Friday, February 26, 2021

அலை-38

 அலை-38

“கனவுத் தொழிற்சாலை”- சுஜாதாவின் நாவல்.எங்களுக்கெல்லாம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அதன் சாயல். மருத்துவராகும் கனவுகளுடன் முதல் அடி எடுத்து வைத்த கல்விக்கூடம். நினைவலைகளில் நெடுந்தூரம் அழைத்துச் செல்லப்போகும் இனிய சொந்தம். ஆனால் கனவல்ல நிஜம்.


மருத்துவப்படிப்பிற்குத் தேர்வாகி, திருநெல்வேலியிலேயே இடம் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.  இரண்டே பல்கலைக் கழகங்கள்தான் அப்போது உண்டு. மெட்ராஸ் யுனிவர்சிடி மற்றும் மதுரை காமராஜர் யுனிவர்சிடி. மதுரையும் திருநெல்வேலியும் மட்டுமே மதுரை காமராஜரில் உண்டு. மற்ற கல்லூரிகளெல்லாம் மெட்ராஸ் யுனிவர்சிடியில் இருந்தது. எத்தனை கல்லூரிகள் அதில் உண்டு, எந்தெந்த ஊரில் இருந்தது என்பதெல்லாம் கூட எனக்கு அப்போது சரிவரத் தெரியாது

அட்மிஷன் பெற கல்லூரியில் நுழைந்த முதல் நாள். ரொம்ப பில்ட் அப் எல்லாம் கொடுத்து சொல்ற அளவுக்கு பெருசா எதுவும் நடக்கலை. ஆனால் பலதரப்பட்ட உணர்வுக் கலவைகளைத் தந்த நாள்னு வேணா சொல்லலாம். அப்பாவும் சிவகாமி அண்ணனும் உடன் வந்ததாக நினைவிருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து டவுண் பஸ் பிடித்து ஹைகிரவுண்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். பயணச்சீட்டு முப்பது காசுதான். அடிக்கடி வீட்டில் அய்க்கிரவுண்டு ஆஸ்பத்திரி பற்றி சொல்லக் கேட்டிருந்தாலும் அந்த ஹைகிரவுண்டு (High Ground)க்குத்தான் போகப்போகிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. 


பேருந்திலிருந்து இறங்கி நின்றதும் கொஞ்சம் சுருதி குறைந்துவிட்டது. ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஸ் ஸ்டாப் கூட இதைவிட கலகலப்பாக இருக்கும் என்று சொல்லுமளவுக்கு அமைதியாக இருந்தது. இறங்கின இடத்திலோ முள்ளு மரம். அடுத்ததாக கடைகள் வரிசைகட்டி நின்றது. அதில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்கள் நம்மை முறைப்பது போல் இருந்தது. அண்ணன் அவர்களை நோக்கி விலாசம் கேட்கச் சென்றான். எதிரே மருத்துவமனை வளாகமும் அமைதியாகவே தெரிந்தது. (அது மருத்துவமனையின் பின்பக்கம் என்பது பின்நாட்களில் தெரிந்தது).


 இடம் மாறி வந்துவிட்டோமோ என்ற குழப்பமும் வந்தது. ஆனால் எதிர் பஸ் ஸ்டாண்டில் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். இடது கையில் வெள்ளை கோட் தொங்கவிட்டுக் கொண்டு காதுகளில் வளையம் ஆடிக்கொண்டிருக்க பஸ் வரும் திசையை நோக்கிக் கொண்டிருந்தார். நான் அவங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நானும் அதேமாதிரி கையில் கோட் தொங்விடப் போகும் நாளை பாக்யராஜ் பாணியில் கனவு கண்டேன். அதற்குள் விலாசம் விசாரித்துவிட்டு வந்த அண்ணன், மருத்துவமனைக்கு எதிரில் தெரிந்த சாலையில் செல்ல வேண்டுமென்று சொன்னான். கல்லூரி எதிர் பக்கத்தில்தான் இருக்கிறதாம். காட்டுப்பாதை மாதிரி இருந்துச்சு. என்னவோ டாக்டருக்குப் படிக்கப் போறோம்ன்னு பந்தாவா வந்தால்,ஆள் அரவமில்லாத அத்துவானக் காட்டுக்குள்ளே போறோமேன்னு மனசுக்குள்ளே சின்ன கவலை வந்தது. 


கொஞ்ச தூரம் போனதுமே எதிரில் பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரி தெரிந்தது. அதுக்குப் பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சே வந்துச்சு.

கல்லூரிக்குப் பக்கத்துலே வந்த பிறகும் பெரிய வாயில்களோ முகப்புகளோ இல்லாமல் ஜல்லடை வைத்த, கம்பி வேலியிட்ட தாழ்வாரங்கள் மட்டுமே தெரிந்தது. நாங்க நின்ற இடத்தில் சைக்கிள்கள் நிப்பாட்டும் இடம் மட்டுமே இருந்தது. எப்படியும் அங்கிருந்து உள் செல்லும் வழி இருக்கத்தானே செய்யும் என்று தேடி சின்ன நுழைவாயில்  ஒன்றைக் கண்டுபிடித்தோம். உள்ளே போனதும் குறுக்கும் நெடுக்குமாக தாழ்வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அலுவலக அறை எங்கிருக்கிறது என்பதைக்காட்ட எந்த குறியீடுகளும் இல்லை. விசாரிக்கலாம் என்று பார்த்தால் சுடுகுஞ்சு கூட அங்கே இல்லை. ஒருவழியா சுத்தி சுத்தி நடந்து அலுவலகத்தை கண்டு பிடித்தோம்.


நம்மளைப் போலவே  பீஸ் கட்ட வந்த கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தள்ளு முள்ளு இல்லை. மொத்தமே 75 பேர்கள்தான் எங்கள் வகுப்பில் என்பதால் தனித்தனியே வந்து கட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அங்கங்கே திரிந்து கொண்டிருந்த்வர்களும், வகுப்புத் தோழர்களா சீனியர்களா என்றும் தெரியவில்லை. அதனால் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் ஓரமாக நின்று கொண்டேன். அண்ணனும் அப்பாவும் சேர்ந்து பணம் கட்டி ரசீதுகளெல்லாம் வாங்க சென்றுவிட்டார்கள். எனக்கு SSLC தேர்வில் அதிக மார்க்குகள் எடுத்த quota வில், ஏற்கனவே மெரிட் ஸ்காலர்ஷிப் sanction ஆகியிருந்தது. அது சம்பந்தமான விவரங்களை சரிபார்த்து பீஸ் கட்ட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அண்ணனும் அப்பாவுமே எல்லாவற்றையும் சரி பார்த்து ஒழுங்கு பண்ணிக்கொண்டதால் நான் தேமேன்னு வெராண்டாவில் நின்று கொண்டேன்.


அலுவலக அறை முன்னே திடீரென கையில் கோட் சகிதம் ஒரு நபர் வந்தார். நேராக என்னிடமே வந்து முதலாம் ஆண்டா என விசாரித்துவிட்டு பெயர் கேட்டார். எனது பெயர் ’தாணு’ என்பதால் அது ஆண்பிள்ளை பெயராச்சே என்று எதோ கேள்விகளெல்லாம் கேட்டார். அப்போது ‘ராகிங்’ என்ற சொல் ரொம்ப பிரபலமெல்லாம் கிடையாது. அதுவும், என் போன்ற கிராமத்து மாணவிகளுக்கு பெரிய விஷயமாகவும் தெரிந்திருக்கவில்லை. எனவே அவர் கேட்ட கேள்விகளுக்கு சாதாரணமாகவே பதில் சொல்லிவிட்டேன். கடைசியாக என் பெயர் என்ன தெரியுமான்னு கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார் ’‘பச்சை முத்துராமலிங்கம்” என்று. நம்ம பேர் மாதிரியே விநோதமாக இருக்குதேன்னு நெனைச்சுகிட்டேன். மருத்துவக் கல்லூரியின் முதல் சந்திப்பு..


பணம் கட்டி அனுமதிச் சீட்டெல்லாம் வாங்கிய பிறகு கல்லூரியின் தாழ்வாரங்களை நட.ந்து நடந்து செருப்புதேய அளவெடுத்தோம். எங்கேயுமே அரவமற்று அமைதியாக இருந்தது, குடிபோன வீடு மாதிரி. அப்புறமாகத் தெரிந்து கொண்டேன், மதிய வகுப்புகள்தான் இங்கு நடக்கும் காலையில் மருத்துவமனையில் நடக்கும் என்று. எது எப்படியானால் என்ன, நமக்கு வனவாசம்தான் என்று மனதுக்குள் சின்ன சோகம் . ஒரு வழியாக கல்லூரியின் பிரம்மாண்டமான முகப்பு வாசல்களைக் கண்டு கொண்டோம். கிழக்கில் ஒன்று மேற்கில் ஒன்று இரண்டு வாயில்கள் இருந்தாலும் யாரும் அதை அதிகமாக உபயோகிப்பதில்லை.


அடுத்ததாக பெண்கள் விடுதியைப் பார்க்க சென்றோம். கல்லூரிக்குப் பின்புறமே இருந்தது.கல்லூரியில் சேர வரும் நாளன்று அறை ஒதுக்கித் தருவதாகச் சொன்னார்கள். APC கல்லூரி விடுதியையே பார்த்துட்டு வந்தவளுக்கு இந்த விடுதி சூப்பராகவே தெரிந்தது. சும்மா சொல்லக்கூடாது விடுதியின் பெயர் "House of ANGELS".

அவ்வளவு நேரம் மனதுக்குள் நெருடிக்கொண்டிருந்த கவலைகள் குழப்பங்களெல்லாம் விலகிப் போய் தேவதையைப் போல் வீடுதிரும்பினேன். கல்லூரியைப் பார்த்து கலங்கியிருந்த மனது விடுதியைப் பார்த்ததும் ஏனோ துள்ளலாகிவிட்டது.

அதே சந்தோஷத்துடன் அன்று மாலை திருநெல்வேலியில் சினிமா பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பியாச்சு. சுதந்திர தினத்திற்குப் பிறகு கல்லூரி தொடங்கும்.

தாணுவின் 1977 வருடத்தைய Episode ஆரம்பமாகும்.

0 Comments:

Post a Comment

<< Home