Monday, December 12, 2005

அடையாளங்கள் தவறா?

அடையாளங்களைத் தொலைத்தல் என்பது எவருக்குமே சாத்தியமாகாத ஒன்று. எழுத்திலோ நடை உடை பாவனைகளிலோ வருந்தித் தருவித்துக் கொள்ளும் புது வேஷங்களுக்கு இடையிலும் நம் original அடையாளம் மறைந்து போவதில்லை. இது நமது பலவீனமல்ல, நம் வேர்களின் பலங்கள். அந்த அடையாளம் எதனாலும் வரலாம்- மொழி, ஜாதி, மதம், படிப்பு- எதுவாகத்தான் இருக்கட்டுமே. அதை ஏன் மறைக்க வேண்டும்? அந்தந்த விஷயங்களின் துவேஷ சிந்தனைக்கு இடம் தராத வகையில், அடுத்தவர் மனதைப் பாதிக்காத வகையில் அந்த அடையாளங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம்தான் என்ன?

`தமிழன்’ என்ற மொழியின் அடிப்படையிலான அடையாளத்தை வரவேற்பதும், பெருமைப் படுத்துவதும் சரியென்று ஏற்றுக் கொள்ளும் நாம் மற்ற அடிப்படையிலான அடையாளங்களை மட்டும் கூறு போட்டு விமர்சிப்பதேன்? தமிழ்மணத்தில் எல்லோரின் ஒருமித்த உணர்வும் தமிழின் அடிப்படை என்பதால்!! இதில் வரும் அடிதடி சண்டைக் காட்சிகள், அடுத்து, `தேவர் மணம்’; பார்ப்பணர் வலைப்பூ’ ; `நாடார் பதிவுகள்’; etc,etc போன்ற தனித்தனி குழுமங்களை உருவாக்குமோ என்னவோ?

`நீங்கள் தமிழரா’ என்று விழிக்கப்படும்போது ,ஒரு புலம்பெயர்ந்தவருக்கு எவ்வளவு புல்லரிப்பு வருமோ, அதே அளவு `நீங்க திருநெல்வேலியா’ என்று கேட்கப்படும்போது எனக்கு வரும். இன்னாரின் சொந்தமா என்று என் கணவர் வீட்டு மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது `ஆம்’ என்று சொன்னாலும்,
என் பிறந்த வழிச் சொந்தங்களையும் பிரதிபலிக்க வேண்டுமென்ற உணர்வு தோன்றுவது எந்த ஜாதியின் அடிப்படையோ, மதத்தின் பாதிப்போ இல்லை. என் வளர்ப்பின் அடையாளத்தைத் தொலைத்துவிடுவேனோ என்ற அங்கலாய்ப்பாக இருக்கலாம்.

குழலி, தேன்துளி பத்மா, ராமச்சந்திரன் உஷா போன்றவர்கள் தங்களால் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வுகளை அந்தந்த சூழலின் பாதிப்புடன் எழுதும்போது ,அதற்கு ஒரு முத்திரை குத்திவிட்டுப் போவது ` படித்தவர்களின்’ அடையாளம் போலும்.

பள்ளிப் பருவத்தில் பாதி புரிந்தும் புரியாத வயதில் என் அண்ணன் தீவிரமாக எனக்குள் போதித்திருந்த கருத்து, `ஜாதி மத பிரிவினைகள் எல்லாம் practical ஆக போக்கணும்னா, ஒரு வீட்டில் ஏற்படும் திருமண சம்பந்தங்கள் பல வகுப்புகளையும் பல மதங்களையும் சார்ந்து இருக்கணும்’ என்பது. ( அவனால் பாவம் அதை நடைமுறைப் படுத்த முடியலை- அக்கா பொண்ணுமேல் காதல் வந்துவிட்டது) நானும் தம்பியும் அண்ணன் வாக்கை மீறாமல் காப்பாற்றிவிட்டோம். ஆனாலும் எங்களின் அடையாளம் இன்னும் ஆறுமுகநேரி சந்தைக்கடையின் புழுதி மணல்தான்!!!

25 Comments:

At 9:31 AM, Blogger ramachandranusha(உஷா) said...

அடையாளம் இங்கு சாதி, இனம்,மதத்தை வைத்தே பார்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்தின் விளக்கத்தை
வலிந்து வலிந்து எழுதும் பொழுது "தேவையா" என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எது எல்லாம் நான் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தேனோ அவை எல்லாம் என் மேல் திணிக்கப்படுகிறது.
எழுத்தாளர்களுக்கு பொது பார்வை வேண்டும், எழுத்தில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும், குழு சேர்த்துக் கொண்டு
தர்ம அடி போடும் கோழை மனப்பான்மை கூடாது என்றெல்லாம் நினைத்து எழுத ஆரம்பித்து, அவை எல்லாம் கவைக்குதவாத வாதம் என்ற யதார்த்தம் புரிகிறது. வேறு என்ன சொல்ல?

 
At 10:30 AM, Blogger மணியன் said...

உண்மையான வார்த்தைகள்.

 
At 10:40 AM, Blogger ஜெ. ராம்கி said...

அடையாளம் என்பது சாதி, இனம், மதத்தை வைத்து பார்க்கப்படவேண்டும் என்பது தேவையில்லை என்பதுதான் அடியேனின் கருத்து. நீங்கள் மதராஸா, மாயவரமா, ரசிகரா, வாசகரா என்றெல்லாம் கேட்கும்போது வரும் ஜிலீர் அளவுக்கு ஜாதி, மதம் சொல்லி விளிக்கும்போது வருவதில்லை என்பதுதான் நிஜம். ஒடுக்கப்பட்டோர், பகுத்தறிவு கான்ஸெப்ட் குறுக்கே வருவதால் நம்மவர்களில் பலருக்கு பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜாதி, மதத்தை வெளிப்படுத்துவது என்பது சரி, அதையே பெருமையாக நினைத்துக்கொள்வதுதான் பிரச்னையே. சில தங்களுடைய ஜாதியை 'வீர' ஜாதியாக விளிப்பதும் தலித் மக்கள் தாங்களே தங்களை குறுக்கிக்கொள்வதும்....தொடருவதால்தான் எதையும் வெளிப்படுத்தாமல் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

 
At 11:59 AM, Blogger Unknown said...

அடையாளங்கள் தவறா?

//அந்த அடையாளம் எதனாலும் வரலாம்- மொழி, ஜாதி, மதம், படிப்பு- எதுவாகத்தான் இருக்கட்டுமே. அதை ஏன் மறைக்க வேண்டும்? அந்தந்த விஷயங்களின் துவேஷ சிந்தனைக்கு இடம் தராத வகையில், அடுத்தவர் மனதைப் பாதிக்காத வகையில் அந்த அடையாளங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம்தான் என்ன?//

படிப்பு-படிப்பை வைத்து அவ்வளவாக பிரச்சனை இல்லை. ஏன் என்றால் படிப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை. மேலும் யார் வேண்டுமானாலும் எந்தப் படிப்புக்கும் முயற்சி செய்யலாம்.

மொழி - ஒரு மொழியை பிறர் குறை கூறும்போதுதான் பிரச்சனை வருகிறது.

மதம்-ஒரு மதம் இன்னொரு மதத்தை குறை கூறும்போது தான் பிரச்சனை வருகிறது.

சாதீ- ஒருவர் பிறரை தாழ்ந்தவராக நினைத்து அவரை ஒதுக்குவதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

சாதி பற்றி விரிவாக...

சாதீய அடையாளங்கள் தவறு இல்லை. ஆனால் எப்படி அடையாளம் கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அடையாளம் கொடுக்கப்பட்ட முறையே தவறு எனும் போது , அந்த அடையாளம் எல்லாருக்கும் எப்படி சம மகிழ்ச்சியை கொடுக்க முடியும்?

அமெரிக்காவில் (ஆஹா ஆரம்பிச்சுட்ன்யா அமெரிக்கா புராணத்தை ) Richard Carpenter என்றாலோ அல்லது Thomas Barber என்றாலோ அது வெறும் பெயரும் அவர்களின் முன்னோர்களால் வந்த தொழில் சார்ந்த Last Name என்பதும் மட்டுமே பேசப்படும்.அமெரிக்காவிலும் நிற வெறி உண்டு. அது வேறு உலகம். இருந்தாலும் Thomas Barber என்று சொல்லுபவனைக் யாரும் கேவலமாகப் பார்ப்பது கிடையாது.

தமிழ் நாட்டின் (இங்கே தாணு சொல்லும்) சாதிய அடையாளங்களின் அர்த்தம் வேறு. தாணு தமிழ் நாட்டில் தான் இருக்கிறாரா? அவருக்கு அங்கு உள்ள
கண்டதேவி (Swarnamoorthi Eswarar temple at Kandadevi in Sivagangai District) பிரச்சனையும் பாப்பாபட்டி கீரிப்பட்டி பிரச்சனையும் தெரியாதா என்ன?
கோயில் கருவறை நுழைவுப்போராட்டம் போன்ற சில கலகங்களின் நோக்கமே இந்த சாதிய முறையை சமன் செய்யும் ஒரு முயற்சிதான்.இது ஒரு வரியில் (அல்லது ஒரு பதிவில்) பேசிவிடக் கூடிய காரியம் இல்லை.

செருப்புத் தைக்கும் ஒருவனை சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியாகப் பார்க்காமல் அவனை தீண்டத்தகாத ஜாதியாக பார்க்கும் கேவலமான நடைமுறை உள்ள தமிழ் நாட்டில் ஒரு பிராமணன் வேண்டுமானால் (பிராமணன் என்பது ஒரு உதாரணமே) அவனின் சாதிய அடையாளத்தை மறைக்காமல் பெருமையாக கூறலாம். ஆனால் நான் சொன்ன செருப்பு தைக்கும் தொழிலாளி "சக்கிலியன்" என்று கூறிக் கொள்வதை எந்த ஒரு பிராமணனும் தனது ஐயர் ஜாதிக்குச் சமமான ஒன்றாக அதை நினைக்கவே மாட்டான். தமிழகத்தில் சில ஆதிக்க சாதிகள் (தேவர்,பிள்ளை,நாய்டு,கவுண்டர்...மேலும் பல ) தாழ்த்தப்பட்டவர்களை அதிகாரம் செய்வதும்,தீண்டத்தகாத இனமாகப் பார்ப்பதும் உண்மை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட ஒருவன் எப்படி அவன் அடையாளத்தைக் கூற முடியும்.

 
At 12:11 PM, Blogger Unknown said...

சாதி பற்றி தங்கமணியின் பார்வை...
http://muthuvintamil.blogspot.com/2005/12/1.html

http://bhaarathi.net/ntmani/?p=43
..........
....ஒருவனது தன்மானம், விடுதலை இவைகளை கடுமையாக நசுக்கி அவனை ஒரு கொத்தடிமையாகச் செய்து காலங்காலமாக மனிதனைச் சுரண்ட ஏற்படுத்தப்பட்டதான சாதி அமைப்பை (இந்தியா உலகிற்கு வழங்கிய அதி உன்னதமான பங்களிப்பாக நான் கருதுவது ஒரு புலையனுக்கு பின்னே ஒரு துடைப்பத்தைக் கட்டி தொங்க விடுகிற அற்புதமான முறையைத்தான். எவ்வளவு எளிய நுட்பமான வழி? அவனால் ஏற்பட்ட தீட்டை அவனே சுத்தம் செய்யமுடிகிறமாதிரியான இந்த கண்டுபிடிப்புக்கு நிகரான ஒன்றை இந்தியா இன்னும் வழங்கவில்லை............

 
At 1:32 PM, Blogger துளசி கோபால் said...

என்னங்க 'ஜாதி' பத்திப் பேச்சு?

என்ன ஜாதின்னு கேட்டா தமிழ் நாட்டிலே 7 வருஷம் ஜெயில் தண்டனைன்னு முந்தி ஒரு சட்டம் வந்ததா கேள்விப்பட்டேனே. இன்னும் அந்தச் சட்டம் நடைமுறையில் இருக்குதுங்களா?

பார்த்துங்க.... பார்த்து.
உள்ளெ போட்டுறப்போறாங்க.

 
At 9:53 PM, Blogger தாணு said...

கல்வெட்டு ,
என் பதிவின் அடிப்படை நோக்கத்திலிருந்து சற்று விலகி விவாதிக்கிறீர்கள். சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் ஜாதி, மத பிரச்னைகள் பற்றி அலசவோ, அதற்கு மாற்றாகவோ தீர்வாகவோ எழுதவில்லை. அதை சரிவர விளங்கவைக்கவில்லை என்பதை உங்கள் பின்னூட்டம் பார்த்தே உணர்ந்துகொண்டேன். சமீபகாலங்களில் தனிநபர் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பற்றி யாராவது எழுதும்போது அதன் ஜாதீய விஷயங்களையே நோண்டி, சொல்லப் பட்ட கருத்தைப் புறம்தள்ளும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. சொல்லுபவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தாது சொல்ல முடியாது என்ற சந்தர்ப்பம் நேரும்போது அந்த அடையாளங்களை ஏன் காயப்படுத்த வேண்டும் என்பதுதான் என் விவாதம்.
நீங்கள் சொன்ன உயர்வு தாழ்வுப் பிரச்னைகள் சமுதாயத்தை அலைக்கழிக்கும் அவலங்கள் கண்முன் தெரியும்போதும்கூட அந்த விஷயங்களையே ஏன் தமிழ்மணம் போன்ற படித்தவர்கள் உலவும் சபையிலும் முன்னிலைப்படுத்த வேண்டும். எந்த பிரிவைச் சேர்ந்தவர் எழுதுகிறார் என்று பிரிவினை வைத்து நாம் வாசிக்கத் தொடங்குவது இல்லை, ஆனால் அதில் ஏதேனும் ஒரு அடையாளச்சொல் விழுந்துவிட்டால் போடப்படும் சண்டைகள் நீங்கள் அறியாததா?

 
At 5:57 AM, Blogger Unknown said...

தாணு,
//சமீபகாலங்களில் தனிநபர் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பற்றி யாராவது எழுதும்போது அதன் ஜாதீய விஷயங்களையே நோண்டி, சொல்லப் பட்ட கருத்தைப் புறம்தள்ளும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன.//

//எந்த பிரிவைச் சேர்ந்தவர் எழுதுகிறார் என்று பிரிவினை வைத்து நாம் வாசிக்கத் தொடங்குவது இல்லை, ஆனால் அதில் ஏதேனும் ஒரு அடையாளச்சொல் விழுந்துவிட்டால் போடப்படும் சண்டைகள் நீங்கள் அறியாததா? //

சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு வார்த்தையப் பிடித்து தொங்குவதும்...
கருத்தைவிட அது யாரால் சொல்லப்பட்டது என்பதை வைத்து சண்டைபோடுவதும்...
எதுவும் முடியாமல் போகும் போது சாதியையும் சொந்த வாழ்க்கையையும் இழுப்பதும்..
ஒருவரை விமர்சிக்கும் போது அதற்கான நேரடிப் பதில் சொல்லாமல் ...எல்லாரும் என்ன ஒழுங்கா என்று நழுவுவதும்...ஒருவனின் தனிமனித குணங்கள்.

எவ்வளவு படித்திருந்தாலும், எங்கே எழுதினாலும் இவை மாறாது.

//சொல்லுபவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தாது சொல்ல முடியாது என்ற சந்தர்ப்பம் நேரும்போது அந்த அடையாளங்களை ஏன் காயப்படுத்த வேண்டும் என்பதுதான் என் விவாதம். //
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு "-" அடையாளம் இருக்கும். விவாதத்தின் போது இதை தவிர்க்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

 
At 6:12 AM, Blogger தாணு said...

நன்றி கல்வெட்டு.
எனது விவாதமும் திசை மாறுகிறதோ என்று கவலைப் பட்டேன். நம் அடிப்படை மார்க்கம் ஒன்றுதான். எழுத்துக்கள் கையாளப்பட்டது சிறிது குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. உனர வைத்ததுக்கு நன்றி

 
At 6:10 AM, Blogger G.Ragavan said...

தாணு, அடையாளங்களைக் கண்டிப்பாக விட வேண்டியதில்லை. எங்கு போனாலும் ஏதேனும் ஒரு அடையாளத்தை வைத்துக் கிண்டல் செய்கின்ற ஈனர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

அதே நேரத்தில் நம்முடைய அடையாளங்களைப் போற்றுகின்ற பொழுது அடுத்தவர் அடையாளங்களைத் தூற்றாமை என்ற நல்ல பண்பைக் கற்க வேண்டும். அவ்வளவே!

 
At 6:14 AM, Blogger G.Ragavan said...

கல்வெட்டு, சாதீய அடையாளங்கள் வேறு. அதைப் பெருமையாக யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது.

அடையாளம் என்று தாணு சொல்வதாக நான் நினைப்பது நாமிருக்கும் இடம். சூழல். குடும்ப அமைப்பு. ஊரார். இது போலத்தான். அந்தச் சூழலில் எழுதுவது சரியே.

மாறாக சாதீயப் பெருமைகள்-சிறுமைகள் என்பது தவறே. தாணு அதைப்பற்றிச் சொல்லவில்லை என்று நினைக்கின்றேன். நான் பிராமணன் என்றோ பறையனார் என்றோ யாரும் பெருமையாகக் கூறிக் கொள்ளத் தேவையில்லை. அது ஆரோக்கியமன்று. ஆனால் கதையோ கட்டுரையோ எழுதுகையில் சொல்ல வந்ததைச் சொல்ல நமக்குப் பழக்கமான சூழலைப் பயன்படுத்துவது மிகச்சரியே.

 
At 6:35 AM, Blogger Unknown said...

இராகவன்,
//...அந்த அடையாளம் எதனாலும் வரலாம்- மொழி, ஜாதி, மதம், படிப்பு- எதுவாகத்தான் இருக்கட்டுமே. அதை ஏன் மறைக்க வேண்டும்? //

என்று தாணு சொன்னதனால் நான் அது பற்றி எழுத வேண்டி வந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை. தமிழகத்தில் ஜாதி அடையாளம் என்பது திணிக்கப்பட்ட வன்முறை.
அதை ஊர்,மொழி,மதம் மற்றும் படிப்பு சார்ந்த அடையாளங்களேடு சமமாகப் பார்க்க முடியாது.

//ஆனால் கதையோ கட்டுரையோ எழுதுகையில் சொல்ல வந்ததைச் சொல்ல நமக்குப் பழக்கமான சூழலைப் பயன்படுத்துவது மிகச்சரியே.//

ஒத்துக் கொள்கிறேன்.

 
At 7:33 AM, Blogger Dubukku said...

well said

same thoughts here.

 
At 9:54 AM, Blogger மதுமிதா said...

///எழுத்திலோ நடை உடை பாவனைகளிலோ வருந்தித் தருவித்துக் கொள்ளும் புது வேஷங்களுக்கு இடையிலும் நம் original அடையாளம் மறைந்து போவதில்லை. இது நமது பலவீனமல்ல, நம் வேர்களின் பலங்கள்.///

உண்மை
வேறு வழியில்லை தாணு.
தானாக வெளிப்பட்டுவிடும்.

///அதை ஏன் மறைக்க வேண்டும்? ///
மறைக்க வேண்டிய தேவையும் இல்லை.

///`ஜாதி மத பிரிவினைகள் எல்லாம் practical ஆக போக்கணும்னா, ஒரு வீட்டில் ஏற்படும் திருமண சம்பந்தங்கள் பல வகுப்புகளையும் பல மதங்களையும் சார்ந்து இருக்கணும்’ என்பது.///

ஆனால் இது முழுவதும் நடப்பதற்கான சாத்தியம் இல்லை தாணு.

 
At 9:58 PM, Blogger தாணு said...

கல்வெட்டு சொல்வதும் சரிதான் .ஜாதி அடையாளங்கள் திணிக்கப்படும் ஒன்றுதான், ஆனால் அதையும் காயப்படுத்துவது அனாவசியம் என்பதுதான் என் எண்ணம்.
மதுமிதா,
கலப்பு மணங்களால் எல்லா பிரிவினையையும் சமன் செய்வது இயலாததுதான். ஆனாலும் ஒரு சின்ன முற்போக்கு நடைமுறைக்குள்ளாவது தள்ளப்படுவோம் அல்லவா?
பெரிய பட்டணங்களில் ஜாதிப்பிரிவினைகள் ரொம்ப அளவு பாதிப்பதில்லை. ஆனால் சின்ன வட்டங்களில் அது இமாலய வேற்றுமைகளையும், வன்முறைகளையும் தோற்றுவித்துவிடுகிறது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியாமல்தான் நாம் எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் ஆதங்கங்களைக் கொட்டிக் கொள்கிறோம்.

 
At 10:01 PM, Blogger தாணு said...

நன்றி ராகவன்,நான் சொல்ல நினைத்து சில வார்த்தைப் பிரயோகங்கள் பிறழ்ந்து தோற்றமளித்துவிட்டது. இனிவரும் காலங்களில் தெளிவுடன் எழுத முயல்கிறேன். நேரமின்மை, சொல்ல வந்ததைச் சொல்லிவிடவேண்டுமென்ற ஆவல்.

 
At 2:24 PM, Blogger சிங். செயகுமார். said...

தானு அக்கா உங்கள் வலைப்பதிவு பற்றிய செய்தி தின மலரில் வந்திருக்கிறது . பார்த்தீர்களா?வாழ்த்துக்கள்!

 
At 4:59 PM, Blogger b said...

வாழ்த்துக்கள் தாணு.


ஜாதி என்ற அடையாளம் சொல்பவன் யாராயினும் என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்.

வாழ்க தமிழ்!

 
At 8:29 PM, Blogger Suka said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். அடையாளங்கள் என்பது எந்த வடிவில் இருந்தாலும் அது சுயநலத்திற்காகவே , அதை உணர்ந்தால் அதற்கான போராட்டங்கள் குறையும்.

வாழ்த்துக்கள்
சுகா

குறிப்பு: இங்கேயும் இது குறித்து எழுதியுள்ளேன்.
http://sukas.blogspot.com/2005/12/blog-post_15.html

 
At 2:23 AM, Blogger சந்திப்பு said...

இதையும் வாசிக்கவும். அடையாளங்களின் முகங்களை இதில் காணலாம்.
href="http://santhipu.blogspot.com/2005/12/blog-post_09.html

 
At 10:47 PM, Blogger கசி said...

அடையாளம் தவறில்லை. பார்ப்பனர்கள் என்பவர் தெய்வத்திற்குச் சமம். நான்கூட பூணூல் போடலாம் என்று நினைத்து டோண்டு அவர்களிடம் பூணூல் ஒன்று கடனாகக் கேட்டு இருக்கிறேன்.

 
At 5:16 PM, Blogger தாணு said...

சுகா, சந்திப்பு,மூர்த்தி அனைவருக்கும் நன்றி. வலைப்பதிவுகளில் எழுதும் படித்ட சமுதாயமாவது ஜாடி மட எல்லைகள் கடந்து பொதுவான விவாதங்களில் இறங்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விவாதத்தையே துவக்கினேன்.

 
At 5:19 PM, Blogger தாணு said...

காசி,
உங்க பதிலில் சின்ன எள்ளல்தான் தெரிகிறது. இங்கு எவரும் கடவுளும் அல்லர், கழிசடைகளும் அல்லர். நான் மனிதர்களாகத்தான் பார்க்கிறேன்

 
At 5:21 PM, Blogger தாணு said...

ஜெயக்குமார்,
தினமலர் பார்த்தேன். ஏகப்பட்ட நண்பர்கள் வாழ்ட்டு தெரிவித்திருந்தார்கள். நீங்களும்த் துளசியும் முதல் வாழ்த்து. நன்றி.

 
At 10:48 PM, Blogger doondu said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< Home