அலை-66
அலை-66
“அந்த ஏழு நாட்கள்”
நினைவலைகளுக்கு நடுவே ஒரு நிகழ்வலை. எத்தனையோ ஏழுநாட்களைக் கடந்து வந்திருந்தாலும் சில நாட்கள் மறக்கமுடியாதவை ஆகிவிடும். இந்த வருடம் மார்ச் 13 முதல் 19 வரை வந்த ஏழுநாட்களும் மிகக் குறிப்பிடப்பட வேண்டியவை. கல்லூரி காலத்து நாட்களை மறுபடியும் வாழ்ந்து பார்த்த ஒரு அநுபவம். 77ஆம் அண்டு வகுப்பு நண்பர்கள் பதினோரு பேர் குடும்பத்தினர் நால்வர் என பதினைந்துபேர் கொண்ட குழுவாக வடகிழக்கு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம்.
எனக்கு ரொம்ப நாளாக அசாம் மாகாணத்தில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அதனுடன் சேர்த்து அருகிலுள்ள மேகாலயாவின் சிரபுஞ்சியையும் பார்த்துவிடலாம் என யோசனை வந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வகுப்புத் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது கொஞ்சம் தொலைவான இடங்களுக்கு சென்று வரலாமே என்ற விவாதங்கள் நடந்திருந்தது.இந்த பயணத்துக்கு யாரெல்லாம் வரமுடியும் என்ற வேட்டையில் இறங்கினேன்.
எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் இணக்கமாக இருப்பவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கணும். முட்டுக்கட்டை போடுபவர்களிடம் ஆரம்பித்தால் திட்டமே சொதப்பலாகிவிடும். எனக்கு இணையாகவும் துணையாகவும் இருக்கும் நளினி மற்றும் மாரியிடம் முதலில் சொன்னேன். இருவருக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் இருந்தபோதும் அவற்றை வேறு நாட்களுக்குத் தள்ளி வைத்துவிட்டு ஓகே சொல்லிவிட்டார்கள். சோம்ஸ் அண்ணாதான் எப்பவும் எங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர். எழிலுக்கு முதுகுவலி இருந்ததால் நான் மட்டும்தான் போவதாக ஏற்பாடு. நளினியின் கணவர் ரவி , எழில் வராததால் கம்பெனி இல்லையே என முதலில் தயங்கினாலும் மற்ற நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால் சரியென்று சொல்லிவிட்டார்.
அடுத்ததாகப் பிரயாணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாஸ்கர் அண்ணாவும் சரியென்று சொல்லிவிட்டார்கள். நாகர்கோவில் மும்மூர்த்திகள் ஸ்டீபன், சைமன், முத்தையாவும் நாலாவதாக பாலகிருஷ்ணனும் சேர்ந்ததும் டூர் களைகட்டிவிட்டது. எங்கு சென்றாலும் மறக்காமல் இணையக்கூடிய பராசக்தியை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் சமீபத்திய மூட்டு வலியிலிருந்து தேறி வரும் அவளுக்கு அசாம் ரோடுகளின் பயணம் தாங்குமா என்ற சந்தேகத்துடன் மெதுவாகக் கேட்டேன். உடனே வருவதாகக் கூறிவிட்டாள். பரா வரும்போது ரூஃபஸும் வந்துதானே ஆகவேண்டும்.
சில பல காரணங்களால் அண்ட்ரூ, பானு, ஹரி எல்லோரும் இந்த முறை வர முடியவில்லை.
சாலிட்டீஸ்வரனின் மகன் அசாம் மருத்துவக் கல்லூரியில் MD படித்துக் கொண்டிருந்ததால் அவரையும் கூப்பிட்டுப் பார்த்தேன். முதலில் தயங்கினாலும் மகன் கொடுத்த உற்சாகத்தில்
ஜெயந்தியும் அவரும் சேர்ந்து கொண்டார்கள். சைமனின் மகள் ஷிரின் இயற்கை வளங்களில் ஈடுபாடு உள்ளதால் அவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.
முதலில் பத்துபேர் செல்வதாக இருந்ததால் 12 இருக்கைகள் கொண்ட வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பதினைந்துபேர் சேர்ந்துவிட்டதால் கொஞ்சம் பெரிய வண்டியாக மாற்றி ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னும் அதிக நபர்கள் சேர்ந்தால் இரண்டு வண்டிகள் அல்லது பேருந்து மாதிரி பெரிய வாகனம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ட்ராவல்ஸில் சொல்லிவிட்டதால் அதன் பின்னர் யாரிடமும் சொல்லாமல் அமுக்கமாக இருந்துவிட்டேன்.
ஞாயிறு காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து கெளகாத்திக்கு நேரடி ஃப்ளைட். சனிக்கிழமை இரவு அனைவரும் சென்னை வந்துவிடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தென்பகுதியில் இருந்து வருபவர்கள் தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் வந்துவிட்டார்கள். திரும்பிச் செல்லும்போது அனைவருக்குமே திருவனந்தபுரம் கனெக்டிங் விமானம் பதிவு செய்யப்பட்டு விட்டது. நான் சனிக்கிழமை ட்ரெயின் மூலம் சென்னை சென்று தம்பி நாராயணன் வீட்டில் தங்கிக்கொண்டேன்.
கெளகாத்தி விமான நிலையத்தில் இறங்கி அங்குள்ள பிரபலமான கோவில்கள் ஒன்றிரண்டு பார்த்துவிட்டு ஷில்லாங் சென்று தங்க வேண்டும். காலை உணவு விமான நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷிரின் மற்றும் ஜெயந்தி தவிர அனைவரும் அறுபது தாண்டியவர்கள். பசி தாங்குவது கஷ்டம். இதைக்கேட்டதும் தம்பி மனைவி விஜி அதிகாலை 3 மணிக்கே எழுந்து வாழைப்பூ வடை சுடச்சுட செய்து தந்தாள். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர் என்பதால் ஆசையுடனும் அக்கறையுடனும் செய்துகொடுத்தாள். ஏற்கனவே மாரி முறுக்கு செய்வதாகவும், நான் ப்ளம் கேக், பராசக்தி கடலை மிட்டாய், தட்டை , அவித்த பனங் கிழங்கு கொண்டுவருவதாகவும் திட்டம் தீட்டிவிட்டோம்.
அந்த ஏழுநாட்களின் முதல் நாளாக ஞாயிறு அதிகாலை அனைவரும் விமான நிலையத்தில் ஒன்று கூடினோம். அனைவரையும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. செக்யூரிட்டி செக் முடிந்தவுடன் வடை, கேக் ,முறுக்கு என்று வித விதமாக சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து திரும்பி வரும்வரை அந்த உற்சாகமும் சந்தோஷமும் குறையவே இல்லை.
North East Tourism ரொம்ப அலுப்பூட்டும் வகையில் ரொம்ப நேரம் பிரயாணம் செய்வதாகவே இருந்தது. ஆடி காரும் பென்ஸ் காரும் உள்ளவர்களெல்லாம் அந்த Tempo Traveller Van இல் கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தபோதும் நண்பர்களுடன் இணைந்திருந்த சந்தோஷம் மட்டும் குறையவே இல்லை.
பிரயாணத் திட்டத்தில் ஏகப்பட்ட இடங்கள் பார்க்க வேண்டி இருந்ததால் தினம் தினம் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கும்படி இருந்தது. பெட்டியைப் பிரிப்பதும் அடுக்குவதும் தினசரி வாடிக்கையாகிப் போனது. நாங்கள் சென்ற சீசனும் ரொம்ப வெயில் காலமாக இருந்ததால் வண்டியில் சென்ற பிரயாணங்கள் கடுப்பேத்துவதாகவே இருந்தது. ஆனால் பார்க்க சென்ற ஒவ்வொரு இடமும் மிகச் சிறப்பானதாக இருந்ததால் அந்த கஷ்டங்களை பொறுத்துக் கொண்டோம்.
மேகாலயாவில் முதல் முதலில் பார்க்கச் சென்றது டவ்கி ஆற்றில் படகுச் சவாரி. பங்களாதேஷ் எல்லையில் இருந்த ஆற்றின் தெள்ளத்தெளிவான நீரோட்டத்தில் கீழே தெரிந்த பளிங்குக் கற்களும், அமர்ந்திருந்த படகின் நிழலும் அருமையோ அருமை.ஆற்றின்
குறுக்காகவே
இரண்டு நாடுகளின்
காவலர்களும் நின்று
கொண்டு எல்லை தாண்டுபவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்
கள்.அந்த நிலையிலும் ஷிரின் அந்தப் பக்கம் போய் இளநி குடிச்சுட்டு வந்துவிட்டாள்.மெஹா சைஸில் இருந்த எலந்தப்பழத்தில் பச்சை மிளகாய் மசாலா போட்டு சாப்பிட்டது சூப்பர் சுவை.
அங்கிருந்து Living root Bridge (single decker) சென்றோம். ஆற்றின் இரு கரையில் உள்ள ரப்பர் மரங்களின் வேர்கள் எதிர் கரைக்கு நீண்டு சென்று இயற்கையான பாலங்கள் ஏற்படுத்தியிருந்தன. இது போல் பத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் மேகாலயாவில் இருக்கின்றனவாம்.500 வருடம் பழமையான பாலங்களும் உண்டு.
பாலத்துக்குச் செல்ல ரொம்ப இறங்கணும், வழுக்கும் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக பில்ட்-அப் கொடுத்து பயம் காட்டியிருந்தார்கள். அதனால் பராவை தொல்லைபடுத்த வேண்டாம் என்று வண்டியிலேயே விட்டுச் சென்றோம். ஆனால் நாங்களெல்லாம் அஞ்சு நிமிஷத்தில் வேர்ப் பாலத்துக்குச் சென்றுவிட்டோம். குற்றாலத்தில் குரங்குகள் மாதிரி ஏறித் திரிந்த எங்களுக்கு அது ஜுஜுபி trek ஆகத்தான் இருந்தது. வேர்ப் பாலத்தில் நடக்க த்ரில்லாகத்தான் இருந்தது.ஆற்றுக்குள் இறங்கி பாலத்தைப் பார்த்தால் பிரம்மாண்டமாக
இருந்தது.
அஞ்சு மணிக்கே அங்கு இருட்ட ஆரம்பித்துவிடுகிறது, அடுத்து மாவ்லிந்நாக் என்ற ஊருக்கு அடித்து பிடித்து சென்றோம்.ஆசியாவிலேயே மிக சுத்தமான கிராமம் என்று அழைக்கப்படுகிறது. யாரும் தெருக்களில் குப்பை கொட்டுவதில்லை, மூலைக்கு மூலை குப்பைத் தொட்டிகள் இருந்தன. மின்சாரம் இல்லாததால் முழுநிலவின் அழகில் அந்த கிராமம் இன்னும் ரம்யமாகத் தெரிந்தது.
அங்கிருந்து சிரபுஞ்சி சென்று ஹோட்டலில் தஞ்சமடைந்தோம். தமிழர் ஒருவர் அங்குள்ள காசி(khasi)பழங்குடி பெண்ணை மணந்து அந்த விடுதியை நடத்தி வருகிறார். தோசை, சட்னி, சாம்பார் என அமர்க்களமாக சாப்பிட்டோம்.
பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் ‘பிரண்டை’ துவையல் பண்ண ஆள் கிடைக்காததால் நான்
ஆண்களுடன் சீட்டாட்ட க்ரூப்பில் இணைந்து கொண்டேன். மறுநாள் காலையில் எல்லோருமாக நிதானமாக எழுந்து நடைப்பயணம் சென்றோம். ஆசியாவிலேயே மிக அதிக மழைப் பொழிவு உள்ள இடமாக வர்ணிக்கப்பட்ட சிரபுஞ்சி காய்ந்து கிடந்ததைப் பார்த்து மனம் நொந்தோம். ஜூன் மாதத்திற்குப் பிறகு நன்றாக இருக்குமாம், ஆனால் காசிரங்காவில் காண்டாமிருகம் பார்ப்பது அரிது என்பதால்தான் இந்த சீசனைத் தேர்ந்தெடுத்தோம்.
அங்கிருந்த Double decker living root bridge க்கு இறங்க 3000 அடிகள் நடக்க வேண்டும் என்றார்கள். எனவே அதை தவிர்த்தோம். எங்கள் விடுதியின் உரிமையாளினி ஏஞ்சலா நல்லா தமிழ் பேசியதுடன், அருகில் இன்னுமொரு இரட்டை அடுக்கு பாலம் இருப்பதாகக் கூறி துணைக்கு ஒரு ஆளும் அனுப்பினார்கள். ஏற்ற இறக்கம் அதிகம் இருக்காது என்றதால் பராவையும் ஊக்கப்படுத்தி அழைத்துச் சென்றோம். பத்து நிமிஷ நடைக்குள் எதிரே தெரிந்தது அழகான ரெட்டை அடுக்கு வேர்ப்பாலம். எங்க சந்தோஷத்தைச் சொல்லி மாளாது.
பாலத்தில் ஏறி நடந்து, போட்டோ எடுத்து பிரிய மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். சுற்றுலா தலங்களின் லிஸ்ட்டில் இன்னும் இணைக்கப்படாமல் இருந்ததால் கூட்டமே இன்றி தனிக்காட்டு ராஜாக்களாக கும்மாளமிட்டு ரசித்தோம். முந்தின நாள் ஒற்றைப் பாலம் வராததற்கும் சேர்த்து பராசக்திதான் மிக அதிகமாக ரசித்தாள். ஏஞ்சலாவுக்கு ஒரு ஓஓ போட்டுகிட்டோம்.
அடுத்து சென்ற மவ்ஸ்மாய் குகை கொஞ்சம் அமாநுஷ்யத்தைக் கொடுக்கத்தான் செய்தது. சில இடங்களில் உட்கார்ந்து தவழ்ந்து வரவேண்டியிருந்தது. குகையின் வெளியே வந்து மேகாலயாவின் புரதான ஆடைகள் அணிந்து போட்டோ எடுத்த போது கத்திச் சண்டை போட்டுக் கொண்டார்கள் ஸ்டீபன், பாஸ் அண்ணா மற்றும் ரூஃபஸ். பிடித்தது கத்தி என்றாலும் ரசித்தது என்னவோ காமெடிதான்.
வரும் வழியில் ஒழுக்குத் தண்ணீராய் விழுந்த மிக உயரமான அருவியையும் பார்த்தோம்.
இரவு ஷில்லாங்கில் தங்கிவிட்டு மறுநாள் காசிரங்கா தேசிய பூங்கா பார்க்கக் கிளம்பினோம். செல்லும் வழியில் உமியம் ஏரியில் படகு சவாரி சென்றோம். உமியம் ஆற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரி அது. சுற்றிலும் பச்சைப் பசேலென்ற மலைகளின் நடுவே படகில் சென்றது ரம்யமாக இருந்தது. படகு சவாரி முடித்ததும் கொஞ்ச நேரம் திண்டுகளில் அமர்ந்து
அரட்டை அடித்தோம்.
அந்தி சாயும் நேரத்தில் காசிரங்காவை நெருங்கிய தருணத்திலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் தென்படத் தொடங்கிவிட்டது. நம்ம ஊர்லே மாடு மேயுறமாதிரி ஜாலியா நிக்குது. மறுநாள் காலையில் இன்னும் அதிகமாகப் பார்க்கலாம் என கைடு சொன்னதால் கீழே இறங்குவதைத் தவிர்த்தோம். வெயில் காலத்தில்தான் ஈஸியாகப் பார்க்கலாமாம்.
அதிகாலையில் யானைமேல் ஏறி சென்றபோது காண்டாமிருகம் கைக்கெட்டும் தூரத்தில் மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது அதுவரை இருந்த பிரயாணக் களைப்பு, சுட்டெரிக்கும் வெயில் எல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டாவது சுற்றாக ஜீப் சஃபாரி சென்றும் இன்னும் அதிகமாகப் பார்த்தோம். மறுநாள் கெளகாத்தி அருகிலுள்ள பொபிடோரா (மினி காசிரங்கா) வனவிலங்கு சரணாலயத்தில் மேலும் அதிக காண்டாமிருகங்களைப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். கண்ணு பூத்துப் போகும் அளவுக்கு காண்டாஸ் பார்த்தோம்.
அடுத்ததாகச் சென்ற ஆர்க்கிட் பூங்காவில் ஏகப்பட்ட அரிய வகை மலர்கள் , அதை விளக்கிச் சொல்ல நேர்த்தியான கைடு என்று பொருத்தமாக இருந்தது. ஸ்டீபன் நெறைய செடிகள் வாங்கினார். நேரமின்மையால் அதுவரை தவற விட்டிருந்த அசாமின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும் அங்கு பார்க்க முடிந்தது.
மூங்கில் கைவினைப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் அங்கு விற்பனை செய்யப்பட்டன. நாங்கள் அனைவரும் மொத்தம் மொத்தமாக வாங்கியதில் அனைத்தும் தீர்ந்து போய்விட்டன.
மதிய உணவு முடித்துவிட்டு நேராக கெளகாத்தி சென்று மேஃப்ளவர் ஹோட்டலில் தஞ்சமடைந்தோம்.பெண்களின் நால்வர் அணி அத்தனை நாட்களும் தேக்கி வைத்திருந்த புரணிகளை வெளிவிட்டு வெகுநேரம் வரை பிரண்டைத் துவையல் அரைத்து மகிழ்ந்தோம். டெல்லியில் இருந்து தோழி சுபாவும் எங்களுடன் இணையும் பொருட்டு முதல்நாளே கெளகாத்தி வந்து சேர்ந்துவிட்டாள். மறுநாள் அவளும் எங்களுடன் பொபிடொரா வருவதாக சொன்னதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. குகனுடன் ஐவரானோம் என்பதுபோல் சுபாவுடன் ஐவர் ஆனோம். ஐந்து பெண்களும் ஏழு ஆண்களுமாக பன்னிரெண்டுபேர் ஒரே வகுப்பிலிருந்து இணைவது பெரிய விஷயம்தான்.
பொபிடோராவில் காசிரங்கா அளவு சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் மிக அருகில் இயற்கையான சூழலில் நிறைய காண்டா பார்த்தோம். அதிலும் கம்பீரமாக ஒரு காண்டா வாய்க்காலில் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு குளிக்கச் சென்ற மொத்த அசைவுகளும் சூப்பரோ சூப்பர். மதிய உணவிற்காக ரோடு ரோடாக அலைந்தோம். ஒரு உணவு விடுதி கூட திறக்கப்படவில்லை. அன்று ஹோலி பண்டிகை என்பதால் எல்லாம் மூடிவிட்டார்கள். நல்ல வேளையாக கைத்தறிப் பொருட்காட்சி அருகில் நடப்பதாக சுபா சொன்னாள். நேராக அங்கே போய்விட்டோம். வித விதமாக ஆறேழு மாநிலங்களின் சுவையான உணவுகளை ருசித்தோம்.
வடகிழக்கு பகுதியில் மாலை 7 மணிக்கே கடைகள் எல்லாம் மூடிவிடுகிறார்கள். அதனால் ஷாப்பிங் போவதே முடியாமல் போய்விட்டது. தற்செயலாகக் கிடைத்த பொருட்காட்சியில் ஓரளவு பொருட்கள் வாங்க முடிந்தது. பெண்கள் அனைவரும் ஷாப்பிங்கில் பிஸியாக இருந்ததால் ஆண்கள் மட்டும் பிரம்மபுத்திராவில் கப்பல் சவாரி சென்றார்கள். சுபாவின் கார் இருந்ததால் வேனுக்குக் காத்திராமல் அறைக்குத் திரும்பி பெட்டிகளை அடுக்க ஆரம்பித்துவிட்டோம். அப்போதே டூர் முடியும் தருணத்தை நினைத்து சின்ன சோகம் உண்டாகிவிட்டது.
கல்லூரி நாட்களுக்குப் பிறகு அதிக அளவிலான க்ளாஸ்மேட்ஸ் சேர்ந்து சென்ற பயணம் இதுவாகத்தான் இருக்கும். அதனால் கல்லூரி நாட்களே மறுபடியும் வந்ததுபோல் ஒரு மாயை. இனி வரும் நாட்களில் இன்னும் அதிகமான நண்பர்களை இணைக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்த உன்னதமான பயணம்.
பிரயாண தூரங்கள் அதிகமாக இருந்ததாகப் பார்க்காமல் நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்து அரட்டையடித்த நேரங்கள் அதிகமென்று எடுத்துக் கொண்டோம்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்களிலிருந்து இப்போதைய காலம் வரை சுமார் நாற்பத்தைந்து வருட கதைகளைப் பற்றிப் பேசிப் பேசி நேரம் போவது தெரியாமல் ஜாலியாக இருந்தோம். ஆனால் இப்போதைய அரட்டையில் ஒரு அன்பும் நட்பும் இழைகளாகப் பின்னப்பட்டு ஒவ்வொருவரும் வாஞ்சையுடன் பேசிக் கொண்டிருந்தது மனதுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. வருடா வருடம் ஒன்றுகூடும் நிகழ்வுகள்(getogether) இருந்தாலும் சில மணித்துளிகள் மட்டுமே பேசிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஏழுதினங்கள் இணைந்திருந்த பொழுதுகள் புரிதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை என எண்ணற்ற பண்புகளால் நட்புக்கு மேன்மை சேர்த்திருக்கின்றன.
“அந்த ஏழு நாட்கள்
ஆரவாரமாக ஏழு ஆண்கள்
ஐந்தாம் படையாகப் பெண்கள்
அரவணைக்கும் தோழமையாக
அணிசேர்ந்த குடும்பத்தினர்
தென் திசைக் காற்று
வடகிழக்கில் வீசியதால் வசந்தமானது நாட்கள்
அந்த ஏழு நாட்கள்”
0 Comments:
Post a Comment
<< Home