Tuesday, November 15, 2005

`விடா'க்கண்டனும் `கொடா'க்கண்டனும்

(ராஜ் அவர்களின் பின்னூட்டத்திற்கு விளக்கம் நீளமானதாக இருபதால் ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்).

நிச்சயமா BSc/MSc படிப்பது என்பது மருத்துவம் படிப்பதைவிட ஈஸியானதுதான். அந்த துறையின் பாடங்களைக் கற்றுத் தேற வேண்டிய அறிவும், கடின உழைப்பும் ,dedication உம் இருந்தால் போதுமானது. தனது தகுதியைப் பொறுத்து சீட் வாங்கலாம் என்பதே பெரிய ஆறுதலும், ஊக்கமும் இல்லையா?

ஆனால் மருத்துவம் போன்றவை வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பகட்டான படிப்பு. பள்ளியின் முதல் மாணவனோ, மாநில ரேங்க் வாங்கியவனுக்கோகூட சீட் கிடைக்குமென்பதற்கு உத்திரவாதமே இல்லை. (பணத்தின் மூலம் வேண்டுமானால் வாங்கலாம்,அது தனிக் கதை) சுய முயற்சி கடுமையாக இருந்தாலும் கூட தோற்றுப் போகும் நிலைமை மிக அதிகம். மருத்துவம் படிக்கும் எதிர்பார்ப்புடன் படிக்கும் மாணவர்களின் மன இறுக்கம் இருக்கிறதே, அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. .மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் சீட்டைத் தவற விடும்போது, அந்த தோல்வி அளவிட முடியாதது. மருத்துவம் முயற்சி பண்ணி கிடைக்காதபோது மனநோய்க்கு ஆளான மாணவர்கள் கூட இருக்கிறார்கள்.அத்தைகைய மன உளைச்சல்களுடன் பெறப்படும் அக்கல்வி உடனே செட்டில் ஆகக் கூடிய வாய்ப்பை எந்த அளவு பெற்றுத் தருகிறது? மேற் படிப்பு செல்லாமல் செட்டில் ஆகவே முடிவதில்லை.மறுபடி அதே சர்க்கஸ்தான் PG படிப்பதற்கும். எல்லாப் போராட்டங்களையும் கடந்து ஒருவழியாக ஒரு நிலைப்பாட்டுக்குள் வரும்போது, அநேகமாக ஆண்களுக்கு வழுக்கை விழுந்து தொப்பை ஏறியிருக்கும், பெண்கள் முதிர் கன்னியர்களாகியிருப்பார்கள். வாழ்க்கையின் பெரும் பயணத்தை முடித்த களைப்புடன் அமர முடியாது. அடுத்த போராட்டமே அதன்பிறகுதானே ஆரம்பிக்கப் போகிறது.பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு உட்காரவும் முடியாது. மருத்துவம் படிக்க குறிக்கோளை மனதில் ஏற்றிக் கொள்வதிலிருந்து, படித்து முடித்து `நல்ல’ முறையில் செட்டில் ஆவது வரை உள்ள மனப் போராட்டங்களை விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தால், நாலைந்து பதிவுகளாவது நீட்ட வேண்டியிருக்கும்.

படிக்கும் காலங்களில் ஜாலியாக சுற்றுவதும், சந்தோஷமாகத் திரிவதும் எல்லாக் கல்லூரி மாணவர்களின் பொதுச் சொத்து. ஆனால், மிக நீண்ட வருடங்கள் ஒரே கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால், மெடிக்கோஸ் சுற்றுவதுமட்டும் ஊரறிந்த ரகசியமாக இருக்கும். மற்றபடி படிப்பு விஷயத்தில் அவரவர் SYLLABUS அவரவர்களுக்கு முக்கியமானதே. நான் ஜாலியாகப் படிக்கலாம் என்று சொன்னது அந்த பாடங்களை அல்ல, அந்த படிப்பை( not the subject but the speciality- have I explained properly Raj?)

படித்த பின்பு செட்டில் ஆவதும், BSc/MSc இல் சுலபம்தானே. நாம் இருக்கும் இடம் எத்தைகைய குக்கிராமமாக இருந்தாலும், வருங்காலத் துணை எந்த ஊரில் இருப்பவராக இருந்தாலும் அடிப்படைத் தகுதியான டிகிரி போதுமானது .தனது அறிவு, விடா முயற்சி போன்றவற்றைப் பொறுத்து அந்தத் துறையில் டாக்டரேட் வரை போகலாம்.. அதிலுள்ள முயற்சிகளுக்கு வானமே எல்லை. மருத்துவம் படிக்குமளவு சிறந்த மாணவர்களாக்த் தேறுபவர்களுக்கு பெளதீகமோ வேதியலோ படிப்பது கடினமாக இருக்குமா? படிக்க வேண்டிய கல்லூரி, ஊர், பிரிவுகள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லையா? Doctorate போன்ற அளவு முன்னேறி வரும்போது, பொறுப்பும், எதிர்பார்ப்பும், கஷ்டங்களும் அதிகரிக்கும். ஆனால் அத்தைகைய முயற்சிகள் எதுவுமின்றி MSc போன்ற அளவு வந்தாலே நல்ல முறையில் செட்டில் ஆகலாம் என்பதுதான் என் விவாதம்.

நான் ஜாலியாக இருப்பது என்று சொன்னது, மன இறுக்கமற்ற துறை என்ற அர்த்தத்தில்தான். மருத்துவர்களின் சிரித்த முகங்களின் பின்னே எத்தனை இறுக்கமான இதயமும், பர பரவென்று சுற்றித் திரியும் கால்களின் பின்னே எத்தனை நிம்மதியற்ற மனதும் இருக்குமென்பது எத்தனை பேருக்கு மனதில் பதிவாகிறது? `MSc முடிச்சுட்டு டாக்டரேட் எல்லாம் வாங்கியிருக்கிறார்’ என்று ஒருவரைச் சுட்டிக்காட்டும்போது, அவரின் அறிவை உயர்த்தும் விதமாகப் புகழும் மனிதர்கள், ஒரு டாக்டரைப் பற்றிப் பேசும்போது, எவ்வளவு பிடித்த டாக்டராக இருந்தாலும் கூட `அவங்களுக்கென்ன பிரமாதமான ப்ராக்டீஸ்’ என்று சொல்லும்போது, அந்த டாக்டரின் அறிவைக் குறித்து சொல்லுவதில்லை. அவரது வருமானம் குறித்தே `வஞ்சப் புகழ்ச்சி’யாகப் பேசுவதுதான் யதார்த்த வாழ்க்கை.

எப்பவுமே அதே துறையில் இருப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள மேடு பள்ளங்கள் தெரியும். அதனால்தான் அக்கரைப் பச்சை பரவாயில்லை என்று தோன்றுகிறது. எனக்கு MSc படிப்பது அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் basically படிப்பது எந்த துறையாக இருந்தாலும், முயற்சியும் கடின உழைப்பும் இல்லாவிட்டால் எதிலுமே சோபிக்க முடியாது.

(கேள்விகளை விடாமல் தொடுத்த விடாக்கண்டனையும், பதிலில் பிடிகொடாமல் சமாளித்த கொடாக்கண்டனையும் யார் யாரென்று இந்நேரம் புரிந்திருக்குமே!!)

13 Comments:

At 7:12 AM, Blogger வானம்பாடி said...

தாணு, மருத்துவம் படிப்பது பற்றி நான் கொண்டிருந்த அதே எண்ணத்தை, ஒரு மருத்துவரான நீங்களும் கொண்டிருக்கிறீர்கள்.

 
At 7:42 AM, Blogger rv said...

தாணு,
சரியாகச் சொன்னீர்கள். மற்ற படிப்புகள் ஈஸியென்று சொல்லுவது வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாக முடியுமென்பதால் தானே தவிர, அவற்றை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கிலில்லை.

நாற்பது வயதுக்கு மேல் தான் ஒரு மருத்துவருக்கு வாழ்க்கையே ஆரம்பிக்கிறது.

//`அவங்களுக்கென்ன பிரமாதமான ப்ராக்டீஸ்’ என்று சொல்லும்போது, அந்த டாக்டரின் அறிவைக் குறித்து சொல்லுவதில்லை. அவரது வருமானம் குறித்தே `வஞ்சப் புகழ்ச்சி’யாகப் பேசுவதுதான் யதார்த்த வாழ்க்கை.
//
உண்மை.

 
At 8:11 AM, Blogger வெளிகண்ட நாதர் said...

படிப்பு ஒரு ஏணிபடிகள் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகபடுத்தி முன்னேறனுங்கிறது அவர் அவர் கையில இருக்கு.

 
At 9:10 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

//நிம்மதியற்ற மனதும் இருக்குமென்பது எத்தனை பேருக்கு மனதில் பதிவாகிறது//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தோழி ஒருத்தி மருத்துவம் படித்தாள், படிக்கிறாள் இனியும் படிப்பாள் போலிருக்கிறது. நான் வேலையில் சேர்ந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. இதில் அவள் ஒவ்வொரு முறை தொலைபேசும் பொழுதும் ஒருவித வருத்தம் குரலில் தெரியும்.

//இருந்தாலும் கூட தோற்றுப் போகும் நிலைமை மிக அதிகம//
போட்டி நிறைந்த உலகம் என்ன செய்வது :-(

தலைப்பை மாற்றி வைத்திருக்கலாமோ ???

 
At 3:06 PM, Blogger துளசி கோபால் said...

தாணு,

100% சத்தியமான வார்த்தை!

மருத்துவர்களுக்கு இருக்கும்
'நிம்மதியற்ற மனது' அருகே இருந்து பார்க்கமுடிஞ்சது.
என் அம்மா ஒரு மருத்துவர்.

எப்பவும் நோயாளிகளைப் பத்தியே யோசிப்பாங்க.
செட்டில் ஆற கவலை அப்ப இருந்திக்க முடியாது. அந்தக் காலத்துலே மருத்துவர்களுக்கு இருந்த மதிப்பே வேறயாச்சே!
எங்களையெல்லாம் சரியாக் கவனிக்கலையோன்னுகூட சிலசமயம் நினப்பேன்.

 
At 5:18 PM, Blogger சினேகிதி said...

ingayum niraya varusam padikanum:
4 yrs H.Sci/B.Sc degree
appuram 4 yrs medschool
+2 yrs practice

 
At 11:36 PM, Blogger தாணு said...

ராஜ்,
விவாதங்களை நான் வரவேற்கிறேன். ஆரோக்கியமான விவாதம் நமது prefixed ideaக்களை மாற்றலாம், அல்லது உறுதிப் படுத்தலாம். எதுவானாலும் நாம் இன்னும் ஒரு படி வளர வாய்ப்புதானே. விவாதத்தினால் மன உளைச்சல் அடையும் அளவு மன முதிர்ச்சி குறைந்தவளல்ல என்பது என் எண்ணம்.
மருத்துவம் எளிதாக கற்றுத் தேர்ந்த எனக்கு, அதன் அடிப்படைக் கல்வியான பெளதீகமும், வேதியலும் ரொம்ப கஷ்டமான பாடங்கள்தான்.ஆனாலும் அதில் நான் distinction வாங்கினேன். ஜாலியாக என்று சொன்னது, படிப்பதின் நடைமுறை கஷ்டங்கள் பற்றி. எந்த ஆர்ட்ஸ் காலேஜிலும், நைட் டூட்டி கிடையாது; அடாது மழை பெய்தாலும் காலை 7 மணிக்கு ஓ.பி. அட்டெண்ட் பண்ண வேண்டியதில்லை;தன்னுடைய மேலதிகாரிக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்- நோயாளியின் மொத்த குடும்பத்தின் கேள்விக் கணைகளுக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை; இதுபோல் இன்ன பிற செளகரியங்கள் உங்கள் துறையில் இருக்கிறதா இல்லையா? வேலைப் பளு என்பதை முன்னிறுத்தி விவாதிக்கக் கூடாது-அது எல்லா துறைக்கும் ஒரே மாதிரிதான்.

வஞ்சப் புகழ்ச்சி அதில் இருக்காது என்கிறீர்களா? நோயாளிகள் மட்டுமல்ல, நமது சொந்தங்களே சந்து கிடைக்கும்போதெல்லாம் அதை நைஸாக சொல்லிக் காட்டுவதில்லையா?
துளசி இன்று சொல்வதுபோல், இன்றே என் பிள்ளைகள் அப்படித்தான் சொல்கிறார்கள்.
மற்ற எல்லா துறைகளின் வேலைப் பளுவும் கஷ்டங்களும் ஆபீஸ் விட்டவுடன் ஓரமா தூக்கிவைச்சுட்டு வந்திடலாம். எங்க விஷயம் வேறே. பாதி சாப்பாட்டில், பாதி பங்ஷனில், பாதி ஷாப்பிங்கில் என்று எல்லாமே அறைகுறை ஆட்டம்தான். இதெல்லாம் இல்லாமல் ஜாலியாக இருக்கச் சொன்னேன்.
நான் இன்னும் என் கருத்தில் இருந்து விட்டுக்`கொடாக்'கண்டன்தான். எனது முடிவை மாற்றுமளவு உங்கள் பாயிண்ட்ஸ் இருந்தால் தலை வணங்கக் காத்திருக்கிறேன்.

 
At 11:40 PM, Blogger தாணு said...

துளசி,
உங்க அம்மா டாக்டரா? எங்கே? கரூரிலா? தனி மடலில் விளக்கவும்.

பொண்ணும் நானும் ஒரே grade -music theory எழுதிட்டு வந்தாச்சு. அதிக மார்க் எடுக்கிறவங்களுக்கு ரூ1000/ பரிசென்று வேறு வீட்டுத் தலைவர் அறிவித்திருக்கிறார். ரிசல்ட் ஜனவரியில்தான் வரும்....

 
At 8:07 AM, Blogger தாணு said...

நான் விரும்பி ஏத்துக்கிட்ட மருத்துவத்தில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அடுத்தவர்களின் தொழிலோடு நான் அதை சமன்படுத்தி பார்ப்பதே இல்லை. தூங்க முடியாத நாட்களில் சோர்ந்து போனாலும் கூட கண்முழிக்குமளவு வேலை இல்லாத நாட்கள் என்னால் போர் அடிக்கும். நான் suggest பண்ணியது என் பெண்ணுக்கு. டாக்டர் என்றால் `ஜாலி'யாக பணம் சம்பாதிக்கும் profession என்ற நினைப்பு அவளுக்கு வரக்கூடாது என்பதால்!
இன்னுமே அந்த ஜாலி என்ற வார்த்தை எனக்கு முன்னாடி போட்டால்தான் சரியாக இருக்கிறது.
நானுமே அவளுக்கு ஒரு நிறைவான எதிர்காலம் வேண்டுமென்றுதானே பரிந்துரைக்கிறேன், அப்படி இருக்கும்போது அதை தாழ்வாக மதிப்பிட்டிருப்பேனா?

 
At 8:16 AM, Blogger தாணு said...

//வேலைப் பளு என்பதை முன்னிறுத்தி விவாதிக்கக் கூடாது, அது எல்ல துறைக்கும் பொது// 36 மணி நேர வேலை கூட எங்களுக்கு இன்றுவரை தேவைப்படும். ஆனால் ஒரு எமர்ஜென்ஸி என்றால், உங்கள் வேலையை ஓரங்கட்டிவிட்டு, மறுபடி வந்து 48 மணி நேர வெலையாகச் செய்யலாம், உங்கள் வேலையின் நேரம் உங்களால் தீர்மானிக்கப்படலாம். வைத்தியத்தை பாதியில் நிறுத்திவிட்டு(பிரசவமோ, அறுவை சிகிச்சையோ) வேறு வேலை பார்த்துவிட்டு மறுபடி கண்டினியூ பண்ணமுடியாது. விவாதத்துக்காகப் பேசினாலும், யதார்த்தம் உங்கள் மனதின் ஓரத்திலும் ஓடிக்கொண்டிருக்கும்

 
At 12:06 AM, Blogger NambikkaiRAMA said...

அன்பின் தாணு, இக்கட்டுரை ஒவ்வொரு மாணவனும் படிக்க வேண்டிய கட்டுரை. பாராட்டுக்கள்.

நான் கூட டாக்டர் கனவில்தான் இருந்தேன். ஆனால் படித்தது இஞ்சினியரிங். நான் விட்டதை என் தம்பி ஜெயித்துக்காட்டி விட்டான். அதனால் சற்று ஆறுதல்.

ஆனால் ஆரம்பம் முதலே! உறுதியான கொள்கையும் உழைப்போடும் இருந்தால் வேண்டியதை வேண்டுமாறு செய்வான் நம் இறைவன்.

 
At 1:07 AM, Blogger தாணு said...

நன்றி ராமா! உங்க தம்பியும் எங்க காலேஜா?

 
At 2:54 AM, Blogger G.Ragavan said...

எந்தப் படிப்பு படித்தாலும் முனைப்புடன் படித்தால் நிச்சயமாக முன்னுக்கு வரலாம். பொதுவாகவே ஒவ்வொருவரும் தம்முடைய விரும்பத்திற்குத் தக்கதைப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் முறையாக முன்னேற முடியும். இல்லையென்றால் பத்தோடொன்று பதினொன்றுதான்.

எல்லாரும் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார்கள் என்று எலக்ட்ரானிக்சிலோ கம்யூட்டரிலோ போடுவதும் தவறே.

தம்முடைய பிள்ளைகளின் திறமை எதில் என்று கண்டு பிடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு. பாடத்தை விட விளையாட்டில் கவனமாக இருக்கும் பிள்ளை, முறையான விளையாட்டுப் பயிற்சி இருந்தால் அந்த வழியிலேயே புகழ் பெறலாம்.

தமக்குத் தக்க படிப்பைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானது.

 

Post a Comment

<< Home