Thursday, October 01, 2020

அலை-19

 

அலை-19

பள்ளிப் பருவத்தில் சென்ற சுற்றுலாக்கள் ரொம்ப குறைவுதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியம். என்னோட நினைவுகளைக் கசக்கி வெளிக் கொணர்ந்ததில், ”சுனைக்கு போனதுதான் முதல் சுற்றுலான்னு தெரியுது. இன்று சுற்றுலா மேம்பாட்டுத் துறையால்அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்என்று பெயரிடப்பட்டிருந்தாலும் எங்கள் குழந்தைப்பருவத்தில் அதன் பெயர் வெறும் சுனை தான்.

 

எங்க ஊரிலிருந்து சுனைக்குப் போக பஸ் கிடையாது, நடந்துதான் போகணும். கிட்டத்தட்ட 5 -7 கி.மீ. இருக்கும். குளக்கரை, வரப்பு போன்ற குறுக்கு வழியில் போனால் 5 கி.மீ. தான். முதல் சுற்றுலாவின் போது காலையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டோம். முன்னாடியும் பின்னாடியும் ஆசிரியைகள் வந்த மாதிரி ஞாபகம் இருக்கு. நாங்களெல்லாம் கும்பலா பேசி, கத்தி, சிரித்து , குதித்து நடந்தோம். தூரம் பற்றிய பயமோ சோர்வோ அந்த வயதில் ஏது? பயமறியா இளங் கன்றுகள்.

 

பள்ளிவாசல் பஜார் வழியாகப் போய் பண்டார குளம் தாண்டி குதிரைக்காரன் குண்டு (சின்ன தண்ணீர்க் குட்டை) பக்கமாக வந்து புதுக்குளம் வரை ஏற்கனவே அறிமுகமான இடங்கள்தான்.  வரப்பில் நடக்கும் போது இரண்டு பக்கமும் வயல்வெளி பரந்து கிடக்கும். சில வயல்களில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தலை கவிழ்ந்து சாய்ந்திருக்கும். அதிலிருந்து முற்றிய கதிர்களைக் கை கொள்ளாமல் பறித்துக் கொண்டோம். வழிப் பயணத்துக்கு வெறும் வாயை மெல்லாமல் நெல்மணிகளை சுவைத்துக்கொண்டே நடந்தோம்.

 

புதுக்குளம் தாண்டி சோனங்காட்டுவிளை (சோனகன்விளை)வரைக்கும் குறுகலான பாதையில் காட்டு மலர்களும், பெயர் தெரியாத தாவரங்களும் மண்டிக்கிடக்கும். கொத்துக்கொத்தாக வளர்ந்திருக்கும் காட்டு மலர்களைப் பறித்துவிட்டால் கையெல்லாம் நாற்றம் அடிக்கும். ஒரு சிலருக்கு கையில் எரிச்சலும் அரிப்பும் கூட வந்தது. அதுக்குள்ளே வெயில் வேறே அதிகமாயிடுச்சு.

 

 அவங்கவங்க கட்டிக் கொண்டு .திருந்த காலை உணவை இடைவழியில்  எங்கேயோ வைச்சு சாப்பிட்டோம்.

சோனங்காட்டுவிளையில் தார் ரோடு குறுக்கிடும். திருநெல்வேலி - திருச்செந்தூர் பஸ் ரூட் அது.

 

அத்துடன்  முக்கால்வாசி தூரம் கடந்திருப்போம். எறும்புக் கூட்டம் ஊர்வது மாதிரி  ரெண்டு ரெண்டுபேராகக் கைகோர்த்துக் கொண்டு ரோட்டைக் கடந்தோம். அதற்குள் நிறைய பேருக்கு கால்வலி, மூச்சிரைப்பு, வியர்வை வெள்ளம் என கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிசுடுச்சு. ரோடு தாண்டினதும் சுனைதான் என்று சொல்லி உற்சாகப்படுத்தி மீண்டும் நடக்க வைச்சாங்க. அதற்குப் பிறகே கிடத்தட்ட ஒரு மணி நேரம் நடந்திருப்போம்.

 

 நிறைய மரங்களும் ஓடையும் வழியெங்கும் இருந்ததால் அலுப்பு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.

மணல் குன்று மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததும் சுனை வந்துடுச்சுன்னு சொன்னாங்க. சுற்றி சுற்றி பார்த்தாலும் எங்கேயும் எதுவுமே தெரியலை. மணல் குன்று சரியுற எடத்தில் தாழம்பூ செடிகள் மண்டிக் கிடந்தது. ஒற்றையடி பாதை ஒன்று கீழ் நோக்கி இறங்கியது. எல்லோரும் ஆட்டு மந்தைகள் மாதிரி கும்பலாக இறங்கினோம். கீழே வந்ததும் தெரிந்த காட்சி அலுப்பையெல்லாம் ஆனந்தமாக்கிவிட்டது.

 

காட்டுக்கு நடுவில் ஒரு கோவில், அதை ஒட்டி ஒரு குளம். நாங்கள் சென்றது வெயில் காலம் என்பதால் தண்ணீர் குறைவாக இருந்தது. மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி வழியும் என்று சொன்னார்கள். இயற்கை அழகுடன் ரம்யமான சுனை. 

 

சரியாகச் சொல்லணும்னா சுனை இருக்குமிடம் திருச்செந்தூருக்கும் நாசரேத்துக்கும் இடைப்பட்ட செம்மண் தேரியின் நடுவில். ஒரு விதமான பாலைவனம்தான்.(desert sand) அதிலிருந்த சுனை  பாலைவனச் சோலைவகையைச் சார்ந்ததாகத்தான் இருக்கும். சுனை என்றால் நீரூற்று (fountain) என்றும் பொருள் உண்டு. வருஷம் முழுவதும் வற்றாத நீரூற்று.

 

கோயிலையும் குளத்தையும் பார்த்ததும் பயங்கர சந்தோஷம். திகட்ட திகட்ட விளையாட விட்டுட்டாங்க. ஒரு பக்கத்தில் கல் அடுப்பு கூட்டப்பட்டு மதிய சமையல் ஆரம்பிச்சாங்க. பெரிய வகுப்பு மாணவ மாவிகளும் சில உதவியாளர்களும் சேர்ந்து "கிராமத்து சமையல்" செய்தார்கள்.

 

குளத்தில் கல் எறிந்து விளையாடுவது ரொம்ப ஜாலி. உடைந்த மண்பாண்டங்களில் உள்ள ஓடுதான் அதற்குரிய ஆட்டக்காய்.அதை லாவகமாக தண்ணீரில் வீசினால் ரெண்டு மூணுதரம் தண்ணீரைத் தொட்டு எழும்பி வழுக்கிப் போகும். பார்க்க ரம்யமாக இருக்கும். எத்தனை தரம் ஓடு எம்பிக் குதிக்கிறதோ ( ஸ்டெபி க்ராஃப் மாதிரி இல்லை) அதை வீசினவங்கதான் வீரர்கள். கோயிலுக்கு வர்றவங்க மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம் என்பதால் உடைந்த ஓடுகளுக்கு பஞ்சமே இருக்காது.

 

ஆம்பிளைப் பசங்களெல்லாம் மரத்திலே ஏர்றது தாவுறதுன்னு இருந்தப்போ நாங்களெல்லாம் தாழம்பூ பறிக்கிறது, நவ்வாப்பழம் (நாவல்பழம்) பொறுக்கிறதுன்னு பிஸியா இருந்தோம்.

 

மதிய உணவு அதற்குள் ரெடியாகிவிட்டதால் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டோம். வாழை இலையில் சுடச் சுட சோறும் குழம்பும் ஊற்றப்பட்டது. எல்லா காய்களும் வெட்டி போடப்பட்டு மிளகாய் சாம்பார் வைத்திருந்தார்கள். அது போன்ற மிளகாய் சாம்பார் அதன் பிறகு இன்றுவரை சாப்பிட்டதில்லை. அதன் மணமும் ருசியும்  Dejavu வாக அப்பப்போ மிளகாய் சாம்பார் சாப்பிடும் போதெல்லாம் வருவதுண்டு.

 

சாயங்காலம் இருட்டுவதற்குள் வீடு திரும்ப வேண்டுமென்பதால் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே கிளம்பச் சொல்லிவிட்டார்கள். பிரியா விடையுடன் மறுபடி நடக்க ஆரம்பித்தோம். அசதியும் சலிப்புமாக திரும்பும் போது யாருக்கும் சுரத்தே இல்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகுதான் மறுபடியும் சுனைக்கு செல்ல முடிந்தது. அதன் மண்வாசனையும் அமைதி தன்மையும் மறைந்து போய் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. கார், பஸ் எல்லாம் வருகிறது , கழிவுகளும் குவிகிறது.

 

சுனைக்கு பிறகு சுற்றுலான்னு போனது திருநெல்வேலிக்குத்தான். கொஞ்சம் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டதால் வெளியூருக்கு அனுப்ப பெற்றோர்கள் அனுமதி கிடைத்தது. புகை வண்டி மூலம் காயல்பட்டினம் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டோம். முதலில் பார்ப்பது அபிஷேகப்பட்டி கோழிப்பண்ணை . அதற்கு காலையிலேயே போக வேண்டும். எங்கள் ஊரிலிருந்து அதிகாலை புகை வண்டி கிடையாது. எனவே முதல் நாள் மாலை வண்டியில் கிளம்பி நெல்லை சென்றோம். அப்போதெல்லாம் தங்குவதற்கு ஹோட்டலோ விடுதியோ ஏற்பாடு செய்ய மாட்டார்கள். திருநெல்வேலியில் கட்டி முடிக்கப்படாத இரண்டடுக்கு மேம்பாலம்தான் எங்களின் தற்கால தங்கும் விடுதி. ஏற்கனவே போர்வை கொண்டுவரச் சொல்லியிருந்தார்கள். அதனால் முதல் அடுக்கில் போர்வை விரித்து படுத்திருந்தோம். இரண்டாம் அடுக்குதான் எங்களுக்குக் கூரை.

 

எங்களுக்குத் துணையாக நம்பி சார், ஞானையா சார், ஏஞ்சலா டீச்சர் எல்லாம் வந்திருந்தார்கள்.

காலையில் டவுண் பஸ்ஸில் அபிஷேகப்பட்டி போனோம். போகும் வழியில் சின்னச் சின்ன வாய்க்கால்கள் ஸ்டெப் ஸ்டெப்பாக இறங்கி வழியும் போது ஏற்பட்ட சின்னச் சின்ன அருவிகளையும் வயல்வெளிகளையும் ரசித்துவிட்டு கோழிப்பண்ணையையும் சுற்றிப்பார்த்தோம். அது கல்விச்சுற்றுலா என்பதால் முதலில் கோழிப்பண்ணை. மதியம் வரை அங்கேயே சுற்றிவிட்டு மதிய உணவிற்குப்பின் கிருஷ்ணாபுரம் விசிட்.

 

தமிழர்களின் சிற்பக்கலைக்கு இன்றும் உதாரணமாக விளங்கும் கிருஷ்ணாபுரம் கோவில் அன்று பெரிய மலைப்பாகத் தெரிந்தது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாளியும் அதன் வாயினுள் உருண்டுகொண்டிருந்த கல்பந்தும் எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்தது. இன்னோரு சிற்பத்தில் மேலிருந்து ஊசி போட்டால் எப்படி வருகிறது என்று தெரியாமலே கீழே வந்து விழுவதை மறுபடி மறுபடி சோதித்தி பார்த்தோம். இன்னும் நிறைய சிற்பங்களின் பெருமைகளை ஆசிரியர்கள் விளக்க உற்சாகமாக கேட்டுக் கொண்டோம்.

 

இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்து முடிக்க சாயங்காலம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் ஊருக்கு புகை வண்டி கிடையாது. மறுநாள் காலைதான் கிளம்ப முடியும். அதனால் முதல் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றார்கள். திருநெல்வேலியில் செண்ட்ரல் தியேட்டர்தான் மிகப் பெரியது. அங்குசிவகாமியின் செல்வன்சிவாஜி படம் பார்த்தோம். ஒத்த வயதுடையவர்களுடன் படம் பார்க்கும் சுகமே அலாதிதான். காதல் காட்சிகள் வந்தபோது வகுப்புத் தோழர்கள் உடனிருந்ததால் சின்ன குறுகுறுப்புடன் படம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

 

சினிமா முடிந்ததும் இரவு தங்கும் விடுதியாக திருநெல்வேலி புகை வண்டி நிலையத்தின் பிளாட்பாரம் அமைந்தது. வரிசையாக படுத்து, அன்று நடந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து சந்தோஷமான இரவாக கடந்து போனது. காலையில் எழுந்து முதல் வண்டியில் ஊர் நோக்கி பயணம் தொடங்கியது.

 

இதற்குப் பிறகும் சில சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு முறை சென்றோம். ஆனால் வெயில், நீண்ட நடைப்பயணம், வறண்ட உப்பளமும் , துறைமுகமும் அதிக சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை.

 

அன்று நடந்து சுற்றியதன் சுவை

இன்று காரிலும் விமானத்திலும்

கடல் கடந்து  செல்லும்போதும்

கணக்கற்று செலவளிப்பதிலும் இல்லை

பிளாட்பாரம் தந்த அரவணைப்பு

ரிஸார்ட்டுகளின் சொகுசிலும் இல்லை.

 

நெட்ஃப்லிக்ஸ் ப்ரைம் டைம்

நூறு படம் பார்த்தாலும்

எதிலும் புதுமையில்லை

எல்லாமே நேரப்போக்குதான்.

தரைடிக்கெட்டுக்கும் தங்கம் தியேட்டருக்குமே

தாகத்துடன் மனம் ஏங்குகிறது.

0 Comments:

Post a Comment

<< Home