அலை-25
அலை-25
சின்ன வயதில் ஆறுமுகநேரிக்குப் பிறகு பிடிச்ச ஊருன்னா ஸ்ரீவைகுண்டம்தான். லீவுக்கெல்லாம் அக்கா வீட்டுக்குத்தான் போவேன். நாட்கள் ஓடுவதே தெரியாமல் ஏகப்பட்ட விளையாட்டுகளும் பொழுது போக்குகளும் இருக்கும். என் வயசுத் தோழிகள் நிறைய பேர் இருப்பாங்க. அதனால் எப்பவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.
அந்தக்காலத்தில் வீடுகளுக்கு நல்ல தண்ணீர் வசதியெல்லாம் கிடையாது. தெருவில் அடிபம்ப்பில் உப்பு தண்ணீர்தான் வரும். தாமிரபரணி ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துதான் சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். ஆறு இருக்கும் ரெண்டு கிலோமீட்டருக்கு அப்பால், அங்கிருந்து குடத்தில் எடுத்து வரவேண்டும். ஆனால் அது அவ்ளோ ஜாலியான விஷயமாக இருக்கும்.தெருவிலுள்ள மொத்த பெண்பிள்ளைகளும் கோஷ்டி சேர்ந்து அரட்டையும் சிரிப்புமாக ஆத்துக்குப் போவோம்.
ஸ்ரீவை ஆற்றில்தான் நீச்சலே பழகினேன். காலியான பித்தளைக் குடத்தைத் குப்புறக் கவிழ்த்து இடதுகையால் பிடித்துக்கொண்டு வலது கையைத் துடுப்பு மாதிரி அடித்து நீச்சல் பழகணும். அநேகமா அந்த ஊர் பிள்ளைகள் எல்லாரும் அப்படித்தான் நீச்சல் பழகி இருப்பாங்க.முதல்லே பழகும்போது குடம் பல்டி அடித்து நம்மளையும் தண்ணீரில் மூழ்க வைச்சிடும். மூக்குக்குள்ளே எல்லாம் தண்ணி போய் சளி பிடிச்சாலும் மறுபடி மறுபடி முயற்சி பண்ணி எப்படியோ கத்துக்குவோம். முதலில் கரையோரம் தவளை நீச்சல் பண்ணினாலும் நாள் செல்லச் செல்ல நீச்சல் கைவந்த கலை ஆகிவிடும். அதுக்குப் பிறகு ஓடுற தண்ணியிலே எதிர் நீச்சலெல்லாம் சர்வ சாதாரணம் ஆயிடும்.
குடத்தில் தண்ணீர் பிடிப்பதுதான் செம காமெடியாக இருக்கும். அதே ஆற்றில் துணி துவைத்து, சோப்புப் போட்டு குளித்துவிட்டு கொஞ்சம் ஆழத்தில் போய் தண்ணீர் பிடித்தால் அது நல்ல தண்ணீராம். அதைக் கொதிக்க வைத்துக்கூட குடித்ததாக நினைவில்லை. ஆனால் ஒருநாள்கூட வயிற்றுப்போக்கோ வேறு எந்த வியாதியோ வரவில்லை. மருத்துவக் கல்லூரி போனபிறகுதான் எவ்வளவு சுகாதாரமற்ற தண்ணீர் குடித்திருக்கிறோம் என்பதே புரிந்தது.
ஆற்றுக்குப் போகும்போது இருந்த குதூகலம் திரும்பும் போது இருக்காது. உடம்பில் ஈரத்துணி, இடுப்பில் வெயிட்டான குடம், தோளில் துவைத்த துணிகள் என்று இம்சையாகத்தான் இருக்கும். ஆனாலும் மறுநாள் காலையில் அத்தனை பேரும் கச்சிதமாக வந்திடுவாங்க. ஊர்ப் புரணி முழுவதும் அந்த அரைமணி நேரத்தில் அரங்கேறிடும்.
மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றங்கறை கோவில் படிக்கட்டெல்லாம் முங்கிடும். அப்போ நீச்சலும் கிடையாது, அரட்டையும் கிடையாது. அக்கா கூடவே போயிட்டு அவள்கூடவே வந்திடணும். ஆனால் ரெண்டு கரைதட்டி போற தண்ணீரை வேடிக்கை பார்ப்பது சுகானுபவம். தண்ணீர் ரொம்ப அதிகமாகப் போனால் அருகில் செல்லும் வாய்க்காலில்தான் குளிக்கணும். ஆழம் அதிகமாகவும் இழுப்பு ஜாஸ்தியாகவும் இருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கும்.
ஆற்றங்கரை மட்டும் அழகல்ல, அக்கா வீடு இருக்கும் தெருவே அழகுதான். எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும். வயசுக்கு வந்த பெண்பிள்ளைகள் வெளிவாசலுக்கு வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே எல்லா பொழுதுபோக்குகளும் உண்டு.அதிலும் தாயக்கட்டம் விளையாடுவதுதான் முழுநேர பொழுது போக்காக இருக்கும்.
சமையல் முடித்துவிட்டு சிறுசு பெருசு எல்லாம் ஒரே வீட்டில் கூடிடுவாங்க. ஒரே காம்பவுண்டுக்குள் நாலைஞ்சு வீடுங்கஇருக்கும். நாலுபேர் விளையாடுவதை எட்டு பேர் விளையாண்டால்தான் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும். தாயம், வெட்டு, குத்துன்னு ஏகக் களேபரமாக மதிய சாப்பட்டு நேரத்தைத் தாண்டி கூட விளையாட்டு தொடரும், மறுபடி சாப்பிட்டுவிட்டும் தொடரும். தாயக்கட்டையை உருட்டுவதைவிட காய்களை நகர்த்துவதில்தான் திறமையே இருக்கும். வெட்டுப்படாமல் “சொர்க்கம்” போவதுதான் குறிக்கோள்.
ரொம்ப பெரிய கூட்டமாகிவிட்டால் அமெச்சூர் ஆட்டக்காரர்களுக்கு பல்லாங்குழி ஆட்டம் ரெடியாக இருக்கும். இன்னொரு பக்கத்தில் சீட்டுக்கட்டில் “கழுதை” விளையாட்டு தொடங்கியிருக்கும். ”ஆறுகல்” ஆட்டம்னு கற்களைப் பரப்பி மேலே தூக்கிப்போட்டு கீழே உள்ள கற்களை அள்ளும் விளையாட்டும் நடக்கும். எதுவாயிருந்தா என்ன, லீவு முடியிற வரைக்கும் நேரம் பற்றாமல் விளையாட்டுகள் நடந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு தெருவிலுள்ள கோவிலுக்கும் சாயங்கால வேளைகளில் போவதும் உண்டு. நவதிருப்பதிகளில் ஒன்று ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில். அங்கும் ஏகப்பட்ட திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரைத் திருவிழாதான் ரொம்ப விசேஷமாக நடக்கும். கோடை விடுமுறையில் வரும் பெரிய பண்டிகையும் அதுதான்.
அதிலேயும் ரொம்ப பிடிச்சது தேர்த் திருவிழாதான். அன்னைக்குத்தான் சாமி பல்லக்குக்கு முன்னாடி நிறைய தேங்காய் உடைப்பாங்க. தேங்காய் வீணாகாமல் இருக்க ,அக்கா தேங்காய்ப்பாலில் சீடை செய்வாள். மொறுமொறுப்பாய் தேங்காய்ப்பால் மணத்துடன் சீடையை வாயில் போட்டதும் உடனே கரைந்து அவ்வளவு ருசியாக இருக்கும். நானும் சமீபத்தில் சீடை செய்து பார்த்தேன்,உடைப்பதற்குக் கல் தேவைப்பட்டது.
சித்திரை வருஷப் பிறப்பன்று செய்யும் வேப்பம்பூ ரசமும் பிரத்தியேகமாய் அங்குதான் சாப்பிட்டிருக்கேன்.
விசேஷ காலங்களில் கோவிலில் கதாகாலட்சேபம், பாட்டுக் கச்சேரி எல்லாம் நடக்கும். ஒரு நிகழ்ச்சியைக் கூடத் தவற விடுவதே இல்லை. பாட்டுக்கச்சேரிக்குக் கூட்டிட்டுப் போக பசங்க துணைக்கு வேணும் என்பதால் என் தம்பி ரொம்ப பிகு பண்ணிக்குவான். அப்போதானே அவன் பவரைக் காட்ட முடியும்.
பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் ரொம்பப் பிரபலம்தான். கார்த்திகை மாதம் அரைப்பரிட்சை லீவில் வரும். பெரிய கதவு முன்னாடி எல்லாரும் காத்திருப்பாங்க. குறிப்பிட்ட பூஜை முடிந்ததும் கதவு திறந்ததும் கும்பலா உள்ளே பாய்ஞ்சிடுவாங்க. பயங்கர தள்ளுமுள்ளாக இருக்கும். அதனால் அந்தப் பக்கமே நான் போகமாட்டேன்.
ஊரின் நடுவில் ஒரு பழங்காலக் கோட்டை உண்டு ,மண்ணினால் ஆன கோட்டைச்சுவர் சுற்றி இருக்கும். அதற்குள் நிறையக் குடும்பங்களும் உண்டு. அவர்கள் பரம்பரையாக வசித்துவரும் கோட்டைப் பிள்ளைமார்கள் எனவும், அந்த வீட்டுப் பெண்கள் வெளியே வரமாட்டார்கள் என்றும் அக்கா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருதரம் கூட உள்ளே போய்ப் பார்க்க முடிந்ததில்லை. மண்சுவரிலான கோட்டைச் சுவரும் அதை அடுத்த சிவன்கோவிலும், கோவிலின் எதிரில் இருக்கும் மொட்டைத் தேரடியும் எங்களுக்கு விளையாடவும் பொழுதுபோக்கவும் ஏற்றதான விளையாட்டு மைதானங்கள்.
ஐந்து விளக்குகள் பொருத்தப்பட்ட(அஞ்சிலாம்பு) மைதானத்தின் நடுவிலிருந்து ஒருமணி நேரத்துக்கு ஒருதரம் சங்கு ஊதப்படும். அதைப் பொறுத்து கோவிலின் பூஜை நேரங்களைக் கணக்கிடுவார்கள்போலும். அந்த மைதானத்தில் அடிக்கடி கட்சிக் கூட்டங்களும் நடக்கும். அத்தானோட பெட்டிக்கடை வாசலில் இருந்து வேடிக்கை பார்க்கலாம். சின்னத்தான் சைக்கிள் கடை வைச்சிருந்தாங்க. வாடகை சைக்கிளும் வைச்சிருப்பாங்க. அதை எடுத்துட்டு தெருவெல்லாம் சுத்திக்கிறதுதான், நமக்குத்தான் வாடகை கொடுக்க வேண்டாமே. ஆம்பிளைப் பசங்ககூட சைக்கிள் பந்தயமெல்லாம் நடக்கும்.
நவதிருப்பதியோட ரெண்டுமூணு கோவில்கள் ஸ்ரீவைகுண்டத்தைச் சுத்தியேதான் இருக்குது. ஏதோ ஒரு பண்டிகையின்போது அந்த கோவிலுக்கெல்லாம் நடத்தியே கூட்டிட்டுப் போவாங்க. அதிலும் இரட்டைத் திருப்பதிங்கிறது கொஞ்சம் தொலைவு அதிகமாக இருக்கும். அன்னைக்கு சோறுகூட கிடைக்காது. இட்லி விரதமாம், மூணுவேளையும் இட்லிதான். அதிலும் சட்னி சாம்பாரெல்லாம் கெட்டுப் போயிடும்னு இட்லிப் பொடிதான் கிடைக்கும். வறவறன்னு அதைச் சாப்பிடறதும் கஷ்டமாக இருக்கும். பாதயாத்திரையும் போய் வற இட்லியும் சாப்பிடுவிட்டு பொழுது சாயும்போதுதான் வீட்டுக்கு வந்து சேருவோம். ரெண்டு நாளைக்குக் கால் ரத்தம்கட்டி நடக்கிறதே சிரமமாகிவிடும். ஆனாலும் அத்தான் சொன்னால் தட்டவே முடியாது. (அற்ப ஆயுளில் எங்களைவிட்டு பிரிந்துவிட்ட எங்களின் அன்பான அத்தான்.)
அக்காவுக்கு அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறந்ததால், விடுமுறைக்குச் செல்லும்போதெல்லாம் குழந்தை வளர்ப்பு இலவசப் பாடமாகக் கிடைக்கும். அப்படி ஆலமரம்போல் எங்களை அரவணைத்த குடும்பம் அத்தான் இறந்தபிறகு ஸ்ரீவைகுண்டத்தையே காலிசெய்து ஆறுமுகநேரியில் ஐக்கியமாகிவிட்டாலும் எனது எண்ண அலைகளில் ஸ்ரீவை ஒரு அழகுப்பெட்டகம்.
வருஷங்கள் மறைந்தாலும்
மனச்சிறையில் மங்காமலிருக்கும்
ஆறும் ஊரும்.
0 Comments:
Post a Comment
<< Home