Tuesday, October 03, 2023

அலை-98

 அலை-98

“தண்ணீர் தண்ணீர்”
இப்படி அலையப்போகும் நாட்கள் அருகில் வந்துவிட்டதோ என்ற அச்சம் மனதுக்குள் இருக்கிறது. “தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்கக்கூடாது” என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறை எங்களுடையது. காசு நீட்டினால் பாட்டிலில் தண்ணீர்; அதையும் பாதி குடித்துவிட்டு மீதியைத் தூக்கி எறிந்துவிட்டுப் போகும் இன்றைய தலைமுறைக்குத் தண்ணீரின் அருமை தெரியவில்லை. ஆடம்பர விழாக்களில் அரைகுறையாக காலிபண்ணப்பட்டு அநாதையாக நின்று கொண்டிருக்கும் தண்ணீர் பாட்டில்களே அதற்கு சாட்சி. பழைய சம்பிரதாயப்படி குவளையில் மொண்டு தம்ளரில் ஊற்றுவது பரவாயில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. மலைபோல் குவியும் ப்ளாஸ்டிக் கழிவும் குறையும்.
தண்ணீர் சிக்கனம் என்பது எங்களுக்கெல்லாம் பால பாடம். ஊர் மொத்தத்துக்கும் தண்ணீர் சப்ளை செய்வது தெருக்குழாய்களில் வரும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர்தான். அதுவும் தினசரி வராது. பருவநிலை மாறுதலுக்கேற்ப இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருவது வாரம் ஒருமுறை கூட வரலாம். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் பணம் கட்டி வீட்டுக்குள் தனி குழாய் அமைத்துக் கொள்வார்கள். தங்கள் தேவைக்கு மேலே வரும் நீரை காசுக்கு தரும் பழக்கம் அப்போதிலிருந்தே இருக்கிறது. எங்க வீட்டு ஜனத்தொகைக்கு தெருக்குழாய் தண்ணீர் மட்டும் போதாது என்பதால் நாங்களும் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுவோம். எட்டு குடம், பத்து குடம் என்று எண்ணிக்கைக்கு ஏற்ப விலை உண்டு.பள்ளிக்கூடம் செல்லும் முன்பு தண்ணீர் எடுத்துவைத்துவிட்டுப் போவது எனது பொறுப்பு.
சினிமாக்களில் வருவதுபோன்ற குழாயடிச் சண்டைகள் தெருக் குழாய்களில் சர்வ சாதாரணமாக நடக்கும். தண்ணீர் முறை வரும் நாட்களில் காலையிலிருந்தே குடங்கள் வரிசை கட்டிக் கொள்ளும். கொஞ்சம் அடாவடி கோஷ்டிகள் இடையில் குடங்களைக் கொண்டு சொறுகும்போது வாய்ச் சண்டை கைகலப்பாகவும் முடியும். தாராளமாய் தண்ணீர் கிடைக்கும் நாட்களில் ரெண்டுபேர் relay race மாதிரி எதிரெதிரே ஓடி ஓடி நிறைய குடத்தில் பிடிப்போம். மழைக்காலங்களில் தண்ணீர் சேறு கலந்து வரும்,வறட்சி காலங்களில் குப்பை சேர்ந்து வரும். அதையெல்லாம் வடிகட்ட வேஷ்டித் துணிகள் எல்லோரின் இடுப்பிலும் தொங்கிக் கொண்டிருக்கும்.
பருவமழை காலங்களில் காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கத் தண்ணீரில் குளோரின் கலந்து வரும்.அப்போதெல்லாம் உடனே பயன்படுத்த முடியாது என்பதால் சேகரித்து வைக்க நிறைய பாத்திரங்கள் தேவைப்படும். அதற்கும் விதவிதமான பாத்திரங்கள் இருக்கும். குடி தண்ணீருக்கு மண்பானை, சமையலுக்கு வெண்கலப் பாத்திரங்கள், குளிக்க சிமெண்ட் தொட்டிகள் என எல்லாமே இயற்கையோடு இயைந்து இருக்கும். ப்ளாஸ்டிக் குடம், பக்கெட் எதுவும் அப்போது கிடையாது. சில்வர் அல்லது பித்தளைக் குடம், இரும்பு வாளி அல்லது தகர டின்கள்தான் உண்டு.
எங்க ஊர் கடற்கரைக்கு மிக அருகில் உள்ள ஊர் என்பதால் ஆழ்குழாய் போர்வெல்கள் கிடையாது. போர் போட்டால் கடல் தண்ணீர்தான் வரும் என்பதால் ஆழமில்லாத கிணறுகள்தான் இருக்கும். அநேகமாக வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். வீட்டிலுள்ளவர்களே கிணறு தோண்டிக் கொள்ளும் வகையில் உதிரி மணல்பாங்கான தரை இருக்கும். Shallow well என்று சொல்லுவார்கள். தண்ணீர் இறைக்க இறைக்க மெதுவாக ஊறிக்கொண்டே இருக்கும். எப்போதாவது கிணறு தூர் வாருவதுகூட நாங்களே செய்து கொள்ளுவோம். கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும். ஒருசில கிணறுகளில் மட்டும் நல்ல தண்ணீர் வரும். அதுமாதிரி கிணறு ஒன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு அருகில் உண்டு. ஒரு குடம் தண்ணீர் எடுப்பதற்கே எங்க வீட்டிலிருந்து இரண்டு கி.மீ.க்குமேல் நடக்க வேண்டும். அங்கும் பெரிய வரிசை இருக்கும். ஊற ஊற தான் இறைக்க வேண்டியிருக்கும். நான் சொல்லும் இடங்களெல்லாம் ராஜஸ்தான் பாலைவனத்து ஊர்கள் இல்லை, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள்தான்.
உப்புத் தண்ணீரில் தலைக்குக் குளிக்க முடியாது என்பதால் குளிப்பதற்கும் சேர்த்து தண்ணீர் பிடித்து வைக்கவேண்டியிருக்கும். அண்ணன்கள் கிணறுகளை நாடிச் சென்றுவிடுவார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்துவதற்கு அட்டகாசமான ஏற்பாடு இருக்கும். ஏற்றம் இறைக்க பயன்படுவதுபோல் கனமான கம்பின் ஒரு முனையில் பெரிய பாறாங்கல் கட்டியிருக்கும். மறுமுனையில் மெலிந்த நீளமான மூங்கில் அல்லது சவுக்கு கம்பு கட்டப்பட்டு அதன் நுனியில் பக்கெட் கட்டி வைச்சிருப்பாங்க. அதை ஒரு பெரிய தூண் மாதிரி மரத்துடன் இணைத்திருப்பாங்க. கொஞ்சம் பலத்துடன் மூங்கிலைக் கீழிறக்கி தண்ணீர் மொண்டு லேசாகத் தூக்கினல் போதும் பின்பாரத்தின் துணையுடன் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் ஈஸியாக இறைத்துக் கொள்ளலாம். இதைத்தான் துலாக்கிணறுன்னு சொல்லுவாங்க. அவ்வப்போது ஊறிக் கொண்டே இருப்பதால் மார்கழி மாதக் குளிரில் கூட தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும். சேர்து வைத்து மொத்த துணிகளும் துவைக்க , லீவு நாளில் குளிக்க பண்டாரங்குளம், குதிரைக்காரன் குண்டு, நல்லூர் குளம் என ரெண்டு மூணு குளங்கள் உண்டு. நீச்சல் பழகியதும், துண்டு விரித்து மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டதும் அங்கேதான். ஊருக்கு வெளிப்புறமாக இருப்பதால் தினசரி செல்வது முடியாது.
தண்ணீர் பிரச்னை என்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைதான் இன்னும் இருக்கிறது என்பதைப் போனவாரம் ஆறுமுகநேரியில் அண்ணன் வீட்டிற்குச் சென்றபோது கண்கூடாகப் பார்த்தேன். இருள்விலகாத காலை நேரத்தில் முனிசிபாலிட்டி குழாய்களில் தண்ணீர் திறந்துவிட்டிருந்ததால் அத்தை, மதினி எல்லோரும் சுறுசுறுப்பாகக் குடங்களுடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் வீட்டில் சொந்த குழாய் பதிக்கப்பட்டிருந்தாலும், தண்ணீரை எடுத்து அண்டா, குடங்கள், பாத்திரம், பக்கெட் என எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்டிருந்தான். வழியனுப்ப சென்றிருந்த எங்களுக்குக் காஃபி போடக் கூட அபுதாபியிலிருந்து வந்திருந்த மருமகள்தான் எழுந்து வர வேண்டியிருந்தது. தாமிரபரணி நதியின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் அடுத்து எத்தனை நாள் கழித்து தண்ணீர் வருமோ என்று தெரியாததால் அத்தனை வேலை.கிராமங்களில் ப்ளாஸ்டிக் கேன் தண்ணீர் பயன்பாடு அவ்வளவு அதிகமாக இல்லை என்பதால் இந்த முயற்சி. ஈரோட்டில் என்றைக்கு கார்ப்பரேஷன் தண்ணீர் வருகிறது என்றே நமக்குத் தெரிவதில்லை.
ஊரைப்பிரிந்து வந்து நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டாலும் தண்ணீர் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பதிந்து கிடப்பதால் இன்றுவரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாக்க மனசு வருவதில்லை. பாதி குடித்த பாட்டில்களில் உள்ள தண்ணீர் கைகழுவ, காய்கறி கழுவ உபயோகமாகும். RO machine இல் இருந்து வரும் உபரி நீர் பாத்திரம் கழுவ எப்போதும் இரண்டு பாத்திரங்களில் உட்கார்ந்திருக்கும். அரிசி களையும் தண்ணீர், சமையலில் வெளியேறும் கழிவு திரவங்கள் எல்லாம் கழனித் தொட்டியில் சேகரிக்கப்பட்டு செடிக்கு ஊற்றப்படும். இதெல்லாம் நான் மட்டும் செய்வதில்லை. எங்கள் வீட்டில் வேலைக்கு வருபவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முதல் பயிற்சி.
குழாயைத் திறந்தால் தண்ணீர் வெள்ளம் போல் கொட்டினாலும் ஒரு பக்கெட் தண்ணீருக்குமேல் குளிக்க செலவழிப்பது இல்லை. “நல்ல உடம்புக்கு நாழி தண்ணீர்”ன்னு பெரியவங்க அடிக்கடி சொல்றது பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது.
மண்பானைத் தண்ணீர் குடித்த போது வராத உபாதைகளும் நோய்களும் பாட்டில் தண்ணீருக்கு மாறியபின் அதிகமாகியிருக்கிறது. நாவின் சுவை அரும்புகளை மலரவிடுவதற்காக நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் பெரும்பாலான தாது உப்புக்களும் நீக்கப்படுவதால் நிறைய நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. எண்பது வயதில்கூட எங்க ஆச்சிக்கு வராத உடல் சோர்வு அறுபதுகளில் என்னை ஒத்தவர்களுக்கு ஏற்படுவது தாது உப்பு குறைபாடுகளால்தான். உடம்பின் 75% தண்ணீர்தான்; உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான். ஆனால் தண்ணீரின் அருமை தெரியாமல் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்.
தண்ணீரை நேசிப்போம்
தனிநபராய் சேமிப்போம்.

Like
Comment
Share

0 Comments:

Post a Comment

<< Home