Thursday, October 29, 2020

அலை-21

 அலை-21

”தைப்பொங்கல்”

பிக்னிக் அல்லது டூர் போறதுக்கு முன்னாடி, அதற்கு செய்யப்படும் முன்னேற்பாடுகள் பிக்னிக்கை விட சுவையாக இருக்கும்.அதே மாதிரிதான் பண்டிகைகள் வருவதற்கு முன்பு செய்யப்படும் ஏற்பாடுகளும். முக்கியமா தைப் பொங்கலுக்கு முன்னாடிதான் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். மார்கழி மாதம் தொடங்கியதுமே  சாணிப் பிள்ளையார் கோலத்தில் பூச்சூட்டிக் கொள்வார். காலையிலேயே மார்கழி மாத பஜனையும் தொடங்கிவிடும். 


பொங்கல் வைக்க அடுப்புக்கட்டி செய்ய ஆரம்பிப்பதிலிருந்தே பொங்கல் வேலைதான். அது ஒரு பெரிய தொடர்கதை மாதிரி மாசம் முழுக்க ஓடும். களிமண்ணில்தான் அடுப்புக்கட்டி செய்யணும், ரெடிமேட் மண் அடுப்பெல்லாம் உபயோகிக்கக்கூடாது. இப்போ மக்கள் செய்யுற மாதிரி வீட்டுக்குள் அடுப்பில் பொங்கல் வைப்பதில்லை, முன்வாசலில்தான் பொங்கல் வைப்போம். சூரியன் உதிப்பதற்குள் பால் பொங்கணும். 


வீட்டிலிருந்து ரொம்ப தூரமா உள்ள வயக்காட்டில்தான் களிமண் கிடைக்கும், பச்சைக் களிமண் எடுக்க விடமாட்டாங்க. வரப்பு ஓரம் இருக்கும் காய்ந்த களிமண்ணை எடுத்து வந்துதான் ஊற வைக்கணும். அப்புறம் அதை வட்டமா பரப்பிட்டு நடுவிலே குடம் குடமா தண்ணீர் ஊற்றி மிதிக்கணும்.


 நாலைஞ்சு குட்டீஸ் அதுலே நின்னு குதிச்சு விளையாடினாலே பாதி மண் இளக ஆரம்பிச்சிடும். அப்புறம் மண்ணை புரட்டி விட்டு மறுபடி மறுபடி மிதிச்சு பதத்துக்கு கொண்டு வரணும். விளையாட்டா கொஞ்ச நேரம் மிதிக்கும் போது ஜாலியாக இருக்கும். அப்புறம் கால் வலிக்கும், களிமண்ணுக்குள்ளே கால் புதைஞ்சுகிட்டு இம்சை பண்ணும், எப்போடா இதிலிருந்து தப்பிக்கலாம்னு பொடிசுங்க ரெடியா இருக்கும். 


நல்லா பதத்துக்கு வந்தப்புறம் மண்வெட்டி அல்லது சாந்து கரண்டி வைச்சு களிமண்ணை போணிச்சட்டி ( குத்து போணி) அல்லது சிலிண்டர் வடிவ டப்பாவில் அடைக்கணும். அடிபாகம் தட்டையாக இருக்கக்கூடாது, வளைஞ்ச மாதிரி இருக்கணும். இடைவெளி இல்லாமல் கெட்டியாக மண்ணை அடைச்சுட்டு பாத்திரத்தைத் தலை குப்புற தட்டும்போது அழகான “அடுப்புக்கட்டி” வந்துடும். 


அதை மாதிரி மூணு அடுப்புக்கட்டி போட்டல்தான் ஒரு அடுப்புக்கு சரியாக இருக்கும். சில சமயங்களில் ரெண்டு அல்லது மூணு அடுப்புகூட வைப்பாங்க. புதுசா கல்யாணம் ஆன ஜோடி இருந்தால் கண்டிப்பாக மூணு அடுப்புதான். அதனால் ஏழு கட்டி வரை ரெடி பண்ணணும். எங்க வீட்டுக்கு மட்டும்னு பண்ண முடியாது. பக்கத்து வீட்டு பெரியம்மா, மாரி மதினி எல்லாருக்கும் சேர்த்துதான் செய்யணும். அதனால் இருபதுக்கு குறையாமல் அடுப்புக்கட்டிகள் அணிவகுத்து உட்கார்ந்திருக்கும்.


வாசலில் பூசணிப் பிள்ளையார் வைக்கிற வீடுகளில் சிறு வீட்டுப் பொங்கல்னு ரெண்டாவது நாள் வைப்பாங்க. சிறுபிள்ளைகளுக்கான பொங்கல் .அதுக்கு தேவையான அடுப்புக்கட்டிகளும் செய்யணும். அளவு சிறியதாக டம்ப்ளர் அச்சில் செய்யணும். அதெல்லாம் எங்க சொத்து. தனியா தூக்கி வைச்சுக்குவோம்.


இந்த கட்டிகளெல்லாம் காய்வதற்கே ஒரு வாரத்துக்கு மேலே ஆயிடும். மழை வந்தால் நனையாத மாதிரி எதாவது ஒரு தார்சா(திண்ணை)வில் தூக்கி வைச்சிடணும். முதல் ரெண்டுநாள் கீறல் விழுத்திடாமல் இருக்க அப்பப்போ தண்ணீர் தெளிச்சு வைப்பாங்க.


எங்க வீடெல்லாம் பொங்கலுக்கு பொங்கல்தான் வெள்ளை அடிப்பாங்க. வெள்ளை அடிக்கிறதுக்கு முந்தி வீட்லே உள்ள பாத்திரங்கள், டப்பாக்கள், மத்த எல்லா அசையும் பொருட்களும் வெளியே வந்திடும். ரொம்ப நாள் கண்டு கொள்ளப்படாமல் இருந்த வெண்கலப் பாத்திரங்களும் அதில் அடக்கம். எல்லாவற்றையும் கழுவி துடைத்து காயவைத்து, வெள்ளை அடித்து காய்ந்ததும் வீட்டுக்குள் எடுத்துட்டு போகணும். மரக்கட்டில், மேஜை எல்லாம்கூட வெளியே வந்திடும்.  


இந்த வெண்கல பாத்திரங்கள் இருக்கே, அதுதான் எங்க எதிரி. கலரே மாறி கறுத்து போய் இருக்கும். அதையெல்லாம் புளி போட்டு பழுப்பு நிறம் வரும் வரை தேய்க்கணும். எவ்வளவு தேய்ச்சாலும் கலர் மாறாத ஐட்டங்களும் அதில் இருக்கும். மறுபடி சாம்பல் அல்லது திருநீறு போட்டு தேய்த்து பாலிஷ் போடணும். மறுபடியும் பரணுக்குப் போற ஆசாமிகளுக்கு இவ்வளவு பவிசு தேவையான்னு தோணும். ஆனால் பொங்கல் பானை வெண்கலத்தில்தான் இருக்கும். வேறே வழியே இல்லை, தேய்க்க வேண்டியதுதான். எங்க வீட்டு குத்து விளக்கு கூட பொங்கலுக்கும் தீபாவளிக்கும்தான் பரணை விட்டு கீழே இறங்கும். 


வெள்ளை அடிப்பது பொங்கலுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடிதான் நடக்கும். அப்போதான் அம்மாவுக்கு நேரம் கிடைக்கும். வசதியானவங்க ஆள் வைச்சு அடிப்பாங்க, ஆட்கள் நிறைய உள்ள வீடுகளில் அவங்களே அடிச்சுப்பாங்க.  இப்போ உள்ள மாதிரி ஏசியன் பெயிண்ட், பிர்லா பெயிண்ட் எல்லாம் கிடையாது. ஒன்லி சுண்ணாம்புதான். எங்க ஊர் சந்தையில் சுண்ணாம்பு விற்பனை படு ஜோராக நடக்கும். ஊரைச்சுத்தி நிறைய சுண்ணாம்புக் காளவாய்களும் உண்டு.சுண்ணாம்பு சுப்பிகளேகூட ரகம் ரகமாய் இருக்கும்.


சுண்ணாம்பு கலக்கவே தனியா மண்பானைகள் ரெடியாக இருக்கும். அதில் சுண்ணாம்பு சுப்பிகளைப்போட்டு இளஞ் சூடாக தண்ணீர் ஊத்தணும். சிப்பிகள் கரைஞ்சு நுரைச்சுகிட்டு சூடாகி சுண்ணாம்புக் கரைசல் ரெடியாகிவிடும். முந்தின நாளே கரைச்சு வைச்சிடுவாங்க. 


சுண்ணாம்பு சுவரில் அடிக்க பிரஷ் எல்லாம் கிடையாது. தென்னை மட்டையின் முனையை சுத்தியல் வைச்சு நசுக்கி ப்ரஷ் மாதிரி பண்ணிடுவாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மட்டை கிடைச்சிடும். சின்னச் சின்ன டப்பாக்களில் சுண்ணாம்பு எடுத்துகிட்டு ஆளாளுக்கு ஒரு சுவரை ரிசர்வ் பண்ணிக்குவோம். சின்னவங்களெல்லாம் குச்சி வீட்டுக்கு வெள்ளை அடிப்போம். பெரிய அண்ணன்களெல்லாம் ஓட்டு வீட்டுக்கு அடிப்பாங்க. உயரத்தில் அடிக்க ஏணியெல்லாம் கிடையாது. மேஜையை போட்டு, அதுவும் எட்டவில்லை என்றால் மேலே ஸ்டூல் போட்டு அடிப்பாங்க.


 இந்த வேலை மராமத்துகளெல்லாம் முடியவும் போகிப்பண்டிகை வரவும் சரியாக இருக்கும். 

காய வைத்திருக்கும் அடுப்பு கட்டிகளுக்கு வெள்ளை அடிக்கணும். காலையில் அடிச்சிட்டா சாயங்காலம் அது காய்ந்ததும், சின்னச் சின்ன கோடுகளாய் காவி அடிக்கணும். அவங்க அவங்க கற்பனையைப் பொறுத்து டிசைன் எல்லாம் போடுவோம்.அடுப்புக்கட்டி அலங்காரமாய் ரெடி.


 வீடு முழுக்க வெளிப்புற சுவரில் இடுப்பளவுக்கு காவி அடிக்கணும். முதலில் நேர் கோடாய் பார்டர் வரைஞ்சுக்கணும். கீழே வரிசையாக இடைவெளி விட்டு கோடு போடணும்.ரெண்டு கோட்டுக்கும் நடுவில்  V மாதிரி போடணும். அதென்னவோ வருஷா வருஷம் இந்த நடைமுறை மாறுவதே இல்லை. வெள்ளை அடித்த சுவரில் செம்மண் காவி கோடு கட்டி நிற்பது தனி அழகுதான். 


பொங்கல் வைக்க வேண்டிய இடத்தில் காவி அடித்து பார்டர் கட்டிடணும்.அடுப்புக் கட்டிகளை ராத்திரியே காவி பார்டருக்குள் கொண்டுவந்து வைத்து அடுப்புகளை செட் பண்ணிடணும். கோலம் போடுவது, மாவிலை கட்டுவது என்று அதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்.


பொங்கல் அன்று அதிகாலையிலேயே முன்வாசலில் அடுப்பு பக்கத்தில் குத்துவிளக்கு வைத்து அதன் முன்பு தலை வாழை இலை விரிக்கப்பட்டிருக்கும். அதில் ஊரிலுள்ள அத்தனை காய்கறிகளும் ரெண்டு மூணுன்னு அடுக்கப்பட்டிருக்கும். நிறைநாழியில் நெல்லு வைச்சிருப்பாங்க. குத்துவிளக்குக்கு காவல்காரன் மாதிரி கரும்பு நிறுத்தப்பட்டிருக்கும். பனங் கிழங்கு சீசன் அப்போதுதான் என்பதால் பெரிய கட்டு வைச்சிருப்பாங்க.


எங்க அம்மாவும் மதினியும் அதிகாலையில் குளித்துவிட்டு பொங்கல் பானையை ரெடி பண்ணுவாங்க. எங்க அம்மா காலையிலேயே குளிப்பது பொங்கல் அன்று மட்டும்தான் இருக்கும். தீபாவளி அன்னைக்குக் கூட பலகாரமெல்லாம் செய்துட்டு கடைசியாகத்தான் குளிப்பாங்க. பொங்கல் பானையின் கழுத்தில் மஞ்சள் குலை கட்டப்பட்டிருக்கும். பச்சரிசியைக் களைந்து அந்த கழனித் தண்ணீரை பொங்கல்பானையில் முக்கால் பாகம் ஊற்றுவாங்க. சர்க்கரைப் பொங்கலுக்கு அடுத்த பானை ரெடியாகும். 


பானைகள் அடுப்பில் ஏற்றப்பட்டதும் தீ போடுவது ருசிகரமான விஷயம். பனை ஓலையில்தான் தீ போடணும், விறகு பயன்படுத்தக்கூடாது. மூணு பக்கத்திலிருந்தும் தீ போடணும், ஆளுக்கு ஒரு மூலை. தீ போடும் திறமையைப் பொறுத்து யார் பக்கம் தண்ணீர் பொங்குதோ அவங்க ஜெயிச்சவங்க. ஓலையில் தீ போடுவது சாதாரண வேலையில்லை. காத்து திசை மாறினால் முகமெல்லாம் சிவந்துவிடும், பார்த்து பக்குவமா போடணும். 

பால் பொங்கியதும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொல(குலவை) விடுவாங்க.


 அரிசியை பானையில் போட்டு பொங்கல் வேக ஆரம்பிக்கும். அதுக்கு பிறகு தீயை தணித்து பக்குவமாக பண்ணுவது அம்மா வேலை. பால் பொங்கிடுச்சா என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பரஸ்பரம் விசாரித்துக் கொள்வார்கள். பொங்கல் இறக்கியதும் உள்ள தணலில் பனங் கிழங்குகளை சொருகி வைத்துவிடுவோம். சுட்ட கிழங்கு ரொம்ப சூப்பராக இருக்கும்.


பொங்கல் பானைகளை அடுப்பு முன் இறக்கி வைத்து சிம்பிளாக ஒரு பூஜை பண்ணியதும், முதலில் காக்காவுக்குத்தான்  சோறு வைக்கணும். சின்ன தட்டில் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வைத்து எல்லாரும் கூட்டமாக நின்று “கா கா “ என்று கூப்பிட்டால் நாலைந்து காக்காவாவது வந்து சாப்பிட்டுச் செல்லும். அதற்குப் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். காக்கா வராட்டி மொட்டை தட்டட்டியில் கொண்டுபோய் வைத்து காத்திருக்கணும். காக்கா வாய் வைச்சாதான் நமக்கு சாப்பாடு! ஆனாலும் நாங்களெல்லாம் அதுக்கு கலங்குறவங்க கிடையாது. கரும்புத் துண்டும் சுட்ட கிழங்கும் கைவசம் எடுத்துட்டு சிட்டாய்ப் பறந்திருப்போம்.


பொங்கலோ பொங்கல் 

பொருத்திப் பார்க்கிறேன் 

வாசலில் வாசமாய் இருந்தது அன்று

கேஸ்அடுப்பில் ரெசிபி பார்த்து இன்று!

0 Comments:

Post a Comment

<< Home