Tuesday, August 08, 2023

அலை-92

 அலை-92

 “கேள்வி ஞானம்”

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு-பாடம் 

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” 

உதாரணம் காட்டச் சொன்னால் எல்லோரும் உடனே கர்ம வீரர் காமராஜர் என்று சொல்லுவாங்க. ஆனால் எனக்குத் தெரிஞ்சு முதல் மேதை எங்க அம்மாதான். கையெழுத்து கூடப் போடத் தெரியாது. ஆனால் எட்டு பிள்ளைகளைப் பெற்று பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்து சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்ததில் எங்க அம்மாவின் பங்கு மிக மிக அதிகம். வாய்ப்பாடு, கால்குலேட்டர், கம்ப்யூட்டர் என்று கணக்கு போட ஆயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் ஒரு நொடியில் மனக்கணக்காக அம்மா போடும் கணக்கு அபாரமாக இருக்கும். பொருளாதார வசதிக்கேற்ப சமையல் முதல் சடங்குகள் வரை அனைத்துக்கும் ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பாங்க.


வரவு செலவு என்பது இன்றைய பாலன்ஸ் ஷீட் மாதிரி கிடையாது, ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் இருக்க வேண்டும் என்பதை அம்மாவிடமிருந்து அன்றே கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆத்துலே போட்டாலும் அளந்துதான் போடணும் என்பதை அன்றே புரிய வைத்ததால்தான் ஊதாரித்தனமான செலவுகள் எங்களால் இன்றுகூட செய்ய முடிவதில்லை. ஆடி காரே வாங்க முடியுமென்றாலும் மாருதி கார் போதுமென்ற மனப்பக்குவத்தைத் தந்தது அன்றைய படிப்பு. ஐநூறு ரூபாய்க்கு மேல் புடவை எடுப்பதற்கு இன்றுவரை மனது ஒப்புவதில்லை. கஞ்சப் பிசிநாறி எஞ்சாய் பண்ணத் தெரியாதவள் என்று நெருங்கிய நண்பர்கள் கேலி பண்ணினாலும் இயல்பை மாற்ற முடிவதில்லை. 


எங்க வீட்டுக்கு யார் எந்த அகால வேளையில் வந்தாலும் முதலில் சாப்பிட வைப்பதுதான் எங்கம்மாவின் குணம். அதனால் எங்க வீட்டுக்கு மங்கம்மா சத்திரம் என்ற செல்லப் பெயர் கூட உண்டு. அந்த உணவளிக்கும் பாங்கு என் மனதிலும் ஆழப் பதிந்துவிட்டதால் இன்றுவரை ஆசிரியர் காலனியிலுள்ள எங்கள் வீடும் மினி சத்திரம்தான். எனக்கு வாய்த்தவரும் என் அம்மாவைப் போன்ற மனதுடையவர் என்பதால் விருந்தோம்பல் தடையின்றி நடக்கிறது. சாப்பிட வைப்பது அவ்வளவு பெரிய விஷயமா என்று கேட்பவர்களும் உண்டு. விருந்துக்கு அழைத்து சாப்பிட வைப்பது வேறு எந்த நேரம் வந்தாலும் சாப்பிட வைப்பது வேறு.


அம்மாவைப் போலவே அண்ணன்மார்கள், அக்காக்கள், மதினி, தம்பி என்று ஒவ்வொருவரிடமிருந்தும் எத்தனையோ  விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ரொம்ப பார்த்துப் பார்த்து வளர்ந்தது சரக்காவும் நயினார் அண்ணனும்தான். தலைவாரி விடுவதிலிருந்து புத்தகங்கள் வாசிப்பது, சினிமாவுக்குப் போவது என்று எல்லாமே சரசக்காகூடத்தான். கடுகடு துரை அண்ணன் முதல் துறுதுறு செக்கண்ணன், சுட்டிப்பயல் நானா என எல்லோரையும் அனுசரித்துப் போகும் அக்காவின் செயல்கள் அன்று புரியவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு எல்லோரையும் அரவணைக்கும் குணம் எனக்கும் அக்காவிடமிருந்துதான் வந்திருக்கும் என்பது புரிந்தது. தமிழ் மீது மிகுந்த ஆர்வம் வந்ததற்கும் தமிழ் பண்டிதரான சரசக்காதான் முக்கிய காரணம்.


பரீட்சை எழுதிட்டு வந்ததும் அதை நயினார் அண்ணனிடம் கொடுத்து விடைகளை சரி பார்க்கும் போது எத்தனை மார்க்குகள் வரும் என்று அப்பவே தெரிந்துவிடும். மருத்துவ முதுகலை பரீட்சை வரைக்கும்கூட அந்தப் பழக்கம் தொடர்ந்தே வந்தது. அண்ணன் வெளியில் கிளம்பும் முன்பு கால்களை மிகச் சுத்தமாக துடைத்துவிட்டுதான் செருப்பு அணிவது வழக்கம். சின்ன மணல் துகள் இருந்தால்கூட மறுபடி கால்களைத் துடைப்பான். அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால்தானோ என்னவோ இன்றுவரை காலில் சின்ன பிசிறு இருந்தால்கூட என்னால் செருப்பு அணிய முடிவதில்லை. எங்க எட்டுபேரில் படிக்காத மேதையாக வடிவு அக்கா இருந்தாலும் அவள் துணிமணிகளை மடித்து பெட்டியில் வைத்து எங்களுக்கு வழங்கிய பாங்குதான் இன்று என் அலமாரியின் அடுக்குகள் ஒழுங்குடன் இருக்கக் காரணம்.


எங்கள் மூத்த மதினி வீட்டு வேலைகளைச் செய்த தன்னலமற்ற பாங்கு பார்த்து வளர்ந்த எங்க வீட்டுப் பெண்களனைவரும் வாழ்க்கைப் பட்ட இடங்களில் சிறந்த மருமகள்களாக இருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதுகூட மதினி மாங்கு மாங்கென்று எங்க வீட்டு ஆட்டு உரலில் இட்லிக்கு மாவு ஆட்டிய காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. கணவரின் தம்பி தங்கைகளைத் தன் சொந்தமாகவே பாவித்து பிரதி பலன் பார்க்காமல் எங்களை வளர்த்ததால்தான் நாங்களும் போன இடத்தில் மருமகள்களாக இல்லாமல் மகளாக மாறிப் போயிருக்கிறோம். இதுபோல் எத்தனையோ பாடங்களை அப்போது உணர்ந்து கொள்ளாமல் பயின்றுவிட்டோம். இப்போது உணர்ந்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் எந்தப் புத்தகத்திலும்  எந்த பள்ளியிலும் சொல்லித் தரப் பட்டிருக்காது.


எனக்கு முன்னால் இரண்டு அண்ணன்கள் அடுத்தது தம்பி அவர்கள் மூவரின் தோழர்கள் என என்னைச் சுற்றி ஆண்கள் பட்டாளமே இருந்தது. சின்ன வயதிலிருந்து பெண் தோழியரே ரொம்பக் குறைவு. அண்ணனின் நண்பர்கள் நடத்தும் விவாதங்களின் இடையேயும் நான் இருப்பேன். நிறைய விஷயங்கள் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். ஆனாலும் நிறைய சிந்தனைக் களங்களை உருவாக்கும். “ஸ்டேஷன் பெஞ்ச்” உரையாடல்கள் அவ்வப்போது காதுகளில் விழுந்து கொண்டிருக்கும். மிசா, எமர்ஜென்சி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அடிக்கடி கடந்து செல்லும். அரசியல் நிகழ்வுகள் குறித்து விபரமாகத் தெரியாவிட்டாலும் சமகால நிகழ்வுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சம் புரியும்.   இதுபோன்ற பாடங்கள் என் நண்பர்கள் மூலமும் நிறைய கிடைத்திருக்கிறது. எனக்கு வாய்த்த நண்பர்களும் தோழியரும் என்னைப் புடம் போட்டதில் முக்கிய பங்கு வகித்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பயங்கரமாகக் கோபம் வரும். யார் என்னவென்றெல்லாம் பார்க்காமல் சண்டை போட்டுவிடுவேன். இப்பவும் அந்த குணம் முழுசாப் போயிடலை, ஆனால் கொஞ்சம் குறைந்திருக்கிறது. என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக திருத்தியதே என் தோழியர்தான். எனக்கு Intellectual ஆகப் பேசத் தெரியும் ஆனால் இங்கிதமாகப் பேசத் தெரியாது. எனது கோபத்தின் உச்ச வரம்பு என்னவென்று நண்பன் ராம்கியிடம் கேட்டால் பெரிய கதை ஒன்று சொல்லுவான். 


கல்லூரிப் பருவம் வந்த பிறகு நண்பர்களின் வட்டம் பெரிசாகிறது. ஒவ்வொருவரைப் பார்த்து அவர்களிடம் இருந்த நல்ல குணங்களைக் கடைப்பிடிக்க முயன்ற பிறகு நம் இயல்புகளும் மாற்றத்துக்குள்ளாகி சீராகும். அதனால்தான் வளர் இளம் பருவத்துக்குப் பிறகு நம்மிடையே நிறைய மாற்றங்கள் வருகிறது. ‘நான் வளர்கிறேனே மம்மி’ன்னு பாடிக்கிட வேண்டியதுதான்.அதிலும் காதல் வந்த பிறகு கப்சிப் என்று ஆகிவிடத்தான் வேண்டும், நம் கோபம் செல்லுபடி ஆகாத ஒரே இடம் காதல் கோட்டைதான். 


குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்த படிக்காத மேதை எங்க அம்மாவுக்கு இணையாக மெத்தப் படித்த என் மாதிரி அடுத்த தலைமுறை நிமிர்ந்து நிற்கிறதா என்பது கேள்விக் குறியே. படிப்பும், பணமும், அந்தஸ்தும் மட்டுமே வாழ்க்கை முறையை நிர்ணயிப்பதில்லை. முன் ஏர் சென்ற வழியில் நல்ல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு குடும்ப உறவுகளுடன் இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. பெற்றோரை அநாதைகளாகத் தவிக்கவிடும் அயல்நாட்டு மகன்களும், அடுத்த வீட்டில் இருந்துகொண்டே பாகப்பிரிவினை செய்யும் அடுத்த தலைமுறையும் ஏட்டுக் கல்வியை மட்டுமே கற்றுக் கொண்டு தங்களை அறிவு ஜீவிகளாகப் பார்க்கிறார்கள். கேள்வி ஞானம் என்பது அவர்களைப் பொறுத்தவரை இல்லவே இல்லை. விரையமாகிக் கொண்டிருப்பது குடும்ப உறவுகள் மட்டுமே. கற்றவைகளை நாமாவது கற்பிப்போம் நம் குழந்தைகளுக்கு.


“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.”

0 Comments:

Post a Comment

<< Home