பாட மறந்த நிலா
நிலவுக்கும் உண்டு இங்கு அஸ்தமனம்?
பாடும் நிலா பாலு
பாட மறந்த நாள் இன்று!
எண்ணிலடங்கா பாடல்கள்
எண்ணிக்கையற்ற ரசிகர்கள்
நினைவு தெரிந்த நாளில் இருந்து
நீங்காது துணைவந்த தேன்மதுரக் குரல்.
காதல் சொல்ல
உன் குரலே தூதுசென்றது
கல்யாணப் பந்தலிலும்
உன் இசையே ஓங்கி ஒலித்தது.
மசக்கை முதல் மகப்பேறு வரை
மனத்திடன் கொடுத்ததும் உன்குரலே
மக்களைத் தாலாட்டி தூங்க வைக்க
மயங்க வைத்தாய் மந்திர இசையால்.
துக்கத்தில் அழும் போதும்
துயரத்தில் வெம்பும் போதும்
கோபத்தில் குமுறும் போதும்
குதூகலமாய்த் துள்ளும் போதும்
உணர்வுகள் அத்தனையும்
உன் குரலாய் என் வீட்டில்
பொங்கிப் பிரவக்கித்த வேளையிலும்
“போதும்” என்று சொன்னதே இல்லையே!
அடுத்தவர்களுக்காக நீ பாடிய
இரங்கல் பாட்டுக்கள் எத்தனையோ
இன்று உனக்காகப் பாட
ஒன்று கூட நினைவில் வரவில்லை.
இனிய குரலை இனிமேலும் கேட்கலாம்
இசைத்தட்டிலும் இணையத்திலும்
இன்னிசை உலகம் இழந்து நிற்பது
”பாடும் நிலா பாலு” வை!!
இன்னிசையை வழி அனுப்பிட
இதயம் கனிந்த மவுன அஞ்சலி .
0 Comments:
Post a Comment
<< Home