Wednesday, June 05, 2024

அலை-100

 அலை-100

“நெல்லைக் கதம்பம்”
77-ஆம் ஆண்டு மருத்துவம் பயின்ற நண்பர்களுக்கென்று குழுமம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. 2014 இல் வாட்ஸ் அப் வந்த போது தற்செயலாக ஆரம்பித்தேன். அடிக்கடி வகுப்பு கூடுகைகள் நடத்தியபோது அனைவரின் கைபேசி எண்களும் ரெடிமேடாக இருந்ததால் ஆரம்பிக்கும்போதே பக்காவாக ஆரம்பித்துவிட்டேன். ஒன்பது ஆண்டுகளைக் கடந்துவந்த பயணம் மிக்க சுவாரஸ்யம் நிறைந்து தெரிகிறது. 46 வருடங்களைக் கண்டிருந்த எங்கள் நட்பு இந்த ஒன்பது ஆண்டுகளில் மிகுந்த நெருக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பசுமை நிறைந்த நினைவுகளைச் சுமந்துகொண்டு திக்குக்கு ஒன்றாகப் பறந்து சென்ற பறவைகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது வாட்ஸ் அப்-தான் என்று சொன்னால் மிகையாகாது. எழுபத்தைந்தாக இருந்த எண்ணிக்கை இன்று அறுபத்து ஐந்தாகக் குறைந்துவிட்டது. கடல் கடந்து சென்றவர்களும், கல்லூரியிலேயே ஐக்கியமானவர்களும், ஆங்காங்கே பிரிந்து கிடந்தவர்களும் உதிரிப் பூக்களாகிவிடாமல் மணம் வீசும் கதம்ப மாலையாக கோர்த்துவைத்த சமூக ஊடகத்திற்கு நன்றிகள் ஏராளம்.
ஆரம்ப காலங்களில் அவ்வப்போது சில போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ளவும், எப்போதாவது பிறந்த நாள் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லவும் மட்டுமே குழுமம் உபயோகப்பட்டது. எங்களில் பெரும்பாலானோர் அரசுப் பணியில் இருந்ததால் ரொம்ப பிஸியாகவே இருந்தோம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் வகுப்பு கூடுகையின்போது நாலைந்து வாரங்கள் மட்டும் க்ரூப் கலகலப்பாக இருக்கும். பயண முறைகளை ஒழுங்கு செய்வது, யூனிஃபார்ம் எடுப்பது, விளையாட்டுகள் ஏற்பாடு செய்வது என பலவித பேச்சுகளும், ஆட்டம் முடிந்ததும் அடுத்தடுத்து போட்டோக்கள் போடுவது என ஜாலியாக இருக்கும். அப்புறம் நாலைந்து மாதங்கள் ஸ்லீப் மோட் சென்றுவிடும்.
2017 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஒவ்வொருத்தராக பணி நிறைவு பெற ஆரம்பித்தோம். அதன் பிறகுதான் எல்லோரின் பங்களிப்பும் மெது மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. ஃபார்வேர்ட் செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்தது. அதுவும் ”கொரோனா” வுக்குப்பிறகு காட்சிகள் தலைகீழ் மாறி பொழுதனைக்கும் குழுமத்தை எட்டிப் பார்ப்பது ஒரு கடமையாகவே ஆகிவிட்டது. தொப்புள்கொடி உறவாக அனைவரையும் கட்டிப்போட்டது கைபேசியும் இணையமும்தான்.
கதம்பம் என்றாலே பலதரப் பட்ட வண்ணங்களும் வித விதமான வாசனைகளும்தானே. எங்களுக்குள்ளும் அத்தனை ரகங்கள் உண்டு.
சில மலர்கள் தினமும் பூக்கின்றன- பாஸ் அண்ணா, ஷுபா, ப்ரேம், நெடூஸ், வேலு, தாணு, பானு, ஸ்டீவ், ஹரி, ராஜேந்திரன் எல்லாம் மல்லி, முல்லை, பிச்சிப்பூ மாதிரி, தினசரி பூத்து மூச்சு முட்ட மணம் பரப்புவார்கள். குழுமம் என்ற இமய மலையைத் தாங்கும் பத்துத்தலை ராவணர்கள் இவர்கள். இவர்களின் பங்களிப்பால்தான் குழுமமே களை கட்டுகிறது. அவ்வப்போது மலரும் லில்லி மலர்கள் - தில்லை, மது, சால்ட், மேகலா, ஸ்டெல்லா, சஹாயா, ஹேமா, மீனாக்கா, சுகந்தி, தங்கராஜ், தம்பிராஜ் பீட்டர் போன்றோர். அவ்வப்போது வந்து குறிப்பிட்ட பதிவுகளைத் தந்து கதம்ப மாலைக்கு செண்ட் அடித்து மணம் பரப்புவார்கள். அது தத்துவமாகவோ மருத்துவமாகவோ அறிவுரையாகவோ வாழ்த்துக்களாகவோ இருக்கும். மற்றவர்களெல்லாம் சில நாட்கள் இடைவெளி விட்டுவிட்டு அவ்வப்போது வாடும் மாலைக்கு ஊக்கமளித்து பொலிவுறச் செய்யும் க்ரியா ஊக்கிகள், ரோஜா மலர்கள் போன்றவர்கள். தினமும் பூத்து சோர்வடைந்து காணாமல் போன லிஸ்ட்டிலும் சிலர் உண்டு. இவர்களைத் தேடச் சொல்லிப் புகார் அளிக்க வேண்டும். உரமிட்டு உற்சாகப்படுத்தி மீண்டும் மலரச் செய்ய வேண்டும்.
எப்படி மலர்ந்தாலும், என்ன மணம் வீசினாலும் எட்டியே பார்க்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருக்கும் மும்மூர்த்திகள் அபுல், ஆண்ட்ரூ, பாலு- நமது வகுப்பின் முன்னோடிகள். வகுப்பு விழாக்கள் நிமித்தம் முன்னின்று நடத்துபவர்கள் குழுமத்தில் ஈடுபடுவதில் மட்டும் திரை மறைவில் இருப்பவர்கள். குழுமத்தின் சிறப்பு மலர்கள் இவர்கள் - குறிஞ்சிப் பூக்கள். 12 வருடத்துக்கு ஒரு முறைதான் மலர்வார்கள், இன்னும் மூன்று ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. இப்போதைக்கு எட்டிப்பார்ப்பதுடன் நிற்பவர்கள். இப்படி ஒரு அழகிய மாலை இருப்பதே தெரியாமலோ, தெரிந்தும் சூட்டிக் கொள்ள ஆசைப்படாமலோ சில மலர்கள் உண்டு - பாண்டி, பத்து, கனி, கஹாரின், சிவகாமி, சூரி , ஸ்ரீதர், , ரமேஷ், சுந்தர்ராஜ், விஜி.M., செந்தில், ஷண்முகையா, இங்குதாஸ், இளங்கோ, சந்தோஷ்குமார், உமா@சிதம்பரம்மாள், சுப்புலக்ஷ்மி, நிம்ராட். இந்த க்ரூப்பே வேண்டாமென்று பெண்கள் குழுமத்தில் மட்டும் இணைந்துள்ள விசா, லோகா, நளினி ; எந்த க்ரூப்பும் எனக்குத் தேவை இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட்ட நிம்மி, சொர்ணம்; எங்கிருக்கிறார்கள் என்றே இன்னமும் கண்டுபிடிக்க முடியாத செளந்தரி, சஞ்சீவி ; இருக்கும் இடம் தெரிந்தாலும் வாட்ஸ்-அப் இல்லாத உஷா.இப்படி எத்தனை விதங்கள் எங்கள் உறவுகள்.
77ஆம் வருட MBBS வகுப்பினர் அனைவரையும் ஒன்றிணைக்க ஏற்படுத்தப் பட்ட குழுமம் என்றாலும் 50% நண்பர்களின் பங்களிப்புடன் மட்டுமே நடைபயின்று கொண்டிருக்கிறது. இந்த பங்களிப்பே மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. கல்லூரியில் படித்த காலங்களில் நிறைய பேருடன் ஓரளவு பரிச்சியமும் ஹலோ சொல்லுமளவுக்கு நட்பும் மட்டுமே இருந்தது. ஆனால் குழுமத்தில் இணைந்த பிறகுதான் ஒவ்வொருவருடனும் நெருக்கமான நட்பும் புரிதலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. எல்லோருடைய குடும்ப விழாக்களிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட க்ரூப்புகள் இருக்கும். ஆனாலும் காலையில் எழுந்ததும் முதலில் திறப்பது எங்கள் க்ளாஸ் குழுமம்தான். அதன்பிறகுதான் குடும்பம், அலுவலகம் சார்ந்த க்ரூப்புக்குள் செல்வது. எங்கள் வகுப்பின் பெண்களுக்கு மட்டுமென ஆரம்பிக்கப்பட்ட GALS group கூட இதற்குப் பின்னர்தான் .
காலையிலேயே அடிதடி விவாதங்கள், ஆவேச கருத்துப் பரிமாற்றங்கள், எதிலுமே அசையாமல் காலை வணக்கம் சொல்லும் பதிவுகள், அரசியல்,ஆன்மீகம் என்று எத்தனை விதமான ஈர்ப்புகள் இங்கே! சில நேரங்களில் அளவுக்கதிகமான மணம் க்ரூப்பைக் க்ராஷ் செய்துவிடும் உண்டு. 200-500 பதிவுகள் கூடக் கொட்டிக் கிடக்கும். எதைப் படிப்பது எதை அழிப்பது என்றுகூடத் தெரியாது.. அதிலும் அரசியல் விவாதங்கள் ஆரம்பித்துவிட்டால் அவ்ளோதான், நாங்களெல்லாம் அப்பீட்டு, பாஸ் அண்ணாவும் செழியணும் மட்டும் ரிப்பீட்டு. எவ்வளவு சண்டை, சச்சரவுகள் வந்தாலும், புறம் தள்ளிவிட்டு எனது தோழமை இங்கே மட்டுமே என்று மறுபடி மறுபடி இணைய வைக்கும் ஈடில்லா குழுமம். காணாமல் போனவர்களைக் கயிறு போட்டு இழுத்து, ஒரு பொருட்டாக நினைக்காதவர்களை மோடிவேட் செய்து உள் இழுத்து முழு செயல்பாட்டுடன் இயங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
நெல்லைக் கதம்பம் உலகமெங்கும் மணம் வீசிக்கொண்டிருந்தாலும் அதை இணைக்கும் நூல்கண்டு மட்டும் 77Batch whatsapp group இல்தான் இருக்கிறது. புலம் பெயர்ந்துள்ள மேகலா, வசந்தி போன்றோருடன் எங்கள் உறவாடலே கைபேசி வழியாகத்தான். ஒவ்வொருவரின் திறமையையும் வெளிக் கொணர்வதும் இந்த தளம்தான். நக்கீரன்,பானுவின் பாடல்கள், செழியனின் கவிதைகள், தோழியரின் சமைதல் டிப்ஸ், மறக்காமல் பாராட்டும் சக நண்பர்கள் என கையடக்கமான திரையில் உலகத்தையே பார்க்கிறோம்.
இத்தனை இன்பங்களிலும் எங்களுடன் பங்கேற்க முடியாமல்
உதிர்ந்த மலர்களாய் எங்கள் எல்லோர் மனதிலும் நிறைந்துள்ள நினைவில் வாழும் பத்து நண்பர்களுக்கும் இந்த கதம்ப மாலை சமர்ப்பணம்.

0 Comments:

Post a Comment

<< Home