Friday, April 30, 2021

அலை-39

 அலை-39

“புதிய பாதை புதிய பயணம்”

மருத்துவக் கல்லூரியின் முதல் நாள். மறக்க முடியாத நாள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளவேண்டிய நாள். ஆனால் நிறைய விஷயங்கள் மறந்து போய் அங்கும் இங்குமாக சில நிகழ்வுகள் மட்டுமே நினைவுப் பெட்டகத்தில் உள்ளடக்கிக் கொள்ளப்பட்ட நாள். சுதந்திர தினம் கழிந்து வந்த புதன் அல்லது வியாழக்கிழமை 17.08.1977 அன்று கல்லூரி திறக்கப்பட்டது.    


திருநெல்வேலி அக்கா வீட்டிலிருந்து தினசரி வந்து செல்வது சிரமமாக இருக்கும் என்பதால் ஏற்கனவே விடுதியில் சேர அனுமதி வாங்கியிருந்தோம்.. அதனால் கல்லூரி திறந்த அன்று காலையில்தான் விடுதிக்கு வந்தேன் .


தாவணிக் கனவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு புடவையில்தான் கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்ற கட்டாயம். அப்போதெல்லாம் சுடிதார் என்ற பெயர்கூட எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. PUC படிக்கும்போது புடவை கட்டியதாகவே நினைவில்லை. அதனால் மருத்துவக் கல்லூரியில் சேரும்போதுதான் முதல் முதலாக எனக்கென்று புடவைகள் எடுத்திருந்தார்கள். அதில் எனக்குப் பிடித்த பச்சை சுங்குடிச் சேலையைக் கட்டிக் கொண்டேன். அதுவரை கட்டைக் கை(half sleeve) ஜாக்கெட் போட்டதிலிருந்து மாறுதலுக்காக முக்கால் கை(three fourth) வைத்து போட்டுக் கொண்டேன்.


பள்ளி இறுதி வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியருக்கு தரங்கதரா கெமிக்கல்ஸ் ஆலை(எங்க ஊரின் பெரிய ஆலை)யிலிருந்து விழா நடத்தி பரிசுப் பொருட்கள் தருவது வழக்கம். எனக்கும் ராஜதுரை(வகுப்புத் தோழன்)க்கும் அந்த வருடம் அழகான லெதர் சூட்கேஸ் பரிசளித்திருந்தார்கள். வெளியூர்களுக்கு சென்று படித்து மென்மேலும் வளரவேண்டுமென்று வாழ்த்தி கொடுத்திருந்தார்கள். அதில் எனது உடைமைகளை அடுக்கி எடுத்துக்கொண்டேன். பாசிப்பயறு கலரில் அழகான சூட்கேஸ்.  விடுதிக்கு எடுத்து செல்லவேண்டிய அடிப்படை விஷயங்களும் வாங்கித் தந்திருந்தார்கள். ஹைகிரவுண்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து விடுதிவரை அந்த கனமான பெட்டியை யாரோ தூக்கி வந்தார்கள்.


.விடுதியில் நுழைந்தவுடன் ஒரே களேபரமாக இருந்தது. பீஸ் கட்ட வந்தபோது இருந்த அமைதிக்கு இப்போ தெரிந்த சலசலப்பு நேர் எதிராக இருந்தது. கொஞ்ச பேர் கைகளில் கோட் தொங்கவிட்டுக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். சிலர் வராண்டாக்களில் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.ஒருசிலர் எங்கும் போகாமல் வரவேற்பறையில் நின்று கொண்டிருந்த முதலாம் ஆண்டு மாவிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.


 எங்க ஊரிலிருந்து இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் இந்திராக்காவிடம் அறிமுகப் படுத்தி என்னை ஒப்படைக்க அப்பா நினைத்திருந்தார்கள். வாட்ச்மேனிடம் தகவல் சொல்லி அனுப்பி கொஞ்ச நேரத்தில் இந்திராக்கா வந்தாங்க. பள்ளியில் படிக்கும் போது பார்த்ததைவிட ரொம்பவே மாறியிருந்தாங்க. கஞ்சி போட்ட காட்டன் புடவையில் ஸ்டைலாக ஒரு மருத்துவருக்குரிய நிதானத்துடன் வந்தாங்க. அப்பா அவர்களிடம் பேசிய பிறகு வார்டன் மூலம் எனக்கு அறை ஒதுக்கப்பட்டது.  


மூன்றாவது மாடியின் பின்பக்க வராண்டாவின் மேற்கு மூலையிலிருந்தது எனக்கு ஒதுக்கப்பட்ட அறை- 51ஆம் நம்பர்.விடுதியின்  கடைசி அறை. நான்தான் கடைசியாக வந்த ஆள் போலும். ராகிங் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் மூன்றாம் மாடியில் போட்டு விட்டார்கள். நான் சென்றபோது அறைத் தோழிகள் யாரையும் காணவில்லை. சாப்பிடச் சென்றிருந்தார்கள் போலும். சுவரில் பதிக்கப்பட்ட மூன்று பெரிய கப்போர்டுகளில் ஒன்று மட்டும் காலியாக இருந்தது. எனது உடைமைகளை அதில் வைத்துக் கொண்டேன்.


 முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் வரவேற்பு அறையிலிருந்து ஒரே குழுவாக கல்லூரிக்கு அழைத்துச் செல்வார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள்.எனவே அறையில் தனியாக உட்கார்ந்து போரடிப்பதை விட வரவேற்பறைக்குச் சென்றுவிடலாமென்று கிளம்பினேன். கையோடு எடுத்துவந்திருந்த ஆங்கில நாவல் ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே சென்றேன். 

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்தால் பக்கத்தில் குண்டு போட்டால்கூட எனக்குக் கேட்காது என்று வீட்டில் அடிக்கடி திட்டு வாங்குவேன். அதற்கேற்ப நாவலில் ஆழ்ந்து போய் சுற்றுப் புறத்தையே மறந்துவிட்டேன். நிறைய பேர் என்னை முறைத்துப் பார்த்து சென்றதைக்கூட அறிந்திருக்கவில்லை.


 திடீரென கூட்டம் சேர்ந்து சத்தம் அதிகமான பிறகே தலையைத் தூக்கிப் பார்த்தேன். முதலாமாண்டு மாணவிகளை வரிசையில் நிற்க வைத்திருந்தார்கள். நானும் தடதடவென்று ஓடிப்போய் வரிசையில் சேர்ந்து கொண்டேன். அதுவரை ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமில்லாமல் இருந்ததால், சீரியஸாக புத்தகத்தில் மூழ்கியிருந்த என்னை சீனியராக நினைத்துக் கொண்டார்கள். நானும் முதலாம் ஆண்டுதான் என்று தெரிந்ததும் சிலர் என்னை முறைத்துப் பார்த்ததுபோல் தோன்றியது.


எங்களது கல்லூரிப் பருவத்தில் வருஷத்துக்கு 75 மாணவர்கள் மட்டுமே. அதில் பெண்கள் சரிபாதி அளவில் இருந்திருப்போம். அதிலும் வீட்டிலிருந்து வரும் மாணவிகளும் இருப்பதால் விடுதி மாணவியர் எண்ணிக்கை சொற்பமாகவே தெரிந்தது.  வீட்டிலிருந்து வந்தவர்களும் விடுதியில் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார்கள். வரிசையாக ஊர்வலம் செல்வதுபோல் விடுதியிலிருந்து கல்லூரிக்குச் சென்றோம். முன்னாலும் பின்னாலும் காவலுக்கு யாரோ வந்தார்கள். இடையிடையே சைக்கிளில் வட்டமிட்ட ஹீரோக்கள் எங்கள் ஊர்வலத்தைப் பார்த்து கேலி செய்து பயமுறுத்த முயற்சி செய்தார்கள். பயம் கலந்த குறுகுறுப்புடன் நாங்களும் அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டே நடந்தோம்.

இப்போதும் முன் வாசல் வழியாகச் செல்லாமல் சைக்கிள் ஸ்டாண்ட் வழியாகவே அழைத்துச் செல்லப் பட்டோம்.

கதவை ஒட்டியே சென்ற படிக்கட்டு வழியாக மூன்றாவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எல்லாம் ராகிங்கிலிருந்து பாதுகாக்கத் தானாம். சீனியர்களுக்கு மேலே வர அநுமதி இல்லையாம்.


 அனைவரையும் பெரிய லெக்சர் ஹாலில் அமர வைத்தார்கள். பெரிய அறை , மூன்று வரிசைகளாக பெஞ்சுகள் படிபடியான உயரங்களில் போடப்பட்டிருந்தது. பெண்கள் இடப்புறமும் ஆண்கள் வலப்புறமும் உட்கார வைக்கப்பட்டார்கள். எல்லோரையும் அகர வரிசைப்படி (alphabetical order)  உட்கார வைத்தார்கள். என் பெயர் தாணு(Thanu)  என்பதால் கடைசி வரிசைக்குப் போய்விட்டேன். எனக்குப் பிறகும் நாலுபேர் இருந்தார்கள். (உஷா, விஜயலக்ஷ்மி.M.,விஜயலக்ஷ்மி.P., விசாலாக்ஷி என அவர்கள் பெயர்களைப் பின்பு தெரிந்து கொண்டேன்).நாங்கள் ஐவரும்தான் கடைசி வரிசை. அந்த வரிசையின் பாதையை ஒட்டிய முதல் இருக்கை என்னுடையது.அதனால் ரொம்ப சேட்டை பண்ண முடியாது, வாத்தியாரின் நேரடி பார்வை படும் இடமாக இருந்தது. நடு வரிசையில் சில பின் பெஞ்ச் ஆண்கள் வந்து அமர்ந்து கொண்டார்கள். 


அதன்பிறகு அறிமுகப் படலம், கல்லூரி பற்றிய தகவல்கள், விளக்கங்கள் எல்லாம் சொல்லப் பட்டன. வழக்கம் போல வகுப்பறைக்குள் சொல்லப்பட்டவை எல்லாம் காத்தோட போயிடுச்சு. எதுவும் மனசுலே தங்கவில்லை. ராகிங் பத்தியும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன பிரச்னை என்றாலும் உடனே வந்து புகார் தெரிவிக்க வேண்டியது பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்கள். நாங்கள் அமரவைக்கப்பட்ட வகுப்பறை ஆங்கிலத் துறையைச் சார்ந்தது. அதை ஒட்டியே ஆங்கில பேராசிரியரின் அறையும் இருந்தது.

நாங்கள் படித்த காலங்களில் MBBS 6 ½ வருட படிப்பாக இருந்தது. முதல் வருடம் PRE-CLINICAL  YEAR என்று அறிமுகப் படிப்பாக இருந்தது. பெளதிகம்(physics), வேதியியல்(chemistry), உயிரியல் (biology),  இத்துடன் சேர்ந்து ஆங்கிலமும் ஒரு பேப்பர். ஒரு வகையில் சொல்லப் போனால் மருத்துவ மாணவர்களின் Honey-moon வருஷம் என்றே சொல்லலாம். ”ஆத்தா நான் டாக்டராயிட்டேன்” நோயாளியைப் பார்க்கணும் ஊசி போடணும் அப்படீங்கிற கனவுகளோட வந்தவங்களுக்கெல்லாம் கொஞ்சம் சப்பென்று தோணும்படியாக மறுபடியும் PUC வகுப்புகள் மாதிரியே பாடத்திட்டம். 


ஒரு வழியாக தகவல்கள் அறியப்பட்டு மறுநாளிலிருந்து அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும் விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டோம். 

மதிய உணவு இடைவேளையின்போதும் ஊர்வலம் தொடங்கி விடுதிக்கு சென்றோம். வீட்டிலிருந்து வருபவர்கள் சாப்பிடும் அறை மூன்றாவது மாடியிலேயே கல்லூரி வளாகத்திலேயே   இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்கள். மாணவர்களையும் இதே பாணியில் ஊர்வலமாகத்தான் அழைத்துப் போனார்களா என்பது தெரியவில்லை.


 அதற்குள் PUC யில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், நாகர்கோவிலில் இருந்து வந்தவர்கள், பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவர்கள் என்று சின்னச் சின்ன குழுக்களாகச் சேர  ஆரம்பித்தார்கள், அதனால் விடுதிக்குத் திரும்பும் போது பேச்சுச் சத்தமும் அரட்டையும் ஆரம்பமாகிவிட்டது. எனக்குத்தான் கிராமத்திலிருந்து வந்திருந்ததால் எந்த தோஸ்த்தும் கிடைக்கவில்லை.

மதிய உணவு இடைவேளையை சீனியர்கள் வராத சமயமாகப் பார்த்து ஏற்பாடு செய்திருந்ததால் எந்த தொந்தரவும் இல்லாமல் சாப்பிட முடிந்தது. மதிய வகுப்புகளுக்குச் செல்ல நேரம் இருந்தபடியால் அவரவர் அறைகளுக்குச் சென்றோம். அங்குதான் என் அறைத் தோழிகள் மாரியம்மாள், விஜயலக்ஷ்மி.P. இருவரையும் சந்தித்தேன். எனக்கும் தோஸ்த்துங்க கிடைச்சிட்டாங்க. புதிய பயணத்தின் இனிய சொந்தங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home