Monday, September 21, 2020

அலை-16

 அலை-16

தென்னந் தட்டிக்குக் ”கிடுகு” என்ற பெயர் இருந்ததே மறந்து விட்டது. நண்பன் அஸ்வதரன் நினைவூட்டிய பின்தான் நினைவுக்கு வந்தது.  


பள்ளிப் பருவத்தில் ஆண்களுக்கு சாரணர் இயக்கம் ( Scout)  இருப்பதுபோல் பெண்களுக்கு சாரணியர் இயக்கம் (Guides) உண்டு. எனது வகுப்புத் தோழன் சுதாகரின் அம்மா அலெக்ஸ் டீச்சர்தான் எங்களுக்கு Guides ஆசிரியை. கண்டிப்பும் கனிவும் ஒரு சேரப் பெற்ற அன்பான ஆசிரியை. வகுப்புத் தோழன் அம்மா என்பதால் எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.  வாரத்தில் ஒருநாள் சாரணியர் வகுப்பு இருக்கும். அதில் நிறைய கைவினைப் பொருட்கள் செய்ய சொல்லித் தருவாங்க.


 கிடுகு பின்னுவதும் அதில் ஒன்று. கிடுகு தட்டி பின்ன மாட்டோம், அந்த மாதிரி பின்னலில் ஓலைப்பெட்டி முடைய சொல்லித் தருவார்கள்.எங்கள் ஊரில் பனை மரம் அதிகம் என்பதால் பனை ஓலைகள் இலகுவாகக் கிடைக்கும். 


கொஞ்சம் இளசாக உள்ள ஓலைகளைக் கிழித்து சமமான அளவுள்ள பனை நார்கள் ரெடி பண்ணுவது முதல் பயிற்சி. சொல்ல ஈஸியாக இருக்கும். ஆனால் நேர் கோட்டில் நார்கள் கிழிப்பது ரொம்பக் கஷ்டம். வகுந்து இழுக்கும் போது குறுக்கு வாக்கில் கிழிந்து பல்லி மாதிரியோ பல்பம் மாதிரியோ கண்ட வடிவங்களில் வரும். நிறைய ஓலைகளை வீணாக்கிய பிறகுதான் கொஞ்சம் நார்கள் கிடைக்கும். அதுக்கே ஒருவாரம் ஒப்பேத்திடுவோம். ஹோம் வொர்க் எல்லாம் உண்டு. ஒருவழியாக ”படித்து கிழித்து”(ஓலையைத்தாங்க) பனை நார்களுடன் அடுத்த வாரம் தயார் நிலையில் இருப்போம்.


ஓலைப்பெட்டியில் முதலில் அடிபாகம்தான் பின்னணும். ரெண்டு பனை நார்களில் முதல் கட்டம் பின்னிவிட்டு அடுத்த கட்டத்துக்கு போகும் முன்னர் முதல் கட்டம் பிரிந்து வந்துவிடும். எப்படியோ திக்கித் திணறி ரெண்டுமூணு கட்டம் போட்ட பிறகும் பிடிமானம் இறுகலாக இல்லாவிட்டால் எல்லாம் உருவிகிட்டு வந்துடும். பரோட்டா சூரி பாணியில் ‘‘மறுபடியும் முதலில் இருந்து’’ ஆரம்பிக்க வேண்டியதுதான். எப்படியோ ரெண்டு மூணுவாரம் வேர்வை சிந்தி உழைச்சு அடிபாகம் போட்டுட்டு பெருமையா அலெக்ஸ் டீச்சர்கிட்டே கொண்டு போவோம். அடுத்த கட்டமாக பெட்டி செய்ய பயிற்சி கொடுப்பாங்க. கூடையை மடக்கி பெட்டிபோல் செய்யவேண்டுமென்றால் நாலு மூலைகளையும் மடக்கி  ஷேப்புக்குக் கொண்டு வரணும்.  எத்தனை தரம் சொல்லித் தந்தாலும் புரியாது. மூலை மடிக்கத்தெரியாமல் கூடை பின்னுவதையே விட்டுட்டு ஓடிப்போனவர்கள் அதிகம். நானெல்லாம் எதுக்கும் கலங்காத வில்லி வீரம்மா. ஒருவழியாக சில பல நாட்கள் முயற்சி செய்து கூடை பின்னி முடிச்சிட்டேன். ஆனால் அதுக்குப் பெயர்  'ஓலைப் பெட்டி"ன்னு சொன்னால் யாருமே நம்பலை,அப்படி ஒரு நசுங்கிய பெட்டி அது.


பெட்டி பின்னுவது போக நிறைய கைவேலைகள்  வாழ்க்கைக்கு உகந்ததாக சொல்லித் தருவார்கள். கைக்குட்டைக்கு மடிப்பு தைத்து பூவேலை செய்வது, வயர் கூடை பின்னுவது, பாசி கோர்த்து மணி பர்ஸ் செய்வது போன்ற பல  பயிற்சிகள் உண்டு. அன்று அழு மூஞ்சியா கத்துகிட்டதெல்லாம் இப்போ நிறைய  பயனுள்ளதாக இருக்குது. இப்பவும் எங்க வீட்லே உள்ள வயர்கூடைகள் சில நான் பின்னியதாகவே இருக்கும்.


பாசியில் மணிபர்ஸ் பண்ண பாசிக்காக அலைவது குட்டி டூர்தான். எங்க ஊரில் ஒரேயொரு கடையில்தான் இந்த விஷயங்களெல்லாம் வைத்திருப்பாங்க. அந்தக் கடை முதலாளி பையனும் என் வகுப்புத் தோழன்தான் .VTS  கடை என்று ஞாபகம்.. ஆனால் அங்கே நினைச்ச கலரில் பாசி இருக்காது. மயில் டிசைன் போடணுமென்றாலும் யானை என்றாலும் ஒரே கலர் பாசிதான். வேண்டிய கலர் சொல்லி, அவங்க கொள்முதல் செய்து எங்க கைக்குக் கிடைப்பதற்குள் வருஷமே முடிஞ்சிடும். அண்ணன் அக்கா  யாராவது திருச்செந்தூரோ திருநெல்வேலியோ போனால் சீக்கிரமாகக் கிடைக்கும். 


வருஷத்துக்கு ஒருமுறை பக்கத்து ஊர்களில் நடக்கும் சாரணியர் கேம்ப்புக்கும் கூட்டிட்டு போவாங்க. அதுக்குன்னு பிரத்தியேக பயிற்சிகளெல்லாம் நடக்கும். வேறு பள்ளிகளிலிருந்து வரும் பெண்களிடம் அறிமுகமாக நல்ல வாய்ப்புகூட.  ஒரே தரம் மெஞ்ஞானபுரம் சென்று வந்தது நினைவிருக்கிறது. 


சாரணியருக்குன்னு ஒரு யூனிபார்ம் உண்டு. கரு நீலக் கலரில் பாவாடை தாவணி, வெள்ளை நிற ரவிக்கை. எனக்கு அந்தக் கலரே பிடிக்காது. நாங்களெல்லாம் அநேகமா  பனை மரம், தென்னை மரம் கலரில்தான் இருப்போம். அந்த கருங்கலர் போட்டால் எங்களுக்கும் துணிக்கும் வித்தியாசமே தெரியாது. வீட்லேயும் ரெகுலர் யூனிபார்ம் தவிர கூடுதலாக இந்த யூனிபார்ம் எடுத்துத் தர மாட்டாங்க. அதனால் பாவாடையிலிருந்து தாவணிக்கு மாறிய பிறகு சாரணிய வகுப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. 


சாரணர்கள் ஆடை மட்டும் விறைப்பான டவுசர், தொப்பி, கழுத்தில் உள்ள ஸ்கார்ஃப் , பூட்ஸ் என்று அட்டகாசமாக இருக்கும். அதன் ஆசிரியர் நம்பி சாரும் கண்டிப்புடன் இருப்பார். பள்ளியில் பசங்க எல்லோரும் பயப்படுவது நம்பி சாருக்குத்தான். எங்களோட உடற் பயிற்சி ஆசிரியரும் அவர்தான். ஞானையா சாரும் உடற்பயிற்சி ஆசிரியர்தான், ஆனாலு கொஞ்சம் இளகிய மனசுள்ளவர். 


அசெம்பிளிக்கு தாமதமாக வருவது, வகுப்பு நேரங்களில் வெளியே சுற்றித் திரிவது, உடற் பயிற்சி சமயங்களில் கட் அடிப்பது போன்ற நேரங்களில் நம்பி சார் பிரம்புதான் எல்லோரையும் கட்டுப் படுத்தும்  மந்திரக்கோல்.


 பள்ளியின் முன்புறம்,  பின்புறம், பக்கவாட்டில் உள்ள நடைபாதை எல்லாமே மைதானங்கள்தான். எல்லா விளையாட்டுக்களும் அங்கேதான் நடக்கும். ஒரே நேரத்தில் ரெண்டு மூணு வகுப்பு மாணவர்கள் கூட உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவு விஸ்தாரணமான காலி இடங்கள் உண்டு. 


பின்னாடி உள்ள மைதானம் மிகப் பெரியது என்பதால் கால்பந்து விளையாட்டுகள் அங்கேதான் நடக்கும். மாணவர்களின் ஓட்டமும் ஆட்டமும்  "பிகில்" பட காட்சிகளை மிஞ்சும் வண்ணம் இருக்கும். பெண்களெல்லாம் துரைப்பாண்டியன் சார் வீட்டு மாடியிலிருந்து திருட்டுதனமாகப் பார்ப்போம்.


 ஆசைப்பட்டு விளையாடுபவர்களும், அடிக்குப் பயந்து அவஸ்தையுடன் விளையாடுபவர்களும் எல்லா வகுப்பிலும் உண்டு. 

 வேப்ப மரத்தடி நிழலில் ரெண்டு இரும்பு போஸ்ட் இருக்கும். ”முதல் மரியாதை” சிவாஜி மாதிரி கெத்து காட்ட பசங்களெல்லாம் அதில் தொங்கி புல்-அப்ஸ் எடுப்பாங்க.  நாங்களெல்லாம் அதில் தொங்கி ஊஞ்சல் மட்டும் ஆடுவோம்.


 அடர்த்தியான மர நிழல் கபடி விளையாட வசதியான இடம். பேயன்விளையிலிருந்து வரும் பெண்கள் கூட்டம் நல்லா விளையாடுவாங்க. அதிலொரு இரட்டையர்கள் ( ஒருத்தி பெயர் வத்ஸலா) சூப்பரா விளையாடுவாங்க. என் தோழி ஜான்ஸியும் நல்லா விளையாடுவாள்.  நான் அப்போ ரொம்ப நோஞ்சான். எப்போ கபடி விளையாடினாலும் காலில் அடிபட்டு ஜவ்வு கிளிஞ்சிடும். ஒருவாரம் நொண்டிக் கொண்டுதான் வகுப்புக்கு வருவேன்.


ஆண்டு விழா சமயத்தில்மட்டும் எல்லா போட்டிகளிலும் பெயர் கொடுத்திடுவேன். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த சமயத்தில் எங்க அண்ணன்கள் 11 ஆம் வகுப்பில் இருந்தார்கள். நான் ஓட்டப் பந்தயத்தில் சேரப் போறேன்னு சொன்னப்போ 8ஆம் வகுப்பு வரை ஒரே தகுதிதான். பெரிய வகுப்பு பொண்ணுங்க கூட விளையாடி நீ ஜெயிக்க முடியாது, சேர வேண்டாம் என்று சொன்னாங்க. ஆனாலும் அண்ணனுக்குத் தெரியாமல் பேர் கொடுத்திட்டேன். அங்கங்கே தனித் தனியாகத்தான் போட்டி நடக்கும், தப்பிச்சுக்கலாம்னு நெனைச்சேன். ஆனால் என் துரதிருஷ்டம், எங்க போட்டிக்கு நயினார் அண்ணன் தான் லைன் அம்பயர். எப்படியோ பயந்துகிட்டே ஓடி ரெண்டாவது பரிசு வாங்கிட்டேன். 


நாங்க பள்ளி இறுதி வருஷம் வந்த போதுதான் கிரிக்கெட் என்ற விளையாட்டு பற்றி பரவலாகப் பேசப் பட்டது. அதுபற்றி எதுவும் புரியாத நாட்களில் கிரிக்கெட் பேட்டை பேஸ்பால் விளையாட பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.


அடடா இந்த நினைவலை

கிடுகில் ஆரம்பித்து 

கிரிக்கெட்டில் முடிந்துவிட்டதே!!

0 Comments:

Post a Comment

<< Home