Thursday, March 31, 2022

அலை-62

 அலை-62

“காதலர் தினம்”
வருஷத்துக்கு ஒருதரம் காதலைப் பெருமைப் படுத்துவதில் என்ன புதுமை இருக்கிறது . நாங்களெல்லாம் தினம் தினம் காதலையும் காதலர்களையும் குஷிப்படுத்தி சந்தோஷப் பட்டுக் காதல் சாஹரத்தில் மூழ்கி வாழ்ந்த தலைமுறை. காதல் என்பது அநுதினமும் எங்களைச் சுற்றிப் பின்னிப் பெடலெடுத்து சுவைக்க வைத்த சுகானுபவம். எங்கேயும் காதல் எப்போதும் காதல்தான்.
கல்லூரிக் காதலைக் கேலியாகப் பார்த்து குமைத்து அலைந்த காலமும் உண்டு , காதல் வயப்பட்டு பசலை கொண்டு வாடிய நாட்களும் உண்டு. “Love is a part of life which is unescapable”- எங்கேயோ படித்த வரிகள், எல்லோருக்கும் பொருந்தும் வரிகளும்தான். காதல் இயற்கையாக வருதோ இல்லையோ சுத்தி இருக்கிறவங்களால் கண்டிப்பாக வந்துடும். சினிமாவில் வருவது மாதிரி “கண்டதும் காதல்” யாருக்குமே வந்த மாதிரி தெரியவில்லை. அண்ணனாக அறிமுகமாகிக் கண்ணனாக மாறியவர்களும், காதலராக அறிமுகமாகி அண்ணனாக மாறிப் போனவர்களும் வரலாற்றில் மிக அதிகம்.
அன்றிலிருந்து இன்றுவரை ,காதலில் எத்தனை ரகங்கள் உண்டு என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. ‘பார்க்காமலே காதல்’ எல்லாம் எங்க ஊர்லே கிடையாது. கண்விரியப் பார்த்துதான் காதல் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதும் உண்மை இல்லை. அழகான பிள்ளைகள்தான் முதலில் காதல் வலையில் சிக்குவார்கள். சுமார் மூஞ்சிக் குமார்களும் கோபுரங்கள் சாய்வதில்லை சுஹாசினிகளும் காதலர்களை எட்டி நின்று ரசிப்பதிலும், காதலுக்கு உதவி செய்வதிலும்தான் ஜரூராக இருப்பார்கள்.
இயற்கையாகக் காதலிப்பவர்களைவிட அதை உசுப்பேத்தி உருவாக்கிவிடும் கூட்டம்தான் அதிகமாக இருக்கும். ஜாலிக்காக சிலரும் நண்பர்களைச் சந்தோஷப் படுத்த சிலரும் இதுமாதிரி சேட்டைகள் செய்வதுண்டு. மதில்மேல் பூனையாக இருக்கும் ஈர்ப்புகள்கூட காதலாகிப் போவதும் இந்த மாதிரி குரங்கு சேஷ்டைகளால்தான். கொளுத்திப் போடுவது கோஷ்டிகள்தான் என்றாலும் பற்ற வைத்துக் கொள்வது அவரவர் மன நிலையைப் பொறுத்ததுதான்.
வகுப்பறையில் திரும்பித் திரும்பி உன்னையேதான் பார்த்தான் என்று சொல்லும் குறும்புக்கார தோழியின் கூற்றை உண்மையென நம்பும் வெகுளிகள் சீக்கிரமே அந்தமாதிரி வலையில் விழுந்துவிடுவார்கள். இவள் குறுகுறுவென்று அவனைப் பார்க்க அவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனை உசுப்பேற்ற, ஒரு காதல் அங்கே ஜனனமாகிவிடும். சொன்னவள் மறந்து போயிருப்பாள், சுற்றி இருந்தவர்கள் கலைந்து போயிருப்பார்கள். ஆனால் அந்தக் காதல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர ஆரம்பித்துவிடும்.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து இயல்பாகத் தோன்றும் காதல் அடுத்த கட்டத்துக்குப் போவதற்கே பாசஞ்சர் வண்டி மாதிரி நிறைய காலம் ஆகும். சாதக பாதகங்களை அலசி மனதும் மூளையும் பட்டிமன்றம் நடத்தி நிதானமாக வரும் காரணத்தால் இடையிலேயே தடைபட்டு நின்றும் போகலாம், சில நேரங்களில் தண்டவாளம் மாறியும் போகலாம்..
ஆண்பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் நண்பர்களாகி காதலர்களாவதுதான் பெரும்பாலும் நடக்கும். அதிலும் மருத்துவக் கல்லூரியில் இருபாலரும் இணைந்தே படிப்பதும் பணியாற்றுவதும் நடப்பதால் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இருக்காது. முதல் இரண்டு வருடங்களும் கல்லூரி வளாகத்திலேயே சுற்றி வருவதால் பொறுக்கியெடுத்து ஒரு சில காதல் கதைகளே இருக்கும்.ஆனால் மூன்றாமாண்டு மருத்துவ மனையில் நுழைந்ததும் சென்ஸஸ் கூடிவிடும்.
தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் வைராக்கியமாக காதலிக்கவே கூடாது என்றும் ஒரு கோஷ்டி உண்டு. காதலிப்பது கெட்ட விஷயம், பாவம் செய்வது, குடும்பத்துக்கு ஆகாது என்றெல்லாம் சில வரைமுறைகளுடன் இதிலிருந்து ஒதுங்கி இருப்பார்கள். எங்க வகுப்பிலும் அதே மாதிரி ஆட்கள் நிறைய உண்டு. ஆனால் அவங்கதான் உண்மையில் பாவம். காதலிக்கிற எல்லாருக்கும் அவங்கதான் சுமைதாங்கி.
காதலருடன் ஏற்படும் பிணக்குகளை தினமும் கொட்டித் தீர்க்கும் இடமாக இவங்க இருப்பாங்க. வெறுமனே கேட்டுக்க மட்டும் முடியாது, ஆறுதல் சொல்லணும், அறிவுரை சொல்லணும்,மறுபடியும் சகஜ நிலைக்குக் கொண்டு வரணும். காதலிக்காமலே காதலின் அத்தனை இம்சைகளையும் தாங்கிக் கொண்ட அந்த நண்பியர்களுக்குக் கண்டிப்பா ஓஓ போட்டுற வேண்டியதுதான். ஒருவேளை இந்த மாதிரிக் கதைகளையெல்லாம் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போய்கூட அவங்களெல்லாம் காதலிக்காமலே தப்பியிருக்கலாம்.
ஒருதலைக் காதலும் முக்கோணக் காதலும்தான் தீர்க்க முடியாத இடியாப்பச் சிக்கலாக இருக்கும்.. பசங்க தாடி வளர்க்க ஆரம்பிச்சுட்டா முழு ஆண்டு தேர்வு நெருங்குதுன்னு அர்த்தம் . இல்லாட்டி அண்மையில் காதல் தோல்வி ஏற்பட்டிருக்குதுன்னு புரிஞ்சுக்கணும். ஒருதலை ராகம் சினிமா அந்த காலகட்டத்தில்தான் வந்தது. அப்போதெல்லாம் தாடிதான் காதல் தோல்வியின் சின்னமாக இருந்தது. இப்போ கல்யாண மாப்பிள்ளைகளே தாடியோடுதான் வர்றாங்க.
எங்கள் விடுதி “தேவதைகளின் இல்லம்” வாசலில் சாயங்கால வேளைகளில் கலகலவென்று இருக்கும். எல்லா ஆண்களிடமும் சைக்கிள்தான் இருக்கும். யாரோ ஒருத்தர்தான் ஸ்கூட்டர் வைச்சிருப்பாங்க. சைக்கிளை அண்டை கொடுத்துக்கொண்டு ஜோடிகள் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் ரம்யமாக இருக்கும். தொடர்ந்து நிற்கும் ஜோடிகள் திடீரென காணாமல் போயிருப்பார்கள். விசாரணைக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு அந்தக் காதல் உடைந்து போய்விட்டதாகக் கேள்விப்படும்போது நாங்களும் கொஞ்ச நேரம் சோகமாகிக் கொள்வோம்.
புதுஜோடி ஒன்று முளைக்கும்போது அதைப்பற்றித் தீவிரமாக விசாரித்து புரணி பேசிமுடிக்கும்போது அந்த நாளின் சாயங்கால பொழுது போக்கு அம்சமாக முடியும். இந்த வம்பு பேசும் வாய்களிலிருந்து தப்பிக்க விடுதி பக்கமே வராமல் கல்லூரி வெராண்டாக்களிலேயே தலைமறைவாகக் கடலை போட்டுக்கொள்ளும் ஆசாமிகளும் உண்டு. ஆனால் எப்படியும் எங்களுக்கு செய்தி வந்துவிடும். அதைப்பற்றியே மிக நீண்ட நேரம் அலசுவோம்.
கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது வற்றலும் தொற்றலுமாக கருவாடுகளாகவும் தேவாங்குகளாகவும் வரும் பெண்கள் காதல் வயப்பட்டவுடன் ஸ்ரீதேவி மாதிரி அழகாக மாறிவிடுவது நல்ல முன்னேற்றம்தான். எங்கள் விடுதியில் பூ வியாபாரம் பண்ணியவர் கண்டிப்பாகக் கோடீஸ்வரர் ஆகியிருப்பார். தலைகொள்ளாமல் தொங்கும் மல்லிகைச் சரங்களே அதற்கு சாட்சி.
காதல் ஜோடிகள் சிறகடித்துக் கொண்டிருக்கும் போது பொறாமை கொள்ளும் கூட்டங்களின் அட்டகாசமும் இடைச் சொறுகலாக இருக்கும். அதிலும் சில ஆசிரியப் பெருமக்களின் கொடுமைகளை அளவிட்டுச் சொல்ல முடியாது. ஏதாவது சின்ன பிரச்னைகள் வகுப்பறையில் முளைவிட்டால்கூடப் போதும். அதைக் காரணம் காட்டி விசாரிக்கிறேன் பேர்வழி என்று எலோருடைய நட்பு வளையங்களையும் நோண்டிப் பார்ப்பதில் கில்லாடிகள். சில சமயங்களில் தேர்வு மதிப்பெண்களை நிர்ணயம் செய்யக்கூட இதை ஆயுதமாக உபயோகித்தவர்களும் உண்டு.
எங்களைக் “கடுப்பேத்துறார் மைலார்ட்” பாணியில் இம்சை பண்ணுபவர்கள் தொலைபேசி மூலம் கடலை போடுபவர்கள்தான். மணிக்கணக்காக சத்தமே வெளியில் வராமல் கதைபேசுவதில் கில்லாடிகள். ஆனால் மத்தவங்களுக்கும் தொலைபேசி தேவைப்படும் என்பதை உணரமுடியாத மாயையில் இருப்பவர்கள். ஒரு பட்டனை அமுக்கினால் உலகத்தின் எந்த மூலைக்கும் பேசலாம் என்ற கால கட்டத்தில் இருக்கும் இன்றைய சமுதாயத்துக்கு, ஒரே ஃபோனுக்காக மணிக்கணக்கில் காத்திருந்த இம்சை புரியாது.
இயற்கையாக வரும் காதலும் உசுப்பேத்தி வரும் காதலும் ஓரளவு சுமுகமாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் சில நேரங்களில் தற்பெருமைக்காக இந்த பெண்ணை வளைத்துக் காட்டுகிறேன் என்று முன்னெடுக்கும் நிகழ்வுகள் நிறைய இருக்கும். ஏதாவது ஒரு பெண் அழகாகவோ ஆண்களை லட்சியம் செய்யாமலோ இருந்துவிட்டால் இவங்களுக்குப் பொறுக்காது. அந்தப் பெண்ணை வளைத்துக் காட்டுவதுதான் ஆண்மையின் இலக்கணம் என்றிருப்பார்கள்.
இன்னொரு பக்கம் சீனியர்கள் தொல்லை வேறு . சில காதல்களை ஜாதி, மதம் போன்றவற்றால் பிரித்தாளும் முயற்சிகளும் நடக்கும். எங்க ஜாதி, எங்க மதம் சேர்ந்த பையனை நீ எப்படி காதலிக்கலாம்னு பயங்கரமா மல்லுக்கு நிக்கிற கோஷ்டிகள் நிறைய உண்டு. இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஜாதி மதமே அற்றுப்போய் சமதர்ம சமுதாயம் மலரும் என்று அப்போது நினைத்துக் கொண்டோம். ஆனால் இப்போதுதான் ஆவணப் படுகொலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு பிரச்னைகளையும் தாண்டி , இருவருக்குள்ளும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து அந்தக் காதலை வாழ வைக்க நடக்கும் போராட்டங்கள் இன்னும் பெரிய கதைகள்.
காதல் வந்ததால் படிப்பைக் கோட்டை விட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், காதலுக்காக நல்லா படிச்சு அதிக மார்க் வாங்கி பந்தாகாட்டுபவர்கள் இன்னொரு பக்கம். நிலைமை தீவிரமாகி காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு. மருத்துவக் கல்லூரி என்பதால் எப்படியாவது பிழைக்க வைத்துவிடுவார்கள்.
எந்த விதத்தில் பார்த்தாலும் காதலிப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிற மாதிரியே தெரியாது. அப்புறம் எதற்காகத்தான் இந்தக் காதல் என்று யாரும் புறம் தள்ளுவதில்லை. மறுபடியும் அதிலேயே அமிழ்ந்து இஷ்டப்பட்டு கஷ்டப்படும் காதலர்கள் வாழ்க.
Baskara Pandian, Illayaravi Dharmalingam and 25 others
6 comments
3 shares
Like
Comment
Share

0 Comments:

Post a Comment

<< Home