Friday, August 27, 2021

அலை-52

 அலை-52

"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்".


எனது “அலை”க்கும் ஒரு வயதாகிவிட்டது. 2020 ஆகஸ்ட் 26 இல் விளையாட்டுப் போல் எழுத ஆரம்பித்து இத்துடன் 52 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எப்படியோ சொல்லி வைத்த மாதிரி ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்பது போல் எனது அலைகளும் ஒரு வருடத்தில் 52 பதிவுகளைக் கண்டுவிட்டது. தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு என்றாலும் பொருத்தமானதாக அமைந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.


இந்த வருடம் முழுவதும் கிடைத்த பின்னூட்டங்களும் ஊக்கப்படுத்திய விமர்சனங்களும் எனது எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே ஏற்றுக் கொள்கிறேன். ”அலை”களைக் கோர்த்து ஒரு புத்தகமாக வெளியிடச் சொல்லி நிறைய நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.  ஆனாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் எனக்குள் சிறிய தயக்கம் இருக்கிறது.


 அண்மைக் காலத்தில் புத்தகங்கள் வாசிக்கும் தன்மை மிகவும் குறைந்து விட்டதாகவே தோணுகிறது. வாட்ஸ் ஆப்பும் கைபேசியும் வாசிக்கும் பழக்கத்தை எளிதாகவும் கைக்கு அடக்கமாகவும் கொண்டு போய்விட்டதால் புத்தகங்களின் மேல் உள்ள ஈடுபாடு குறைவாகவே இருக்குமோ என்ற தயக்கம்தான். ஆனாலும் 100 பதிவுகளாவது எழுதிவிட்டு புத்தக வடிவம் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.


கல்லூரி நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச் சின்ன கவிதைகளைக் கிறுக்கிக் கொண்டிருப்பேன். பெரும்பாலும் காதல் கவிதைகளாகத்தான் இருக்கும். வயசு அப்படி. அவற்றை யாரிடமும் அவ்வளவாக பகிர்ந்து கொள்ள முடியாது. வயதுக்கேற்ற வெட்கம் காரணமாக இருக்கலாம். எனது பென்ச் தோழிகள் மட்டும் அடிக்கடி என் கிறுக்கல்களை வாசிப்பதுண்டு. ஆனாலும் கோர்வையாக எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை அப்போது வரவில்லை.


சுமார் 16 வருடங்களுக்கு முன்பு இதே ஆகஸ்ட் மாதத்தில் என் தோழன் ராம்கி(ஊடகவியலாளர் ஜென்ராம்) இணையத்தில் தமிழில் எழுத அழைத்தான். அப்போதுதான் வலைப்பூக்கள்(Blogs) பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். “தமிழ்மணம்” என்ற குழுமத்தின் மூலம் எழுத ஆரம்பித்தேன். “நட்புக்காக” என்ற எனது வலைப்பூ அப்போதுதான் அரங்கேறியது. தமிழில் தட்டச்சு செய்வது பெரிய விஷயமாக இருந்தது. அதைக் கற்றுக் கொண்டு சின்னச் சின்ன கட்டுரைகள், கவிதைகள் , விமர்சனங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எழுத்துப் பணியைத் தொடர இயலவில்லை.”தமிழ்மணம்” மூலம் அறிமுகமான நண்பர்கள் இப்போதும் முகநூல் நண்பர்களாகத் தொடர்பில் இருக்கிறார்கள். 


தமிழில் எழுதுவது பொழுதுபோக்குக்காக அல்ல, அதில் ஒரு அற்புதமான சுகம் இருக்கிறது. சினிமா பார்ப்பதில்கூட எனது சாய்ஸ் தமிழ்தான். நிறைய பிற மொழிப் படங்கள் சிறப்பாக இருப்பதாகப் பேசப் பட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பார்க்க மாட்டேன். யதார்த்தமே இல்லாத அறுவை படமாக இருந்தாலும் தமிழ் படம் தான் முதலில் பார்ப்பேன். இது குறித்து நண்பர்களுடன் நிறைய விவாதங்கள் நடந்தாலும் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இது தமிழ் வெறி அல்ல. தமிழ் மீது கொண்ட பாசம். 


ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையாகவே அலையை வாசிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பலதரப்பட்ட ரசனைகளை உடையவர்கள் என்பதால் கொஞ்சம் மாற்றிக் கொண்டேன். நேயர் விருப்பத்தை மீறி அரங்கேறும் எதுவும் வெற்றி பெறாது. ”பதின்ம வயதுகளில்” என்று ஒருதரம் எழுதியிருந்தது புரியாமல் போன் செய்து விளக்கம் கேட்ட நண்பன்கூட உண்டு. 


எனது நெருங்கிய உறவினர்கள் தமிழ் தெரியாவிட்டால் கூட Google Translate இல் பதிவிறக்கம் செய்து ”அலை” களை வாசிப்பதாகக் கேள்விப்பட்டு நெகிழ்ந்திருக்கிறேன். எனது மருத்துவ நண்பர்கள் நிறைய பேர் நேரம் கிடைக்கும்போது எப்படியாவது ’அலை’ வாசித்துவிடுவதாகக் கூறுவார்கள். அதில் சாப்பிடவும் தூங்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மகப்பேறு மருத்துவர்களும் உண்டு என்பது தனிச் சிறப்பு.என்ன தவம் செய்தேன் இத்தைகைய நண்பர்கள் வட்டத்தைப் பெற என்று புரிய வைத்தது இந்த எழுத்துக்கள் மூலமாகத்தான். 


வேலைப்பளு ,  கொரோனா கால தனிமை போன்ற சோர்வடைய வைக்கும் நேரங்களில் எழுத ஆரம்பித்தால் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாகி விடுகிறேன். நிறைய நேரங்களில் எழுத ஆரம்பிக்கும்போது நினைத்த கரு  மாறிப்போய் புதுப்புது அலைகள் மனசை உருட்டிக் கொண்டுபோய் வேறு எதையோ எழுத வைத்துவிடும். திருச்செந்தூர் கடலலைகளில் புரண்ட மாதிரி உல்டாவாக எழுதிவிடுவேன்.


பழைய கதைகளை எழுதும்போது எனக்கு நினைவுக்கு வந்ததை மட்டுமே எழுதியிருப்பேன். அதை வாசித்தவுடன், அதில் தொடர்புடைய நண்பர்கள் விட்டுப்போன சங்கதி அல்லது நபர் பற்றி பின்னூட்டத்தில் சொல்லுவார்கள். அடடா! இவ்வளவு முக்கியமானதை விட்டு விட்டோமே என்று நினைக்கும் அளவுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும்."சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி" என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தம்.


 உண்மையாகவே வாழ்க்கை பெரிய நாடக மேடைதான். அள்ள அள்ள குறையாத அநுபவங்கள் அநேகம். எனது எழுத்தில் வருவது சிறு துளி மட்டுமே. அதிலும் சில கசப்பான அநுபவங்களை இருட்டடிப்பு செய்துவிடுவேன். சிலர் மனதை நோகச் செய்யுமோ என தோன்றும் விஷயங்களையும் எழுதுவதில்லை.


மருத்துவக் கல்லூரி வாழ்க்கை மிக முக்கியமான பருவத்தின் அநுபவங்கள். பதினாறு வயது வெகுளித்தனத்துடன் காலடி எடுத்துவைத்து மிக நீண்ட ஆறரை வருடங்கள் கொண்ட நீண்ட பயணம். எங்களது பலம், பலவீனம், ஆசை, கனவு எல்லாவற்றையும் தயக்கமின்றி பகிர்ந்து கொண்ட நண்பர்களை உள்ளடக்கியது. பாசாங்குகளற்ற நட்பு. ஒவ்வொருவரைப் பற்றியும் ஏகப்பட்ட அலைகள் எழுதலாம்.


 எப்போதுதான்  எழில் அண்ணனைப் பற்றி எழுதப் போறீங்கன்னு ஏகப்பட்ட நச்சரிப்பு. இப்போதுதான் முதல் வருட நினைவுகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். அண்ணன் வர மூன்றாம் ஆண்டு ஆகும் தம்பிகளே, அதுவரை காத்திருங்கள். 


ஆகஸ்ட் மாதம் வாழ்க்கையில் அநேக நல்ல விஷயங்களைத் தந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும் ஆகஸ்ட்டில்தான். எனது எழுத்துப் பயணம் தொடங்கியதும், இடைவெளி விட்டுத் தொடர்வதும் அதே ஆகஸ்ட் மாதம்தான். அருமையான மகன் டேனியல் பிறந்ததும் ஆகஸ்ட் தான். அநேக பயணங்கள் செல்வதும் ஆகஸ்ட் தான் . ஆடி மாதத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சைகள் குறைவாக இருப்பதால் அன்புக் கணவரின் அப்பாயிண்ட்மெண்ட் அப்போதுதான் கிடைக்கும்.


ஒரு வருடம் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் வரப்போகும் வருடத்திலும் என்னுடன் பயணம் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி கூறிக்கொள்கிறேன்.


My blog: www.forusdear.blogspot.com

அலை-51

 அலை-51

‘‘ பிரண்டை துவையல் ” செய்வது பற்றி நண்பர்கள் குழுமத்தில் அடிக்கடி குறுஞ்செய்திகள் வந்து கொண்டே  இருக்கும். எல்லோரும் நள மஹராஜா மாதிரி சமையல் கலை வல்லுநர்கள் ஆகிவிட்டதாக நினைக்க வேண்டாம். குழுமத்தில் காணப்பெறாத நண்பரையோ அல்லது வாய் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்பவரையோ துவைத்து எடுத்து குமைப்பதற்குப் பெயர்தான் பிரண்ட்(ஐ)துவையல். அதற்கென்றே எங்களை மாதிரி சில ஆடுகளும் மந்திரித்துவிடப் பட்டிருப்போம்.


குமைப்பது என்ற குறும்புத்தனமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் சூடு பிடித்தது. யாரிடமும் நேரிடையான பேச்சு வார்த்தை என்பதே கிடையாது. குமைச்சு எடுப்பதுதான் எங்கள் தலையாய தொழில். வகுப்புத் தோழர்கள் தொடங்கி வாத்தியார்கள் வரை யாரையும் விட்டு வைச்சதில்லை.


 யாரைப்பற்றியாவது குமைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றால் அவர்களை “எண்ணெய்” லிஸ்ட்டில் சேர்த்துவிடுவோம். வழவழா கொழகொழா டைப் என்று அர்த்தம். எங்களுக்கு செட் ஆகாது. ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கூட எங்களுக்குக் கிடையாது. 


எதிரில் உள்ளவர்கள் என்ன பேசினாலும் அதிலிருந்தே வார்த்தைப் பிரயோகங்களை உருவாக்கி கேலிபேசி கலகலப்பூட்டுவதுதான்  எங்கள் பொழுதுபோக்கு. யாரையும் மனம் நோகவோ இழிவு படுத்தியோ குமைப்பது இல்லை. அதனால் எங்களது அரட்டைகள் அநேகமாக எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டே வளர்ந்தது. 


அதிலும் வகுப்புத் தோழியரை சீண்டுவதில் உள்ள சுகமே தனிதான். அந்த சீண்டல்களும் கேலிப் பேச்சுகளும்தான் எங்களிடையே இணைபிரியா நட்பு வளையத்தை உருவாக்கி இருக்கிறது என்றும் கூட சொல்லலாம். சீண்டுபவர்களும் சீண்டப்படுபவர்களும் அப்பப்போ மாறிக்கொண்டே இருப்போம். 


நாங்கள் விரிக்கும் வலையில் அடிக்கடி மாட்டுவது உஷாவும் சுப்புவும்தான். இரண்டுபேரிடமும்  வெகுளித் தனமான குழந்தைத்தனம் இருக்கும். உலக மஹா பொய்யைக்கூட ஆணித்தரமாகச் சொன்னால் அப்படியே நம்பிவிடக் கூடியவர்கள். அதிலும் சுப்புலக்ஷ்மிதான் ரொம்ப குட்டிப் பிள்ளை. என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவாள். 


அவளிடம் ஆங்கிலத்தில் வேகமாக ஏதாவது சொன்னால் மறுபடி விளக்கமாகக் கேட்டு தெரிந்து கொள்வாள். ஒருநாள் ஏதோ பேச்சு வாக்கில் “Do or Die” என்று பேசிக் கொண்டிருந்தோம். வேகமான தொனியில் இருந்ததால் அதை அவளால் புரிந்து கொள்ள முடியாமல் மறுபடியும் கேட்டாள். நாங்க பதில் சொல்றதுக்கு முன்னாடி உஷா இடையில் புகுந்து தமிழில் அதற்கு “முத்தம் தரவும்” என்று அர்த்தம் என்று கூறிவிட்டாள். 


எங்ளுக்கோ சிரிப்பு தாங்க முடியலை. ஆனால் சுப்பு அதை அப்படியே நம்பிவிட்டாள். அன்றிலிருந்து சுப்புவை பார்க்கும் போதெல்லாம் உஷா Do or die என்று சொல்லுவாள். முத்தம் தரச்  சொல்லுவதாக நம்பி பயந்து சுப்பு தெறித்து ஓடுவாள். இது கொஞ்ச காலம் விடுதியில் களேபரமாக ஓடிக் கொண்டிருந்தது.கடைசியில் சுப்புவைக் காப்பாற்ற யாரோ உண்மையைச் சொல்லிட்டாங்க. அப்போ கூட சுப்பு கோபப்படாமல் உஷாவை செல்லமாகக் கடிந்து கொண்ட பாங்கு நட்புக்கு இலக்கணம்.


ஒவ்வொருத்தரையும் குமைப்பதற்கு என்றே தனித்தனி ட்ராக் வைச்சிருப்போம். பானு , நளினி மாதிரி ஆளுங்க இங்கிலீஷ் மீடியம் பள்ளியிலிருந்து வந்தவங்க. என்னைக்காவது  இங்கிலீஷில் பேசிட்டாங்கன்னா அன்னைக்கு முழுவதும் அவங்க தான் இலக்கு. குமைச்சுத் தள்ளிடுவோம். அதனாலேயே விடுதியில் ஆங்கிலத்தில் பேசுவதையே தவிர்த்து விடுவாங்க. எங்க வகுப்பில் நிறைய பேர் தமிழ் மீடியத்திலிருந்து வந்தவர்கள். அதனால் ஆங்கிலத்தில் பேசுபவர்களைக் குமைப்பது ஒரு ஜாலி. 


ராமேஸ்வரிதான் கலாய்ப்பதில் கில்லாடி. விஷயமே இல்லாமல் மூணு மணி நேரம் சிரிக்கணும்னு நினைச்சா அவளோட ஜோடி போட்டுக்கலாம்.  ‘‘ மொழி ” படத்தில் ப்ரித்விராஜ்&ப்ரகாஷ்ராஜ் லிப்ட்டில் சிரிக்கிற ரேஞ்சுக்கு நினைச்சு நினைச்சு சிரிக்கிற மாதிரி ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. அவள் இலங்கையிலிருந்து வந்திருந்ததால் நடை உடை பேச்சு எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ரொம்ப தைரியமாகவும் இருப்பாள். ராகிங் மாதிரி விஷயங்கள் அவளை அசைக்கவே முடியாது.  ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா விடுதியே அதிரும் அளவுக்கு சிரிக்க வேண்டியிருக்கும்.


அடுத்து மாட்டுவது நாகர்கோவில் ஆசாமிங்கதான். அவங்களோட உச்சரிப்பும் வார்த்தைகளும் மலையாள வாடையுடன் இருக்கும். எங்களுக்கு அது கொஞ்சம் காமெடியாகத் தெரியும். தமிழுக்கே தனி அராதி தேவைப்படும். அதிலும் நண்பர்களை அவர்கள் அழைக்கும் “ மக்ளே ” என்ற வார்த்தைதான் எங்கள் முதல் இலக்கு.அவங்க கொன்னு களையும்ன்னு சீரியசாகச் சொல்லும்போது , எதைக் களையணும்னு கேலி செய்து குமைப்பது செம ஜாலி.


நாங்க குமைக்க ஆரம்பிக்கும் முன்பே முறைத்துப் பார்த்து அடக்கிவிடும் ஆட்களும் உண்டு. அதிலும் லோகாவின் அனல் பார்வையில் மாட்டினால் அத்தனைபேரும் அம்பேல். அப்படியே பம்மிப் போய் அடுத்த தளத்துக்குப் பறந்துவிடுவோம். அதனாலேயே அவங்களோட இரண்டாம் தளத்துக்கு அடிக்கடி போறதில்லை. சில கோஷ்டிகள் அவளோட பாதுகாப்பில் தப்பிச்சுக்குவாங்க. நாங்க சீண்ட முடியாது.


சில மக்கள் எங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. என்ன சொன்னாலும் எப்படி குமைச்சாலும்  சின்ன சிரிப்புதான். அவங்ககிட்டேயெல்லாம் எங்க பருப்பு வேகாது.கொஞ்சம் அதிகமா குமைக்க ஆரம்பிச்சா நம்மளை உட்கார வைச்சு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் எங்களோட “புளி” ஜோக்குகளுக்கு சிரிக்கவும் கொஞ்சம் பேர் உண்டு. சஹாயமேரி, ராமலட்சுமி(நினைவில் வாழும்), ஸ்டெல்லாவெல்லாம் தங்கமான பிள்ளைகள்.

 நாங்க என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க, நிரந்தர ரசிகைகள். 


ஜெயாதான் சூப்பர் வேதாந்த வாதி.  “என்னடா பொல்லாத வாழ்க்கை’’தான் அவளோட ட்ரேட் மார்க் பாட்டு. எதுக்கும் அசைய மாட்டாள். குமைக்கிறதைக்கூட ரொம்ப ஜாலியாக எடுத்துக்குவாள். எங்க எல்லாருக்கும் சட்டாம்பிள்ளை மீனாக்காதான். அவங்களை மட்டும் குமைக்கவே முடியாது. மத்தவங்களையும் குமைக்க விடமாட்டாங்க. நல்லா திட்டு கிடைக்கும். அவங்க படிக்கப் போன பிறகு ஒரு மூலையில்தான் எங்க அரட்டை அரங்கம் நடக்கும். ஆனால் சூரியகாந்தி சத்தமா சிரிச்சு காட்டிக் கொடுத்திடுவாள். துரோகி.


ரோட்டை ஒட்டிய அறைகளில்தான் அடிக்கடி இந்த மாதிரி கூடுகைகள் நடக்கும். அந்த சமயத்தில் யாராவது ஆண்கள் சைக்கிளில் கடந்து போனால் அன்றைக்கு அவர்களைப் பற்றிய கதா காலட்சேபமாகத்தான் இருக்கும். விடுதி வாசலில் ஜோடியாகப் பேசிக்கொண்டிருப்பவர்களும் எங்கள் அரட்டையிலிருந்து தப்புவதில்லை. தினம் தினம் வெவ்வேறு ஜோடிகள் நிற்பதால், புதுப்புது புரணிகள் பேசுவோம். 


இப்படியெல்லாம் பில்ட்அப் கொடுக்கிறதாலே பெரிய ரவுடிக் கூட்டம்னு நினைச்சுடக் கூடாது. பரிதாபமாகத்தான் சுத்திகிட்டு இருப்போம். எல்லாம் உள்வீட்டு  அட்டகாசம் மட்டும்தான். எங்களையும் குமைக்க ஒரு சீனியர்ஸ் கோஷ்டி உண்டு. ஜாலியாக ஓட்டுபவர்களுடன் , நாங்களும் சேர்ந்து கொண்டு ப்ரண்ட்ஸ் ஆயிடுவோம். கொஞ்சம் கடுப்பேத்துற ஆட்களை ஒதுக்கி வைச்சிடுவோம். 


வகுப்புத் தோழர்களைக் குமைப்பது வேறுவிதமாக ஜாலியாக இருக்கும். ஆனால் நேரடியாக பண்ண மாட்டோம். எங்களுக்குள்ளேயே ஒவ்வொருத்தரைப் பற்றியும் புரணி பேசி பட்டப் பெயர் வைத்து குமைச்சுக்குவோம். வாத்தியார்கள் பாடும் அதே மாதிரிதான். 


சாயங்காலம் ஏதாவது ஒரு வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு வகுப்பில் நடந்த விஷயங்களை அலசி, அதில் சம்பந்தப்பட்ட மாணவன், வாத்தியார் எல்லாரையும் ஒருபாடு விமர்சித்து கேலி பண்ணி முடிப்பதுதான் அன்றைய ஹோம்வொர்க். அதிலே மட்டும் எல்லா பெண்களும் சேர்ந்துடுவோம்


ஒருத்தருக்கு பிடிச்ச வாத்தியாரை அடுத்தவங்க குமைக்கும்போதும், அவங்களுக்குப் பிடித்த நண்பர்களைக் கேலி பண்ணும்போதும் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கிடுவாங்க. அதைத் தொடர்ந்து வரும் விவாதங்கள் சில சமயங்களில் சண்டைகளில் முடியும். நல்லா படிக்கிற பிள்ளைங்க எல்லாம் வாத்தியார்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு சண்டைக்கு வந்திடுவாங்க. எங்களை மாதிரி கடைசி பெஞ்ச் ஆட்கள் எஸ்கேப்.


சில சமயங்களில் எங்களுக்குள் பேசப்படும் கேலிப் பேச்சுகள் சம்பந்தப்பட்ட நபர்களையே போய்ச் சேர்ந்திடும். ஏகப்பட்ட பிரச்னைகளும் பின்னாடியே வந்திடும். சில உளறல் வாய்கள் இந்தமாதிரி அடிக்கடி பிரச்னைகளில் மாட்டி விட்டுடுவாங்க. நாங்களும் அடிக்கடி அசடு வழிஞ்சுக்குவோம்.


குமைப்பதும் அசடு வழிவதும் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. வயதும் பருவமும்தான் மாறியிருக்கிறது. குறும்பு அப்படியே இருக்கிறது. அடுத்த பிரரண்டை துவையலுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறோம்.

உலக தாய்ப்பால் வாரம்

 "உலக தாய்ப்பால் வாரம்"

ஆகஸ்ட் 1-7 வரை


பனிக்குட நீரில்

துள்ளி விளையாடி

பஞ்சு மெத்தையான

நஞ்சுப்பையில் கால் உதைத்து

பத்து மாதங்கள் 

பதுங்கிக்கிடந்தேன் கருவறையில்

பத்திரமாய்ப்

பார்த்துக்கொண்டவள் அன்னை


உதிரத்தை உணவாக்கி

உருவாக்கியவள் அம்மா

கருவறையில் தொப்புள் கொடியால்

 பந்தம் தந்தவள்

பிரசவ அறையிலும்

பாலூட்டி சேர்த்தணைத்து

பிறவிப் பயனை

உணர்த்தியவள் என் தாய்


                                      இப்படிக்கு

தாய்ப்பாலில் வளர்ந்த மழலை

அலை-50

 அலை-50

அலைகளில் மிதக்க ஆரம்பித்து அரை சதம் போட்டாச்சுன்னு நினைக்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எழுத ஆரம்பிக்கும்போது இத்தனை தூரம் வருவேன் என்று நினைக்கவே இல்லை. ஏதோ ரெண்டுமூணு பதிவுகள் போட்டுவிட்டு முடித்துவிடலாம் என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் எழுத எழுத இன்னும் அதிகமாக எழுத வேண்டும்போல் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. என் எழுத்துக்களைத் தவறாமல் வாசித்து பின்னூட்டங்கள் மூலமும் நேரிலும் உற்சாகப்படுத்திய நண்பர்கள்தான் இந்தப் பயணத்தின் கிரியா ஊக்கிகள். 


என் சொந்தக்கதை பற்றியே சிலாகித்துக் கொண்டிருப்பது, படிப்பவர்களுக்கு அலுப்பைத் தருமோ என எண்ணி சில நாட்கள் அமைதியாய் இருப்பேன். அந்த சந்தர்ப்பங்களில் எதிர் பாராத நண்பரிடமிருந்து வந்த பாராட்டுகள் மறுபடியும் எழுத வைக்கும். அதிலிருந்துதான் என் புரிதலும் அதிகமானது. அனுபவங்கள் என் வாழ்வைச் சுற்றி வந்தாலும் அதன் சாயல்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் நடந்திருக்கும் என்பதுதான் உண்மை. 


எனது அலைகள் மீது தவழ ஆரம்பித்தவர்கள் தங்கள் கறுப்பு வெள்ளை நாட்களை , அதாங்க, கல்லூரிப் பருவங்களைத் தூசி தட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வகுப்பு மற்றும் குடும்ப குழுமங்களில் அந்தக்கால கறுப்பு வெள்ளைப் படங்கள் பதிவேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. “பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல்” நிறைய பேர் பழங்கதைகள் பற்றி கடலை போட்டுக் கொண்டிருக்கிறோம். அதுக்குக் காரணம் கொரோனா தந்த தனிமையாகவோ அல்லது சீனியர் சிட்டிசன் ஆகிவிட்ட வயது மூப்பினாலோ இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், காரியம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 


கடலை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்றதும் , அந்தக்கால ”கடலை”கள்தான் நினைவுக்கு வருகிறது. சாதாரணமாக சாப்பிடும் கடலைக்கு ஆயிரம் வியாக்கியானங்களுடன் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது மருத்துவக் கல்லூரியில்தான். கல்லூரியில் சேர்ந்த போது அரசல் புரசலாக சீனியர்கள் அதைப் பற்றி பேசுவார்கள். முதலில் புரியவில்லை. பிறகுதான் அதன் அர்த்தம் புரிந்தது. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை கடலை போடுவதென்றால் ஆணும் பெண்ணும் பேசுவதைத்தான் குறிக்கும். அதைப்பற்றிப் பேசும்போதே ஒரு கள்ளத்தனத்துடனும் கிளுகிளுப்புடனும் பேசுவார்கள். அதற்கென்று தனி அகராதி, விளக்கம் எல்லாம் உண்டு. கடலை வறுப்பது அவிப்பது உடைப்பது எல்லாம் கூட உண்டு. காலநேரம், இடம், மனிதர்களைப் பொறுத்து பலப் பல ஸ்வாரசியமான கடலை கதைகள் விடுதியில் சுற்றிக் கொண்டிருக்கும். பொழுது போகாதவர்களுக்குப் புறணி பேசவும் ஏதுவாக உடைத்த கடலைகள் கிடைக்கும். 


எங்க வகுப்பு எப்பவுமே கொஞ்சம் ராங்கி பிடிச்ச வகுப்பு என்பதால், அது எப்படி ஆணும் பெண்ணும் பேசுவது மட்டும் கடலை போடுவதாகும்; பெண்களுக்கிடையில் பேசுவதும் கடலை போடுவதே என யோசித்து அப்படியே வழிமுறைப் படுத்திக் கொண்டோம். அதனால்தான் இப்போதும் அடிக்கடி கைபேசியில் கடலை போடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. யார்கூட கடலை போட்டால் என்ன , சூடாக இருக்கும் போது அதன் சுவையும் மணமும் தனிதான். ஆனால் அந்தக் காலத்தில் கடலை பிரச்னையால் ஏகப்பட்ட அடிதடிகள் தகறாறுகள் எல்லாம் ஆகியிருக்கிறது.


கல்லூரிக்குள்ளேயே வெவ்வேறு ஜாதி மதத்தைச் சேர்ந்தவர்கள் கடலை போட்டால் அதைப் பிரிக்கவும், பிரச்னை பண்ணவும் ஒரு கோஷ்டி அலையும். Guardian Angels!! ஜூனியர் சீனியர் கடலை போட்டால் வகுப்புகளுக்கிடையில் தகராறு வரும். எங்க கல்லூரி பெண்களுடன் பக்கத்துக் கல்லூரி மணவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டால் போதும், ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க பாடு அதோகதிதான். எங்க கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் சதக்கதுல்லா மற்றும் ஜான்ஸ் காலேஜ் மாணவர்களுடன்தான் அடிக்கடி மோதல் ஏற்படும். பஞ்சாயத்துகளும் நடக்கும்.


 நிறைய கதைகள் எங்களுக்கு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு கூட தெரிய வரும். அவ்ளோ சீக்ரெட்டாக நடக்கும். பாவம், எத்தனை காதல்கள் அதனால் பிரிந்து போனதோ தெரியாது. அதிலும் ஜூனியர்கள் அந்த மாதிரி கடலைகளில்சிக்கிக் கொண்டால் நேரடியாகவே அடக்குமுறை நடக்கும். அந்த மாதிரி சமயங்களில் விடுதிக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் கூட வித்தியாசமாகவும் மிரட்டும் தொனியிலும்  இருக்கும். 


எங்கள் விடுதியின் தொலைபேசி மாடிப்படிக்கட்டின் அடியில் புறாக்கூண்டு போன்ற இடத்தில் இருக்கும். Trunk call book பண்ணி பேசுவதுதான் அந்தக்காலங்களில் இருந்த ஒரே தொலைத் தொடர்பு. அதற்கு பொறுப்பாக பரமசிவம் மற்றும் செல்லையா என இரண்டு அட்டெண்டர்கள் இருந்தார்கள். யாருக்காவது வீட்டிலிருந்து போன் வந்தால் கீழிருந்து பெயர்களைக் கூவி அழைப்பார்கள். தடதடவென்று நாலுகால் பாய்ச்சலில் போன் வந்தவர் ஓடி வருவார். சாயங்காலம் கல்லூரி விட்டு வந்ததில் இருந்து பெரிய கூட்டமே போன் பண்ணவும், போனை எதிர்பார்த்தும் முன்னாடி ஹாலில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பெர்சனல் போனை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், தங்கள் பெயர்கள் கூவப்படுவதை விரும்பாமல், அங்கேயே தாமதித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களையெல்லாம் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு ஒரு கூட்டம் கடந்து போகும்.


இவைகளுக்கு இடையே முதலாமாண்டு மாணவிகளுக்கென்றே நிறைய Prank calls கூட வரும். சில சமயம் ஜாலியாகவும் பல சமயங்களில் குமைப்பது போலவும் வரும் . எப்போதாவது ஆபாசமான அழைப்புகளும் வரும். யாருக்கு போன் வதாலும் சின்ன கூட்டமாக சேர்ந்து போய்த்தான் பேசுவோம். அதனால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் பாதிப்பு வராது. ராகிங் பாணியில் பேசுவது சீனியர்களா அல்லது அந்த போர்வையில் வகுப்புத் தோழர்களே கேலி பன்ணுகிறார்களா என்பது எங்களால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. 


திடீரென போன் பண்ணி எங்களுக்கெல்லாம் ”பட்டப் பெயர்” (Nick name) வைத்திருப்பதாகச்  சொல்லுவார்கள். கு2 க2 என்றெல்லாம் கூறிவிட்டு விளக்கம் சொல்லாமல் வைத்துவிடுவார்கள். மறுநாள் வகுப்பில் யாருடைய முகத்திலாவது முந்தின நாள் போன் பண்ணிய அறிகுறி தெரிகிறதா என ஒற்றர் வேலை பார்ப்பதிலேயே பொழுது போய்விடும். ஆனாலும் கண்டு பிடிச்சிருக்க மாட்டோம். இது மாதிரி நிறைய சம்பவங்கள் சாயங்கால பொழுதுகளை பிஸியாக வைத்திருக்கும்.


விடுமுறை தினங்கள் வந்தால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்யும். ஆனாலும் சோம்பேறித்தனமாக அதிக நேரம் தூங்கி Recreation room இல் பேப்பர் வாசித்து பாட்டு கேட்டுவிட்டு சாயங்கால நேரங்களில் ஜங்ஷனுக்கு ஷாப்பிங் கிளம்பிவிடுவோம். ஒரே ஒரு பேனா வாங்க வேண்டுமென்றால்கூட நாலைந்து பேராக கிளம்பிப் போய்விடுவோம். பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் இருக்கும் கவிதா ஷாப்பிங் சென்டர் தான் எங்களுடைய  FORUM MALL. பத்துக்குப் பத்து ரூமில் கண்ணாடி ஷெல்ஃப்களில் அனைத்துவிதமான பொருட்களும் கிடைக்கும். எங்க கல்லூரி மாணவ மாணவிகள் எல்லோரும் அந்த கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.


 ஷாப்பிங் முடிச்சுட்டு அப்படியே தானா மூனா கட்டிடம் முன்னாடி ஒரு நடைப் பயிற்சியுடன் கூடிய  window shopping பண்ணினால் விடுமுறை தினம் இனிதே முடியும்.கொஞ்சம் கையில் காசு புரளும் நாட்களில் அப்படியே அரசன் ஐஸ்க்ரீமில் ஏதாவது கொறித்துவிட்டு வருவோம். உஷா எங்களுடன் வந்தால் ஐஸ்க்ரீம் சாப்பிடாமல் வர முடியாது. நாங்கள் படித்த காலத்தில் சின்ன பெட்டிக் கடை சைஸில் இருந்தது இப்போது பெரிய கடையாக மாறியிருக்கிறது.


 கிளம்பிப் போகும்போது எல்லோரும் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு கொஞ்சிக் குலாவிக்கொண்டு  போவோம். திரும்பும் நேரம் வரும்போது ஏதாவது கருத்து வேறுபாடு காரசாரமான விவாதம் என்று ஏதோ ஒரு பிரச்னையுடன் டவுண் பஸ்ஸில் திக்குக்கு ஒருவராக உட்கார்ந்து வருவோம். அடிக்கடி இதே மாதிரி நடக்கும். ஆனாலும் அடுத்த ஞாயிறும் இதே கதைதான் தொடரும்.


ஏதாவது ஒருவாரம் எங்கேயும் போகாமல் விடுதியில் இருந்தாலும் ஏதாவது சேட்டை பண்ணிக் கொண்டுதான் இருப்போம். காற்றடிக்கும் காலங்களில் விடுதிக்கு முன்னால் உள்ள காலியிடத்தில் பட்டம் விடுவோம். அல்லது விடுதியை ஒட்டிய கீழ்புறத்தில் throw ball விளையாடுவோம். எதுவுமே செட் ஆகவில்லை என்றால் வெராண்டாவில் அமர்ந்து கொண்டு அப்படி இப்படி செல்பவர்களை வம்புக்கு இழுப்போம். 


அதில் அடிக்கடி மாட்டுபவர்கள் அட்டெண்டெர்ஸ் பரமசிவமும் செல்லையாவும்தான். பெண்கள் விடுதியில் பொறுப்பான வேலை பார்த்து எங்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்தவர்கள். “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது செல்லையா சவுக்கியமா” என்று கோரஸாகப் பாட்டுப் பாடி அவர்களை வம்புக்கிழுத்தாலும் சிரித்துக் கொண்டே கடந்து போய்விடுவார்கள். 

இரவு 9 மணிக்குள் அனைவரும் விடுதிக்குள் வந்துவிட வேண்டும். தாமதமாக வருவதென்றால் வார்டனிடம் முன்னாடியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வாரத்துக்கு நாலுநாளாவது சினிமாவுக்கு சென்றுவரும் எங்கள் கோஷ்டிக்கு அனுமதி பெறுவது கஷ்டம். அந்த மாதிரி நாட்களில் விடுதி கதவை திறந்துவிட்டு சஹாயம் பண்ணுவதில் இருவரும் எங்களுக்கு நண்பர்களே. அதையும் மீறி ரொம்ப நேரமாகிவிட்டால் கேட்டை ஒட்டி இருக்கும் தாமரை வடிவ க்ரில்லில் இருக்கும் சந்து வழியாகவும் நுழைந்து வந்துவிடுவோம். அப்போதெல்லாம் 40-50 கிலோ எடையில்தான் எல்லோருமே இருப்போம். அதனால் சந்துலே புகுந்து வர்றது எல்லாம் சாத்தியமாக இருந்தது.


அடுத்ததாக எங்கள் கலாட்டாவில் மாட்டுபவர்  மெஸ் பொறுப்பாளர் “பிள்ளை ” தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொனியில் அவரை அழைக்கும் விதமே தனிதான்.  பிரளயமே வந்தாலும் அவர் சமையலும் மாறாது சிரிப்பும் மாறாது. விடுதியில் படித்த ஐந்தரை ஆண்டுகளும் அதே மெனு, அதே சுவை, அதே பிள்ளை. ஆனால் கரெக்டான நேரத்தில் உணவுகள் ரெடி பண்ணி வைப்பதே பெரிய சர்க்கஸ் என்பதால் வெரைட்டிகளைப் பார்க்க முடியாது. முதலாண்டில் நான் சுத்த சைவமாக இருந்ததால் வீட்டு சாப்பாட்டுக்கும் மெஸ் சாப்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. 


நான்வெஜ் சாப்பிட்டவர்களுக்கு வெரைட்டிகள் கிடைக்காது. கூப்பிடும் தூரத்தில் இருந்த அஷோக் மெஸ்ஸில் சகல விதமான மாமிச வகைகளும் கிடைக்கும் என்பதால் அங்கு நிறைய பேருக்கு அக்கவுண்ட் இருக்கும். ஆனால் அங்கு எந்நேரமும் ஆண்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் அங்கு போய் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை. செல்லையாவோ பரமசிவமோ பார்சல் வாங்கித் தந்துவிடுவார்கள். அஷோக் மெஸ்ஸின் ஆயில் மட்டன் ரொம்ப பிரபலம். ஆண்கள் விடுதியில் இருப்பவர்களுக்கு பெண்கள் விடுதி முன்னர் நடை பயிலவும் சைக்கிள் விடவும் அஷோக் மெஸ்தான் சரியான சாக்குபோக்கு.  


வருகின்ற ஆகஸ்ட் மாதத்துடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 44 வருடங்கள் முடிவடைகின்றன. ஆனாலும் அன்றைய நிகழ்வுகளும் நினைவுகளும் நேற்று நடந்தது போல் நெகிழ்வைத் தருகின்றது.

அலை-49

 அலை-49

“சினிமாவுக்குப் போன சித்தாளு” என்று ஜெயகாந்தன் குறுநாவல் உண்டு. எங்களை (பானு&தாணு) அவர் பார்த்திருந்தால்  ”சினிமாவுக்குப் போன ரெட்டை வாலு”ன்னு எழுதியிருப்பார். சினிமா பார்ப்பதில் எங்களை மிஞ்ச ஆளே கிடையாது. ஆனால் சினிமா பைத்தியங்கள் அல்ல. வாரத்துக்கு ஏழு படம் பார்க்கச் சொன்னாலும் ரெடியாக இருப்போம். ஹாஸ்டலில் பார்த்த மாதிரி இருக்கும் அடுத்த கொஞ்ச நேரத்தில் சினிமா தியேட்டர் வாசலில் இருப்போம். பெரிய கூட்டம் சேர்ந்து போவதெல்லாம் வேலைக்கு ஆகாது. எங்க வழியே தனி வழிதான். 


திருநெல்வேலியில் வேறு எந்த விதமான பொழுது போக்கு அம்சங்களும் கிடையாது. சினிமா பார்ப்பதுதான் தலையாய அவுட்டிங். ஏகப்பட்ட சினிமா தியேட்டர்களும் உண்டு. இப்போ அதையெல்லாம் இடிச்சு வெவ்வேறு கட்டிடங்களாகக் கட்டி விட்டார்கள். ஜங்சனில் ஆரம்பிச்சு டவுண் வரைக்கும் வரிசையாக திரையரங்குகள் இருக்கும். பாலஸ்-டி-வேல்ஸ் என்று வேற்று மொழியுடன் புரதானமான திரை அரங்கு உண்டு. அரதப் பழசாக இருந்தாலும் ஆங்கிலம், மலையாளம் போன்ற படங்கள் அங்கேதான் அதிகமாக திரையிடப்படும். என்ன காரணத்துக்காக அந்த பெயர் வந்தது என்று பின்னூட்டங்களில் கேட்கக்கூடாது, ஏன்னா எனக்குத் தெரியாது.


பாரம்பரியமான திரை அரங்கு என்றால் சென்ட்ரல் தியேட்டர்தான். கம்பீரமாக அழகான முகப்புடன் இருக்கும். பெரிய திரை அரங்கும்கூட அதுதான். முன்னாடி ஏதோ சிலையெல்லாம் கூட வைச்சிருப்பாங்க. அதுக்கு எதிரேயே ரத்னா தியேட்டர் இருக்கும்.அதன் அருகிலேயே பார்வதி தியேட்டரும் உண்டு. அடுத்தடுத்து இருப்பதால், ஒரு இடத்தில் ஹவுஸ்-புல் ஆனாலும் அடுத்தடுத்த அரங்குகளில் ஏதேனும் ஒரு படத்துக்கு டிக்கெட் கிடைத்துவிடும். டிக்கெட் கிடைக்காமல் விடுதிக்குத் திரும்பியதாக சரித்திரமே இருக்காது. 


நெல்லையப்பர் கோவிலைச் சுற்றிப் பின்பக்கமாக வந்தால் நயினார் குளத்தை ஒட்டி ராயல் தியேட்டர் இருக்கும். அங்கு செல்வதற்கு பஸ் ஸ்டாப் தூரமாகவும், கொஞ்சம் ஜனசந்தடி குறைவாகவும் இருக்கும் என்பதால் ராயலுக்கு போவது ரொம்ப அரிதுதான். பாப்புலர் தியேட்டரும் டவுணில் கொஞ்சம் அசெளகரியமான இடத்தில் இருக்கும். அதனால் இரண்டுபேர் மட்டும் போவதாக இருந்தால் இந்த ரெண்டு தியேட்டரையும் தவிர்த்து விடுவோம். 


டவுணுக்கு செல்லும் மேம்பாலம் இறங்கும் இடத்தில் சிவசக்தி தியேட்டர் புதிதாக வந்திருந்தது. ஆனால் வயக்காட்டுக்கு நடுவில் இருந்ததால், கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும். கூட்டமாகப் போகத்தான் வசதிப்படும். ஜங்சனில் புதிதாகக் கட்டப்பட்ட பூர்ணகலா தியேட்டர் தான் எங்களுக்கு ரொம்ப வசதி. படம் முடிந்ததும் டவுண் பஸ் பிடிக்கவும், பெரிய படமாக இருந்தால் கடைசி பஸ் பிடிக்கவும் வசதியாக இருக்கும். சாலைக்குமரன் கோவிலை ஒட்டி இருக்கும் கடைத்தெரு எப்போதும் கலகலப்பாக இருப்பதால் ரெண்டுபேராகச் செல்ல தயக்கமே இருக்காது. இதெல்லாம் போக பாளை பஸ் ஸ்டாண்டில் அஷோக் தியேட்டரும் உண்டு. ஆனால் அதிலே நான் படமே பார்த்ததில்லை. 


எங்க ஊர் தியேட்டர்களில் புக்கிங் , சீட் நம்பர் போன்ற சங்கடங்கள் எதுவும் கிடையாது. டிக்கெட் கவுண்டரில் (ஈரோட்டுக் கவுண்டர் இல்லைங்க)  சீட்டு வாங்கினோமா, காலியிடத்தைப் பார்த்து உக்கார்ந்தோமான்னு ஜாலியாக படம் பார்க்கலாம். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் “மன்னன்” பட ரஜினி ஸ்டைலில்தான் டிக்கெட் வாங்கணும். அந்த மாதிரி நாட்களில் உஷாவை அனுப்பினால் டிக்கெட் நிச்சயமாகக் கிடைத்துவிடும்.உஷா கவுண்டமணி ஸ்டைலில்தான் அராத்து பண்ணுவாள்.


 ஒவ்வொரு சினிமா தியேட்டருடனும் பலதரப்பட்ட அநுபவங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கிடைத்திருக்கிறது. 

எங்களோட பதினாறு வயது முடிந்த நிலையில் வந்த படம்தான் “16 வயதினிலே”. பாரதிராஜா என்ற அரிய டைரக்டரின் அறிமுகம் எங்கள் அறிமுக வகுப்புடன் ஆரம்பித்தது. காதலைச் சொல்வதில் ஸ்ரீதருக்குப் பின் பாரதிராஜாதான். பாலச்சந்தரும் ஸ்ரீதரும் பாரதிராஜாவும்தான் அப்போதைக்கு எங்கள் கவனத்தின் உச்சத்தில் இருந்தவர்கள். கமலும் ரஜினியும்தான் எங்கள் கனவுலக நாயகர்கள். சினிமா தவிர வேறு எந்த பொழுதுபோக்கும் எங்களை அந்த அளவு வசப்படுத்தவில்லை அந்தப் பதினாறு வயதில். 


மூணு ரூபாய் கையிலிருந்தால் போதும், சினிமாவுக்குப் போயிடலாம். டவுண் பஸ்ஸூக்கு போக,வர எழுபது காசு , தியேட்டரில் டிக்கெட்டுக்கு 50 காசு. ரெண்டுபேர் தாராளமா போகலாம். வேறே எந்த செலவும் செய்வதில்லை.  சினிமாவுக்கென்றே பணத்தை மிச்சம் படுத்தி வைப்போம். நாங்க பார்க்காமல் தியேட்டரைவிட்டு போன படங்கள் மிகக் குறைவுதான். இடையிடையே கூட்டம் சேர்த்துக்குவோம். கும்பலாக போகும் போது செம ரகளையாக இருக்கும். எல்லோர் கவனத்தையும் கவரும் விதமாகக் கத்தி கமெண்ட் அடித்து படம் பார்ப்பது அந்த மாதிரி நேரங்களில்தான். “ஆறு புஷ்பங்கள்” படம் பார்க்க ஆறுபேர் போனோம். அதில் வரும் “ஏண்டி முத்தம்மா” என்ற பாடல் சந்திரபோஸ் குரலில் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. 


அவ்வப்போது காமெடியான நிகழ்ச்சிகளும் நடக்கும், கடுப்பேத்துற மாதிரியும் நடக்கும். ஒருமுறை பூர்ணகலா தியேட்டரில் படம் பார்க்கப் போயிருந்தபோது, ரொம்ப கூட்டம். எப்பவும் போல் டிக்கெட் எடுக்க உஷாவை அனுப்பிவிட்டோம். அவள் விரல் இடுக்குகளில் பத்து ரூபாய் தாளை இறுகப் பற்றிக் கொண்டு முண்டியடித்து டிக்கெட் கவுண்டர் வரை போய்விட்டாள். அந்தோ பரிதாபம், விரல் இடுக்கில் வைத்திருந்த பணம் காணாமல் போய்விட்டது. யாரோ உருவிவிட்டார்கள்.  உஷாவுக்கு நல்லா திட்டு கிடைத்தது. கடுப்பாகி நின்று கொண்டிருந்தோம். பஸ்ஸுக்கும் பணமில்லை.


வேறு யார் கையிலும்  பணம் இல்லை. நாலைந்து பேர் சேர்ந்து அன்றுதான் ஜாலியாக சென்றிருந்தோம் . படம் பார்க்காமல் விடுதிக்கு செல்லவும் மனமில்லை. கூடி பேசி முடிவெடுத்தோம். மீனாக்காவின் சொந்தக்காரர் தியேட்டரை ஒட்டிய தெருவில் ப்ரிண்டிங்க் ப்ரெஸ் வைத்திருந்தார். முன்பே அறிமுகம் ஆனவர்தான். அவரிடம் சென்று கடன் கேட்கலாம் என்று முடிவானது. மீனாக்காவிடம் இது குறித்து யாரும் சொல்லக்கூடாதென்று பேசி வைத்துக் கொண்டோம். இல்லாட்டி எனக்குதான் நிறைய திட்டு கிடைச்சிருக்கும். ஒருவழியாக அவரிடம் விஷயத்தை சொல்லி அசடு வழிந்து கடன் வாங்கி படம் பார்த்துவிட்டுதான் திரும்பினோம்.


 எப்பவுமே பகல் காட்சி அல்லது சாயங்கால காட்சிகள்தான் பார்க்கப் போவோம். அப்போதான் விடுதிக்குள் நேரத்துக்குள் செல்ல முடியும். திடீரென ஒருநாள் இரவு இரண்டாம் ஆட்டம் பார்க்க வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை வந்துவிட்டது. ஆசைப் பட்டுட்டா அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் எங்களுக்கு. சிவசக்தி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவு தூங்குவதற்கு சிந்துபூந்துறையில் இருந்த அக்கா வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டோம். ஆனால் படம் விட்ட பிறகு டவுண் பஸ் கிடையாது. ஆட்டோ வசதியும் அப்போதெல்லாம் கிடையாது.எப்படி அக்கா வீடுவரை செல்வதுன்னு யோசித்தோம். பிறகென்ன, நடைராஜா சர்வீஸ்தான் . அன்று பார்த்த திரைப்படத்தை அக்கு வேறு ஆணிவேராகப் பிரித்து விமர்சனம் செய்து கொண்டே நடந்ததில் வீடே வந்துவிட்டது. ஒரே அறை மட்டும் இருந்த அக்காவீட்டில் அனைவரும் தலைமாடு கால்மாடாகப் படுத்து சந்தோஷப் பட்டுக் கொண்டோம்.


எங்கள் வகுப்புத் தோழிகள் அனைவரும் கிடத்தட்ட ஒரே மாதிரியான மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். தோழியரின் குடும்பத்தினருடன் அக்கா அண்ணன் என்ற உறவுகளுடன் நெருங்கிப் பழகிக் கொள்வோம். அதனால் திடீரென இரவு நேரத்தில் இன்னொருவர் வீட்டில் தங்குவது தவறாகவோ விமர்சனத்துக்குரியதாகவோ இருந்ததில்லை. அன்று மட்டுமில்லை, ஜங்ஷனுக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் மரகதக்கா வீட்டில், அவள் இல்லாத சமயங்களில்கூட, அடுக்களையில் புகுந்து சாப்பாடைக் காலி பண்ணிவிட்டு வரும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும்.


”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.”

அலை-48

 அலை-48

"தந்தையர் தினம்" ஜுன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று அனுசரிக்கப் படுகிறது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்தவர்கள் மட்டுமல்ல தந்தைகளுடன் மல்லுக்கு நிற்பவர்களும்கூட ஆதாரிக்க வேண்டிய நாள் இது. பெண்மக்களுக்கு முதல் ஹீரோ அப்பாதான். அதனால்தான் அதிக வாழ்த்துகளும் விழாக்களும் மகள்களால் நடக்கிறது.


எங்கள் அப்பாவைப் பற்றி சொல்வதென்றால் ஒரு பதிவு போதாது. அப்பாவின் பெயர் ஐநூற்று முத்து என்பதால் எங்கள் குடும்பத்தின் செல்லப் பெயரே "PEARLS "family - "முத்துக்கள் குடும்பம்"தான். அம்மாவின்  பெயரும் "NAG500" 

(நாகம்மாள் ஐநூற்றுமுத்து) என்றே வழங்கப் பட்டு வருகிறது. அப்பாவின் பெயருக்கேற்ப 500 முத்துகளை உருவாக்குவது இந்த தலைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் ஒரு நூறு முத்துக்களாவது சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிள்ளைகள்,பேரப்பிள்கள் ,கொள்ளுப் பேரப்பிள்ளைகள் சேர்ந்து இப்போதே எழுபதைத் தாண்டிவிட்டது. அதிலும் முத்து என்ற அடைமொழியுடன்  உள்ள குழந்தைகள் அதிகமாக உண்டு. முத்துராமனும் முத்துகிருஷ்ணனும் முத்துசெல்வியும் குடும்பங்களில் ரெப்படிஷனாக இருப்பார்கள்.

 " முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக" என்ற பாடல் எங்களுக்கு ரொம்ப பொருத்தமாக இருந்ததால் அதையே குடும்ப பாடல் ஆக்கிக் கொண்டோம். யாராவது காணாமல் போய்விட்டால்கூட "நாளை நமதே" பாணியில் அந்த பாடலைப் பாடி கண்டு பிடித்துவிடுவோம். 


அப்பா என்றவுடன்  ஆறடி உயரத்தில் மெலிந்த தேகத்துடன்  வெள்ளை வேஷ்டி சட்டையில் வேகமாக நடக்கும் உருவம்தான் நினைவுக்கு வருகிறது. எப்பவுமே நாலுமுழ வேஷ்டிதான் கட்டுவாங்க.அவங்க உயரத்துக்கு அது கணுக்காலுக்கு மேலேதான் இருக்குமென்றாலும் அதுவே தனி ஸ்டைலாகத்தான் இருக்கும். எங்கேயாவது விசேஷங்களுக்கு போகும்போதுதான் எட்டுமுழம் கட்டுவாங்க. சட்டை கூட கழுத்து வழியாகப் போடும் ஜிப்பா மாதிரி இருக்கும் அரைக்கை சட்டைதான்.. எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு அப்பாவின் நடை உடை பாவனை எதுவுமே மாறியதில்லை.


அப்பாவின் உருவத்துக்கும் அம்மாவின் கைபக்குவத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. எங்களுக்கெல்லாம் லைன் சட்னி தந்துவிட்டு அப்பாவுக்கு மட்டும் கெட்டி சட்னி எடுத்து வைப்பதுமாதிரி நிறைய உண்டு. அப்பாவின் உணவுப் பழக்கமும் விசேஷம்தான். எவ்வளவு சுவையானாலும் விருந்து என்றாலும் இரண்டே இட்லிதான். சாதமும் அளவு மாறாமல் ஒரே மாதிரிதான். அப்பா அதை சாப்பிடுவதும் ஒரு அழகுதான். நுனிவிரல்களைத் தாண்டி எச்சில் பதார்த்தம் உள்ளங்கையைத் தொட்டதே இல்லை. கைகழுவ தேவையே இல்லாத மாதிரி சுத்தமாக இருக்கும். அப்பாவின் சாயலையும் ஒருசில பழக்கங்களையும் அவ்வப்போது மகன் டேனியிடம்  பார்க்கிறேன்.


அப்பா அந்தக்கால இண்டர்மீடியேட் படிச்சவங்க. எங்க ஊரில் ஆங்கில நாளிதழ் படிக்குமளவு இருந்தவர்களில் அப்பாவும் ஒருவர்.. கம்யூனிசத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.  அப்பாவிடம் உதவி கேட்டு வருபவர்கள் அதிகம் உண்டு. விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது படிவங்கள் பூர்த்தி பண்ணிக் கொடுப்பது என்று ஊர் வேலைகள் நிறைய செய்வாங்க. சட்ட சம்பந்தமான விளக்கங்கள் சொல்து,பெட்டிஷன்கள் எழுதிக் கொடுப்பது என எப்போதும் பிசியாகவே இப்பாங்க.அப்பா கம்யூனிச சித்தாந்தங்களிலும் அம்மா ஓயாத அடுப்படி வேலைகளிலும் இருந்ததால் எங்கள் வீட்டில் சாமி பூஜை சம்பிரதாயங்கள் எதுவும் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப் பட்டதே இல்லை.


அப்பாவின் நெருங்கிய தோழர் என்றால் காணியாளர் பள்ளியின் தாளாளர் வேதமுத்து சார்தான். இவங்க ரெண்டுபேரும்தான் எப்போதும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து ஊர் நியாயம் பேசிக் கொண்டிருப்பார்கள். சாயங்கால நேரங்களில் தெஷணமாற நாடார் சங்கத் தலைவர் PSR தாத்தாவுடன் நடை பயணம் போவாங்க. எங்கப்பா ஆச்சி தாத்தாவுக்கு ஒரே பையன் என்பதால் வேலைக்கே சென்றதில்லை.அரசியலும் ஊருக்கு உபகாரமும்தான் முழுநேர வேலை.வீட்டு பொறுப்புகளை அம்மாவே சமாளித்துக் கொள்வார்கள்.


குழந்தைகள்தப்பு செய்தாலோ  சேட்டை பண்ணினாலோ அப்பா யாரையும் திட்டியதோ அடித்ததோ கிடையாது. சத்தமாகக்கூட பேசியதில்லை. ஆனால் அப்பாவின் நன்மதிப்பிலிருந்து தவறிவிடக்கூடாது என்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் உண்டு. அப்பாவின் எதிரில் உட்காரக்கூட மாட்டாங்க நானும் கடைக்குட்டி நானாவும் மட்டுதான் அப்பாவுடன் உட்கார்ந்து ஜாலியாக சீட்டு விளையாடுவோம்.அடிவாங்கியே பழக்கமில்லாததால் நானும் என் குந்தைகளை அடித்ததே இல்லை.அப்படி வளர்ப்பதில் உடன்பாடும் இல்ல.


அப்பா வீட்டிலேயே இருந்தமாதிரி தோன்றினாலும் வெளி உலக தொடர்புகள் மிக அதிகம். பெரி பெரிய தலைவர்களெல்லாம் மிசா போன்ற காலங்களில் எங்க வீட்டில் தலைமறைவாக இருந்ததாக எல்லாம் கேள்வி. எனக்கு அதில் பரிச்சியம் இல்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எனக்கு இலவசமாக கல்லூரிப் படிப்பை வாய்க்கச் செய்யுமளவு திறமைசாலி. ஆனால் ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் அமைதியாக இருப்பாங்க. பிள்ளைகளின் சுதந்திரத்திலும் என்றுமே தலையிட்டதுமில்லை,தடை போட்டதுமில்லை. ஹைகிரவுண்ல் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தபோது நானும் எழிலும் சேர்ந்து உணவருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்தும் கூட என்னைக் கேள்விகள் எதுவும் கேட்டு சங்கடப் படுத்தவில்லை.அவ்வளவு புரிதலும் பெருந்தன்மையும் அப்பாவிடம் உண்டு.


அவங்ளோட கையெழுத்து ஒருவித நடுக்கம் கலந்த கோடுகள் மாதிரி இருக்கும். ஆங்கிலத்தில் Ainootrumuthu என்று போடுவார்கள். அதனால் எல்லோருடைய இனிசியலும்  "A" என்றிருக்கும். எனக்கும் சரசக்காவுக்கும்  மட்டும் தமிழ் பெயர் காரணமாக. "ஐ" என்றாகிவிட்டது. எனக்கு அதுவும் "நான்சி தாணு"வாக பெயர் மாற்றப் பட்டபோது காணாமல் போய்விட்டது.


அப்பாவின் நினைவுகள் அழியாச் சின்னமாக எங்கள் மனங்களில் இருந்தாலும்,அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இதுபோன்ற நினைவலைகளாவது சிறிது பயன் படட்டுமே என்றுதான் இந்த அவசரப் பதிவு. சொற்களில் வந்துள்ளது சொற்பம்தான்.அவ்வப்போது மடைதிந்தாற்போல் வரும்.


இதை வாசிக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் 

"இனிய தந்தையர் தின"  வாழ்த்துகள்.

அலை-47

 அலை-47

ஊரெல்லாம் ஒரே Clubhouse பேச்சாகவே இருக்கும் போது எங்க காலத்து club-ங்க பற்றி எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. பள்ளிப் பருவத்தில் தெரிந்த club-கள் எல்லாம் சின்னச் சின்ன க்ரூப்தான். எங்க ஊர் பக்கத்திலெல்லாம் Recreation Club ன்னு வைச்சிருப்பாங்க. பேட்மிட்டன் (Ball Badminton) விளையாட்டுதான் அதில் பிரதானமாக இருக்கும். இறகுப் பந்துகூட அறிமுகமாகி இருக்கவில்லை. நயினார் அண்ணன் ராம்கி எல்லாம் அதில் பிரதான ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். பெண்பிள்ளைகள் அந்த ஆடுகளத்தைக் கூட எட்டிப் பார்த்திருக்க மாட்டோம். கல்லூரி வந்த பிறகுதான் நாங்களும் ஆட்டக்காரர்களாக சேர்க்கப்பட்டோம். பள்ளி முடியும் வரை கபடியும் கோகோவும்தான் எங்கள் சர்வதேச விளையாட்டு.


கல்லூரியில் கால் வைத்ததுமே நிறைய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகவே நடந்து விடுகிறது. அசட்டுத் துணிச்சலும் , என்னால் கற்றுக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருகோடுகளாக அநேகமாக அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. நானும் அதில் அடக்கம்தானே. அதிலும் அசட்டுத் துணிச்சல் எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.கல்லூரித் தேர்தல் முடிந்து ஆண்டுவிழாவும் வந்தது. அதில் கிடைத்ததுதான் எத்தனை விதமான அநுபவங்கள்.


கல்லூரியில் எந்த விழா நடந்தாலும் அலங்காரங்களின் பொறுப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தான். என்ன பொருட்கள் வேண்டுமென்றாலும் வாங்கிதர ஆண்கள் பட்டாளம் ரெடியாக இருக்கும். காகிதப்பூ மாலைகளால் அலங்கரிப்பதுதான் அந்தக்கால ஸ்டைல். மாலைகளைக் கட்டிக் கொடுத்தால் ஆண்கள் எல்லோரும் விழா அரங்கத்தில் அதை அலங்காரத் தோரணங்களாகக் கட்டிவிடுவார்கள். பெண்கள் அனைவரும், விடிய விடிய உட்கார்ந்து காகிதப் பூமாலைகள் கட்டுவோம். ரொம்பசோர்வைத் தரும் வேலைதான் . ஆனாலும் அதையும் ரசிக்கும்படி மாற்றிக் கொள்வது எங்கள் திறமை.


 மூன்றாம் மாடியில் படிக்கட்டு முடியும் இடம் விஸ்தாரமாக காற்றோட்டத்துடன் பெரிய ஹால் மாதிரி இருக்கும். வகுப்புத் தோழிகள் அனைவரும் சுற்றி உட்கார்ந்துகொண்டு காகித மாலைகள் கட்ட ஆரம்பிப்போம். ஏற்கனவே பூ கட்டத் தெரிந்தவர்கள் கடைசியில் அமர்ந்து கட்டுவோம். அதற்கு முன்னர் பல நிலைகளில் வேலைகள் நடக்கும். பெரிய காகிதங்களை சிறு சிறு நாடாக்களாக ஒரு கோஷ்டி வெட்டிக் கொண்டிருப்பார்கள். அதை சிறு துண்டுகளாக்கி அதில் இதழ்கள்போல்  நுணுக்கமாக இன்னும் கொஞ்சம் பேர் வெட்டிக் கொண்டிருப்பார்கள். அவற்றைக் கலர் கலராகப் பிரித்து போட்டு பூக்களாக சுருட்டும் வேலை கொஞ்சம் சோம்பேறிதனமான ஆட்களுக்கு ஒதுக்கிவிடுவோம். மலை மலையாகக் கிடக்கும் காகிதப் பூக்களைப் பார்த்தால் எப்போதடா இந்த வேலை முடியுமென்று தோணும். ஆனால் அரட்டைகள் புரணி பேசுவது எல்லாம் கூடவே நடப்பதால் நேரம் பறந்துவிடும். 


கட்டின மாலைகளெல்லாம் சிக்கல் விழாமல் சின்னச் சின்ன உருண்டைப் பந்துகளாக சுற்றி வைப்பதுதான் பெரிய வேலை. அதைச் செய்ய வென்றே சில பொறுமைசாலிகள் எங்கள் வகுப்பில் உண்டு. நான் எப்பவுமே பூமாலை கட்டும் பிரிவில்தான் இருப்பேன். அப்போதெல்லாம் தரையில் அமர்ந்து சம்மணக்கால் போட்டு மணிக்கணக்கில் வேலை செய்திருக்கிறோம் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கையில், அது போன ஜென்மத்துக் கணக்கு போல் தெரிகிறது. இப்போது  முக்காலியோ நாற்காலியோ இல்லாமல் உட்கார முடிவதில்லையே. அந்த நாட்கள் அற்புதமானவைதான்.


இரவெல்லாம் உட்கார்ந்து மாலை கட்டினாலும் மறுநாள் கல்லூரிக்கு லீவெல்லாம் தர மட்டார்கள். வகுப்பறையில் போய் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான். விழா அரங்கத்தில் உள்அலங்கார வேலைகள் செய்ய கொஞ்ச பேருக்கு மட்டும் அநுமதி கிடைக்கும். அவங்களெல்லாம் ஜாலியாக வகுப்புகளுக்கு பைபை சொல்லிவிட்டு பறந்து விடுவார்கள். ஏற்கனவே கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் பயிற்சி செய்வதற்காக அநுமதி வாங்கி சென்றிருப்பார்கள். மற்றவர்கள் வகுப்பறையில் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். வகுப்பு எடுக்கிறேன் பேர்வழின்னு வரும் ஆசிரியர்கள் பாடு ரொம்ப திண்டாட்டம்தான். Dayscholars மட்டும் மிகக் கரிசனமாக வகுப்பைக் கவனிப்பார்கள்,துரோகிகள். 


கல்லூரி ஆண்டுவிழா வார இறுதி நாளில்தான் நடக்கும். அதனால் அந்த வாரம் தொடங்கியதிலிருந்தே எல்லா வகுப்புகளும் இதே நிலையில்தான் இருக்கும். பொதுவாக முதல் ஆண்டு மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபட மாட்டார்கள். வேலை செய்வதோடு சரி. ஆனால் எங்கள் வகுப்பு கொஞ்சம் திமிரெடுத்த கூட்டம். நிறைய பேர் அந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். அதிலும் பெண்களின் பங்களிப்புதான் அதிகமாக இருந்தது. பாடல், குழு நடனங்கள், நாடகம் என எல்லா நிகழ்ச்சிகளிலும் பெயர் கொடுத்திருந்தோம். இன்று அமெரிக்காவில் குடி பெயர்ந்துவிட்ட வசந்தி முதல், நடக்க சிரமப்படும் ராமேஸ்வரிவரை அந்த கால நடனங்களில் சோபித்தார்கள் என்பதை கறுப்பு வெள்ளை புகைப்படங்களை அடிக்கடி புரட்டிப்பார்க்கும்போது தெரிகிறது. ஆண்வேடமேற்று நடனமாடியவர்களுக்கு வகுப்புத் தோழர்களின் உடைகள் உதவியதும் தனிக்கதை.


அதையெல்லாம் விட பெரிய கதை எங்களுடையது. நாங்கள் படித்த காலங்களில் ரொம்ப ரொம்ப சீனியர்கள் நெறையபேர் இருந்தாங்க. சில பல காரணங்களால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாத super seniors  . ஆனால் அவங்கதான் ராகிங் மாதிரி விஷயங்களில் ஈடுபடாமலும் புது மாணவர்களுக்கு உதவி புரியும் தன்மையுடனும் இருப்பார்கள். அந்த மாதிரி சீனியர்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார்கள். பொதுவாக பெண் வேடத்துக்கும் அவர்களே மாறுவேஷம் போட்டு நடித்துவிடுவார்கள். எதேச்சையாக பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதமா என்று என்னிடமும், என் தோழி M.விஜயலட்சுமியிடமும் கேட்டார்கள். நாங்கள் இருவருமே தயக்கமில்லாமல் சரி என்று சொல்லிவிட்டோம்.


நான் பள்ளிப் பருவத்திலிருந்தே co-education பள்ளியில் படித்திருந்ததாலும், எங்கள் வீட்டில் பாலின பாகுபாடு எதுவும் இல்லாமலிருந்ததாலும் எனக்கு அதில் தயக்கமே வரவில்லை. விஜியும் நல்ல தைரியசாலி. அதனால் அவளும் சம்மதித்துவிட்டாள். அவளுக்கு அதில் கிளியோபாட்ரா என்ற கதாபாத்திரம், நான் அவளுக்கு அம்மாவாக நடித்தேன். அதனால் என்னை “அத்தை” என்று அழைக்கும் வசனங்கள் அதிகமாக வரும். என்ன நாடகம், என்ன கருத்து எதுவும் நினைவில்லை. ஒரே மேடையில் ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து நடித்தது மருத்துவக் கல்லூரி வரலாற்றில் அதுவே முதல் முறையாம். அதெல்லாம் அப்போ எங்களுக்குத் தெரியாது. சொல்லிக் கொடுத்த மாதிரி நடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டோம். ரொம்ப பெருமையாக எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று , ஆடி பாடி களைத்து ஓய்வெடுத்தோம்.


கல்லூரி விழாக்களுக்கு அடுத்த நாள் விடுமுறை விட்டுவிடுவார்கள். Post-function holiday ன்னு அதுக்கு பெயர். மறுநாள் ரொம்ப நேரம்  தூங்கி எழுந்து மெஸ்ஸுக்கு சாப்பிடப் போனால் , எங்களைப் பார்த்து சில சீனியர்கள் அடிக்குரலில் பேசிக் கொண்டார்கள். எதற்கென்று சத்தியமாகப் புரியவில்லை. அன்று முழுவதும் அரசல் புரசலாக அதே மாதிரி முறைத்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்குத்தான் மேல்தோல் ரொம்ப கனமானதே, இந்த மாதிரி சல சலப்பையெல்லாம் சட்டை பண்ண மாட்டோம். எதற்காக என்று கூட கேட்டுக் கொள்ளாமல் நாங்க பாட்டுக்கு எப்பவும் போல் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தோம்.


மறுநாள் வகுப்பறைக்குப் போனால் அங்கேயும் இதே பாணியில் சில சலசலப்புகள். எங்கள் வகுப்பில் செந்தில்வேல் முருகன் என்ற நண்பர் உண்டு. அவரை நண்பர்கள் எல்லோரும் “மாமா” என்றுதான் அழைப்பார்கள். பெண்களும் கூட அப்படியேதான் அழைப்போம். ஆனால் அன்று புதுவிதமாக மாமா என்ற சொற்களுடன் அத்தை என்ற பதமும் அடிக்கடி முணுமுணுக்கப்பட்டது. அப்போதுதான், இது எல்லாமே அந்த நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்த விமர்சனத்தின் விளைவாக ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். எனக்கு அதன்பொருட்டு சின்ன சஞ்சலமோ,குழப்பமோ  இல்லாததால் அதை ஈஸியாக எடுத்துக் கொண்டு விட்டேன்.பெரிசாக react பண்ணவில்லை. அதனால் சக மாணவர்களுக்கும் அதை பெரிது படுத்தி கலாய்க்க எந்த முகாந்திரமும் கிடைக்கவில்லை. 


ஆண்டுவிழா நாடகத்திற்குப் பிறகு விஜயலட்சுமியை கிளி(யோபாட்ரா) கிளி விஜி எனவும், என்னை அத்தை எனவும் அழைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் நாங்களும் அதை பெருசு பண்ணிக் கொள்ளவில்லை. அதை மீறி யாரும் எங்களை அதிகமாக வம்புக்கு இழுக்கவில்லை, ஏனென்றால் நாடகத்தை நடத்திய சீனியர்களின் ஆளுமை பற்றி அனைவர்க்கும் தெரியும். அவர்கள் மேலிருந்த மரியாதை கலந்த பயத்தால் அத்துடன் நிறுத்திக் கொண்டார்கள். இன்றளவும் செந்திலை எங்கு பார்த்தாலும் ”மாமா எப்படி இருக்கீங்க”ன்னு நானும், “அத்தை சவுக்கியமா”ன்னு அவரும் விசாரித்துக் கொள்வோம். அவ்வளவு புரிதலுடன் கூடிய நட்பு எங்களுடையது, எங்கள் வகுப்புத் தோழர்களுடையது. 


"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை".

(நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.)

அலை-46

 அலை-46

         "உல்லாசப் பயணம்"


கல்லூரி முதல் ஆண்டில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் - கல்லூரி ஆண்டுவிழா மற்றும் உல்லாசப் பயணம். எது ரொம்ப பிடிச்சுதுன்னு  சொல்ல முடியாதபடி ரெண்டுமே ரெண்டு வகையான அனுபவங்களைத் தந்திருந்தது.  உல்லாசப் பயணம் ரெண்டுநாள் நிகழ்வாக இருந்ததால் கூடுதல் சந்தோஷம்.


அப்போதெல்லாம் உல்லாசப் பயணம் என்றால் கேரளாவுக்குத்தான் போவார்கள். அதுதான் எங்க ஊருக்கு ரொம்ப பக்கமாக இருக்கும், செலவும் குறைவாக ஆகும். எங்க வகுப்பில் நிறைய பேர் கன்னியாகுமரியை ஒட்டிய ஊர்களிலிருந்தே வந்திருந்ததால் , அவங்களெல்லாம் அதை எப்படி ரசிச்சாங்கன்னு தெரியாது. ஆனால் எங்களுக்கெல்லாம் வெளிநாடு போவதுபோல் கிளுகிளுப்பான டூர். மாநிலத்தைவிட்டு வெளியே சென்ற முதல் டூர் என்று கூட சொல்லலாம். 


 முதல் வருடத்தின் வகுப்புத் தலைவன் மூர்த்திதான் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான் என்று நினைக்கிறேன். எறும்புபோல் துறுதுறுவென்று சுற்றிக் கொண்டிருப்பான். ஒன்றிரண்டு பேர் தவிர அனைவரும் இணைந்து சென்ற பயணம் அதுவாகத்தான் இருக்கும்.


 நிறைய விஷயங்கள் மறந்து போன மாதிரி இருக்குது. ஆனால் நிறைய நிகழ்வுகள் “டிட் பிட்ஸ்” மாதிரி நினைவலைகளை இதமாக மீட்டுகிறது. வீட்டின் கஷ்ட நிலை உணர்ந்திருந்த நான் எப்படி வீட்டில் பணம் கேட்பது என்ற தயக்கத்துடன் இருந்தேன். ஆனால் நயினார் அண்ணன் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் நன்கு உணர்ந்தவன் என்பதால் எப்படியோ ஏற்பாடு செய்து பணம் கொடுத்து விட்டான். இந்த மாதிரி அனுபவங்களைத் தவற விடக் கூடாது என்றும் சொன்னான்.


நீண்ட. ரெண்டு நாள் பயணம். கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திருவனந்தபுரம் என்றெல்லாம் எங்கள் அஜெண்டாவில் இருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரமே அதுவரை பார்த்ததில்லை. கேரள தலைநகரைப் பார்க்கப் போவதில் ஏகசந்தோஷம். அதிலும் புது இடங்களைப் பார்ப்பதில் எனக்குக் கொள்ளைப் பிரியம்.


 பயணம் செல்ல ஒழுங்கு பண்ணப்பட்ட  நாளிலிருந்தே எங்கள் விடுதியில் ஏகப்பட்ட பரபரப்பு. பஸ்ஸில் வைத்து கோரஸாகப் பாட பாட்டுகளெல்லாம் பிரத்தியேக பயிற்சிகளுடன்  நடந்து கொண்டிருந்தது. ஷுபா, மேகலா, பானு எல்லோரும் சேர்ந்து ஒரு பாய்லா பாட்டு இட்டுகட்டி ரெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் போன்ற சிலருக்குப் பாடுவது என்றாலே என்னவென்று தெரியாது. ஆனாலும் கண்டிப்பாக பாடணும்னு ஒருமித்த கருத்து. அதனால் தினமும் ஏதோ ஒரு அறையில் கூடி ,பாடி pre-tour preparationஐக் கொண்டாடிக் களித்தோம். 


ஆண்கள் விடுதியில் என்ன ஏற்பாடுகள் நடந்தது என்பது தெரியவில்லை,ஆனாலும் அது பற்றிய குறுகுறுப்பு இருந்தது.  பதினேழு வயதுப் பருவத்தின் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து செல்லும் உல்லாசப் பயணத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி சொல்லவும் வேண்டுமா, செம களேபரம்தான். நாள் நெருங்கி வரவர படபடப்புகளும் புரணி பேச்சுகளும் உச்சமடைந்திருந்தது.


அந்த நாளும் வந்தது. எங்கள் கல்லூரிக்கென்று ஒரு பஸ் உண்டு, .ரொம்ப பழைய பேருந்து ,எப்போது ரிப்பேராகி நிற்குமென்றே சொல்ல முடியாத தன்மையில் இருக்கும். ஆனால் எங்களுக்கெல்லாம் தெரிந்த முதல்  காதல் வாகனம் அதுதான்.அதன் ஓட்டுநர் எல்லா மாணவர்களுக்கும் நண்பராக இருப்பார். பெயர் கூட பாண்டியன் என்று ஞாபகம். பயணத்தன்று அதிகாலையில் விடுதி முன் வந்து வண்டி நின்றது.


 ஏற்கனவே ஆண்கள் விடுதியில் சென்று அனைவரையும் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்களெல்லாம் பேருந்தின் பின் இருக்கைகள் மற்றும்  இடப்புற வரிசைகளில் அமர்ந்திருந்தார்கள். பெண்களில் dayscholars உம் ஏற்கனவே விடுதிக்கு வந்துவிட்டார்கள். எங்களுக்கு வலப்புற இருக்கைகள் காலியாக வைக்கப் பட்டிருந்தது. அதிலும் முதல் வரிசையில் ஆசிரியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு எப்பவுமே முன்னாடி உட்காரப் பிடிக்கும் என்பதால் ரெண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். சில பல கோஷ்டிகள் பின் வரிசையில் சாய்ந்து கொண்டார்கள்.


செல்வசேகரன், நடனசபாபதி, மகாதேவன், நாராயணசாமி, சத்திய மூர்த்தி சாரெல்லாம் எங்களுக்கு துணையாக வந்திருந்தார்கள். நல்ல வேளையாக சீனியர் சிட்டிசன் ஆசிரியர்கள்  யாரும் வரவில்லை. பெண்களுக்கு பொறுப்பாசிரியராக பெத்தம்மா மேடம் வந்திருந்தாங்களா இல்லையான்னு நினைப்பில்லை. ஏறிய உடன் இருந்த சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆனது. அவங்கவங்களுக்கு வேண்டியவங்க அமர்ந்திருக்கும் இடங்களைக் கண்களால் பதிவு செய்துகொண்டு இருக்கைகள் மாற்றிக் கொள்ளப்பட்டன. 


அதிகாலை என்பதால் நிறையபேர் அறைகுறை தூக்கத்தில் இருந்தோம். தூங்கி விழிக்கும்போது கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்திருந்தோம்.

கன்னியாகுமரியின் சிறப்பு என்னவென்றால் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரே கடற்கரையில் பார்க்கலாம். எங்களுக்கு  சூரிய உதயம் ஏற்பாடு  பண்ணப்பட்டிருந்தது. அன்னைக்கு சூரியன் உதித்ததா,எங்களைப் பார்த்து வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டதா என்பது மறந்துவிட்டது.  அதை முடித்துவிட்டு விவேகானந்தர் பாறைக்கு விசைப்படகில் சென்றோம். எங்க காலத்தில் திருவள்ளுவர் சிலையெல்லாம் கிடையாது. பாறையில் இருந்த தியான மண்டபத்தில் முழு அமைதி காக்க வேண்டும் என்பது விதி. அதுவரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு வெளியே வந்ததும் கூச்சலும் கும்மாளமுமாக சுற்றிப் பார்த்தோம். கடல் அலைகளை மீறியிருந்தது எங்கள் அரட்டை ஒலி.


காலை சிற்றுண்டி கையில் தந்தார்களா உணவு விடுதிக்குக் கூட்டிப் போனார்களா என்று சத்தியமாக நினைவில்லை. அதன்பிறகு பத்மநாபபுரம் அரண்மனையை நோக்கி நெடிய பயணம். பேருந்து சூடாகிவிட்டதால் இடைவெளியில் இளைப்பாற நின்றபோது மீனாக்கா புடவையெல்லாம் ஏதோ சிந்திவிட்டதால் அருகிலிருந்த வாய்க்காலில் சுத்தம் செய்யப் போனார்கள். நாங்கள் நின்றிருந்த இடத்தில் ரெண்டுபுறமும் தண்ணீர் தளும்பிச் சென்ற வாய்க்கால்கள், பசேலென்ற தென்னந்தோப்புகள், சின்ன தண்ணீர்க் குட்டைகள், அதில் மிதந்து கொண்டிருந்த அல்லிப் பூக்கள் என மிக ரம்யமான சூழல். அங்கிருந்து கிளம்பவே மனமின்றி பேருந்தில் ஏறினோம். இந்த மாதிரி இடங்களில்தான் பின் வந்த நாட்களில் “அலைகள் ஓய்வதில்லை” சினிமா எல்லாம் எடுத்திருப்பார்கள்.


பேருந்து பயணம் போரடிக்காமல் இருக்க பாட்டு பாடலாம் என முடிவெடுத்து ஆரம்பித்தோம். கொஞ்சம் சினிமா பாட்டுகள் பாடிய பிறகு அந்தக்கால பேமஸ் பாட்டான “சுராங்கனி” பாட்டு பாட ஆரம்பித்ததும் அதுவரை பாடலில் இணையாத உம்மணா மூஞ்சிகள்கூட பாட ஆரம்பித்தார்கள். அது முடிந்ததும் ஏற்கனவே விடுதியில் ரிஹர்சல் பண்ணி வைத்திருந்த பாடலைப் பாட முடிவெடுத்து பெண்கள் ஆரம்பித்தோம்.


இறந்துபோன தவளையை சிவப்பு எறும்புகள் ஊர்வலமாக இழுத்து செல்வதை கிராமீய பாடலாக எழுதி பயிற்சி செய்திருந்தோம். எழுதியது யாரென்று மறந்துவிட்டது. ஆரம்ப பல்லவியாக “டொங்கு டொங்கு” என ஆரம்பிக்கணும். அதுக்கு பிறகுதான் பாடல் வரும். நாங்க டொங்குன்னு சொன்னதும் கடைசி வரிசையிலிருந்த ஆண்கள் எல்லோரும் சேர்ந்து டொக்கு டொக்கு- ன்னு எதிர்பாட்டு பாட ஆரம்பிச்சாங்க. திரும்ப நாங்க ஆரம்பிச்சாலும் அதே எதிர்பாட்டுதான். கொஞ்ச நேரம் இழுபறியாக இந்த ரெண்டு வார்த்தைகளிலேயே போராட்டம் நடந்தது. நாங்க பாட ஆரம்பிச்சதும் எங்க சத்தம் அமுங்குறபாணியில் பேருந்தின் தரையில் கால்களால் தட்டி ஒலி எழுப்பி பாட விடாமல் கடுப்பேத்திகிட்டே இருந்தாங்க. எங்க வகுப்புப் பெண்களுக்கோ சுயமரியாதை மிகமி அதிகம். அதனால் நாங்க எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கத்தி கோரஸ் பாடி அந்தப் பாட்டைப் பாடியே முடிச்சோம். பாவம் கடைசி பெஞ்ச் ஆண்களுக்கு மற்ற மாணவர்கள் துணைக்கு வரவில்லை. ராஜேந்திரன், நெடுஞ்செழியன் ரெண்டுபேரும்தான் lead role.


இந்த மாதிரி கலகலப்பான போராட்டங்களின் இடையில் பத்மநாபபுரம் வந்து சேர்ந்ததே தெரியவில்லை. அரண்மனை முழுவதும் சுற்றிப்பார்க்கவே பகல் முழுவதும் கழிந்துவிட்டது. அதன் பிரம்மாண்டமும், கலை நயத்துடன் கட்டப் பட்டிருந்த விதமும் அந்த வயதில் அவ்வளவு ஈர்ப்பைத் தரவில்லை. ஆனாலும் அந்த சூழலும், சுற்றியிருந்த கூட்டமும் ஒருவித மயக்கமான ரசனையைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு இடத்தின் வரலாறைச் சொல்லும் போதும் அதைக் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்யும் இளவட்டங்கள் உடனிருக்கும் போது கருங்கல்கூட காவியமாகத்தானே தெரிந்திருக்கும். அதிலும் கடைசி பெஞ்ச் ஆட்கள் எல்லாரையும் கலகலப்பாக ஆக்கிவிடுவார்கள். 


திருவனந்தபுரத்தை  நெருங்க ஆரம்பித்ததும் இயற்கைத் தன்மை குறைந்து நகர்ப்புறம் அதிகமானது. நாங்க எல்லோரும் வார்த்தைகளை தலைகீழாகப் பேசுவதில் தேர்ந்துவிட்டதால், ரோடுகளில் நின்றிருந்த காவலர்களை நோக்கி “ஸ்லீபோ” என கத்தி கைகளை ஆட்டிக் கொண்டே சென்றோம். அவர்களும் ஏதோ வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்து பதிலுக்கு கையசைத்தார்கள். இரவு சாப்பாட்டிற்கு பரோட்டா கடைகளில் சாப்பிட இறக்கினார்கள் போலும். மறுநாள் காலையில் ஊர் சுற்றிப் பார்க்க போக வேண்டுமென்பதால் சீக்கிரமே எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதிகளில் தூங்கச் சென்றோம். ஆனாலும் அன்றைய நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனங்களும், வியாக்கியானங்களும் ரொம்ப நேரம் ஓடிக் கொண்டிருந்தது. 


திருவனந்தபுரத்தில் மிருகக் காட்சி சாலை பார்த்ததுதான் நல்லா நினைவிருக்கிறது. அதிலும் பெரிய மனிதக் குரங்கு முன்பு நின்று சேட்டைகளுடன் கமெண்ட் அடித்து பார்த்தது சுவாரசியமான விஷயம். விமான நிலையம் அருகில் எதற்கோ கூட்டிச் சென்றார்கள். முதல் முதலாக விமானத்தை அருகில் பார்த்தோம். விமான நிலையத்தை அதன் சுற்றுச்சுவருக்கு வெளியே நின்று பார்த்தோம்.


மற்ற இடங்களெல்லாம் பார்த்துவிட்டு ஊர் திரும்ப பேருந்தில் ஏறினோம். கொஞ்சநேரம் பாட்டு,எதிர் பாட்டுபாடிக் கொண்டிருந்தோம். மிக நெடிய பயணம் என்பதால் நிறைய பேர் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆசிரியர்களுடன்  தங்கராஜ், நான் எல்லோரும் சேர்ந்து சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டு வந்தோம்.


விடுதியில் இறங்கும் நேரம் வந்ததும் எல்லோருக்கும் பயணம் அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டதே என்று சின்ன கவலை. ஆனாலும் அசதி அதிகமாக இருந்ததால் அவரவர் அறைகளை நோக்கி மவுனமாக பயணித்தோம்.


" பயணங்கள் முடிவதில்லை".


எங்க நாட்டுப்புறப் பாடல்:


"கட்டெறும்பு மொய்க்க மொய்க்க

உங்க காலும் கையும்

தொங்கத் தொங்க

சிவத்த குதிரை ஏறி

சிவலோகம் போறீயளே

டொங்கு டொங்கு

டொங்கு டொங்கு "

அலை-45

 அலை-45

மனிதர்களின் பெயர்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் விசேஷமானவை. ஒவ்வொரு பெயரும் ஏதோ ஒரு De javu நினைவுகளை நமக்குள் ஏற்படுத்தியிருக்கும். என்  வகுப்புத் தோழர்களை அகர வரிசையில் நினைவு படுத்திக் கொள்வது எனக்குள்ள இனிமையான திறமை. எங்கள் வகுப்பில் முதல் பெயரான அபுல்காசிம் தொடங்கி 75வது வெட்டும்பெருமாள் வரை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் வரிசைப்படி சொல்லுவேன். அடுத்தடுத்து classmates getogether  நடத்தியதால் வந்த ஞாபக சக்தியா என்று தெரியாது. 


பெயர்களுக்குள்ள தன்மையால்தான் நிறைய நட்புகள் இறுக்கமானதும், உறவுகளாய் மலர்ந்ததும் நடந்தது. எங்கள் வகுப்பின் ஆரம்பமே மும்மூர்த்திகளான அபுல்காசிம், ஆண்ட்ரூ ஜெபக்குமார், பாலகிருஷ்ணன் என்ற Triple Pillars தான். மூவருமே இணைபிரியாமல் ரிடையர்மெண்ட் வரை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி அடுத்தடுத்த தெருக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பாக்கியம் வாய்த்தது எங்கள் வகுப்புக்குக் கிடைத்த பெருமை. 


”M” வரிசையில் வரும் மரகதமணி, மேரி சிசிலி, மேரி நிர்மலா, மீனா, மேகலா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி என்.ஜி.ஓ. காலனியில் இருந்து ஒண்ணாக day- scholars  ஆக வருவாங்க. ஒரே பஸ், ஒரே batch என்று அப்போதே இணைந்த கைகள் ஆகிவிட்டார்கள். பாஸ்கர பாண்டியன், சந்திரலீலா, கணேசன், கோமதி மீனா நால்வரும் பட்டப்படிப்பு முடிந்து வந்த கோஷ்டிகள், அலட்டிக்காமல் “A” batch இல் இணைந்து கொண்டார்கள். எனக்கு ரெண்டுபுறமும் தங்கராஜ் & தில்லை வள்ளல். முதல் வருடம் முதல் ஹவுஸ் சர்ஜன் வரை பிரியாமல் இருந்த triple pillars இல் நாங்களும் உண்டு. தங்கராஜ் இப்பவும் என்னை அன்போடு அழைப்பது ”ஹலோ பார்ட்னர்” ன்னுதான்.


A & C batch இல் கொஞ்சம் நிதானமான மாணவர்கள் இருப்போம்.  B batch தான் ரொம்ப குறும்புக்கார ஆட்களோடது. அதனாலே அந்த க்ரூப் மட்டும் எப்பவும் கலகலப்பாகவே இருக்கும். மத்த ரெண்டு பேட்ச்சிலும் படிப்ஸ் கோஷ்டிகள் அதிகம். வகுப்பறைகளில் சத்தம் வந்தால்  அது நிச்சயமா  B batch வாலுங்கதான். ஆனால் அதெல்லாமே  நாங்க ரசிக்கும் படியாகவே இருக்கும். 


நாங்க கடைசி பென்ஞ்சில் இருப்பதால் நிறைய பாடங்கள் காதிலேயே விழாது. அந்த நேரங்களில் கவிதை எழுதுவதும், ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர் வைப்பதுமாக பொழுதுகள் சுவையாகவே நகரும். 

எங்கள் வகுப்பிலுள்ளவர்கள் பெயர்கள் நிரம்ப வித்தியாசமாக இருக்கும். அதனாலேயே சீனியர்களின் கேலிகளுக்கு அடிக்கடி ஆளாக்கப்படுவோம்.


 உதாரணமாக என் பெயர் “தாணு” என்பது ஆண்பிள்ளைகளுக்கு வைக்கப்படுவது. சுசீந்தரம் தாணுமாலையன் சாமியின் பெயர். அதனால் நாகர்கோவில் மக்கள் என்னை அடிக்கடி ஆண்பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கேலி செய்வார்கள். வெட்டும்பெருமாள் எங்கள் வகுப்பின் கடைசி மாணவர். கேலிகளால் பாதிக்கப்பட்டே தன் பெயரை சந்தோஷ்குமார் என்று நாளடைவில் மாற்றிக் கொண்டார். இதுபோல் நிறைய பெயர்கள் எங்கள் வகுப்பில் உண்டு. சிதம்பரத்தம்மாள் , உமா ஆனதும் இதுபோல்தான்.


ஆனால் நாங்கள் எந்தப் பெயராக இருந்தாலும் அதை ரத்தினச் சுருக்கமாக்கிக் கூப்பிட்டுக் கொள்வதுதான் வழக்கம். அதனாலேயே நிறையபேரோட

பெயர்கள் ரெண்டு எழுத்துகளுக்குள் அடங்கிவிட்டது. பானு,தாணு, ஷுபா,உஷா,மரா,பரா, விசா,சிவா, லோகா,மாரி, சூரி,மீனா,ஹேமா என்று லிஸ்ட் போயிட்டே இருக்கும்.ரொம்ப சுருக்க முடியாட்டி மூணு எழுத்துக்குள்ளே கொண்டு வந்திடுவோம். மேக்ஸ், நிம்ஸ்,ராம்ஸ்,பாப்ஸ்,சுப்ஸ் எல்லாம் உண்டு. இப்படி பெயரைச் சுருக்குவது சில நேரங்களில் வேடிக்கைகளையும் உண்டாக்கும். 


ஒருநாள் கெமிஸ்ட்ரி டெமொன்ஸ்ட்ரேட்டர் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. சத்யமூர்த்தி சார் நாகர்கோவில்காரர் என்பதால் அவரது ஆங்கிலம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் PARA , ORTHO, META என்று எதோ விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியில் மூன்றாவது வரிசையிலிருந்து யாரோ எழுந்திருந்து (ஷுபாவோ மேகலாவோ) 

" sir ! Para is not feeling well” அப்படீன்னு சொன்னாங்க. சாருக்கு ஒண்ணும் புரியலை. அவரோ para (பேரா) பற்றி பேசிகிட்டு இருக்கார். யாரோ எந்திரிச்சு பரா சரியில்லைன்னு சொல்றாங்க. அவர் எழுதியதில்தான் ஏதோ தவறு இருக்குதோன்னு மறுபடியும் கரும்பலைகையைப் பார்க்கிறார். சரியாகத்தான் இருந்தது. அதனால் “what is wrong with para (பேரா)” என்று கேட்கிறார். மறுபடியும் இங்கிருந்து  Para (பரா) is not feeling well என்று பதில் வருது. சாருக்கு மண்டையைப் பிச்சிக்கலாம் போல இருந்திருக்கும். அதுக்குள்ளே நியாயவாதி ஒருத்தர் யாரோ எந்திரிச்சு பராசக்திக்கு உடம்பு சரியில்லை சார் என்று சொல்லிட்டாங்க. இல்லாட்டி அன்னைக்கு வடிவேலு பாணியில் வகுப்பறை அல்லோல கல்லோலப் பட்டிருக்கும். உண்மையாகவே பராவுக்கு உடம்பு சரியிலாமல் போச்சுதான்னு என்னைக் கேட்கக்கூடாது. அது சங்கத்தின் ரகசியம்.


புதுசா வர்ற சார் எல்லாம் தாணுவை ஆண்கள் பகுதியில் தேடுவதும் அடிக்கடி நடக்கும். நிம்ராட் பெயரை தவறுதலாக உச்சரிப்பதும் வாடிக்கை. ப்ரேம் தேவ குமாரை யாருமே முழு பெயர் சொல்லி அழைத்ததில்லை. அன்றிலிருந்து இன்றுவரை PDK தான். அதே மாதிரி தில்லை திருவடி வள்ளல், மிக அருமையான தமிழ் பெயர். ஆனாலும் ராகிங்-இல் தில்லை திருடிய வள்ளலாகிவிடும். எங்க வகுப்பு ஆண்பிள்ளைகள் பெயர்களைக் குறித்து தேவதைகள் இல்லத்தில் எங்களுக்கு ராகிங் உண்டு. நளினி என்ற பெயர் ரொம்ப  common  என்பதால் எங்க வகுப்புக்காரிக்கு நெட்டை நளினி பட்டப் பெயராகி விட்டது. 


ஒரே பெயரில் ரெண்டுபேர் இருந்தால் அவர்களை வேறு படுத்திக் கொள்ள சில அடை மொழிகளை வைச்சுக்குவோம். அப்படித்தான் மூணார் விஜியும், கிளி விஜியும் அடையாளம் காணப்படுவார்கள். ரெண்டு தம்பிராஜில் ஒருத்தர் ஃபாரின் தம்பிராஜ் ஆனது என்ன கதைன்னு தெரியாது, ஆனால் அதுதான் அவரின் அடையாளம்.சைமன் பீட்டர்தான் எங்க வகுப்பிலேயே மிக உயர்ந்த மனிதர். ராமசாமிக்கு எதற்காக புளிமூட்டை ராமசாமின்னு பேர் வைச்சாங்கன்னு தெரியலை. 


இத்தனை பேரையும் அடக்கி வைக்க வகுப்புத் தலைவராக இருந்த மூர்த்தி முதல் வருடத்துடன் எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அடுத்து வந்த காலங்களில் ஒவ்வொருவராகப் பிரிந்து போய் , இன்று எட்டு நண்பர்களை இழந்து நிற்கிறோம். நம் பிறப்பு எப்படி நம்மால் நிர்ணயிக்கப் படவில்லையோ, அதே மாதிரிதான் நம் வகுப்புத் தோழர்களும், இவர்கள்தான் வருவார்கள் என நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் இணைந்த பிறகு, நம் வாழ்நாள் முழுவதும் நாங்கள் அனைவரும் 77 ஆம் வருட வகுப்பின் ஒன்றுபட்ட தோழர்கள். அதை மாற்றவோ மறுக்கவோ முடியாது. எங்கு சென்றாலும் எங்கள் அடையாளம் 77 Batch of TvMC. 

Long live Comrades.

அலை-44

 அலை-44

நிகழ்வலைகள்.

சுகமான நினைவலைகளைப் புரட்டிக்கூடப் பார்க்க முடியாமல் அலைக்கழிக்கும் நிகழ்வலைகள்-- கொரோனாவின் கோர அலைகள்.

”சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது” என்று இறுமாப்புடன் இருந்த காலம் போய், கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர் நம்மை வீட்டுச் சிறையிலும் தனிமைச் சிறையிலும் பூட்டி வைத்திருக்கும் அவலம் இன்று. 


சில வருடங்களுக்கு முன்பு நான் டெங்கு காய்ச்சல் வந்து சாவின் விளிம்பைத் தொட்டுவிட்டு வந்தவள்.  நான் அப்போதிருந்த நிலைமையை நேரில் கண்ட மருத்துவ நண்பர்களில் நிறையபேர் கண்ணீர் சிந்தி பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது யாருக்காக யார் வருந்துவது என்ற நிலையே இல்லாமல் எல்லோருமே கடினமான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.


அன்றைய கால கட்டத்தில் ஒரே ஒரு சிந்தனைதான் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. கருத்தரித்த காலம் தொடங்கி தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனைகள் என்று தீவிர கண்காணிப்பில் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறோம். அந்த மழலைகள் நோயற்ற வாழ்வு பெறவேண்டி மாதம் மாதம் தடுப்பூசிகள் தவணை முறையில் போட்டு சிறப்பாக வளர்ப்பதாக பெருமை பட்டுக் கொள்கிறோம். அத்தனை கவனிப்பையும் ஒன்றுமில்லாததாக்கிவிட்டு, இத்துனூண்டு கொசு கடிச்சு அந்த உயிரே தங்குமா இல்லையா என்ற அவலம் ஏற்படும் போது படித்த படிப்பெல்லாம் பயனற்றதுபோல் தோன்றும். அந்த உணர்விலிருந்து வெளியே வரவே ரொம்ப நாள் ஆச்சுது. 


அந்த கண்ணுக்குத் தெரியும் கொசுவிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள எத்தனை உத்திகள் மேற்கொண்டோம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, வீடு முழுக்க கொசுவலை அடிப்பது, இருபத்துநாலு மணிநேரமும் கொசுவத்தி எரிந்து கொண்டே இருப்பது, அப்பப்பா எவ்வளவு பாதுகாப்பு முயற்சிகள். அதையும் மீறி ஒரு கொசு வீட்டுக்குள்ளே வந்துவிட்டால் சைனாக்காரனை இந்தியன் தாத்தா விரட்டுவது போல் கொசு மட்டையைச் சுழற்றிச் சுழற்றி அடிப்பது . எப்படியோ டெங்கு வராமல் இருந்தால் சரிதான் என்ற பாதுகாப்பு உணர்வு.


ஒரு கொசுவும், டெங்கு காய்ச்சலும் படுத்திய பாட்டை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது கண்ணுக்குத் தெரியாத கொரோனா. இதுதான் இருகோடுகள் படத்தின் தத்துவம் போலும். பெரிய துன்பம் வரும்போது அதற்கு முந்தைய கஷ்டங்கள் ஒன்றுமில்லாததாக ஆகிவிடும். பெரியவர் –சிறியவர், ஏழை – பணக்காரர்,  மருத்துவர்- சாதாரண மக்கள் என, எந்த பாகுபாடுமின்றி எல்லைகளற்றுப் பல்கிப் பெருகிப் பந்தாடிக் கொண்டிருக்கிறது பின்னாடி வந்த கொரோனா. தேசங்கள் விதிவிலக்கல்ல; எல்லைகள் தடைபோட முடியவில்லை. ”ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி”- கதைக்கு அன்று சொன்ன காட்சிகள் வாழ்க்கையின் இன்றைய நிஜமாகிப் போனது.


கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குழந்தைகளைத் திட்டிக் கொண்டிருந்தோம். எப்போ பாரு இந்த செல்போனும் கம்ப்யூட்டரும் நோண்டிகிட்டே இருக்கிறாயே, வெளியிலே போய் நண்பர்கள்கூட விளையாட வேண்டியதுதானே என்று கடுப்பேத்திக் கொண்டிருந்தோம். இப்போ அவங்களே எழுந்து வாசல் பக்கம் போனால் கூட தரதரன்னு இழுத்துட்டு வந்து அறையில் அடைச்சிடறோம். எந்த தொலைக்காட்சியைத் திறந்தாலும், சமூக ஊடகங்களில் நுழைந்தாலும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்த நித்தியப் பொருள் நிலைகுலைக்கும் கொரோனாதான். 


அரசு வேலையிலிருந்து ரிட்டையர் ஆன போது வாழ்க்கை வட்டம் மிகவும் சுருங்கியதுபோல் தெரிந்தது. வேடிக்கையாக “ரெண்டு ரோடு நாலு சுவர்”- இதுதான் இப்போதைய வாழ்க்கைன்னு சொல்லுவேன். வீடு மற்றும் க்ளினிக், அதற்கு செல்லக்கூடிய இரண்டு ரோடுகள். வண்டிக்கு டீசல் போட்டால் ஒரு மாதமானாலும் காலியாகாது. ஆனால் இப்போது எல்லோருடைய வாழ்க்கையும் நாலு சுவற்றுக்குள் அடங்கிவிட்டது. ரோடில் நடந்து போவதுகூட அரிதாகிவிட்டது. 


ஆனால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கைக்கொண்டு தேவை நிமித்தம் மட்டும் வெளியில் செல்பவர்களில் மருத்துவர்களாகிய நாமும் உண்டு. கொரோனாவே வந்த நோயாளிக்குக் கூட நாம் மருத்துவம் செய்வது தவிர்க்க முடியாததுதான். அதன் சாதக பாதகங்களை தெரிந்துகொண்டு அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். பிரசவங்களையோ அறுவை சிகிச்சைகளையோ தள்ளிப்போட முடியாது. நாலு சுவருக்குள்ளும் நாலைந்து செயற்கை உபகரணங்கள் அணிந்து பூச்சாண்டி போலவே நடை பயில வேண்டியிருக்கிறது. ரொம்ப தெரிந்தவர்கள் எதிரில் வந்தால்கூட அடையாளம் தெரியாமல் கடந்து போகும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கிறது.


காலங்கள் இப்படியே போகுமா, நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து மகிழும் சந்தோஷ நாட்கள் வருமா என்று ஏகப்பட்ட கேள்விக் குறிகள். கொஞ்சம் கொஞ்சமாக வாட்சஸ்-அப் மெசெஞ்சர், பேஸ்டைம் வீடியோ என்று திரைகளில் உரையாடவும் கற்றுக் கொண்டோம். ”நிழல் நிஜமாகிறது” என்றிருந்த காலம் போய் இப்போது நிழல் தான் நிரந்தரம் என்பதுபோல் ஆகிவிட்டோம். நேரில் பார்த்தாலும் கைகுலுக்க முடியாது, கட்டிப்பிடிக்க முடியாது, அதைவிட திரை வடிவத்துடன் கதைப்பதே சாலச் சிறந்தது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.


ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த மாதிரி தனிமைப் படுத்துதல், வீடியோ மூலம் பேசுதல் பொன்ற நடப்புகளுக்குப் பழகிவிட்டதால், அதுவே நன்றாக இருப்பதுபோல் மனசு நம்ப ஆரம்பித்துவிடும். அதிலும் எழில் மாதிரி தனிமை விரும்பிகளுக்கு இந்த நிலைமையே பொருத்தமானதாகவும் இருக்கிறது. என்னை மாதிரி லொட லொட ஆட்களுக்குத்தான் மனுஷங்களைப் பார்த்து பேசாட்டி சார்ஜ் எறங்கிடும்.  


எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. கொரோனாவுக்கும் அப்படித்தான். உயிர் காக்கும் போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும், புதுசு புதுசா கற்றுக் கொள்ளும் திறமைகளும் அதிகரித்திருக்கிறது.


 க்ளினிக்கல் மீட்டிங்  போன்றவற்றில் கலந்து கொள்வது முன்பெல்லாம் நிறைய சந்தர்ப்பங்களில் மூடியாமல் போய்விடும். ஆனால் இப்போது கைபேசி மூலம் எந்த இடத்தில் இருந்தாலும் எல்லா கூட்டங்களிலும் இலகுவாகக் கலந்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டு பேச்சாளர்கள் தொடங்கி பக்கத்து வீட்டு பேச்சாளர்கள் வரை அனைவரையும் ஒரே திரையில் சந்தித்து அளவளாவுவது இலகுவாக நடக்கிறது.மீட்டிங்குகளுக்கு செய்யப்படும் செலவினங்கள் வெகுவாகக் குறைந்தும் உள்ளது. 


வீட்டைப் பொறுத்தவரை அடுப்பு பற்ற வைச்சு சுடுதண்ணீர் மட்டும் போட்டுக் கொண்டிருந்தவர்கள் சமையற்கலை வல்லுநர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். எங்க வீட்டு ஆம்பிள்ளைப் பசங்க ரொம்ப சுகவாசிங்க, சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவிவிட்டு எழுந்துபோவாங்க. அதை தப்புன்னு கூட உணராத ஆசாமிங்க. என் தம்பி நானாவும் அந்த க்ரூப்புலே உள்ள ஆள்தான். ஆனால் இப்போ லாக்டவுண் வந்தபிறகு யூட்யூப் பார்த்து வித விதமாக சமைக்கிறான். பொங்கலுக்கு கடம்பூர் சென்றபோது விதவிதமான சாலட்கள் செய்து அசத்திட்டான். 


உண்மையிலேயே ஆறுமுகநேரி சரித்திரத்தில் இது உலக அதிசயமாகத்தான் பொறிக்கப்படும். நிறைய வீடுகளில் ஆண்கள் சமைப்பது இயல்பாக நடக்கும். ஆனால் எங்க ஆறுமுகநேரி கதைகளில் இப்போதான் அது ஆரம்பிச்சிருக்குது. இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கொரோனா வந்தது நல்லதா கெட்டதா என்ற பட்டிமன்றம் வைத்தால் நான் நல்லது என்ற தலைப்பில் வாதிட தயார், நிறைய டிப்ஸ் இருக்குது. ஒரு சமையல் பண்றதுக்காக கொரோனா மாதிரி கொடுந்தொற்று வரணுமான்னு கேட்கக் கூடாது. 


நோய்த்தொற்று நம்மை சுற்றிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி கொண்ட கை கழுவுதல் போன்றவை இருக்கும் போது அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அப்பப்போ ப்ரேக் எடுத்துகிட்டு வெளியில் சுற்றுபவர்களே அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் நமது நண்பர்களாகவும் உறவினர்களாகவும் இருக்கும்போது அந்த சோகம் நம்மளையும் தாக்குகிறது. வரப்பிரசாதமாக வந்த தடுப்பூசி பற்றிய சரியான புரிதல் இல்லாமலும், தேவையற்ற சந்தேகம் மற்றும் பயத்தாலும் இன்னும்நமக்கு நெருக்கமானவர்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இன்னும் கவலையாகவே இருக்கிறது. 


கொரோனா நோய் வந்து , படுக்கைகள் கிடைக்காமல், வீதிகளிலும் ஆம்புலன்ஸிலும் காத்திருக்கும் நிலையில் பிரிந்த உயிர்கள் அநேகம். அதை மனதில் கொண்டு தடுப்பூசி போட்டு வரும் சின்ன ஒவ்வாமைகள் வைத்தியம் செய்து சரிபண்ணக்கூடியது என்பதை உணர்ந்து உங்களைச் சுற்றி இருப்பவர்களை உடனடியாக தடுப்பூசி போட அறிவுறுத்துங்கள். தனித்திருந்தாலும் தொடர்பில் இருங்கள். நேரத்தை வீணாக்காமல் புதுப்புது விஷயங்களை பரீட்சார்த்தமாக முயற்சி செய்யுங்கள். எங்களைப்போன்ற அரைவேக்காடுகளின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து உற்சாகப் படுத்துங்கள்.