Wednesday, September 16, 2020

அலை-14

 அலை-14

எண்ணெய்க் குளியல் போட்ட அநுபவம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் அதற்குப் பின்னாலுள்ள இம்சைகள் எத்தனை பேருக்குத் தெரியும்?


 சின்ன வயசிலே எண்ணெய் தேச்சுக் குளிக்க அம்மா கூப்பிட்டால் தப்பிச்சு ஒளிஞ்சுக்குற  முதல் ஆள் நான் தான். வீட்டில் எல்லாருக்கும் வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் என்பது எழுதப்படாத விதி, எங்களின் தலைவிதி.


 காலையிலேயே அந்தநாள் அழுகையுடன்தான் ஆரம்பம் ஆகும்.முதலில் எல்லாருக்கும் முகம் வரைக்கும் ஒழுக  (அதுக்குப் பேர் குளிர தேய்க்கிறது) எண்ணெய் தேச்சு விடுவாங்க. ஒழுங்கா நின்னால் சீக்கிரம் தேச்சுக்கலாம். முரண்டு பிடிக்கிறவங்களுக்கு தலையில் ரெண்டு குட்டுவேறே கூடுதலாகக் கிடைக்கும். 


சினிமாவிலும் விளம்பரங்களிலும் வர்ற மாதிரி மென்மையாக எல்லாம் தேய்க்க மாட்டாங்க. சூடு பரக்க சரட் சர்ட் என்று தலையில் எண்ணய் வைத்து அரக்கிவிடுவாங்க. சில நேரங்களில் எண்ணெயை இளஞ்சூடாக்கியும் தேய்ச்சு விடுவாங்க.


எண்ணெய் ஊறணும்னு ரொம்ப நேரம் காத்திருக்கவும் வைச்சிடுவாங்க.அதுக்குள்ளே கண்ணுக்குள்ளே எல்லாம் எண்ணெய் கசிந்து இம்சை படுத்தும். அதுக்குப் பிறகுதான் உண்மையான தண்டனையே இருக்குது. 


குளிக்கப் போவதே கொலைக்களத்துக்குப் போறமாதிரிதான் இருக்கும். தலையில் படிந்துள்ள எண்ணெயை எடுக்க  இப்போ மாதிரி சோப்போ, ஷாம்போ கிடையாது. சீயக்காய் தூள்தான். அது எப்படி இருக்கும் என்னவெல்லாம் பண்ணும்னு இப்போ இருக்கிற யூத்துங்களுக்குத் தெரியவே தெரியாது. 


ஒரு கிண்ணத்துலே சீயக்காத்தூளைக் கொட்டி தண்ணீரில் கலக்கி பேஸ்ட் மாதிரி பண்ணியிருப்பாங்க. அதுலேயிருந்து ஒரு கைப்பிடி எடுத்து உச்சந்தலையில் வைச்சு கரகரன்னு தேய்ப்பாங்க. அதை மேலும்  சுமுகமாகத் தேய்க்க கொஞ்சம் தண்ணீர் வேறே தெளிச்சுக்குவாங்க. 


தேய்க்கத் தேய்க்க அந்த சீயக்காய்த்தூள் கலவை குற்றால அருவிமாதிரி முகமெல்லாம் வடியும். கண்ணை மூடிக் கொண்டு உட்கார வேணுமின்னு சொல்லப்பட்ட அறிவுரையைக் கேட்டு சாமியார் மாதிரி உட்கார்ந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பலாம். அவசரக் குடுக்கையாக இடையில் கண்ணைத் திறந்தால் அவ்வளவு சீயக்காயும் கண்ணுக்குள் வடிஞ்சிடும். அந்த எரிச்சலை சொல்லிப் புரிய வைக்க முடியாது. அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். 


ஒழுக்கமான பிள்ளைகளுக்கு கண்ணு தப்பிச்சாலும் மூக்கு தப்பிக்காது. எப்படியும் சீயக்காய்த் துகள்கள் மூக்கினுள் சென்று தொடர் தும்மல்களைப் போட வைச்சிடும். எண்ணெய்ப் பிசிறு தலையிலிருந்து போயிட்டாலும் சீயக்காய்த் தூள் அவ்வளவு சீக்கிரம் நம்மளை விட்டுப் போகாது. ரொம்ப பாசக்காரப் பவுடர். தலை துவட்டி முடி காய்ந்த பிறகும்கூட தலையிலேயே படிந்திருக்கும். அப்புறம் நிதானமாக சிணுக்கோலி (மயிர்கோதி) வைத்து சிக்கெடுக்கும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டும். 


எங்களுக்கெல்லாம் தலைமுடி புவியீர்ப்பு திசைக்கு எதிர்புறம் வளர்வதால் அதிகம் சிரமம் இருக்காது. நீண்ட கூந்தல் கொண்டவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம்தான். தலை ஈரம் காய சாம்பிராணிப் புகையெல்லாம் பிடிப்பாங்க.


இன்னும் முடியவில்லை தண்டனைக்காலம். எண்ணெய் தேச்சுக் குளிச்ச அன்னிக்கு இஞ்சி சொரசம் (இஞ்சி சாறு எடுத்து பனங் கல்கண்டோ கருப்பட்டியோ போட்டு கொதிக்க வைத்து செய்வது) குடிக்கணும். இனிப்பு பேருக்குதான் இருக்கும்,காரம்தான் முழுசும். குடிச்சே ஆகணும். சிறுசுங்க அடம் பிடிச்சால் சங்கு(பாலாடை)லே ஊத்தி புகட்டிடுவாங்க. அதுக்கு எங்க அம்மாவோட போஸ் இன்னும் ஞாபகம் இருக்கு. ரெண்டு காலுக்கும் இடையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு இடது கையால் குழந்தையோட ரெண்டு கையயும் பிடிச்சுட்டு வலது கையால் சங்கில் இருந்து புகட்டுவாங்க. வாயைத் திறக்காத ஆசாமிகளுக்கு பல்லிடுக்கில் சங்கின் முனை செறுகப்பட்டிருக்கும். குடிச்சுட்டு துப்பிவிடவும் முடியாது. மூக்கைப் பிடித்து சுவாசத்தை நிப்பாட்டி திரவத்தி உள்ளே செலுத்த பக்கத்திலேயே அடியாள் ஒருத்தர் ரெடியா இருப்பாங்க.

பெரிய பசங்க தகறாறு பண்ணினால் குடிக்க வைக்க பெரியண்ணன் பிரம்போட நிற்பான்.


குளிர்காலமானால் அத்தனை பேருக்கும் வெந்நீர் வேறு ரெடி பண்ணணும். வெளியில் விறகு அடுப்பில் மண்பானையில் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். ஒவ்வொருத்தரும் அடுத்து வர்றவங்களுக்கு ரெடி பண்ணணும். கண்ணில் வடியும் எண்ணெயும் விறகடுப்பின் கரும் புகையும் எங்களின் எண்ணெய்க் குளியலின் கண்ணீர்க் கதைகளைச் சொல்லும். பாத்திரம் கழுவும் சீயக்காய்ப் பவுடர் எங்களின் வாராந்திர எதிரியாவது காலத்தின் கொடுமை.


பெரிய தலைகளெல்லாம் எண்ணெய்க் குளியலை ரசித்து பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். 

எண்ணெய் தேய்த்து குளித்த அன்று மட்டும் கண்டிப்பாக தலைக்குப் பூ வாங்கித் தருவாங்க. அது ஒன்றுதான் மனதுக்கு ஆறுதல் தரும் நிகழ்ச்சி. 


இதே எண்ணெய்க் குளியல் தீபாவளி அன்றும் நடக்கும். ஆனால் அன்று எல்லாரும் பிஸியாக இருப்பதால் தலையில் பாத்திரம் கழுவும் நிகழ்ச்சிகள் கிடையாது. நாங்களே அரைகுறையாகக் குளித்துக் கொள்வோம். புதுத்துணி போடும் சந்தோஷம் வேறு இருப்பதால் அன்று மட்டும் அழாமல் குளித்துவிடுவோம். அவ்வளவு பெரிய குடும்பத்தின் வரவுசெலவுகளை நறுவிசாகப் பார்த்துக் கொண்ட அம்மா அவ்ளோ எண்ணெயைத் தலையில் தேய்த்துத் தண்ணீரில் கரைத்திருக்க வேண்டாம். 


தேங்காய் எண்ணெய்க்கும் எனக்குமான உறவு ரொம்ப களேபரமானதுதான். குழந்தை பிறந்ததும் சேனைத் தண்ணீர் என்று கொடுப்பார்களாம். இப்போ வாயில் சர்க்கரைத் தண்ணீர் ஊத்துறாங்களே அது மாதிரி. நான் பிறந்தப்போ கண்ணு சரியாத் தெரியாத ஆச்சி  சேனைத் தண்ணீருக்குப் பதிலாகப் பக்கத்தில் இருந்த தேங்காய் எண்ணெயைப் புகட்டி விட்டுட்டாங்களாம். நல்லவேளையாக புரையேறி போய்ச் சேராமல் தப்பித்து விட்டேன்.  


அந்தக் காலத்தில் எண்ணெய் மேல் ஏற்பட்ட வெறுப்பு கல்லூரி சென்ற நாளிலிருந்து இன்றுவரை தலைக்கு எண்ணெய் வைத்ததே இல்லை. என்னைக் கேலி செய்யும் விதமாக , அவ்வப்போது என் மகள் அவளுக்கு எண்ணெய் தேய்த்து விடச் சொல்லுவாள். ஆனாலும் நான் தப்பித்து ஓடி விடுவேன். 


எண்ணெய் மேலுள்ள கோபத்தில், நமக்கு பிடிக்காத பசங்களுக்கு “சரியான எண்ணெய்” என்று பட்டப் பெயர் வைத்து ஆத்ம திருப்தி பட்டுக்கொள்வதில் ஒரு சந்தோஷம். 


இவ்வளவு வசவு வாங்கிக் கொள்ளும் தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டும் ரொம்ப பிடித்த எண்ணெய். சின்ன வயசில் தேங்காய் சட்னியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிடுவது செம டேஸ்டாக இருக்கும். இப்பவும் அவியலுக்கு மட்டும் தாளிக்கத் தேங்காய் எண்ணெய்தான். 


முன்னோர்களின் மூடநம்பிக்கையா

மருத்துவ நலனுள்ள வழிமுறையா

வாசமான ரசமான எண்ணெய்க்கு 

விரோதியாக்கியது  என்னை!!

0 Comments:

Post a Comment

<< Home