Thursday, August 10, 2023

அலை-93

 அலை-93

 “பனைமரம்”

இந்தப் பேரைக் கேட்டதுமே நிறைய பேருக்குக்  “கள்ளு” ஞாபகம்தான் வரும். ஆனால் எங்களுக்கெல்லாம் நிறைய கதைகள்தான் நினைவுக்கு வரும். நாங்க சின்னப் பசங்களாக இருந்தபோது எங்களைச் சுற்றிச் சுற்றி பனை மரங்கள்தான் அதிகமாக இருந்தன. ஆனால் இப்போது பனை மரங்களைத் தேடிப்போய்ப் பார்க்க வேண்டியிருக்குது. கோடிக் கணக்கில் காணப்பட்ட மரங்கள் இப்போது வெகு வேகமாகக் குறைந்து வருகின்றன. உரிய அனுமதி இன்றி பனை மரங்களை வெட்டக் கூடாது என்ற அரசாணை வந்தபிறகு ஓரளவு அதன் அழிவு தடுக்கப் பட்டிருக்கிறது. 


பனை மரம் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா என்று கேட்பவர்களுக்கு அதன் அருமை புரியவில்லை என்பதுதான் உண்மை. பனைமரத்துடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இல்லாமல் அன்றைய நாட்கள் நகர்ந்தது இல்லை. அந்த மரத்தின் மேன்மை புரிந்தோ புரியாமலோ அதன் பயன்களை முழுவதும் அநுபவித்த சந்ததிகள் நாங்கள்தான். பதனி, நுங்கு, பனம் பழம், பனம் கிழங்கு,கருப்பட்டி,தவுண் என்று எச்சில் ஊறவைக்கும் ஏகப்பட்ட ஐட்டங்கள் உண்டு. இப்போ இதெல்லாம் ஆன்லைனில் ஏகப்பட்ட விலைக்குக் கிடைக்கிறது.


பி.எஸ்.ஆர். தாத்தா வீட்டுத் தோட்டத்தில் ஏகப்பட்ட பனைமரங்கள் உண்டு. காலையில் தூக்குச் சட்டியுடன் தாத்தா வீட்டிற்குப் போய்விட்டால் குடும்பம் மொத்தத்திற்கும் பதநி (பதநீர்) கிடைச்சிடும். எங்க வீட்டுலேதான் ஜனத்தொகை அதிகமாச்சே, அதனால் ஷிஃப்ட் போட்டு யாராவது ஒருத்தர் தூக்குசட்டியுடன் காலையில் ஆஜராகிவிடுவோம். வீட்டில் கொண்டுவந்து வைக்கிறதுக்குள்ளே மொத்தமும் காலியாகிவிடும். அத்துணை ருசியாக இருக்கும். காஃபி குடிச்ச வயிறுடன் பதனி குடிக்காதீங்க, வயிற்றைக் கலக்கிடும்னு அம்மா கத்தினாலும் கேட்காமல் அவசர அவசரமாக சட்டி காலிபண்ணப்படும். 


கோடை விடுமுறை நாட்களில் மாலைப் பதநி கிடைக்கும். மாம்பழ சீசனும் அப்போதுதான் வரும். மாலைப் பதநியில் மாம்பழம் வெட்டிப்போட்டுக் குடிக்கும் சுவை இருக்குதே, வேறு எந்த பானமும் அதை அடிச்சுக்க முடியாது. பதநியைத் தம்ளரில் குடிப்பது அவ்வளவு ஸ்பெஷல் கிடையாது. பட்டையில் குடித்தால் தனி மவுசு. பனை ஓலையை விரித்து boat-shape (படகு மாதிரி) இல் பாத்திரம் மாதிரி செய்து தருவார்கள். அதுதான் பட்டை, குடிமகன்கள் போடும் பட்டை அல்ல .அது நிறைய பதநி ஊற்றி கீழே சிந்தாமல் குடிக்க முயற்சித்து பாதி ஆடையில் ஊற்றிக் கொள்வதும் நடக்கும். பதநி புளித்து கள்ளாகிவிடாமலிருக்க லேசாக சுண்ணாம்பு கலந்திருப்பார்கள். அப்போதெல்லாம் சாராயக் கடை, டாஸ்மாக் எதுவும் கிடையாது. கள் இறக்குவதற்காக சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களும் ஆங்காங்கே மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.


நுங்கு வைக்கும் காலம் வந்துவிட்டால் குலை குலையாக நுங்கு சந்தைக்கு வந்துவிடும். அதை ஓட்டிலிருந்து பெருவிரல் மூலமாக லாவகமாக எடுத்து சாப்பிடுவதில் சிலர் வல்லவர்களாக இருப்பார்கள். நுங்கு சீசன் முடிஞ்சதும் பனம் பழம் வர ஆரம்பிச்சுடும். ஃப்ரஷாக கிடைக்கும் பனம் பழத்தைச் சுட்டு சாப்பிடணும். மத்தவங்களுக்குக் குடுக்காமல் திருட்டுத் தனமா சாப்பிடவே முடியாது. தணல் அடுப்பில் சுடும்போதே வாசம் ஊரைத் தூக்கிடும். சூடு ஆறும் முன்பே ஆளுக்கொரு பக்கம் பிச்சு சாப்பிட்டுறுவோம். காய்ந்த பனம்பழத்தையும் தூரப்போட மாட்டாங்க. மரத்து மூட்டிலேயே லேசா மண்ணைக் கொத்திட்டு பொதைச்சு வைச்சிட்டா ரெண்டு மூணு மாசம் கழிச்சு பனங்கிழங்கு வளர்ந்திடும். பிடுங்க மறந்து போயி அப்படியே விட்டுட்டாலும் அதிலிருந்து பனம்பூ எனப்படும் தவுண் கிடைச்சிடும். 


பனங்கிழங்குதான் எப்பவுமே டாப் ரேட்டில் இருக்கும். பொங்கல் சமயத்தில்தான் எங்க ஊரில் கிழங்கு சீசன் அதிகமாக இருக்கும். பொங்கல் வைத்து முடித்ததும் அந்த தணலில் கிழங்கை சொறுகி வைத்துவிட்டுப் பிறகு எடுத்து சாப்பிடணும். சுட்ட கிழங்குக்கு என்றே ஒரு தனி வாசமும் சுவையும் இருக்கும், தந்தூரி சிக்கன் மாதிரி. அதிக எண்ணிக்கையில் கிழங்கு கிடைக்கும்போது இட்லி பாத்திரம் அல்லது மண்பானையில் வேகவைத்து தருவார்கள். மஞ்சள் தூளும் உப்பும் கலந்து வேகும். சுட்ட கிழங்கும் அவிச்ச கிழங்கும் வெவ்வேறு வகை ருசி. மீதமாகும் கிழங்குகளைச் சின்னத் துண்டுகளாக உடைச்சி அதனுடன் பச்சை மிளகாய் , தேங்காய் ,பூண்டு , உப்பு எல்லாம் சேர்த்து உரலில் போட்டு தட்டி ஆளுக்கு ஒரு கை கொடுத்திடுவாங்க.அம்மாவின் அட்சய பாத்திரத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமென்றால் அதெல்லாம் பனை மரத்தின் கைங்கரியம்தான். 


பனைமரம் தின்பதற்குத் தருவதோடு நிற்காமல் அதிகமான வீட்டு உபயோகப் பொருட்களையும் தரும். நாங்கள் வாழ்ந்த வளர்ந்த காலங்களில் வீட்டில் இருப்பவற்றில் அநேகம் பொருட்கள் பனை மரத்தினுடையதுதான். வீட்டுக் கூரைக்கு பனை ஓலைதான் பயன்படும். தென்னங்கீற்றுகளைவிட பனை ஓலை விலை குறைந்தது, எளிதில் கிடைக்கக்கூடியது. தென்னங்கீற்றுபோல் பின்ன வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினாலே போதும், குளிர்ச்சியான அறைகள் தயாராகிவிடும். ஓலைகளைத் தாங்கும் சட்டங்கள்கூட பனங் கம்புகள்தான். கம்புகள் ரொம்ப உறுதியாக இருக்கும். கரையான் அரித்தோ இற்றுப் போயோ பார்த்ததில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறை ஓலை மாற்றும் போது கூட அதே கம்புகள்தான் இருக்கும்.வீட்டுக்குக் கூரை மாற்றும் போது குட்டீஸ் கீழிருந்து ஓலையை எடுத்துக் கொடுப்போம், அண்ணன்களோ மற்ற பெரியவர்களோ மேலே அமர்ந்து அடுக்குவார்கள். அதைக் கட்டுவதற்குக்கூட பனை நார்தான் உபயோகமாகும். சிமெண்ட், கம்பி என்ற புதுப்புது விஷயங்கள் வந்த பிறகு பனை மரத்தின் பொருட்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. 


காய்கறி வாங்கப் போவதிலிருந்து பொருட்களை பத்திரப் படுத்தி வைப்பது வரை பனைஓலைப் பெட்டிகளில்தான். வெவ்வேறு அளவுகளில் ஓலைபெட்டிகள்தான் வீடு முழுக்க இருக்கும். பிய்ந்து போய்விட்டால் தூக்கி எறிந்துவிட்டு புதுசு வாங்கிக்கலாம். சுற்றுச் சூழல் மாசு எதுவும் வராது, ஓலை எளிதில் மக்கிப்போய்விடும். பள்ளியில் சாரணியர் வகுப்பில்கூட எங்களுக்கு ஓலைப்பெட்டி செய்வது பற்றித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். இப்போகூட எனக்கு ஓலைப்பெட்டி செய்ய முடியும்னு தோணுது. மூடி போட்ட ஓலைப் பெட்டிகளில் எங்கள் சிறுவாடு காசு, க்ளிப்புகள் எல்லாம் இருக்கும். திருமணமாகி செல்லும்போது அரிசிப்பெட்டியாக  செல்வது பனை ஓலைப் பெட்டிகள்தான்.


அதே பாணியில்தான் ஓலைப் பாயும் செய்ய வேண்டும். அழகாக சுருட்டி வைத்துக் கொள்ளலாம். அழுக்காகிவிட்டால் குளத்தில் கொண்டுபோய் அலசிட்டு வந்திடுவோம். தென்னங்கீற்றுத் தட்டிகள் வெளிவாசலில் போடவும் பனை ஓலைப் பாய்கள் உள்வீட்டில் உபயோகிக்க என்றும் இருந்தன. சின்னச் சின்ன ஓலைப்பாய்கள் திருவிழா சமயங்களில் தெருக்கூத்து பார்க்கப் போகும்போது மணலில் விரிக்க வசதியாக இருக்கும். இடையில் தூக்கம் வந்தால் அதிலேயே படுத்தும் கொள்ளலாம். எங்க ஊரில் பிரபலமான நார்க் கட்டில் பனை நாரில்தான் பின்னப்படும். கால்களும் சட்டமும்கூட பனங் கம்புகள்தான். என் மகள் சிறு குழந்தையாக இருந்தபோதுகூட நார்க்கட்டிலில் படுக்க வைத்துதான் குளிப்பாட்டியிருக்கிறேன். அவள் உருவத்துக்கு ஏற்றமாதிரி மினி நார்க்கட்டிலை என் மாமனார் செய்து தந்திருந்தார்கள். நாசரேத்தில் இருந்து வேலூருக்கு லாரியில் வந்தது.


பனை ஓலையில் செய்யப்படும் ஓலைக் கொழுக்கட்டை எங்க ஊர்ப் பக்கம் ரொம்ப பிரசித்தம். சீக்கிரம் கெட்டுப் போகாது. ஓலை வாசமும் மாவு வாசமும் சேர்ந்து வரும் கலவையான மணம் சிறப்பாக இருக்கும். திடீர்னு எனக்கு ஓலைக் கொழுக்கட்டை சாப்பிடும் ஆசை வந்துவிட்டால் எழில் எங்கிருந்தாவது பனை ஓலை வெட்டிக் கொண்டுவந்து கொழுக்கட்டை செய்து தருவாங்க. செம டேஸ்ட்டாக இருக்கும். ஓலைகளை சமஅளவு கொண்டு வெட்டி ,துடைத்து, பூரம் உள்ளே வைத்து, ஆவியில் வேக வைத்து - பெரிய வேலைதான் என்றாலும் சாப்பிடும்போது சுவையோ சுவைதான்.


பனங்கருப்பட்டி பற்றி சொல்லாவிட்டால் பனை மரத்தை அவமதித்தாகி விடும். எனக்கு எப்பவுமே பிடித்தது கருப்பட்டி காஃபிதான் (கடுங்காப்பி). ஊரிலிருந்து யார் வந்தாலும் எனக்கு கருப்பட்டி வாங்கி வருவதுதான் வாடிக்கை. அதிலும் விதவிதமாக உண்டு. புட்டு கருப்பட்டி, சில்லு கருப்படி, சுக்கு கருப்பட்டி, அச்சு வெல்லம் என வித விதமாக செய்வார்கள். ஓலைப்பெட்டியில் கிடைக்கும் புட்டு கருப்பட்டி நிறைய சமயங்களில் Souvenir ஆக மாறும். பனை மேல் உள்ள பாசத்தால் அலீஸ் நிச்சயதார்த்தத்தின் போது Return Gift ஆக மூடி போட்ட ஓலைப்பெட்டிதான் கொடுத்தோம். ஊரிலிருந்து மருமகன் முத்துராமன் ஆயிரம் பெட்டிகள் முடையச் சொல்லி வாங்கி அனுப்பினான். திருமணத்தின் போது நாலாயிரம் பெட்டி தேவை என்று கேட்ட போது ஓலை பின்னும் ஆட்கள் கிடைக்கவில்லை என்று வாங்க முடியவில்லை.  


இவ்வளவு உபயோகம் தரக்கூடிய பனைமரம் ஏன் அழிக்கப்படுகிறது என்ற கேள்வி மனதுக்குள் குடைந்தாலும் , நாமும் ஒரு காரணம் என்று உள் மனது சொல்கிறது. நார்க்கட்டில் போய் தேக்கு மரக்கட்டில், ஓலைப்பெட்டி இடம் மாறி பாலிதீன் உபயோகம், ஓலை வீடு மாறி காங்கிரீட் கட்டிடங்கள் என்று நம்மை அறியாமலேயே புதினங்களுக்கு இடம் கொடுத்து நல்லவற்றை அழியச் செய்கிறோம். மறுபடியும் பனைமரத்தின் உபயோகம் மானுடத்துக்கு அமையுமா என்ற கேள்வியுடன் , ஊரில் எங்க வீட்டு புறக்கடையில் நிற்கும் ஒற்றைப் பனை மரத்தைப் பெருமூச்சுடன் பார்த்து விட்டு வந்தேன். எங்கள் தோட்டத்தில் விதைபோட்டு நாலைந்து பனை மரங்கள் வளர ஆரம்பித்திருக்கின்றன. 

பனை பொருட்களை ஆதரித்து

பனை மரம் பெருகப் பண்ணுவோம்.

0 Comments:

Post a Comment

<< Home