Friday, May 19, 2023

அலை-83

 அலை-83

“சங்கம் கண்ட சங்கமம்”
ஈரோடு மகப்பேறு மருத்துவ சங்கத்தின் தலைவியாகப் பொறுப்பேற்று இரண்டேகால் வருடங்கள் ஓடிப்போய்விட்டது. ஒருவழியாக இந்த வாரம் அடுத்த அணியிடம் பொறுப்பை ஒப்படைத்தாகிவிட்டது. இனிமேல் நான் பொறுப்பற்ற தலைவியாக சுற்றலாம். இதுவரை எத்தனையோ சங்கங்கள், அணிகள், குழுக்களுக்கு தலைவியாக இருந்து எண்ணற்ற விருதுகளும் வாங்கியாச்சு. ஆனாலும் எங்கள் மகப்பேறு சங்கத்தின் தலைவியாக இருந்தது அருமையான காலம், நான் ரசித்து மகிழ்ந்த காலமும்கூட. தாய்வீட்டில் இருந்தது போன்ற அநுபவம்.
எந்த சங்கத்தில் இருந்தாலும் அதிகார அரசியல், நிதி மேலாண்மை, நாற்காலி சண்டை என ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். ஆனால் எங்கள் சங்கத்தில் அதுமாதிரி எதுவும் வருவதில்லை. பதவி வேண்டுமென்று யாராவது நினைக்கும் முன்பே அவர்களை அந்த நாற்காலியில் அமர வைத்து வாழ்த்தி அழகு பார்ப்போம். தனிபட்ட முடிவுகளே இல்லாமல் குழுவாகவே இணைந்து முடிவுகள் எடுக்கும் சிறந்த மாண்பு உண்டு. பணத் தேவைகள் ஏற்பட்டால் தாராளமாக உதவ ஓடிவரும் நல்ல உள்ளங்கள் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய் அசையா சொத்துக்களே சேர்ப்பதில்லை. அந்தந்த குழுவின் வருமானத்தை அந்த கால கட்டத்திலேயே செலவு செய்து பண முறைகேடு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் செய்துவிடுவோம்.
இவ்வளவு அழகான சங்கமாக இருப்பதால்தான் தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாமல் அனைத்திந்திய அளவிலும் எங்கள் சங்கம் சிறப்பாகப் பேசப் படுகிறது.
எனது பதவிக்காலத்தில் ஒருவருடம் கொரோனா காலமாகப் போய்விட்டதால் பெரிய அளவில் அறிவியல் அமர்வுகள் செய்ய முடியவில்லை. ஜூம் மீட்டிங்குகளும் வலைப்பக்கங்களுமாகவே போய்விட்டது. எப்படியோ கிடைத்த இடைவெளிகளில் இரண்டு நடைப்பயணங்களும் ஒரு வெளியூர் பயணமும் நடத்திவிட்டோம்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு ஒருமுறையும், சித்தோட்டில் உள்ள எங்கள் தோட்டத்திற்கு ஒரு முறையும் சென்ற நடைப் பயணங்கள் இன்றளவும் பசுமையான நினைவுகளாக இருக்கிறது. மகுடம் வைத்ததுபோல் கன்யாகுமரிக்கு சென்ற பயணம் (ஏற்கனவே குமரி அலை வந்துவிட்டது).
இதையெல்லாம் விட தனித்துவமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அப்போதுதான் சிம்பு நடித்த “மாநாடு” படத் தலைப்பு சின்ன பொறியைத் தூவிச் சென்றது. எங்கள் மகப்பேறு சங்கத்தில் அதுவரை பெரிய அளவில் மாநாடு எதுவும் நடத்தியதில்லை. நாமளும் ஒரு மாநாடு நடத்திடலாம் என ஆசை துளிர் விட்டது. பெரிய முடிவுகள் எதுவானாலும் எங்கள் நிர்வாகக்குழுவில் ஆலோசித்துதான் எடுப்போம். மாநாடு நடத்துவது பற்றி முன்மொழிவு செய்ததும் எல்லோரும் ஒருங்கிணைந்து சம்மதம் சொல்லிவிட்டார்கள். ஆனால் கையில் தம்படி கிடையாது, எப்படி பண்ணப்போகிறோம், முடியுமா என்ற குழப்பம் எதுவுமே வரவில்லை. எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மேலுள்ள அதீத நம்பிக்கைதான் எங்களை முழுவதும் வழி நடத்தியது. எங்களுக்கு கிடைத்த செயலாளர் மரு. பூர்ணிமா அரிய பொக்கிஷம். முடியுமா என்று நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டிய தேவதை.
மாநாடுக்கு நாள் முடிவு பண்ணுவது தான் பெரிய பிரச்னையாக இருந்தது. இடையில் குறுக்கிட்ட கிறிஸ்த்துமஸ், புது வருடம், பொங்கல் விடுமுறைகள், கொல்கத்தா மாநாடு எல்லாம் முடித்து பிப்ரவரி இரண்டாம் வாரம் 11 & 12 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என முடிவு செய்து கொண்டோம். வீட்டு விசேஷங்களுக்கு நாள் குறிப்பதைவிட ரொம்ப மெனக்கெட்டு அந்த வாரத்தைத் தேர்வு செய்தோம். தை மாதமாக இருந்தாலும் தேய்பிறை முகூர்த்தம் என்பதால் நிறைய கல்யாணங்கள் இருக்காது என்பதால் தைரியமாக முடிவு செய்துவிட்டோம். முகூர்த்தநாளாக இருந்தால் மண்டபம் கிடைப்பது கடினம், மக்கள் வருவதும் சிரமம்.
அதன்பிறகு இடம் தேர்வு செய்தது, பணம் சேகரிக்கும் வழிமுறைகளை கைக்கொண்டது, ஆதரவாளர்களைத் திரட்டியது என ஏகப்பட்ட விஷயங்கள் ஒரே நேரத்தில் பக்கம் பக்கமாக நடந்தது. இதையெல்லாம் செய்துமுடிக்க ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கினோம். அனைத்து வேலைகளும் தரம் பிரிந்து குழுக்களிடம் ஒப்படைத்துவிட்டோம். யாருடைய தலையீடும் இன்றி அவர்களே பொறுப்பெடுத்து வேலைகளைத் தொடரும் வண்ணம் ஏற்பாடும் செய்துவிட்டோம். ஒருநாள் மாநாடு என ஆரம்பித்து ஒன்றரை நாளாக விரிவுபடுத்தி கடைசியாக இரண்டு நாட்கள் என்று முடிவாகிவிட்டது.
முதல் நாள் சனிக்கிழமை காலை தேசிய கூட்டமைப்பின் பயிற்சித் திட்டமான “ மானியாத்தா ” செவிலியர் கருத்தரங்கம்; மதியம் மகப்பேறு மருத்துவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்; சாயங்காலம் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் ;இரண்டாம் நாள் சொற்பொழிவுகள்; அறிவியல் அமர்வுகள் என இரண்டு நாட்களும் நிகழ்சிகள் நிரம்பி வழிந்தன. பேச்சாளர்களைத் தேர்வு செய்வது, அழைப்பிதழ் அடிப்பது, அரங்கம் அமைப்பது, பங்கேற்பவர்களைப் பதிவு செய்வது,பேச்சாளர்களுக்கு வாகனம், தங்குமிடம் என ஒவ்வொரு வேலையையும் அந்தந்த குழுவினரே பொறுப்பெடுத்து செய்து கொண்டார்கள்.
எங்களது மாநில கூட்டமைப்பு சமீபத்தில்தான் உருவாக்கப் பட்டிருந்தது. அதை மேன்பைப் படுத்தும் விதமாக அதன் தலைவியும் செயலாளரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள். தேசிய கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் சிறப்பு பேச்சாளர்களாக வர சம்மதித்தார்கள். எங்கள் மாநாடு தேசிய அளவில் பேசப்படவேண்டும் என்பதால் அழகான விழா மலர் வெளியீடு இருந்தது. தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர்களுக்கான வினாடி-வினா(QUIZ) போட்டி இரண்டு சுற்றுகள் முடித்து இறுதிப் போட்டிகள் மாநாடு அன்று முடிவாகியிருந்தது.
எல்லாம் கூடிவந்து கொண்டிருக்கும்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப் 27 என அறிவுப்பு வந்துவிட்டது. எங்கள் மாநாடு நடக்கும் இடமும் கிழக்குத் தொகுதியிலேயே அமைந்துவிட்டது. சில அரசு விழாக்களுக்குக் கூட தடை போடப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். எல்லா ஏற்பாடுகளும் ஒழுங்கு படுத்தப்பட்டு முன்பணம் கொடுத்தாச்சு. ஆனாலும் இதை “தொடர் மருத்துவக் கல்வி” வகையில் சேர்த்துக் கொள்வார்கள், அதனால் தடை வராது என சில நண்பர்கள் உறுதி அளித்ததால் கொஞ்சம் நிம்மதி. எதற்கும் எச்சரிக்கையாக இருப்போம் என்று சாலைகளில் கட்டப்பட வேண்டிய ஃப்ளக்ஸ் , பேனர்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டோம்.
இரண்டு நாட்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் அற்புதமாக அரங்கேறி EROOGCON2023 வெற்றி மாநாடு ஆகிவிட்டது. செவிலியர் கருத்தரங்கம் நிரம்பி வழிந்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்ததென்று சொல்லி நிறையபேர் எங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள் . மருத்துவர்கள் பயிலரங்கம் 50 பேருக்கு மட்டுமென்று கட்டுப்படுத்தியும் 90 பேருக்குமேல் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். சாயங்காலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பட்டையைக் கிளப்பிவிட்டன. ஆட்டம்,பாட்டம்,மாறுவேஷம் என கலக்கல்தான்.
இரண்டாம் நாள் அறிவியல் அமர்வுகளுக்கு அரங்கம் நிறைந்து விட்டது. ஆறு மணிக்கு மாநாடு முடியும் தருணம்வரை அதே கூட்டம் அப்படியே இருந்தது எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. தேசிய அளவு மாநாட்டையே நடத்தும் அளவுக்கு சிறப்பாக ஏற்பாடுகள் நடந்திருப்பதாக எங்கள் மாநில கூட்டமைப்பின் செயலர் மரு.சம்பத்குமாரி வாழ்த்தியதே எங்கள் மாநாட்டின் வெற்றிக்கு சான்று. செவிக்குணவு இல்லாத போது நடந்த உணவு இடைவேளைகளும் ஈரோட்டின் விருந்தோம்பலுக்கு சான்று கூறின.
மாநாட்டின் வெற்றிக்கு முழு காரணமும் எங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அயராத உழைப்புதான். இருபத்து நான்குபேரின் இணைந்த கைகள் SPOKES of WHEEL ஆக உருட்டிய சக்கரம்தான் எங்கள் கன்னி முயற்சியான முதல் மாநாடு. நான்கு மாதங்களும் அடிக்கடி கூடி ஆலோசனைகள் செய்து ஒரு குடும்பம்போல் ஓடியாடி வேலை செய்ததில் இன்னும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். சீனியர் சிட்டிசன்களும் சின்ன வயது பெண்களும் சேரும்போது எங்கள் வயது உருமாறிவிட்டது. இளம் இரத்தங்களுடன் இணைந்து நாங்களும் இளமையாகிக் கொண்டோம்.
சங்கத்தில் “ட” என்ற வல்லினம் சேர்ந்து சங்கடம் ஆகாமல் “ம” என்ற மெல்லினம் சேர்ந்து சங்கமம் ஆனது

0 Comments:

Post a Comment

<< Home