ”பாண்டி” விளையாட்டும் உண்டு.  தரையில் கட்டங்களை வரைந்து அதற்குள் கண்ணை முடி நடக்கணும். சரியா தப்பானன்னு கேட்டுகிட்டு வரணும். கோட்டில் மிதித்தாலோ கட்டம் தப்பினாலோ அவுட். 

அதிலும் ரெண்டு மூணு வகை உண்டு. உடைந்த மண்பானை ஓடுகள்தான் அதற்குரிய காய்கள். முதுகைக் காட்டி நின்றுஒடுகளைக் கட்டத்திற்குள் சரியாக வீச வேண்டும். கோடுகளிலோ, கோட்டுக்கு வெளியிலோ விழுந்தால் அவுட். சரியாக விழுந்த ஓடுகளை நொண்டி அடித்தே அடுத்த கட்டங்களுக்குள் தள்ள வேண்டும். காலை ஊன்றினால்அவுட். மறுபடியும் ஒன்றிலிருந்து தொடங்க வேண்டும். நொண்டி அடிக்கும் போது ”கித் கித் கா” என்று சொல்லிக்கோண்டே விளையாடுவதால் அந்தப் பெயரே ஆட்டத்தின் பெயரும் ஆகிவிட்டது. 

ஆயிரங்கால் பாண்டி கொஞ்சம் வேறுமாதிரி. கட்டங்களுக்கு 100 முதல் ஆயிரம் வரை எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். கட்டங்களிலிருந்து தொலைவில் நின்று கொண்டு ஓடுகளை வீச வேண்டும். கண்டிப்பாக கட்டத்திற்கு முன்னரே கீழே விழுந்துவிடும். அதை உதைத்துக் கொண்டுபோய் எந்த எண்ணில் சேர்க்கிறோமோ அந்த மார்க் நமக்கு.  வெறுமனே நொண்டியடித்து அனைவரையும் அவுட் ஆக்குவதும் உண்டு. இதில் ஆண் பெண் இரு பாலரும் இணைந்து விளையாடலாம். 


ஒற்றைக் காலில் நொண்டி அடித்துக் கொண்டிருந்த நாட்களில் அஜீர்ணமோ, அதிக எடையோ, வியாதிகளோ எங்களை அண்டியதே இல்லை.லீவு சமயங்கள் போக மற்ற நேரங்களில் நானாவின் நண்பர்கள்தான் எனக்கும் விளையாட்டுத் தோழர்கள். பேங்க் அண்ணாச்சி மகள் அருணா மட்டும் அப்பப்போ சில விளையாட்டுகளுக்கு வருவாள். சொப்பு வைச்சு, பொம்மை வைச்ச  விளையாட்டுகள் ல்லாம் எனக்கு நினைவே இல்லை. அத்தி பூத்தமாதிரி அபூர்வம்.


 எல்லாமே பசங்க கூட விளையாடின வீர விளையாட்டுகள்தான். பச்சைக்குதிரை தாண்டினால் மட்டும் , பசங்க கூட விளையாடியதுக்கு அடி கிடைக்கும்.

பாரதியார் ஓடி விளையாடு பாப்பான்னுதான் சொன்னார். நாங்க ஓடி, ஆடி, குதிச்சு, தாண்டி , நொண்டியடிச்சு , மூச்சு வாங்குறப்போ பல்லாங்குழி , தாயம் ஆடி சீட்டு பிடிச்சு, படம் காட்டி எத்தனை விளையாட்டுகள் ஆடியிருக்கோம்.


 எங்களோட விளையும் பருவம் விளையாட்டுகளையும் விதையாக்கி செதுக்கப்பட்டிருக்கு.

0 Comments:

Post a Comment

<< Home