Monday, May 09, 2022

அலை-69

 அலை-69

 "சர்வதேச பூமி தினம்”



வாழ்க்கையின் படிக்கட்டுகளில் ஏறிப்போகும்போது நிறைய சாதனைகளும் கிடைக்கும் நிறைய சறுக்கல்களும் வரும். கணக்குப் பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் மிஞ்சுவது விரல்கள் மட்டும்தான். நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலே அதன் பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மானுடர்கள் நாம்.


 நம்மைத் தாங்கும் பூமியைக் காக்கவே விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். ஊர்வலத்தின் இறுதியில் மிஞ்சப் போவது சிதறிக்கிடக்கும் காலியான காபி தம்ளர்களும் தண்ணீர் பாட்டில்களும்தான்.


அறிவியல் வளர்ச்சியால் அஞ்ஞானம் குறைந்ததோ இல்லையோ  அடிப்படைத் தேவைகள் அதீதமாகிவிட்டது. 

 அம்மியிலிருந்து மிக்ஸி க்ரைண்டர் வந்தது, செளகரியம் கூடியது. அதீத எடை குறைக்க ஐந்து மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி செல்ல வேண்டியதாச்சு.

மின்சார வசதி மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றாலும் அதனால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் வேதனைக்குள்ளாக்குகிறது. Disposable Items சுகாதார மேம்பாடு என்றாலும் அதிகரிக்கும் குப்பைமேடுகள் நிலத்தடி நீரை பாதிக்கிறது.


 அறிவியலும் புதிய கண்டுபிடிப்புகளும் நம்மை வளப்படுத்துகிறதா வலுவிழக்கச் செய்கிறதா என்பதே கேள்விக்குறியாகிறது.இப்படி மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்புகளால் நாம் பெற்றது அதிகமா இழந்தது அதிகமா என்பதும் விளங்கவில்லை. 

இழந்தது அதிகம் என்ற உள்ளுணர்வின் உறுத்தலால்தான் Flash-back(பின்பக்கத்தின் பளீரொளி)அலைகள் நம்மை அதிகம் 

ஈர்க்கின்றன .வாழ்க்கை என்ற வட்டத்துக்குள் மறுபடியும் பழைய நிலைக்கே செல்ல அடிமனதின் ஆழங்களில் ஆசை பெருகிவருவதுபோல் தோன்றுகிறது. 


சீரான உணவு(balanced diet) சாப்பிடணும்னு ஏகப்பட்ட திட்டங்களோட ஆரம்பிச்சு ஆரோக்கியமான உணவு (Healthy diet) சாப்பிடறோம்னு பெருமை பேசியவர்கள் அவர்கள் அறியாமலே  குப்பை உணவு(Junk food)க்கு அடிமையாகி , அதிலிருந்து மீண்டு வந்து இயற்கை உணவு (Organic food)தான் நல்லதுன்னு பேசிக்கொண்டிருப்பது அந்த ஆசையால்தான். 


ரொம்ப நாள் கழித்து மகளும் மருமகனும் இந்த வாரக் கடைசியில் ஈரோடு வந்திருந்தார்கள்.  சமையலறையில் கைப்பிடித் துணியாக பழைய கிழிந்த புடவைகள் ஆடைகள் போன்றவற்றை உபயோகித்துக் கொண்டிருப்பதைக் கணவரிடம் காட்டி உரையாடிக் கொண்டிருந்தாள். பழைய பொருட்களை மறுபயன்பாடு (recycle& reuse) செய்வதன்மூலம் எவ்வளவு குப்பை உற்பத்தி குறைகிறது என்று பகுப்பாய்வும் செய்து கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் திசு-காகிதம் ஆங்காங்கே ஸ்டாண்டில் தொங்கிக் கொண்டிருக்கும். 


புதிய தலைமுறையின் தவிர்க்க முடியாத அங்கமாக டயப்பர்களும் நாப்கின்களும் புற்றீசல்களாக புரையோடிப் போய்விட்டன. 



எங்களது குழந்தைப் பருவம் தொடங்கி கல்லூரி சென்ற நாட்கள் வரை வீட்டில் குப்பைக்கூடை என்ற ஒன்றே கிடையாது. கடைகளுக்குச் செல்ல மஞ்சள் பை அல்லது வயர் கூடைதான் உண்டு. வெவ்வேறு வடிவங்களில் கலர்கலராக பைகள் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். வெள்ளையாக எடுக்கப்பட்டவை வண்ணம் மறைந்து கறுப்பாகும்வரை தூக்கி எறியாமல் பயன் படுத்துவோம். ரொம்ப மோசமானபிறகு நாலாகக் கிழித்து கைப்பிடித் துணியாக்கிவிடுவோம். ஊருக்குக் கொண்டுபோக என்று சில நல்ல பைகள் பெட்டியில் மடித்து வைக்கப்பட்டிருக்கும். லெதர் பைகள் நிறைய பழக்கத்தில் இருந்தது. 


பலசரக்கு கடைகளில் பேப்பரில்தான் கட்டித் தருவார்கள். ஒரு நாளிதழ் பேப்பரை எடுத்து லாவகமாக கூம்பு மாதிரி சுருட்டி அதில் பொருட்களைக் கொட்டி சணல்கொண்டு கட்டித் தருவது ரொம்ப கலையம்சத்துடன் இருக்கும். எல்லாப் பொருட்களும் சாக்கு மூட்டைகளில்தான் இருக்கும். எதுவுமே பொட்டலங்களாக இருக்காது. எண்ணெய் வாங்க கண்ணாடி பாட்டில்கள் அல்லது எவர்சில்வர் தூக்குப்பாத்திரம்தான் உண்டு.


ஹோட்டல்களில் வாங்கப்படும் பார்சல்கள் வாழை இலையில்தான் கிடைக்கும். எங்க வீட்டுப் பக்கத்தில் சங்கரன்பிள்ளை கடையில் பூரியும் உருளைக்கிழங்கும் இலையில் பார்சல் வாங்கிவந்து சாப்பிடும்போது மிக அருமையான மணமும் சுவையும் கிடைக்கும். “அதை நினைக்கையில் நாக்கிலே தேனூறுதே”ன்னு பாடத் தோணும். பார்சலுக்குள் பார்சலாக சட்னியும் மசாலும் அதனுள்ளேயே அடைத்துத் தந்துவிடுவார்கள்.

 

மஞ்சள்பை சலவை செய்யப்பட்டு மறுபயன்பாட்டிற்கு வந்துவிடும். பலசரக்குக் கட்டிவந்த பேப்பர்கள் அடுப்பு எரிக்க பயன்பட்டுவிடும். வாழை இலை குப்பையும் காய்கறி குப்பைகளும் வீட்டின் பின்பக்கமுள்ள உரக்குழிக்குள் போடப்படும். வீட்டுக்குள் குப்பை சேர்த்தால் கடனும் சேர்ந்துகொண்டே போகும் என்ற ஐதீகமும் இடைச்சொறுகலாக குப்பை எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொள்ளும். எங்க வீட்டு உரக்குழி எப்பவுமே தரையிலிருந்து ரெண்டு மூணு அடி உயரமாகவே இருக்கும். பெரிய குடும்பம் என்பதால் வந்த பவுசு அது.


வீட்டில் பிரசவத்திற்குத் தயாராக யாராவது இருந்தால் அப்பாவின் பழைய வேஷ்டி அம்மாவின் கிழிந்த புடவைகள் எல்லாம் சலவை செய்யப்பட்டு வெவ்வேறு அளவுகளில் கிழித்து வைத்துக்கொள்வார்கள். ஆறுமுகநேரி நாப்கின்கூடை ரெடியாக இருக்கும். பிரசவகாலம் முடிந்ததும் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி உரக்குழியில் போட்டுவிடுவார்கள்.



ப்ளாஸ்டிக் என்ற பெயரே வீட்டில் கேட்டது இல்லை. தண்ணீர் பிடிக்க எவர்சில்வர் குடமும் பானையும் வரிசை கட்டி உட்கார்ந்திருக்கும். அதை ஊற்றி வைக்க மண்பானைகள் வீட்டின் உள்ளே உண்டு. குளிக்க பாத்திரம் கழுவ தேவைப்படும் தண்ணீர் பின்வாசலில் பெரிய பெரிய சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி சேமிக்கப் பட்டிருக்கும். கிணற்றில் தண்ணீர் இறைக்கக்கூட தகர டப்பாக்கள், இரும்பு அல்லது அலுமினிய வாளிகள்தான் இருக்கும். 



தண்ணீரோடு கிணற்றிலிருந்து இரும்பு வாளியைத் தூக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் ஊர் கடற்கரை சார்ந்த ஏரியா என்பதால் கிணறுகளெல்லாம் ஊற்று வடிவிலேயே இருக்கும். ஒருநாளும் தண்ணீர் மேல் மட்டத்தில் இருக்காது. ஊற ஊற இறைப்பதால் அடிப்பாகத்தில்தான் கொஞ்சூண்டு தண்ணீர் இருக்கும்.


கைகழுவுவதிலிருந்து கழிவறை வரைக்கும் விதவிதமான சொம்புகள் இருக்கும். அலுமினியம் எவர்சில்வர் வெண்கலம் என இடத்துக்குத் தகுந்த உலோகங்களில் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். அந்த கால கட்டத்தில் ப்ளாஸ்டிக்கால் ஆன பொருள் ஏதாவது உபயோகித்தது உண்டா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.


பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுசெல்லும் டப்பாக்கள்கூட தகரம்தான். அடிஸ்கேல் கூட மரத்தில்தான் இருக்கும். வாத்தியார்கள் கோபப்படுட்டு அடிக்கும்போது மரஸ்கேல்கள் உடைந்து போன நாட்கள் உண்டு. புத்தகப்பை என்பது ஜோல்னாப் பைதான். ஒருசிலர் வயர் கூடைகள் கொண்டு வருவார்கள். ஆம்பிள்ளைப் பசங்க துணிப்பை தூக்கி வர கெளரவம் பார்த்துகிட்டு ஸ்டைலாக புத்தகத்தை மட்டும் கையில் தூக்கிட்டு வருவாங்க. 


ஊர் முழுக்க கூட்டினால்கூட மிகப்பெரிய அளவில் குப்பைகள் இருந்தமாதிரி தெரியவில்ல. அந்தக்காலத்திலேயே எல்லா வீடுகளிலும் மக்கும் குப்பை உரக்குழியிலும் மக்கா குப்பைகள் அடுப்பெரிக்கவும் பயன்படுத்தப்பட்டதால் குப்பை உற்பத்தியே ரொம்பக் குறைவுதான்.


 விறகுக் கடைகளில் விழும் மரத்துகள்களை மண் அடுப்புகளில் எரிக்க பயன்படுத்திவிடுவார்கள். கால்நடை வைத்திருப்பவர்கள் சாணத்திலிருந்து வறட்டி செய்து அடுப்பெரிக்க பயன்படுத்திவிடுவார்கள். இப்படி எல்லாமே மறுபயன்பாடு மூலம் நடந்து கொண்டிருந்தது எப்போது மாறிப்போனது என்றே புரியவில்லை. 


எங்கள் ஊரில்தான் PRC என அழைக்கப்பட்ட Plastic Resins Chemicals என்ற தொழிற்சாலை இருந்தது. அதிலிருந்த என்ன தயாரித்தார்கள் என்றே தெரியாது. வடநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பொருள் ஏதோ தயாரித்தார்கள். அதிலிருந்து வெளியேறும் குளோரின் வாயு ஊர் முழுக்கப்பரவி நிறைய வியாதிகளை உருவாக்கியிருக்கிறது.அவ்வளவுதான் எங்களுக்கும் ப்ளாஸ்டிக்குக்கும் உள்ள உறவு.கல்லூரியில் சேர்ந்து விடுதியில் இணைந்தபோதுதான் ப்ளாஸ்டிக் வாளியும் குவளையும் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தது.


வாழ்க்கையை இலகுவாக்குவதற்காக வந்த விஷயங்கள் வாழ்க்கையின் அச்சாணியையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு உடனிருந்து கொல்லும் நோயாக மாறிக் கொண்டிருக்கும்போது, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் நாம் எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள்தான். மாற்றத்திற்கான விதைகளை இளைய தலைமுறைகளிடையே விதைக்கும் செயல்களையாவது நாம் செய்ய வேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home