அலை-57
அலை-57
“மருத்துவக் கண்காட்சி”
நாங்க இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மருத்துவக் கண்காட்சி (Medical Exhibition) நடைபெற்றது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக நடந்தது. சுத்துப்பத்து ஊர்களில் இருந்தெல்லாம் பொதுமக்கள் நிறையபேர் வந்து சென்றதால் திருவிழா போல் நடந்தது. . வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அனுபவங்களில் அந்த கண்காட்சி நாட்களும் அடக்கம். இன்று நினைத்தாலும் பசுமையான நினைவுகளைத் தந்த நாட்கள்.
ஒவ்வொரு வருட மாணவர்களையும் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பினார்கள்.
அனாடமி தியேட்டருக்கெல்லாம் எங்களுக்கு முந்தின வகுப்பு மக்களே சரியாக இருந்ததால் எங்களை முதல் வருட பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பிவிட்டார்கள். எங்களுக்கு அதில் கொஞ்சம் வருத்தம்தான். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் வரும்போது அனாடமி தியேட்டரில் காண்பிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. பிறவி ஊனமான குழந்தைகள், ஒட்டிப் பிறந்த குழந்தைகள் என ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் பொருட்கள் நிறைய இருக்கும். முதலாண்டு வகுப்புகள் வறட்டுதனமான பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரின்னுதான் இருக்கும் என்று சோர்வாக ஏற்றுக்கொண்டோம்.
நானும் உஷாவும் கெமிஸ்ட்ரி லேப் போய்ச் சேர்ந்தோம். உஷா எப்பவுமே ரொம்ப ஜாலியாகவும் கோமாளித் தனமாகவும் இருப்பாள். அவளுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக இருக்கும். அதனால் ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். கண்காட்சி ஆரம்பிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டன. கெமிஸ்ட்ரி லேபில் இருந்த டெஸ்க் , பெஞ்சுகள் எல்லாம் அகற்றப்பட்டவுடன் அந்த இடமே விசாலமான ஹாலாக மாறிவிட்டது. இடங்கள் வரையறுக்கப்பட்டு வெவ்வேறு ஸ்டால்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
வாலண்டியர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து வேலை செய்ததால் சீக்கிரமே ஸ்டால்கள் ரெடியாக ஆரம்பித்தன. பரூக் சாருடன் சேர்ந்து மற்ற ஆசிரியர்களான பாபனாசம், செல்வசேகரன் மற்றும் சத்யமூர்த்தி என்ற நால்வர் அணி அந்த இடத்தையே கனவுக் கோட்டையாக மாற்றிவிட்டார்கள். இந்த விஷயங்களுக்கு எல்லாம் நாம படிச்ச கெமிஸ்ட்ரி தான் அடிப்படை என்பதையே நம்ப முடியாத அளவுக்கு வித விதமான ஸ்டால்கள் உருப்பெற்றன. ஒவ்வொரு பொருளை கொண்டு வைக்கும் போது எதற்கு என்றே தெரியாமல் வைப்போம். அது வடிவம் பெறும் போது ஆச்சரியத்துடன் மூக்கில் விரலை வைப்போம்.
பாபனாசம் சார்கிட்டே கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால் கண்டிப்பான அவரின் போக்குதான் எல்லோரையும் ஒழுங்கு படுத்தும். சத்யமூர்த்தி சார் அப்போதுதான் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வந்திருந்ததால், புதுவிதமான உத்திகளைக் கொண்டு சிறப்பான ஸ்டால்கள் நிறைய உருவாக்கிவிட்டார். கெமிஸ்ட்ரி லேபின் போரடிக்கும் தன்மையைப் போக்கி புதுமையான அம்சங்களைச் சேர்த்தது அவர்தான். அதனால் ஆரம்பத்தில் போரடிக்கும் என்று நினைத்திருந்த கெமிஸ்ட்ரி லேப் எங்களுக்கு சொர்க்கமாகிப் போனது.
எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் துணிக்கடை பொம்மை ஒன்று கொண்டுவந்து வைத்தார்கள். ஒருவேளை வரவேற்புக்காக இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் அதை ஸ்டாலுக்கு உள்ளேயே கொண்டு வைத்தபோதுதான் அதன் முக்கியம் புரிந்தது. கலக்கலான ஸ்டாலுக்கு சொந்தக்காரி அந்த அம்மா. “தொட்டால் சிவப்பது மலரா மங்கையா” என்பது அதன் பேனர். அதிலுள்ள வாலண்டியர்ஸ் மிகச் சிறப்பாக விளக்குவார்கள். ஆண்கள் தொட்டவுடன் அந்தப் பதுமையின் கன்னங்கள் சிவக்கும். பெண்கள் தொட்டால் ஒரு பாதிப்பும் இருக்காது. அதனால் அதைச் சுற்றி ஆண்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கும்.
பொம்மையின் காலடியில் ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் பொட்டசியம் பெர்மாங்கனேட் என்ற திரவம் நிரப்பப் பட்டிருக்கும். அதிலிருந்து ஒரு மெல்லிய குழாய் ஆடைகளின் ஊடே மறைத்து முதுகுப் புறமாகக் கொண்டு செல்லப்பட்டு காதின் பின் பக்கம் பொருத்தப்பட்டிருக்கும். ஆண்கள் தொடும்போது மட்டும் குடுவையைக் காலால் அமுக்குவார்கள். திரவம் பொம்மையின் கன்னங்களில் படர்ந்து சிவப்பாகும். பெண்கள் தொடும்போது அமுக்க மாட்டார்கள். அதில் நிற்கும் வாலண்டியர்ஸ் கேலி கிண்டல்களுடன் கன்னத்தைச் சிவக்க வைக்கும் போது ஏக தமாஷ்தான்.
நாங்கள் கன்னம் சிவக்கும் பொம்மையை ஒட்டியே இருந்தோம். ஒரு தட்டு நிறைய பூக்களாக அடுக்கப் பட்டிருக்கும். ஆண்கள் அதைத் தொட்டால் சிவக்கும் வண்ணம் பூக்களுக்கு இடையிலும் ட்யூப்கள் சொருகப்பட்டிருக்கும். வேண்டுமென்றே பொம்மையையும் பூக்களையும் மாறி மாறி தொட வைத்து விளையாட்டு காட்டுவோம். எப்பவும் ஆண்கள் கூட்டம் அங்கேயே தங்கிவிடும்.
இன்னொரு பக்கம் கூரையிலிருந்து தண்ணீர் குழாய் தொங்கிக் கொண்டிருந்தது. அங்கே இங்கே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கண்காட்சிக்கு முன்னர் அனைத்தும் உருமாறி பெயர் மாறி அசத்தலாக மாறிவிட்டது. கூரையிலிருந்து தொங்கிய பைப்பிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. எங்கிருந்து அந்த குழாய்க்கு தண்ணீர் வருகிறதென்றே தெரியாது. அதன் ரகசியம் எப்படி என்று விளக்கிச் சொல்லப் பட்ட பின்புதான் புரிந்தது.
அதே விஷயத்தை 40 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ”Believe it or Not” மியூஸியத்தில் பார்த்தபோது புளகாங்கிதப் பட்டுப்போனேன். பின்பக்கத்தின் பளீரொளி (FLASH-Back) கடல் கடந்து போனாலும் கல்லூரிக்கு அழைத்துப் போய்விட்டது. பொருட்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக அந்த “ஆகாய கங்கை” இருந்தது.
மலரும்,மங்கையும், கங்கையும் எங்கள் அரங்கத்திற்கு மெருகு சேர்த்தன. இதெல்லாம் போக வித விதமான உப்புகளைக் கொண்டு கலர் கலராக நிறைய ஸ்டால்கள் இருந்தன. ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கேற்ப கூட்டத்தை மயக்கிக் கொண்டிருந்தனர்.
எங்க லேப் தவிர மற்ற அரங்குகளையும் அப்பப்போ போய் சுற்றி பார்த்துவிட்டு வருவோம். வகுப்பறையில் பார்த்திராத அரிய ஸ்பெசிமன்கள் (specimen) கூட அனாடமியில் வைக்கப்பட்டிருந்தன.
மருத்துவ மாணவர்கள் என்பதால் எலும்புக் கூடுகளை வைத்து நிறைய அற்புதமான அரங்குகள் அமைத்திருந்தார்கள். உருகும் மனிதன் (MELTING MAN) அதில் ஒன்று. எழில் வகுப்புத் தோழர் மோகன் என்பவர் அதற்கு பொறுப்பாளராக இருந்ததாக ஞாபகம். அவர் பெயரே மந்திரவாதி மோகன் என்பதுதான். நிறைய வார்த்தை ஜாலங்களுடன் விளக்கமும் சொல்வதால் எப்போதும் அரங்கம் நிறைந்தே இருக்கும்.
நிலைக்கண்ணாடிகளைக் குறுக்கும் நெடுக்குமாக அமைத்து ,விளக்குகளை ஒளிர விட்டும் அணைத்தும் ஜாலம் செய்யும் நிகழ்ச்சி. ஒருபுறம் நின்றுகொண்டிருக்கும் மனிதன் படிப்படியாக உருகி, எலும்புக் கூடாவதுதான் க்ளைமாக்ஸ். பொதுமக்களுக்கு எலும்புக்கூடு பார்ப்பதே தனி சுவாரஸ்யம். அதிலும் மனிதன் உருகி எலும்புக் கூடாவது ரொம்ப பெரிய விஷயம். திறந்த வாய் மூடாமல் அதிசயமாகப் பார்த்தவர்கள் அநேகம். நாங்களும் அதில் உண்டு. எலும்புக்கூடு பழகியதுதான் என்றாலும் அந்த செய்முறை புதிது.
இன்னொரு அரங்கில் எலும்புக்கூடு நடனம் ( Skeleton Dance) இருந்தது. ரெண்டுமூணு எலும்புக் கூடுகள் இசைக்கேற்ப நடனமாடுவதைப் பார்த்தால் கல்லூரியில் இருக்கிறோமா கல்லறைத் தோட்டத்தில் இருக்கிறோமா என்றே சந்தேகம் வந்துவிடும். மயிர்க்கூச்செறியும் அளவு த்ரில்லாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகளின் அழுகுரல் இசையையும் மீறி ஒலிக்கும்.
அவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதுபோல் எலும்புக்கூடுகளின் திருமணம் (Skeleton Marriage) கீழ் தளத்தில் பயோ கெமிஸ்ட்ரி விரிவுரை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய அரங்கில் அத்திருமணம் அமைக்கப்பட்டிருந்த விதம் இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. தொழில் நுட்பம் அவ்வளவாக வளர்ந்திராத காலகட்டம். பொறியாளர்களோ டெக்னீஷியன்களோ இல்லாமல் மருத்துவ மாணவர்கள் மட்டுமே முயன்று வடிவமைத்திருந்தார்கள். Dr. ஜெயகர், பிராயன் சக்ரவர்த்தி, இன்னும் பெயர் மறந்துவிட்ட சில சீனியர்களின் அயராத உழைப்பில் அற்புதமாக நடந்தது. எங்க வகுப்பு ஆண்ட்ரூவைக்கூட அந்த அரங்கில்தான் பார்த்த மாதிரி நினைப்பு வருது.
கல்யாணப் பெண், மாப்பிள்ளை, புரோகிதர் எல்லோருமே எலும்புக் கூடுகள்தான்.மணவறை, அக்கினிக் குண்டம் எல்லாம் தத்ரூபமாக இருக்கும். குண்டத்தில் நெருப்பு எரிவது கூட அம்சமாக செய்திருந்தார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் வில்லன் அரங்கத்தின் பின்னாலிருந்து பாய்ந்து வரும் காட்சி எங்களையே அலற வைத்திருக்கிறது. பார்வையாளர்களின் பெஞ்சுகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில் வாட்டமான இரும்புக் கம்பியில் தொங்க விடப்பட்டிருக்கும் வில்லன், சரியான சமயத்தில் அந்தக் கம்பியில் சறுக்கிக் கொண்டு வரும் சத்தமும் அசைவும் இப்போது நினைத்தாலும் திடுக்கிட வைக்கிறது. புரோகிதர் மந்திரம் சொல்ல பின்னணி இசை ஒலிப்பதிலிருந்து, தேங்காய் உடைக்கும்போது வரும் சத்தம் வரை ஒலி அமைப்புகள் அனைத்தும் சூப்பராக ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன.
அந்த சறுக்குக் கம்பியைக் கட்டிக் கொண்டிருக்கும் போது ஓரிரு முறை அந்த அரங்கினுள் எட்டிப் பார்த்திருக்கிறோம். ஆனால் காயலான் கடைபோல் கிடந்தது. கண்காட்சியின் போது கல்யாண வைபோகமாக மாறிவிட்டது. இது போன்ற சிறப்பு அரங்கங்களுக்கு இலவச அனுமதி கிடையாது. நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். நாங்கலெல்லாம் வாலண்டியர் அடையாள அட்டை போட்டிருந்ததால் எத்தனை தரம் வேண்டுமென்றாலும் பார்க்கலாம். எழிலும் அந்த அரங்கில்தான் இருந்தாங்களாம். பின்னால் சொல்லக் கேள்வி. தெரியாததால் கடலை போடும் வாய்ப்புகள் தப்பிவிட்டது -“வடை போச்சே”!!
எங்கள் கல்லூரியின் மூன்று தளங்களிலும் எல்லா அறைகளிலும் ஏதாவது ஒரு அரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சில போரடிக்கும், சில அறிவார்த்தமாக இருக்கும். ஆனாலும் கண்காட்சி பார்க்க வருபவர்கள் முழு அரங்குகளையும் ஒரு நாளில் பார்த்து முடிக்க முடியாது. எங்கள் கல்லூரியைச் சுற்றி ஏகப்பட்ட ஆர்ட்ஸ் கல்லூரிகள் உண்டு. சேவியர்ஸ், ஜான்ஸ், சதக்கதுல்லா கல்லூரி மாணவர்களின் கூட்டம் வரும்போது பெண்களிடையே ஏகமாய் சலசலப்பு இருக்கும். சாரா டக்கர் கல்லூரி, இக்னேஷியஸ் கான்வெண்ட் மாணவிகள் வரும்போது மாணவர்களிடையே அதிக உற்சாகம் வரும்.
கண்காட்சிக்கென சிறப்பு பேருந்துகள் எல்லாம் விட்டிருந்தார்கள். கிராமப்புற பள்ளிகளிலிருந்து வரும் மாணவ மாணவியர் திரும்பிப் போகும் போது கண்டிப்பாக மருத்துவர் ஆகணும்னு ஆசையைத் தூண்டும் அளவுக்குக் கண்காட்சி சிறப்பாக நடந்தது. எல்லார் வீட்லேயிருந்தும் உறவு முறைகள் வரும்போது, நாங்களும் அவங்ககூட சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவோம். எங்க ஸ்டாலை நண்பர்கள் யாராவது பார்த்துக்குவாங்க. எங்க அம்மா எங்க கல்லூரிக்கு வந்த ஒரே தரம் அந்த கண்காட்சிதான்.
நாட்கள் சிறகு கட்டி பறந்தது என்றால் மிகையாகாது. கூட்டம் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட நாட்கள் கடந்தும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று ஏதோ காரணத்தால் திடுதிப்பென்று கண்காட்சியை நிறுத்திவிட்டார்கள். விதவிதமாக வதந்திகளும் சுற்றிக் கொண்டிருந்தன. எதுவானாலும் எங்கள் சந்தோஷம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. ஆனால் அந்த நினைவுகளோ இன்றும் பசுமையாகத் தொடர்கிறது.
0 Comments:
Post a Comment
<< Home