அலை அலை-5
அலை அலை-5
“போவோமா ஊர்கோலம்”
படிச்சவங்களோ பாமரர்களோ, ஏழையோ பணக்காரனோ, முதலாளியோ தொழிலாளியோ-பயணம் போவது எல்லோருக்குமே பிடித்த ஒன்றுதான். தூரமும் இடமும் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ஆசை எல்லோருக்கும் பொதுவானதுதான். எனக்கு உலகத்தையே சுற்றி வர ஆசை. என் வீட்டுக்காரருக்கோ ஈரோட்டிலிருந்து வெளியே கிளம்பினால் மூச்சு வாங்கிவிடும். ஈரோட்டின் காவல் தெய்வம் என்று நாங்களெல்லாம் கலாய்ப்பது கூட உண்டு. சித்தோட்டில் இருக்கும் எங்க தோட்டத்திற்குப் போவதுதான் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச பிரயாணம். அதைத் தாண்டி வெளியூர் நகர்த்தணும்னா ரொம்ப சிரமம்தான். அதனாலேதான் நான் வெவ்வேறு குழுக்களுடன் இணைந்து அவ்வப்போது ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன்.
77 Batchmates உடன் ஒரு டூர், ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் குழுவுடன் ஒரு டூர் என வருஷத்துக்கு ரெண்டு பயணம் கண்டிப்பாக உண்டு. அது வட நாடாகவும் இருக்கலாம் அயல்நாடாகவும் இருக்கலாம். அதுபோக குடும்பத்துடன் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என வார இறுதிகளில் செல்வது பாயாசத்தில் பனங்கற்கண்டு சேர்ப்பது மாதிரி. அம்மாவீடு,மாமியார் வீடு,மகள்வீடு என குழுமங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போவதால் அப்பாயிட்மெண்ட் ஒழுங்கு பண்ணுவது tight ஆகத்தான் உள்ளது. காலில் சக்கரம் கட்டிகிட்டு சுத்திகிட்டே இருக்கியே, எப்போதான் வீட்லே இருப்பாய் என கலாய்ப்பவர்களும் உண்டு.
இந்த மாதிரி பிரயாணங்கள் போவது எப்போதிலிருந்து தொடர்கதை ஆச்சுன்னு தெரியலை. ஆனால் பள்ளிப் பருவத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு பிக்னிக் போனதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு கொஞ்சம் முன்னேறி, ஆ ஊன்னா குற்றாலம் பாபநாசம் போவோம். ரொம்ப அரிதாக திருவனந்தபுரம் ஒருதரமும் பெங்களூரு ஒருதரமும் போனோம்.அவைதான் என்னுடைய நீண்ட பயணங்கள். திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே நின்று ஓடுபாதையில் பறந்த விமானத்தை அண்ணாந்து பார்த்தோம். அப்போது வரைக்கும் பேருந்தும் புகைவண்டியும்தான் பழக்கப்பட்ட வாகனங்கள்.
படிப்பு, திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டே இருந்தபோது கால்களில் கட்டியிருந்த சக்கரம் உள்ளுக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தது.
இனிமேல் இதுதான் நம்ம ஊர் என ஈரோட்டில் செட்டில் ஆன பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் சுற்றல் ஆரம்பித்தது. காரில் டூர் போக ஆரம்பித்ததே கல்யாணத்துக்கு அப்புறம்தான் , அதுவும் அந்தக்கால அம்பாசிடரில். வருஷத்தில் இரண்டுதரம் கண்டிப்பாக வெளியில் செல்வது என முடிவு செய்து பயணம் செய்ய ஆரம்பித்தோம். ஆடி மாசமும் தைப்பொங்கல் சீசனும் நோயாளிகள் வரவு குறைவாக இருக்கும் என்பதால் அதையே ரெகுலராக கடைப்பிடித்தோம். எழில் Sterling Holidays membership வாங்கியிருந்தது ரொம்ப வசதியாகப் போயிடுச்சு. குழந்தைகள் கொஞ்சம் பெருசாகிறவரை அக்கம் பக்கத்தில் இருந்த மலைகளையும் கோடை வாசஸ்தலங்களையும் பார்த்து முடிக்கவே சரியாகப் போச்சுது. எல்லா ஸ்டெர்லிங் ரிசார்ட்டும் எங்க பேர் சொல்லும் அளவுக்கு தங்கியிருப்போம்.
எழில் தங்கை புனிதா ஹைதராபாத் விமான நிலையத்தில் வேலை பார்த்ததால் அங்கு போனதுதான் முதல் நீண்ட புகைவண்டி பயணம். எழிலின் வேலைப்பளு காரணமாக எங்களுடன் வரமுடியவில்லை. குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியாருடன் ஒரு ஜாலி ட்ரிப். லும்பினி பார்க்கில் லேசர் விளக்கில் பார்த்த காட்சிகள் மலைப்பாக இருந்தது. அடுத்தடுத்து நயினார் அண்ணன் ஏற்பாடு செய்திருந்த சிக்கிம் , டார்ஜிலிங் பயணம்; புனிதா மாறுதலாகி டெல்லி விமான நிலையம் சென்றதால் முதல் முதல் விமான பயணமாக டெல்லி சென்றது என பயணங்களின் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போனது. ஆனாலும் இதுவரை ஒருதரம் கூட வெளிநாட்டுப் பயணம் செல்லவில்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.
அரசுப் பணியில் இருந்ததால் அது சாத்தியமாவதில் சிக்கல் இருந்தது. அந்த நேரத்தில் அடிக்கடி பணியிடை மாற்றம் செய்து கொண்டே இருந்ததால் கடுப்பாகிஅரசுப் பணியில் இருந்து நீண்ட விடுப்பில் சென்றேன், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். அந்த இடைவெளியில்தான் பாஸ்போர்ட் எடுத்து முதல் முதலாக சிங்கப்பூர் சென்றோம். மறக்கமுடியாத முதல் அயல்நாட்டுப் பயணம். மறுபடியும் அரசுப் பணியில் இணைந்ததால் வெளிநாடு பயணங்கள் தடைபட்டது. புனிதா டெல்லியிலேயே இருந்ததால் கிழக்கிலிருந்து மேற்காக இமய மலையின் ஒவ்வொரு மலை வாசஸ்தலத்தையும் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டேன். சிம்லா, காஷ்மீர் எல்லாம் மனதைத் தொட்ட பயணங்கள். 2018 இல் பணிநிறைவு பெற்றவுடன் கால்களில் சக்கரம் துடிப்புடன் எழுந்து நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.
வானமே எல்லை தூரங்கள் தடைகள் இல்லை என்று பறந்து பறந்து பார்க்கிறேன். பலவித அநுபவங்கள், எண்ணற்ற நிகழ்வுகள்; சந்தோஷங்கள்; பிரச்னைகள் என பயணங்கள் என்னை முழுதாக ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன. ஒரு இடத்திற்குப் போயிட்டு வரும் முன்பே அடுத்த இடம் எங்கு செல்கிறோம், யாருடன் செல்லப் போகிறோம் என்பதெல்லாம் ப்ளான் பண்ணி அதற்குரிய ஏற்பாடுகளில் இறங்கிவிடுவேன். மூணுமாசம் அமைதியாக உட்கார்ந்து நர்ஸிங் ஹோமைப் பார்த்துக் கொண்டு அடுத்த பயணத்திற்கு தேவைப்படும் தொகையை சேமித்துக் கொள்வேன். வீட்டு செலவுகள், பிள்ளைகள் படிப்பு, திருமணம் எல்லாம் எழில் பார்த்துக் கொள்வதால் என் வருமானத்திலிருந்து பயணங்களுக்கு செலவு செய்வதில் பிரச்னையே இல்லை.
பயணங்கள் செல்வது பொழுது போக்குக்காக மட்டும் அல்ல. பலவித மனிதர்கள், கலாச்சாரம், உணவுப் பழக்கங்கள், இயற்கை சூழல்கள், நவீன தொழில் நுட்பங்கள் என எத்தனையோ விஷயங்கள் நம் பார்வைகளை விசாலப் படுத்துகிறது. மெத்தப் படித்த மருத்துவர் என்று பீலாவாக சுற்றித் திரிந்தாலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் படபடக்கும் இதயத்தை மறைக்கத் தெரியாது. ஒவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும் பிரசவத்திற்குக் காத்திருக்கும் கர்ப்பிணிபோல் இறுக்கமாக நுழைந்து வெளியில் வரும்போது அப்பாடா என பெருமூச்சு விடுபவர்கள் ஏராளம். வீட்டில் துரும்பைக் கூட எடுத்துபோடாதவர்கள் தங்கள் உடமைகளைத் தாங்களே தூக்கி கன்வேயரில் போடும்போது முகம் சுழிக்கும் சுவாரஸ்யமான காட்சிகளும் உண்டு. வரிசையில் நிற்பதும், வழி கொடுத்து ஒதுங்கி நிற்பதும், நன்றி சொல்லப் பழகுவதும், குப்பைகளைக் கூடையில் போடுவதும் சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி மறந்து போகும் விஷயங்களும்கூட. அதையெல்லாம் சிறு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல் பயணங்கள் நமக்கு போதித்துக் கொண்டே இருக்கும். ஆரோக்கியமாகவும் FIT ஆகவும் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள பயணங்கள் நல்ல கிரியா ஊக்கி. நாள்பட்ட சர்க்கரை நோய் கூட நடைப் பயணத்தில் கட்டுக்குள் வந்துவிடும். ருசித்து ருசித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் பசிக்கு சாப்பிடப் பழகிவிடுவார்கள். மிக முக்கியமாக நேர மேலாண்மை (TIME MANAGEMENT) கண்டிப்பாகப் பழகிவிடும். என்னைவிடவும் மிக அதிகமான பயணங்களை மேற்கொண்டவர்கள் கணக்கில் அடங்காமல் இருப்பார்கள்.
ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ என்று பூகோளத்தில் படித்ததை அந்த ஊரின் சாலையில் நின்று உணரும்போது வரும் புல்லரிப்பு ஆச்சரியப்படுத்தும். இதுபோல் இன்னும் எத்தனையோ உணர்வுகளும் உண்மைகளும் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர வைக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே இங்கே வந்திருக்க வேண்டும் என்று எண்ண வைத்த இடங்கள் நிறைய உண்டு. நேரமின்மை, பணத்தேவை, அவசியம் என்று தோணாமலிருந்தது போன்ற காரணங்களால் நிறைய பயணங்களைத் தள்ளிப் போட்டிருப்போம். நேரம் பொன் போன்றவர்களுக்கு அதிதுரித விமானங்களும், சாமானியர்களுக்கு பட்ஜெட் புகைவண்டி பேருந்து போன்றவைகளும் ஈசியாக ப்ளான் பண்ண முடியும். நட்சத்திர விடுதிகள் முதல் மாணவர் விடுதிகள் வரை இணையம் மூலமே இலகுவாக முன்பதிவு செய்யும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. பயணங்களில் அடுத்து வரும் முக்கியமான சந்தோஷம் நண்பர்களுடன் கதை பேசுவதும் பொரணி பேசுவதும்தான். ஸ்பெஷல் ஐட்டம் பிரண்டைத் துவையல். பழங்கதைகள் பேசுவது எல்லோருக்குமே பிடிக்கிறது என்பதே பயணங்களின்போதுதான் புலப்பட்டது. கல்லூரி நாட்களில் சண்டை போட்டதைக் கூட காமெடியாக எடுத்துக் கொண்டு கலாய்ப்பதும் இலகுவாக இருக்கும்.ஈகோ குறைந்து விட்டுக் கொடுக்கும் பாங்கு அதிகரிப்பது நிதர்சனமாகப் புரியும். மனது விசாலமாகி மறுபடியும் குழந்தைத் தனம் கூடிவிடுகிறது. குறும்புச் சேட்டைகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை.இப்படி எத்தனையோ நினைக்க நினைக்கத் திகட்டாத அநுபவங்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற இன்பத்தை எல்லோருடனும் பகிரும் வண்ணம் கட்டுரைகளாக எழுதலாமா என்று யோசிக்கிறேன். மேலோட்டமாக எழுதினாலே ஒரு நூறு பதிவுகள் தாண்டிவிடும் போலிருக்குது.
என்னோடு சேர்ந்து ஊர் சுற்றலாம் (இல்லை இல்லை)
உலகம் சுற்றலாம், வாங்க!!
0 Comments:
Post a Comment
<< Home