Friday, May 19, 2023

அலை-85

 அலை-85

“அன்றைய சினிமாவும் கல்லூரிக் காதலும்”
ரெண்டையுமே பிரிச்சுப் பார்க்க முடியுமான்னு தெரியலை. சினிமா பார்த்து பார்த்து கெட்டுப்போயி இந்தப் பிள்ளைங்க எல்லாம் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று எங்க காலத்து பெருசுங்க அடிக்கடி சலிச்சுப்பாங்க. கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் எங்க காலத்து காதல் சினிமாவோடு இரண்டறக் கலந்துதான் இருந்துச்சு.
நிரந்தர முதல்வர் மாதிரி , நித்திய பொழுதுபோக்கு எங்களுக்கெல்லாம் சினிமாதான். கல்லூரி நேரம் முடிந்ததும் சினிமா தியேட்டர் வாசலில்தான் பெரும்பான்மையான மாணவர் கூட்டம் இருக்கும். கல்லூரி நேரத்திலேயும்கூட திரை அரங்கிலேயே குடியிருந்த கோமகன்களும் உண்டு. திருநெல்வேலி மாதிரி சிறிய நகரங்களில் அடுத்தடுத்து நிமிர்ந்து நிற்கும் திரையரங்குகளில் கண்டதும் களித்ததும் ஏராளம்.
விமர்சனம் தெரியும் முன்பே படம் பார்த்தால்தான் தனி ஸ்வாரஸ்யம் என்று புதுப்படத்தின் முதல் காட்சிக்கே நெரிசலில் முண்டியடித்து பார்ப்போம். அந்தந்த சீசனில் வரும் படத்திற்கேற்ப கல்லூரிக் காதல்கள் பலவித பரிணாமங்களை எடுக்கும். பெல்பாட்டம் ஹீரோவைப் பார்த்து பாவாடை ரேஞ்சுக்கு புரளப் புரள பேண்ட் அணிந்து வந்து பெண்கள் விடுதி முன்பு பரேடு நட்த்தும் ஆண்கள் ஒருபுறம். நேர்வகிடு துறந்து சைடு வகிடுடன் சந்தோஷமாகத் திரியும் பெண்கள் மறுபுறம்.
சினிமாவால் நாங்கள் ஆட்கொள்ளப் பட்டோமா இல்லை எங்களால் சினிமா உலகம் தழைத்தோங்கியதா என்று பிரித்து சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னும் ஒரு சினிமா இருக்கும். சினிமாப்பாடல்களின் வரிகள் நிறைய காதல் சங்கமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜா, எம் எஸ் வி போன்றோரின் இன்னிசை; கண்ணதாசன் , வாலி போன்றோரின் கவிதை வரிகள் காதலுக்கு துணை போனது மட்டுமல்ல, தூதும் போனது.
’16 வயதினிலே’ ஆரம்பித்த காதல் கதைகள் ’அன்னக்கிளி’களை ’நினைத்தாலே இனிக்கும்’ அளவுக்கு மந்திரக்கோலாகக் கட்டிப் போட்டது. மயிலு, பாஞ்சாலி எல்லாம் அவரவர் மனசுக்குப் பிடித்தவர்களின் செல்லப் பெயர்களானது. கடுப்பேத்தும் காளையர்கள் பரட்டையாகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் சப்பாணியாகவும் கலாய்க்கப்பட்டார்கள். ஆங்காங்கே ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ சுஹாசினிகளும் உண்டு. மனதுக்குப் பிடித்த பெண் கண்டுகொள்ளாமலே இருந்தால் ‘ஒருதலை ராகம்’ ராசியில்லா ராஜாவாக முகம் முழுக்க தாடியுடன் அலையும் ஒரு கூட்டம். தாடி மழிக்கப்பட்டால் காதல் ஓகே ஆகிவிட்டதை உலகமே தெரிந்துகொள்ளும்.
தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்னு சொல்லுவாங்க. மத்தவங்களையெல்லாம் குமைக்கிறவங்களுக்குக் கூட தன் காதலை சொல்லும் போது ஏக பிரச்னையாகிவிடும். இப்போ மாதிரி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலமே single ஆ committed ஆன்னு சுலபமா சொல்லிட முடியாது. அந்த மாதிரி சமயத்தில் எல்லாம் ஏதாவது ஒரு சினிமாதான் உதவிக்கு வரும்.
’புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜ் சொல்ற மாதிரி “நீங்க இதயத்தைக் கொடுத்தா வாத்தியார் குங்குமம் கொடுப்பாராம்” என்று நேராகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த வசனத்தை ஜாடையாக மேற்கோள் காட்டலாம். ஓகே ஆகிறமாதிரி இருந்தால் ஏதாவது குறிப்பு கிடைக்கும், சந்தோஷமாக தாடி எடுத்துடலாம். முடியாத மாதிரி தெரிஞ்சாலும் ஒண்ணும் நடக்காத மாதிரி விலகிப் போயிடலாம். என்னே ஒரு அறிவாளிகள் இந்த 60’s Kids!!
”கிளிஞ்சல்கள்” படத்துலே மோகன் பைபிள் வரிகளுடன் “உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” ன்னு சொன்ன பிறகு மதநூல்களிலில் இருந்தும் புராணங்களில் இருந்தும் தீவிரமா மேற்கோள்களைத் தேடி அலைந்தவர்களும் உண்டு. எத்தனை பேர் அப்படி முயற்சி செய்து வெற்றி பெற்றார்கள் என்ற கணக்குதான் இல்லை. ’மரோ சரித்ரா’வுக்குப் பின் டேபிள் விளக்குகள் பட்ட பாடும், ‘இளமை ஊஞ்சலாடுகிறது’க்குப் பின் தொலைபேசி போட்ட சத்தங்களும் சூப்பரோ சூப்பர்.
இதெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்குத் தெரிந்த கதைகள்தான். ஆனால் எத்தனை ‘ஒருதலை ராகம்’ இருந்ததுன்னு யாருக்கும் தெரியாது. நம்மைச் சுத்தியே ரெண்டுமூணு பேராவது இருந்திருப்பாங்க. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று பெருமூச்சுக்களுடன் வருடங்களை முழுங்கிவிட்டு சொல்ல மறந்த கதைகளுடன் பெட்டியைக் கட்டினவர்களும் இருந்திருக்கலாம்.
ஜாதி, மதம், பொருளாதார பிரச்னைகளால் காதல் ஜோடிகளுக்கு ஏற்படும் பிரச்னை பற்றி ஏதாவது ஒரு படம் வந்துகொண்டேதான் இருக்கும். ’அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி பூணூலையும் சிலுவையையும் தாங்கிப் பிடித்த ஜோடிகளும் உண்டு, ’தப்புத் தாளங்கள்’ போன்று பிரிந்து சென்றவர்களும் உண்டு. இன்னும் இருபது முப்பது வருடங்களில் இந்த வேறுபாடுகளெல்லாம் நீங்கி, காதல் என்பது சுகமான அநுபவமாகிவிடும் என்று கனவு கண்டோம். ஆனால் நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னும் ஆவணக் கொலைகள் என்ற புது அத்தியாயத்துடன் நிலைமை கவலைக்குரியதாக மாறிவிட்டது,
கல்லூரிப் பருவத்தில் காதலிக்காமல் சென்றவர்கள் மிகக் குறைந்த விகிதத்திலேதான் இருந்திருப்பார்கள். அவர்களையெல்லாம் ‘புத்தகப் புழு’க்களாகவும், சமுதாய காவலர்களாகவும் உயர்ந்த அந்தஸ்து கொடுத்து நாலடி தள்ளியே வைச்சிடுவாங்க. அது மட்டுமில்லாமல் காதலில் சொதப்பல்கள் வரும்போது நடுநிலையில் நின்று அறிவுரைகள் வழங்க அவங்களைவிட்டா ஆள் கிடையாது. நானும்கூட ஒருதலை ராகத்தில் விழுந்து, அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்து, மறுபடியும் காதலில் சொதப்புவது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணும் நிலைமைக்கு வந்துவிட்டேன். இத்தனை பேருக்கும் கண்கண்ட தெய்வமாக இருந்த சினிமா என்னை மட்டும் எப்படி கைவிடும்.
சினிமா பைத்தியம் என்று சொல்லுமளவுக்கு வாரத்துக்கு ஏழு சினிமா பார்க்கக்கூடிய எனக்கு, இருபது வயதுக்குள் ரெண்டோ மூணோ சினிமா மட்டுமே பார்த்திருந்த Dr. எழில்வேந்தன் MBBS அவர்களைத் துணை சேர்த்தது விதி. மோதலில் ஆரம்பித்து நட்பாகத் தொடர்ந்து காதலாகப் பரிணமித்த சமயத்தில், அதை வெளிப்படுத்தத் தடுமாறியபோது ’பாலைவனச் சோலை’ படத்தின் ’நாம நட்புங்கறதை மீறி அடுத்த கட்டத்துக்கு எப்படிப் போனோம்னு தெரியலை” என்ற வசனம்தான் உதவிக்கு வந்தது.
கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற வேண்டிய சூழலில் அதற்குத் தோதாக ஒரு பெயர் தேர்ந்தெடுக்கும் வேளையில் சட்டென மனதுக்குள் வந்த பெயர் ‘ராஜ பார்வை’ நான்சி.
கல்லூரிக் கடலைகள், கலாய்ப்புகள், ஓடிப்போகும் காதல், உருப்படியான காதல், லவ் பெயிலியர், முறைப்படித் திருமணம், பதிவுத் திருமணம், திருட்டுக் கல்யாணம் என எத்தனை எத்தனையோ நிகழ்வுகளில் இரண்டறக் கலந்துவிட்ட அன்றைய சினிமாவுக்கு இணை இன்றைய FAST-FOOD type சினிமாக்களில் இல்லை

அலை-84

 அலை-84

“பாட்டி சொன்ன கதை”
கதை சொல்வதும் கதை கேட்பதும் “கதை விடுவதும்” எப்போதும் நம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் எப்போதோ ஒன்றிரண்டு கதைகள் நம்மை வசப்படுத்திவிடும். அப்படித்தான் எங்க அப்பா அம்மாவின் பரம்பரை பற்றி பேசப்பட்ட கதைகள் எங்களையும் அவ்வப்போது ஆட்கொண்டுவிடும்.
சின்ன வயசாக இருந்தபோது எங்க ஆச்சியைக் கேலி பண்ண “சோறு தின்னு விக்கிச் செத்த சுப்பையா பிள்ளை பொண்டாட்டிதானே நீ” என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுக்கும் அண்ணன் அக்காக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த ஆச்சியோட மூலமும் உறவுகளும் பற்றி அறிந்துகொள்ள முனைப்பெடுக்காத வயது அப்போது. ஆச்சியோட பெயர் தாணு அம்மாள்( எனக்கு ஆச்சி பெயர்தான்) என்பதால் சுசீந்திரம் பூர்விகம் என்பது தெரியும். எங்க ஆச்சிக்கு எங்க அம்மாவையும் சேர்த்து பத்து பிள்ளைகள். அதில் ஒரு தாய் மாமா குடும்பம் கேரளாவில்தான் ரொம்ப காலம் இருந்தார்கள். ஆச்சி கல்யாணம் ஆகி கொம்பன்குளம்(சாத்தான் குளம் அருகில்) வந்ததிலிருந்துதான் பாதைகள் மாறிவிட்டன.
தாத்தா இறந்த பிறகு ஆச்சி ஆறுமுகநேரியில் எங்க அம்மாவுடனேயே தங்கிவிட்டதால் கொம்பன்குளத்திற்கு எப்போதாவதுதான் போவோம். ரொம்ப சின்ன வயசில் ஆச்சியுடன் நடந்தே சென்ற ஞாபங்கள் De javu வாக நினைவில் இருக்கிறது. சாத்தான்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி மணிக்கணக்காக வறக் காட்டில் நடந்திருக்கிறோம். காட்டு வழியாகச் செல்லும் போது சொல்லப்படும் ஏகப்பட்ட சாமி vs பேய்க்கதைகள் அடிக்கடி எங்களைத் தூக்கத்தில் அலற விட்டதும் உண்டு. எங்க ஆச்சிக்கு பில்ட் அப் பண்ணி கதை சொல்வதில் ரொம்ப இஷ்டம். காதில் ஆடும் பாம்படமும் பல் இல்லாத பொக்கைவாயும் ரவிக்கை அணியாத வெள்ளைப் புடவையும் இன்னும் மனக்கண்ணில் பளிச்சென்று பதிந்திருக்கிறது.
அப்பாவின் பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள விஜயநாராயணம். அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் இறந்து போய்விட்டதால் குலதெய்வம் கோவிலில் நேர்ந்துகொண்டு அப்பாவுக்கு ஐநூற்று முத்து என்று பெயர் வைத்ததாக பாட்டி சொல்லிய கதைகளில் உலா வந்து கொண்டிருந்தது. ஆறுமுகநேரியில் உப்புத் தொழிலாளர் சங்கத்தில் கணக்கெழுதும் வேலைக்காக குடும்பமே இடம் பெயர்ந்து வந்துவிட்டதால் சிறு வயதில் விஜய நாராயணம் செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அப்பா சிங்கம் மாதிரி சிங்கிள் பையனாகப் போய்விட்டதால் வேறு தொடர்புகளும் ஏதும் இல்லை.
சமீப காலமாக குலதெய்வம் கோவில்களுக்குச் செல்லும் பேஷன் அதிகரித்திருப்பதின் காரணமாக அடுத்த தலைமுறை பசங்க இணையத்தில் பார்த்து அப்பா பெயருள்ள கோவிலுக்குப் போய்ப் படமெடுத்து status போட்டிருந்தார்கள். முத்துராமன், திலீப் குடும்பம் அடிக்கடி போய் வந்து கொண்டு இருந்தார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் ஆறுமுகநேரிக்குக் குடும்ப நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது நாமளும் விஜயநாராயணம், கொம்பன் குளம் போனால் என்ன என்று தோன்றியது. சகோதரி ஆசைப்பட்டால் உடனே நிறைவேற்றித்தரக்கூடிய நயினார் அண்ணனும் தம்பி நாராயணனும் உடனே ஓ.கே. சொல்லிவிட ரத சாரதியாக மருமகன் முத்துராமன் கார் ஓட்ட ரெடியாகிவிட்டான்.
அக்க்ஷயாவின் சடங்கு முடிந்து உளுந்தம் பருப்பு சாதம் சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டுமென்று சரசக்கா அன்புக் கட்டளையிட்டதால் எல்லாவற்றையும் பார்சல் சர்வீஸாக எடுத்துக் கொண்டோம். கொசுறாக இரண்டு பாட்டில்களில் நீர்மோர். திருச்செந்தூர் வழியாக சாத்தான்குளம் செல்வது நல்ல பாதை என்று சொன்னார்கள். அது பரமன்குறிச்சி வழியாக செல்லும் என்று தெரியாது. நண்பர் மரு.தம்பிராஜ் பீட்டர் மருத்துவமனை முன்னாடியேதான் போனோம். ஆனாலும் முன்னறிவிப்பு இன்றி நுழைந்து நோயாளிகளைக் கடுப்பேத்த வேண்டாம் என்று சத்தம் போடாமல் கடந்து போய்விட்டோம். வழி நெடுக ஏராளமாக முருங்கை மரம் பயிரிட்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தோம். வெளி ஊர்களுக்கு லாரியில் லோடுகள் செல்வதாக மருமகன் சொன்னான்.
முதலில் கொம்பன்குளத்தில் அம்மா வீட்டைப் பார்க்கப் போனோம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கால்நடையாக வந்த இடங்களைத் தோராயமாக கணக்கிட்டு பொருத்திப் பார்த்துக் கொண்டோம். இவ்ளோ தூரம் எப்படி நடந்தே வந்தோம் என்று மலைப்பாக இருந்தது.மிகப் பெரிய மாற்றங்கள் இன்றி எல்லாமே வறக் காடாகவே இருந்தது. ஊர் மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது. சிதிலமடைந்த வீடுகள் ஆங்காங்கே இருந்தன.ஆனாலும் எங்க அம்மா வீடு எதுவென கண்டுபிடிக்க முடியலை. சிறு வயது ஞாபகமாக இருந்த தோட்டமும் கிணறும் சிதிலமடைந்திருக்கலாம். விசாரிக்கலாம் என்றால் தடி ஊன்றும் வயதில் கிழடுகள் எதுவும் கண்ணில் படவில்லை.
மாமா பெயரில் இருந்த கேத்திரபால சாமி கோவிலும் சிவன் கோவிலும் அப்படியே இருந்தன போலும். நேரமின்மையால் கோவிலுக்குள் செல்லவில்லை. ஒருவேளை கிராம நிர்வாகியாக இருந்த செக்கண்ணன் வந்திருந்தால் கண்டு பிடிச்சிருக்கலாம். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து அப்பா ஊரான விஜயநாராயணம் சென்றோம். எல்லா ஊரும் அருகருகேதான் இருந்தன. முனைஞ்சிபட்டி, கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் எல்லாம் எட்டிப் பார்க்கும் தூரத்தில் தான் இருந்தது. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்புக் கால்வாய்கள் அடிக்கடி குறுக்கிட்டன. சீக்கிரமே வேலைகள் முடிந்து தண்ணீர் வந்துவிடுமாம்.
சாலையோரம் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி உளுந்தம்பருப்பு சோறும் எள்ளுத் துவையலும் அப்பளத்துடன் சேர்த்து ஒரு அடி அடித்தோம். மோர் சாதம் வெயிலுக்கு இதமாக இருந்தது. கருவாட்டு குழம்புதான் இதற்கு சரியான தோஸ்து என்று அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தான். அப்பா ஊரில் பழைய ரைஸ் மில்லும் அதற்கு எதிரே சாஸ்தா பீடமும் இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். அது ரெண்டும் பார்த்தோம், ஆனால் சொந்த பந்தங்கள் வீடோ தெருவோ தெரியவில்லை. நேராக அப்பா பெயர் கொண்ட குல தெய்வம் கோவிலுக்கு சென்றோம். அன்று பங்குனி உத்திரம் என்பதால் நிறைய பேர் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
அது ”ஐநூற்று மங்கை” என்ற பெயர் கொண்ட அம்மன் கோவிலாக இருந்தது. பெயர்ப் பலகை முன் நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். வரலாறு முக்கியமாச்சே, நாங்களும் status போடவேண்டுமே! ஆனாலும் ஐநூற்று மங்கை என்ற பெயர் வித்தியாசமாகத் தெரிந்ததால் அது குறித்து விவாதித்துக் கொண்டோம். கோவிலின் எதிரே பெரிய தெப்பக்குளம் ஒன்று இருந்தது. அந்த கோடையிலும் அடிப்பாகத்தில் கணிசமான அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.
நயினார் அண்ணன் அந்த பெயர்க் காரணம் குறித்து எப்போதோ படித்திருந்ததை நினைவு கூர்ந்தான். அந்தத் தெப்பக்குளம் ஒரு நீரூற்று எனவும் அதன் கரையில் இருப்பது ”ஐயன் ஊற்று சாஸ்தா” என்றும் , பெயர் திரிந்து ஐநூற்று என்றானதாகவும் கூறினான். அம்மன் கோவில் அதன் தொடர்புடையதால் ஐநூற்று மங்கை என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொன்னான். கீழடி ஆராய்ச்சியை விட எங்கள் வரலாற்று ஆராய்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது. சென்னை செல்ல வேண்டிய புகை வண்டியைப் பிடிக்க வேண்டி இருந்ததால் மேற்கொண்டு ஆராய்ச்சியில் இறங்காமல் நெல்லை நோக்கிப் பயணித்தோம்.
நாங்கள் கண்ட கேட்ட விஷயங்கள் உண்மையானவைகளா இட்டுக் கட்டப் பட்டவையா என்பதைச் சொல்ல வீட்டில் ரெண்டே ரெண்டு பெரிய தலைகள்தான் இருக்கிறது, மரகதம் அக்காவும் தெய்வு அக்காவும். தனித்தனியாகக் கேட்டால் ரெண்டுபேரும் மணிரத்னம் ஸ்டைலிலும் பாரதிராஜா ஸ்டைலிலும் ரெண்டு கதை சொல்லுவாங்க, ரெண்டுபேரும் பாட்டிகள் அல்லவா? ரெண்டுபேரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். பாட்டிகள் சொல்லும் கதை கேட்க நாங்க ரெடியாகிவிட்டோம்

அலை-83

 அலை-83

“சங்கம் கண்ட சங்கமம்”
ஈரோடு மகப்பேறு மருத்துவ சங்கத்தின் தலைவியாகப் பொறுப்பேற்று இரண்டேகால் வருடங்கள் ஓடிப்போய்விட்டது. ஒருவழியாக இந்த வாரம் அடுத்த அணியிடம் பொறுப்பை ஒப்படைத்தாகிவிட்டது. இனிமேல் நான் பொறுப்பற்ற தலைவியாக சுற்றலாம். இதுவரை எத்தனையோ சங்கங்கள், அணிகள், குழுக்களுக்கு தலைவியாக இருந்து எண்ணற்ற விருதுகளும் வாங்கியாச்சு. ஆனாலும் எங்கள் மகப்பேறு சங்கத்தின் தலைவியாக இருந்தது அருமையான காலம், நான் ரசித்து மகிழ்ந்த காலமும்கூட. தாய்வீட்டில் இருந்தது போன்ற அநுபவம்.
எந்த சங்கத்தில் இருந்தாலும் அதிகார அரசியல், நிதி மேலாண்மை, நாற்காலி சண்டை என ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். ஆனால் எங்கள் சங்கத்தில் அதுமாதிரி எதுவும் வருவதில்லை. பதவி வேண்டுமென்று யாராவது நினைக்கும் முன்பே அவர்களை அந்த நாற்காலியில் அமர வைத்து வாழ்த்தி அழகு பார்ப்போம். தனிபட்ட முடிவுகளே இல்லாமல் குழுவாகவே இணைந்து முடிவுகள் எடுக்கும் சிறந்த மாண்பு உண்டு. பணத் தேவைகள் ஏற்பட்டால் தாராளமாக உதவ ஓடிவரும் நல்ல உள்ளங்கள் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய் அசையா சொத்துக்களே சேர்ப்பதில்லை. அந்தந்த குழுவின் வருமானத்தை அந்த கால கட்டத்திலேயே செலவு செய்து பண முறைகேடு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் செய்துவிடுவோம்.
இவ்வளவு அழகான சங்கமாக இருப்பதால்தான் தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாமல் அனைத்திந்திய அளவிலும் எங்கள் சங்கம் சிறப்பாகப் பேசப் படுகிறது.
எனது பதவிக்காலத்தில் ஒருவருடம் கொரோனா காலமாகப் போய்விட்டதால் பெரிய அளவில் அறிவியல் அமர்வுகள் செய்ய முடியவில்லை. ஜூம் மீட்டிங்குகளும் வலைப்பக்கங்களுமாகவே போய்விட்டது. எப்படியோ கிடைத்த இடைவெளிகளில் இரண்டு நடைப்பயணங்களும் ஒரு வெளியூர் பயணமும் நடத்திவிட்டோம்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு ஒருமுறையும், சித்தோட்டில் உள்ள எங்கள் தோட்டத்திற்கு ஒரு முறையும் சென்ற நடைப் பயணங்கள் இன்றளவும் பசுமையான நினைவுகளாக இருக்கிறது. மகுடம் வைத்ததுபோல் கன்யாகுமரிக்கு சென்ற பயணம் (ஏற்கனவே குமரி அலை வந்துவிட்டது).
இதையெல்லாம் விட தனித்துவமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அப்போதுதான் சிம்பு நடித்த “மாநாடு” படத் தலைப்பு சின்ன பொறியைத் தூவிச் சென்றது. எங்கள் மகப்பேறு சங்கத்தில் அதுவரை பெரிய அளவில் மாநாடு எதுவும் நடத்தியதில்லை. நாமளும் ஒரு மாநாடு நடத்திடலாம் என ஆசை துளிர் விட்டது. பெரிய முடிவுகள் எதுவானாலும் எங்கள் நிர்வாகக்குழுவில் ஆலோசித்துதான் எடுப்போம். மாநாடு நடத்துவது பற்றி முன்மொழிவு செய்ததும் எல்லோரும் ஒருங்கிணைந்து சம்மதம் சொல்லிவிட்டார்கள். ஆனால் கையில் தம்படி கிடையாது, எப்படி பண்ணப்போகிறோம், முடியுமா என்ற குழப்பம் எதுவுமே வரவில்லை. எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மேலுள்ள அதீத நம்பிக்கைதான் எங்களை முழுவதும் வழி நடத்தியது. எங்களுக்கு கிடைத்த செயலாளர் மரு. பூர்ணிமா அரிய பொக்கிஷம். முடியுமா என்று நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டிய தேவதை.
மாநாடுக்கு நாள் முடிவு பண்ணுவது தான் பெரிய பிரச்னையாக இருந்தது. இடையில் குறுக்கிட்ட கிறிஸ்த்துமஸ், புது வருடம், பொங்கல் விடுமுறைகள், கொல்கத்தா மாநாடு எல்லாம் முடித்து பிப்ரவரி இரண்டாம் வாரம் 11 & 12 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என முடிவு செய்து கொண்டோம். வீட்டு விசேஷங்களுக்கு நாள் குறிப்பதைவிட ரொம்ப மெனக்கெட்டு அந்த வாரத்தைத் தேர்வு செய்தோம். தை மாதமாக இருந்தாலும் தேய்பிறை முகூர்த்தம் என்பதால் நிறைய கல்யாணங்கள் இருக்காது என்பதால் தைரியமாக முடிவு செய்துவிட்டோம். முகூர்த்தநாளாக இருந்தால் மண்டபம் கிடைப்பது கடினம், மக்கள் வருவதும் சிரமம்.
அதன்பிறகு இடம் தேர்வு செய்தது, பணம் சேகரிக்கும் வழிமுறைகளை கைக்கொண்டது, ஆதரவாளர்களைத் திரட்டியது என ஏகப்பட்ட விஷயங்கள் ஒரே நேரத்தில் பக்கம் பக்கமாக நடந்தது. இதையெல்லாம் செய்துமுடிக்க ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கினோம். அனைத்து வேலைகளும் தரம் பிரிந்து குழுக்களிடம் ஒப்படைத்துவிட்டோம். யாருடைய தலையீடும் இன்றி அவர்களே பொறுப்பெடுத்து வேலைகளைத் தொடரும் வண்ணம் ஏற்பாடும் செய்துவிட்டோம். ஒருநாள் மாநாடு என ஆரம்பித்து ஒன்றரை நாளாக விரிவுபடுத்தி கடைசியாக இரண்டு நாட்கள் என்று முடிவாகிவிட்டது.
முதல் நாள் சனிக்கிழமை காலை தேசிய கூட்டமைப்பின் பயிற்சித் திட்டமான “ மானியாத்தா ” செவிலியர் கருத்தரங்கம்; மதியம் மகப்பேறு மருத்துவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்; சாயங்காலம் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் ;இரண்டாம் நாள் சொற்பொழிவுகள்; அறிவியல் அமர்வுகள் என இரண்டு நாட்களும் நிகழ்சிகள் நிரம்பி வழிந்தன. பேச்சாளர்களைத் தேர்வு செய்வது, அழைப்பிதழ் அடிப்பது, அரங்கம் அமைப்பது, பங்கேற்பவர்களைப் பதிவு செய்வது,பேச்சாளர்களுக்கு வாகனம், தங்குமிடம் என ஒவ்வொரு வேலையையும் அந்தந்த குழுவினரே பொறுப்பெடுத்து செய்து கொண்டார்கள்.
எங்களது மாநில கூட்டமைப்பு சமீபத்தில்தான் உருவாக்கப் பட்டிருந்தது. அதை மேன்பைப் படுத்தும் விதமாக அதன் தலைவியும் செயலாளரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள். தேசிய கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் சிறப்பு பேச்சாளர்களாக வர சம்மதித்தார்கள். எங்கள் மாநாடு தேசிய அளவில் பேசப்படவேண்டும் என்பதால் அழகான விழா மலர் வெளியீடு இருந்தது. தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர்களுக்கான வினாடி-வினா(QUIZ) போட்டி இரண்டு சுற்றுகள் முடித்து இறுதிப் போட்டிகள் மாநாடு அன்று முடிவாகியிருந்தது.
எல்லாம் கூடிவந்து கொண்டிருக்கும்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப் 27 என அறிவுப்பு வந்துவிட்டது. எங்கள் மாநாடு நடக்கும் இடமும் கிழக்குத் தொகுதியிலேயே அமைந்துவிட்டது. சில அரசு விழாக்களுக்குக் கூட தடை போடப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். எல்லா ஏற்பாடுகளும் ஒழுங்கு படுத்தப்பட்டு முன்பணம் கொடுத்தாச்சு. ஆனாலும் இதை “தொடர் மருத்துவக் கல்வி” வகையில் சேர்த்துக் கொள்வார்கள், அதனால் தடை வராது என சில நண்பர்கள் உறுதி அளித்ததால் கொஞ்சம் நிம்மதி. எதற்கும் எச்சரிக்கையாக இருப்போம் என்று சாலைகளில் கட்டப்பட வேண்டிய ஃப்ளக்ஸ் , பேனர்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டோம்.
இரண்டு நாட்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் அற்புதமாக அரங்கேறி EROOGCON2023 வெற்றி மாநாடு ஆகிவிட்டது. செவிலியர் கருத்தரங்கம் நிரம்பி வழிந்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்ததென்று சொல்லி நிறையபேர் எங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள் . மருத்துவர்கள் பயிலரங்கம் 50 பேருக்கு மட்டுமென்று கட்டுப்படுத்தியும் 90 பேருக்குமேல் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். சாயங்காலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பட்டையைக் கிளப்பிவிட்டன. ஆட்டம்,பாட்டம்,மாறுவேஷம் என கலக்கல்தான்.
இரண்டாம் நாள் அறிவியல் அமர்வுகளுக்கு அரங்கம் நிறைந்து விட்டது. ஆறு மணிக்கு மாநாடு முடியும் தருணம்வரை அதே கூட்டம் அப்படியே இருந்தது எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. தேசிய அளவு மாநாட்டையே நடத்தும் அளவுக்கு சிறப்பாக ஏற்பாடுகள் நடந்திருப்பதாக எங்கள் மாநில கூட்டமைப்பின் செயலர் மரு.சம்பத்குமாரி வாழ்த்தியதே எங்கள் மாநாட்டின் வெற்றிக்கு சான்று. செவிக்குணவு இல்லாத போது நடந்த உணவு இடைவேளைகளும் ஈரோட்டின் விருந்தோம்பலுக்கு சான்று கூறின.
மாநாட்டின் வெற்றிக்கு முழு காரணமும் எங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அயராத உழைப்புதான். இருபத்து நான்குபேரின் இணைந்த கைகள் SPOKES of WHEEL ஆக உருட்டிய சக்கரம்தான் எங்கள் கன்னி முயற்சியான முதல் மாநாடு. நான்கு மாதங்களும் அடிக்கடி கூடி ஆலோசனைகள் செய்து ஒரு குடும்பம்போல் ஓடியாடி வேலை செய்ததில் இன்னும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். சீனியர் சிட்டிசன்களும் சின்ன வயது பெண்களும் சேரும்போது எங்கள் வயது உருமாறிவிட்டது. இளம் இரத்தங்களுடன் இணைந்து நாங்களும் இளமையாகிக் கொண்டோம்.
சங்கத்தில் “ட” என்ற வல்லினம் சேர்ந்து சங்கடம் ஆகாமல் “ம” என்ற மெல்லினம் சேர்ந்து சங்கமம் ஆனது

அலை-82

 அலை-82

“முதுமையில் கல்”
இந்த மார்ச் மாதத்துடன் பணிமூப்பு அடைந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டது. வயதும் 63 இலிருந்து அறுபத்து நான்கை எட்டிப் பார்க்கிறது. வயது என்பது எண்ணிக்கைதான் என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது. உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை அதீத மாற்றங்கள் எதுவும் இல்லை. எடை அதிகரிக்கக்கூடாது என்பதற்காக சர்க்கரை சாப்பிடுவது மட்டும் நிறுத்தியிருக்கிறேன்.
பணிமூப்புக்குப் பிறகு நேரத்தை எப்படியெல்லாம் செலவிட வேண்டுமென்று ஏகப்பட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டே இருக்கின்றன. அப்பப்போ அதைச் செய்யலாமா இதைச் செய்யலாமா என்று தோண்றதுதான். ஆனால் எதுவும் செய்யலை. கொரோனாவுக்குப் பிறகு வந்த வாழ்க்கை முறை மாற்றங்களே வாழ்க்கையில் நிறைய செய்ய வைத்துவிட்டது. உணவும் , உறக்கமும் , உடற்பயிற்சியும் ஒரு ஒழுங்குக்குள் வந்துவிட்டது.
சித்தோடு தோட்டமும், வீடு மற்றும் மருத்துவமனையின் மாடித்தோட்டங்களும் விவசயத்தில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டு வந்துவிட்டது. விவசாயம் செய்வதை விட அதில் கிடைக்கும் விளைச்சலை வீணாக்காமல் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரித்து அனுப்புவதே பெரிய பொறுப்புதான். எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், நாங்க யார் வீட்டுக்காவது போனாலும் காய்கறிகள்தான் பரிசுப் பொருட்கள். இவ்வளவு காய்கள் விளைச்சலாகும்போது ஆன்லைனில் விற்பனை செய்யலாமே என்று நிறையபேர் ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்களுக்குக் கொடுத்துக் கிடைக்கும் இன்பமே போதும் என்பதில் எனக்கும் எழிலுக்கும் ஒரே கருத்துதான். விவசாயத்தில் நாட்டம் வந்த பிறகு அசைவம் சாப்பிடுவது குறைந்து காய்கறிகள் உட்கொள்வது அதிகமாகிவிட்டது. “நம்ம ரெண்டு பேருக்கும் ஒருநாள் கொம்பு முளைச்சிடப் போகுது” என்று நான் விளையாட்டாக எழிலைச் சீண்டுவதும் உண்டு.
மருத்துவமனைக்கு ரெண்டு வேளையும் போவதும் நின்று போனது. ஒரே தரமாக பகல் முழுக்க இருந்துவிட்டு இரவு வேளைகளில் அவசர நோயாளிகள் மட்டும் பார்த்தால் போதும் என்று மனது தெளிந்துவிட்டது. அதனால் சாயங்கால வேளைகளில் கணவருடன் இருக்கும் பொழுதுகள் அதிகரித்துவிட்டது. சேர்ந்து நடைப்பயிற்சி போவது, தோட்ட வேலைகள் செய்வது போன்ற அந்நியோன்ய பொழுதுகள் மனநிறைவைத் தருகிறது. மரு.சோம்ஸ் பக்கத்து தெருவிலேயே இருப்பதால் தினமும் வருகை தந்துவிடுவார். கொரோனா சமயத்தில் கூட எங்கள் கூட்டுறவு தடைபடாமல் தொடர்ந்தது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்ததில் நிறைய படிப்பினை கிடைத்தது. கடந்த காலங்களில் எங்க வீட்டுக்குள்ளேயே எந்தெந்த பொருட்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்றே எனக்கு சரியாகத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக பழையன கழிக்க ஆரம்பித்த பிறகுதான் தேவையில்லாத பொருட்கள் ஆங்காங்கே திணிக்கப்பட்டுக் கிடப்பது தெரிகிறது. எழிலோட இசை சம்பந்தப்பட்ட கோப்புகளே ஒரு ரூம் அளவுக்கு இருக்கின்றன. தூசி தட்டி வரிசைப்படுத்த வேண்டும்.
அதற்கு அடுத்ததாக அலமாரி அலமாரியாக அடைந்து கிடக்கும் துணிமணிகள். அலீஸ் பிறந்தபோது (30 வருடங்களுக்கு முன்பு) எடுத்த புடவைகள் கூட நிறம் மாறாமல் புதுசு போல் இருந்ததால் கழிக்காமல் வைத்திருக்கிறேன். நம்மைச் சுற்றித் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பது நல்லது என்று மொத்தம் மொத்தமாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அமுத சுரபிபோல் வந்து கொண்டே இருக்கிறது. அன்பு மிகுதியால் நண்பர்களும் உறவினர்களும் தரும் பரிசுகளே துணிமணிகள்தான்.
காலையில் எழுந்ததிலிருந்து நடைப்பயிற்சி, சமையல், வீட்டு வேலைகள், மருத்துவமனை வேலைகள், அது போக மகப்பேறு மருத்துவ சங்கப் பணிகள் என பரபரப்பாக இயங்கினாலும் அது போகவும் நிறைய நேரம் இருப்பது போலவே இருக்கும். நான்சிக்கு “வேதாளத்துக்கு வேலை கொடுக்கிற மாதிரி” ஏதாவது புதுசு புதுசா வேலை கொடுத்துகிட்டே இருக்கணும் என்று என் தோழி மரு.சித்ரா கூட அடிக்கடி கேலி பண்ணுவாங்க.
வீட்டையே சுற்றிக் கொண்டிருந்தால் ஒரு சலிப்பு வந்துவிடக் கூடாது என்பதால் உலகத்தைச் சுற்றினால் என்ன என்ற எண்ணம் வந்தது. அரசுப் பணியில் இருந்தபோது அதிக இடங்களுக்கு பயணம் செல்ல முடியாது. விடுமுறை கிடைக்காது, வெளிநாடு செல்வதென்றால் முன் அனுமதி வாங்க வேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடி. இப்போ விடுதலை கிடைச்சாச்சு. பொண்ணு கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டாள். பையன் படிப்புக்கு எங்க வீட்டு ATM ( Dr.எழில்) இருக்கிறாங்க. அதனால் எனக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் உலகம் சுற்றும் “வாலிபி” ஆகிவிட்டேன்.
எனது எண்ணத்துக்குத் தோதாக எங்கள் வகுப்பு நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்தோம். எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே நோக்கம். இத்தனை நாட்கள் குடும்பத்துக்காக வாழ்ந்துவிட்டோம், இனிமேல் அப்பப்போ நமக்காகவும் வாழ்வோம் என்பது போன்ற எண்ணம் கொண்டவர்கள். ஒத்த வயது, ஒரே மனநிலை, ஒரே உடல்நிலை என்பதால் இலகுவாக கைகோர்த்துக் கொண்டோம். மூணுமாசம் போலே அமைதியா உக்காந்து வேலை செய்வது. அதுலே சம்பாதிச்சதை வைச்சு அடுத்த டூர் போயிடறது. பிறகென்ன, அதிரடி ஆரம்பமாகிவிட்டது.
வகுப்புத் தோழர்கள் நிறைய பேருக்கு எங்கள் அணுகுமுறை பிடித்திருந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எல்லோராலும் எங்களுடன் பயணிக்க முடிவதில்லை. என்னோடு எல்லா சந்தர்ப்பங்களிலும் துணை நிற்பது நளினிதான். அடுத்து மாரி, பரா இரண்டுபேரும் சேர்ந்திடுவாங்க. இடையிடையே சால்ட், பானு, பாஸ் அண்ணா, முத்தையா, ஸ்டீபன், சைமன் என ஒரு கூட்டமே இருக்கு. இப்போ தில்லையும் சேர்ந்திருக்காங்க. எல்லோமே “தானா சேர்ந்த கூட்டம்” – தாணுவுடன் சேர்ந்த கூட்டம்.
ஏழெட்டு பேர் சேர்ந்திட்டா போதும் அடுத்த ட்ரிப் பத்தி முடிவெடுத்துவிடுவோம். எங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ட்ராவல்ஸும் கிடைச்சிது. போக வேண்டிய இடம் முடிவாகிவிட்டால் எங்க செளகரியத்துக்கு ஏத்த மாதிரி மாற்றியமைத்து ஒரு பயணத்திட்டம் உண்டாக்கிவிடுவோம். பயணங்களில் மிகவும் ரசிப்பது கூடிக் கும்மாளமிட்டு அடிக்கும் அரட்டைகள்தான். உறங்கப்போகும் முன்பு பெண்கள் அனைவரும் ஒரே அறையில் முகாமிட்டு மொத்த ஊர் வம்பும் பேசி ‘பிரண்டை’ துவையல் செய்வதுதான் உச்சகட்ட மகிழ்ச்சி. இடையிடையே குடும்ப சுற்றுலாக்கள், மகப்பேறு மருத்துவ சங்கத்தின் சுற்றுலா என வரிசையாக பயணத்திட்டம் இருக்கும். ஊரிலிருந்து யாராவது என்னைப் பார்க்க வருவதாக இருந்தால்கூட முன்னதாகவே உறுதி செய்துவிட்டுதான் வர வேண்டியிருக்கிறது.
முதுமை என்பது உடம்புக்கு மட்டும்தான். மனது என்றுமே இளமைதான். தடி ஊன்றி நடக்கும் பருவம் வரும் வரை எங்களுக்கெல்லாம் இளமை ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருக்கும்.

அலை-81

 அலை- 81

“சர்வதேச மகளிர் தினம்”
வருடம் தோறும் மகளிர் தினம் கொண்டாடுவது வாடிக்கையாகிவிட்ட ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மகளிர் தின நிகழ்வுகள் ஏதாவது ஒரு செய்தியை மனதில் ஆழமாகப் பதிக்கிறது. இந்த வருடம் CSI மருத்துவமனையும் ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் சங்கமும் இணைந்து “புற்றுநோய் கண்டறியும் முகாம்” நடத்தினோம்.
மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப்போடும் எத்தனையோ நோய்களில் புற்றுநோய் மிகப்பிரதானமான இடத்தில் இருக்கிறது. வீட்டிற்கு ஒரு மரம் வைப்போம் என்று சொல்வதுபோல் வீட்டிற்கு ஒரு புற்றுநோய் நோயாளி உண்டு என்பது வருத்தப்படக்கூடிய செய்தி. பாமர மக்கள் முதல் பகுத்தறிவாளிகள் வரை , நோயாளிகள் முதல் மருத்துவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை அந்த நோய். நினைவில் வாழும் உயிர்த் தோழி மரு.நளினாதேவி புற்றுநோய் பாதிப்பால் எங்களை விட்டு பிரிந்ததை இன்னும் கூட எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு, எடை குறைக்க நடைப் பயிற்சி, மாரடைப்பு தடுக்க பத்தியச் சாப்பாடு எனப் பலவிதமான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும் அசால்ட்டாக அட்டாக் பண்ணி ஆறு மாதத்துக்குள் ஆளையே சாய்த்துவிடும் புற்றுநோய்கள் பற்றிய கதைகள் தினசரி நம்மைச் சுற்றி நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் புற்றுநோய்த் துறையில் தினசரி புதிய கண்டுபிடிப்புகள் பல அதிசயங்களையும் காண்பித்து வருகின்றன.
புற்றுநோய் வருவதைத் தடுக்க முடிகிறதோ இல்லையோ , முற்றிப் போகும் வரை காத்திருக்காமல் ஆரம்ப கட்டங்களிலேயே கண்டுபிடிக்கக் கூடிய எண்ணற்ற பரிசோதனைகளும் பாதுகாப்பு முறைகளும் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. ஆனால் அவையெல்லாம் சாதாரண மக்களைச் சென்றடைகிறதா என்பது கேள்விக் குறிதான்.
பெண்களுக்கான புற்றுநோய்களில் மார்பகம் மற்றும் கர்ப்பவாய்ப் புற்று நோய்கள் முக்கியமாக உள்ளது. ஆனால் அவற்றை ஆரம்பக் கட்டங்களிலேயே கண்டறியக்கூடிய பரிசோதனைகள் பற்றி எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது. நடுத்தர வயது தாண்டிய பெண்கள் மேமோகிராம் , pap smear என்று சொல்லப்படும் கருப்பை வாய் சோதனை போன்றவற்றை செய்து கொள்ள வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும் அதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு நாட்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு வரை மார்பகப் புற்றுநோய் என்பது 40 வயது தாண்டியவர்களுக்கு வரும் நோய் என்றுதான் இருந்தது. திருமண வயதுகூட வராத இளம் பருவத்தினர்கூட தற்போதைய கால கட்டத்தில் பாதிக்கப் படுகிறார்கள். HCG cancer center செவிலியராக இருந்த செல்வா என்ற பெண் மிகக் குறைந்த வயதில் இருபது வயதுகூட நிறையாத பருவத்தில் மார்பக புற்றுநோய்க்கு பலியான சோகம் நீண்ட நாட்களுக்கு எங்கள் மனதில் ஆறாப் புண்ணாக இருந்தது.
குடும்பத்தில் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது சோகத்திலும் சோகம். எழுபது வயதில் மாமனார், அறுபது வயதில் அம்மா , ஐம்பது வயதில் ராஜம் மதினி, நாற்பது வயதில் தோழி நீலா என வயது வரம்பு குறைந்து கொண்டே வந்ததில் அண்ணன் மகள் ஜோதிக்கு முப்பத்து மூன்று வயதில் தைய்ராய்டில் புற்று நோய் வந்தது குடும்பத்தையே புரட்டிப் போட்டு விட்டது.
மதினியைப் பிரிந்த சோகம் ஆறுவதற்குள் மகளுக்கும் புற்றுநோய் என்ற சோகத்தைத் தாங்க முடியாத அண்ணனுக்குக் குடும்பமே ஆறுதலாக இருந்தது.மறு யோசனை இன்றி ஈரோடுக்குக் கூட்டி வந்து அறுவை சிகிச்சை செய்ததில் இன்றளவும் மருமகள் நலமாக இருக்கிறாள். கருத்துடனும் கனிவுடனும் அறுவை சிகிச்சை செய்து இன்றளவும் தொடர் கவனிப்பில் வைத்திருக்கும் மரு. அருணந்திசெல்வனுக்குக் குடும்பமே நன்றிக் கடன் பட்டுள்ளது.
ராஜம் மதினியின் அம்மா, எனது மூத்த அக்காவுக்கு சினைமுட்டை பையில் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து பதினைந்து வருடங்களாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். ஆனால் மகளுக்கு வந்த நோயால் அவளைப் பிரிந்து புத்திர சோகத்தில் இன்றளவும் அவதிப் படுகிறாள்.
தகுந்த நேரத்தில் செய்யப்படும் சிகிச்சைகள் புற்றுநோயை வெல்லக்கூடிய சக்தி வாய்ந்ததாக உள்ளது. அறியாமையாலோ பொருளாதார பிரச்னைகளாலோ நேரம் தப்பி செய்யப்படும் சிகிச்சைகள்தான் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
சிகிச்சை செய்வதில் உள்ள அறிவியல் முன்னேற்றம் , சிகிச்சைக்கு கொண்டு வருவதில் இல்லை.
தனக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்பதை பிறர் அறிந்தால் அவமானம் என்ற மாயையில் மூடி மறைத்து மறைந்துவிட்ட மருத்துவ தோழிகள் உண்டு. வைத்தியம் பார்க்காமலே வியாதியை வென்றுவிடலாம் என்ற மாயையில் திரியும் நபர்களும் உண்டு. நாட்டு வைத்தியத்தில் கட்டியைக் கரைத்துவிடலாம் என்று திசை மாறிப் போகும் அப்பாவிகளும் உண்டு. புற்றுநோய் வந்துவிட்டாலே இறந்துதான் போய்விடுவோம் என்ற பயத்துடன் ஆன்மீகத்தில் அமுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஒருசில புற்றுநோய்கள் தவிர நிறைய நோய்களுக்கு முன்பே செய்துகொள்ளும் பரிசோதனைகள் இருக்கின்றன. பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. புற்றுநோய் வரும் அறிகுறி உள்ளவர்களுக்குக் கூட முறையான வைத்தியம் மூலம் வாழ்நாள் நீட்டிக்கப்படும். கர்ப்பவாய் புற்று நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் வசதி உள்ளது. விரைவில் தமிழக அரசு சார்பில் பத்து வயதுக்கு மேற்பட்ட அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் HPV vaccine இலவசமாக செலுத்த ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மறுபடி மறுபடி இது போன்ற விஷயங்களை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே செய்ய வேண்டிய பணி அல்ல. நமக்குத் தெரிந்ததை அருகில் உள்ளவர்களுக்கு சொல்லிச் சென்றாலே போதும். அந்த அடிப்படையில்தான் இன்று புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தினோம். முகாமிற்கு வந்த ஐம்பது பெண்களும் ஐநூறு பெண்களுக்காவது நாங்கள் விளக்கிச் சொன்ன விஷயங்களைக் கொண்டு சேர்த்தால் அதுவே முகாமின் வெற்றி.
புற்றுநோயையும் வெல்லலாம்
புதுமைப் பெண்களாய் ஒளிரலாம்.
மகளிர் தின வாழ்த்துகள்.
All reactions:
Baskara Pandian, Alfred Daniel and 16 others

அலை-79

 அலை-79

“பள்ளிக்கூடம்”
இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது இன்பத் தேன் வந்து காதில் பாய்வது மாணவப் பருவத்தைக் கடந்த அனைவருக்கும் பொதுவானதுதான். மழைக்குக் கூடப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவர்களுக்குக் கூட பள்ளிக்கூடம் என்பது பெரிய சமாச்சாரம்தான். பள்ளிப் படிப்பு தாண்டி உச்சங்களைத் தொட்டவர்கள் கூட பள்ளியைப் பற்றி நினைக்கும்போது குழந்தைகளாகிப் போவதை அடிக்கடி பார்க்கலாம்.
அத்தைகைய பெருமைக்குரிய பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் கூடுகை என்பது பெரிய திருவிழா என்றே சொல்லலாம். எங்களை உருவாக்கி வளப்படுத்திய கா.ஆ. மேல்நிலை பள்ளியில் முதல் முதலாக அதுபோன்ற திருவிழா டிசம்பர் மாதம் நடைபெற்றது. கிறிஸ்துமஸுக்கு முந்திய வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நடைமுறைச் சிக்கல்களால் கலந்து கொள்ள முடியாததுபோல் இருந்தது. ஆனாலும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று இரவு நேர பேருந்தில் இடம் பிடித்து சென்றுவிட்டேன்.
காயல்பட்டினம்-ஆறுமுகநேரி (கா.ஆ.உயர்நிலைப் பள்ளி) என்ற இரு ஊர்களுக்கும் பொதுவான கல்விக்கூடமாக விளங்கி எண்ணற்ற சேவை புரிந்த பள்ளி.ஜாதி மத இன பாகுபாடற்ற தலைமுறையை வளர்க்க உதவியாக இருந்தது என்றும் சொல்லலாம். அதன் தாக்கத்தை அந்தக் கூடுகையின் போது கண்கூடாக காண முடிந்தது. சுமார் 45 வருடங்களுக்கு முன்பு பார்த்திருந்தவர்களை அன்று பார்த்து அடையாளம் காண முடிந்தது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
ரொம்ப நாளைக்கு பிறகு தாணக்கா(தாணு அக்கா) என்னைத் தெரியுதா என க்விஸ் நடத்திய ஏகப்பட்ட தம்பி தங்கைகளைப் பார்க்க முடிந்தது. எங்க வீட்டு எட்டு பேரில் பெரியண்ணனும் வடிவு அக்காவும் தவிர ஆறுபேரும் எங்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள்தான். அதனால் நிறையபேர் அவர்களை நினைவூட்டி அறிமுகம் செய்து கொண்டார்கள். செக்கண்ணன் (சிவகாமிநாதன்) விழாக்குழுவில் இருந்ததால் செக்கன்,நயினார் தங்கை என அறிமுகப் படுத்தியதுமே ”டாக்டர் தானே” என்று பரிச்சியம் செய்து கொண்டு பேசியவர்கள் அதிகம்.
காலையில் முதல் நிகழ்வாக பள்ளிக்கூடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். 45 வருடங்களுக்கு முன்பு நாங்கள் அமர்ந்து படித்த அதே பெஞ்சுகளில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தபோது de javu வாக எண்ணற்ற நினைவுகள். அத்தனை வருடம் கழித்து வந்த பிறகும் பள்ளி அதே போல் இருந்தது மனதுக்கு நெருக்கத்தைக் கொடுத்தாலும் கட்டமைப்புகளில் முன்னேற்றமே இல்லாமல் இருந்தது வருத்தத்தையும் கொடுத்தது.
மதிய உணவிற்குப்பின் கைகழுவும் கிணற்றடியும் தொட்டியும், தலைமை ஆசிரியர் அறை முன்பு பரந்து கிடக்கும் வேப்பமர நிழலும், ஆய்வகமும், விளையாட்டு அறையும் எங்களை எழுபதுகளுக்கே அழைத்துப் போய்விட்டது. SP மஹாலில் விழா தொடங்கும் நேரம் நெருங்கிவிட்டதால் பிரியா மனதுடன் பள்ளி வளாகத்தைவிட்டுக் கிளம்பினோம்.
விழா மண்டபத்தில் கூட்டம் ஜேஜே என்று இருந்தது. ஒவ்வொரு வருடத்தினரும் குறிப்பிட்ட இடங்களில் அமரும் வகையில் பதாகைகள் ஒட்டப் பட்டிருந்தன . எதிர்பார்த்ததைவிட அதிக நண்பர்கள் இணைந்திருந்ததால் அதெல்லாம் நடைமுறை சாத்தியப் படவில்லை. ராம்கி மட்டும் பொறுப்புடன் 1976 வகுப்புக்கான இடத்தில் அமர்ந்து கொண்டான்.எங்கள் வகுப்பும் நானா வகுப்பும்தான் அதிக நண்பர்களை பதிவு செய்திருந்தோம். சரசக்காவும் நானும் தோதுவான இடத்தில் அமர்ந்துகொண்டோம்.
சமீபத்தில் பங்கு கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்சங்க கூடுகையின் போது அனைவருமே மருத்துவர்கள் என்பதால் எல்லா முகங்களும் ஓரளவு பரிச்சியமானதாக இருந்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதிகமாகத் தென்படவில்லை. ஆனால் பள்ளிக்கூடக் கூடுகை வித்தியாசமாக இருந்தது. பல மட்டங்களில் உள்ள மனிதர்களின் கூடுகையாக இருந்தது. ஊடகவியலாளர்கள்,ISRO விஞ்ஞானி,IAS அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி, ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் என உச்சங்களைத் தொட்ட பல பேரைப் பார்க்க முடிந்தது. அதேபோல் வகுப்புத் தோழர்களிடம்கூட சகஜமாகப் பேசமுடியாத தயக்கத்துடனும் ஒரு சாரார் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிகழ்விலும் தங்கர்பச்சானின் “பள்ளிக்கூடம்” சினிமா மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.
எங்களது வகுப்புக் கூடுகை சில வருடங்களுக்கு முன்புதான் நடந்திருந்ததால் நாங்கள் எல்லோருமே பரிச்சியத்துடன் பேசிக் கொண்டிருந்தோம். வேல்கனி, அமராவதி, வத்ஸலா போன்ற வகுப்புத் தோழிகளை நாற்பத்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பார்க்க முடிந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி நிரல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கவில்லை. அரைத்த மாவுபோன்ற தோற்றம்தான். உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு. ஜகதீஷ் சந்திரா, IAS அதிகாரி சுந்தரேசன் போன்றோரின் பேச்சு ஈர்க்கக்கூடிய வகையில் இருந்தது. நண்பன் ராம்கி(ஜென்ராம்)யின் பேச்சு நேரமின்மை காரணமாக தட்டிப்போய்விட்டதில் எங்கள் வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் ஆதங்கம்தான்.
தம்பி நானாவின் வகுப்புத் தோழர்கள் முனைப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். பதிவு செய்வதிலிருந்து விளையாட்டு போட்டிகள் நடத்துவதுவரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருந்தார்கள். ராமருக்கு அணில் மாதிரி நானும் தம்பியுடன் சேர்ந்து விளையாட்டுகளை நடத்தினேன். அவங்க வகுப்பு மாணவர்கள் ஒருபடி மேலே போய் விழாக்குழுவினர் அனைவரையும் பரிசுப் பொருட்களுடன் சிறப்பித்தது நிறைவாக இருந்தது.
நினைவுப் பரிசுகள் அடங்கிய பையை வாங்குவதற்கு ஏக தள்ளு முள்ளுவாக இருந்தது. சென்னை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர். அதனால் எல்லோருக்கும் பட்டுபுடவை நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார். இன்னும் நிறைய நண்பர்களும் வழங்கியிருந்த பரிசுப் பொருட்களுடன் செம கலெக்‌ஷன் ஆயிடுச்சு. வரமுடியாத நண்பர்களுக்குக் கூட வகுப்பு லீடர் மூலம் பைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
குழுவாக புகைப்படங்கள் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே நின்றிருந்த நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். விழா முடிந்து அனைவரும் சென்றபிறகு கூட நான்,ராம்கி, சுந்தரேசன் எல்லோரும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இரவு புகைவண்டியில் என்னை ஏற்றிவிடும்வரை அந்தப் பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
என்ற பாடல் மனதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது