Wednesday, June 05, 2024

அலை அலை-1

 அலை அலை-1

“அக்காவுக்கு சமர்ப்பணம்”
எல்லோர் வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு அக்காவின் வழித்துணை இருக்கும். உடன் பிறந்த அக்கா இல்லாதவர்களுக்குக் கூட அக்காவின் பிம்பமாக ஒரு உறவு கண்டிப்பாக அமையும். ஆனால் எனக்கு உடன் பிறந்த அக்காக்களே மூன்று பேர் என்பதால் அக்காக்கள் செல்லம் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. அதிலும் மூத்த அக்காவுக்கும் எனக்கும் 18 வருட இடைவெளி என்பதால் நானே அவளுக்கு மூத்த மகள் மாதிரிதான். பெரியக்கா, நல்லக்கா, திருநெல்வேலி அக்கா என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்பட்ட மரகதம் அக்கா. 82 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து நான்கு நாட்களுக்கு முன் எங்களையெல்லாம் பிரிந்து சென்ற அன்புத் தமக்கை.
முத்துக்கள் குடும்பத்தின் முதல் பெண் வாரிசு. அடுத்து வந்த பெண்பிள்ளைகளெல்லாம் ஒட்டகச் சிவிங்கிகள்போல் நெடுநெடுவென்று வளர்ந்து நிற்பதற்கு முதல் அஸ்திவாரம் அக்காதான். ஆறடிக்கு சற்று குறைவாக ஒடிசலான தேகத்துடன் அக்கா நடந்து வந்தாலே அமர்க்களமாக இருக்கும். எங்க குடும்பத்து பெண்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் வர எடுத்துக்காட்டாக வாழ்ந்ததே அக்காதான். திருமணமான புதிதிலேயே அத்தானின் வேலை பறிபோய்விட்டபோதும் கலங்காமல் நின்று தனி மனுஷியாக நாலு பிள்ளைகளையும் வளர்த்து சமுதாயத்தின் உயர்ந்த நிலைகளுக்கு கொண்டு வர அவள் மேற்கொண்ட போராட்டங்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலேயே நாங்கள் எல்லோருமே தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று சொல்லலாம்.
எங்களுக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்தே திருநெல்வேலியில் சிந்துபூந்துறைதான் அக்காவின் விலாசம். முனிசிபல் ஆரம்ப பாடசாலை ஆசிரியையாக பணியில் இணைந்த காலம் தொட்டு மேகலிங்கபுரம் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிநிறைவு பெற்றது வரை சிந்துபூந்துறையில் வெவ்வேறு தெருக்களில் வாடகை வீட்டில்தான் இருந்திருக்கிறாள். பிள்ளைகள் தலையெடுத்த பிறகு NGGO colony யில் சொந்த வீடு கட்டிக் கொடுத்த பிறகும் கூட ஜங்ஷனை விட்டுப் பிரிய மனமில்லாமல் கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருந்துவிட்டாள். ஒண்டுக் குடித்தனத்தில் கிடைக்கும் உறவுகளும் பேச்சுத் துணையும் தனி வீட்டில் கிடைக்காது என்பது அவளது தீர்மானமான முடிவு.
மருத்துவக் கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு சேர்ந்த நாளிலிருந்து அம்மா வீட்டுக்குப் பிறகு அடைக்கலமும் ஆதரவும் அக்காவிடமே கிடைத்தது. கல்லூரியின் ஆரம்ப நாட்களில் ராகிங் மாதிரி விஷயங்களிலிருந்து எஸ்கேப் ஆக அக்கா வீட்டிற்கு ஓடிவிடுவேன். கல்லூரி முடிக்கும் வரை சிந்துபூந்துறை தெருக்களில் செருப்புத் தேய நடந்த நாட்கள் மிக அதிகம். அக்காவுடன் சேர்ந்து வடக்குத் தெரு, நடுத்தெரு, நாடார் தெரு என பல தரப்பட்ட தெருக்களிலும் சலிக்காமல் சவாரி செய்திருக்கிறேன். அநேகமாக ஒரு படுக்கை அறையும் சிறு சமையல் கட்டும் உள்ள வீடுகளாகவே இருக்கும். அக்காவின் நாலு பிள்ளைகளுடன் நானும் ஒருத்தியாக தலைமாடு கால்மாடு என்று சேர்ந்து உருளுவோம்.
எனக்கு மட்டுமின்றி.எனது வகுப்புத் தோழியர் அனைவருக்குமே ஏகபோக சொந்தம் அக்காதான். மாலையில் கல்லூரி முடிந்தவுடன் ஜங்ஷனில் ஊர் சுற்றப் போவதுதான் எங்களோட ரெகுலர் outing . முதல் ஸ்டாப் அக்கா வீடுதான். சமையல் கட்டில் மீதியிருக்கும் உணவுப் பதார்த்தங்களை எல்லாம் காலிசெய்துவிட்டுதான் ஊர் சுற்றக் கிளம்புவோம். எங்க அம்மாவின் கைமணம் அக்காவுக்குத்தான் உண்டு. சில நாட்களில் இரண்டாம் ஆட்டம் சினிமா போக வேண்டுமென்று ஆசைப்பட்டால் படம் பார்த்துவிட்டு வந்து அக்கா வீட்டில் தங்கி விடுவோம். இடம் பற்றாமல் அடுப்பங்கறையில் பாய்விரித்துப் படுத்த அநுபவங்களெல்லாம் கூட உண்டு. பூர்ணகலாவில் “இளமை ஊஞ்சலாடுகிறது” செண்ட்ரல் தியேட்டரில் “ஆயிரத்தில் ஒருவன்” எல்லாம் அப்படி பார்த்ததுதான்.இரவு ஆட்டம் முடிஞ்சு நடராஜா வண்டியில் அரட்டை அடித்துக் கொண்டே வருவது செம ஜாலி.
இவ்வளவு படுத்துறோமே, அக்கா பாவம்னு நெனைச்சிடக் கூடாது. வாத்தியாரம்மாவாச்சே, கரெக்டாக வேலை வாங்கிடுவாள். வீட்டைப் பெருக்கு, குழாயடியிலிருந்து தண்ணி பிடிச்சுட்டு வா, காய்கறி வெட்டு, கடைக்குப் போயிட்டு வான்னு ஏதாச்சும் வேலை வாங்கிடுவாள். ஆறுமுகநேரியில் அம்மா ஏதாச்சும் வேலை சொன்னால் ஏமாத்திட்டு ஓடிடுவேன், அக்கா சொன்னால் தட்ட முடியாது. மறுக்காமல் செய்ய வைக்கும் ஒருவித ஆளுமை அவளின் சுபாவத்தில் இருக்கும். என் அண்ணன் தம்பிகளெல்லாம் கூட அவள் ஏதாச்சும் சொன்னால் தட்டாமல் செய்திடுவாங்க. எங்க வீட்டு சட்டாம்பிள்ளையும் அவள்தான்.
வருகிற வருமானத்தில் கட்டு செட்டாகக் குடும்பம் நடத்துறதுன்னு சொல்லக் கேட்டிருக்கலாம், நாங்க அக்காவின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற கதையெல்லாம் கிடையாது, எப்பவுமே செலவு ஏழணாதான். பிள்ளைகள் படிப்பு, திருமணம், பேறுகாலம் என்று எல்லாவற்றையும் பட்ஜெட் பத்மனாபன் மாதிரி கணக்குப் போட்டு கடன் வாங்காமல் செய்து முடித்தவள். இளம் விதவையாகிவிட்ட மகளை அருகிலேயே வைத்து அரவணைத்து பேத்திகளின் திருமணத்தை முடித்து கொள்ளுப் பேத்தி பிரசவம் வரை முடித்துவிட்டு கல்யாண சாவு என்று பாராட்டும் வகையில் நிறைவான வாழ்க்கை முடித்து நித்திரை கொண்டவளைப் பார்த்த போது கண்களில் பெருகிய நீருக்கு அணைபோட முடியவில்லை.
சின்னக்கா இருவரும் இளவயதிலேயே கைம்பெண்களாகிவிட்ட நிலையில் எல்லா பெண்பிள்ளைகளின் திருமணத்தையும் பெரியக்காவும் அத்தானும்தான் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தார்கள். என் மகள் ஆலீஸின் இந்துமத முறைப்படி நடந்த திருமணத்தைக்கூட அக்காவும் அத்தானும்தான் தாரை வார்த்துக் கொடுத்து நடத்தினார்கள். அந்தந்த பருவத்திற்குரிய சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் விட்டு வைத்ததில்லை. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஐம்பதாவது திருமணநாள் என எல்லா வைபவங்களையும் சிறப்புற செய்துகொண்டாள். அக்காவும் அத்தானும் தம்பதி சமேதராய் அமர்ந்திருக்கும் கோலமே அழகாக இருக்கும். கொரோனாவின் போது அத்தான் காலமான பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோர்வடைய ஆரம்பித்துவிட்டாள்.
எழில் மாதிரி strong personality கூட அக்கா முன்னாடி மறுத்து பேச முடியாது. நான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தபோது வளைகாப்பு செய்ய வேண்டுமென்று எங்க வீட்டில் ஆசைப்பட்டார்கள். எழிலுக்கு பிடிக்காது என்பதால் யாரும் முன்னெடுத்து செய்ய முயற்சிக்கவில்லை. அக்காவே புடவை, வளையல் எல்லாம் வாங்கிட்டு வந்து வேலூரில் வைத்து சிம்பிளாக வளையல் போட்டுவிட்டாள். எழிலுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. (அவங்க ஊருக்கு போனதும் எல்லா வளையலையும் பொறுமையா கழட்டி அரிசி பானைக்குள் போட்டு மூடிவைச்சிட்டது தனிக்கதை). ஆலீஸ் வயசுக்கு வந்தபோதும் விசேஷமாகக் கொண்டாடவில்லை என்றாலும், தினமும் அவளுக்கு வித விதமாக மேக் அப் போட்டு போட்டோ எடுக்க வைத்தாள். வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போது அக்காவின் கருத்துக்களே முதன்மையானதாக இருக்கும்.
சிந்துபூந்துறை என்பது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக எங்களின் one-stop Hub. ஆறுமுகநேரி, நாசரேத் போவதாயிருந்தால் தி-லியில் இறங்கி அக்கா வீட்டில் ப்ரேக் எடுத்துவிட்டுதான் சொந்த ஊருக்குப் போவோம். திரும்பி சென்னை, ஈரோடு போவதாயிருந்தாலும் சாயங்காலமே அக்கா வீட்டிற்கு வந்து அவளுடன் நேரம் செலவிட்டுவிட்டு இரவு பஸ், ட்ரெயின் பிடித்து ஊருக்குத் திரும்புவோம். இது எங்க வீட்டிலுள்ள எல்லோருக்கும் பொதுவான வழக்கம்.இரவு சாப்பாடாக சுடச் சுட இட்லியும் சட்னியும் கண்டிப்பாகக் கிடைக்கும். வேண்டாம் என்று சொன்னால் வாழை இலை வாங்கி பார்சல் செய்து, ட்ரெயினில் போகும்போது சாப்பிடு என்று கையில் திணித்து அனுப்புவாள். ஒருமுறை IMA meeting க்கு நெல்லை வழியாக வந்தபோது ஈரோட்டிலிருந்து வந்திருந்த அத்தனை பேருக்கும் இரவு உணவு பார்சல் செய்து அனுப்பியதை இன்றளவும் கூட சிலாக்கியமாக பேசிக் கொள்வோம்.
எங்க எல்லோருடைய தோழர்,தோழியர்களும் அவளுக்கு ரொம்ப பரிச்சியம். பெயர் சொல்லி சொல்லி விசாரிப்பாள். மாரி எந்த ஊரில் இருக்கிறாள், நளினி பையனுக்குத் திருமணம் ஆகிவிட்டதா, பானு வீட்டிற்குப் போனியா என்று மறக்காமல் விசாரித்துக் கொண்டே இருப்பாள். வயதான பிறகு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டால் முதலில் கூப்பிடுவது Dr Andrew ( என் வகுப்புத் தோழர் ). உரிமையுடனும் பாசத்துடனும் அவள் கேட்கும் உதவிகளை அன்புடன் செய்து கொடுப்பதில் ஆண்ட்ரூவுக்கு இணையே கிடையாது. அடுத்த இடம் ரூபஸ், பரா, மீனா தான். எல்லோருமே சொந்த அக்கா மாதிரி அவளைக் கவனித்துக் கொண்டவர்கள். எல்லோரையும்விட செல்லத் தங்கை ராமேஸ்வரிதான். ரமேஷு என்று செல்லமாக அழைத்து மணிக்கணக்கில் இருவரும் கதை விடுவார்கள்.
கடைசி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பார்த்து சென்றிருக்கிறார்கள். கடந்த ஞாயிறு அன்றுதான் மூச்சுத் திணறல் அதிகமாக இருப்பது தெரிந்து தி-லிக்கு அவசரமாகப் போனேன். அவ்வப்போது நினைவு மங்கியதுபோல் இருந்தாலும் நான் போனதும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். உடம்பு சுத்தம் பண்ணி, மாற்று உடை அணிவித்து, குழாய் மூலம் திரவ உணவு கொடுத்துவிட்டு pulse oxymeter இல் பார்த்தபோது 93% காட்டியபோது முகமும் தெளிவடைந்ததுபோல் இருந்தது. ஆனால் அதன்பிறகு மூடிய கண்களைத் திறக்கவே இல்லை, என்னைப் பார்ப்பதற்கே காத்திருந்தவள் போல் தூக்கத்திலேயே ஆழ்ந்த நித்திரை அடைந்துவிட்டாள்.
அக்கா ஒரு சகாப்தம். அவளைப் பற்றி ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு விஷயங்களும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.. 81 ஆண்டுகள் நிறைவாக வாழ்ந்த வாழ்க்கைக்கு சிகரம் வைத்ததுபோல் பேரப்பிள்ளைகள் நெய்ப்பந்தம் பிடித்து அஞ்சலி செலுத்திய காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” – என்ற குறள் அக்காவுக்கு மிகவும் பொருந்தும்.
அம்மாவுக்கு இணையான அக்கா நீ.

0 Comments:

Post a Comment

<< Home