Friday, April 30, 2021

அலை-40

 அலை-40

“House of Angels” – தேவதைகளின் இல்லம்!

எங்க ஹாஸ்டல் பெயரே ரொம்ப அம்சமானது. மருத்துவக்கல்லூரி வாழ்வின் வசந்தங்களைத் தந்தது. அதில் வாழ்ந்து சென்ற எல்லோருக்குமே அது “Cinderella’s Castle”” தான். விதவிதமான கனவுகளைக் காண வைத்த அதிசய உலகம் அது. 


முதல்நாள் கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்த நட்பின் வட்டம் 44 வருடங்களைக் கடந்து இன்றளவும் தொடர்கிறது. அதற்கு முதல் காரணமாக இருந்த களம் எங்களின் ”தேவதைகளின் இல்லம்.”


ஹாஸ்டலின் நுழைவு வாயில்தான் வரவேற்பறையாகவும், உறவினர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும். அதற்கென தனியான விசிட்டர்ஸ் ஹால் (visitors hall) இருந்தபோதும் யாரும் அதை அதிகமாகப் பயன் படுத்துவதில்லை. அதனால் வாசலில் எப்போதும் கலகலப்புக்குக் குறைவு இருக்காது. உள்ளே நுழைந்ததும் மாடிப்படிகளுக்குச் செல்லும் படிக்கட்டுதான் நேர் எதிரே இருக்கும். வகுப்பு முடிந்து வந்ததும் முதலாண்டு மாணவிகளெல்லாம் குடுகுடுவென்று படியேறி ஓடிப்போய் எங்கள் தளங்களுக்குச் சென்றுவிடுவோம். 


எனக்கு அன்றுதான் ஹாஸ்டலின் முதல்நாள். ஆனால் நிறையபேர் முந்தினநாள் சாயங்காலமே வந்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு படபடப்பு கொஞ்சம் மட்டுப்பட்டு தெரிந்தது. அவரவர் அறைகளில் சென்று ஓய்வெடுத்த பின்பு சக தோழிகளின் அறிமுகம், அரட்டை என்று சாயங்காலம் நன்றாகவே கடந்தது. வகுப்பறையில் அறிமுகப் படலம் நடந்தபோது எல்லோருடைய பெயரையும் கேட்டிருந்தாலும் கூட முகமும் பெயரும் அவ்வளவு எளிதில் புரிபடவில்லை. ஆனாலும் பாடிப்பறந்த குருவிகளெல்லாம் கூடிக் குலவி சிரித்து மகிழ்ந்தோம்.

அவ்வப்போது ராகிங் பற்றி பேச்சு வந்தபோது கொஞ்சம் பயம் வந்தாலும் , அதை எதிர்கொள்ளும் துணிவும் கூடவே வந்தது.


எங்க ஹாஸ்டல் மாடிப்படிகளின் இருபுறமும் இரண்டு பகுதிகளாக இருக்கும்.கிழக்குப் பக்கம் இரு வரிசைகளாகவும் மேற்குப் பக்கம் ஒரு வரிசையிலும் அறைகள் இருக்கும். எங்கள் அறைகள் கிழக்குப்பக்கம் என்பதால், மேலிருந்து பார்த்தால் கீழுள்ள அறைகள் எல்லாம் தெரியும். எட்டிப் பார்க்கும்போது யாராவது சீனியர் நடந்து போனால் சட்டென்று பின் சென்று ஒளிந்து கொள்ளுவோம். கண்ணுலே பட்டா கடத்திட்டுப் போயிட மாட்டாங்களா?


 எங்களுக்கு வார்டன் பெத்தம்மா மேடம் என்று சொன்னார்கள். ஆனால் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு கீழ் அறையில் தங்கியிருந்த ஹவுஸ்கீப்பர் அம்மாவுக்கு என்றும் சொன்னார்கள். அந்த அம்மாவைப் பார்த்தாலே கொஞ்சம் வில்லி மாதிரி தெரிந்ததால் எனக்கு பிடிக்காமல் போய்விட்டது.


எங்கள் வகுப்பில் நாகர்கோவிலில் இருந்து வந்த க்ரூப் கொஞ்சம் பீலாவாக ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த கோஷ்டி ஒன்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். என்னை மாதிரி கிராமத்திலிருந்து வந்தவர்கள் சின்ன குழுவாக சேர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 


எதிர் வராண்டாவில் இருந்து ஒரு சீனியர் வந்து எங்களில் ரெண்டு மூணுபேரைக் கூட்டிட்டு போய் அவங்க ரூமில் வைத்து பாட்டுப் பாடச் சொன்னாங்க. ”மூன்று முடிச்சு” படம் வந்த புதுசு என்பதால் ”ஆடி வெள்ளி தேடி வந்து” பாடினேன் என்று நினைக்கிறேன். ஆனால் “வசந்த கால நதிகளிலே” பாட்டு பாடச் சொன்னாங்க. ஆம்பிளை வாய்ஸில் பாட வைத்து கலாய்க்கிறாங்களாம். யாரோ ஒருத்தரை ”ஆயிரம் நிலவே வா” பாடலை பாடச் சொன்னாங்க, எப்படி? - ஒவ்வொரு நம்பராக இறக்கி “தொளாயிரத்து 99 நிலவே வா, 998 நிலவே வா”ன்னு அவங்க நிப்பாட்டச்  சொல்ற வரை பாடணும். எப்படியோ பாடி முடிச்சு தப்பிச்சு ஓடி வந்திட்டோம்.


அறைக்கு வந்த பின்புதான், ஒவ்வொருத்தரும் ஏதோ ஒருசீனியர்கிட்டே மாட்டிக் கிட்டாங்கன்னு தெரிஞ்சுது. ஆனால் சீரியஸான ராகிங் யாருக்கும் இல்லை. ராகிங் கிடையாது, யாராவது பண்ணினால் உடனடியாக புகார் தெரிவிக்கவும்னு சொல்லியிருந்தாலும், சின்னச் சின்ன ராகிங் நடக்கத்தான் செய்தது. அதையெல்லாம் நாங்களும் சரியான கோணத்தில் எடுத்துக் கொண்டு புகார் அளிக்காமலும், பிரச்னை ஏற்படுத்தாமலும் பதவிசாக நடந்து கொண்டோம்.


எங்க வகுப்பில் நிறைய பேர் மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த சாதாரண பெண்கள். அதிலும் ஒப்பனை செய்து அழகை மிகைப்படுத்திக் காட்டத் தெரியாத குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அதனால் ரொம்ப சிம்பிள் ஆக இருப்போம். அதனால் எங்களை மட்டம் தட்டும் விதமாக மெஸ்ஸில் வைத்து சில சீனியர்கள் கேலி பேசி குமைத்தார்கள். நாங்க யாரும் அதைப் பொருட்படுத்தவும் இல்லை. நானெல்லாம் அந்தக்காலத்தில்  “கோபுரங்கள் சாய்வதில்லை” சுஹாசினி மாதிரிதான் இருப்பேன். நாங்க எல்லோருமே அதே நிலையில்தான் இருந்திருப்போம், ஒரு சில அழகிகளைத் தவிர.


என்னோட நண்பர் ஒருவர் எப்பவும் சொல்லுவார் ”பெண்களில் அழகு,அழகில்லைன்னு பிரிக்கக்கூடாது; அழகு, மிக அழகுன்னுதான் பார்க்கணும்” ன்னு சொல்லுவார்.  நாங்க அழகா இருந்திருக்கோம். நாட்கள் செல்லச் செல்ல மிக அழகாக ஆகிவிட்டோம். 


எங்க மெஸ்தான் , எல்லோருக்கும் ரொம்ப பிடித்த இடம். ரொம்ப சாதாரணமான ஹாலில் நீள பெஞ்சும் மேஜையும் போட்டிருப்பாங்க. ”ப” வடிவத்தில் இருக்கும் இருக்கைகளில், எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு அரங்கேறும் விவாதங்கள் சூடு பறக்கும். மெஸ் பற்றியே தனிப் பதிவு போடலாம். 

இரவு சாப்பாடு முடிந்தபின் படுக்கப் போக வேண்டும். ஆனாலும் எல்லோருக்கும் புது அநுபவங்களைப் பேசி விமர்சிக்க ஆசை இருந்ததால் எல்லோரும் கூட்டமாக அமர்ந்து கொஞ்ச நேரம் அரட்டை அடித்தோம். 


மூவர் தங்கும் அறையில் மூன்று கட்டில்களும், மேஜையும், நாற்காலியும் தரப் பட்டிருந்தன. மின்விசிறி கூடக் கிடையாது. ரெண்டு ஜன்னல்கள் உண்டு, திறந்து வைத்தால் நல்லா காற்று வரும். A/C room இல்லாட்டி ஹாஸ்டலுக்குப் போக மாட்டேன் என்று சொல்லும் நம் வாரிசுகளுக்கு இது புதுமையாக இருக்கும்.MBBS முடிக்கும் வரைக்கும் மின்விசிறி இல்லாத அறையில்தான் தங்கி இருந்திருக்கிறோம்.


ஒவ்வொரு வராண்டாவின் மூலையிலும் பொதுவான குளியலறை மற்றும் கழிவறைகள் இருக்கும். அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இருக்கும். துண்டு போட்டு ரிசர்வ் செய்தால்தான் முதலில் குளித்து கிளம்ப முடியும். நல்ல வேளையாக வாஷ் பேசின் வெளிப்புறமாக இருக்கும். அதனால் பல் விளக்கவும் முகம் கழுவவும் முண்டியடிக்க வேண்டியதில்லை. வாஷ் பேசினை அணைத்து நிற்கும் கம்பிகளினூடே தெரியும் ,கல்லூரியும் அதை ஒட்டி செல்லும் சாலைகளும்.


 பெண்கள் விடுதியை வட்டமிடும் மன்மத ராஜாக்களின் சேஷ்டைகளை அந்தக் கம்பிகளின் வழியே ரசிப்பது எங்கள் விடுதியிலுள்ள நிறையபேருக்கு அன்றாட பொழுது போக்கு. 


முதல்நாளே வீட்டு ஞாபகம் வந்து தவிப்பவர்களுக்கு ஒரே புகலிடம் போன் ரூம். மாடிப்படிக்கட்டின் அடியிலுள்ள புறாக்கூண்டு மாதிரி இடம்தான் போன் ரூம். அதன் பொறுப்பாளராக ஒரு அட்டெண்டர் உட்கார்ந்திருப்பார்.  அப்போதெல்லாம் நேரடியாகப் பேச முடியாது. டிரங்க் கால் பதிவு செய்துவிட்டு காத்திருக்கணும். வரும் காலங்களில் எவ்வளவு நேரம் தவம் கிடப்போம் என்று அன்றைக்குத் தெரியவில்லை.


மேலே சொன்னதையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கும்போது நமக்கே கண்ணைக் கட்டுதே, அடுத்த தலைமுறை வாரிசுங்க கற்பனையிலாவது பார்த்து ரசிப்பாங்களா இல்லை கண்டபடி குமைப்பாங்களா?

0 Comments:

Post a Comment

<< Home