அலை அலை-6
அலை அலை-6
“வைனு பாப்பு வான் காணகம்”
பயணம் போகணும்னு ஆரம்பிச்சுட்டா அதற்குரிய முன்னேற்பாடுகள் பக்காவா இருக்கணும். அவசரத்துலே அள்ளித் தெளிச்ச மாதிரி கிளம்பினால் சூடு பட்டுகிட்டுத்தான் திரும்பணும். பார்த்துப் பார்த்து எடுத்து வச்சாலும் கடைசியிலே ஏதாவது முக்கியமான ஒண்ணு மறந்து வச்சிட்டுதான் போயிருப்போம். பள்ளி , கல்லூரிகளில் டூர் போகும்போது யாராவது ஏற்பாடு செய்வார்கள், நாம ஜாலியா ஏறி உக்காந்து போயிட்டு வந்திடலாம். எதாச்சும் தடங்கல் ஏற்படும்போது டூர் அமைப்பாளர்களை வைச்சு செய்யுறதோட நம்ம கடமை முடிஞ்சிடும். ஆனால் நாமளே எல்லா ஏற்பாடும் செய்ய ஆரம்பிக்கும்போது முதலில் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கும்.
மருத்துவப் படிப்பு முடிஞ்சதும் அண்ணனோட அரவணைப்பில் சென்னைக்கு வந்து செட்டில் ஆனபிறகுதான் ஒழுங்கு படுத்தவும் ஒருங்கிணைக்கவும் கற்றுக் கொண்டேன். நுங்கம்பாக்கத்தின் ராமானுஜம் செட்டி தெருதான் எங்கள் பயணங்களின் முதல் புள்ளி. கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவதுதான் என்னோட முதல் பயணத்திட்டம். அண்ணா சமாதி, மெரினா பீச், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர் என திட்டம் போட்டு பல்லவன் பேருந்து பிடித்தே எல்லா இடமும் போயிட்டு வருவோம். சென்னை மாதிரி பொது போக்குவரத்து அமைப்பு எந்த ஊரிலும் இருக்காது. பல்லவனுக்கு இணை பாரினில் கிடையாது. பொழுது விடியும் முன்பு கட்டுசாதம் கட்டிகிட்டு கிளம்பினால் அர்த்த ராத்திரிவரை பயமில்லாத பயணங்கள்.
மஹாபலிபுரம் மாதிரி தூரமா போகணும்னா மட்டும் அண்ணன் வேன் ஏற்பாடு செய்து தருவான். போற வழியில் டைகர் கோவ் என்ற இடத்தில் அமர்ந்து இட்லி சட்னி சாப்பிட்டுவிட்டு போனால்தான் கற்சிற்பங்களின் அழகைக் கவனத்துடன் பார்க்க முடியும். வழியில் கோல்டன் பீச்சில் நுழைவுக் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நேரத்திலும் அதனுள் நுழையும் வாய்ப்பு கிடைக்காது. MGM, கிஷ்கிந்தா மாதிரி தீம் பார்க்குகள் எல்லாம் அப்போது ஆரம்பிக்கப் படவில்லை. ஊர் சுத்துறதெல்லாம் கட் ஆகி எனக்கு அரசு வேலை வேலூர் மாவட்டம் (தற்போது வட ஆற்காடு )ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுவிட்டார்கள். சென்னையிலிருந்து அந்த ஊருக்கு செல்வதே பெரிய டூர் மாதிரிதான். ஜோலார்ப்பேட்டை வரை புகை வண்டியில் போய் அங்கிருந்து பஸ் பிடிச்சு போனால் தப்பிச்சேன். 102B பஸ்ஸில் திருப்பத்தூர் போய் அங்கிருந்து ஆண்டியப்பனூர் போனால் ஒரு நாள் ஆயிடும். 1986இல் பஸ் வசதிகள் குறைவாகவே இருந்தது.
அங்கே நாலு மாசம்தான் இருந்தேன். சரசக்கா கோடை விடுமுறைக்கு அங்கே வந்திருந்தாள். பக்கத்தில் ஜவ்வாது மலையில் காவலூர் என்ற இடத்தில் வான் ஆய்வகம் (observatory) புதிதாகத் திறந்திருப்பதாகச் சொன்னார்கள். பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களே வந்து திறந்து வைத்ததாகவும் சொன்னார்கள். அப்படிப்பட்ட இடத்துக்குக் கண்டிப்பாகப் போகணும்னு முடிவெடுத்தாச்சு. ஆனால் அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ( Reserve forest). அரசுப் பணியின் மேன்மை அப்போதுதான் தெரிந்தது. எங்கள் சீனியர் மருத்துவர் நீதிநேசன் சார் அருமையாக ஏற்பாடு செய்து அங்கிருந்த விருந்தினர் மாளிகையில் தங்கவும் வானோக்கி நிலையத்தை சுற்றிப் பார்க்கவும் அநுமதி பெற்றுவிட்டார். மறக்க முடியாத பயணம்.
ஆ.சு.நி. வண்டியிலேயே போனோம். அப்போதான் அநுமதி சிக்கலில்லாமல் கிடைக்கும் என சார் சொல்லியிருந்தார். உடன் பணியாற்றும் மருந்தாளுநர்கள், செவிலியர் எல்லோரும் சேர்ந்து குழுவாகச் சென்றோம். முதல் posting இல் அரசுப்பணிமேல் வெறுப்பு வராமல் பார்த்துக் கொண்டவர் நீதிநேசன் சார். அவருக்கு “ புன்னகை மன்னன்” எனவும், வண்டி ஓட்டுநருக்கு “அக்கினி மன்னன்” (சிரிக்கவே மாட்டாரு மனுஷன்) எனவும் சரசக்கா நாமகரணம் செய்து வைத்திருந்தாள்.ஆலங்காயத்துக்கு மதியமே போய்ச் சேர்ந்துவிட்டாலும் சாயங்காலம்தான் தொலை நோக்கி கருவியில் பார்க்கணும்னு சொல்லிட்டாங்க.அதனால் நல்லா சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அந்தி சாயும் நேரத்தில் கிளம்பிப் போனோம்.
டெலெஸ்கோப் என்றால் ஸ்டாண்டில் மாட்டி வைச்சுருப்பாங்க , அது வழியா பார்க்கணும்னுதான் நெனைச்சிருந்தோம். ஆனால் கண்ணுக்கு முன்னாடி பெரிய பூதங்கள் மாதிரி ரெண்டுமூணு கட்டிடங்கள் வித்தியாசமான அமைப்புடன் நின்றிருந்தன. அவைதான் வானோக்கிகள் என்று சொன்னார்கள். அசந்து போயிட்டோம். அந்த பிரமிப்பு சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு வரும்வரை இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மேற்கூரையே ஒவ்வொரு கோணத்திலும் திறந்து மூடி வானத்தின் அற்புதங்களைக் காட்டியது. ஒரு 25 பைசா நாணயத்தை 40 கி.மீ.க்கு அப்பால் வைத்தால்கூடத் துல்லியமாகத் தெரியுமாம். விஞ்ஞானி அல்லாத பாமரர்களுக்கு அதன் துல்லியத்தை இந்த விதமாக விளக்கினார்கள். பெளதிகம் எனக்குக் கொஞ்சம் தராறுதான் என்றாலும் அங்கிருந்தவர்கள் விளக்கிச் சொல்லக் கேட்டபோது ஒவ்வொரு கோளும் நட்சத்திரமும் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. சனி, யூரேனஸ், ஜுபிடர் என ஒவ்வொன்றாக விளக்கினாலும் எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மிக அருகில் பார்த்த பிரமிப்பு மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகப் பத்து வருடங்களுக்கு முன்பு என் குழந்தைகளுக்கு அந்த அற்புதத்தைக் காட்ட வேண்டுமென்று அழைத்து சென்றேன். ஏலகிரி மலையில் விடுதி எடுத்து தங்கிவிட்டு காவலூர் சென்றோம். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்குமேல்தான் அனுமதி உண்டு என்று சொல்லிவிட்டதால் அருகிலேயே இருந்த சின்ன நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு அதன்பிறகு சென்று பார்த்தோம். இப்போது எல்லாமே இணையத்தில் கிடைப்பதால் எனக்குக் கிடைத்த பிரமிப்பு அவர்களுக்கு ஏற்பட்டதா என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரசித்து பார்த்தார்கள்.Vainu Bappu Observatory என்று அந்த விஞ்ஞானியின் பெயரிலேயே செயல்படுகிறது.
ஜவ்வாது மலைப்பகுதி அந்தக் காலத்தில் நக்ஸலைட்டுகளின் கூடாரமாக இருந்தது. அதனால் இந்த மதிரி அரிய பிரதேசங்கள் வெளியில் தெரியாமலே இருந்தது. தண்டனை மாறுதலில்(Punishment transfer)தான் இந்த இடங்களுக்கு பணிநியமனம் செய்வார்களாம். எப்படியோ நானும் இங்கே வந்து மாட்டிக் கொண்டேன். எனது குவார்டர்ஸ் ரொம்ப பெருசு. சுத்தியும் புதரும் காடும்தான். நடந்து போற பாதையில் சுருட்டைப் பாம்பு என்று சொல்லப்படும் விஷப்பாம்பு சர்வ சாதாரணமா படுத்திருக்கும். எப்படியோ வீட்டிலிருந்து யாராவது SHIFT போட்டு துணைக்கு இருந்தார்கள். சென்னையிலிருந்து அக்கா மகன்,தம்பியின் தோழன் என ஒரு கூட்டம் வந்திருந்தார்கள். மருத்துவமனையின் எதிரிலேயே இருக்கும் பெரிய மலையில் மலையேற்றம் செய்து உச்சியில் போய் சீட்டுக் கட்டு விளையாடினோம்.
அண்ணன் சீக்கிரமே காஞ்சிபுரம் அருகில் பாலுசெட்டி சத்திரத்துக்கு மாறுதல் வாங்கிக் கொடுத்துவிட்டான். மாறுதலில் செல்வதற்குள் எங்க மருத்துவமனையின் எல்லைக்குள் இருந்த ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன்.எல்லா இடத்துக்கும் அரசு வண்டியில் போய் செம மரியாதையுடன் சுற்றி வந்தேன். இப்போது அவையெல்லாம் சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாறி இருக்கிறது.
பி.கு.:
காரில் சென்றால் வாணியம்பாடியிலிருந்து ஒரு மணி நேரத்தில் காவலூர் சென்றுவிடலாம். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு அங்கிருப்பதுபோல் சென்றால் இலகுவாக சுற்றிப் பார்க்கலாம்
0 Comments:
Post a Comment
<< Home