Friday, August 27, 2021

அலை-50

 அலை-50

அலைகளில் மிதக்க ஆரம்பித்து அரை சதம் போட்டாச்சுன்னு நினைக்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எழுத ஆரம்பிக்கும்போது இத்தனை தூரம் வருவேன் என்று நினைக்கவே இல்லை. ஏதோ ரெண்டுமூணு பதிவுகள் போட்டுவிட்டு முடித்துவிடலாம் என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் எழுத எழுத இன்னும் அதிகமாக எழுத வேண்டும்போல் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. என் எழுத்துக்களைத் தவறாமல் வாசித்து பின்னூட்டங்கள் மூலமும் நேரிலும் உற்சாகப்படுத்திய நண்பர்கள்தான் இந்தப் பயணத்தின் கிரியா ஊக்கிகள். 


என் சொந்தக்கதை பற்றியே சிலாகித்துக் கொண்டிருப்பது, படிப்பவர்களுக்கு அலுப்பைத் தருமோ என எண்ணி சில நாட்கள் அமைதியாய் இருப்பேன். அந்த சந்தர்ப்பங்களில் எதிர் பாராத நண்பரிடமிருந்து வந்த பாராட்டுகள் மறுபடியும் எழுத வைக்கும். அதிலிருந்துதான் என் புரிதலும் அதிகமானது. அனுபவங்கள் என் வாழ்வைச் சுற்றி வந்தாலும் அதன் சாயல்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் நடந்திருக்கும் என்பதுதான் உண்மை. 


எனது அலைகள் மீது தவழ ஆரம்பித்தவர்கள் தங்கள் கறுப்பு வெள்ளை நாட்களை , அதாங்க, கல்லூரிப் பருவங்களைத் தூசி தட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வகுப்பு மற்றும் குடும்ப குழுமங்களில் அந்தக்கால கறுப்பு வெள்ளைப் படங்கள் பதிவேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. “பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல்” நிறைய பேர் பழங்கதைகள் பற்றி கடலை போட்டுக் கொண்டிருக்கிறோம். அதுக்குக் காரணம் கொரோனா தந்த தனிமையாகவோ அல்லது சீனியர் சிட்டிசன் ஆகிவிட்ட வயது மூப்பினாலோ இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், காரியம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 


கடலை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்றதும் , அந்தக்கால ”கடலை”கள்தான் நினைவுக்கு வருகிறது. சாதாரணமாக சாப்பிடும் கடலைக்கு ஆயிரம் வியாக்கியானங்களுடன் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது மருத்துவக் கல்லூரியில்தான். கல்லூரியில் சேர்ந்த போது அரசல் புரசலாக சீனியர்கள் அதைப் பற்றி பேசுவார்கள். முதலில் புரியவில்லை. பிறகுதான் அதன் அர்த்தம் புரிந்தது. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை கடலை போடுவதென்றால் ஆணும் பெண்ணும் பேசுவதைத்தான் குறிக்கும். அதைப்பற்றிப் பேசும்போதே ஒரு கள்ளத்தனத்துடனும் கிளுகிளுப்புடனும் பேசுவார்கள். அதற்கென்று தனி அகராதி, விளக்கம் எல்லாம் உண்டு. கடலை வறுப்பது அவிப்பது உடைப்பது எல்லாம் கூட உண்டு. காலநேரம், இடம், மனிதர்களைப் பொறுத்து பலப் பல ஸ்வாரசியமான கடலை கதைகள் விடுதியில் சுற்றிக் கொண்டிருக்கும். பொழுது போகாதவர்களுக்குப் புறணி பேசவும் ஏதுவாக உடைத்த கடலைகள் கிடைக்கும். 


எங்க வகுப்பு எப்பவுமே கொஞ்சம் ராங்கி பிடிச்ச வகுப்பு என்பதால், அது எப்படி ஆணும் பெண்ணும் பேசுவது மட்டும் கடலை போடுவதாகும்; பெண்களுக்கிடையில் பேசுவதும் கடலை போடுவதே என யோசித்து அப்படியே வழிமுறைப் படுத்திக் கொண்டோம். அதனால்தான் இப்போதும் அடிக்கடி கைபேசியில் கடலை போடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. யார்கூட கடலை போட்டால் என்ன , சூடாக இருக்கும் போது அதன் சுவையும் மணமும் தனிதான். ஆனால் அந்தக் காலத்தில் கடலை பிரச்னையால் ஏகப்பட்ட அடிதடிகள் தகறாறுகள் எல்லாம் ஆகியிருக்கிறது.


கல்லூரிக்குள்ளேயே வெவ்வேறு ஜாதி மதத்தைச் சேர்ந்தவர்கள் கடலை போட்டால் அதைப் பிரிக்கவும், பிரச்னை பண்ணவும் ஒரு கோஷ்டி அலையும். Guardian Angels!! ஜூனியர் சீனியர் கடலை போட்டால் வகுப்புகளுக்கிடையில் தகராறு வரும். எங்க கல்லூரி பெண்களுடன் பக்கத்துக் கல்லூரி மணவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டால் போதும், ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க பாடு அதோகதிதான். எங்க கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் சதக்கதுல்லா மற்றும் ஜான்ஸ் காலேஜ் மாணவர்களுடன்தான் அடிக்கடி மோதல் ஏற்படும். பஞ்சாயத்துகளும் நடக்கும்.


 நிறைய கதைகள் எங்களுக்கு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு கூட தெரிய வரும். அவ்ளோ சீக்ரெட்டாக நடக்கும். பாவம், எத்தனை காதல்கள் அதனால் பிரிந்து போனதோ தெரியாது. அதிலும் ஜூனியர்கள் அந்த மாதிரி கடலைகளில்சிக்கிக் கொண்டால் நேரடியாகவே அடக்குமுறை நடக்கும். அந்த மாதிரி சமயங்களில் விடுதிக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் கூட வித்தியாசமாகவும் மிரட்டும் தொனியிலும்  இருக்கும். 


எங்கள் விடுதியின் தொலைபேசி மாடிப்படிக்கட்டின் அடியில் புறாக்கூண்டு போன்ற இடத்தில் இருக்கும். Trunk call book பண்ணி பேசுவதுதான் அந்தக்காலங்களில் இருந்த ஒரே தொலைத் தொடர்பு. அதற்கு பொறுப்பாக பரமசிவம் மற்றும் செல்லையா என இரண்டு அட்டெண்டர்கள் இருந்தார்கள். யாருக்காவது வீட்டிலிருந்து போன் வந்தால் கீழிருந்து பெயர்களைக் கூவி அழைப்பார்கள். தடதடவென்று நாலுகால் பாய்ச்சலில் போன் வந்தவர் ஓடி வருவார். சாயங்காலம் கல்லூரி விட்டு வந்ததில் இருந்து பெரிய கூட்டமே போன் பண்ணவும், போனை எதிர்பார்த்தும் முன்னாடி ஹாலில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பெர்சனல் போனை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், தங்கள் பெயர்கள் கூவப்படுவதை விரும்பாமல், அங்கேயே தாமதித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களையெல்லாம் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு ஒரு கூட்டம் கடந்து போகும்.


இவைகளுக்கு இடையே முதலாமாண்டு மாணவிகளுக்கென்றே நிறைய Prank calls கூட வரும். சில சமயம் ஜாலியாகவும் பல சமயங்களில் குமைப்பது போலவும் வரும் . எப்போதாவது ஆபாசமான அழைப்புகளும் வரும். யாருக்கு போன் வதாலும் சின்ன கூட்டமாக சேர்ந்து போய்த்தான் பேசுவோம். அதனால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் பாதிப்பு வராது. ராகிங் பாணியில் பேசுவது சீனியர்களா அல்லது அந்த போர்வையில் வகுப்புத் தோழர்களே கேலி பன்ணுகிறார்களா என்பது எங்களால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. 


திடீரென போன் பண்ணி எங்களுக்கெல்லாம் ”பட்டப் பெயர்” (Nick name) வைத்திருப்பதாகச்  சொல்லுவார்கள். கு2 க2 என்றெல்லாம் கூறிவிட்டு விளக்கம் சொல்லாமல் வைத்துவிடுவார்கள். மறுநாள் வகுப்பில் யாருடைய முகத்திலாவது முந்தின நாள் போன் பண்ணிய அறிகுறி தெரிகிறதா என ஒற்றர் வேலை பார்ப்பதிலேயே பொழுது போய்விடும். ஆனாலும் கண்டு பிடிச்சிருக்க மாட்டோம். இது மாதிரி நிறைய சம்பவங்கள் சாயங்கால பொழுதுகளை பிஸியாக வைத்திருக்கும்.


விடுமுறை தினங்கள் வந்தால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்யும். ஆனாலும் சோம்பேறித்தனமாக அதிக நேரம் தூங்கி Recreation room இல் பேப்பர் வாசித்து பாட்டு கேட்டுவிட்டு சாயங்கால நேரங்களில் ஜங்ஷனுக்கு ஷாப்பிங் கிளம்பிவிடுவோம். ஒரே ஒரு பேனா வாங்க வேண்டுமென்றால்கூட நாலைந்து பேராக கிளம்பிப் போய்விடுவோம். பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் இருக்கும் கவிதா ஷாப்பிங் சென்டர் தான் எங்களுடைய  FORUM MALL. பத்துக்குப் பத்து ரூமில் கண்ணாடி ஷெல்ஃப்களில் அனைத்துவிதமான பொருட்களும் கிடைக்கும். எங்க கல்லூரி மாணவ மாணவிகள் எல்லோரும் அந்த கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.


 ஷாப்பிங் முடிச்சுட்டு அப்படியே தானா மூனா கட்டிடம் முன்னாடி ஒரு நடைப் பயிற்சியுடன் கூடிய  window shopping பண்ணினால் விடுமுறை தினம் இனிதே முடியும்.கொஞ்சம் கையில் காசு புரளும் நாட்களில் அப்படியே அரசன் ஐஸ்க்ரீமில் ஏதாவது கொறித்துவிட்டு வருவோம். உஷா எங்களுடன் வந்தால் ஐஸ்க்ரீம் சாப்பிடாமல் வர முடியாது. நாங்கள் படித்த காலத்தில் சின்ன பெட்டிக் கடை சைஸில் இருந்தது இப்போது பெரிய கடையாக மாறியிருக்கிறது.


 கிளம்பிப் போகும்போது எல்லோரும் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு கொஞ்சிக் குலாவிக்கொண்டு  போவோம். திரும்பும் நேரம் வரும்போது ஏதாவது கருத்து வேறுபாடு காரசாரமான விவாதம் என்று ஏதோ ஒரு பிரச்னையுடன் டவுண் பஸ்ஸில் திக்குக்கு ஒருவராக உட்கார்ந்து வருவோம். அடிக்கடி இதே மாதிரி நடக்கும். ஆனாலும் அடுத்த ஞாயிறும் இதே கதைதான் தொடரும்.


ஏதாவது ஒருவாரம் எங்கேயும் போகாமல் விடுதியில் இருந்தாலும் ஏதாவது சேட்டை பண்ணிக் கொண்டுதான் இருப்போம். காற்றடிக்கும் காலங்களில் விடுதிக்கு முன்னால் உள்ள காலியிடத்தில் பட்டம் விடுவோம். அல்லது விடுதியை ஒட்டிய கீழ்புறத்தில் throw ball விளையாடுவோம். எதுவுமே செட் ஆகவில்லை என்றால் வெராண்டாவில் அமர்ந்து கொண்டு அப்படி இப்படி செல்பவர்களை வம்புக்கு இழுப்போம். 


அதில் அடிக்கடி மாட்டுபவர்கள் அட்டெண்டெர்ஸ் பரமசிவமும் செல்லையாவும்தான். பெண்கள் விடுதியில் பொறுப்பான வேலை பார்த்து எங்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்தவர்கள். “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது செல்லையா சவுக்கியமா” என்று கோரஸாகப் பாட்டுப் பாடி அவர்களை வம்புக்கிழுத்தாலும் சிரித்துக் கொண்டே கடந்து போய்விடுவார்கள். 

இரவு 9 மணிக்குள் அனைவரும் விடுதிக்குள் வந்துவிட வேண்டும். தாமதமாக வருவதென்றால் வார்டனிடம் முன்னாடியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வாரத்துக்கு நாலுநாளாவது சினிமாவுக்கு சென்றுவரும் எங்கள் கோஷ்டிக்கு அனுமதி பெறுவது கஷ்டம். அந்த மாதிரி நாட்களில் விடுதி கதவை திறந்துவிட்டு சஹாயம் பண்ணுவதில் இருவரும் எங்களுக்கு நண்பர்களே. அதையும் மீறி ரொம்ப நேரமாகிவிட்டால் கேட்டை ஒட்டி இருக்கும் தாமரை வடிவ க்ரில்லில் இருக்கும் சந்து வழியாகவும் நுழைந்து வந்துவிடுவோம். அப்போதெல்லாம் 40-50 கிலோ எடையில்தான் எல்லோருமே இருப்போம். அதனால் சந்துலே புகுந்து வர்றது எல்லாம் சாத்தியமாக இருந்தது.


அடுத்ததாக எங்கள் கலாட்டாவில் மாட்டுபவர்  மெஸ் பொறுப்பாளர் “பிள்ளை ” தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொனியில் அவரை அழைக்கும் விதமே தனிதான்.  பிரளயமே வந்தாலும் அவர் சமையலும் மாறாது சிரிப்பும் மாறாது. விடுதியில் படித்த ஐந்தரை ஆண்டுகளும் அதே மெனு, அதே சுவை, அதே பிள்ளை. ஆனால் கரெக்டான நேரத்தில் உணவுகள் ரெடி பண்ணி வைப்பதே பெரிய சர்க்கஸ் என்பதால் வெரைட்டிகளைப் பார்க்க முடியாது. முதலாண்டில் நான் சுத்த சைவமாக இருந்ததால் வீட்டு சாப்பாட்டுக்கும் மெஸ் சாப்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. 


நான்வெஜ் சாப்பிட்டவர்களுக்கு வெரைட்டிகள் கிடைக்காது. கூப்பிடும் தூரத்தில் இருந்த அஷோக் மெஸ்ஸில் சகல விதமான மாமிச வகைகளும் கிடைக்கும் என்பதால் அங்கு நிறைய பேருக்கு அக்கவுண்ட் இருக்கும். ஆனால் அங்கு எந்நேரமும் ஆண்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் அங்கு போய் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை. செல்லையாவோ பரமசிவமோ பார்சல் வாங்கித் தந்துவிடுவார்கள். அஷோக் மெஸ்ஸின் ஆயில் மட்டன் ரொம்ப பிரபலம். ஆண்கள் விடுதியில் இருப்பவர்களுக்கு பெண்கள் விடுதி முன்னர் நடை பயிலவும் சைக்கிள் விடவும் அஷோக் மெஸ்தான் சரியான சாக்குபோக்கு.  


வருகின்ற ஆகஸ்ட் மாதத்துடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 44 வருடங்கள் முடிவடைகின்றன. ஆனாலும் அன்றைய நிகழ்வுகளும் நினைவுகளும் நேற்று நடந்தது போல் நெகிழ்வைத் தருகின்றது.

0 Comments:

Post a Comment

<< Home