அலை-33
அலை-33
‘‘முத்துக் குளிக்க வாரீகளா” ன்னு செல்லமாகக் கூப்பிடும் தூத்துக்குடிதான் என்னை கடற்கரை ஓரமாகவே உருட்டிச் சென்று அணைத்துக்கொண்ட அடுத்த ஊர். பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரி மாணவி ஆகிவிட்டேனே! கடல் கடந்துபோய்ப் படிக்காட்டியும் கடற்கரை ஓரமாகவே வடக்கு நோக்கிய பயணம்.
அப்பாவின் முயற்சியால் APC மஹாலக்ஷ்மி பெண்கள் கல்லூரியில் PUC சேர்ந்தாச்சு. முதல் தடவையாக பெண்களுக்கு மட்டுமே ஆன கல்விக் கூடத்தில் மாணவியானேன். பள்ளி இறுதிவரை ஆண்பெண் இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் படித்துவிட்டு பெண்கள் கல்லூரியில் இணைந்தபோது ஒருவிதமான தயக்கமும் குழப்பமும் வந்ததென்னவோ உண்மைதான். கன்னித்தீவு பாணியில் தனித் தீவில் விடப்பட்ட மாதிரி பயம் கலந்த வெறுமை, அதுவரை வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிக்காததால் உடனே வீட்டுக்கு ஓடிப்போய்விடத் தோன்றிய அவசரம் இப்படி எல்லா உணர்வுகளும் கலந்த கலவையாய்க் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.
ஆறுமுகநேரியின் அன்புப் பிணைப்பில் இருந்து விலகத் தொடங்கிய முதல் பயணம்.
எனது குழப்பத்துக்கு ஏத்த மாதிரியே கல்லூரி தூத்துக்குடியின் அடுத்த எல்லையில் அத்துவானக்காடு போன்ற இடத்தில் இருந்தது. அதைத் தூத்துக்குடி என்றே சொல்ல முடியாது. ஆறுமுகநேரியை விட மிகச் சிறியதாக இருந்த மாப்பிள்ளையூரணி என்ற கிராமம். கட்டிடங்கள் சாலைகள் எதுவுமே முடிக்கப்படாத நிலையில் இருந்ததால் ஒரு அமாநுஷ்யமான தோற்றத்துடன் கல்லூரி கண்முன்னே தெரிந்தது. கூப்பிடுதூரம் வரை மனித சஞ்சாரமே இல்லை. நேர்ந்துவிட்ட ஆடு மாதிரியே அப்பா பின்னாடி போனேன்.
கல்லூரி அட்மிசன் எல்லாம் முடிந்த பிறகு விடுதியைக் காட்ட கூட்டிப் போனார்கள். கல்லூரியின் பின்புறமே விடுதி இருந்தது
கல்லூரி கன்னித்தீவு என்றால், விடுதி மர்மத் தீவு மாதிரி தெரிந்தது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதிப் பூங்காவாக ( இல்லை இல்லை அஸ்தமன அரங்காக) இருந்தது. ‘ப’ வடிவத்தில் மூன்று தாழ்வாரங்களும்,அதை ஒட்டிய அறைகளும் வரிசையாக இருந்தது. கோடை விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டிற்கு சென்றிருப்பதால் அமைதியாக உள்ளது கல்லூரி திறந்ததும் கலகலப்பாக இருக்கும் என்று, என் மனோபாவத்தைப் புரிந்து கொண்ட அப்பா ஆறுதலாகச் சொன்னாங்க.
எனக்கு ஒதுக்கப்பட்ட அறை சாப்பிடும் இடத்தை ஒட்டிய மூலையில் இருந்தது. விடுதிக்குள் ஆண்கள் வரக்கூடாது என்பதால் அப்பா நுழைவாயிலில் நின்று கொண்டார்கள். நான்மட்டும் போய் என் பொருட்களை அறையில் வைத்துவிட்டு வந்தேன். ஒரு ரூமுக்கு பத்து பேர் தங்கணுமாம். சுவரை அணைத்த மாதிரி பெட்டிகளை வரிசைப்படுத்திவிட்டு நடுவில் படுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலும் அதே தினுசு படுக்கை வசதி என்பதால் எனக்கு அது பெரிய வசதிக் குறைவாகத் தெரியவில்லை. புதிய இடம்,புது தோழியர்கள் எப்படி இருப்பார்களோ என்ற கவலை மட்டும்தான்.
சண்டை போட்டுக்கொண்டு திரிந்தாலும் தம்பி மாதிரி கம்பெனி கிடைக்காது, அடி வாங்கினாலும் அண்ணன்கள் மாதிரி வராது, திட்டும் கொட்டும் வாங்கினாலும் அக்கா அம்மா மாதிரி யாராவது கிடைப்பார்களா என்ற ஏக்கம் அப்போதே தொடங்கிவிட்டது.
வீட்டிலிருந்து வெளி இடங்களில் படிக்கப் போகும் மாணவ மாணவியரும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளைப் போலத்தான், நிச்சயமற்ற தன்மையும் நிரந்தரமற்ற உறவுகளும் பெற்றதுபோல் உணர்வார்கள் போலும். நானும் அப்படித்தான் உணர்ந்தேன். படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவசியமும் இல்லாமலிருந்திருந்தால் அன்னைக்கே படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பேன். ஆனாலும் விதி வலியது,என்னை அந்த அத்துவானக் காட்டில் தள்ளிவிட்டது. ‘‘ துள்ளித் திரிந்த பெண் ஒன்று துயர் கொண்டதே இன்று’’ பின்னணி இசையில் சோக கீதம் வேறே கேட்குது. நல்ல வேளையாக கல்லூரி திறக்க சில நாட்கள் இருந்ததால் அப்பாவுடனே திரும்பி வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன்.
“சொர்க்கம் என்பது நமக்கு சொந்தம் உள்ள வீடுதான்” என்பது அப்போதான் மண்டையில் ஏறுச்சு. தம்பிகூட சண்டை அண்ணனைப் பார்த்து பயம் எல்லாம் ஓடிப்போயிடுச்சு. கல்லூரியில் சேர்ந்ததுமே தாணு ரொம்ப சாதுவாயிட்டான்னு வேறே எல்லாரும் சொல்லி கிட்டாங்க.சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எல்லோர் கிட்டேயும் வலியப்போய் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். என்னோட வகுப்புத் தோழியர் யாரும் என் கல்லூரியில் சேரவில்லை, வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போயிட்டாங்க.நான்மட்டும் (பெண்)சிங்கம் மாதிரி அப்பவே சிங்கிளாகக் கிளம்பினேன்.
PUC படிப்பு ஒரு வருஷம்தான். பள்ளிப் படிப்புக்கும் இளங்கலை (Graduate/professional) படிப்புக்கும் இடைப்பட்ட பருவம். எங்களுக்குப் பிறகு ரெண்டு வருஷத்தில் அந்த முறையையே மாற்றி +2 ம் அதன் தொடர்ச்சியாக நேரடி கல்லூரிப் பருவமும் வைச்சிட்டாங்க. ஆனால் அந்த வருஷத்தில் நான் கத்துகிட்ட நிறைய விஷயங்கள்தான் பின்னாடி ரொம்ப உதவியாக இருந்தது. வெளி உலகமும் அதன் பழக்க வழக்கங்களும் பிறருடன் பழகுவதில் ஏற்படும் சிக்கல்களும் அந்த வருஷத்தில்தான் புரிந்தது. பள்ளியிலிருந்து நேரடியாக மருத்துவக் கல்லூரி சென்றிருந்தால் நிறைய கஷ்டப்பட்டிருப்பேன்.
வீட்டில் இருந்தவரை கன்னுக்குட்டி மாதிரி துள்ளித் திரிய முடிந்தது. ஆனால் கல்லூரியில் காலடி வைச்சதுமே நிறைய பொறுப்புகள் தலையில் சுமத்தப்பட்டது மாதிரி ஆயிடுச்சு. யார்கூட நட்பாக இருப்பது,யாருடன் விலகி நிற்பது என்பதெல்லாம் புரியவே கொஞ்ச நாளாயிடுச்சு. ஒரே அறையில் தங்கியிருதவர்களெல்லாம் வெவ்வேறு பாட வகுப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் யாருடன் நட்புடன் இருப்பது என்பதும் தெரியவில்லை.. நான் அறிவியல் வகுப்பு என்பதால் அதே வகுப்புத் தோழிகளை நாடத் தொடங்கினேன். அதில் நிறையபேர் பெண்கள் பள்ளியிலிருந்து வந்திருந்ததால் நிறைய கட்டுதிட்டங்களும் மூட நம்பிக்கைகளும் வைத்திருந்தார்கள். அதனால் நிறைய பேருடன் என்னால் சகஜமாகப் பழக முடியவில்லை.
முதல்நாள் கல்லூரியின் அறிமுக வகுப்பில் ஒவ்வொருவருடைய வருங்காலக் கனவுகளையும் பற்றி எழுதச் சொன்னார்கள். நான் மருத்துவர் ஆக விரும்புவதாகச் சொல்லி அதுகுறித்து ஒரு கட்டுரை எழுதினேன். என்ன எழுதியிருந்தேன் என்பதெல்லாம் சரியாக நினைவில் இல்லை. ஆனால் எனது கட்டுரைதான் சிறந்ததாக இருந்தது என்று பாராட்டப்பட்டது மட்டும் நினைவில் இருக்கிறது. மேலும் அந்த வகுப்பில் 500 மார்க்குகளுக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்ததும் நான் மட்டுமே என்பதால் அன்றைக்கே எல்லோருக்கும் தெரிந்தவளாக ஆகிவிட்டேன். படிப்ஸ் கோஷ்டியில் நம்மளைச் சேர்த்துட்டாங்க. அதனால் கல்லூரி வாழ்க்கை கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்ததுபோல் தோன்றியது.
எல்லோருக்கும் பொதுவான வகுப்புகள் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி வகுப்புகள். சிறப்பு வகுப்புகள் நடைபெறும் போது திக்குக்கு ஒன்றாகப் பிரிந்து விடுவோம். எனது அறைத் தோழி தனலட்சுமி என்பவள் காமர்ஸ் பிரிவில் இருந்தாள். ஆனாலும் நாங்கள் இருவரும்தான் நெருக்கமான தோழிகள் ஆனோம். அவள் ஆறாம் வகுப்பிலிருந்தே விடுதியில் தங்கிப் படித்தவள் என்பதால் எனக்கு வீட்டு ஞாபகம் வந்து சோகமாகிவிடும் போதெல்லாம் ஆறுதல் சொல்லி என்னைத் தேற்றுபவளும் அவள்தான். நல்ல ஒட்டகச் சிவிங்கி மாதிரி உயரமாய் ஒல்லியாக இருப்பாள். கான்வெண்ட் மாணவி என்பதால் ஆங்கிலப் புலமை நன்றாக இருக்கும். ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் விதைத்தவளும் அவள்தான்.
தாவணிப் பருவத்தின் பதினாறு வயது ‘மயிலு’’
தனித்து வாழப் பழகிய
தூத்துக்குடி வாழ்க்கை!
முத்துக்கள் குடும்பவாரிசு
முத்துநகர்வாசியாகிறாள்.
0 Comments:
Post a Comment
<< Home