Wednesday, June 05, 2024

அலை அலை-2

 அலை அலை-2

“சூரியகாந்தி”
சூரியன் செல்லும் திசையெல்லாம் திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கும் அழகிய மலர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் திருநெல்வேலியின் 1977ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் மனதில் என்றென்றும் புன்னகைக்கும் அன்புத் தோழி பற்றி அவர்களுக்கெல்லாம் தெரியாது. சூரியா, சூரி, பிஸ்மார்க், புத்தகப்புழு என்று ஏகப்பட்ட அடைமொழிகள் அவளுக்கு உண்டு. ஆனால் இப்போதோ அழைத்தாலும் திரும்பிப் பார்க்க முடியாத இடத்திற்கு எங்களைப் பிரிந்து சென்றுவிட்டாள். அவளது பிரிவு சோகத்தைத் தந்தாலும் அவளின் நினைவுகள் என்றுமே சுகந்தமானவை.
46 ஆண்டுகளுக்குமுன் அறியாப் பருவத்தில் பதினாறு வயதுப் பாவைகளாய் அறிமுகமானோம். அன்றிலிருந்து தொடர்கதையாக இருந்த நட்புக்கு முடிவுரை போட வைத்தது புற்றுநோய் என்ற அசுரன். எண்ணிடலங்கா பிரசவங்கள் பார்த்து எண்ணற்ற பெண்களின் நோய் தீர உதவி உயிர் காத்த மகப்பேறு மருத்துவரைக் கல்மனதுடன் காலன் கொண்டுபோய்விட்டான். அவளது இறுதி யாத்திரையில் அவள் பெற்றெடுத்த மக்களும் பேணிக் காத்த பெண்டிரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது மனதைப் பிழிவதாக இருந்தது என தோழி பானு கூறினாள்.
சூரியை நினைவில் கொண்டாட எத்தனை எத்தனையோ நினைவுகள் , ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இருக்கும். எனக்கு அவளுடன் எப்போதும் ஒரு soft corner இருக்கும். நான் எப்போதுமே கொஞ்சம் படிப்பு நிறைய சேட்டை என்று சுற்றும் போதெல்லாம் இழுத்து வைத்து ஏதாவது சொல்லித் தருவாள். அதுவே அந்த வருட பரீட்சையில் கண்டிப்பாக எனக்கு க்ளிக் ஆகிவிடும். நாங்க ரெண்டுபேரும் hostel- இல் wing-mates. அவள் படித்ததை நினைவு படுத்திக் கொள்ளவும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். நடு ராத்திரி தூக்கம் கலைந்து எழுந்தால் இதயம் வீக் ஆனவர்களுக்கு பயம் உண்டாக்கும் படி முணுமுணுப்பான சத்தத்துடன் படித்துக் கொண்டிருப்பாள். பேய் மாதிரி திரியாமல் காலையில் படின்னு சொன்னாலும் கேட்க மாட்டாள்
பரீட்சைக்கு முன்னர் படிப்பதற்கு விடும் விடுமுறைகளில் எங்களில் சிலர் வீட்டிற்கு செல்ல மாட்டோம். விடுதியில் படிப்பதுதான் நல்லது. எல்லோருடனும் டிஸ்கஸ் பண்ணிப் படிக்கலாம். கண்ட நேரத்தில் தூங்கி நினைத்த நேரம் எழுந்து படிக்கலாம். எங்க வீட்டில், நான் மருத்துவக் கல்லூரி முடிக்கும் வரை மின்சார வசதியே கிடையாது. அதனால் விடுதிதான் கதி. விடுமுறையில் ஒரு பத்து நாளாவது கண்டிப்பாக விடுதி காலி பண்ணவேண்டும். மெஸ் கிடையாது, தண்ணீர் கிடையாது, குறிப்பிட்ட வெராந்தாவில் மட்டும் மின் விளக்கு எரியும். மொட்டை மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியும், படிக்கட்டு மின் விளக்குகளும் எங்களுக்குப் போதுமானதாக இருக்கும். பக்கத்திலுள்ள அஷோக் மெஸ் சாப்பாடு பார்சலில் வரும்.நானும் சூரியும் அங்கிருந்து வரும் சாம்பாருக்கு அடிமை. எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் மீதி சாம்பாரை ப்ளேட்டில் ஊற்றி குடித்த நினைவுகள் பசுமையாய் இருக்கிறது.
சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்டு அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்ததால் எல்லோரிலும் அண்ணன்கள் சாயலைப் பார்ப்பாள். “நெஞ்சத்தை கிள்ளாதே”, முள்ளும் மலரும்; அண்ணன் ஒரு கோவில் போன்ற படங்கள் அவளுக்கு ரொம்ப பிடித்தவை. மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒருவித முரட்டுத்தனம் அவளிடம் தெரியும். டமால் டுமீல் என்று எதையாவது எடுப்பதும் உடைப்பதுமாக இருப்பாள். விடுதிக்கு வந்த இரண்டாம் நாள் வெராந்தாவில் கிடந்த கட்டிலில் டமாரென்று உட்கார்ந்ததில் அது ரெண்டாக உடைந்துவிட்ட்து. நாங்களெல்லோரும் அவளை “பிஸ்மார்க்” என்று கூப்பிட ஆரம்பித்தோம். ஆனால் பலாப்பழம் மாதிரி மிகவும் இளகிய மனது. ஆனால் அன்பைக் கூட ஆர்ப்பாட்டமாகத்தான் காட்டுவாள்.
அவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காயெல்லாம் உடன்பாடு கிடையாது. அதனால் காதல் வயப்படும் தோழியரெல்லாம் அவங்க காதல் கிசுகிசுக்களைச் சொல்ல அவளை சுமைதாங்கி ஆக்கிக் கொள்வோம்.
ஏதாவது புளி ஜோக் சொன்னால்கூட கலகலவென்று கத்தி சிரித்து enjoy பண்ணுவாள். அவள் சிரிப்பு வெராண்டா முழுவதும் எதிரொலிக்கும். அவளாகப் புரணி பேச மாட்டாள், ஆனால் நாங்கள் அவ்வப்போது செய்யும் “பிரண்டைத் துவையலை” ரசித்துக் கேட்பாள். அந்நியோன்யமாக இருக்கும் தோழியரை “ ஏ புள்ளே” என்றுதான் அழைப்பாள். அவளோட உச்சரிப்பே மிக நெருக்கத்தைத் தந்துவிடும். நெருங்கிய தோழியர்களுக்கு பொருளாதார உதவி, பணியிடங்களில் தோள் கொடுப்பது என பல விதங்களில் எல்லோரையும் அரவணைக்கத் தெரிந்தவள். நாங்க எல்லோரும் சுடிதார், ஜீன்ஸ் என மாடர்ன் உடைகளுக்குள் தஞ்சமடைந்த போதும், கடைசி வரை புடவையில்தான் வலம் வந்தாள். பசங்க யாரும் அவளைக் கேலி செய்துவிட்டு கடந்து போய்விட முடியாது. நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு முறைப்பு காட்டினால் எதிராளிகளெல்லாம் அப்பீட் ஆகிவிட வேண்டியதுதான்..
கல்லூரிப் படிப்பு முடிந்து ஆளுக்கொரு திக்கில் பறந்து போய்விட்டோம். நிறைய பேருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் மகப்பேறு மருத்துவம் படிக்க ஸ்டேன்லி மருத்துவமனையில் இணைந்தபோது அவளுடன் மறுபடியும் வகுப்புத் தோழியானேன். MBBS முடித்து ஐந்து வருடங்கள் கழித்து முதுநிலை படிப்பில் சேர்ந்தால் ஒரு வருடம் விலக்கு அளிப்பார்கள். அதிலும் நான் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் மாதிரி ஈரோட்டிற்கும் சென்னைக்கும் தாவிக் கொண்டிருந்ததால் அவளுடன் அதிக நேரம் செலவிடவில்லை. நானும் லோகாவும் அடுத்தடுத்த அறைகளில் இருந்ததால் நாங்க ரெண்டுபேரும்தான் பொரணி பேசுவோம்.
இரண்டாயிரத்தில் நடந்த மில்லேனியம் வகுப்பு கூடுகைக்கு பிறகு வருடா வருடம் நண்பர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டே இருந்த்தால் பழைய நட்புகள் புதுப் பொலிவுடனும் ஆத்மார்த்தமாகவும் நெருக்கமடைந்துவிட்டது. பெண்கள் மட்டுமே அடிக்கடி சந்தித்துக் கொள்ளுவோம். பரா வீடு, ஈரோட்டில் எங்க தோட்டம் எல்லாம் எங்கள் கலகலப்பான மீட்டிங்குகளுக்கு சாட்சி. நாங்களெல்லாம் சீரியஸாக பிரண்டைத் துவையல்கள் அரைக்கும்போது பள்ளிகொண்ட பெருமாள் போஸில் படுத்துக்கொண்டே ரசித்துக் கொண்டிருப்பாள்.
வகுப்புத் தோழர் தோழிகளில் பத்துபேர்போலே மண்ணுலகை நீங்கிச் சென்றுவிட்டார்கள். மிகவும் வருத்தமான நிகழ்வுகள்தான் என்றாலும் சூரியகாந்தியின் பிரிவு எங்கள் மனங்களில் ஆழ்ந்த ரணமாகவே இருக்கிறது. மற்ற பூக்களைப் போல் சூரியகாந்திப்பூ அவ்வளவு சீக்கிரம் வாடிவிடாது. ஆனால் எங்கள் சூரியகாந்தியோ அகாலத்தில் மறைந்துவிட்டாள்.

0 Comments:

Post a Comment

<< Home