அலை-17
அலை-17
எனது அலைக்கு பின்னூட்டமிட்ட தம்பி நானா, இந்த மனுஷி(தாணு)யின் மறுபக்கத்தை உசுப்பி விட்டுட்டான். சின்ன வயசுலே கொஞ்ச நாள் “ அந்நியன்” மாதிரி நான் அலைந்ததை மறந்தே போயிருந்தேன், மறுபடி நினைவூட்டி விட்டான்.
கதைப் புத்தகங்களை வாசிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது நிறைய பேரின் இயல்புதான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நான் ஒரு படி அதிகமாகவே ஒன்றியிருப்பேன் போல் இருக்குது. அதன் பிரதிபலிப்பாக தூக்கத்தில் பினாத்துவது, கனவில் ரீப்-ப்ளே (replay) பண்ணி கதை சொல்லி பக்கத்தில் படுத்திருப்பவங்களை இம்சை பண்ணுவது எல்லாம் உண்டு. ஆனால் அதன் உச்சகட்டமாக சில கதைகளின் தொடர்ச்சியாகவோ தூண்டுதலாலோ அப்பப்போ தூக்கத்தில் எழுந்து நடப்பேன்.
இப்போதைய காலமாக இருந்திருந்தால் “ தூக்கத்தில் நடக்கும் வியாதி” என்று முத்திரை குத்தி Drs. ஷுபா, ராமேஸ்வரி போன்றோரிடம் அழைத்துப்போய் அரைக் கிலோ மாத்திரை வாங்கித் தந்திருப்பாங்க. நல்ல வேளை அப்படியெல்லாம் எதுவும் நடக்கலை.அந்தக்கால பெருசுங்கலெல்லாம் என்னை மாதிரி எத்தனை அரை வேக்காடுகளைப் பார்த்திருப்பாங்க. ஏதாச்சும் வித்தியாசமான அசைவு கேட்டதும் “ ஏய் தூங்கு” ன்னு ஒரு அதட்டல் போட்டால் அத்தனை கனவும் புஸ்வானமாகி மறுபடி தூங்கிட வேண்டியது தான். அதனாலே நான் அந்த காலத்தில் நோயாளி ஆவது தவிர்க்கப்பட்டு மருத்துவர் ஆகிவிட்டேன்.(ஏதோ வடிவேலு படம் பார்க்கிற மாதிரி இருக்கா?) வாழ்க எங்க வீட்டுப் பெரியவங்க.
இந்த அதட்டலுக்கெல்லாம் அடங்காத சில நாட்களும் உண்டு. அதன் தாக்கம் எப்படி இருக்குமென்பதை முந்தைய நிலாச்சோறு பதிவுக்குத் தம்பி நானா பின்னூட்டமாக சிறு கதை போலவே எழுதிட்டான். கண்டிப்பாக எல்லாரும் வாசிக்கணும்.
””பெரிய வீட்டின் ஒரு ஓரத்தில் பதுங்கி கொண்டு இரவலாக கிடைத்த குமுதத்தில் அந்த வார தொடர் கதையை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன்.அந்த நேரம் பார்த்து " ஏய் தாணு எங்க இருக்க. இன்னக்கி சோமண்ணன் கடை லீவு....அந்த கோனார் கடை வரைக்கும் போய் ஒரு கால் கிலோ புளி வாங்கிட்டு வா" சமையல் வேலை அரை குறையா கெடக்கு..... சீக்கிரமா போயிட்டு வா" சமையல் கட்டிலிருந்து வந்த அம்மாவின் குரல் தலையில் நங்கென்று குட்டியது போலிருந்தது. கதையின் சுவாரசியத்தில் இருந்து வெளியே வந்து விழுந்தேன்.
கொஞ்ச நேரம் நிம்மதியா படிக்க விடுறாங்களா! இந்த நானா தம்பிப்பயல் எங்கே போனான். எங்கேயாவது சந்தைக் கடையிலே சுத்திட்டு இருப்பான். அவனக் கூப்பிட்டு போகச் சொல்ல வேண்டியது தானே! வீட்ல இருந்தா இதுதான் வம்பு... சலித்துக் கொண்டே ஏக்கமாக குமுதத்தை கீழே வைத்து விட்டு கோனார் கடையை நோக்கி நடக்கிறேன். சீக்கிரமா புளிய வாங்கி குடுத்துட்டு கதையை விட்ட இடத்துலேர்ந்து படிக்கணும்...
…வேக வேகமாக நடக்கிறேன்...
ஏய்... ஏய்ய்... நில்லு.. நில்லு... கிடுகுகளில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து எழுந்தது அபாயக் குரல். பரபரப்பு. திடுக்கிட்டு எழுந்து எதுவும் புரியாமல் சிலர் உட்கார, ஒரு சிலர் இருட்டுக்குள் சந்தைக்குள் ஓட... அதற்குள் கோணைப் பூவரசு மரம் வரைக்கும் நடந்து விட்டாள் அவள்(தாணு) நள்ளிரவு காரிருளில் கோனார் கடைக்கு புளி வாங்க போய்க் கொண்டிருந்தவளை பிடித்து இழுத்து வந்தார்கள்....
இப்படியாக தெருப் பைப்புக்கும், தங்கம் தேட்டருக்கும் கூட சில நாட்கள் போய் வருவாள். அன்று கனவுகளில் நடந்தவள் இன்று கதை சொல்ல வந்தாள். கனவுகள் தொடரட்டும்.”” ....
எப்படி நைசா சந்துலே சிந்து பாடியிருக்கான். எனது நினைவலைகளின் பக்கத்து அலைகளாக என் தம்பியின் பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
அவனுக்கு தெருப்பைப்புக்கும் தங்கம் தியேட்டருக்கும் நடந்ததுதான் தெரியும். ஊரு விட்டு ஊர் தாண்டிப் போன கதைகள் தெரியாது. ஸ்ரீவைகுண்டத்தில் இப்போ கேட்டாலும் சொல்லுவாங்க.
பள்ளி விடுமுறையின் போது ஸ்ரீவை அக்கா வீட்டுக்குப் போயிடுவேன். அத்தான் அங்குள்ள அஞ்சிலாம்பு (அஞ்சு lamp)பக்கத்தில்
சின்ன பெட்டிக்கடை வைச்சிருந்தாங்க. நாளிதழ், வாரப்பத்திரிகை, மாத நாவல் எல்லாம் சுடச்சுடவிற்பனைக்கு வரும். அத்தனையும் உடனுக்குடன் படிக்கலாம் என்பதாலேயே லீவுக்கு அங்கே ஓடிவிடுவேன். எல்லாத்தையும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது. அதனாலே அத்தானுக்கு டீ, காபி கொண்டு போற சாக்குலே போய் காலையில் வர்றதெல்லாம் படிச்சுடுவேன். மத்திய உணவுக்கு அத்தானை மாற்றிவிடும் சாக்கில் கடையிலேயே உக்கார்ந்து மத்த எல்லா புக்கும் படிச்சுடுவேன். அந்த சமயத்தில் பீடி, சிகரெட், வாழைப்பழமெல்லாம் விற்பனை செய்திருக்கிறேன்.
ஞாயிறு அன்று கடை லீவ் என்பதால் எல்லாரும் சினிமாவுக்குப் போவோம். “தாமரை நெஞ்சம்” சினிமா பார்க்கப்போனபோது அக்கா மஞ்சள் நிற புடவை கட்டியிருந்தாள். படம் முடிந்து வெளியே வரும்போது சினிமா காட்சிகளை அசை போட்டுகிட்டே அக்கா பின்னாடி நடந்தேன். ரொம்ப நேரம் நடந்தும் வீடே வரலை. கால் வேறே நல்லா வலிச்சுது. அப்போதான் தலையை நிமித்தி அக்காவைப் பார்த்தால் அது வேறு யாரோ ஒரு பெண், மஞ்சள் புடவையில். அந்த ஊர் பெயர் குருசை கோவில். எதிரே சர்ச். (பின்னாடி வாழ்க்கை சர்ச்சில்தான் என்று அப்போதே மனதில் முடிச்சு விழுந்திடுச்சு போலிருக்கு)
ஸ்ரீவையிலிருந்து வாய்க்கால் ஓரமா ரொம்ப தள்ளி உள்ள ஊர் அது.பயந்து அழுது அடம் பிடிச்சு என்கிட்டே இருந்து
ஒரு வழியா விஷயங்களைப் பிடுங்கி விலாசம் தெரிஞ்சுகிட்டாங்க.வீட்லே கொண்டுவிட ஏற்பாடு செஞ்சாங்க. நேரமோ நடுராத்திரி கிட்டே ஆயிடுச்சு.
அதுக்குள்ளே வீட்டுக்குப் போன அக்கா அப்போதான் நான் கூட வரலைங்கிறதைக் கண்டுபிடிச்சிருக்கிறாள். நல்லா திட்டு கிடைச்சிருக்கு. பெரியத்தானும் சின்னத்தானும் சைக்கிள் எடுத்துட்டு சினிமா தியேட்டர் , பஸ் ஸ்டாண்டுன்னு தேடி அலைஞ்சிட்டு இருந்தாங்க. ஒருவழியா தேடிப்போன கோஷ்டியும், திரும்ப கூட்டிட்டு வந்த கோஷ்டியும் சந்திச்சுகிட்டதால் சீக்கிரமா வீடு வந்து சேர்ந்தேன். வீட்லே வந்து நல்லா அக்காகிட்டே அடி வாங்கினேன். அதற்குப் பிறகு ஸ்ரீவைகுண்டத்தில் சினிமா பார்க்கப் போனதில்லை.
மேலே நடந்த விஷயங்களை எல்லாம் ஆறுமுகநேரியில் அக்கா சொல்லவே இல்லை. அவளுக்கும் சேர்த்துதான் மண்டகப்படி கிடைக்கும்னு சொல்லாமல் மறைச்சிட்டாள். பெரிய மனுஷி ஆனபிறகு லீவுக்கெல்லாம் வெளியூர் அனுப்பாத காலம் வந்த பிறகுதான் எப்பவோ சொன்னாள். அதற்குள் விஷயத்தின் சூடு தணிந்து என்னைக் கேலி பண்ண முடியாத அளவுக்குப் பிசு பிசுத்துப் போய்விட்டது.
எனக்கும் நயினார் அண்ணனுக்கும் ஐந்து வருட இடைவெளி. நானாவுக்கும் எனக்கும் இரண்டரை வருடம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளும் களேபரங்களும் அவனுக்குத்தான் அதிகம் பரிச்சியம் என்பதால் என்னக் கேலி பண்ணவும் கடுப்பேத்தவும் அடிக்கடி இதையெல்லாம் கையில் எடுத்துக்குவான். அவனைக் கேலி பண்ண நானும் சில விஷயங்கள் வைத்திருப்பேன். பதிலுக்குப் பதில் சொல்லம்புகள் பறந்து சண்டை களை கட்டும்போது அண்ணனோ அக்காவோ வந்து அதட்டல் போட்டு அடக்கிவிடுவார்கள்.
தூக்கத்தில் நடந்தது கதை சொன்னதெல்லாம் எப்போது மறைந்தது எப்படி போச்சுது என்பதெல்லாம் விளங்கவே இல்லை. ஆனாலும் அப்பப்போ தூக்கத்தில் எழுந்து சுவரோரம் நின்று பயமுறுத்துவதாக தம்பி அவ்வப்போது கோள் சொல்லுவான். இந்த விஷயங்களை ஒரு குறைபாடாக அம்மாவோ அப்பாவோ கருதவே இல்லை. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து (Somnambulism) ”தூக்கத்தில் நடப்பது” பற்றி படித்தபோதுதான் சுமார் 20% மக்களில் இது நடப்பது இயற்கை என்பது புரிந்தது. அளவுக்கு அதிகமான வாசிப்பும் நில நேரங்களில் தூக்கத்தைக் கெடுப்பதால் இந்த மாதிரி நிகழலாம்.
அடடா! என் பதிவுகளை வாசிக்கச் சொல்லி எழிலுக்கு அன்புக் கட்டளை வேறே போட்டிருக்கேன். காதலிச்ச காலங்களிலேயே கட்டுரை (composition) மாதிரி இருக்குதுன்னு பாதி கடிதங்களைமட்டும் படிக்கிற ஆளு. இந்த "பின்பக்கத்தின் பளீரொளி" , அதாங்க "Flash-back" கதையை வாசித்துவிட்டு ஏதேனும் விபரீத முடிவெடுத்தால் என்ன செய்வது? கலகத்தை ஆரம்பித்த நாரதர் நாராயணன் (நானா) தான்
மத்தியஸ்துக்கு வரணும். மச்சானும் மச்சினனும் தோஸ்த்துங்கதான்.
0 Comments:
Post a Comment
<< Home