Friday, February 26, 2021

அலை-35

 அலை-35

"கல்யாணம் வைபோகம்" 

 "அன்றும்  இன்றும்" என்ற தலைப்பில் பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.  புற்றீசல்கள் போல் அளவிடமுடியாத திருமண மண்டபங்கள்,அவசியம் இல்லாத ஆடம்பரங்கள் என்று எத்தனையோ மாற்றங்கள்.


 இப்போதெல்லாம் கல்யாணம் முடிவானதும் நாள் குறிப்பதெல்லாம் கிடையாது.  கல்யாணமண்டபம் புக் பண்ணி, ஈவெண்ட் மானேஜர்கிட்டே பேசிட்டுதான் முகூர்த்த தேதியே குறிக்கிறோம்.  ரசனையோட பண்றோமே தவிர மறுபடி நினைச்சுப் பார்க்கும்படி பண்றோமான்னு தெரியலை. அமர்க்களமா ஊரே மெச்சுகிற மாதிரி என் பொண்ணு கல்யாணத்தை நடத்தினோம். ஆனால் அமைதியாக உட்கார்ந்து யோசிக்கும்போது நிறைய நிகழ்ச்சிகளில் நானே பங்கு பெறலைன்னு தோணுது. மத்தியதரக் குடும்பங்கள் கூட திருமணத்தில் அதிக செலவுகள் செய்வது தற்போதைய வாடிக்கையாகிவிட்டது. சூழ்நிலைக் கைதிகள்.


 ஆனால் எழுபதுகளில் கல்யாணம் எவ்ளோ கலகலப்பாக இருந்துச்சு.அதிலும் ஆறுமுகநேரியில் கல்யாணம் என்றால் கொண்டாட்டத்துக்குப் பஞ்சமே கிடையாது.

 அந்த காலகட்டத்தில் எங்க ஊர்லே கல்யாண மண்டபமே கிடையாது. ஒண்ணு கோயிலில் வைச்சு கல்யாணம் பண்ணணும் இல்லாட்டி வீட்டில் வைத்து பண்ணணும். துரை அண்ணன் கல்யாணம்தான் நினைவுகளில் தெரிந்த முதல் கல்யாணம். சந்தைக்கடை வீட்டில் வைத்து நடந்த பெரிய விசேஷமும் அதுதான். 


நான் ரொம்ப சின்னப் பொண்ணு என்பதால் காட்சிகள் மங்கலாகத்தான் நினைவுக்கு வருகிறது. பெண்  அழைப்பு முடிந்து மதினியை மச்சு வீட்டு பேங்க் அண்ணாச்சி வீட்டில் உட்கார வைத்திருந்தார்கள். நாங்களெல்லாம் கதவோரம் ஒளிந்து நின்று புதுப்பெண்ணை  எட்டி எட்டி பார்த்தது மட்டுதான் ஞாபகம் இருக்கு. எங்க அண்ணண் ஆறடி உயரம் இருப்பான். புது மதினி நாலடியார் மாதிரி இருந்ததைப் பார்த்துக் கள்ளச் சிரிப்போடு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்துக் கொண்டோம்.


 அதற்குப் பிறகு சரசக்கா, செக்கண்ணன் கல்யாணம் எல்லாம் வீட்லேயேதான் நடந்துச்சு. வீட்டுக்கு முன்னாடி சந்தையின் காலி இடங்கள் பரந்து விரிந்து கிடந்ததால் அங்கேயே பந்தல் போட்டு கல்யாணம் பண்ணினார்கள். கீழ்பக்கம் பசுவந்தனையக்கா வீட்டிலிருந்து மந்திரம் அண்ணன் வீடு வரைக்கும் சேர்த்து அடைத்து பெரிய பந்தலாகப் போட்டிருப்பாங்க. 

ரெட்டைத் தட்டி தென்னங் கீத்துகளை நிற்கவைத்து சுற்றிலும் அடைத்து கல்யாண அரங்கம் மாதிரியே  பந்தல் போடுவாங்க. கூரைக்கும் அதே கீத்துகள்தான். கூரைக்கு மட்டும் வெள்ளைத் துணிகளைக் கட்டி அழகு படுத்தியிருப்பாங்க. 


வெயில் காலத்தில் அந்தப் பந்தல் ஓக்கேதான். ஆனால் மழை காலத்தில் கல்யாணம் பண்ணினால் எல்லா இடமும் ஒழுகும். அநேகமா எல்லா கல்யாணமும் ஐப்பசி கார்த்திகை அடை மழையில்தான் நடக்கும். மழையில் ஒழுகும்போதும் ஒதுங்குவதும் மழைவிட்டதும் கூடுவதும்  எழுதப்படாத வாடிக்கையாகிவிடும். குற்றால சாரலில் நனைஞ்ச மாதிரி நினைச்சுகிட்டு அதையும் சந்தோஷமா எடுத்துக்குவோம். 


பந்தலில் நடுவில்தான் மணவறை போடுவாங்க. ரொம்ப சம்பிரதாயப்படியும் இருக்கும் ஸ்ட்ராங்காகவும் இருக்கும். கிழக்கு பார்த்து இருக்கணும், மணமக்கள் சுற்றி வர இடம் இருக்கணும், அம்மி, முளைப்பாரியெல்லாம் வைக்க இடம் இருக்கணும், முன்னாடி உக்கார்ந்து பார்ப்பவர்களுக்கு இட வசதி இருக்கணும் -இப்படி ஏகப்பட்ட interior decoration உடன் பந்தல்போடும் வைபவம் நடக்கும்.  ஆண்கள் உட்கார வாடகைச் சேர்களும் பெண்கள்,குழந்தைகள் உட்கார பெரிய தார்ப்பாய்களும் இருக்கும். ஆனால் அந்தக்கால குழந்தைகள் குரங்குகளுக்கு சமம் (நானும் அதில் உண்டு). யாருமே விரிப்பில் உட்காருவதில்லை. மணவறையின் தூண்களில் தொங்குவதும் சாய்வதுமாகத்தான் சேஷ்டைகளுடன் அலைவோம்.


 கல்யாணத்துக்கு ரெண்டுமூணு நாட்களுக்கு முன்பே பந்தல் ரெடியாகிவிடும்.கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு தூங்கும் இடமும் பந்தல்தான். தனித்தனியாக ரூம் போட வேண்டிய அவசியமும் இருக்காது.  கல்யாணத்துக்கு வந்த வாண்டுகளுக்கு விளையாடும் இடமும் அதுதான். மணவறையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் படுக்க ரிசர்வேஷன் எல்லாம் நடக்கும். கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவில்தான் மின்விளக்குகள் சீரியல் பல்புகள் எல்லாம் பொருத்தப்படும். எங்க வீட்டில் மின்விளக்கு ஒளிவீசும் நாட்களும் அப்போதுதான்.


சமையல் செய்வதற்கென்று பின்கட்டில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கும் பந்தல் போடுவாங்க.. அதற்குப் பெயர் ஆக்குப்பறை ( சாப்பாடு ஆக்கும் அறை என்பது அப்படி திரிந்து பெயரிடப் பட்டிருக்கலாம்). பெரிய பெரிய அண்டாக்கள் பாத்திரங்கள் எல்லாம் வாடகைக்கு வந்து இறங்கும். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுடலை முத்து அண்ணனும் சமையல் செய்ய வந்து இறங்கிவிடுவார்கள். அநேகமாக முதல் சமையல் உப்புமாவாகத்தான்  இருக்கும் அல்லது சாதம்,ரசம்,கடலைத் துவையலாக இருக்கும். அதன்பிறகுதான் மெனுவுக்கேற்ப சிறப்பு பதார்த்தங்கள் ரெடி பண்ண ஆரம்பிப்பாங்க. பாத்திரம் கழுவ சமையல் பண்ண தேவைப்படும் தண்ணீர் கொண்டுவருவது இளவட்டங்கள் வேலை. ஆளுக்கொரு குடத்தை இடுப்பிலே வைச்சுகிட்டு "தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழா"ன்னு பாடற மாதவன்களை மண்டைகாய வைச்சுகிட்டு அங்கும் இங்குமாக அலைவாங்க.


ரொம்ப கொடுமையான விஷயம் என்னதுன்னா இட்லி, தோசைக்கு மாவு ஆட்டுவதுதான். கிரைண்டர் என்பது கண்ணில் தட்டுப்பட்டிராத காலம்.வீட்லே உள்ள ஆட்டுஉரலில்தான் ஆட்டணும். ஊறவைத்த அரிசியும் உளுந்தும் எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும் பகிர்ந்து அனுப்பப்படு்ம். எல்லாரும் அவங்கவங்க வீட்லே அரைச்சுக் கொடுத்த பிறகு கலந்து இட்லிக்கு ரெடி செய்வது சமையல் ஆட்கள் பொறுப்பு. ரெண்டு நாளைக்குரிய மாவையும் அரைத்து வைத்துவிடுவார்கள். புளிக்காமல் இருப்பதற்கு என்னவோ டெக்னிக் எல்லாம் பேசிக்குவாங்க. இந்த மாதிரி விஷயங்களால்தான் அந்தக்காலத்தில் ‘’கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்’’ன்னு சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ( சாந்து குழைப்பதும் தோசைக்கு ஆட்டுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் தோணுது) பூ கட்டும் வேலையும் வீட்டிலேயேதான் நடக்கும்.


ஒருபக்கம் பெரிய பாய்களில் அமர்ந்து கிழடுங்க எல்லாம் காலைநீட்டி உட்கார்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருப்பார்கள். இன்னோரு பாயில் திடகாத்திரமானவர்கள் உட்கார்ந்து தேங்காய் துருவிக்கொண்டிருப்பார்கள்.அழுத கண்ணீரோடு கொஞ்சம் பேர் வெங்காயம் உரிச்சுகிட்டிருப்பாங்க.முந்தின நாள் ராத்திரியிலிருந்தே இத்தனை வேலைகளும் ஆரம்பித்துவிடும்.

 யாருமே முகம் சுழித்தோ சலித்துக்கொண்டோ வேலை செய்ய மாட்டார்கள். ஊர்ப் புரணி முழுசும் அப்போது பேசப்படும் அரட்டை அரங்கத்தில் சுற்றி சுற்றி வரும். 


பெண்களோட சிரிப்பையும் அரட்டையையும் கேலி பண்ண  தலையை நீட்டி  மூக்கு உடைபடும் ஆண்களும் உண்டு. மதினி கொழுந்தன் கேலி பேச்சுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும். புரியுதோ இல்லையோ அந்த கேலிகளை வாய்பிளந்து கேட்டுக் கொண்டு குழந்தைகள் பட்டாளமும் அங்கேதான் இருக்கும். அடிக்கடி சுக்குக் காப்பி கடுங் காப்பி எல்லாம் ஆக்குப்பறையிலிருந்து பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும்.


பெண்கள் வேலைகளில் முனைந்திருக்கும் போது ஆண்கள் கூட்டம் சீட்டு விளையாடுவதில் மும்முரமாகிவிடுவார்கள். சீட்டுக்கச்சேரி இல்லாத கல்யாணமே அப்போது கிடையாது.   விடிய விடிய சீட்டு விளையாடுவாங்க. பொழுது விடியும்போது எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி குளிச்சு ரெடியாகி கல்யாண வேலை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. யார் முகத்திலேயும் சோர்வே தெரியாது. வீட்டுப் பெண்களெல்லாம் சமையலிலும் சம்பிரதாயங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது , ஆண்கள் பந்தி பரிமாறுவதில் மும்முரமாகி விடுவார்கள். இட்லி வைக்கும்போதே "பத்மாக்கா பொண்ணு வரலையா''ன்னு கேட்பதும், சாம்பார் ஊற்றும்போது  "சாயங்காலம் வரவேற்புக்கு வாங்க" என்று அழைப்பதுமாக விருந்தோம்பலை ஒரு கவிதையாக அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள்.


 கல்யாணப்பந்தலேதான் பந்தி பரிமாறும் இடமாகவும் இருக்கும். முகூர்த்த நேரத்தை அநுசரித்து ரெண்டுமூணு பந்திகள் பந்தலில் நடக்கும் அதன்பிறகு பின்கட்டுக்கு மாற்றிக் கொள்வார்கள். பந்திக்கு போட்டிருக்கும் டைனிங் மேஜை, பெஞ்ச் எல்லாவற்றையும் பின்னாடி எடுத்துவிட்டு வாடகைச் சேர்கள் அரங்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.  திருமணம் முடிந்ததும் மறுபடி பந்திக்கு ஏற்றவாறு பர்னிச்சர்கள்  இடம் மாறும். சாயங்காலம் அதே இடம் நலுங்கு வைக்கவும் வரவேற்பு நடத்தவும் உருமாறிக் கொண்டே இருக்கும்.


இப்பொழுது நினைத்துப்பார்த்தால் மலைப்பாகத் தெரிகிறது. ஒரே இடத்தை திருமணம், சாப்பாட்டு பந்தி, நலுங்கு , வரவேற்பு என்று நேரத்திற்கு ஒரு விதமாக மாற்றி அமைத்து கலகலப்பாக திருமணத்தை நடத்தி வைத்த எங்கள் வீட்டுப் பெருசுகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அதில் உடல் உழைப்பை சிந்திய இளவல்களுக்கு ஈடே இல்லை.யாருக்கும் எதுவும் உத்தரவிடப் பட்டதாகவே தெரியாது. அந்தந்த நேரப்படி எல்லாம் ஒருவித ஒழுங்கோடு நடக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவரை ஒருவர் கேலி பண்ணிக் கொண்டும், உதவி செய்துகொண்டும், வருபவர்களை வாய் நிறைய வரவேற்று எளிமையாகவும் சிக்கனமாகவும் நடத்தப்பட்ட திருமணங்கள் இனி வருமா?வருமென்றுதான் தோன்றுகிறது.


ஆடம்பரத்தின் எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் இன்றைய திருமணங்கள் பொருள் விரையத்துடனும் அதீதமான செயற்கைத் தனத்துடன் அரங்கேறிக் கொண்டிருப்பதை இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனால்தான் குறிப்பிட விருந்தினர்களை அழைத்து அத்துவானக் காடுகளிலும் ஆழ்கடலிலும்  “Destination Wedding”  என்று ஆரம்பித்திருக்கிறார்கள். மாநாடு போல் நடத்தாமல் மனதுக்கு நெருக்கமான உறவுகளுடன் கொண்டாட வேண்டும் என்ற தாகம் தோன்றியுள்ளது.  


கூடிய சீக்கிரத்தில் கல்யாண மண்டபங்களைப் புறம் தள்ளிவிட்டு  ஆறுமுகநேரி சந்தைக்கடை வீடுகளைப் போன்ற destinationகளில் திருமணம் நடக்கும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. அந்த நாட்கள் வரும்போது பாயில் அமர்ந்து காலை நீட்டி காய்கறி வெட்டிக் கொடுக்க எங்கள் தலைமுறை ரெடி.

0 Comments:

Post a Comment

<< Home