அலை-28
அலை-28
”பட்டாசைச் சுட்டு சுட்டுப் போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா”ன்னு அமர்க்களமா நடக்கும் தீபாவளி, இந்த வருஷம் நமுத்துப்போன புஸ்வாணம் மாதிரி கிடக்குது. அடாது மழை பெய்தாலும் விடாது பட்டாசு வெடிச்சு காதைச் செவிடாக்கினவங்க நாங்க. புதுத் துணி, பட்டாசு ரெண்டும்தான் எங்களோட தாரக மந்திரமே.
தீபாவளிக்கு ஒருமாசத்துக்கு முன்னாடியே புதுத் துணி எடுக்கிற வைபவம் தொடங்கிடும். துரை அண்ணன் தரங்கதாரா கம்பெனியில் வேலை பார்த்து வந்ததால் மொத்தமாகத் துணி எடுத்துகிட்டு அவனோட மாச சம்பளத்தில் பிடித்துக் கொள்வாங்க. அதனாலே ஒரு வருஷத்துக்குரிய துணிகளும் அப்பவே வாங்கிடுவாங்க. ஸ்கூல் யூனிபார்ம் எல்லாம்கூட அந்த பர்ச்சேஸ்லேயே வந்திடும். இல்லாட்டியும் வேறு எந்த விசேஷத்துக்கும் புதுத் துணியெல்லாம் கிடையாது. பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் மாதிரி பெயர்களெல்லாம் கேள்விப்பட்டதே கிடையாது. அதெல்லாம் கல்லூரிக்குப் போன பிறகு தெரிந்துகொண்ட லக்ஸரி.
ஆத்தூர்லேதான் கம்பெனியோட துணிக்கடை உண்டு. கொஞ்சம் பெரிய பசங்க ஆனபிறகுதான் நாங்களெல்லாம் கடைக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். அதுக்கு முன்னாடி அக்காவோ அண்ணனோ போய் எடுத்து வருவாங்க. தருவதைப் போட்டுக்க வேண்டியதுதான், சாய்ஸ் எல்லாம் கிடையாது. தாவணிக் கனவுகளுக்கு வந்த பிறகுதான் என்னோட துணிகளை நானே செலெக்ட் பண்ணும் சந்தர்ப்பமே கிடைத்தது. ஆனால் ஏண்டா வந்தோம்னு இம்சைப் படற அளவுக்கு அந்தக் கடையில் கூட்டம் இருக்கும். புதுத் துணி வந்ததும் அதன் வாசனையும், துணியை வருடும்போது கிடைக்கும் சுகமும் அலாதியானது.
துணி எடுத்த நாளிலிருந்து டெய்லர் கடைக்கு அலைவது அடுத்த எக்சர்சைஸ். ஒரு டெய்லரும் சொன்ன நாளைக்குள் துணி தைத்துத் தந்ததாக சரித்திரமே இருக்காது. தீபாவளிக்கு முதல்நாள் நடுராத்திரி வரைகூட டெய்லர் கடையில் பழியாய்க் காத்துக் கிடந்த வருடங்கள் அநேகம் உண்டு. அநேகமாக தைச்சு வாங்கின பிறகு அளவு சரியாகவே இருக்காது. எங்க ஊர் டெய்லர்களெல்லாம் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள். அடுத்த வருடம் குண்டாகிவிடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் ரெண்டு ஆள் நுழையிற மாதிரிதான் ட்ரெஸ் தைச்சுத் தருவாங்க. கடனேன்னு போட்டுக்க வேண்டியதுதான். ரெடிமேட் துணிகள் எட்டிக் கூடப் பார்த்திராத கிராமத்துத் தீபாவளி.
துணி வாங்க டெய்லர்கிட்டே போறதுக்கு முன்னாடி எங்க கண்ணெல்லாம் வாசலையே பார்த்துகிட்டு இருக்கும். துரை அண்ணன் எப்போ வருவான்னு தவம் கிடப்போம். அண்ணன் வரும்போதுதான் பட்டாசு வாங்கிட்டு வருவான். அதையெல்லாம் வரிசைப்படுத்தி பங்கு வைச்சுக் கொடுக்கிறதும் பெரியண்ணன்தான். மத்தவங்க கொடுத்தால் அடிபிடி ஆயிடும், எங்களையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது. அண்ணன் கர்ஜனையைக் கேட்டால் எல்லாரும் கப்சிப். அதனால் பட்டாசு பங்கீடு பிரச்னை இல்லாமல் நடக்கும்.
எனக்கு பட்டாசுன்னாலே ரொம்ப பயம். ஆனாலும் என் பங்கை விட மாட்டேன். அப்புறமா தம்பிகிட்டே பட்டாசெல்லாம் கொடுத்துட்டு மத்தாப்பு புஸ்வாணம்னு பண்டமாற்று பண்ணிக்கலாம்.
ஒவ்வொருத்தர் வெடிகளையும் வைக்க அவங்கவங்க சீக்ரெட் வங்குகள், பொந்துகள் உண்டு. இல்லாட்டி அடாவடி ஆம்பிள்ளைப் பசங்க திருடிட்டுப் போயிடுவானுக. ராத்திரியே பாதி பட்டாசுகளை வெடிச்சுடுவோம். மின்வசதி இல்லாத எங்க வீட்டு முற்றத்தில் பூத்துத் தெறிக்கும் மத்தாப்புகளின் வர்ணஜாலம் விவரிக்க முடியாத அழகு. எங்க வீட்டு வாசல் சந்தை என்பதால் ஏகப்பட்ட காலி இடம் உண்டு. ஆளாளுக்கு அவங்க கையிருப்புகளைக் கரியாக்கிக் கொண்டிருப்போம். தூங்கப்போகும் முன்னாடி பத்திரமாக ஒளித்தும் வைத்துவிடுவோம்.
இரண்டாம் ஆட்டம் சினிமா விடும் சமயத்தில் அம்மா எழுந்து பலகாரங்கள் செய்ய ஆரம்பிப்பாங்க. எங்க வீட்டு ஆண்பிள்ளைகள் அடுக்களையில் வேலை செய்யும் ஒரே சமயம் தீபாவளிதான். மத்த நேரமெல்லாம் சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்து வைக்காமல் அதிலேயே கைகழுவிச் செல்லும் வாழைப்பழ சோம்பேறிகள். அம்மா வடை பஜ்ஜி எல்லாம் போடும்போது வெந்து எடுப்பாங்க அல்லது வடையெல்லாம் தட்டி போடுவாங்க, வெங்காயம் வெட்டிக்கொடுப்பாங்க (வெட்டிப்பசங்கன்னு சொல்லலாம்)
அப்பா மெளன சாட்சியாக இவங்களுக்கெல்லாம் துணையாக அடுக்களையில் பெஞ்சில் சாய்ந்திருப்பாங்க. கால்மேல் கால் போட்டுக்கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு அண்டை கொடுத்து வில்போல் சாய்ந்திருக்கும் கோலம்தான் எப்பவும் என் மனதில் அப்பாவின் நினைவாகத் தங்கியுள்ளது. அதிகாலையில் அப்பா உக்கார்ந்து விளக்கு முன்னாடி வைத்திருக்கும் அவ்வளவு துணிக்கும் மஞ்சள் தடவுவாங்க. கம்யூனிஸ்ட்டுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பும் அவ்வளவுதான்.
பசங்களில் யாராவது ஒருத்தர் முன்னாடி எழுந்துட்டா மத்தவங்களைக் கடுப்பேத்தன்னு அணுகுண்டு வெடியாகப் போடுவானுக. தடால் தடால்னு நாங்களெல்லாம் எந்திரிச்சு ஓடினாலும் சுடுதண்ணீர் வரிசைப்படிதான் கிடைக்கும். எண்ணெய்க் குளியல் முடிச்சு புதுத் துணி போட்டுகிட்டு ராக்கெட் பட்டாசு போடும்போது ஏவுகணையே அனுப்பிட்ட மாதிரி பெருமையாக இருக்கும். எத்தனை விதமான வெடிகளும் மத்தாப்புகளும் அப்போ இருந்திச்சு. ஸ்டாண்டர்ட் பட்டாசுதான் அந்தக்காலத்தில் ரொம்ப பேமஸ். மயில் லோகோ ஒட்டின அட்டைகள் இன்னும் கண்ணில் நிற்கின்றது.
இருட்டு விலகுறதுக்குள்ளே புஸ்வாணம்தான் முதலில் பத்த வைக்கணும். அதைக் கொளுத்துறதுக்கு கம்பி மத்தாப்புதான் வசதியாக இருக்கும். சின்னது பெருசுன்னு கோபுரம் கோபுரமாக பொங்கிப் பிரவகிக்கும் புஸ்வாணம் தெருவையே ஒளிரச் செய்துவிடும். இன்னொரு பக்கம் தரைச்சக்கரம் கொளுத்தி விட்டுறுவோம். அது சுத்தும்போது அதைத் தாண்டிக் குதிக்கிறது பெரிய பீலாவாக இருக்கும். பெரிய சக்கரம் என்றால் சின்னப்பசங்க சைடு வாங்கிடுவாங்க. கம்பி மத்தாப்புலே பொறி மத்தாப்பு கலர் கலராக வரும்போது அதைச் சுற்றி விளையாடுவது பார்க்க அழகாக இருக்கும்.
குருவி வெடி, அணுகுண்டு வெடின்னு நிறைய வெடிகளெல்லாம் இருந்தாலும் எனக்குப் பிடிச்சது ஓலை வெடியும், பொட்டு வெடியும்தான். அது ரெண்டும்தான் கொஞ்சமா சத்தம் போடும், பயமில்லாமல் வெடிக்கலாம். பொட்டு வெடி துப்பாக்கியில் வைத்து வெடிக்கத்தான் உகந்தது அதுக்குப்பேர் ரோல் வெடி. துப்பாக்கியில் லோட் பண்ணிட்டா முடியிற வரை டப்பு டப்புன்னு சுடலாம். அதை வெச்சுத்தான் திருடன் போலீஸ் விளையாடுவோம். பொட்டு வெடி, தனித்தனியாக இருக்கும். அதை கல்லில் வைச்சு கல், இரும்புக்கம்பி, சின்ன சுத்தின்னு ஏதாச்சும் வைச்சு அடிச்சு வெடிக்கணும். சில சமயங்களில் தரையில் தேய்த்தும் வெடிக்க வைப்போம். வித்தை சரியாகத் தெரியாமல் தரையில் தேய்த்தால் ஆள்காட்டி விரல் பொத்துடும்.
ஓலைவெடி எங்க ஊர் பக்கத்திலேதான் ரொம்ப பேமஸ். பனை ஓலையில் செஞ்சிருப்பாங்க. ஒரு பாக்கெட் வாங்கினாலே ரொம்ப நேரம் வெடிக்கலாம். அண்ணன் ,தம்பியெல்லாம் அநாயசமா கையிலேயே கொளுத்தி தூரமா வீசுவாங்க. அவ்வளவு பெரிய வீரனான தம்பி ஒருதரம் பட்டாசு போட்டு மாட்டிகிட்டான். நமுத்துப்போன பட்டாசு வெடிக்காது. அதனால் அதிலுள்ள கந்தகத்தைப் பிரிச்சு பேப்பரில் கொட்டி பத்த வைச்சா புதுவிதமான வாணம் கிடைக்கும். அப்படி பண்ணும்போது ஒருதரம் பேப்பரைக் கொளுத்திட்டு அவன் நகருவதற்குள் கந்தகம் வெடித்து முகமெல்லாம் தீப்புண் ஆகிவிட்டது. ஆனாலும் அசர மாட்டாங்க அந்த வீர தீரனுங்க. அணுகுண்டு வெடியை டப்பாக்குள்ளே வைச்சு விடுவானுங்க. ராக்கெட் வெடியை கண்ணாடிப் பாட்டிலில் நிக்க வைச்சு கொளுத்துவாங்க. கொஞ்சம் திசை மாறிப்போச்சுன்னா பக்கத்திலே உள்ள ஓலைக் கூரையில் புகுந்திடும்.
மத்தாப்புகளெல்லம் கொளுத்தி முடிச்சதும் ஓரமா மண்ணில் புதையிற மாதிரி போடணும்னு அப்பப்போ பெரியவங்க சொல்லிகிட்டே இருப்பாங்க. ஆனாலும் பட்டாசு கொளுத்துற ஜோரில் எல்லாம் மறந்து போயிடும் . கம்பி மத்தாப்பைக் கொளுத்தி முடிச்சுட்டு அப்படியே போட்டுற வேண்டியது. அப்புறம் அதுலேயே காலை வைச்சு புண்ணாகிக்க வேண்டியது. இதெல்லாம் அடிக்கடி நடக்குறதுதான். ரொம்ப சின்ன பசங்களுக்குன்னு பாம்பு வெடி, பாம்பு மாத்திரைன்னு வாங்கித் தருவாங்க. உக்காந்த இடத்திலிருந்தே கொளுத்தலாம். ஆனால் தரையெல்லாம் நாசமாகிடும்.
தீபாவளி பொங்கலெல்லாம் வந்தா வயசுலே சின்னவங்களுக்குப் பெரியவங்க திருநீறு பூசி பணம் கொடுப்பாங்க. கடைக்குட்டியாக இருக்கிறவங்களுக்கு ஏகப்பட்ட பெரியவங்க இருப்பாங்க. அந்தப் பணமெல்லாம் மறுபடியும் பட்டாசாக வந்துவிடும். காசைக் கரியாக்குவதுன்னா இதுதான். தீபாவளி பலகாரங்களை பிறமதத்து நண்பர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் கூரியர்ஸ் நாங்கதான். வேதமுத்து சார் வீட்டுக்கு நிறைய தரம் நான்தான் கொண்டு போயிருக்கிறேன் . அந்த விட்ட குறை தொட்ட குறையாகத்தான் (ஜான் ரத்னராஜ்) வேதமுத்து (என் மாமனார்) அவர்கள் வீட்டு மருமகளாகிவிட்டேன்.
தீய பாவி ஒழிந்து தீபாவளியா
தீபம் ஏற்றும் தீபாவளியா
நரகாசுரனை வதம் செய்ததா
இருளரசனை விரட்ட வைத்ததா
எதனால் வந்த ஒளியோ
எல்லோருக்கும் பிடித்த ஒளி
அதனால் பெற்றது
பலகாரம் பட்டாசு புதுத்துணி.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
0 Comments:
Post a Comment
<< Home