Monday, May 09, 2022

அலை-70

 அலை-70

“அன்னையர் தினம்”


ஆண்டுதோறும் மேமாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆனா ல் வருடத்தின் எல்லா நாட்களுமே அன்னையர் தினம்தான். அன்னையன்றி ஒரு அணுவும் அசையாது இவ்வுலகில் என்பதுதான் உண்மை.

ஏப்ரல் 30ஆம் நாள் எங்கள் அம்மாவின் நினைவு நாள். அதுகுறித்து தம்பி எழுதியிருந்த பதிவு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவின் நினைவுகளை மேலும் மேலும் புரட்டிப் போட்டது.


அம்மா என்ற சொல்லுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான நினைவலைகள் இருக்கும். அதில் அன்பு, அம்மாவின் கை மணம், கண்டிப்பு, கரிசனை, கவனிப்பு என்று ஏகப்பட்ட விழுமியங்களாக அவை பரிணாமித்துக் கொண்டிருக்கும்.


 ஆயிரம் கையுடைய அம்பிகைகளின் உருவகம் அம்மாதான். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லைதான்.

எங்கள் குடும்பக் கோவிலின் முதல் தெய்வம் எங்கள் அம்மா “நாகம்மாள்”தான். அதனால் எங்கள் குடும்பத்தின் விலாசமே  “NAG 500” (நாகம்மாள் ஐநூற்று முத்து) தான்.


பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்ற எந்தவிதமான சொற்பூச்சுகளும் புரியாத படிப்பறிவில்லாத அப்பாவி அம்மா. தனது கையெழுத்தை மட்டும் சில கோடுகளுக்குள் உள்ளடக்கி மனப்பாடமாகப் போடத் தெரிந்து கொண்டவள். நாகரீக சமூகத்தில் அம்மாவை நீங்கள் வாங்க போங்க என்று கூறித் திரியும்போது நாங்கள் எல்லோரும் அம்மாவை ஒருமையில்தான் அழைத்திருக்கிறோம். அது மரியாதைக் குறைவால் சொன்னதல்ல, அம்மாவுடனான நெருக்கமும் வாஞ்சையும் தந்த ஈருடல் ஓருயிர் பாசத்தால் சொல்வது.


சராசரி பெண்களைவிட சற்று உயரமாகவே இருப்பதால் அப்பாவின் உயரத்துக்கு ஏற்ற துணையாகவே தெரிவார்கள். எப்போதோ அம்மாவும் மூத்த மதினியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று உள்ளது. அம்மாவின் உயரத்தில் பாதிதான் மதினி இருப்பாங்க. அம்மாவுக்கு மூக்கின் வலப்புறம் மிளகு அளவிற்கு மச்சம் உண்டு. அதுவும் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டுவது போலவே இருக்கும். 


அப்பாவின் படிப்பால் வந்த சாதூரியங்களை விட அம்மாவின் நடைமுறை அறிவால் வந்த நிபுணத்துவமே எங்கள் குடும்பத்தை வழி நடத்தியது என்று சொல்லலாம். அப்பா கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால் வேலைக்குப் போவது பொருள் ஈட்டுவது போன்ற சம்பிரதாய விஷயங்களில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஆனாலும் அதையெல்லாம் சமாளித்து எங்களை ஆளாக்கியதில் அம்மாவின் பங்கு மிக அதிகம். 


அம்மா அடுக்களையில் சமையல் செய்யும்போது குச்சிவீட்டு மரப்பெட்டியின் மீது அப்பா அமர்ந்து கொள்வார்கள். அப்போது நடைபெறும் உரையாடல்கள்தான்  வீட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை முடிவு செய்யும். கல்யாணம் முதல் கல்லூரி செலவுகள்வரை அனைத்தும் அங்கேதான் அலசப்படும். 


சமமான இடைவெளியில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு குழந்தை என்று எட்டு மக்களைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியதை நினைத்தாலே பிரமிப்பாக 

இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கற்பனை செய்தே பார்க்க முடியாத விஷயம். ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவே ஆயிரம் அலட்டல் பண்ணும் இன்றைய அன்னையர்க்கு அம்மா மாதிரி 

ஆட்களெல்லாம் மியூசியம் 

கதாபாத்திரங்கள்தான்.  தான் படிக்காவிட்டாலும் அத்தனை குழந்தைகளையும் படிக்க வைத்து சமுதாயத்தில் உயர் நிலைக்கு கொண்டுவர செய்த தியாகங்களை நினைவு கூறும் தினமாகவே அன்னையர் தினம் அமைந்துள்ளது. 

வீட்டில் நடக்கும் சகல விஷயங்களும் அம்மாவைச் சார்ந்தே இருக்கும் என்றாலும் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் சக்கரமாகச் சுழன்று கொண்டிருக்கும் அம்மா ஒரு சகாப்தம்தான். 


எங்கம்மா யாரையும் கொஞ்சியோ அரவணைத்தோ பார்த்ததில்லை. நாங்கள் எல்லோரும் சுற்றி இருப்பதை உணர்ந்த மாதிரிகூடத் தெரியாமல் முழுநேரமும் சமையல் செய்து கொண்டிருப்பதாகவே தெரியும். அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளை பெரிய குழந்தைகளே சீராட்டிக் கொள்வதால் அம்மாவுக்கு குழந்தை வளர்ப்பு பெரிய பாரமாக இருந்ததில்லை. பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து சாப்பாடு போடுவது வரை எல்லாமே அக்கா மதினி போன்றோர்தான் செய்வார்கள். ஆனால் அம்மாவின் கரிசனைகள் அவ்வப்போது வெவ்வேறு நிழ்வுகளாய் வெளிப்படும்.


கடைக்குட்டிப் பையன் என்பதால் தம்பி நாராயணனுக்கு மட்டும் ஏகச் செல்லம். அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்தால்தான் தூங்குவான். அதனால் நாட்கள் செல்லச் செல்ல அம்மாவின் புடவை ஒன்று அவனுக்கு போர்த்தி விட்டுறுவாங்க. அதை சுருட்டி கொக்கு மாதிரி வைத்து முகத்தில் வருடினால்தான் தூங்குவான். பெரிய பையன் ஆகும் வரைக்கும் கூட அந்தப் பழக்கம் இருந்தது. 


எங்க ஆச்சி (அம்மாவின் அம்மா) பெயர் எனக்கு என்பதாலும் கடைக்குட்டி பெண் என்பதாலும் என்னிடம் வாஞ்சை அதிகமாக இருப்பதுபோல் தெரியும். ஆனாலும் அரைக்கால் டவுசருடன் ஆம்பிள்ளைப் பசங்ககூட விளையாடிட்டு வந்து அடி வாங்குவதும் நானாகத்தான் இருப்பேன். 


அவ்வளவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அம்மா, எனக்கு டைபாய்ட் காய்ச்சல் வந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது கணநேரமும் பிரியாது என்னுடனேயே தங்கியிருந்த நாட்கள் பசுமரத்தாணியாக மனதில் தங்கியிருக்கிறது. 

காய்ச்சல் விட்டவுடன் குடல் புண் அதிகமாக இருக்கும் என்று சொல்லி காரமே இல்லாத தேங்காய்ச் சட்னியும், புளி இல்லாக் குழம்பு எனும் பத்தியக் குழம்பும் வைத்து பரிமாறிய கணங்கள் நெகிழ்ச்சியானவை. PUC  படிக்கும்போதும் மருத்துவக் கல்லூரியில் இணைந்த பின்பும் டப்பாக்களில் அடைத்துத் தரும் பொறி அரிசி மாவில் தெரிவது அம்மாவின் அன்பு. தன் குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களின் தோழர் தோழியரிடத்தும் அதே அன்பைக் காட்டியதில் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை. 


எங்க வீட்டுக்குப் பெயரே மங்கம்மா சத்திரம்தான் . எப்போதும் உலையில் சோறு கொதித்துக் கொண்டேயிருக்கும். வீட்டுக்கு யார் வந்தாலும் முதலில் சோறு சாப்பிட வைப்பதுதான் அம்மாவின் வழக்கம். எங்கள் வீட்டின் சிற்றுண்டி நேரம் கூட அரிசி சோறுதான். அதில் மணப்பது அம்மாவின் வாசமும் கூட.


 தனக்கு திருமணமாகி வந்த உடனேயே தன் தங்கைகளுக்கும் அருகருகிலேயே வரன் பார்த்து மணம் முடித்து குடும்பத்தை அனுசரணையாகப் பார்த்துக்கொண்டது பெரிய பொறுப்பு. அதனால் எங்களுக்கும் சித்தி குடும்பங்கள் சுற்றி இருந்து அக்காக்கள் அண்ணன்கள் தம்பி தங்கைகள் என உறவுகள் பெருகி பெரிய குடும்பமானோம்.


அலங்காரத்துக்கென்று அம்மா நேரம் செலவிட்டதே இல்லை என்று சொல்லலாம். என்றைக்காவது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மட்டும் தலைவாரி பூச்சூட்டிக்கொண்டு நெற்றி நிறைய குங்குமத்துடன் பார்க்கும்போது அவ்ளோ அழகு. வெற்றிலை போட்டு சிவந்த உதடுகளுக்கு முன் சாயம் பூசப்படும் உதடுகள் போட்டி போடவே முடியாது.

அப்போதெல்லாம் வெற்றிலை போட கொட்டைப்பாக்குதான் கிடைக்கும். அதை உடைக்கவென்றே இரும்பால் ஆன சின்ன உரலும் கம்பியும் இருக்கும். வேலையெல்லாம் முடித்துவிட்டு வெராண்டாவில் காலை நீட்டி உட்கார்ந்து வெத்தலை உரலில் பாக்கை உடைத்துக் கொண்டே ஊர் நியாயமெல்லாம் பேசுவதுதான் அம்மாவுக்கு நிரந்தர பொழுது போக்குன்னு நினைக்கிறேன். அந்தக்கால முதியோர்களுக்கு வெற்றிலை போடுவதில் அப்படியொரு அலாதி ஆனந்தம். ஆனால் புகையிலை சேர்த்துப் போடுவதில்லை. 


பிள்ளைகள் பெரியவர்களாகி பேரக்குழந்தைகள் வந்த பிறகு பேச்சுத் துணைக்கு நிறைய பேர் கிடைத்துவிட்டதால் வீடு எப்போதும் கூச்சலும் சத்தமுமாக கலகலப்பாக இருக்கும். எல்லோரும் ரவுண்டு கட்டிக் கொண்டு அம்மாவைச் சீண்டுவதும் கேலி பேசுவதும் மறக்க முடியாத நாட்கள். ஏதோ நினைவாக நேற்று சொன்னதை மறுநாள் மாற்றிச் சொல்வது அம்மாவின் வாடிக்கையாக இருக்கும். அதனால் பாண்டிச்சேரி MLA என்று கிண்டலாகக் கூப்பிட்டுக் கொள்வோம். 


அம்மா பெரிய தைரியசாலியும்கூட. என்னைத்தவிர எங்கள் வீட்டுப் பெண்கள் அனைவருக்கும் வீட்டிலேயே பிரசவம் பார்த்து மணிமணியாக முத்துக்களைப் பெற்றெடுக்க வைத்த கிராமத்து மருத்துவர் அம்மாதான். துணைக்கு கிறிஸ்டிபாய் என்ற மருத்துவச்சியைக் கூப்பிட்டுக் கொள்வார்கள். ஏதேதோ பொருட்களை அம்மியில் அரைத்து பிரசவித்தவர்களுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு மட்டும்தான் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. நான் மூன்றுமாத கர்ப்பமாக இருந்தபோதே எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். அம்மாவே மகளாகப் பிறந்ததாகத் தோன்றியதால் என் மகளை இன்று வரை குட்டிம்மா (குட்டி அம்மா) என்றே அழைக்கிறேன்.


எல்லா குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான பாசம்தான் என்றாலும் மருத்தக் கல்லூரியில் சேர்ந்த பிறகு என்மீது கொஞ்சம் பெருமையுடன் கூடிய அன்பு வந்துட்ட மாதிரி தெரிந்தது. “அவள் பரணி நட்சத்திரம் தரணி ஆளுவாள் ” என்று எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. அப்பாவின் மறைவிற்குப் பிறகு தைராய்டு புற்றுநோய் பாதித்ததிலிருந்து என் துணையின் அவசியத்தை உணர்ந்து கொண்டதால் கடைசிக்காலம் வரை என்னுடனேயே இருந்துட்டாங்க. 


எனக்குத் திருமணமான புதிதில் கொஞ்ச நாள் அண்ணன் வீட்டில் இருந்தார்கள். எனக்கு மசக்கை என்று கேள்விப்பட்டதும் வாஞ்சையாகக் கவனித்துக் கொள்ள ஓடோடி வந்தார்கள். புற்றுநோயின் இரண்டாம் அலை புரட்டிப்போட்டதில் கடைசி காலங்களை எண்ணத் தொடங்கிவிட்ட நிலையில் சொன்ன கடைசி வர்த்தைகள் இன்றளவும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “அம்மாவுக்கு சமமாக உன்னைக் கவனித்துக் கொள்ளும் கணவர் கிடைத்திருக்கிறார். இனி நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேன்” என்ற சத்தியமான வார்த்தைகள் இன்றும் என் வாழ்க்கையின் சாட்சியாக  இருக்கிறது.


அம்மாவின் நினைவலைகளே அன்னையர் தின சிறப்பு.

அலை-69

 அலை-69

 "சர்வதேச பூமி தினம்”



வாழ்க்கையின் படிக்கட்டுகளில் ஏறிப்போகும்போது நிறைய சாதனைகளும் கிடைக்கும் நிறைய சறுக்கல்களும் வரும். கணக்குப் பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் மிஞ்சுவது விரல்கள் மட்டும்தான். நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலே அதன் பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மானுடர்கள் நாம்.


 நம்மைத் தாங்கும் பூமியைக் காக்கவே விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். ஊர்வலத்தின் இறுதியில் மிஞ்சப் போவது சிதறிக்கிடக்கும் காலியான காபி தம்ளர்களும் தண்ணீர் பாட்டில்களும்தான்.


அறிவியல் வளர்ச்சியால் அஞ்ஞானம் குறைந்ததோ இல்லையோ  அடிப்படைத் தேவைகள் அதீதமாகிவிட்டது. 

 அம்மியிலிருந்து மிக்ஸி க்ரைண்டர் வந்தது, செளகரியம் கூடியது. அதீத எடை குறைக்க ஐந்து மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி செல்ல வேண்டியதாச்சு.

மின்சார வசதி மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றாலும் அதனால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் வேதனைக்குள்ளாக்குகிறது. Disposable Items சுகாதார மேம்பாடு என்றாலும் அதிகரிக்கும் குப்பைமேடுகள் நிலத்தடி நீரை பாதிக்கிறது.


 அறிவியலும் புதிய கண்டுபிடிப்புகளும் நம்மை வளப்படுத்துகிறதா வலுவிழக்கச் செய்கிறதா என்பதே கேள்விக்குறியாகிறது.இப்படி மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்புகளால் நாம் பெற்றது அதிகமா இழந்தது அதிகமா என்பதும் விளங்கவில்லை. 

இழந்தது அதிகம் என்ற உள்ளுணர்வின் உறுத்தலால்தான் Flash-back(பின்பக்கத்தின் பளீரொளி)அலைகள் நம்மை அதிகம் 

ஈர்க்கின்றன .வாழ்க்கை என்ற வட்டத்துக்குள் மறுபடியும் பழைய நிலைக்கே செல்ல அடிமனதின் ஆழங்களில் ஆசை பெருகிவருவதுபோல் தோன்றுகிறது. 


சீரான உணவு(balanced diet) சாப்பிடணும்னு ஏகப்பட்ட திட்டங்களோட ஆரம்பிச்சு ஆரோக்கியமான உணவு (Healthy diet) சாப்பிடறோம்னு பெருமை பேசியவர்கள் அவர்கள் அறியாமலே  குப்பை உணவு(Junk food)க்கு அடிமையாகி , அதிலிருந்து மீண்டு வந்து இயற்கை உணவு (Organic food)தான் நல்லதுன்னு பேசிக்கொண்டிருப்பது அந்த ஆசையால்தான். 


ரொம்ப நாள் கழித்து மகளும் மருமகனும் இந்த வாரக் கடைசியில் ஈரோடு வந்திருந்தார்கள்.  சமையலறையில் கைப்பிடித் துணியாக பழைய கிழிந்த புடவைகள் ஆடைகள் போன்றவற்றை உபயோகித்துக் கொண்டிருப்பதைக் கணவரிடம் காட்டி உரையாடிக் கொண்டிருந்தாள். பழைய பொருட்களை மறுபயன்பாடு (recycle& reuse) செய்வதன்மூலம் எவ்வளவு குப்பை உற்பத்தி குறைகிறது என்று பகுப்பாய்வும் செய்து கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் திசு-காகிதம் ஆங்காங்கே ஸ்டாண்டில் தொங்கிக் கொண்டிருக்கும். 


புதிய தலைமுறையின் தவிர்க்க முடியாத அங்கமாக டயப்பர்களும் நாப்கின்களும் புற்றீசல்களாக புரையோடிப் போய்விட்டன. 



எங்களது குழந்தைப் பருவம் தொடங்கி கல்லூரி சென்ற நாட்கள் வரை வீட்டில் குப்பைக்கூடை என்ற ஒன்றே கிடையாது. கடைகளுக்குச் செல்ல மஞ்சள் பை அல்லது வயர் கூடைதான் உண்டு. வெவ்வேறு வடிவங்களில் கலர்கலராக பைகள் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். வெள்ளையாக எடுக்கப்பட்டவை வண்ணம் மறைந்து கறுப்பாகும்வரை தூக்கி எறியாமல் பயன் படுத்துவோம். ரொம்ப மோசமானபிறகு நாலாகக் கிழித்து கைப்பிடித் துணியாக்கிவிடுவோம். ஊருக்குக் கொண்டுபோக என்று சில நல்ல பைகள் பெட்டியில் மடித்து வைக்கப்பட்டிருக்கும். லெதர் பைகள் நிறைய பழக்கத்தில் இருந்தது. 


பலசரக்கு கடைகளில் பேப்பரில்தான் கட்டித் தருவார்கள். ஒரு நாளிதழ் பேப்பரை எடுத்து லாவகமாக கூம்பு மாதிரி சுருட்டி அதில் பொருட்களைக் கொட்டி சணல்கொண்டு கட்டித் தருவது ரொம்ப கலையம்சத்துடன் இருக்கும். எல்லாப் பொருட்களும் சாக்கு மூட்டைகளில்தான் இருக்கும். எதுவுமே பொட்டலங்களாக இருக்காது. எண்ணெய் வாங்க கண்ணாடி பாட்டில்கள் அல்லது எவர்சில்வர் தூக்குப்பாத்திரம்தான் உண்டு.


ஹோட்டல்களில் வாங்கப்படும் பார்சல்கள் வாழை இலையில்தான் கிடைக்கும். எங்க வீட்டுப் பக்கத்தில் சங்கரன்பிள்ளை கடையில் பூரியும் உருளைக்கிழங்கும் இலையில் பார்சல் வாங்கிவந்து சாப்பிடும்போது மிக அருமையான மணமும் சுவையும் கிடைக்கும். “அதை நினைக்கையில் நாக்கிலே தேனூறுதே”ன்னு பாடத் தோணும். பார்சலுக்குள் பார்சலாக சட்னியும் மசாலும் அதனுள்ளேயே அடைத்துத் தந்துவிடுவார்கள்.

 

மஞ்சள்பை சலவை செய்யப்பட்டு மறுபயன்பாட்டிற்கு வந்துவிடும். பலசரக்குக் கட்டிவந்த பேப்பர்கள் அடுப்பு எரிக்க பயன்பட்டுவிடும். வாழை இலை குப்பையும் காய்கறி குப்பைகளும் வீட்டின் பின்பக்கமுள்ள உரக்குழிக்குள் போடப்படும். வீட்டுக்குள் குப்பை சேர்த்தால் கடனும் சேர்ந்துகொண்டே போகும் என்ற ஐதீகமும் இடைச்சொறுகலாக குப்பை எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொள்ளும். எங்க வீட்டு உரக்குழி எப்பவுமே தரையிலிருந்து ரெண்டு மூணு அடி உயரமாகவே இருக்கும். பெரிய குடும்பம் என்பதால் வந்த பவுசு அது.


வீட்டில் பிரசவத்திற்குத் தயாராக யாராவது இருந்தால் அப்பாவின் பழைய வேஷ்டி அம்மாவின் கிழிந்த புடவைகள் எல்லாம் சலவை செய்யப்பட்டு வெவ்வேறு அளவுகளில் கிழித்து வைத்துக்கொள்வார்கள். ஆறுமுகநேரி நாப்கின்கூடை ரெடியாக இருக்கும். பிரசவகாலம் முடிந்ததும் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி உரக்குழியில் போட்டுவிடுவார்கள்.



ப்ளாஸ்டிக் என்ற பெயரே வீட்டில் கேட்டது இல்லை. தண்ணீர் பிடிக்க எவர்சில்வர் குடமும் பானையும் வரிசை கட்டி உட்கார்ந்திருக்கும். அதை ஊற்றி வைக்க மண்பானைகள் வீட்டின் உள்ளே உண்டு. குளிக்க பாத்திரம் கழுவ தேவைப்படும் தண்ணீர் பின்வாசலில் பெரிய பெரிய சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி சேமிக்கப் பட்டிருக்கும். கிணற்றில் தண்ணீர் இறைக்கக்கூட தகர டப்பாக்கள், இரும்பு அல்லது அலுமினிய வாளிகள்தான் இருக்கும். 



தண்ணீரோடு கிணற்றிலிருந்து இரும்பு வாளியைத் தூக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் ஊர் கடற்கரை சார்ந்த ஏரியா என்பதால் கிணறுகளெல்லாம் ஊற்று வடிவிலேயே இருக்கும். ஒருநாளும் தண்ணீர் மேல் மட்டத்தில் இருக்காது. ஊற ஊற இறைப்பதால் அடிப்பாகத்தில்தான் கொஞ்சூண்டு தண்ணீர் இருக்கும்.


கைகழுவுவதிலிருந்து கழிவறை வரைக்கும் விதவிதமான சொம்புகள் இருக்கும். அலுமினியம் எவர்சில்வர் வெண்கலம் என இடத்துக்குத் தகுந்த உலோகங்களில் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். அந்த கால கட்டத்தில் ப்ளாஸ்டிக்கால் ஆன பொருள் ஏதாவது உபயோகித்தது உண்டா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.


பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுசெல்லும் டப்பாக்கள்கூட தகரம்தான். அடிஸ்கேல் கூட மரத்தில்தான் இருக்கும். வாத்தியார்கள் கோபப்படுட்டு அடிக்கும்போது மரஸ்கேல்கள் உடைந்து போன நாட்கள் உண்டு. புத்தகப்பை என்பது ஜோல்னாப் பைதான். ஒருசிலர் வயர் கூடைகள் கொண்டு வருவார்கள். ஆம்பிள்ளைப் பசங்க துணிப்பை தூக்கி வர கெளரவம் பார்த்துகிட்டு ஸ்டைலாக புத்தகத்தை மட்டும் கையில் தூக்கிட்டு வருவாங்க. 


ஊர் முழுக்க கூட்டினால்கூட மிகப்பெரிய அளவில் குப்பைகள் இருந்தமாதிரி தெரியவில்ல. அந்தக்காலத்திலேயே எல்லா வீடுகளிலும் மக்கும் குப்பை உரக்குழியிலும் மக்கா குப்பைகள் அடுப்பெரிக்கவும் பயன்படுத்தப்பட்டதால் குப்பை உற்பத்தியே ரொம்பக் குறைவுதான்.


 விறகுக் கடைகளில் விழும் மரத்துகள்களை மண் அடுப்புகளில் எரிக்க பயன்படுத்திவிடுவார்கள். கால்நடை வைத்திருப்பவர்கள் சாணத்திலிருந்து வறட்டி செய்து அடுப்பெரிக்க பயன்படுத்திவிடுவார்கள். இப்படி எல்லாமே மறுபயன்பாடு மூலம் நடந்து கொண்டிருந்தது எப்போது மாறிப்போனது என்றே புரியவில்லை. 


எங்கள் ஊரில்தான் PRC என அழைக்கப்பட்ட Plastic Resins Chemicals என்ற தொழிற்சாலை இருந்தது. அதிலிருந்த என்ன தயாரித்தார்கள் என்றே தெரியாது. வடநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பொருள் ஏதோ தயாரித்தார்கள். அதிலிருந்து வெளியேறும் குளோரின் வாயு ஊர் முழுக்கப்பரவி நிறைய வியாதிகளை உருவாக்கியிருக்கிறது.அவ்வளவுதான் எங்களுக்கும் ப்ளாஸ்டிக்குக்கும் உள்ள உறவு.கல்லூரியில் சேர்ந்து விடுதியில் இணைந்தபோதுதான் ப்ளாஸ்டிக் வாளியும் குவளையும் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தது.


வாழ்க்கையை இலகுவாக்குவதற்காக வந்த விஷயங்கள் வாழ்க்கையின் அச்சாணியையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு உடனிருந்து கொல்லும் நோயாக மாறிக் கொண்டிருக்கும்போது, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் நாம் எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள்தான். மாற்றத்திற்கான விதைகளை இளைய தலைமுறைகளிடையே விதைக்கும் செயல்களையாவது நாம் செய்ய வேண்டும்.