Thursday, December 09, 2021

அலை-58

 அலை-58


"பேர் சொல்லப் பிள்ளை பேர் சொல்லும் பிள்ளை"

அநேக சமயங்களில் பெயர்தான் மனிதனின் அடையாளமாக இருக்கிறது. பெயருக்குப் பின்னால் வால் போல் அடுக்கிக் கொண்டிருக்கும் பட்டங்களோ பதவியோ மனிதனை அடையாளப் படுத்துவதில்லை. முன்னால் நிமிர்ந்து நிற்கும் பெயரைப் பொருத்தே அடையாளம் கிடைக்கிறது. பேர்லே என்ன இருக்கு, நாமளே வைச்சுக்கிறதுதானே என்று வாதிட்டாலும், பெயரில்லாவிட்டால் அடையாளமே இல்லை. அதனால்தான் பிறந்ததைக் கொண்டாடும் அளவுக்கு பெயர் சூட்டும் வைபவங்களும் விமர்சையாகக் கொண்டாடப் படுகின்றன. 


ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நபரின் பெயரை நினைவு படுத்தி அழைத்துப் பாருங்கள். அந்த முகத்தில் ஒரு ஆச்சரியம் கலந்த அந்நியோன்யம் வந்துவிடும். நம் பெயரை நினைவு படுத்தி அழைக்கும் வாத்தியார்களுடன் நமது நெருக்கமும் அதிகமாகத்தானே இருக்கும். அவ்வளவு முக்கியம் வாய்ந்த பெயர்கள் எப்படியெல்லாம் மருவி திருவி பிய்ந்து வழக்காடப் படுகிறது என்பதைப் பார்த்தால் , உண்மையாகவே பெயர் முக்கியம்தானா என்றும் தோன்றுகிறது. 


கொஞ்ச காலங்களுக்கு முன்பு வரை பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தா பாட்டி அல்லது குடும்பத்தின் மூத்த உறவுகளின் பெரையே வைப்பதுதான் வழக்கம்.  அதனால் ஒரே பெயருடைய நிறைய வாரிசுகள் அங்கங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அப்பா பெயரை முதல் குழந்தைக்கு வைத்தால் மாமனார் அல்லது மாமியார் பெயரை அடுத்த வாரிசுக்கு வைக்க வேண்டும். அல்லது இரண்டு தாத்தாக்களின் பெயரையும் மிக்ஸிங் செய்து புதுவிதமான பெயரை வைக்க வேண்டும். அதனால் வரும் சின்னச் சின்ன சண்டைகள் கூட உறவும் உணர்வும் கலந்ததாக இருக்கும்.


இப்போது அந்த மாதிரி வழக்கங்களே ஒழிந்து போய்விட்டன. வாஸ்து சரியில்லை பாணியில் ஜோஸியர் சொல்லும் எழுத்தில்தான் பெயர் ஆரம்பிக்க வேண்டும். அவர் ஆயுத எழுத்து கொடுத்தால்கூட அதிலும் ஒரு பெயரைக் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு நமக்கெல்லாம் அறிவு ஜாஸ்தி ஆகிவிட்டது. அதனால் வாயில் நுழையாத பெயர்கள்தான் நிகழ்கால வருகைப் பதிவேட்டை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பெயரோடு தொடர்புடைய சுவாரஸ்யங்களும் வழக்காடல்களும் மறைந்து போய்விட்டன.


எங்க வீட்டிலும் பெரியவர்களின் பெயரைச் சூட்டுவதுதான் அந்தக்கால வழக்கம். அப்பாவின் பெயர் ஐநூற்று முத்து என்பதால் எட்டு பிள்ளைகளின் வீட்டிலும் முத்து என்ற பெயர் உள்ள பேரப் பிள்ளைகள் அநேகம் உண்டு. அதனால்தான் எங்கள் குடும்பப் பெயர் "முத்துக்கள் குடும்பம்". 


 முத்துராமன், முத்துக் கிருஷ்ணன், முத்துக் குமார் என்ற பெயர்களே திரும்பத் திரும்ப வலம் வந்து கொண்டிருக்கும். அண்ணன்  வீட்டில் ஒரு முத்துராமன் இருந்தால் அக்கா வீட்டிலும் ஒரு முத்துராமன் இருப்பான். பெண்பிள்ளையாக இருந்தால் முத்துச் செல்வியோ முத்துலக்ஷ்மியோ இருப்பார்கள். அவ்வளவு ஆசையாக பெயர் வைத்துவிட்டு அதே பெயரில் கூப்பிட மாட்டார்கள். துணைக்கு ஒரு பட்டப் பெயரும் இருக்கும். 


வீட்டுக்கு வந்த மருமகள்கள் மாமனார் பெயரைச் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள். மரியாதைக் குறைவாம்.

பெரிய அண்ணனின் மகன் பெயர் முத்துராமன். பெரிய மதினியோ சிவாஜி கணேசனின் ரசிகை. அதனால் அந்த நேரத்தில் வெளிவந்த ”வசந்த மாளிகை” படத்தின் சிவாஜி பெயரான “ஆனந்த்” என்ற புனைபெயரைச் சூட்டி மகனை இன்றளவும் அப்படியே கூப்பிட்டு வருகிறார்கள். இன்னொரு மதினி, அக்கா மகன் முத்துக் கிருஷ்ணன்  என்ற பெயரை ”இஸ்மாயில்” என்றே கூப்பிடுவாங்க. அவன் அவ்வளவு கலராக இருப்பான். நாங்களெல்லாம் கொஞ்சம் பனைமரம் கலரில்தான் இருப்போம். அதனால் அவனுக்கு மதம் மாறாத பெயர் மாற்றம் கிடைத்தது.

அதே பணியில்தான் தாத்தா பாட்டி பெயர் வைக்கப் பட்டவர்களெல்லாம் ரெண்டு பெயருடன் “அந்நியன்” மாதிரி அலைந்து கொண்டிருப்பார்கள்.


 ராம்குமார் “துரை’’ ஆனான். மரகதக்கா “நல்லக்கா” ஆனாள். சிவகாமிநாதன் “செக்கன்” ஆனான். நயினார் அண்ணன்தான் பாவம். அவனுக்கு பெயர் வைக்கப்பட்ட தாத்தா பூந்திக் கடை வைத்திருந்ததால் அவன் “பூந்தி” ஆகிட்டான். சரஸ்வதி ”சச்சு” ஆனாள். நாராயணன் கூட “நானா” ஆகிவிட்டான்.என் பெயர் மட்டும்தான் மாறாமல் சுருங்காமல் ’தாணு” என்றே இருந்தது. 


அம்மாவைப் பெற்ற ஆச்சிக்கு சுசீந்தரம்தான் சொந்த ஊர். அங்குள்ள தாணு மாலையன் சுவாமி பெயரை பிள்ளைகளுக்கு வைப்பார்கள். பொதுவாக ஆண்பிள்ளகள்தான் ”தாணு” என்று பெயரிடப் படுவார்கள். என்ன காரணத்தாலோ எங்க ஆச்சிக்கு அந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். குடும்ப வழக்கப்படி இறங்கு வரிசையில் 

கடைக்குட்டியான எனக்கு ஆச்சி பெயர் சூட்டப்பட்டது. ஆண் பெயர் சூட்டப்பட்ட பெண்கள் வரிசையில் நானும் இணைந்தேன். எனக்கு முன்னால் அந்தப் பெயர் சூட்டப் பட்டவர்கள் எல்லாம் நாளடைவில் அதைத் தாயம்மாள் என்று மாற்றிக் கொண்டு விட்டதால், நான் மட்டுமே அதே பெயரில் இருந்தேன். அதனால் தாணு ஆச்சிக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். நிறைய சலுகைகளும் தின்பண்டங்களும் எனக்கு மட்டும் ஸ்பெஷல். என்னை யாரும் திட்டவோ அடிக்கவோ விட மாட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் அடங்காமலே வளர்ந்துவிட்டேன். 

 இடையிடையே கம்யூனிஸ்ட் வீட்டில் 

கடவுள் பெயர்களும் நடமாடும். சரஸ்வதி பூஜையன்று பிறந்த

அக்கா சரசுவதி ஆனாள். சுதந்திர தினத்தன்று பிறந்தவளுக்கு சுதந்திர தேவி என பெயர் வைக்க முயன்று சூழ்நிலை 

காரணமாக சுடலை வடிவு ஆனாள், வடிவு 

ஆச்சி பெயர் வரிசையில் வெயிட்டிங் போலும்.


எங்க அப்பா பெயரை எல்லா வாரிசுகளின் பெயரிலும் சேர்த்து வைத்தவர்கள், அம்மா பெயரான “நாகம்மாள்” என்ற பெயரை மட்டும் யாருக்குமே வைக்கவில்லை. சித்தி பெயரை வைத்து “ ஜெய பார்வதி” கூட உண்டு. ஆனால் அம்மா பெயரை யாருக்குமே வைக்கவில்லை. ஏனென்று இதுநாள் வரை எனக்கும் புரியவில்லை. ஆணாதிக்க சிந்தனை அவ்வளவாக இல்லாத எங்கள் குடும்பத்தில்கூட பெண்மையைப் போற்றும் பாங்கு தவறியது எப்படி என்று வியந்து கொண்டிருக்கிறேன்.


பெரியவர்களின் பெயர் இல்லாவிட்டால் கடவுள் பெயர்கள் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த வீட்டில் கொஞ்சம் வித்தியாசமான பெயர்கள் மெதுவாக நுழைந்தன .அதைத் தொடங்கி வைத்தவன் நயினார் அண்ணன்தான் என்று நினைக்கிறேன். 


அண்ணனுக்குக் காண்டேகரின் எழுத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரது  “கிரெளஞ்சவதம்” என்ற படைப்பில் வரும் திலீபன் என்ற கதாபாத்திரத்தின் மீது உள்ள வாஞ்சையால் ,தன் மகனுக்கு “திலீபன்” என்று பெயரிட்டான். அது கொஞ்சம் உருமாறி திலீப் குமார் ஆனது தனிக்கதை. ”முன்னிணையாகிய அன்றிலின் மோகங்கொள் ஆணினைக் கொன்றனை பன்னெடுங்காலம் வாழ்கலை வாழ்கலை வேடனே” என்ற காண்டேகரின் வரிகள் இன்னும் நினைவலைகளில் மிதக்கிறது. பாரதியாரின்பால் கொண்ட காதலால் இரண்டாவது பெண் “கண்ணம்மா” ஆனாள். ”ஜோதி” என்ற மகளின் பெயருக்குக் கூட ஏதாவது காரணம் இருக்கும். தலைவர் ஜோதிபாசு அவர்கள் நினைவாகக்கூட வைத்திருக்கலாம். 


ரொம்ப காலத்துக்குப் பிறகு மதம் மாறி பெயர் மாற்றிக் கொண்டது நானாகத்தான் இருக்கும். திருமணத்தின் பொருட்டு கிறித்துவப் பெயர் ஏதாவது வைக்க வேண்டியிருந்தது. எனக்குப் பிடித்த பெயர் எதையாவது வைத்துக் கொள்ளும்படி எழில் கூறிவிட்டார்கள். எனக்கு நிறைய பெயர்கள் பரிச்சியம் இலாமல் இருந்தது. என்ன பெயர் தேர்வு செய்யலாம் என்று யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தது “ராஜ பார்வை” திரைப்படத்தின் நாயகி “நான்ஸி” தான். உரிய ஒப்புதலுடன் “நான்சி தாணு” ஆகிவிட்டேன்.  


ஈரோட்டில் நிறைய பேருக்கு என்னை நான்சி என்றுதான் தெரியும். இங்கு வந்த புதிதில் ”தாணு” என்ற பெயர் எனது கணவர் பெயர் என்று நினைத்தவர்கள் ஏராளம். கெஸட்டில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தபோது எப்படியோ இனிசியல் காணாமல் போய்விட்டது. அதனால் பாஸ்போர்ட் பெறுவதில் ஏக சிக்கல் வந்தது. எப்படியோ முதல் பெயர் இல்லாமல் ( First Name Unknown) என்ற பட்டத்துடனேயே பாஸ்போர்ட்டும் வாங்கி , எல்லா நாடுகளையும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்சி என்ற பெயர் மிகப் பிரபலமாக இருப்பதால் எல்லா ஏர்போர்ட்டிலும் எனக்கு சிக்கிரம் கிளியரன்ஸ் கிடைத்துவிடும். 


மகளுக்குப் பெயர் வைக்கும்போது ”ஆலீஸ்” என்று மாமியார் பெயரில் ஆரம்பித்தோம். ஒரு பைபிள் பெயர் சேர்க்க வேண்டுமென்று ”மரியா” சேர்த்தோம். ஆசைக்காக  ”ஜாஸ்மிதா” இணைந்து கொண்டது. அம்மாவைப் போலவே மகளுக்கும் இனிசியல் விடுபட்டுப் போனது. எந்த அப்ளிகேஷன் நிரப்பினாலும் , முழுப் பெயரும் கட்டங்களுக்குள் அடங்காமல் போய்விடும். அதனால் மகள் கடுப்பாகிப்போய் “ஜாஸ்மிதா” வை Surname ஆக மாற்றிக் கொண்டுவிட்டாள். ஆனாலும் குடும்பத்தில் எல்லோரும் அவளை அழைப்பது “ குட்டிம்மா”தான். 


இந்தத் தொந்தரவே வேண்டாமென்று மகனுக்கு “தாணு+எழில் சேர்த்து “தானியேல்” என்று ஒற்றைப் பெயராக வைத்தோம். அக்காவுக்கு மட்டும் மூணு பெயர் ,எனக்கு ஒண்ணுதானா என்று கேட்டு “ஜான்” என்ற பெயரை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுவான். 


இங்கு எல்லோரும் என்னை நான்சி என்றே கூப்பிட்டாலும், ஒரு சிலர் மட்டும் இன்னும் “தாணு’ என்றே வாய் நிறைய அழைப்பார்கள். திருமணத்திற்கு முன்பிருந்தே நண்பர்களாகியிருந்த பார்பரா, ராஜன் எல்லோரும் இன்னும் தாணு என்றே கூப்பிடுவாங்க. நெஞ்சில் நீங்கா நினைவுகளுடன் இருக்கும் அமரர்.தோழி நளினா , எப்பவுமே தாணுன்னுதான் கூப்பிடுவாங்க. 


 சமீபத்தில் கன்னியாகுமமரியில் நடந்த TvMC -  1977 Batch meet இல் காது நிறைய பழைய பெயரைக் கேட்டு மகிழ்ந்தாச்சு.  தாணாச்சி என்று எங்க வீட்டு வாண்டுகள் கூப்பிடும்போது நான்சியை விட தாணுவே பொருத்தமாகத் தெரிகிறது. தாணுஅக்கா, தாணுஅத்தை எல்லாம் தினமும் அலைபேசி மூலம் ஒலித்துக் கொண்டே இருக்கும். 


தாணுவிலிருந்து நான்சியாக உருமாற மிக முக்கிய காரணம் அமரர். ராஜீவ் காந்தியின் படுகொலைதான். அதில் முக்கிய கொலையாளியான  ”தனு” அசப்பில் பார்க்க என்னைப்போன்றே இருப்பாள். கேர் கட், பெயர் பொருத்தம், உருவப் பொருத்தம், எல்லாவற்றிற்கும் மேலாக தென் தமிழக பேச்சு வழக்கின் ஒற்றுமை எல்லாம் சேர்ந்து தனுவின் சொந்தக்காரி போலவே இந்த தாணு பார்க்கப் பட்டாள்.  


அந்த சமயத்தில்தான் DGO படிக்க ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்ந்தேன். கேலிக்காக என்னை அருகில் அழைத்து வயிற்றைத் தடவிப் பார்த்து பெல்ட் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதித்த மேடம்கள் கூட உண்டு. அதுவரை பெயர் மாற்றம் கல்யாணத்தின் பொருட்டு மட்டுமே இருந்தது. இந்த வம்பே வேண்டாமென்று

உடனடியாக கெஸட்டில் பதிவு பண்ணி நான்சி தாணுவாக முழுவதுமாக மாறிவிட்டேன். 


என்ன பெயர் வைச்சாலும், எவ்வளவு அழகான பெயராக இருந்தாலும், கூப்பிடுறவங்களைப் பொறுத்துதான் பெயர் விளங்கும். சிவகாமிநாதன் என்பது ரெண்டாவது அண்ணன் பெயர், ஆனால் அது செக்கன் என்ற பட்டப்பெயரால் மறந்தே போகப் பட்டுவிட்டது. அண்ணன் கிராம நிர்வாக அதிகரியாக திருச்செந்தூர் அருகில் வேலை பார்த்து வந்தான். எழிலின் தம்பியும் அவன் மனைவியும் ஒரு மனை பத்திரப் பதிவிற்காக தாலுகா ஆபீஸ் போயிருந்தார்கள். அண்ணன் அங்கு வேலை செய்ததால், அவனின் உதவியைப் பெறத் தேடியிருக்கிறார்கள். 


அங்கு வேலை செய்பவர்களிடம் Mr. செக்கன் VAO , எங்கே இருக்கிறார் எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த மனிதர் இவர்களை முறைத்துப் பார்க்க, மரியாதையின்றித் தவறுதலாக பெயரைச் சொல்லிவிட்டோம் என்று நினைத்து , ”காதலிக்க நேரமில்லை” சினிமாவில் 'அசோகரு உங்க மகரா' என பாலையா கேட்ட தொணியில் மறுபடியும் Mr. செக்கார் இருக்கிறாரா என்று நீட்டி முழக்கிக் கேட்டு திட்டு வாங்கிட்டு வந்திருக்கிறார்கள். செக்கண்ணன் என்றே அழைக்கக் கேட்டு அதுதான் அண்ணனின் உண்மையான பெயர் என்று நினைத்ததால் வந்த குழப்பம். 


பேச்சுக்குப் பேச்சு வீட்லே, பேரைக் கெடுத்திடாதேன்னு அப்பாக்கள் வசனம் பேசுவாங்க. இந்த மாதிரி பெயர் மாறிப் போறதைத் தான் சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ஒரு பெயர் படுத்தும் பாடு இவ்வளவு இருக்கு! இந்த வம்பே வேண்டாம்னு அடுத்த நூற்றாண்டில் பெயர்களே அற்றுப் போய் ,சீரியல் நம்பர் கொடுத்து கூப்பிட்டாலும் கூப்பிடலாம்.

அலை-57

 அலை-57

 “மருத்துவக் கண்காட்சி”

நாங்க இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மருத்துவக் கண்காட்சி (Medical Exhibition) நடைபெற்றது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக நடந்தது. சுத்துப்பத்து ஊர்களில் இருந்தெல்லாம் பொதுமக்கள் நிறையபேர் வந்து சென்றதால் திருவிழா போல் நடந்தது. . வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அனுபவங்களில் அந்த கண்காட்சி நாட்களும் அடக்கம். இன்று நினைத்தாலும் பசுமையான நினைவுகளைத் தந்த நாட்கள். 


ஒவ்வொரு வருட மாணவர்களையும் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பினார்கள்.

அனாடமி தியேட்டருக்கெல்லாம் எங்களுக்கு முந்தின வகுப்பு மக்களே சரியாக இருந்ததால் எங்களை முதல் வருட பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பிவிட்டார்கள். எங்களுக்கு அதில் கொஞ்சம் வருத்தம்தான். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் வரும்போது அனாடமி தியேட்டரில் காண்பிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. பிறவி ஊனமான குழந்தைகள், ஒட்டிப் பிறந்த குழந்தைகள் என ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் பொருட்கள் நிறைய இருக்கும். முதலாண்டு வகுப்புகள் வறட்டுதனமான பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரின்னுதான் இருக்கும் என்று  சோர்வாக ஏற்றுக்கொண்டோம்.


நானும் உஷாவும் கெமிஸ்ட்ரி லேப் போய்ச் சேர்ந்தோம். உஷா எப்பவுமே ரொம்ப ஜாலியாகவும் கோமாளித் தனமாகவும் இருப்பாள். அவளுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக இருக்கும். அதனால் ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். கண்காட்சி ஆரம்பிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டன.  கெமிஸ்ட்ரி லேபில் இருந்த டெஸ்க் , பெஞ்சுகள் எல்லாம் அகற்றப்பட்டவுடன் அந்த இடமே விசாலமான ஹாலாக மாறிவிட்டது. இடங்கள் வரையறுக்கப்பட்டு வெவ்வேறு ஸ்டால்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.


வாலண்டியர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து வேலை செய்ததால் சீக்கிரமே ஸ்டால்கள் ரெடியாக ஆரம்பித்தன. பரூக் சாருடன் சேர்ந்து மற்ற ஆசிரியர்களான பாபனாசம், செல்வசேகரன் மற்றும் சத்யமூர்த்தி  என்ற நால்வர் அணி அந்த இடத்தையே கனவுக் கோட்டையாக மாற்றிவிட்டார்கள். இந்த விஷயங்களுக்கு எல்லாம் நாம படிச்ச கெமிஸ்ட்ரி தான் அடிப்படை என்பதையே நம்ப முடியாத அளவுக்கு  வித விதமான ஸ்டால்கள் உருப்பெற்றன. ஒவ்வொரு பொருளை கொண்டு வைக்கும் போது எதற்கு என்றே தெரியாமல் வைப்போம். அது வடிவம் பெறும் போது ஆச்சரியத்துடன் மூக்கில் விரலை வைப்போம். 


பாபனாசம் சார்கிட்டே கொஞ்சம் பயம் கலந்த மரியாதை  இருக்கும். ஆனால் கண்டிப்பான அவரின் போக்குதான் எல்லோரையும் ஒழுங்கு படுத்தும். சத்யமூர்த்தி சார் அப்போதுதான் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வந்திருந்ததால், புதுவிதமான உத்திகளைக் கொண்டு சிறப்பான ஸ்டால்கள் நிறைய உருவாக்கிவிட்டார். கெமிஸ்ட்ரி லேபின் போரடிக்கும் தன்மையைப் போக்கி புதுமையான அம்சங்களைச் சேர்த்தது அவர்தான். அதனால் ஆரம்பத்தில் போரடிக்கும் என்று நினைத்திருந்த கெமிஸ்ட்ரி லேப் எங்களுக்கு சொர்க்கமாகிப் போனது.


எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் துணிக்கடை பொம்மை ஒன்று கொண்டுவந்து வைத்தார்கள். ஒருவேளை வரவேற்புக்காக இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் அதை ஸ்டாலுக்கு உள்ளேயே கொண்டு வைத்தபோதுதான் அதன் முக்கியம் புரிந்தது. கலக்கலான ஸ்டாலுக்கு சொந்தக்காரி அந்த அம்மா. “தொட்டால் சிவப்பது மலரா மங்கையா” என்பது அதன் பேனர். அதிலுள்ள வாலண்டியர்ஸ் மிகச் சிறப்பாக விளக்குவார்கள். ஆண்கள் தொட்டவுடன் அந்தப் பதுமையின் கன்னங்கள் சிவக்கும். பெண்கள் தொட்டால் ஒரு பாதிப்பும் இருக்காது. அதனால் அதைச் சுற்றி ஆண்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கும்.


பொம்மையின் காலடியில் ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் பொட்டசியம் பெர்மாங்கனேட் என்ற திரவம் நிரப்பப் பட்டிருக்கும். அதிலிருந்து ஒரு மெல்லிய குழாய் ஆடைகளின் ஊடே மறைத்து முதுகுப் புறமாகக் கொண்டு செல்லப்பட்டு காதின் பின் பக்கம் பொருத்தப்பட்டிருக்கும். ஆண்கள் தொடும்போது மட்டும் குடுவையைக் காலால் அமுக்குவார்கள். திரவம் பொம்மையின் கன்னங்களில் படர்ந்து சிவப்பாகும். பெண்கள் தொடும்போது அமுக்க மாட்டார்கள். அதில் நிற்கும் வாலண்டியர்ஸ் கேலி கிண்டல்களுடன் கன்னத்தைச் சிவக்க வைக்கும் போது ஏக தமாஷ்தான். 

 

நாங்கள் கன்னம் சிவக்கும் பொம்மையை ஒட்டியே இருந்தோம். ஒரு தட்டு நிறைய பூக்களாக அடுக்கப் பட்டிருக்கும். ஆண்கள் அதைத் தொட்டால் சிவக்கும் வண்ணம் பூக்களுக்கு இடையிலும் ட்யூப்கள் சொருகப்பட்டிருக்கும். வேண்டுமென்றே பொம்மையையும் பூக்களையும் மாறி மாறி தொட வைத்து விளையாட்டு காட்டுவோம். எப்பவும் ஆண்கள்  கூட்டம் அங்கேயே தங்கிவிடும். 


இன்னொரு பக்கம் கூரையிலிருந்து தண்ணீர் குழாய் தொங்கிக் கொண்டிருந்தது. அங்கே இங்கே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கண்காட்சிக்கு முன்னர் அனைத்தும் உருமாறி பெயர் மாறி அசத்தலாக மாறிவிட்டது. கூரையிலிருந்து தொங்கிய பைப்பிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. எங்கிருந்து அந்த குழாய்க்கு தண்ணீர் வருகிறதென்றே தெரியாது. அதன் ரகசியம் எப்படி என்று விளக்கிச் சொல்லப் பட்ட பின்புதான் புரிந்தது. 


அதே விஷயத்தை 40 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ”Believe it or Not” மியூஸியத்தில் பார்த்தபோது புளகாங்கிதப் பட்டுப்போனேன். பின்பக்கத்தின் பளீரொளி (FLASH-Back) கடல் கடந்து போனாலும் கல்லூரிக்கு அழைத்துப் போய்விட்டது. பொருட்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக அந்த “ஆகாய கங்கை” இருந்தது. 


மலரும்,மங்கையும், கங்கையும் எங்கள் அரங்கத்திற்கு மெருகு சேர்த்தன. இதெல்லாம் போக வித விதமான உப்புகளைக் கொண்டு கலர் கலராக நிறைய ஸ்டால்கள் இருந்தன. ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கேற்ப கூட்டத்தை மயக்கிக் கொண்டிருந்தனர்.

எங்க லேப் தவிர மற்ற அரங்குகளையும் அப்பப்போ போய் சுற்றி பார்த்துவிட்டு வருவோம். வகுப்பறையில் பார்த்திராத அரிய ஸ்பெசிமன்கள் (specimen) கூட அனாடமியில் வைக்கப்பட்டிருந்தன.


 மருத்துவ மாணவர்கள் என்பதால் எலும்புக் கூடுகளை வைத்து நிறைய அற்புதமான அரங்குகள் அமைத்திருந்தார்கள். உருகும் மனிதன் (MELTING MAN) அதில் ஒன்று. எழில் வகுப்புத் தோழர் மோகன் என்பவர் அதற்கு பொறுப்பாளராக இருந்ததாக ஞாபகம். அவர் பெயரே மந்திரவாதி மோகன் என்பதுதான். நிறைய வார்த்தை ஜாலங்களுடன் விளக்கமும் சொல்வதால் எப்போதும் அரங்கம் நிறைந்தே இருக்கும். 


நிலைக்கண்ணாடிகளைக் குறுக்கும் நெடுக்குமாக அமைத்து ,விளக்குகளை ஒளிர விட்டும் அணைத்தும் ஜாலம் செய்யும் நிகழ்ச்சி. ஒருபுறம் நின்றுகொண்டிருக்கும் மனிதன் படிப்படியாக உருகி, எலும்புக் கூடாவதுதான் க்ளைமாக்ஸ். பொதுமக்களுக்கு எலும்புக்கூடு பார்ப்பதே தனி சுவாரஸ்யம். அதிலும் மனிதன் உருகி எலும்புக் கூடாவது ரொம்ப பெரிய விஷயம். திறந்த வாய் மூடாமல் அதிசயமாகப் பார்த்தவர்கள் அநேகம். நாங்களும் அதில் உண்டு. எலும்புக்கூடு பழகியதுதான் என்றாலும் அந்த செய்முறை புதிது.


இன்னொரு அரங்கில் எலும்புக்கூடு நடனம் ( Skeleton Dance) இருந்தது. ரெண்டுமூணு எலும்புக் கூடுகள் இசைக்கேற்ப நடனமாடுவதைப் பார்த்தால் கல்லூரியில் இருக்கிறோமா கல்லறைத் தோட்டத்தில் இருக்கிறோமா என்றே சந்தேகம் வந்துவிடும். மயிர்க்கூச்செறியும் அளவு த்ரில்லாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகளின் அழுகுரல் இசையையும் மீறி ஒலிக்கும். 


அவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதுபோல் எலும்புக்கூடுகளின் திருமணம் (Skeleton Marriage) கீழ் தளத்தில் பயோ கெமிஸ்ட்ரி விரிவுரை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய அரங்கில் அத்திருமணம் அமைக்கப்பட்டிருந்த விதம் இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. தொழில் நுட்பம் அவ்வளவாக வளர்ந்திராத காலகட்டம். பொறியாளர்களோ டெக்னீஷியன்களோ இல்லாமல் மருத்துவ மாணவர்கள் மட்டுமே முயன்று வடிவமைத்திருந்தார்கள். Dr. ஜெயகர், பிராயன் சக்ரவர்த்தி, இன்னும் பெயர் மறந்துவிட்ட சில சீனியர்களின் அயராத உழைப்பில் அற்புதமாக நடந்தது. எங்க வகுப்பு ஆண்ட்ரூவைக்கூட அந்த அரங்கில்தான் பார்த்த மாதிரி நினைப்பு வருது.


கல்யாணப் பெண், மாப்பிள்ளை, புரோகிதர் எல்லோருமே எலும்புக் கூடுகள்தான்.மணவறை, அக்கினிக் குண்டம் எல்லாம் தத்ரூபமாக இருக்கும். குண்டத்தில் நெருப்பு எரிவது கூட அம்சமாக செய்திருந்தார்கள். அதிலும் க்ளைமாக்ஸில்  வில்லன் அரங்கத்தின் பின்னாலிருந்து பாய்ந்து வரும் காட்சி எங்களையே அலற வைத்திருக்கிறது. பார்வையாளர்களின் பெஞ்சுகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில் வாட்டமான இரும்புக் கம்பியில் தொங்க விடப்பட்டிருக்கும் வில்லன், சரியான சமயத்தில் அந்தக் கம்பியில் சறுக்கிக் கொண்டு வரும் சத்தமும் அசைவும் இப்போது நினைத்தாலும் திடுக்கிட வைக்கிறது. புரோகிதர் மந்திரம் சொல்ல பின்னணி இசை ஒலிப்பதிலிருந்து, தேங்காய் உடைக்கும்போது வரும் சத்தம் வரை ஒலி அமைப்புகள் அனைத்தும் சூப்பராக ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன.


அந்த சறுக்குக் கம்பியைக் கட்டிக் கொண்டிருக்கும் போது ஓரிரு முறை அந்த அரங்கினுள் எட்டிப் பார்த்திருக்கிறோம். ஆனால் காயலான் கடைபோல் கிடந்தது. கண்காட்சியின் போது கல்யாண வைபோகமாக மாறிவிட்டது. இது போன்ற சிறப்பு அரங்கங்களுக்கு இலவச அனுமதி கிடையாது. நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். நாங்கலெல்லாம் வாலண்டியர் அடையாள அட்டை போட்டிருந்ததால் எத்தனை தரம் வேண்டுமென்றாலும் பார்க்கலாம். எழிலும் அந்த அரங்கில்தான் இருந்தாங்களாம். பின்னால் சொல்லக் கேள்வி. தெரியாததால் கடலை போடும் வாய்ப்புகள் தப்பிவிட்டது -“வடை போச்சே”!!


எங்கள் கல்லூரியின் மூன்று தளங்களிலும் எல்லா அறைகளிலும் ஏதாவது ஒரு அரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சில போரடிக்கும், சில அறிவார்த்தமாக இருக்கும். ஆனாலும் கண்காட்சி பார்க்க வருபவர்கள் முழு அரங்குகளையும் ஒரு நாளில் பார்த்து முடிக்க முடியாது. எங்கள் கல்லூரியைச் சுற்றி ஏகப்பட்ட ஆர்ட்ஸ் கல்லூரிகள் உண்டு. சேவியர்ஸ், ஜான்ஸ், சதக்கதுல்லா கல்லூரி மாணவர்களின் கூட்டம் வரும்போது பெண்களிடையே ஏகமாய் சலசலப்பு இருக்கும். சாரா டக்கர் கல்லூரி, இக்னேஷியஸ் கான்வெண்ட் மாணவிகள் வரும்போது மாணவர்களிடையே அதிக உற்சாகம் வரும்.


கண்காட்சிக்கென சிறப்பு பேருந்துகள் எல்லாம் விட்டிருந்தார்கள். கிராமப்புற பள்ளிகளிலிருந்து வரும் மாணவ மாணவியர் திரும்பிப் போகும் போது கண்டிப்பாக மருத்துவர் ஆகணும்னு ஆசையைத் தூண்டும் அளவுக்குக் கண்காட்சி சிறப்பாக நடந்தது. எல்லார் வீட்லேயிருந்தும் உறவு முறைகள் வரும்போது, நாங்களும் அவங்ககூட சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவோம். எங்க ஸ்டாலை நண்பர்கள் யாராவது பார்த்துக்குவாங்க. எங்க அம்மா எங்க கல்லூரிக்கு வந்த ஒரே தரம் அந்த கண்காட்சிதான்.


நாட்கள் சிறகு கட்டி பறந்தது என்றால் மிகையாகாது. கூட்டம் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட நாட்கள் கடந்தும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று ஏதோ காரணத்தால் திடுதிப்பென்று கண்காட்சியை நிறுத்திவிட்டார்கள். விதவிதமாக வதந்திகளும் சுற்றிக் கொண்டிருந்தன. எதுவானாலும் எங்கள் சந்தோஷம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. ஆனால் அந்த நினைவுகளோ இன்றும் பசுமையாகத் தொடர்கிறது.

அலை-56

 அலை-56

”நான் சிரித்தால் தீபாவளி” 

 ஒவ்வொரு வருடமும் தீபாவளியோடு இணைந்த இனிமையான அல்லது மறக்க முடியாத நினைவுகள் ஏதாவது இருக்கும். ஆனால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு வந்த இரண்டாவது தீபாவளியும் மறக்க முடியாத நினைவுகளைத் தந்தது.


எங்கள் வகுப்புத் தோழி (நினைவில் வாழும்) ராமலக்ஷ்மிக்கு முதலாம் ஆண்டு முடியும்போதே திருமணமாகி இருந்தது. அவளது தாய் மாமாவைத்தான் திருமணம் செய்திருந்தார்கள். அவளைப் பார்க்க அவர் வரும்போதெல்லாம் நாங்களும் ஆஜராகி கலாய்ப்பது வழக்கம். நாங்கள் அனைவருமே அவரை மாமான்னுதான் கூப்பிடுவோம். 18 வயது முடிந்த உடனேயே நடந்த திருமணம். அவர் மதுரா கோட்ஸ் கம்பெனியில் மானேஜர் லெவலில் இருந்தார். ஸ்டடி ஹாலிடேஸில் அவள் விடுதியில் தங்கிப் படிக்கும்போதும் தவறாமல் ஆஜராகி விடுவார்.


நாங்கள் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த சமயத்தில் அவர்களது தலை தீபாவளி வந்தது. அவள் வகுப்புக்குள் நுழைந்ததிலிருந்து எல்லாருமாகச் சேர்ந்து கலாய்க்க வேண்டுமென்று ப்ளான் பண்ணி வைச்சிருந்தோம். அனாடமி லெக்சர் ஹாலில் தான் வகுப்புகள் நடக்கும்.  அவள் உள்ளே நுழைந்ததிலிருந்து கேலியும் கிண்டலுமாக களேபரப் படுத்திக் கொண்டு இருந்தோம்.


 எனது சத்தம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். “உன் தலையைப் பார்த்தாலே தெரிகிறது, தலை தீபாவளின்னு” கூவாத குறையாக கேலிகள் பறந்தன. அதற்குள் ஆசிரியர் வந்துவிடவே, மீதியை விடுதியில் வைத்து பார்த்துக்கலாம்னு அடங்கிவிட்டோம். 


வகுப்பு முடிந்ததும் அரட்டைகளுடன் வெளியே வந்தபோது, வகுப்புத் தோழன் தில்லை ”தாணு! இங்கே வா” என்று கூப்பிட்டான். அகர வரிசையில் தாணு, தில்லை இரண்டும் அடுத்தடுத்து வருவதால் எங்களுக்குள் கொஞ்சம் பரிச்சியம் உண்டு. ஏதோ பாடம் சம்பந்தமாகப் பேசப் போவதாக நினைத்து அருகில் சென்றேன். முகமெல்லாம் சிவந்து ருத்ர மூர்த்தியாகப் படபடவென்று பேச ஆரம்பித்துவிட்டான்.   "என்ன நினைச்சுகிட்டு இருக்கே? தலை தீபாவளியா? தலையைப் பார்த்தாலே தெரியுதேன்னு சொல்லுறே. உன் தலையை எடுத்துடுவேன். ஜாக்கிரதை” என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கத்தி திட்டுகிறான். 


எனக்குத் தலையும் புரியலை, காலும் புரியலை. வகுப்புத் தோழர் தோழியர் நிறைபேர் சுத்தி நின்றிருந்தார்கள். ரொம்ப அவமானமாகப் போயிடுச்சு. எங்க வகுப்பு பசங்களை நான் சட்டை பண்ணுவதே கிடையாது.அதுவும் தில்லை மாதிரி படிப்ஸ் கோஷ்டிகள் பக்கம் தலையைக்கூடத் திருப்ப மாட்டேன். அவனைப் பத்தி நான் எப்போ பேசினேன்னு யோசிச்சுப் பார்த்தேன்.


அப்புறம்தான் ராமலக்ஷ்மியை நாங்கள்  கேலி பண்ணிக் கொண்டிருந்ததை, தன்னைப் பண்ணியதாகத் தப்பர்த்தம் எடுத்திருக்கிறான் என்று புரிந்தது. அவனும் அன்றுதான் சலூனுக்குச் சென்று சிகை அலங்காரம் செய்து வந்திருக்கிறான். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி கேலி பண்ணுவதாகப் புரிந்து கொண்டிருக்கிறான். 

எனக்கும் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. யார் சலூனுக்கு போறாங்கன்னு பார்க்குற வேலை எங்களுக்குத் தேவையில்லாதது அது இதுன்னு  பதிலுக்கு நானும் கத்த அங்கே ஒரு பெரிய போர்க்காட்சியே அரங்கேறிவிட்டது.


 அனாடமி ப்ரஃபஸரின் அறை அருகில் நடந்த சண்டை என்பதால் உடனடியாக ஆசிரியர்களுக்கு செய்தி போய்,உடனேயே விசாரணைக் கமிஷன் அமைக்கப் பட்டது. ஹுசைன் சார் தான் எங்களை விசாரித்தார். நாங்களெல்லாம் அப்போது பெண் விடுதலை, புரட்சின்னு ஏகமாகப் பேசிகிட்டு அலையிற ஆட்கள். அதனால் ஒரு ஆண் என்னைத் தவறாகத் திட்டியதற்கு தோழிகளும் சேர்ந்து பொங்கி எழுந்துவிட்டோம். 

ஹுசேன் சார் பாடுதான் ரொம்பத் திண்டாட்டம் ஆகிவிட்டது. தில்லை வகுப்பின் முதல் மாணவன், நன்கு படிக்கக்கூடியவன். எந்த வம்புக்கும் போகாத ஆள். தவறான புரிதலால் என்னைத் திட்டியது அவன் தவறுதான் என்பது தெளிவாகத் தெரிந்ததால் எப்படி சமாளிப்பது என்று குழம்பிவிட்டார்.


நாங்களும் விடுறதா இல்லை. ஆண்பிள்ளை என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? நீ வா போ என்று ஒருமையில் பேசியது எப்படி? பதிலுக்கு நானும் அப்படி பேசியிருந்தால் எப்படி இருக்கும்? இந்த ஆண்களுக்கே ரொம்பத்தான் மிதப்பு. எப்பப் பார்த்தாலும் பெண்களெல்லாம் அவர்களைப் பற்றியே பேசுவதாக நினைப்பு. நாங்களெல்லாம் இவங்களைக் கண்டுக்குறதே இல்லை. எப்படி தலையை எடுத்துடுவேன்னு சொல்லலாம், என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்து போராட்டத்துக்கு ரெடியாகிவிட்டோம். சார்தான் தன்மையாகப் பேசி சமாதானப் படுத்தினார். 


ஆனால் அதன் பிறகு நானும் தில்லையும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். இன்றைக்கு வரை எனது வகுப்புத் தோழர்களில் எனக்கு மிகவும் நெருங்கிய தோழர் தில்லைதான். கலகத்திற்குப் பிறகு வரும் நட்பு நிலையானது. பிரிக்க முடியாதது.


சாதாரண எண்ணெய்க் குளியல் எப்படி ஒரு பிரச்னையை உண்டக்கி விட்டது. அதுக்குப் பிறகு யாருக்குக் கல்யாணம் ஆனாலும் தலை தீபாவளி வாழ்த்துக்கள் சொல்றதே இல்லை. எதுக்கு வம்பு. அன்னைக்கு முழுக்க விடுதியில் அனைவரும் கூடிக்கூடி இது பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். எப்படியாவது அந்த கோஷ்டிகளை மட்டம் தட்டணும்னு முடிவெடுத்துகிட்டோம். பிரசவ வைரக்கியம் மாதிரி கொஞ்ச நாள் கழிச்சு அது மறந்து போய்விட்டது தனிக்கதை. அனாடமி தியேட்டரில் நானும் தில்லையும் ஒரே மேஜையில் எதிர் எதிரே அமர்ந்து உடற்கூறு அறுவை செய்யும் போது இது போன்ற சின்னச் சின்ன சண்டைகளெல்லாம் மறந்தே போய்விட்டது.


அனாடமி தியேட்டரில் கற்றுக் கொண்ட பாடங்கள் அநேகம். முதல் முறை நுழையும் போது மூக்கை துளைத்த பிணவாடை நாட்கள் செல்லச் செல்ல பழகிப் போய்விட்டது. பார்மலின் நிரப்பப்பட்ட தொட்டியிலிருந்து எடுத்து வகுப்புகளுக்காக மேஜைகளில் சாத்தப்பட்டிருக்கும் CADAVERS ஐப் பார்த்து பயந்தவர்களும், வாந்தி எடுத்தவர்களும் பின் நாட்களில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியிருக்கிறார்கள். முதல் முதலில் SCALPEL  எடுத்து போட்ட கீறல் உயிரற்ற உடலின் உள்ளங் கையில்தான்.


 எனக்கு அனாடமி ரொம்ப பிடித்த பாடம். நரம்புகளும் ரத்த நாளங்களும் நமது உடம்பிலும் இப்படித்தானே  வளைந்து பிரிந்து செல்லும் என்பதை உணரும்போது பிரமிப்பாக இருக்கும்.

மொத்த வகுப்பையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்து விடுவார்கள். நாங்கள்  ‘C’ BATCH இல் வருவோம். அனாடமி மட்டும் எல்லோருக்கும் ஒருங்கிணைந்த வகுப்பு. காலையில் முதல் வகுப்பே அதுதான். வெள்ளை கோட் போட்டுக் கொண்டுதான் உள்ளே போக வேண்டும். அதை வாங்குவதற்கும், DISSECTION SET  வாங்குவதற்கும் அலப்பறை பண்ணி பெரிய படம் காட்டுவோம். ஏதோ OPEN HEART SURGERY  பண்ணப் போறது மாதிரி அலட்டல். ஆனால் கோட் போடாமல் போனால் நாமும் பிணவாடை வீசுவோம். முதலில் எல்லாம் தினமும் கோட் துவைக்க வேண்டும் போல் தோணும். அப்புறம் நாட் கணக்கில், வாரக் கணக்கில் துவைக்காமலே அதே கோட் போடப் பழகிவிடும்.


முதலில் உள்ளங் கையிலிருந்துதான் உடற்கூறு தொடங்கும். ஒரே உடம்பின் இரண்டு கைகளில் இரண்டு க்ரூப் இருப்போம். என்னுடன் சூரியகாந்தி, சொர்ணம், விசாலாட்சி ,விஜி, உஷா ஆகியோர் இருந்ததாக நியாபகம். ஒரு குறிப்பிட்ட பகுதியை உடற்கூறு செய்யுமாறு சொல்லியிருப்பார்கள். கன்னிங்காம் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றி செய்து முடித்துவிட்டு ஆசிரியரைக் கூப்பிட வேண்டும். ஹுசேன் சார், மணி சார், காஞ்சனா மேடம் மூவரும் மேற்பார்வை செய்து விளக்கம் சொல்லுவார்கள். 

அப்போதெல்லாம் கையுறை, முகக் கவசம் எதுவும் கிடையாது. வெறும் கையில் அறுக்க வேண்டும். உஷா சரியான கேடி. ஒருநாள் கூட கையால் bodyஐத் தொட்டிருக்க மாட்டாள். ஆனால் DISSECTION முடிந்ததும் சாரைக் கூப்பிட மட்டும் முதல் ஆளாகப் போயிடுவாள். ஹூசைன் சார் வந்தால் திட்டாமல் பொறுமையாகச் சொல்லித் தருவார். மணி சார் வந்தால் தெளிவாக சொல்லித் தருவார். காஞ்சனா மேடத்துக்கு ஏக டிமாண்ட்டாக இருக்கும். பசங்க ஓடி ஓடிப்போய் மேடத்தைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அனாடமி ப்ரொஃபஸர் எப்போதாவது வந்து மேலோட்டமாக பார்த்து செல்வார். 


அனாடமி தியேட்டர் நல்லா வெளிச்சமாகவும், உயர்ந்த மேற்கூரையுடனும் விசாலமாக இருக்கும். சுமார் ஒன்றரை வருடங்கள் அனாடமி வகுப்புகள் இருந்தது. மருத்துவப் படிப்பில் மிக நீண்ட காலம் தவறாமல் சென்ற ஒரே இடமும் அதுதான். ஒவ்வொரு அவயமாக அறுவை செய்து பார்க்கப் பார்க்க மருத்துவராகும் தகுதியும் கூடிக் கொண்டே வந்தது. இடையிடையே சின்னச் சின்ன குறும்புகளும் கிளு கிளு நிகழ்ச்சிகளும் நடக்கும். மார்பகப் பகுதி, பிறப்பு உறுப்பு பகுதிகளைக் கூறாயும் போது அது சம்பந்தப்பட்ட ஸ்பெஷல் ஜோக்குகளும் சபையில் அரங்கேறும். 


வகுப்பு முடிந்து வெளியில் வந்து கைகழுவும் போது பார்மலின் நாற்றம் கைகளை விட்டுப் போகவே போகாது. எத்தனை முறை சோப்பு போட்டாலும் கைகள் நாறிக் கொண்டே இருக்கும். மதிய சாப்பாடு சாப்பிடும் போது கூட அதன் வாசனைக் குமட்டலைத் தரும். ராகிங் சமயங்களில் அனாடமி தியேட்டரிலிருந்து உடலுறுப்புகள் எடுக்கப்பட்டு பயம் காட்ட உபயோகிக்கப் பட்டதாக சீனியர்கள் நிறைய கதைகள் வேறு சொல்லுவார்கள். அதனால் ஆரம்ப நாட்களில் கெட்ட கனவுகள் வந்து தூங்க விடாமல் பயம் காட்டும். கழிவறை செல்லக்கூட துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லும் அளவுக்கு மன பிராந்தி அதிகம் வரும். 


பயம், நாற்றம், அருவருப்பு எல்லாம் முதலில் இருந்தாலும் போகப் போக பழகிப் போய், கல்லூரி வாழ்க்கையில் மிகவும் பிடித்த இடங்களில் அனாடமி தியேட்டரும் ஒன்றாக மாறிப் போனது.


(வகுப்புத் தோழர்களை ஒருமையில் அழைத்திருப்பதைத் தவறாக நினைக்க வேண்டாம். 44 வருடங்களுக்கு முன்பு அறியாப் பருவத்தின் நிகழ்வுகளை அதே Feel உடன் சொல்லியிருக்கிறேன்)

அலை-55

 அலை-55

“நான்கு முதல் எண்பத்து நான்கு வரை”


ஏதோ சினிமா படத் தலைப்பு மாதிரி இருக்குதா?. எங்கள் குடும்ப கூடுகையின் கருத்தாக்கம்தான் இது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை எல்லாம் முடிந்த பிறகு நடந்த “முத்துக்கள்” குடும்பத்தின் ஆரவார பூஜை. நினைவலைகளில் மட்டுமே நீந்திக் கொண்டிருந்த என்னை நிகழ்வலைகளில் மூழ்க வைத்த ஆர்ப்பாட்டமான பூஜை. 


குடும்பத்தின் Zoom meeting களில் பேசிக் கொள்வது சந்தோஷமாக இருந்தாலும் நேரில் கூடிகொண்டாட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் ஏற்பட்டதால் நிகழ்ந்த இனிய கூடுகை.

லாக்-டவுண் ஓரளவு தளர்த்தப் பட்டதும் ஊர் சுற்ற எங்கு செல்லலாம் என்பதுதான் முதல் யோசனையாக வந்தது. அதையே ”மாத்தி யோசி”ன்னு உல்டா பண்ணிப் பார்த்தபோது பிள்ளையார் மாதிரி குடும்பத்தைச் சுற்றினால் உலகத்தையே சுற்றுவதற்குச் சமம் என்ற ஞானோதயம் வந்தது. அதன் பிறகு அதைச் செயலாக்க நினைத்தபோது தம்பி நானாவும் மகள் ஆலீஸும் அதைச் செதுக்கிக் காவியமாக்கிவிட்டார்கள்.

பூஜையை ஒட்டிய விடுமுறை நாட்கள் எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்பதால் அக்டோபர் 16 & 17 ஆம் தேதிகள் தேர்வு செய்யப்பட்டன. 


500 Pearls Family ( ஐநூற்று முத்துவின் வாரிசுகள்) ஒரு நூறையாவது எட்டிவிடும் முனைப்பில் இருப்பதால் எப்படியும் தேவையான கூட்டம் சேர்ந்துவிடும் என்பது நிச்சயம். அதனால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு கிடையாது. “குடும்பம்” க்ரூப்பில் ஒரு மெசேஜ், Zoom Meeting இல் எல்லோரும் கலந்துகொள்ளும் படி ஒரு அறிவிப்பு, அவ்வளவுதான். அந்த முயற்சிக்கே 52 பேர் வருகை தந்து அமர்க்களப் படுத்திவிட்டார்கள். பஸ், புகைவண்டி, கார் என கிடைத்த வாகனத்தில் ஏறிவந்து அட்டகாசப் படுத்திவிட்டார்கள். 


சனி , ஞாயிறுதான் மெயின் கூடுகை என்றாலும்  வாய்ப்பு உள்ளவர்களை முன்னதாகவே வரச் சொல்லியிருந்ததால் செக்கண்ணன் திங்கள் அன்றே வந்துவிட்டான். அண்ணனும் தம்பியும் பேத்திகளுடன் சென்னையிலிருந்து வந்த நேரத்திலேயே அக்காவும் மதினியும் மருமகனும் பேரனும் ஆறுமுகநேரியிலிருந்து வந்து இறங்கிவிட்டதால் வியாழன் மாலை முதலே வீடு களை கட்டத் தொடங்கிவிட்டது. எந்த விழாவுமே ஒரு ஸ்பெஷல் பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதால் எங்க வழக்கப்படி சீட்டுக் கச்சேரியுடன் ஆரம்பித்தது. அருமை நண்பர் சோமுவும் சேர்ந்து கொண்டதால்  திசைக்கு இருவராக அமர்ந்து எட்டுபேர்  நாக் -அவுட் போட்டதுதான் முதல் விளையாட்டு. நள்ளிரவில் ஆலீஸ் வந்தபிறகு விளையாட்டுகள் NON-STOP  கொண்டாட்டமாகத் தொடர்ந்தது தனிக்கதை.


வெள்ளிக் கிழமை அன்று அடுத்தடுத்து batches மதியம், இரவு என்று வந்திறங்கியதால் வீடு ஹவுஸ்-புல். எங்க வீட்டுக்குள்ளேயே double-decker, triple-decker  போட்டு உருண்டுக்கணும், யாரும் ஹோட்டலில் தங்கக் கூடாது என்று ஏற்கனவே சொல்லியிருந்ததால் வீடு நிறைந்த உறவுகளும் மனம் நிறைந்த சந்தோஷமும் தளும்பிக் கிடந்தது. கீழே படுக்க முடியாத அக்கா, மதினி எல்லோருக்கும் tape- கட்டில்(camp-cots); தரையில் படுக்க மெத்தைகள் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. நர்ஸிங் ஹோமிலும் உள் நோயாளிகள் இல்லாததால் சிலபல பேர்களை அங்கும் தங்க வைச்சிட்டோம். ரெண்டு குடும்பம் மட்டுமே ஹோட்டலுக்கு போனாங்க. அதிலும் குட்டி வாண்டுகள் எங்க கூடவே தங்கிடுச்சுங்க.


ஒவ்வொரு வேளைக்கும் நாம சொல்ற மெனுவை ருசியாக செய்து அனுப்பும் நல்ல மெஸ் கிடைத்தது. வீட்டில் நிறைய பேர் சைவம் என்பதால் மொத்தமும் சைவமே சொல்லிவிட்டோம். ஆப்பரேஷன்களுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழில் ஏதாவது அசைவம் செய்து வைத்து  அசத்திட்டாங்க. எழில் தாத்தாவின் கைவண்ணத்தைக் குறி வைத்து வந்த பேரப் பிள்ளைகளுக்கு ஏக சந்தோஷம். 


எனக்கு முழு நேரமும் organize பண்ணும் வேலைகள் இருந்து

கொண்டே இருந்ததால் விளையாட்டுகள் அனைத்தும் நானாவும் ஆலீஸுமே பார்த்துக் கொண்டார்கள். அதற்குரிய பொருட்கள், rules, print-outs, stationaries  எல்லாம் அவர்கள் இரண்டு பேருமே சேகரித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆலீஸும் ரோஹித்தும் ஒரு UNIT ஆக இணைந்து நடத்திய விளையாட்டுகளும் நிகழ்ச்சிகளும் பார்க்கப் பார்க்க மனநிறைவாக இருந்தது. நானாவுக்கு முத்துபாரதி துணைக்கு வர முடியாததால் laptop-உம் கையுமாகவே அலைந்து கொண்டிருந்தான். எல்லாவற்றையும் பக்காவாக பிரதி எடுத்து பிசிறின்றி நடத்தினான். 


பொடிசுகளெல்லாம் ஆலீஸையே சுற்றி வந்ததுபோல், YOUTH எல்லாம் டேனி கூட செட் ஆயிட்டாங்க. எண்பதுகளில் மூணுபேர், 60 வயது தாண்டியவர்கள் 6 பேர் இருந்தாலும் எல்லோரும் குழந்தைகளாக மாறிவிட்டார்கள். வயது வித்தியாசம் 4 முதல் 84 வயது வரை இருந்தாலும் எல்லோரும் ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடி மகிழ்ந்தது மிகச் சிறப்பு. தனிப்பட அழைக்காவிட்டாலும் க்ரூப்பில் வந்த அழைப்பை ஏற்று இணைந்த குடும்ப நண்பர்கள் ஜெயபாலன்,ப்ரேமா; ப்ரின்ஸ், சித்ரா; ஷீலா,ஜோ&ஜீவன் எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் அன்பு மழையில் நனைந்ததால் சளி பிடித்துக் கொண்டதாகக் கேள்வி.


வெள்ளிக்கிழமை முழுவதும் பன்னீர் செல்வம் பார்க்கில் சந்து சந்தாகச் சுற்றிப் பரிசுப் பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும் வாங்கியதே சின்ன பிக்னிக் மாதிரிதான் இருந்தது. சுமார் ரெண்டு வருடங்கள் கழித்து பழைய ஷாப்பிங் ஸ்டைலில் சுற்றித் திரிந்தோம். மழை வேறே அடிக்கடி பயம்காட்டி நனைத்துக் கொண்டிருந்தது. செக்கண்ணன் இருந்ததால் எல்லாம் சுலபமாக முடிந்தது. சனிக்கிழமை காலை ஆறுமணிக்கே தோட்டத்துக்கு கிளம்ப வேண்டும் என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டோம். அப்போதான் மழை வர்றதுக்குள்ளே எல்லா கேம்ஸும் நடத்த முடியும்னு விளக்கிச் சொன்னோம். 


சனிக்கிழமை காலை 7 மணி முதலே வாகனங்களின் அணிவகுப்பு டீச்சர்ஸ் காலனியில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டது. குட்டீஸ் எல்லாரும்கூட கரெக்ட்டாகக் கிளம்பிட்டாங்க. முந்தின நாட்களில் தோட்டம் சுத்தம் செய்து ,வாடகைச் சேர்கள் வாங்கிப் போட்டு, கார் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்து எல்லாம் பக்காவாக இருந்ததால் காலை சிற்றுண்டி முடிந்ததும் விளையாட்டுகள் ஆரம்பிப்பது சுலபமானது. 


லக்கி கார்னர் விளையாட்டில் குழந்தைகள் பிரிவும், பெரியவர்கள் பிரிவும் முடிந்த பின்பு சீனியர் சிட்டிசன்களுக்கும் ஒரு பிரிவு வைக்கலாமா, எல்லாம் முட்டி கழந்த கேஸுகள் ஆச்சுதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அத்தனை பாட்டீஸ் தாத்தாக்களும் வட்டத்தைச் சுற்றி ஆஜர் ஆயிட்டாங்க. அதிலும் ஒரு மாசத்துக்கு முன்புதான் Hip Replacement Surgery  பண்ணியிருந்த அக்காவும், நடக்கவே தடுமாறும் 80 வயசு மதினியும் முதல் ஆளாக வந்து நிக்கிறாங்க. பிறகென்ன இளவட்டங்களின் விசில் விண்ணைப் பிளக்க சூப்பராக ஆட்டம் நடந்தது. முதலாவதாக அவுட் ஆனது நான் தான். 


விதவிதமான விளையாட்டுகள் ( Arcade of Games) ஆங்காங்கே அரேன்ஜ் பண்ணப்பட்டிருந்தது. யார் வேணா எந்த கேம் வேண்டுமானாலும் விளையாடலாம். எல்லோரும் குறுக்கும் நெடுக்குமாக அங்குமிங்கும் நடந்துகிட்டு இருந்தாங்க.எங்க தோட்டம் மாதிரியே இல்லை, ஏதோ ரிசார்ட்டில் பிக்னிக் போயிருந்த மாதிரி இருந்தது. எல்லார் கழுத்திலும்  TAG மாட்டி அவ்வப்போது கிடைக்கும் பாயிண்ட்களைப் பதிவு பண்ண வாலண்டியர்ஸ் சுற்றிக் கொண்டே இருந்தாங்க. 


சிறார்களுக்கு ஆக்டிவ் ஆக விளையாட்டு நடக்கும் போது பெரியவர்களுக்கும் ஏதாவது ஒன்று side by side ஆக நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு விளையாட்டு பற்றியுமே நிறைய எழுதலாம், அவ்வளவு ருசிகரமாக இருந்தது. எனக்குதான் எதிலுமே பரிசு கிடைக்கலை. 


சூரிய பகவானும், வர்ண பகவானும் சரியான பொறாமை பிடிச்சவங்க. பிள்ளைகள் ஜாலியாக விளையாடுவது பிடிக்காதவங்க. பயங்கரமா வெயில் வந்துடுச்சு. அதனால் விளையாட்டுகளை ஓரம் கட்டிட்டு எல்லோரையும் தண்ணீர்த் தொட்டியில் குளிக்க அனுப்பிட்டோம். ”தண்ணித் தொட்டி தேடி வந்தது கண்ணுக்குட்டிங்க” மட்டுமல்ல காளைகளும் பசுக்களும் கூட .அநேகமா எல்லாருமே அந்த சந்தோஷக் குளியலில் பங்கெடுத்துக் கொண்டார்கள். 


எங்க தண்ணீர்த் தொட்டியின் மேல் புறத்தில் ஷவர் , ஒரு மூலையில் குற்றால அருவி டைப்பில் குழாய் , தண்ணீர் வடியும் இடத்தில் அருவி மாதிரி பிளவு என்று வித விதமான set-up இல் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருக்கும். கூச்சலும் கும்மாளமுமாக குளியல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த முறைதான் தொட்டியில் அதிக அளவு ஆட்கள் இருந்தார்கள், 30 பேருக்கும் மேல் இருந்தார்கள். 


எங்க வீட்டு இரத்தத்தின் இரத்தங்களுக்கு மன தைரியம் ஜாஸ்திதான். போலியோ கால் காரணமாக நடக்கவே தடுமறும் அக்கா மகள்தான் முதலில் தொட்டிக்குள் இறங்கியவள். அருவி போன்ற பிளவில் நாற்காலி போட்டு பெரியக்கா சம்பிரதாயமாக சோப்பு ஷாம்பூ எல்லாம் போட்டுக் குளித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் எப்போதும் வென்னீரிலேயே குளிக்கும் ஆஸ்துமாக்காரி சரசக்கா அப்படியே தண்ணீரில் பாய்ந்துவிட்டாள். சாதாரணமாகவே பொது இடங்களில் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்கும் வாலிபப் பெண்களெல்லாம் ஆளுக்கு முன்னாடி இறங்கி ஷவரில் இடம் பிடித்துக் கொண்டார்கள். 

குட்டீஸ் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. முன்னேற்பாடாக FLOATERS, ப்ளாஸ்டிக் பந்து எல்லாம் வாங்கிட்டு வந்திருந்தாங்க.


யாருமே சாப்பிடக் கூட வெளியே வர்றதாகத் தெரியலை. நாங்களே ஏதாவது பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தோம். அடுத்து கேம்ஸ் விளையாடும் மனநிலையும் யாருக்கும் இல்லை. தண்ணீரிலிருந்து எழுந்திரிக்கும் மனநிலையும் இல்லை. நல்ல வேளையாக கொஞ்சம் மழை பெய்ய ஆரம்பித்தது. வீட்லே போய் Indoor games நடத்தலாம் என்று சொல்லி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீடு நோக்கிய பயணம் ஆரம்பித்தது. 

வீட்டுக்கு வந்த பிறகும் ,குட்டீஸ் யாருக்கும் ரெஸ்ட் எடுக்கும் உத்தேசம் இல்லை. நானாவின் indoor quiz அப்படியே ஆரம்பிச்சுட்டாங்க. 


 எங்க வீட்டு ஹாலின் உட்புறம் மாடிக்கு செல்லும் படிக்கட்டு இருக்கும் .அதிலேயே பெண்கள் அனைவரும் காலரியில் உட்கார்ந்த மாதிரி இடம் பிடித்துக் கொண்டார்கள். குட்டீஸ் பெரியவர்கள் எல்லாரும் நானாவின் laptop முன்னாடி உட்கார்ந்துகிட்டாங்க. இடையிடையே நானா ஒரு கேள்வித்தாள் வேறே கொடுத்திட்டான். அதையெல்லாம் காப்பி அடிச்சு எழுதி முடிக்கிறதுக்குள்ளே எங்க வீட்டு நடன நாயகிகள் ஒப்பனையுடன் வந்திட்டாங்க. அப்புறம் ஒரே ஆட்டமும் பாட்டும் தான். கொஞ்சம் சுதாரிக்காட்டி விடிய விடிய ஆடுவாங்க போலிருக்கு. கட்டாயப்படுத்திதான் நடன நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர முடிஞ்சுது. 

நடனம் என்று பொதுவாகச் சொன்னாலும் குழந்தைகளின் திறமை, dedication எல்லாம் பெரியவர்களை மெய் மறக்க வைத்துவிட்டது. யார் அடுத்த பிரபுதேவான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொருத்தரும் திறமையாக ஆடினார்கள். ஆடை, ஒப்பனை எதிலும் குறை வைக்கவில்லை.


 ஒருவழியாக எல்லாரையும் settle பண்ணிட்டு நான், நானா, அலீஸ் மூணுபேரும் 

பரிசுகள் கொடுப்பது பற்றி பேச ஆரம்பித்தோம். முதலில் பாயிண்ட் ஸ்கோரிங் என்று சொன்ன என் தம்பியாண்டான் திடீர்னு முதல் பரிசு, ரெண்டாவது, சால்வை அது இதுன்னு list சொல்லிட்டான். நான் பொதுவாக குடும்பத்துக்கு ஒன்று என memento வாங்கி வைத்திருந்தேன். தனியா பரிசுகள் எதுவும் வாங்கி வைக்கவில்லை. ஆனாலும் பெரிய பிரச்னை இல்லை. ஆலீஸ் கல்யாணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள் நிறைய லாஃப்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அதையெல்லாம் எடுத்து இரவோடு இரவாக கிஃப்ட் கவர் சுற்றிவிட்டோம். நாங்களெல்லாம் யாரு? வெறும் கையிலேயே முழம் போடற ஆட்கள். விட்டுவிடுவோமா? தூள் கிளப்பிட்டோம்.


மறுநாளும் அதே மாதிரி தோட்டத்தில் கொஞ்சம் கேம்ஸ் ரொம்ப நேரம் குளியல் என்று ENJOY பண்ணிகிட்டாங்க. ”தோட்டத்து சமையல்” பாணியில் எழில் சிக்கன் பிரியாணி பண்ணினார்கள். அதற்கென ஸ்பெஷல் அடுப்பு, பாத்திரம் எல்லாம் சேகரித்துக் கொண்டார்கள். தேவையான பொருட்களையெல்லாம் யாருடைய தயவும் இல்லாமல் தானே கொண்டு வந்துட்டாங்க. என்னால் அவங்களுக்கு உதவி பண்ண நேரமே இல்லை. 3 கிலோ பிரியாணியை அரை மணி நேரத்தில் உதிர உதிர மணமாக எழில் செய்ததைப் பார்த்து எங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் மூக்கில் விரலை வைத்தார்கள்; ஆண்களெல்லாம் ரெசிபியை வாங்கி பாக்கெட்டில்  வைத்தார்கள். 


காரில் வந்தவர்கள் எல்லாம்  சாப்பாட்டுக்கு பின்னர் கிளம்புவதாக இருந்ததால் தொட்டியை விட்டு வெளியே வரும்படி சொன்னால் ஒரு நண்டும் கேட்கவே இல்லை. சாப்பாட்டுக்குப் பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்ததும். எல்லா குட்டிஸும் தொட்டிக்குள்ளே இருந்து ஓடி வந்திட்டாங்க.


 ஆலீஸ் எல்லாரையும் உட்கார வைத்து பேப்பர் பேனா கொடுத்து ஒரு கடிதம் எழுதச் சொன்னாள். எதிர்காலத்தைப் பற்றி என நினைக்கிறாங்க என்று அவங்களுக்கு அவங்களே கடிதம் எழுதணும்.அதுக்கு ஒரு மாடலும் கொடுத்தாள். பரிசுகள் காத்திருந்ததால் எல்லாரும் எழுதிக் கொடுத்திட்டாங்க. அதையெல்லாம் ஒரு இறுக்கமான காற்றுப் புகாத டப்பாவில் சேகரித்துக் கொண்டோம். ஏற்கனவே தோண்டப் பட்டிருக்கும் ஆழ்குழியில் அதைப் புதைத்து காலப் பெட்டகம் (TIME-CAPSULE) பண்ணுவதற்காகத்தான் அந்தக் கடிதம். 


பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. வந்திருந்த அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று முன்தினமே ஒழுங்கு பண்ணியிருந்ததால் எல்லாம் சுமுகமாக நடந்தது. அங்கிருந்து நேராக காலப் பெட்டகம் புதைக்கப் பட வேண்டிய இடத்துக்கு அனைவரும் படையெடுத்தோம். அங்கு அனைவரும் அடங்கிய க்ரூப் போட்டோ எடுக்கப்பட்டது. ரோஹித்தின் போலோராயிட் கேமராவில் க்ரூப் போட்டோ எடுத்து அதையும் அந்த டப்பாவினுள் போட்டாச்சு. 3 வருடங்கள் கழித்து அதைத் தோண்டியெடுக்கும் போது இந்த போட்டோவில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க ஏதுவாக அதையும் சேர்த்துக்கொண்டோம். அதைப் புதைக்கும் இடத்தை அனைவரும் பார்த்து வைத்துக் கொண்டோம். 


ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தார்கள். கார்கள் முதலாவதாக சென்றன. சென்னைக்கும் ஆறுமுகநேரிக்கும் இரவு பஸ் மற்றும் புகைவண்டி பயணத்துக்கு இறக்கிவிட ரெண்டு மூணு கார்களில் சென்றோம். அதிகாலையில் ஆலீஸ் ரோஹித் டேனி எல்லாரும் பெங்களூரு புறப்பட்டார்கள். எல்லோரும் சென்றபின் வீடு காலியாகி ஒரு வெறுமை தென்பட்டாலும் பெரியக்கா, தெய்வு அக்கா இருவரும் சில நாள் என்னுடன் தங்கிச் செல்ல இருப்பதால் ரொம்ப வெறுமையாகத் தெரியவில்லை.


”உறவுகள் தொடர்கதை”தான். மறுபடியும் கூடுகைகள் வரும். குதூகலமும் தொடரும்.

அலை-54

 அலை-54

”பயணங்கள் முடிவதில்லை”


வார இறுதி நாட்களில் ஊருக்கு ஓடிவிடுவதுதான் என் வாடிக்கை. அதனாலேயே விடுதியில் நடக்கும் நிறைய நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியாமலே போய்விடும். ஆனாலும் வாரத்துக்கு ஒருதரம் வீட்டு சாப்பாடு சாப்பிடாவிட்டால் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும். அம்மாவின் கைமணம் அப்படி.


ஊருக்குப் போவதும் அவ்வளவு ஈஸியான வேலையில்லை. 

எங்க ஊர் ஆறுமுகநேரி, திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில்தான் இருக்கிறது என்றாலும் நேரிடையாகச் செல்லும் பேருந்துகள் ரொம்பக் குறைவு. ஸ்ரீராம்பாப்புலர் என்று ஒரே ஒரு பேருந்து மட்டும்தான் எங்கள் ஊர் வழியாகச் செல்லும். மற்ற பேருந்துகள் எல்லாம் அம்மன்புரம் வழியாகவே செல்லும். ராம்பாப்புலரும் ஒரு நாளைக்கு ரெண்டு தரம் மட்டுமே செல்லும். அந்த வண்டியின் நேரக் கணக்கு கல்லூரி விடும் சமயத்துடன் ஒத்துப் போகாது. ராத்திரி எட்டரை வரைக்கும் காத்திருக்கணும். அதனால் ரெண்டு பஸ் மாத்திப் போறதுதான் ஈஸி. எங்க எல்லாருக்குமே அதுவே பழகிப் போயிடுச்சு. 


அம்மன்புரம் வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறினால் குரும்பூரில் இறங்கி வண்டி மாத்தணும். நாசரேத், சாத்தான்குளம் போன்ற ஊரிலிருந்து எங்க ஊருக்குச் செல்லும் வண்டிகளின் கனெக்க்ஷன் அங்கே கிடைத்துவிடும். அப்படி மாறி மாறிப் போகும்போது சில நாட்களில் சாயங்காலக் காட்சி சினிமாவுக்குக் கூட ஆஜராகிவிடுவேன்.


 நாசரேத்தில் இருந்து வரும் வண்டிக்கு “டப்பா” பஸ் என்றுதான் பெயர். உண்மையான பெயர் ஜெபமணி ட்ரான்ஸ்போர்ட் என்றாலும் டப்பா பஸ் என்று சொன்னால்தான் எல்லாருக்கும் புரியும். அதன் தோற்றத்தால் அந்தப் பெயர் வந்ததா அல்லது அது போடும் சத்தத்தால் வந்ததான்னு தெரியாது. மருத்துவக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் டப்பாவும் என்னுடனேயே பயணித்தது.


குரும்பூரில் வண்டி மாறிப் போவதில் இன்னும் ஒரு செளகரியம் இருந்தது. அம்மாவின் கடைக்குட்டி தங்கை பார்வதி சித்தி(பார்சித்தி)யின் வீடு பேருந்து நிறுத்தத்துக்கு எதிரேயே இருக்கும். திருநெல்வேலி பஸ்ஸில் இறங்கி டப்பா பஸ் வர்றதுக்குள்ளே ஓடிப்போய் சித்தி வீட்டில் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திடலாம். பஸ்ஸைத் தவற விட்டாலும் சித்தி வீட்டு வாரிசுகளுடன் பொழுது போக்கிவிட்டு அடுத்த பஸ் பிடிச்சுக்கலாம். செல்லமக்கா(செல்லம்மாள்) ராஜமக்கா(ராஜம்மாள்) எல்லாரும் புத்தகப் புழுக்கள் என்பதால் வீடு முழுக்க புத்தகங்களாகக் கிடக்கும். பொழுது போவதே தெரியாது. பருப்பே போடாமல் தேங்காய் அரைத்து ஊற்றி சித்தி செய்யும் வெள்ளக் குழம்பின் வாசம் இன்னும் மனதில் மணக்கிறது.


அம்மாவுடன் பிறந்த பத்துபேரில் பத்தாவது பார்வதி சித்தியின் வாரிசுகள்தான் எங்க எல்லோருக்கும் ரொம்ப நெருக்கம். சித்தப்பாவும் (தரங்கதாரா) கெமிக்கல் வேலை முடிந்ததும் சந்தக்கடை வீட்டை ஒரு விசிட் அடிச்சுட்டுதான் போவாங்க. 


திங்கள் கிழமை காலையில் திருநெல்வேலிக்குத் திரும்பிச் செல்ல நாராயணன் பேருந்துதான் வசதியாக இருக்கும். மயில்வாகனம் ட்ரான்ஸ்போர்ட் எதனால் நாராயணன் பஸ் ஆச்சுதோ தெரியாது. எங்கள் ஊரில் உள்ள தரங்கதாரா ஆலையின் பணியாளர்களின் வசதிக்காக அந்த வண்டி மட்டும் புன்னக்காயல் வரைக்கும் ஷண்டிங்க் சென்று திரும்பும். ஆலை நேரப்படி வரும் பஸ் என்பதால் “நாராயணன் பஸ் வந்தாச்சே இன்னும் வேலைக்குக் கிளம்பலையா” என்ற சத்தம் நிறைய வீடுகளில் கேட்கும். 


அந்த வண்டி புன்னக்காயல் போய் வரும் முன்னர் குளிச்சு கிளம்பினால் கல்லூரிக்குச் செல்ல சரியாக இருக்கும். டப்பா பஸ் மாதிரி இல்லாமல் இது கொஞ்சம் அலங்காரமானதாக இருக்கும். இருக்கை வசதிகளும் சுமாராக இருக்கும். எங்க ஊரிலிருந்தே கிளம்புவதால் உட்கார இடம் கிடைத்துவிடும். பள்ளிவாசல் நிறுத்தம்வரை போயிட்டால் உட்காரும் இடம் நிச்சயம்.

திருச்செந்தூர் ரோடில் கல்லூரிக்கு முன்னாலேயே இறங்கிக் கொள்ளலாம். பொடி நடையாக நடந்தால் விடுதி வந்துவிடும். வகுப்புக்கும் சரியான நேரத்துக்குப் போயிடலாம்.


முதல் வருடம் முழுவதும் இப்படியேதான் போனது. இரண்டாம் வருடத்திலிருந்து அனாடமி வகுப்புகள் சீக்கிரம் ஆரம்பித்ததால் நாராயணன் பஸ் கைநழுவிப் போனது. ஆனால் ஊருக்குப் போவதற்கோ, திரும்பி வருவதற்கோ ஜங்ஷன் வரை போனதே இல்லை. அநேகமாக எல்லா நாட்களும் உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே போவதுதான் வாடிக்கை. என்னைக்காவது ஒருநாள் உட்கார இடம் கிடைக்கும். ஆனாலும் அதுக்கும் சோதனை வந்திடும். எங்க வீட்டுக்கு ரொட்டிக்கடை ஸ்டாப்பில்தான் இறங்கணும். கொஞ்சம் அசந்துட்டா, பள்ளிவாசல் நிறுத்தத்துக்குப் போயிடும். பிறகு அங்கிருந்து லொங்கு லொங்குன்னு நடந்து வரணும். அதனாலே முந்தின ஸ்டாப்பிலேயே எந்திரிச்சு நிண்ணுக்கணும். 


இப்போ மாதிரி ஸ்டைலாக Back-pack எல்லாம் கிடையாது. ஜோல்னாப்பை அல்லது கொஞ்சம் பெரிய சைஸ் hand-bagதான் இருக்கும்,சில சமயம் வயர் கூடையும் கையில் தொங்கும்.நாம ஒரு பக்கம் சாய்ந்தால் அது ஒரு பக்கம் இழுக்கும். எங்க ஊர் ரோடுகள் பத்தி சொல்லவே வேண்டாம் “ வளைந்து நெளிந்து போகும் பாதை  மங்கை மோகக் கூந்தலோ” ன்னு பாடினவங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும். ரோலர் கோஸ்டர்லே போற மாதிரியே இருக்கும்.


பிரயாணம் எவ்வளவு எரிச்சலூட்டினாலும் வெளியே தெரியும் காட்சிகள் அதையெல்லாம் மறந்து போக வைத்துவிடும். பயணங்கள் முடியவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை அழகு வழி நெடுக இருக்கும்.

கல்லூரி வாசலில் ஏறியதும் எப்படியாவது முண்டியடித்து ஓட்டுநரின் பின் பக்கம் போய்விட்டால் வேடிக்கை பார்ப்பது சுலபமாக இருக்கும். ஓட்டுநர் பின்னாடி பொருத்தியிருக்கும் கம்பியில் சாய்ந்து கொண்டுதான் நிறைய நாட்கள் பயணம் செய்திருக்கிறேன்.


 தூத்துக்குடி, திருச்செந்தூர் வழிகள் கொஞ்ச தூரத்தில் பிரிந்து விலகிச் செல்ல ஆரம்பித்துவிடும்.அதன்பிறகு வரும்  ஒவ்வொரு மைல் கல்லுக்கும் ஒவ்வொரு  விஷயம் இருக்கும். கிருஷ்ணாபுரம்தான் முதலில் வரும் முக்கிய கிராமம். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே சுற்றுலாவாக வந்திருப்பதாலும் விசேஷமான கோவில் என்று கேள்விப் பட்டிருந்ததாலும் அதைக் கடந்து போகும் போதெல்லாம் கடைக்கண் பார்வை வீசாமல் சென்றதில்லை. அத்துவானக் காட்டில் ஒரு கோவில், அதன் கோபுரம், நாலைந்து தெருக்களுடன் கூடிய சின்ன ஊர். ரோட்டின் அருகில் ஒரு சிதிலமான கல் மண்டபம். அது எப்பொழுதும் பாழடைந்து இருள் சூழ்ந்து இருக்கும். ஆனாலும் ஸ்தல புராணத்தைப் பின்னாடி படித்தபோது விசேஷி்த்த ஸ்தலம்தான் என்பது புரிந்தது.


அடுத்து வரும் செய்துங்கநல்லூர் தாண்டும்போது இரண்டுபக்கமும் போர்வீரர்கள் மாதிரி நிற்கும் மரங்களின் கூட்டம் எப்போ கடந்து போனாலும் குளுமையாக இருக்கும். அதை ஒட்டி செல்லும் தென்கால் வாய்க்காலில் எப்போதும் அல்லிப்பூக்கள் மந்தகாசமாகச் சிரித்துக்கொண்டே இருக்கும். தமிரபரணியின் தொப்பு வாய்க்கால் என்பதால்  தண்ணீர் வற்றி  பார்த்ததில்லை. அதன் பின்புலமாகத் தெரியும் வல்லநாடு மலை கார்மேகம் சூழும் நாட்களில் ரொம்ப ரம்யமாகத் தெரியும்.

அதனைப் பார்த்து ரசித்து முடிப்பதற்குள் கருங்குளம் வந்துவிடும். கூடவே இடதுபுறம் தாமிரபரணி ஆறு தளிர் நடை போட்டுத் துணைக்கு வரும். 


ரோட்டின் இருபுறமும் நெருக்கமாக அடைத்துக் கொண்டிருக்கும் வாழைத் தோப்புகளைக் கடந்ததும் கண்ணில் தெரியும் காட்சியை வர்ணனை  செய்யவே முடியாது. பெரிய குளத்தின் அடுத்த கரையில் தெரியும் சின்ன குன்று, அதன்மேல் ஒரு கோவில். அஸ்தமன நேரத்தில் அந்த இடத்தைக் கடக்க நேர்ந்தால் உண்மையாகவே பொன் மாலைப் பொழுதாகவே இருக்கும்.இங்கும் அல்லிப்பூக்கள் ஆங்காங்கே மலர்ந்திருக்கும். வலதுபுறம் குளமும் குன்றும் கோவிலும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் போது இடப்புறம் தாமிரபரணியின் மணல் மேடுகளும் நீரோட்டமும் போட்டி போட்டு ரசிக்க வைக்கும் . 


ஸ்ரீவைகுண்டம் வரையிலும் ஆறும் நம்முடனேயே கூடவரும். எல்லா பேருந்துகளும் ஸ்ரீவை உள்ளே சென்றுதான் திரும்பும்.

ஸ்ரீவை பேருந்து நிலையத்தில் தேநீர் குடிக்க தாமதிக்கும் பத்து நிமிடங்கள்தான் ரொம்ப இம்சையான பொழுதுகள். திரும்பும் வழியில் இங்கும் அதே மாதிரி வல்லநாடு மலை, ஸ்ரீவை கோவில் கோபுரம், தாமிரபரணி ஆறு அதன் ஆற்றுப்பாலம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் தெரியும் சில வினாடிகள் ஆராதிக்கக் கூடியவை. ஒரு நாளும் தவற விட மாட்டேன். விடுமுறைக்கு ஸ்ரீவை அக்கா வீட்டுக்கு வரும்போது நீச்சல் பழகிய இடம் என்பதால் அந்த இடத்தின்மீது ரொம்பப் பாசமும் உண்டு.


 ஆழ்வார்திருநகரி ஊரில் வீடுகள் நெருக்கமாகவும் அடைசலாகவும் இருந்தாலும் எல்லா வீட்டிலும் கம்பி குத்திய தாழ்வாரங்கள் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு சித்தி வீடு கோவில் பக்கத்திலேயே இருந்தாலும் ஒருநாள் கூட அங்கு இறங்கினதில்லை. 


 கடையனோடை வரை ஆறும் கூடவே வரும். அது பிரிந்து போனது கூட ஒரு பொருட்டாகத் தெரியாதபடிக்கு காட்சிகள் சட்டென்று மாறிவிடும்.பச்சைப் பசேலென்ற  வயல் வெளிகள் பரந்து விரிந்து பாதையின் இருபுறமும் மரகதப் போர்வை போர்த்தது போல் இருக்கும். இடையிடையே புள்ளி வைத்ததுபோல் வெள்ளை நிறக் கொக்குகள் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும். அதை ரசித்து முடிப்பதற்குள் குரும்பூர் வந்து விடும்.


குரும்பூரில் பஸ் மாறி ஆறுமுகநேரிக்குப் போகும்போது நல்லூர் குளம் தரைதட்டி நிறைந்து வழியும். ரோடு ரொம்பக்  குறுகலாக வேறு  இருக்கும். எதிரே இன்னொரு பேருந்து வந்தால் நம்ம வண்டி குளத்துக்குள்ளே விழுந்திடுமோன்னு பயம்மா இருக்கும். ஆனாலும் நம்ம ஓட்டுநர்கள் திறமைசாலிகள்தான், ஒருநாளும் பஸ் குளத்துக்குள் குளிக்கப் போனதில்லை. குளத்துக்கு அப்பால் கெமிக்கல் கட்டிடங்கள் கூட்டம் கூட்டமாகத் தெரியும். அந்தி சாயும் நேரமாக இருந்தால் அதிலுள்ள விளக்குகளின் ஜொலிப்பு மத்தாப்பு மழைதான். 


ஒருவழியாக ஆறுமுகநேரி எல்லையில் தூத்துக்குடி ரோடில் ஏறும்போது உப்பளங்கள் வரிசை கட்டி கிடக்கும் உப்புக் குவியல்கள் வெள்ளை யானைகள்போல் படுத்திருக்கும். நிலாக்காலங்களில் அவையெல்லாம் நிஜ யானைகள் போலவே தோன்றும். நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ரயில்வே கேட் மூடாமலிருந்தால் மாலைக் காட்சி சினிமாவுக்குப் போயிடலாம். 


ரொட்டிக்கடை நிறுத்தத்தில் இறங்கும்போது, அப்பாவைப் பார்த்துவிடலாம்.  பெரும்பாலான நாட்கள் அப்பா பக்கத்து காப்பிக் கடையில்தான்  உட்கார்ந்திருப்பாங்க. சினிமாத் தனமான எமோஷனல் காட்சிகளெல்லாம் இருக்காது. யதார்த்தமான பார்வை அல்லது சின்ன தலையாட்டல்தான் . சனிக்கிழமைகளில் ஊருக்கு வந்தால் வாரச்சந்தையின் கசகசவென்ற கூட்டத்துக்கு நடுவே புகுந்து போகவேண்டும். ஏதாவது ஒரு மூலையிலிருந்து தெரிந்தவர்கள் யாராவது ‘தாணு! இப்போதான் வர்றியா” ன்னு கேட்பாங்க. ஆமாம் என்று சொல்லிவிட்டு நேரே அடுப்பங்கரைக்குள் ஐக்கியமாகிவிடுவேன். அங்குதான் அம்மா மதினி எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.


”கிழக்கே போகும் ரயில் “ திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குத் தினமும் சென்றுகொண்டுதான் இருக்கும். ஆனால் ஒருநாள்கூடப் புகை வண்டியில் ஊருக்கு வந்ததே இல்லை. பஸ்ஸில் வந்தால் கல்லூரி முன்னாடியே இறங்கிக் கொள்ளலாம். ரயில் செல்லும் வழித் தடத்தில் சுவையான காட்சிகள் அதிகம் இருக்காது. எல்லாத்துக்கும் மேலே எங்க ஊரில் நிலக்கரி எஞ்சின் தான். வெளியே எட்டிப் பார்த்தால் துண்டு துண்டாகக் கரித் துகள்கள் பறந்து வந்து கண்ணில் விழும். அதுக்குப் பயந்தே ரயிலில் போனதில்லை. 


பயணங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பார்வைகள்தான் மாறிக்கொண்டு வருகிறது. நின்று கொண்டு பயணித்த காலம் போய் படுக்கை வசதி கொண்ட பேருந்தை மனம் நாடுகிறது. பேருந்து பயணத்தை விட ரயில் பயணங்கள் சுகமாகத் தெரிகிறது. உள்ளூர் அழகை ஓரம் கட்டிவிட்டு அயல் நாட்டு அழகைத் துரத்திக் கொண்டிருக்கிறோம்.


பயணங்கள் தொடர்கதைதான்.

அலை-53

 அலை-53


பெண்களில் ”அழகு”- ”அழகில்லை” என்ற பிரிவினையே கிடையாது; ”அழகு, மிக அழகு” ன்னுதான் உண்டு என்று நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். எங்களுக்கும் அதுவே உகந்ததாகத் தோணுகிறது. ஆனால் இதெல்லாம் புரியாத “அறியாத வயதில்” அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைத்துக் கொண்டு நிறைய கோமாளித்தனம் பண்ணியிருக்கிறோம். 

கல்லூரியில் ஏதாவது விழா அறிவிக்கப்பட்டால் போதும் விடுதி அறைகளில் தூள் பறக்கும். 


என்ன கலர் புடவை கட்டுவது என்பதில்தான் முதல் அலசல் ஆரம்பிக்கும். பட்டுப் புடவை கட்டிக் கொள்வதுதான் அந்தக் காலங்களில் சிறப்பு. நம்ம கிட்டே உள்ள ப்ளவுஸ்களுக்கு யாரிடம் புடவை இருக்கிறது என்று அலசுவதுதான் முதல் ஸ்டெப். கல்லூரி நாட்களில் புடவைகளை இரவல் வாங்கிக் கட்டிக் கொள்வது ரொம்ப சாதரணமாக நடக்கக் கூடிய நிகழ்ச்சி. சுத்தம் சுகாதாரம், மாற்றிக் கட்டக் கூடாது என்று எந்தவிதமான கட்டுக்குள்ளும் அடங்காத வயசு. யார் புடவை யாரை அலங்கரிக்கிறது என்பது கடைசி வரை புரியாத புதிர்தான். 


நாங்களெல்லாம் குலுக்கிப்போட்டுப் புடவைகளை மாற்றிக் கொள்ளும்போது, சில touch me not கோஷ்டிகள் மட்டும் கொடுக்கவும் மாட்டாங்க, வாங்கிக்கவும் மாட்டாங்க. இன்னொரு கோஷ்டி, இதிலெல்லாம் என்ன இருக்குது, எப்பவும் போல் சிம்பிள் ஆக இருக்கலாம் என்று தத்துவம் பேசிகிட்டு இருப்பாங்க. அவங்களைப் பத்தியெல்லாம் விமர்சனம் பண்ணி நேரத்தை வீணடிக்க எங்களுக்கும் பொழுதிருக்காது. 


பிரத்தியோகமாக அலங்காரம் பண்ணிக் கொள்வதென்றால் ஏதோ பெரிய விஷயம் பண்ணப் போறோம்னு நினைச்சுக்கக் கூடாது. எண்ணெய்ப்பசை போகத் தலைக்குக் குளித்து, தலை கொள்ளாமல் பூ வைத்துக் கொள்வதுதான்  அலங்காரத்தின் உச்சம்.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது பாக்கெட் ஷாம்பூகூட இருந்ததாக நினைவில்லை. சீயக்காய் அல்லது வாசனை சோப்புதான் தலைக்குப் போடணும். அப்படி தலையைப் பஞ்சாகப் பறக்கவிட்டு நடக்கும் போது ஏதோ பாரதிராஜா படத்துக் கதாநாயகி மாதிரி பின்னணி இசையெல்லாம் கேட்கும். 


இப்போது மாதிரி பியூட்டி பார்லரும் வித விதமான க்ரீம்களும் அப்போது கிடையாது. முகத்துக்கு ஏதாவது பூசி அழகு படுத்தலாம்னு நினைச்சா எங்களுக்கு நினைவுக்கு வருவது மஞ்சள் தான். மஞ்சள் பூசிக் குளிச்ச முகத்தில் பவுடர் பூசும் போது முகத்துக்கே தனிக் களை வந்த மாதிரி இருக்கும். எங்கள் வகுப்புத் தோழி சிசிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை நிச்சயிக்கப்பட்டு அவள் உபயோகிக்க ஆரம்பித்தபோதுதான் Fair& Lovely  என்ற க்ரீம் உண்டு என்பதே எங்களுக்குத் தெரியும். 


“கண்ணுக்கு மை அழகு” தான் எங்கள் ஸ்பெஷல் மேக்கப். ஐடெக்ஸ் கண்மை தான் நிறைய பேர் பெட்டியில் இருக்கும். கண்மை பூசிக்கொள்ள சின்ன ப்ளாஸ்டிக் குச்சியும் அதனுள் இருக்கும்.  நானெல்லாம் ஒருநாள்கூட கண்ணுக்கு மை போடாமல் வெளியே சென்றதில்லை. மை போடாவிட்டால் அழுத மாதிரி தெரியும் என்பது எங்கள் எண்ணம். ஆள்காட்டி விரலில் கண்மையை நோண்டி எடுத்து கீழ் இமையில் லாவகமாகப் பூசுவதற்கு நிறைய திறமை வேண்டும். இல்லாவிட்டால் கண்ணைக் குத்தி கண்ணீருடன் அலைய வேண்டும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மை தீட்டிய விழிகளுடன் இருந்தது நினைவிருக்கிறது. விழாக்கள் சமயத்தில் மட்டும் மேல் இமையில் அந்த ப்ளாஸ்டிக் குச்சி வைத்து கோடு வரைந்து ஐ லைனர் போட்டுக் கொள்வோம். 


”பொட்டு வைத்த முகமோ”ன்னு  கேலி பண்ணப்பட்டாலும் நாங்க ஒவ்வொருத்தரும் வெவ்வேறு விதமா பொட்டு வைச்சுக்குவோம்.  நிறைய நேரங்களில் கண்மையே நெற்றிப் பொட்டாக மாறிவிடும். சில சமயங்களில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வோம். பொட்டு ரொம்ப நேரம் நெற்றியில் தங்கியிருக்கணும்னா ஆம்பர்ன்னு பசை மாதிரி ஒன்றை தடவி அதன் மேல் பொட்டு வைப்போம். சில சமயங்களில் வெறும் ஆம்பரே பொட்டாக மாறிவிடும்.

சாந்து பொட்டு என்பது கொஞ்சம் உயர்ந்த வகுப்பு. ரொம்ப முக்கியமான நேரங்களில் மட்டும்தான் உபயோகிப்போம். வட்ட வடிவம், கோபி மாதிரி, பிறை மாதிரி என்ன வடிவத்தில் வேணுமின்னாலும் வைச்சுக்கலாம். வெவ்வேறு கலர்களிலும் கிடைக்கும். ஆனால் மெரூன் தான் எனக்குப் பிடிச்ச கலர். இமைகளுக்கு நடுவில் சின்னதா பொட்டு வைச்சிட்டா கண் , மூக்கு நெற்றி எல்லாம் ஓரிடத்தில் குவிந்து முகத்திற்கு வடிவம் கொடுப்பதுபோல் ஒரு மாயை உருவாகும். சாந்து பொட்டிலிருந்து ஸ்டிக்கர் பொட்டு வரக்கூட மாமாங்கம் தாண்டியிருக்கும். 


கல்லூரி முடிக்கும் வரையிலும் காதுகளுக்கு பெரிய வளையங்கள் போட்டுக் கொள்வதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மிகப் பெரிய வளையம் போடும் நாட்களில், “பார்த்தும்மா!வளையத்துக்குள் கிளி வந்து உட்கார்ந்திடப் போகுது”ன்னு சீனியர்கள் கேலி பண்ணும் அளவுக்கு பெரிய வளையம் போடுவேன். காதுக்கு பின்னால் சில முடிக்கற்றைகளைக் குட்டையாக வெட்டிவிட்டுக் கொள்வது அப்போதைய பேஷன். அதுக்கு டெண்ட்டகிள்ஸ் என்று பெயர் வேறே வைச்சிருப்போம். உதட்டுச் சாயம் என்பதைப் பார்த்ததே இல்லை. அதெல்லாம் சினிமா நடிகைகளின் தனிச் சொத்து என்று நினைத்திருந்தோம். நெயில்பாலிஷ் போடுறது மட்டும் கரெக்டாக நடக்கும். 


இத்துனூண்டு அலங்காரத்துக்கே விடுதியின் வெராண்டா முழுவதும் களேபரமாக இருக்கும். சீப்பை ஒரு ரூமில் வைத்துவிட்டு மற்ற எல்லா ரூமில் தேடுபவர்கள்; குளிக்க பாத்ரூம் கிடைக்காமல் அவதிப்படுபவர்கள்; தலைவாரிவிடச் சொல்லி தோழியரை நச்சரிப்பவர்கள்; பூவை தழையத்தழைய சூட்டி விடச் சொல்லித் துரத்துபவர்கள் என்று ஏகப்பட்ட காட்சிகள் நடக்கும். அத்தனையும் முடித்து வானம்பாடிகள் மாதிரி எல்லோரும் விடுதி வாசலிலிருந்து கிளம்பும் போது காணக் கண் கோடி வேண்டும். முதல் வரியில் சொல்லப்பட்ட உவமை மிகப் பொருத்தமாக இருக்கும்.


சுடிதார் , பேண்ட் சர்ட், ஸ்கர்ட் போன்ற நவ நாகரீக உடையலங்காரம் எதுவுமே எங்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்திராத காலம் அது. எங்கும் எப்போதும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் புடவைதான். சாயங்காலம் விடுதியில் மாற்று உடுப்பாக போடுவதும் அநேகமாக பாவாடை தாவணியாகத்தான் இருக்கும், ஒரு சில நேரங்களில் நைட்டீ போடுவதுண்டு. என்னை மாதிரி அண்ணன் தம்பிகளைக் கொண்டவர்கள் அவர்களின் சட்டைகளைப் போட்டுக் கொள்வோம். 


எங்க நிலைமையே இப்படியென்றால் வகுப்புத் தோழர்களின் ஆடை அலங்காரம் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். “சுப்பிரமணியபுரம்” ஸ்டைல்தான். பெல்பாட்டம் பேண்ட் மிகப் பிரபலமாக இருந்த சமயம் அதுதான். சில சமயங்களில் பேண்ட்டின் அடிப்பாகம் மிகப் பெரிதாகி பாவாடை மாதிரி ஆகிவிடுவதும் உண்டு.அந்த மாதிரி நிறையபேர் சுத்திகிட்டு இருப்பாங்க. எங்கள் வகுப்பில்   நண்பர் ஒருவரின்  பெயரை “பாவாடை” என்றே மாற்றியிருந்தோம். மேல்வயிற்றுக்கு ஏற்றப்பட்ட பேண்ட்டில் பெல்ட் போட்டு பெல்பாட்டத்துடன் பவனி வருவார்கள் எங்கள் கல்லூரித் தோழர்கள். 


அந்தக்காலத்தில் போட்டோ எடுப்பது என்பதே பெரிய லக்ஸரி. எங்கள் யாரிடமும் கேமரா இருக்காது. விழாக்களின் போது பொதுவான போட்டோகிராபர் எடுப்பார். ஆனாலும் அதை ப்ரிண்ட் போடும் செலவு காரணமாக நிறைய போட்டோக்களை வாங்கியே இருக்க மாட்டோம். ஒவ்வொரு வருடம் முடியும் போதும் க்ரூப் போட்டோ எடுப்பாங்க. அது மட்டும் எப்படியாவது வாங்கிக் கொள்ளுவோம். நிறைய போட்டோக்கள் இருந்திருந்தால் அலை இன்னும் அமர்க்களமாக இருக்கும்.


நிறைய நினைவுகள் இப்படியே நிழல் படமாக நினைவுகளில் மட்டுமே உலா வருகிறது.