அலை-61
அலை-61
“பிறந்த நாள் - இன்று பிறந்த நாள்” என்று பாட்டுப்பாடி கொண்டாடிய வைபவங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களுக்கு சாத்தியமாகி இருக்கவில்லை. Poor 60s KIDS. தட்டுத் தடுமாறிப் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் இணைந்த பிறகுதான் “பிறந்தநாள்” என்ற வார்த்தைப் பிரயோகமே சொல்வழக்கில் வந்தது. பிறந்தநாள் எதுவென்று SSLC புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
அதிலும் ஏகக் குழப்பம்தான். யாருக்குமே அவர்களின் சான்றிதழில் உண்மையான பிறந்த நாள் இருந்திருக்காது. பிறப்பு சான்றிதழ் என்பதும் யாருக்கும் இருந்திருக்காது. SSLC சான்றிதழில் உள்ள பதிவு மட்டும்தான் ஆதார பூர்வமானது. ஆனால் அதில் பதிவு செய்வது அந்தந்த மாணவரின் பெற்றோராகத்தான் இருக்கும். அரசாங்க ஆவணம் எதுவும் கிடையாது. அப்பாக்கள் சொல்வதற்கு அப்பீலே கிடையாது.
கல்வியாண்டின் இடைப்பட்ட காலங்களில் பிறந்தவர்களுக்கு பிறந்தநாள் ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை முன்னேற்றி பதியப்படும். அப்போதான் ஒரு வருஷம் வீணாகாதாம். பிள்ளைங்க சீக்கிரமா படிச்சு முன்னேறணுமாம். அதனால் ஒரே வகுப்பில் ஒருவருட வயசு வித்தியாசத்தில்கூட வகுப்புத் தோழர்கள் இருப்பார்கள். எல்லோருக்கும் ரெண்டு பிறந்ததினங்களும் இருக்கும். இதையெல்லாம் கேலி செய்வதுபோல் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் நிதானமாகப் படிக்கும் மேதைகளை ஒன்றும் செய்ய முடியாது.
ஜாதகம் ஜோஸியம் போன்றவற்றில் அதீத பற்றுள்ளவர்கள்கூட ரெண்டு பிறந்த தேதியோடு இருப்பாங்க. ஜாதகத்தில்தான் உண்மையான பிறந்தநாள் இருக்கும். அதை நட்சத்திரப் பிறந்த நாள் என்று சொல்லிக் கொள்வார்கள். சில சமயம் இந்த அப்பாக்கள் செய்யும் காமெடி தாங்க முடியாது. சுமார் இரண்டு வருட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் சான்றிதழ்களில் ஒன்பதுமாத இடைவெளிகளுடன் பதியப்பட்டு இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் நிகழ்ச்சிகளும் அங்கங்கே நடக்கும். அண்ணனும் தம்பியும் வகுப்புத் தோழர்கள்.
வானத்தையும் சூரியனையும் பார்த்து நேரம் சொல்வது மாதிரி குத்துமதிப்பாக ஒரு நாள் குறிக்கப்பட்டு பதிவு செய்வதுவிடுவார்கள். பிறந்தநாளுக்கெல்லாம் ஒரு முக்கியத்துவமே தருவதில்லை. அப்போதெல்லாம் கிராமசேவகர் (கிராம்ஸு) என்று ஒருவர் உண்டு. பிறந்த நாட்களைப் பதிவு செய்தார்களா இல்லையா என்றே தெரியாது. இப்படியெல்லாம் குழப்பமான பிறந்தநாளை எந்த நாளில்தான் கொண்டாடுவது என்ற குழப்பம் அதைவிட அதிகம்.
கல்லூரிக்குள் நுழைந்ததும் அங்கங்கே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடப்பதைப் பார்க்கலாம். பொதுவாக சீனியர்கள்தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதிலும் காதல் வயப்பட்டவர்களின் ஈடுபாடுதான் அதிகமாக இருக்கும். “சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு” மத்தாப்பு சுந்தரிகள் மிதப்போடு அலைவது ரசிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். பிறந்தநாள் கொண்டாடுவதைவிட அடுத்தவர்களின் கொண்டாட்டத்தைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். பார்வையாளர்களும் பின்வரும் காலங்களில் பங்கேற்பாளர்கள் ( participants) ஆவது தனிக்கதை.
பல்லு முளைக்காத பாப்பாவில் இருந்து பல்லு போன பாட்டி தாத்தா வரை இப்போதெல்லாம் பிறந்தநாள் கொண்டாடுவதே பெரிய விழாவாக இருக்கிறது. சில நூறுகள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்யப்படுகிறது. ஆனால் எங்க காலத்தில் சின்ன கேக் கூடக் கிடையாது. மிஞ்சிப்போனால் சாக்லேட் கொடுப்போம். ECLAIRS சாக்லெட் என்றால் கொஞ்சம் மதிப்பு ஜாஸ்தி. புது உடைகள் வாங்குவது கஷ்டம் என்பதால் தீபாவளி, பொங்கலுக்கு கிடைக்கும் உடைகளில் ஒன்றை பிறந்த நாளுக்கென்று ஒதுக்கிவைத்துவிடுவோம்.
எங்களோட அதிகபட்சக் கொண்டாட்டம் என்பது திருநெல்வேலி ஜங்ஷன் போய் அரசன் பேக்கரியில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் . கையில் கொஞ்சம் பணம் இருந்தால் சினிமாவுக்குப் போவோம். இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் இருந்தால் சினிமா முடிந்ததும் ஏதாவது ஹோட்டலில் இரவு உணவுடன் விழா இனிதே முடிவடையும். என்னதான் Black forest , ஃபாண்டன்ட் கேக் என்று சாப்பிட்டாலும் அந்தக்கால அரசன் ஐஸ்க்ரீமை அடிச்சுக்க முடியாது.
காதலர் தினம், மகளிர் தினம், அது இதுன்னு ஆயிரம் தினம் வந்தாலும் பிறந்த தினம் சிறப்பானதுதான். ஊரோடு ஒத்துவாழ் என்பதுதானே சரியாக இருக்கும். முதல் வருடம் முடியும் தருவாயில் வந்த என் பிறந்தநாளைக் கொண்டாடிய நினைவே இல்லை. ஆனாலும் மனதில் சின்ன குழப்பம் ஓடிக்கொண்டே இருந்தது. மார்ச் மாதத்தில் பிறந்ததேதி என்று பதிவாகியிருந்தது. ஆனால் வீட்டில் அவ்வப்போது கேட்கப்படும் குடும்ப வரலாற்றின்படி நான் பிறந்தது கார்த்திகை மாதம் அடை மழையின்போது. 60’s KIDS க்கு வரக்கூடிய சோதனைகளில் இதுவும் ஒன்று.
எங்க வீட்டு பிரசவங்கள் எல்லாம் சந்தைக்கடை வீட்டின் ஓடுபோட்ட அறையில்தான் நடப்பது வழக்கமாம். எங்க அம்மாவுக்கு எல்லாமே சுகப்பிரசவம். நான் ஏழாவது பெண்குழந்தை. நான் பிறந்தபோது அடைமழையில் வீட்டைச் சுற்றிக் குளம்போல் தண்ணீர் கட்டியிருந்ததாம். அதில் வீட்டின் மண்சுவர் ஊறி சரிந்து கீழே விழுந்துவிட்டது. நல்லவேளையாக வெளிப்புறமாக விழுந்ததால் நானும் அம்மாவும் உயிர் தப்பினோம். ஐப்பசி கார்த்திகையில் அடைமழை பெய்வது வாடிக்கைதான்.
ஏதாவது எடக்கு மடக்காக நான் வாதம் செய்யும் போதெல்லாம் அடிக்கடி இந்த கதையை அக்கா, மதினி யாராவது சொல்லுவாங்க. பிறக்கும்போதே வில்லங்கமாகப் பிறந்தவள், இவளுடன் வாதிட்டு ஜெயிக்க முடியாதுன்னு சொல்லிக்குவாங்க.அதனால் நிச்சயமாக மார்ச் நான் பிறந்தமாதம் இல்லையென்று உறுதியாகிவிட்டது. ஜாதகம் இருந்தாலாவது உருட்டிப் பார்க்கலாம். அப்பா கம்யூனிஸ்ட் என்பதால் வீட்டில் யாருக்குமே ஜாதகம் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலே பிறந்த நேரமும் நட்சத்திரமும் எழுதி வைச்சிருப்பாங்க. எங்க வீட்டிலே அதுவும் கிடையாது.
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோது நேரிடையாக அப்பாவிடமே கேட்டேன். அப்பா தெளிவாகச் சொல்லிட்டாங்க, தேதியில் மாற்றமில்லை மாசம் மட்டும்தான் மாற்றிப் பதிவு செய்திருப்பதாகச் சொன்னாங்க. கார்த்திகை மாதம் வந்த எட்டாம் தேதி டிசம்பர் 8 தான் உண்மையான பிறந்ததேதி என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அப்பா எனக்காக பதிவு செய்த நாளும் மிகச் சிறப்பான நாள்தான். “சர்வதேச பெண்கள் தினம்” – மார்ச் 8 ஆம் தேதி. எழுபதுகளில் பெண்கள்தினம் அவ்வளவு பிரபலமாக இல்லாததால் நான் டிசம்பர் பூவாக மாறிக்கொண்டேன். பிற்காலத்தில் அரசுப் பணியில் இணைந்தபோது பிறந்த தேதியை மாற்ற முயன்றபோது வலுவான ஆதாரங்கள் இல்லாததால் மாற்ற முடியாமல் போய்விட்டது. ஒன்பது மாதங்கள் முன்பாகவே ஓய்வு பெற்றுவிட்டேன்.
எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்னையோன்னு நினைச்சிருந்தேன். ஏகப்பட்ட பேருக்கு இதே பிரச்னை இருக்கு. முகநூலிலும் வாட்ஸாப்பிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போது மூன்றில் இருவர் இதே மாதிரி , இன்னைக்கு என் சான்றிதழ் பிறந்தநாள் என்று சொல்லுவாங்க. துணைக்கு நிறைய பேர் இருக்கிறாங்கன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.
பிறந்த அன்றே பிரளயத்துடன் போட்டி போட்டதாலோ என்னவோ ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டுவிடும். மழை பனி குளிர் என்று ஏதாவது ஒரு தொந்தரவு இருக்கும். இதையெல்லாம் தூரப் போட்டுவிட்டு ஒரே பிறந்த நாளாக மார்ச் எட்டாம் தேதியே வைச்சுக்கலாமான்னு கூட யோசிச்சிருக்கேன். பரவாயில்லைன்னு வருஷத்துலே ரெண்டு நாட்களும் வாழ்த்துகளை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
0 Comments:
Post a Comment
<< Home